காலனி அரசு மத சார்பான பழக்க வழக்கங்களில் தலையிடவில்லை

1875இல் நாடெங்கிலும் மருத்துவமனைகள் இருந்தபோதிலும்கூட, அரசு, நகராட்சி, டிஸ்ட்ரிக் போர்ட் மருத்துவமனைகளில் குழந்தை மற்றும் மகளிர் மருத்துவம் போற்றப்படாது புறக்கணிக்கப்பட்டன. பர்தா முறை மற்றும் ஆண்கள் பெண்களுக்கு மருத்துவம் பார்ப்பதைச் சமூகம் ஏற்றுக்கொள்ளாத நிலைப்பாடும் இவற்றிற்குக் காரணங்களாகும். இக்கால கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பெண் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், பரம்பரைத் தாதிகளையே பெண்கள் நாடவேண்டியதாய் இருந்தது. இதை நன்கு உணர்ந்த அரசு, இந்தியர்களில் குறிப்பாக இந்து, இஸ்லாமியர் சமூக, மதச்சார்பான பழக்க வழக்கங்களில் அரசு தலையிடாது தன்னைக் காத்துக் கொண்டது. ஆகவே குழந்தை மற்றும் மகளிர் பிரசவகால இறப்பு விகிதம் மிகவும் கூடுதலாக இந்தியாவில் காணப்பட்டது.

பெண்களுக்கு இக்காலகட்டத்தில் மருத்துவ உதவி செய்ய முன்வந்தவர்கள் கிறித்தவ மிஷனரிகள். இவர்கள் ஆங்காங்கே மருத்துவமனைகளைக் கட்டி பல வழிகளில் உதவி செய்தனர். குறிப்பாக மருந்துடன் மருத்துவப் படிப்பையும் தனிப்பட்ட முறையில் அளித்து வந்தனர்.

medical treatment in british ruleமருத்துவமனையும் மிஷனரிகளும் - பயனடைந்தவர் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்

தென் இந்தியாவில் மிஷனரிகளுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், இதற்கு மாறாக வடநாட்டில் மிகுந்த எதிர்ப்பு காணப்பட்டது. சர்ச் மிஷனரி சொசைட்டி காஷ்மீரில் தடம் பதிக்க நினைத்தபொழுது, 1854இல் பெரும் கலவரத்துடனான எதிர்ப்பு இருந்தது. இடைவிடா முயற்சியால் 1865இல் ஒரு மருத்துவமனைகள் ஸ்ரீநகரில் திறக்கப்பட்டது.

தென்னாட்டில் ராணிப்பேட்டையிலும், பிறகு வாலாசாபேட்டையிலும் மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. பிறகு 1866இல் எச்.என்.ஸ்கட்டரால் மருத்துவமனை திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்டவர்களே மருத்துவத்திற்கு வந்தனர். என்றாலும் பிறகு இஸ்லாமியர்களும் உயர்சாதிக்காரர்களும் மருத்துவம் பெற்றனர். ஆண்டுக்கு வெளிநோயாளிகள் 30 ஆயிரம் பேர், உள்நோயாளிகள் 1,300 பேர் மருத்துவம் பெற்றனர்.

டாக்டர் ஸ்கட்டரால் மருத்துவமனையில் பலர் மதமாற்றம் அடைந்தனர். இவரது கொள்கையின்படி ஒவ்வொரு மிஷனரிகளும் தங்களின் குறிக்கோள் நிறைவேற மருத்துவம் அளிக்க தங்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். இதற்குச் சான்றாக 200 பிராமணர்கள், விவசாயிகள், அலுவலர்கள் ஆர்காட் மிஷனரிகளால் மதமாற்றம் ஆனபொழுது, “ஆரம்பத்தில் நாங்கள் எங்கள் தெருக்களில்கூட அவர்கள் நடப்பதை விரும்பவில்லை. பறையர் வேண்டுமானால் மருத்துவம் எடுத்துக் கொள்ளட்டும், நாங்கள் தொடக்கூட மாட்டோம் என்றோம். ஆனால் அதுவே எங்கள் மனைவி பிள்ளைகள் நோயுற்றபொழுது நாங்களே அவர்களை வரவேற்று உபசரித்து மருந்தைப் பெற்றுக்கொண்டோம். அதற்குக் கூட அவர்கள் பணம் பெற்றுக் கொள்ளவில்லை. இது அவர்களின் புனித வேதாகமத்தினால் ஆகும். இதில் நம்முடைய எந்தப் புனித நூல்களையும் இணைத்துப் பேச முடியாது,” என்று கூறினர்.

