karl marx 379கடந்த ஆயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த மகத்தான நூறு மனிதர்களில் முதல் நபர் காரல் மார்க்ஸ். பிரஷ்ய மண்ணில் பிறந்த காரல்மார்க்ஸ் பிறப்பால் ஒரு யூதர். தந்தை வழக்கறிஞருக்கு படித்திருந்தாலும் அன்றைய ஜெர்மானியர்கள் யூதர்களை வெறுத்ததால் அவருக்கு வழக்கோ வேறு உதவிகளோ சரிவரக் கிடைக்காமல் போனது.

பிழைக்க வேறுவழியின்றி அவர்களுடைய குடும்பம் கிறித்தவ மதத்திற்கு மாறியது. காரல்மார்க்ஸ் தந்தை எதிர்பார்த்தது போலவே இப்போது அவர்களுக்கு உதவிகள் கிடைக்கத் தொடங்கின. காரல்மார்க்ஸ் ஒன்றும் சிறுவயதில் வயதுக்கு மேம்பட்ட சிந்தனை உடையவராக இல்லை.

குடும்பச் சூழ்நிலையும், சமூக நெருக்குதல்களும் தான் ஒரு மனிதனை ஆகச்சிறந்தவனாக உருவாக்குகிறது. கேளிக்கை, மது, சூதாட்டம் என காரல்மார்க்ஸ் இளமைப் பருவம் கழிந்தது. காரல்மார்க்ஸ் வாழ்க்கையில் ஜென்னியின் பிரவேசம் அவருக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

அப்போது உலகின் தலையெழுத்தையே மாற்றிக் காட்டிய மார்க்ஸின் கைகள் ஜென்னிக்கு காதல் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தது. ஜென்னி அழகி, பிரபுக்களும், வியாபாரிகளும் அவளுக்கு  வலை விரித்தனர். ஜென்னியோ தனது வாழ்க்கைத் துணை காரல்மார்க்ஸ் தான் என்ற முடிவில் உறுதியாக இருந்தாள்.

காரல்மார்க்ஸ்க்கு வாழ்க்கைத் துணையாக மட்டுமல்ல அறிவுத்துணையாகவும் ஜென்னி இருந்தாள். நீங்கள் இன்று காண்கின்ற காரல்மார்க்ஸை உருவாக்கிய சிற்பி ஜென்னி. அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் உளியால் அடிப்பதைப் போல இருந்தன.

ஒரு சில சமயம் சிலையாவதற்கு இந்த அடிகள் தேவைப்படுகின்றன. மார்க்ஸின் பார்வை தத்துவத்தின் பக்கம் திரும்பிய போதுதான் அவருக்கு ஜெர்மானிய தத்துவமேதை ஹெகல் அறிமுகம் கிடைத்தது. ஹெகல் மாறிக் கொண்டே இருப்பதுதான் உலகம் என்றார். இது ஒத்துக்கொள்ளக் கூடியதுதான்.

ஆனால் முடியாட்சியில் மன்னர்கள் கடவுளின் பிரதிநிதிகள் அவர்கள் உத்தரவை மீறக்கூடாது. அரசர்களுக்கு அதிகாரம் கடவுளால்  அளிக்கப்பட்டது அவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்தினை மார்க்ஸால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மாற்றம் தான் நிலையானது என்றால் மன்னனும் மாறித்தானே ஆகவேண்டும். அப்படியென்றால் மாற்றம் எங்கிருந்து தொடங்குகிறது இந்த சிந்தனைப் பொறிதான் காரல்மார்க்ஸை தத்துவ வெறி பிடிக்க வைத்தது.

