சே குவேராவைப் பற்றி அவரது தந்தை எர்னஸ்டோ ஏராளமான செய்திகளையும் தகவல்களையும் அவர் அளித்த நேர்காணல்கள் மூலம் பதிவு செய்துள்ளார். அவரின் குழந்தைப் பருவம் மற்றும் மாணவப் பருவத்தைப் பற்றி எர்னஸ்டோ சொல்லியிருக்கும் கதை கதையான நிகழ்வுகள் நெகிழ்வூட்டுபவை.che guevera 670சே குவேரா இரண்டு வயதுக் குழந்தையாக இருந்த போது அவருக்கு ஆஸ்த்மா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அக்காலத்தில் இப்போது இருப்பது போல் அந்நோய்க்கு சிறப்பு மிக்க மருந்துகள் இல்லாததால் தொடர்ச்சியான துன்பத்திற்கு ஆளானார். உரிய பருவத்தில் பள்ளியில் சேர்க்க இயலவில்லை. தட்பவெப்பநிலையை அறிந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு சேகுவேரா வின் பெற்றோர் ஊர் ஊராகப் பயணம் மேற்கொண்டு அங்கு சில நாட்கள் இங்கு சில நாட்கள் என்று தங்கிப் பார்த்தனர்.

இதைத் தனது நேர்காணலில் எடுத்துரைத்த எர்னஸ்டோ "பள்ளிக்கூடத்தில் சேர்க்கக்கூட முடியாத நிலையில் அவன் இருந்தான். சிலியா (சேகுவேராவின் தாயார்) வீட்டில் வைத்து இரண்டு வருடங்கள் கற்றுக் கொடுத்தாள். தனது நான்காவது வயதிலேயே படிக்கத் துவங்கினான் என்று நான் உறுதிப்படக் கூற முடியும். அந்தக் காலத்திலிருந்து தனது வாழ்வின் இறுதிவரை அவன் படிப்பில் பேரார்வம் மிக்கவனாக விளங்கினான். பொலிவியாவில் போராடுகிற போதும் எதிரிகளால் தேடப்பட்ட போதும் ஆஸ்த்மாவில் அவதிப்பட்ட போதும் எதையேனும் அவன் படித்துக் கொண்டே இருந்தான் என்று என்னிடம் கூறினார்கள்" என்று தெரிவிக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து"அப்படி அவன் எதைப் படித்தான்? அதை நான் எப்படி விளக்கிச் சொல்வேன்…? அவன் எல்லா விஷயங்களைப் பற்றியும் படித்தான். நானும் சிலியாவும் (தாய்) கூட புத்தகப் பிரியர்கள். ஆகவே, பல்லாயிரக் கணக்கான புத்தகங்களைக் கொண்ட நூலகம் எங்கள் வீட்டிலே இருந்தது. அந்த நூலகம் எங்கள் வீட்டில் ஒளி விளக்காகவும், எங்களின் மிக முக்கியமான உடைமையாகவும் விளங்கியது. ஸ்பானிய மொழியிலிருந்து ரஷ்ய மொழி வரையிலான பல வகையான காவியங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. வரலாறு, தத்துவம், உளவியல், கலை சம்பந்தமான நூல்களும் அதில் இடம் பெற்றிருந்தன. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரது படைப்புகளும், கிராப்டோக்கின், பகுனின் ஆகியோரது நூல்களும் எங்களிடம் இருந்தன. நூலகத்தின் அர்ஜெண்டைனா பிரிவில் ஜோஸ், ஹெர்னான்டஸ், சர்மியான்டோ மற்றும் பலரின் நூல்களும் இடம் பெற்றிருந்தன. ஃபிரெஞ்சு மொழிப் புத்தகங்களும் இருந்தன. சிலியாவுக்கு ஃபிரெஞ்சு மொழி தெரியும். அவள் சேகுவேராவுக்கு ஃபிரெஞ்சு மொழி கற்றுக் கொடுத்தாள்." என்று தனது வீட்டு நூலகத்தைப் பற்றியும் சேகுவேராவின் மாணவப் பருவத்தில் வீட்டிலிருந்த கல்வி மற்றும் அறிவுச் சூழளை பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார் சேகுவேராவின் தந்தை எர்னஸ்டோ.

