aleida march cubaபுரட்சிக்கு முன்:

அலெய்டா மார்ச் டொர்ரெஸ் 1936ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆஅம் நாள் சாண்ட கிளாராவில் வில்லா கிளாராவின் லொஸ் அஸுல்ஸில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். காட்டலனை சேர்ந்த அலெய்டாவின் தந்தை ஜுவன் மார்ச் ஒரு சிறு நிலத்தில் விவசாயம் செய்தார். அவரது தாயின் பெயர் இயுடொக்சியா  டெ லா டொர்ரெ. அலெய்டாவின் உடன்பிறந்தோர் லிடியா, எஸ்டெலா, ஒக்டாவியா, ஒர்லாண்டொ என நான்கு பேர்.

அலெய்டாதான் கடைக்குட்டி. சிறு வயதில் அலெய்டா ஒரு கிராமத்துக் குழந்தையாக, சிறு பறவையைப் போல் எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாகச் சுற்றியதாகவும், நீச்சலடித்ததாகவும் குறிப்பிடுகிறார். அவர் சிறு வயதில் கணிதம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டியதுடன் லத்தீன் அமெரிக்க வரலாற்றையும், மெக்சிகோவில் நடைபெற்ற புரட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ளும் விருப்பமும் கொண்டிருந்தார்.

பள்ளி ஆசிரியர்கள் வார இறுதி நாட்களில் ஹொசெ மார்த்தி போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பொது நிகழ்வுகள் ஏற்பாடு செய்து மாணவர்களைக்  கலந்து கொள்ள ஊக்குவித்து  அவர்களுக்குத் தேசப் பற்றையும், நீதி நெறியையும் ஊட்டியதாகவும் அலெய்டா நினைவுகூர்கிறார்.

அவரது சகோதரிகள் லிடியாவும், எஸ்டெலாவும் சாண்டாகிளாரா நகரில் தனி வீடுகளில் வசித்ததால் அலெய்டாவின் தாயார் திட்டமிட்டபடி அலெய்டாவும், அவரது சகோதரன் ஒர்லொண்டோவும் நகருக்குச் சென்று படித்தனர்.

ஆங்கிலம் பயில மிகவும் சிரமப்பட்டதாக அலெய்டா குறிப்பிடுகிறார். கெடுவாய்ப்பாக அலெய்டாவின் சகோதரி நோய்வாய்ப்பட்டு இறந்து போனதால், அலெய்டாவின் பெற்றோரும் நகருக்குக் குடியேறினர்.

அலெய்டா பள்ளிப் படிப்பை முடித்ததும், மருத்துவத்தில் ஈடுபாடு கொண்ட போதும் தங்கள் குடும்பத்தில் நிதி நெருக்கடி இருந்ததால், உடனடியாய் வேலை பெறும் விதத்தில் 15 வயதில் ஆசிரியப் பயிற்சிக் கல்வியில் சேர்ந்தார், 1953இல் வெற்றிகரமாக அந்தப் படிப்பை முடித்தார். பிறகு லாஸ் வில்லாஸில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் சேர்ந்தார்.

அரசாங்கம் ஊழல் மலிந்திருந்ததால் லஞ்சம் கொடுக்காமல் ஆசிரியர் பணி வாங்க முடியாது என்றும் அப்படியே பெற்றாலும் தொலைதூரப் பகுதியில் பல வகுப்பு மாணவர்களையும் ஒன்றாய்ச் சேர்த்து எடுக்கும் சிறிய பள்ளியில்தான் வேலை பெற முடியும் என்றும் அலெய்டா அறிந்தார். அலெய்டாவின் உண்மையான அரசியல் கல்வி பல்கலைக்கழகத்தில் சேர்ந்த காலத்திலிருந்து தொடங்கியது.

1952 மார்ச் 10இல் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் பாத்திஸ்டா அதிபரானதே அலெய்டாவின் மீது  தாக்கம் ஏற்படுத்திய முதல் அரசியல் நிகழ்வு. அவரது பெற்றோர் அரசியலில் எந்தச் சார்பும் இல்லாதவர்களாக இருந்த போதும் எட்வர்டோ சிபாஸ் தலைமையிலான ஆர்த்தடாக்ஸ் கட்சியை ஆதரித்தனர்.

ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையிலான மன்கடா ஆயுதப்படை தாக்குதல் பற்றிய செய்தி அறிந்து அலெய்டா மிகவும் உத்வேகமடைந்தார். ஃபிடல் காஸ்ட்ரோவின் ’வரலாறு என்னை விடுதலை செய்யும்’  உரையை வாசித்த போது அதில் கியூபா ஒரு தேசமாகத் தன் இறையாண்மையை  எவ்வாறு அடைய முடியும் எனத் தான் கருதியவையும் வெளிப்பட்டிருப்பதாக உணர்ந்தார்.  1956ஆம் ஆண்டைத் தன் அரசியல் வாழ்வில் முக்கியமான ஆண்டாக அலெய்டா குறிப்பிடுகிறார்.

சர்வாதிகாரத்தின் தொடர்ச்சியான அடக்குமுறையை எதிர்த்து மாணவர்களுடன் சேர்ந்து போராடினர். பல்கலைக்கழகத்தின் சூழ்நிலை பதற்றம் நிறைந்ததாக மாறி நிலைமை மோசமடைந்ததால்  பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அலெய்டா  நான்கு ஆண்டுப் படிப்பில் மூன்று ஆண்டுகளையே முடித்திருந்தார், ஆனால் பல்கலைக்கழகம் மூடப்பட்ட பிறகு அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை.

புரட்சியில்:

1956 செப்டம்பரில் மெக்சிகோவிலிருந்து திரும்பிய ஃபாஸ்டினோ பெரெஸிடம் ஜூலை 26 இயக்கத்தில் தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு அலெய்டா கேட்டுள்ளார். அவரும் அதற்கு ஆவலுடன் சம்மதித்தார்.

அலெய்டா  காலை வேளையில் பணிபுரியும் பள்ளியின் தலைவரான மார்கோட் மச்சாடோவும், ஜூலை 26 இயக்கத்தின் போராளியாகத் தீவிரமாய்ச் செயல்பட்டார். அவரும் அலெய்டாவும் இயக்கத்தின் பல்வேறு தலைமறைவுப் பணிகளை ஒன்றாகச் செய்துள்ளனர். தான் போராட்ட உலகில்தான் உண்மையாகப் பிறந்ததாகவும், அதுவே தன் வாழ்வின் மகிழ்ச்சியான பகுதிகளில் ஒன்றாகவும் அலெய்டா குறிப்பிடுகிறார்.

அலெய்டா ஆரம்பத்தில் தான் இயக்க வேலைகளில் ஈடுபடுவதைத் தன் பெற்றோரிடம் மறைத்தார். தான் நண்பர்களின் வீட்டிற்கு படிக்கப் போவதாக சாக்குச் சொல்லியவாறு இயக்க வேலைகளில் ஈடுபட்டுள்ளார். நாளடைவில் இது குறித்து அவரது பெற்றோருக்குத் தெரிய வந்த போது அலெய்டாவை அவர்கள் வீட்டை விட்டு வெளியேறாதவாறு தடுத்துள்ளனர். பிறகு காலப் போக்கில் அவரது செயல்பாடுகளை ஏற்றுக் கொண்டனர்.

அலெய்டா நகர்ப்புறத்தில் தலைமறைவு இயக்க வேலைகளில் ஈடுபட்டார். அவர் பகுதியைச் சார்ந்த ஜூலை-26 தலைவர்களால் முக்கிய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார். கியூமடோ டி கெய்ன்ஸில் வெக்டர் போர்டன் மேற்கொண்ட முன்முயற்சியின் அடிப்படையில் ஜுலை-26 இயக்கத்தின் கெரில்லாப் போர்முனைகள் கட்டமைக்கப்பட்டன.

இந்தக் கொரில்லா போர்முனைகள் அனைத்தையும் உருவாக்குவதில் அலெய்டா பங்கேற்றார். இந்த முனைகளுக்குத் தேவையான ஆயுதங்கள், உடைகள் மற்றும் இதர தேவைகளைத் திட்டமிடும் பொறுப்பை அலெய்டா ஏற்றுக் கொண்டார்.