கடவுளுக்கான தேவை என்ன? கஷ்டங்களுக்கு தீர்வை ஆராயாமல் கண்ணுக்குத் தெரியாத கடவுளையா நம்பிக் கொண்டிருப்பது. மனிதகுல வரலாற்றை புரட்டிப் பார்த்தோமானால் எப்போது எந்த மனிதனுக்காக கடவுள் இறங்கி வந்தார் எனச் சொல்லப்பட்டிருக்கிறதா என தனது நாத்திகவாதத்தை ஆய்வாக பெர்லின் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

அன்றைய சமூகம் ஒரு அடிப்படையை அடித்தளமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தது. மார்க்ஸ் அந்த அடிப்படையை மாற்ற முயன்று கொண்டிருந்தார். தொழிற்சாலைகள் தொழிலாளர்களை சுரண்டுகிறது என்றார். தொழிலாளர்வர்க்கம் சுரண்டலுக்கு எதிராகத் அணிதிரள நான் என்ன செய்ய வேண்டும் என யோசித்தார்.

பேனா முனை கத்தி முனையைவிட வலிமையானது என முடிவெடுத்து அவர் எழுத்தைத் தேர்ந்தெடுத்தார். தமது இலக்கு இதுதான் என முடிவுசெய்தார். பத்திரிகைகள் அவருக்கு சிவப்புக்கம்பளம் விரிக்கவில்லை. அவரது கட்டுரைகளுக்கும் போதிய வரவேற்பில்லை. முதலாளித்துவம் கண்ணெதிரே விருட்சமாக வளர்ந்து நின்று கொண்டிருக்க அதற்கு கீழே தன்னைப் போன்ற விதைகள் வளராது என முடிவெடுத்தார்.

வேலை, சம்பாத்தியம், திருமணம் என சமூக அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்ள தன்னைப் பீடித்திருக்கும் தரித்திரத்தை விரட்டியடிக்க பாரிஸுக்கு செல்வது என காரல்மார்க்ஸ் முடிவெடுத்தார். கற்பனைவாதிகளுக்கும், சிந்தனைவாதிகளுக்கும் பாரிஸ் ஒரு சுவர்க்கபுரி.

பாரிஸ் அவருக்கு அடைக்கலம் அளித்தது. நண்பர்கள் பலர் பணஉதவி செய்ய முன்வந்தனர். இங்கே தான் மார்க்ஸின் அரசியலும் தத்துவமும் கலந்து புதிய சித்தாந்தம் உருப்பெற்றது. பாரிஸ் தந்த நம்பிக்கையால் காரல்மார்க்ஸ் ஜென்னியைக் கைப்பிடித்தார். ஐந்துபேர் மட்டும் பங்கு கொண்ட எளிய பதிவுத் திருமணம் அது.

மாபெரும் மனிதருக்கு துணைசெய்யும் பாக்கியம் ஜென்னிக்கு கிடைத்தது. தேன்நிலவுக்கு சுவிட்சர்லாந்து சென்ற காரல்மார்க்ஸ் புத்தகங்களை தன்னோடு எடுத்துச் சென்றார். அவர்களது அறையில் ஜென்னி ஒரு மூலையிலும் மார்க்ஸ் ஒரு மூலையிலும் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மற்ற ஜோடிகள் விநோதமாக அவர்களைப் பார்த்துச் செல்வார்கள்.

சுவிட்சர்லாந்திலிருந்து திரும்பிய மார்க்ஸ் தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க பத்திரிகை ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார். அரசாங்கத்தின் தணிக்கை அமலில் இருந்த சூழ்நிலையில் மார்க்ஸ் தனக்கு கடிவாளம் போடப்பட்டிருப்பதைப் போல் உணர்ந்தார்.

தனது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார் மார்க்ஸ். அதோடு அந்த பத்திரிகையும் நின்று போனது. பாரிஸ் அரசாங்கம் மார்க்ஸை நாடு கடத்தியது. பிழைப்பிற்காக பெல்ஜியம் வந்தார்.

பாரிஸில் அவரைச் சந்தித்த முக்கியமான ஒரு நபர் பின்நாட்களில் மார்க்ஸின் ஆன்மாவாக இருந்தவரான ஏங்கெல்ஸ். மார்க்ஸ்ன் இறப்பு வரை இந்த உறவு நீடித்தது.