இச்செயல் அக்காலகட்டத்தில் மற்ற மதத்தினரிடம் காணப்படாத ஒன்று. மனித நேயத்துடன் எல்லோரிடமும், குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோரிடமும், மிஷனரிகள் அணுகினார்கள். இதுபோலவே மனநலம் குன்றியவர்களும், தொழுநோயாளிகளும் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு 12ஆம் நூற்றாண்டு வரை சில கோயில்களைத் தவிர வேறு யாரும் உணவளிக்கவில்லை. இவர்களை அரவணைத்துச் செல்வது இவர்கள் பணியாய் இருந்தது. இது மிகையாக அரசர்களால் அரசாட்சி நடைபெற்ற காஷ்மீர், ராஜபுதனம், மைசூர் ஆகிய பிரதேசங்களில் இருந்தது. ஏனெனில் இங்கு மருத்துவம் அளிப்பது என்பது அரசர்களால் மிகக் குறைவாகவே நடந்தது.

டாக்டர் ஹம்பரி மெத்தேடிஸ் எபிஸ்கோபல் என்பவர் நைனிடாலில் உள்ள தேவாலயத்தில் 1869இல் பெண் மருத்துவப் பயிற்சியை ஆரம்பித்தார். இது வெற்றி பெறாது 1872இல் மூடப்பட்டது. பின்னர் இதே தேவாலயத்தைச் சார்ந்த மிஷனரிகள் அமெரிக்காவிலிருந்து, பெண்களுக்கு மருத்துவம் கற்பிக்க பெண் மருத்துவரைத் தங்களுக்கு, அனுப்புமாறு கூறியதற்கிணங்க, டாக்டர் கிளாரா ஸ்வைன் எம்.டி., பெரய்லிக்கு வந்து 1870 ஜனவரியில் மருத்துவம், செவிலியர் பயிற்சி, மருந்து செய்யும் முறை ஆகியவைகளை அனாதை இல்லத்தில் இருந்த 14 பெண்களுக்குக் கற்பித்தார். 1873இல் இந்தப் பெண்கண் மூன்று மருத்துவர்களால் சோதனை செய்யப்பட்ட பின் மருத்துவப் பணியாளர்களானார்கள்.

இம்மாணவிகளுக்குப் பாடம் நடத்த ஒரு மருத்துவமனையும் மருந்தகமும் தேவைப்பட்டபொழுது நவாப் ராம்பூர் நிலத்தை நன்கொடை அளித்தார். மக்களின் அன்பளிப்பால் 1873இல் மருந்தகமும் 1874இல் மருத்துவமனையும் திறக்கப்பட்டன.

டாக்டர் ஸ்வைனைப் போலவே செல்வி ரோஸ் கிரீன்பீல்ட், லூதியானாவிற்கு 1875இல் வந்தபின், டாக்டர் எடித் பிரென் உதவியுடன் லூதியானா பெண்களுக்கான மருத்துவப் பள்ளியைத் தொடங்கினார். இது 1924 வரை நீடித்தது. இதனைப் போற்றும் விதமாக 1926இல் கெய்சர் ஐ ஹிந்து (Kaisar - I - Hind) விருது வழங்கப்பட்டது. இதுபோல மிஷனரி பெண்களால் பல இடங்களில் இந்தியப் பெண்களுக்கு மருத்துவம் வழங்கப்பட்டது. (Medicine and the Raj, p. 55)

மிஷனரிகளைத் தாண்டி, மற்றபடி மருத்துவம் இந்தியப் பெண்களுக்கு எப்படி வந்தடைந்தது என்று பார்க்கும்போது, நமக்கு முதல்முதலில் மதராசில் படித்த திருமதி ஸ்கர்லிப் நினைவே வரும். இவர், கவர்னர் லார்ட் ஹோபர்ட், மதராஸ் (Lord Hobart, Madras) சர்ஜன் ஜெனரல் டாக்டர் பால்போரிடமும் மருத்துவம் கற்க அனுமதி கேட்டார். சர்ஜன் இவருக்கு உதவி செய்ய நினைத்தாலும், pre-mature என்று சொல்லித் தடுத்துவிட்டார். பிறகு, மதராஸ் மருத்துவக் கல்லூரி (MMC) முதல்வர் டாக்டர் ஃபர்வெல் (Furwell) ஆதரவுடன் ஸ்கர்லிப் 1875இல் 3 ஆண்டு சான்றிதழ் படிப்பிற்கு அனுமதிக்கப்பட்டார். இவருடன் மேலும் மூவர் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஐரோப்பியர்கள் அல்லது ஆங்கிலோ இந்தியர்கள் ஆவர்.

மதராசைப் போலவே வங்காளத்திலும் 1876இல் ஐரோப்பிய பெண்கள் கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர கவர்னர் சர் ரிச்சர்ட் டெம்பிளிடம் அனுமதி கேட்டனர். அவர் அதற்கு அனுமதி அளித்த நிலையில், கல்லூரி நிர்வாகம் ஆண்களுடன் பெண்களும் இணைந்து படிக்கும்பொழுது கற்பிப்பது கஷ்டமான காரியம் என காரணம் காட்டி அனுமதி மறுத்தது. இதன் காரணமாக இவர்கள் மதராஸ் கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டனர். 1881இல் இவர்களுக்கு  (Miss Ellen n’ Abrem & Miss Able Das) உதவித்தொகை கல்கத்தா அரசு வழங்கியது.