ஏப்ரல் 9 வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான ஆயத்த வேலைகளிலும் அலெய்டா ஈடுபட்டார். அந்தப் போராட்டம் தோல்வியடைந்தது. அலெய்டாவின் உறவினர் லாரானோ அனோசெட்டோ மார்ச்சும் அவரது மகன் எட்வர்டோ அனோசெட்டோ ரெகாயும் பாத்திஸ்டா படையினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

அலெய்டாவின் லாஸ் வில்லாஸ் பிராந்தியமானது பாத்திஸ்டா படைகளால் சூழப்பட்டும் கண்காணிக்கப்பட்டும் இருந்தது. அலெய்டா தூதுவராக வேலை செய்தார், இயக்கத்தின் தலைமை அலெய்டாவை எஸ்காம்ப்ரே மலைகளுக்குச் சென்று கெரில்லாப் போராளிகளுக்கு பணமும், ஆவணங்களும் கொண்டுசேர்க்கும் ஆபத்தான பணியை நிறைவேற்றுமாறு ஆணையிட்டது.

அலெய்டா பணப் பையைத் தன் இடுப்பைச் சுற்றிப் பசை வைத்துக் கட்டியவாறு எஸ்காம்ப்ரோ மலைகளுக்குப் புறப்பட்டார். அங்குதான் சே குவேராவின் 8ஆவது ஆயுதப் படை முகாமிட்டிருந்தது. பணப் பையை அகற்றிய போது அவர் உடலில் காயம் ஏற்பட்டது. மருத்துவ உதவி தேவைப்பட்டதால் அவர் முகாமிலேயே சில நாட்கள் தங்கினார்.

நகரத்தில் அலெய்டா இனி பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற காரணத்தால்தான் அவர் எஸ்காம்ப்ரோ மலைக்கு அனுப்பப்பட்டார். அலெய்டா அனுபவமிக்க போராளியாகத் தலைமறைவு வேலைகளிலே அதிகம் ஈடுபட்டிருந்தாலும் பிறரது உத்தரவுகளைப் பின்பற்றவே அங்கே எதிர்பார்க்கப்பட்டதால் கொஞ்சம் பாதுகாப்பின்மையை உணர்ந்தார்.

தான் ஆயுதப் போராளியாக வேண்டும் என்ற சவாலே அப்பொழுது அவர் முன்னிருந்தது. தன் திட்டத்தை அலெய்டா சே குவேராவிடம் தெரிவித்தார். சே குவேரா புதிதாக வருபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணி மட்டுமே வழங்கப்படும் என்றும், முகாமில் ஒரு செவிலியாகப்  பணிபுரியுமாறு அலெய்டாவிடம் கூறியுள்ளார்.

இரண்டு வருடத் தலைமறைவு வேலை செய்ததால் தனக்கு கெரில்லாப் போராளியாக உரிமை உள்ளது என்று அலெய்டா பதில் அளித்துள்ளார். சே குவேரா ஒப்புக்கொள்ளவில்லை. சர்க்கரை உற்பத்தியாளர்களிடமிருந்து வரி வசூல் செய்வது போன்ற வேறு சில முக்கியமான பணிகளை முடிக்க  நகரத்திற்குத் திரும்புமாறு அலெய்டாவிடம் சே கூறியுள்ளார்.

அலெய்டா அருகிலுள்ள நகரமான பிளாசெட்டாஸுக்குச்  சென்றார்,  அங்கு அலெய்டாவைக் கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதால் கெரில்லா முகாமுக்குத் திரும்புமாறு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கேட்டுக்கொண்டார். அலெய்டா எஸ்காம்ப்ரே மலைகளுக்கு திரும்பி சென்றார்.

முகாமில் தங்குவதற்கான அலெய்டாவின் முடிவை  சே குவேராவைத் தவிர அனைவரும் ஒப்புக்கொண்டனர். சே பின்னர் ஓலோ பான்டோஜாவிடம் அலெய்டாவை எல் பெட்ரெரோவுக்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையிட்டார். அலெய்டா மிகுந்த கோபமும் கவலையும் அடைந்தார்.