மார்க்ஸின் குடும்ப அங்கத்தினர்களில் ஒருவரானார் ஏங்கெல்ஸ். மார்க்ஸின் மீது ஏங்கெல்ஸ் வைத்த நம்பிக்கை அபரிமிதமானது. அதலபாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தபோது கைக்கு அகப்பட்ட மரக்கிளை போன்றது அது.

ஏங்கெல்ஸ் குடும்ப பாரத்தைச் தூக்கி சுமக்க மார்க்ஸ் மானுடத்தை உயர்த்தும் சிந்தனையிலேயே தமது வாழ்நாளை செலவழித்துக் கொண்டிருந்தார். ஏங்கெல்ஸ் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஏங்கெல்ஸின் விடாமுயற்சியால் பெல்ஜியம் நாட்டிலுள்ள சிறுபான்மையினரான தொழிலாளர்கள் மார்க்ஸின் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தனர். தொழிலாளர் புரட்சிக்கு முதல்விதை அங்குதான் தூவப்பட்டது. கஷ்டங்களுக்கு உள்ளாகும்போது தான் மனிதனுக்கு கடவுள் தேவைப்படுகிறார்.

தன் பாரத்தை இறக்கி வைக்க அவனுக்கு ஒரு சுமைதாங்கி தேவைப்படுகிறான். அவனுக்கு ஏற்பட்ட தலைவலிக்கு மதம் வலிநிவாரணியாக செயல்படுகிறது. இந்த அளவுக்கே மனிதனுக்கு மதம் தேவைப்படுகிறது. கம்யூனிசம் ஒரு மதமா, ஒரு அமைப்பா அதன் கொள்கைகள் என்ன என்பதை விளக்குவதற்கு மார்க்ஸ் 24 பக்கமேயுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை நூலாக வெளியிட்டார்.

பச்சை வண்ணமுள்ள அந்த புத்தகம் உலகில் பேசப்படும் 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடவுளை ஏற்றுக் கொண்டு ஆத்திகன் ஆனீர்கள்  என்றால் கடவுள் என்ற ஒருவர் உங்கள் உரிமைகளில் தலையிட உங்கள் படுக்கை அறைவரை தலைநீட்ட அனுமதிக்கின்றீர்கள் என்று அர்த்தம். உங்கள் தலையெழுத்தை மதம் தீர்மானிக்க ஒப்புதல் அளிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

பெல்ஜிய அரசாங்கம் மார்க்ஸை குறிவைத்தது. எந்தவொரு அரசாங்கமும் தாங்கள்  சொல்வதே வேதவாக்காக இருக்கவேண்டுமென கருதும். அதற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை தேசவிரோதிகள் என முத்திரை குத்தும். பெல்ஜிய அரசாங்கம் கைது செய்யவா இல்லை நாட்டைவிட்டு வெளியேறுகிறீர்களா என நெருக்குதல் தந்தது.

மார்க்ஸ் தனது இருப்பிடத்தை கொலோனுக்கு மாற்றினார். பிரஷ்யாவில் இருந்தபோது ஒருசமயம் காவல் அதிகாரி மார்க்ஸ் வீட்டு கதவைத்தட்டி நகரத்திலிருந்து வெளியேற இருபத்துநான்கு மணிநேரம் கெடு விதிக்கிறார். மார்க்ஸ் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கிறார். எங்கே போவது யாரிடம் உதவிக் கேட்பது என ஜென்னிக்கு தெரியவில்லை.

வீடு திரும்பிய மார்க்ஸ் விஷயத்தை கேள்விப்படுகிறார் உடனே ஒரு முடிவுக்கு வருகிறார் இந்த தேசத்தின் பிரஜையாக இருப்பதால் தானே என்னை நாட்டைவிட்டு வெளியேறச் சொல்லுகிறார்கள் நான் பிரஷ்யாவின் குடியுரிமையை துறக்கிறேன் என்று கூறி தேசமற்ற மனிதராகிறார்.

அவருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் மூன்று பெண் பிள்ளைகள் மட்டுமே உயிர்பிழைக்கின்றன அதற்கு குடும்பத்தில் நிலவி வறுமையே பிரதான காரணம். இந்த மூவரையும் ஜென்னி தன் தாய் வீட்டிலிருந்து அழைத்து வந்த ஹெலன் டெமூத் என்ற செவிலித்தாயே வளர்த்தெடுக்கிறாள்.

இவள் மார்க்ஸின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக மார்க்ஸ் இறக்கும்வரை அவர் கூடவே இருக்கிறாள். மார்க்ஸ் தனது குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூட பணமில்லாதவராக இருந்தார். அந்த நகரத்தில் வசித்த எல்லா நபர்களிடமும் மார்க்ஸ் கடன் வாங்கி இருந்தார். ஒருவரையும் அவர் விட்டுவைக்கவில்லை.

இறந்த மகனுக்கு சவப்பெட்டி வாங்கக் கூட காசில்லை அவரிடத்தில். மார்க்ஸ்ன் நிலைமை இதிலிருந்து உங்களுக்கு புரிந்திருக்கும். உலகுக்கு பொதுவுடைமை தந்த அவரது குடும்பத்தில் வறுமை தான் கோரத்தாண்டவம் ஆடியது.

இது இப்படியிருக்க ஏங்கெல்ஸ் மார்க்ஸை பிரிட்டனிலுள்ள மான்செஸ்டர் நகருக்கு அழைத்துச் சென்று தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நேரடியாக கண்ணெதிரே காண்பிக்க எண்ணினார். இந்த நிகழ்வுதான் மூலதனம் என்று சொல்லக்கூடிய தாஸ்கேபிடலுக்கு வித்திட்டது என்று சொல்லலாம்.

மார்க்ஸ் லண்டன் புறப்பட்டார். லண்டன் நூலகமே அவரது அறிவாலயமானது. கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகள் படிப்பதற்கு செலவிட்ட பிறகே அவர் மூலதனம் என்ற நூலை எழுத ஆரம்பித்தார். பிரிட்டன் குறைந்த கூலிக்கு அகதிகளை வேலைக்கு அமர்த்தியது.

பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் குழந்தைகளை பச்சிளம் பிஞ்சுகள் என்று பாராது அவர்களையும் வேலை வாங்கி குழந்தை தொழிலாளர் முறைக்கு வித்திட்டதே பிரிட்டனின் அரசாங்கமும், பிரபுக்களும், வியாபாரிகளும் தான். இந்த பாதிப்புதான் முதலாளிகள் எவ்வாறு தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள் என மார்க்ஸை யோசிக்க வைத்தது.

வர்க்க பேதம் பற்றி மூலதனம் பேசியது. எப்போதும் அரசாங்கம் முதலாளிகள் பக்கமே நிற்பதை சுட்டிக் காட்டியது. குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக்கூட மேம்படுத்திக் கொள்ள முடியாத மார்க்ஸிடமிருந்து உலகப் பொருளாதாரத்தைப் பற்றி பேசும் மூலதனம் பிறந்தது.

அக்காலகட்டத்தில் தான் முப்பத்து எட்டு ஆண்டுகளாக மார்க்ஸ்ன் நிழலாக இருந்த ஜென்னி புற்றுநோயால் இறந்தாள். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி மார்க்ஸ்க்கு காத்திருந்தது. துக்கத்தால் அவர் நடைபிணமானார்.

அவரது வாழ்நாளில் மூலதனத்தில் முதல் பகுதியை மட்டுமே அவர் கண்ணால் பார்க்க முடிந்தது. மற்ற நான்கு தொகுதிகளையும் மார்க்ஸ்ன் இறப்புக்கு பின்னரே ஏங்கெல்ஸ் கொண்டுவந்தார். 1883 மார்ச் 14 அன்று மார்க்ஸ் தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

லண்டனிலுள்ள அவரது நினைவிடத்தை இன்று ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் பார்வையிடுகின்றனர். அவரது கல்லறை வாசகம் உலகிலுள்ள எல்லோருக்கும் அறைகூவல் விடுக்கிறது உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்று.

- ப.மதியழகன்

Pin It