மிக இளம் வயதிலேயே முழுமையான புத்தக வாசிப்பிற்கு வசப்பட்டு விட்டார் சேகுவேரா. சிறுவனாக இருந்த போதே சேகுவேரா சல்காரி, ஜூலியஸ் வெர்னே மூமாஸ், விக்டர் ஹ்யூகோ, ஜாக் லாண்டன் ஆகியோரது படைப்புகளை விரும்பிப் படித்துள்ளார். பின்னர் படிப்படியாக வளர்த்துக் கொண்ட வாசிப்பு அனுபவத்தில் கார்வாண்டிஸ், அனடோலி பிரான்ஸ் ஆகியோரின் படைப்புகளில் ஆழ்ந்தார். அதன் பின்னர் டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி, கார்க்கி ஆகியோரை வாசித்தார். அடுத்தடுத்த வளர்ச்சிப் போக்கில் அந்த நாட்களில் கிடைத்த எல்லா இலத்தீன் அமெரிக்கச் சமூக நாவல்களையும் படித்துள்ளார்.

எஸ்டேட்டுகளிலும் தோட்டங்களிலும் அடிமைப்பட்டுக் கிடந்த தொழிலாளர்களும் இந்தியர்களும் வாழ்ந்த துன்பம் நிறைந்த அவலமான வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டிய சீரோ அலிகிரியா, ஜார்ஸ் ஜகாஸா, ஜோஸ் எஸ்டோனியோ ரிவேரா ஆகியோரின் நாவல்களை ஈடுபாட்டுடன் வாசித்துள்ளார் சேகுவேரா.

மிக இளம் வயதிலிருந்தே கவிதைகளின் மீது தனித்த ஈடுபாடு கொண்டிருந்தார் சேகுவேரா. பௌடிலெய்ரே, வெர்லைன், கார்ஸியா லார்கா, ஆன்டானியோ மெசாடோ ஆகிய புகழ்மிக்க கவிஞர்களின் கவிதைகளையும் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். சிலி நாட்டுப் புரட்சிக் கவி பாப்லோ நெரூடாவின் கவிதைகள் பலவற்றைப் படித்துப் படித்து மனப்பாடம் செய்து வைத்திருந்தார்.

சொந்தமாகக் கவிதை எழுத பலமுறை முயன்றுள்ளார் சேகுவேரா. ஆனால், அவரைக் கவிஞர் என்று அவரே ஒருபோதும் எண்ணித் திருப்தி கொள்ளவில்லை. அவரை அவரே ‘ஒருபோதும் கவிஞனாக முடியாத புரட்சிக்காரன்’ என்றும், ‘வெற்றி பெற முடியாத கவிஞன்’ என்றும் அழைத்துக் கொண்டுள்ளார்.

தன் மகன் சேகுவேரா கடைசியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இறுதித் தருணம் வரை கவிதையைப் பிரிந்து இருந்ததில்லை என்றும் அவரது கைப்பையில் இருந்த பொருட்களில் புகழ்பெற்ற பொலிவியன் நாட்குறிப்பு மட்டுமின்றி தனக்கு விருப்பமான கவிதைகளைத் தொகுத்து எழுதி வைத்திருந்த ஒரு நோட்டுப் புத்தகமும் எப்போதும் இருக்கும் என்றும் சேகுவேராவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

சேகுவேராவின் அறிவையும் ஆற்றலையும் ஆளுமைத் திறனையும் பிற்காலத்தில் வியந்து பாராட்டியுள்ளார் பிடல் காஸ்ட்ரோ.

புத்தகங்களை ஆழமாகக் கற்றல், சமூகத்தை – மக்களை ஊடுருவிப் படித்தல் ஆகிய இரண்டையும் ஏக காலத்தில் உறுதியுடன் செயல்படுத்தியவர் சேகுவேரா. தத்துவமும் நடைமுறையும் புரட்சியாளர்களின் இரண்டு கண்கள்.

ஆம்… அறிவாயுதம் ஏந்தியவர் புரட்சியாளர் சேகுவேரா.

அமெரிக்கா, கியூபாவைக் குறிவைத்துக் கொண்டுள்ள இந்நேரத்தில் - கியூபாவுக்கு ஆதரவாக உலகக் குரல் உரக்க முழங்கிக் கொண்டிருக்கும் சூழலில் கியூபப் புரட்சியில் பிடல் காஸ்ட்ரோவுடன் களமிறங்கி கியூப மக்களின் விடுதலைக்கு வித்திட்ட முதல் வரிசைத் தளபதிகளில் ஒருவரான சே குவேராவின் வீரத்தையும் தீயாகத்தையும் கருதிப் போற்றுகிறது - உங்கள் நூலகம்

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.