அதன் பிறகு ஒரு நாள் விடியற்காலையில் ஜீப்பில் எல் பெட்ரெரோவைக் கடந்து செல்லும் போது அலெய்டா பயணப் பையுடன் தெருவில் அமர்ந்திருந்ததைக் கண்ட சே குவேரா தங்களுடன் வருமாறு அலெய்டாவை அழைத்துள்ளார். அலெய்டாவும் மறுக்காமல் அவர்களுடன் சென்றார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, சே குவேரா ஒரு கம்யூனிஸ்டாகத் தன்னைக் கண்காணிக்கத்தான் அலெய்டாவை லாஸ் வில்லாஸ் இயக்கத்தின் தலைமை (பெரும்பாலும் வலதுசாரிகளால் ஆனது) அங்கு அனுப்பியதாகச் சந்தேகித்ததாகவும், அலெய்டா நகரத்துக்குத் திரும்ப முடியாது என்பது தமக்கு தெரியாததாலும்தான் அலெய்டாவை கெரில்லாப் பிரிவில் சேர்க்கத் தயங்கியதாக அவரிடம் கூறியுள்ளார்.

ஜூலை-26 இயக்கம் ஒரு தற்காலிக அரசாங்க அமைப்பை அறிவித்த பிறகு சாண்டா கிளாரா போருக்கான ஆயத்தப் பணிகளை சே மேற்கொண்டார். அவர் மணிகராகுவாவில் உள்ள சினெசியோ டோரஸுக்கு அனுப்ப வேண்டிய கடவுச் சொற்கள் நகலெடுக்க அலெய்டாவுக்கு அறிவுறுத்தினார்  அப்போதிருந்து, அலெய்டா  சேவின் தனிப்பட்ட உதவியாளராக செயல்பட ஆரம்பித்தார்.போர் முடியும் வரை தூக்கமும், பசியுமே அவர்களுக்கு துணையாக இருந்ததாக அலெய்டா குறிப்பிடுகிறார்.

டிசம்பர் 28 அன்று சே குவேரா அலெய்டாவுக்கு எம் கார்பைன்-1 துப்பாக்கியை வழங்கியுள்ளார். யாருக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும் என்பதற்கான தனது அளவுகோல்களில் சே மிகவும் கண்டிப்பாக இருந்ததால் இது தனக்கு மிகவும் பெருமையும், நிறைவும் ஏற்படுத்தியதாக அலெய்டா குறிப்பிடுகிறார்.

எழுச்சிமிக்க சாண்டகிளாரா போரில் சே குவேராவுடன் பங்கு கொண்டதுடன் அவரின் தீரமிக்க போர் தந்திர நடவடிக்கைகளை நேரில் கண்ட சாட்சியாகவும் அலெய்டா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்சிக்கு பின்:

ஜனவரி 5இல் கமகுயிக்கு ஃபிடலை சந்திக்கச் சென்ற விமானப் பயணத்தின் போது சே ஒரு புரட்சிகரப் போராளியின் கடமைகள் குறித்துத் தம் கருத்துகளைக் குறிப்பெடுக்குமாறு அலெய்டாவுக்கு ஆணையிட்டுள்ளார். அவ்வாறு தான் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படாமல், அவருடன் தனது முதல் வேலையைத் தொடங்கிய அலெய்டா அலுவலகத்திலும், வீட்டிலும் சேயின் தனிச் செயலாளராகவே செயல்பட்டுள்ளார்.

அலெய்டா சேயின் கட்டளைப் படி படைவீரர்களின் தேவைகளை நிறைவு செய்து, பிரச்சினைகளைச் சரி செய்தார். சே குவேரா அலுவலகச் சந்திப்புகளை ஒழுங்கு செய்தார். "பொருளாளராக"த் தங்களிடம் இருந்த பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அலெய்டாவுக்கு அளிக்கப்பட்டது. அதைச் சிக்கனமான முறையில்  நிர்வகித்தார். எழுத்தறிவு இயக்கத்திற்காகவும் அலெய்டா பணி புரிந்தார்.

