மோடி ஆட்சியில் இருக்கும் துணிச்சலில் விசுவ ஹிந்து பரிஷத் தனது குரலை உச்சஸ்தாயியில் ஒலிக்க விடுகிறது . தர்மசபா என்ற பெயரில் அதர்மத்தை அரங்கேற்றத் துடிக்கிறார்கள். பாப்ரி மஸ்ஜித்தை இடித்தவர்கள் சிவசேனாவினர் என்பதில் பெருமைப்படுகிறேன் என்று சொன்ன பால்தாக்கரேவின் கடைசி 15 ஆண்டு காலம், ஆட்சிக்கு வர முடியாமல், அந்தக் கட்சி இரண்டாக பிளவுபட்டதோடு, மராட்டிய மாநிலத்தில் ஐந்துவது இடத்திற்குத் தள்ளப்பட்ட பரிதாப நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தி பிரச்னையை கையில் எடுத்து வெறியாட்டம் போடுகிறார். விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் தூண்டி விடுகிறது என்றால், சிவசேனாவும் இதில் குளிர்காய்கிறது.

நவம்பர் 25ல் அயோத்தியில் லட்சக்கணக்கானோர் கூடி வெறித்தனமாக கூச்சலிட்டனர். சிவசேனாவினர் இரண்டு தொடர்வண்டிகளில் அயோத்தி வந்தடைந்தனர். கோயில் கட்டவில்லை என்றால் அதிகாரத்தை விட்டு வெளியேறுங்கள் என உத்தவ் தாக்கரே பாஜகவை சீண்டியுள்ளார்.

vhp at ayodhyaஇத்தனை களேபரத்திற்கிடையே விஎச்பி மற்றும் சிவசேனா வெறியாட்டத்தின் விளைவாக முஸ்லிம்கள் அயோத்தியை விட்டு வெளியேறத் தொடங்கினர். முஸ்லிம்களைப் பதட்டமடைய வைக்கும் விஹெச்பி செயலுக்கு முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினர் வழக்கறிஞர் ஜபர்யாப் ஜெலானி கண்டனம் தெரிவித்தார். லட்சக்கணக்கான நபர்களைத் திரட்டினால் விபரீதம் நடக்க வாய்ப்பிருப்பதை எண்ணி அயோத்தி வாழ் முஸ்லிம்கள் தங்களது குழந்தைகளையும், முதியவர்களையும் வெளியே அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவித்தார்

நீதிமன்ற அவமதிப்புக்குள்ளான இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்கிறார் ஜெலானி. 1992 டிசம்பரில் ஏற்பட்ட அசம்பாவிதங்களைப் போல் மீண்டும் நடக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது; எங்களின் ஏராளமான சகோதரர்கள் 'முஸ்லிம்கள்' என்ற காரணத்தினால் அன்று எரித்துக் கொல்லப்பட்டனர் என ஆலம் கஞ் கத்ரா மொஹல்லாவைச் சேர்ந்த 46 வயது முகமது அஜீஸ் கூறியுள்ளார். 'இன்று நினைத்தாலும் நெஞ்சம் நடுங்குகிறது' என்ற அஜீஸ் "1992ல் அயோத்தியில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், கடைகள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 23 மஸ்ஜிதுகள் அழிக்கப்பட்டன. நிலைமை சரியானால் வெளியேறிய முஸ்லிம்கள் திரும்பலாம். இல்லையென்றால் வாய்ப்பே இல்லை" என்கிறார்.

"மாவட்ட நிர்வாகம் எங்கள் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும். விஎச்பியினர் அன்றும் என்ன செய்யப் போகிறோம் என்பதை அறிவிக்கவில்லை. இப்போதும் அவ்வாறே உள்ளனர். அவர்கள் எதுவும் செய்வார்கள். நானும் எனது குடும்பத்தினரும் கோரக்பூரில் உள்ள எனது உறவினர் வீட்டிற்குச் செல்கிறோம். அன்று அவர்கள் எங்கள் மஸ்ஜிதை தகர்த்தார்கள். எங்கள் குடும்பங்களை சிதைத்தார்கள். இன்று ஏராளமானவர்கள் வெளியேறி வருகிறார்கள்" என்று சொல்லும் இக்பால் அன்சாரி தனக்கும் அங்குள்ள மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க மனு அளித்தும் எவ்விதப் பயனும் இல்லை.

முஸ்லிம்களை வெளியேறாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒரு வீண் வேலை என்று அவரே கூறுகிறார்.

"நான் உறுதி அளிக்கிறேன், வெளியேற வேண்டாம்" என மாவட்ட நீதிபதி அனில்குமார் 100 முஸ்லிம்களை தடுத்ததாகக் கூறியுள்ளார். 'ஒரு ஏ டி ஜி பி , 3 எஸ் பி , 10 ஏ எஸ் பி, 21 டி எஸ் பி, 160 ஆய்வாளர்கள், 700 கான்சடபிள்கள், 42 பி ஏ சி கம்பெனிகள், 5 ஆர் ஏ எப் படைகள் , ஏ டி எஸ் கமாண்டோக்கள் உச்சத்தில் வட்டமிட்டு கண்காணிப்பு காமெராக்கள் பொருத்தத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானங்கள் என சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்க ஏதுவாக வழி செய்யப்பட்டுள்ளது. வெளியேறவேண்டாம்' என கெஞ்சிக் கேட்டும் பயனில்லை, வெளியேறுவது தொடர்கிறது. இது அரசுக்கு ஓர் அவமானகரமான நிகழ்வுதான்.

இதனிடையே நாக்பூரில் முன் அறிவிப்பின்றி விஎச்பிகாரர்கள் நடுவே தோன்றிய மோகன் பகவத் "இனியும் பொறுமை காக்க முடியாது. கோயில் கட்ட வழிசெய்யும் விதமாக சட்டத்தைத் திருத்த வேண்டும்" என்று நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாகப் பேசியுள்ளார். அவர் பேச்சின் மூலம் தெரிய வருவது ஒன்றுதான். இனிவரும் நாட்கள் மேலும் அராஜகமான வழிமுறைககளில் இறங்குவார்கள். அயோத்தி அணையவில்லை, பற்றி எரியுமோ என அஞ்சும் அளவுக்கு பதற்றம் பரவுகிறது.

- அபூ ஸாலிஹ்

Pin It