Che Guevara 450சே வாழ்க்கையை அற்ப விஷயத்துக்காக தொலைத்து விடுபவர்களுக்கு முன்பு நீ உயர்ந்து நிற்கிறாய். அமெரிக்கா என்னும் மதம் பிடித்த யானையை எதிர்க்கும் துணிச்சல் உனக்கு எங்கிருந்து வந்தது. சே உனது கால்கள் பல தேசங்களைக் கண்டது. உனது ஆன்மா அங்கு ஆள்வோருக்கு எதிராக புரட்சி விதையை விதைத்தது.

மண்டியிட்டு வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று சாவதே மேல் என்று எங்களுக்கு உணர்த்திச் சென்றிருக்கிறாய். நாங்கள் ஆள்வோருக்கு மட்டுமல்ல ஒருஜான் வயிற்றுக்கும் அடிமையாக இருப்பவர்கள். பேரம் படிந்தால் விலைபோகக் கூடியவர்கள்.

பெண்களைத் தவிர்த்து வேறு எதையும் யோசிக்கத் தெரியாதவர்கள். மணல் வீட்டில் குடித்தனம் நடத்துகிறோம் என்பதை அறியாதவர்கள். மூழ்க்கக் கூடிய கப்பலில் இருந்து கொண்டு வாழ்க்கையைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருப்பவர்கள்.

நான் தான் கடவுள் என்று சொல்லும் வேடதாரிகளிடம் எளிதில் ஏமாந்துவிடக் கூடியவர்கள். உயிர்பிழைக்க வேண்டுமென்றால் விதை மண்ணைப் பிளக்க வேண்டுமென்று அறியாதவர்கள்.

தப்பிக்க கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டவர்கள். உலகைப் பற்றி நாட்டைப் பற்றி மக்களைப் பற்றி சரியான கொள்கை இல்லாதவர்கள். அரசியல் சதுரங்கத்தில் எந்தக் காய்களை யார் நகர்த்தினால் என்ன நாம் நாட்களைக் கடத்தினால் போதும் என்ற மனமுடையவர்கள்.

வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுபவர்களால் தான் வரலாற்று நாயகர்களாக முடியும் என நிரூபித்துக் காட்டியவன் நீ. க்யூபாவின் விடுதலைக்காக சிலுவையையும், முள்கிரீடத்தையும் சுமந்தவன் நீ. அதிகார வெறி என்றுமே உன்னிடத்தில் இருந்ததில்லை.

க்யூபா மக்களுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தவன் நீ. சேகுவேரா இது வெறும் பெயரல்ல மந்திரச்சொல். இந்தப் பெயர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே குலை நடுங்க வைத்தது. ஆண்டான், அடிமை முறை உலகத்தில் எந்த மூலையில் காலூன்றினாலும் அங்கு ஒரு சேவை நீங்கள் பார்க்கலாம்.

நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும் என்று சொன்னவன் நீ. உன் வாழ்நாளின் பெரும் பகுதி போர்க்களத்திலேயே கழிந்தது. உன் காதுகள் குண்டுச் சத்தத்தைக் கேட்டுப் பழகியவை. என்றோ எழுதப்பட்ட விதிக்கு சலாம் போட்டுப் போயிருந்தால் இந்த சேகுவேரா என்றோ மறக்கப்பட்டிருப்பான். மக்கள் தங்கள் தேசத்தை மீட்டெடுக்க ஆயுதம் ஏந்துவது தான் ஒரே தீர்வு என்று சொன்னவன் நீ.

மரணத்தை நெஞ்சுரத்தோடு எதிர்கொள்ளும் துணிச்சல் உனக்கிருந்தது. காஸ்ட்ரோவும் நீயும் துப்பாக்கியின் இரட்டைக் குழல்கள். ஆயுளில் பெரும்பகுதியை போராட்டத்துக்காக செலவழித்தவனை இந்த உலகம் பார்த்திருக்காது.

அமெரிக்காவின் கழுகுப் பார்வை உன்னைத் துரத்திக் கொண்டே இருந்தது. போராளிகள் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டார்கள். எங்கே வாய்கள் ஊமையாகிறதோ எங்கே சிந்தனை சிறைப்பிடிக்கப் படுகிறதோ எங்கே அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப் படுகிறதோ அங்கே புரட்சி வெடிக்கும். ஒவ்வொரு போராட்டத்திலும் கையில் ஏந்தப்படும் தீப்பந்தம் நீ ஏற்றி வைத்ததுதான்.

பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை அநீதிக்கு எதிரான போராட்டத்தில் உயிரை துச்சமென மதித்து கலகக் குரல் எழுப்புவாயானால் நீ ஒருவனே மரணத்தை வென்றவன். மக்களை மந்தை ஆடுகளாகக் கருதியவர்கள் உன்னைக் கண்டு நடுநடுங்கினார்கள்.

அச்சுறுத்தலுக்கு பயந்து வாழ்வை அடமானம் வைத்து விடாதே உன் சிந்தனையால் சிறைக் கதவுகளைக் கூட உடைக்க முடியும் அடிமையின் கலகக் குரல் ஆள்வோருக்கு கேட்கட்டும் என்றவன் நீ. மெழுகுவர்த்தி போன்று தன்னை அழித்துக்கொண்டு தரணிக்கு ஒளி தந்தவன் நீ. ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டுமென்று நீ வாழ்ந்து காட்டினாய்.

எண்ணிக்கையில் அல்ல வெற்றி போர் செய்யும் முறையில் தான் இருக்கிறதென அமெரிக்காவுக்கு புரியவைத்தாய். உன் எந்தப் புகைப்படத்திலும் பயம் என்ற ஒன்றை நாங்கள் பார்த்ததேயில்லை. உனது வார்த்தைகளின் சக்தி உலகத்தின் போக்கையே மாற்றியது. சே என்ற ஒரு எழுத்து அமெரிக்காவையே குலை நடுங்க வைத்தது.

மதமும் மதஅமைப்புகளும் தான் மக்களின் அடிதை்தனத்துக்கு காரணம் என்றவன் நீ. உலகம் உறங்கிக் கொண்டிருந்த போது நீ விழித்துக் கொண்டிருந்தாய். க்யூபாவின் விடுதலைப் போர் வெற்றியடைய உன் போர் வியூகமும் ஒரு காரணம். அடிமைப்பட்டு உறங்கிக் கிடந்த மக்களை விழித்தெழச் செய்ய பல தேசங்களுக்கு உன் கால்கள் பயணப்பட்டது.

விதைத்துக் கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையேல் உரம் இதுதான் உனது தாரக மந்திரம். தேசம் என்பது வெறும் மண்ணல்ல மக்களின் உயிர்மூச்சு. கோழைகளே நீங்கள் கொன்றது சேவையல்ல சேவை யாராலும் கொல்ல முடியாது.

உங்களின் தோட்டாக்கள் பயந்தவனைத்தான் உயிரைக் குடிக்கும். சே என்ற சாதாரண மனிதன் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களிடம் புரட்சி விதையை விதைத்துச் சென்றிருக்கிறான். தட்டிப் பார்ப்போம் திறக்க மறுத்தால் தகர்த்து எறிவோம் என்ற வாக்கியம் இன்றைக்கும் நாளைக்கும் என்றைக்கும் பொருந்தும். மரணம் ஒருமுறை தான் அது போராட்டக் களத்திலேயே போகட்டும் என்றவன் நீ.

உங்கள் விதியை நம்பிக் கொண்டு இருக்காதீர்கள் உங்கள் விழிகள் சிவக்காமல் வழி பிறக்காது என்றவன் நீ. ஒரு நாடு அடிமைப்பட மக்களிடம் கல்வியறிவு இல்லாதது தான் ஒரே காரணம். எதிர்நீச்சல் போடுபவர்களைத்தான் நாளைய வரலாறு தன் வாரிசாக்கிக் கொள்ளும்.

நீ உன்னை பாவி என்று குற்றவுணர்வு கொள்ளச் செய்வதன் மூலம் மதம் வெற்றி பெறுகிறது. சுவர்க்கத்தின் ஆசைக்காக உங்கள் வாழ்க்கையை அடகு வைக்காதீர்கள். காட்டையே அழிப்பது சிறுதீப்பொறிதான். எல்லோரையும் போல் சாதாரணமாக பிறக்கலாம் எல்லோரையும் போல் பத்தோடு பதினொன்றாக நாம் சாகக்கூடாது.

எதிர்ப்பது யானையை என்று தெரிந்தும் அச்சம் கொள்ளாதவனே உண்மையான நாயகன். நூறாண்டுகள் வாழ்வது பெரியதல்ல மறைந்த பிறகும் உலகம் நம்மை நினைக்க வேண்டும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். சே தொடங்கி வைத்தது இன்னும் முடியவில்லை. உலகிற்கு ஒரு சூரியன் அது சே தான். அவர்கள் நினைப்பது போல் அல்ல நீ வாழ்கிறாய் சே.

- ப.மதியழகன்