அலெய்டா லா கபானாவில் இருந்த போது கல்வி அமைச்சர் அர்மாண்டோ ஹார்ட்டிடம் தனிப் பயிற்சிகள் பெற்றார். லாஸ் வில்லாஸில் மத்தியப் பல்கலைக்கழகத்தில் அலெய்டா கல்வியல் துறைப் படிப்பை முடித்ததாலும், சமுதாயத்தில் பெண்களின் பங்கு பற்றிய “நடைமுறை ஆய்வறிக்கையை” எழுதி முடித்ததாலும் கல்வியியல் துறையில் முனைவர் பட்டம் அளித்து கௌரவிக்க ஹார்ட்   முடிவு செய்தார். அது அலெய்டாவுக்குப் பெரிதும் மகிழ்ச்சியளித்தது.

சே குவேராவுக்கும் அலெய்டாவுக்கும் காதல் அரும்பி மலர்ந்ததால் 1959 ஜூன் 12இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 10 நாட்களில் சே சர்வதேச நாடுகளுடனான கியூபாவின் உறவை வலுப்படுத்தவும், அணிசேரா இயக்கத்திற்கான பாண்டுங் மாநாட்டில் கலந்து கொள்ளவும் செல்ல வேண்டியிருந்தது, இது நீண்ட நாள் பயணம் ஆதலால் சேயின் தனிச் செயலாளராகத் தானும் அவருடன் வருவதாக அலெய்டா கேட்டுள்ளார்.

ஃபிடலும் அலெய்டாவை அழைத்து செல்லுமாறு சேயிடம் கூறியுள்ளார். அலெய்டா தனிச் செயலாளர் மட்டுமல்லாமல் தன் மனைவியாகவும் இருப்பதால் அழைத்துச் செல்ல இயலாது, மற்றவர்கள் தனியாக வரும் போது தான் மட்டும் மனைவியுடன் சென்றால் அது சிறப்புச் சலுகையாகக் கருதப்பட்டுத் தவறான முன்னுதாரணமாகி விடும் என்று மறுத்துள்ளார். அந்நிகழ்விலிருந்து  தான் நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக அலெய்டா பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

சே எப்போதும் தன் கருத்துகளை மதித்ததாக அலெய்டா குறிப்பிடுகிறார். புரெபெஸ்டிரிய கிறித்தவ மரபில் நம்பிக்கை கொண்டிருந்த அலெய்டா, காலப் போக்கில், தன்னைச் சுற்றி ஏற்பட்ட சமூக மாற்றத்தாலும், சேயின் தாக்கத்தாலும் மதம் குறித்தத் தன் பார்வையை மாற்றிக் கொள்ள முடிந்ததாகக் கூறியுள்ளார்.

தேசிய விவசாயச் சீர்திருத்தத் தொழில் துறை அமைப்பின் தலைவராக சே பொறுப்பேற்ற போது அலெய்டா  அவருக்குத் தனிச் செயலாளராகப் பணிபுரிந்தார். நவம்பர் 1959இல்,  எல்லா கியூப சமூகத் துறைகளை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பெண்களின் குழுவுடன் சிலியில் நிகழ்ந்த முதல் லத்தீன் அமெரிக்க பெண்கள் பேரவையில் அலெய்டா பங்கேற்றார்.

1962இல் நடந்த கியூபப் பெண்கள் கூட்டமைப்பின் முதல் பேரவையில் அலெய்டா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961இல் கியூபப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அலெய்டா சீனாவிற்கு சென்றார்.

சே காங்கோவுக்குப் புறப்பட்ட போது, அலெய்டா தானும் குழந்தைகளை பாதிக்காதவாறு காங்கோ சென்று சேயுடன் இணைந்து விடுதலை போராட்டத்தில் பங்கேற்க விரும்புவதாகக் கூறியுள்ளார். குழந்தைகளுடன் அங்கேயே தங்க வேண்டும் என்றும் அலெய்டாவால் மட்டுமே அவர்களை அன்புடன் பராமரித்து வழிகாட்ட முடியும் என்றும் கூறி சே அதை மறுத்துள்ளார்.

1966 அக்டோபரில் பொலிவிய விடுதலைப் பயணத்தை சே மேற்கொண்ட போது, ஐந்து வருட நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெற்றியுடன் சே திரும்பிய பின் மீண்டும் ஒன்றிணைய முடியும் என்றே அலெய்டா உறுதியாக நம்பியிருந்தார்.

”ஃபிடல் எங்களைப் பற்றிக் கவலைப்பட்டவாறே எப்போதாவது வந்து பார்ப்பார், எங்கள் தேவைகளைக் கவனத்தில் கொள்வார். சே சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் ஃபிடல் அப்படித்தான் இருந்தார்” என்றும், ”பொலிவியாவில் கெரில்லா இயக்கத்தின் முன்னேற்றம் குறித்த செய்திகளை ஃபிடல் ஒருபோதும் சொல்லத் தவறியதில்லை” என்றும் அலெய்டா குறிப்பிட்டுள்ளார்.

சே பொலிவியாவுக்குச் செல்வதற்கு முன், பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றுத் துறையில் படிக்க தன்னை அறிவுறுத்தியதால் வரலாற்றுத் துறையில் சேர்ந்து படித்ததாகவும் அது மிகவும் பயனளித்ததாகவும் அலெய்டா குறிப்பிடுகிறார்.

அக்டோபர் மாதத்தில் சேயின் மறைவு குறித்த அந்த பயங்கரமான செய்தியைக் கேட்ட போது அலெய்டா எஸ்காம்பிரே மலைகளில் வரலாற்று மாணவராக முக்கியமான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். 1968இல் அலெய்டா லாஸ் வில்லாஸில் உள்ள டிரினிடாட்டில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த போது தன்னை நேரில் வந்து பார்க்குமாறு ஃபிடலிடம் இருந்து செய்தி வந்ததால் அலெய்டா ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

பொலிவியாவில் சே எழுதிய நாட்குறிப்பு குறுகிய காலத்தில் தன் கைக்குக் கிடைக்கும் என்று அவர் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. சேயின் நாட்குறிப்பு கியூபாவுக்கு அனுப்பப்பட்டது. சேயின் கையெழுத்தைத் தெளிவுபடுத்த அலெய்டாவின் உதவியை ஃபிடல் கேட்டுள்ளார்.

சேயின் கையெழுத்தைத் தன் உதவியின்றியே புரிந்து கொள்ள முடியும் எனும் போதும் சே குறித்த விசயத்தில் முதன்மையான ஒருவராக அலெய்டாவை ஈடுபடுத்த வேண்டும் என்ற நுட்பமான உணர்வினாலே ஃபிடல் அவ்வாறு செய்ததாகவும் அது தன்னை நெகிழச் செய்ததாகவும் அலெய்டா குறிப்பிட்டுள்ளார்.

சேயின் பொலிவிய நாட்குறிப்பு குறித்து அலெய்டாவிடம் கேட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார் “பொலிவிய நாட்குறிப்பு குறித்த எனது உணர்வுகளை, இப்போது ​​பல ஆண்டுகளுக்குப் பிறகு, விளக்குவது மிகவும் கடினம். அதைப் படியெடுக்கும் பணியில் நான் ஈடுபட்ட போதும் பொலிவிய நாட்குறிப்பை என்னால் மீண்டும் படிக்க முடியவில்லை, அதன் பகுதிகளையும், தேதி மற்ற விவரங்களையும் சரிபார்க்க முடிந்த போதும் என்னால் அதை உட்கார்ந்து முழுமையாகப் படிக்க இயலவில்லை. சேயின் அந்தத் தனிமையான இறுதித் தருணங்களின் வேதனையைப் பெரிதும் உணர்கிறேன்.

அவரை ஆற்றுப்படுத்த அவருடன் நானில்லை, அந்தத் துணிவான மனிதனை,  நான் எப்போதும் அறிந்த கெரில்லாப் போராளியைத் மட்டும் நினைவில் கொள்ளவில்லை. பல்வேறுபட்ட பரிமாணங்களைக் கொண்ட அந்தச் சிறப்பு மிக்க மனிதனின் மற்ற அம்சங்களைப் பற்றியும் நான் நினைக்கிறேன். மனித குலத்தின் மீதான தன் அன்பிற்காகத் தன்னை முழுமையாகக் கொடுத்த மனிதனை எந்த அளவுக்கு  மிருகத்தனமான முறையில் இப்படிச் செய்கிறோம் என்பதைக் கருதாத  கொலையாளிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.”

அலெய்டா வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்ற பின்னர், கல்வித்துறை அமைச்சகத்தில் லத்தீன் அமெரிக்க வரலாறு குறித்த பள்ளி நூல்களைத் தயாரிப்பதில் பிற ஆய்வாளர்களின் குழுவுடன் பணியாற்றினார். கியூப மகளிர் கூட்டமைப்பிலும் தன் பணிகளைத் தொடர்ந்தார். அலெய்டா அமெரிக்க ஆய்வு மையத்தில்  பணியாற்றினார்.  அதில் குறிப்பாக அர்ஜென்டினாவின் தொழிலாளர் இயக்கம் குறித்து கவனம் செலுத்தியதாகவும் சேயின் தாயகத்துடன் ஒரு வலுவான பிணைப்பை உணர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

1975இல் மக்கள் அதிகார தேசிய அவையின் பிரதிநிதியாக அலெய்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச உறவுகளுக்கான ஆணையத்தின் முதல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அலெய்டாவுக்கும், சே குவேராவுக்கும் மொத்தம் நான்கு குழந்தைகள். மூத்த மகள் அலெய்டா குழந்தை மருத்துவராக பணியாற்றுகிறார், இளைய மகள் சிலியா டால்பின்கள், சீல்களுக்கான சிறப்புக் கால்நடை மருத்துவராகப் பணியாற்றுகிறார். மகன்கள்  காமிலோ மற்றும் எர்னஸ்டா இருவருமே வழக்கறிஞர்கள்.

அவர்களைத் தலைவரின் குழந்தைகள் என்ற பிம்பத்திற்குள் சிக்க வைக்காமல் சாதாரணமான ஆண் பெண்களாகவே அலெய்டா வளர்த்துள்ளார். ஒரு துயருறும் விதவையாகச் சிலை போல் கல்லாகிப் போவதைத் தடுக்க பல ஆண்டுகளாக முயன்று இறுதியில் மறுமணம் செய்து கொண்டதாக அலெய்டா குறிப்பிட்டுள்ளார். சே குவேராவுடனான தன் வாழ்வை அலெய்டா “என் நினைவில் சே (சே குவேராவுடன் என் வாழ்க்கை)” என்று நூலாக்கியுள்ளார். தமிழில் அந்நூலை தோழர் அ.மங்கை மொழிபெயர்த்துள்ளார்.

சே விட்டுச் சென்ற  உண்மையான பாரம்பரியத்தை உயிருடன் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவராய் அது குறித்து ஃபிடலுடன் கலந்துரையாடினார் அலெய்டா. சே - அலெய்டாவின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றலாமா என ஃபிடல் கேட்டுள்ளார். வீட்டை சே பற்றிய ஆய்வு மையமாக மாற்றும் திட்டத்தை  அலெய்டா பரிந்துரைத்த போது ஃபிடல் அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டார். தற்போது சே குவேரா ஆய்வு மையத்தின் தலைவராக அலெய்டா மார்ச் பணிபுரிகிறார்.

சேயின் பணிகளை, வெளியிடப்படாத ஆவணங்கள், புகைப்படங்கள், அவரைப் பற்றிய ஆய்வுகளை ஒழுங்கமைத்து, அவரது வாழ்வையும் பணியையும் புத்தாக்கத் திறனையும் அறியத் தருவதே சேயின் குடும்பமாக கியூபருக்கு வழங்கக் கூடிய மிகச்சிறந்த ஒன்று என்ற உறுதியான நம்பிக்கையுடன் தன் பணியைத் தொடர்கிறார் அலெய்டா. இன்னும் பல்லாண்டுகள் அவரது புரட்சிகரப் பெரும்பணி ஓங்கிட வாழ்த்துவோம்.

(தொடரும்)

- சமந்தா