பிரம்மசமாஜம் கல்கத்தாவாசிகளை, குறிப்பாக பெண்களை படிக்கத் தூண்டியதன் விளைவாக, 1883 ஜூன் மாதம் வங்க கவர்னர் ரிவர்ஸ் தாம்சன் (Rivers Thomson) பெண்கள் கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதி வழங்கினார். இதன்படி. எப்.ஏ., (FA) படித்த பெண்கள், அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை ரூ.20 வழங்கப்பட்டது.

இதேபோல் பம்பாயிலும் 1883இல் கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் (Grant Medical College -இல்) பெண்களுக்கு மருத்துவப்படிப்பு திறந்துவிடப்பட்டது.

1884-85இல் மதராசில் 5, பம்பாயில் 17. கல்கத்தாவில் 3 என்ற எண்ணிக்கையில் பெண்கள் மருத்துவம் பயின்றனர். என்றாலும் சிலரால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. “சரியாக ஆராயாது விலைமதிக்க முடியாத உயிருடன் விளையாட பெண்களை அனுமதிப்பது தவறு” என்று Indian Medical Gazette போன்ற இதழ்கள் தலையங்கம் எழுதி பெண்கள் செவிலியர்களுக்கே படிக்க ஏற்றவர்கள், டாக்டர்களுக்குப் படிக்க அவர்கள் தகுதியற்றவர்கள் என்று எழுதின. இதுதவிர, 1895இல் படிக்கும் பெண்களின் நடத்தை மோசமாக உள்ளதாக மொட்டைக் கடுதாசிகளும் அடிக்கடி வந்தன. இது பெரும்பாலும் விடுதியின்மையால் என்று சொல்லப்பட்டது. இதனை உணர்ந்த மகாராணி ஸ்வர்ணமாய் 1,50,000 ரூபாய் வழங்கினார்.

இத்தனை வசதிகள் பெருகியும் (1875-1910) வரை இந்து, முஸ்லீம்கள் ஓரிருவரே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இதற்காக வட இந்தியாவில் பர்தா முறை கடுமையாக உள்ள நகரங்களில் பெண்களுக்குத் தனி வகுப்புகள் நடத்தப்பட்டன.

டாக்டர் ஆனந்தபாய் ஜோஷி

பெண்கள் படிப்பதற்கு ஏற்றவர்கள் அல்ல என்று சொல்லப்பட்ட (1886) இக்கால கட்டத்தில் ‘ஆனந்தபாய் ஜோஷியை’ நினைவுகூர்தல் நன்று. இவரே முதன்முதலில் அமெரிக்காவிற்குச் சென்று மருத்துவப்படிப்பு படித்தவராவார். இவர் மராட்டிய பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய தாயினாலேயே பலமுறை அடிவாங்கியபின் பத்து வயதிலேயே திருமணமாகி 12 வயதில் கருவுற்றபின், பெண் குழந்தை பிறந்து இறந்தது. அதன்பின் 22 வயதில் மருத்துவப்பட்டம் பெற்ற ஓர் ஆண்டுக்குப் பின்னர் காலமானார்.

இவர் படிக்க உதவியவர்கள் டாக்டர் அமெரிக்காவில் நியூஜெர்சியில் வசித்த பி.எப்.கார்பென்ட்ர் ஆப் ரோசிலி மற்றும் பெண்கள் விடுதலைக்குப் போராடிய ‘மகிளா ஆர்ய சமாஜத்தை’ 1881இல் ஆரம்பித்த பண்டித ராமாபாயும் ஆகும். இவரே ஸ்திரி தர்ம நீதி என்ற நூலையும் எழுதியவர்.

ஆனந்தபாய் ஜோஷி தனது எம்.டி. மருத்துவப்படிப்பிற்கான ஆராய்ச்சி ஏட்டிற்கான தலைப்பாக ஆரிய இந்துக்களின் பேறுகாலத்தைத் தேர்ந்தெடுத்தார். இது ஏன் என்பதைத் தன் தோழி கார்பென்டருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார். “இந்து திருமணத்தைக் குறித்து நூல்கள் ஒன்றும் இல்லை என்பது ஐரோப்பியர்களின் கருத்து. இதனை நான் மறுக்கவே இந்து சாஸ்திரங்கள் பயனுடையவை என்று காட்டவே, சமஸ்கிருதம் படித்து வருகிறேன். இதுவே தன்னுடைய ஆய்வு ஏட்டிற்கு உதவும்” என்று குறிப்பிடுகிறார். (Medicine and the Raj, p. 61)

இவர் தன் ஆய்வுக்கட்டுரையில் பழங்காலத்தில் நடைமுறையில் இருந்த பேறுகாலத் தூய்மை, கருக்கலைப்பிற்கான காரணம், பிரசவத்திற்கு முன் செய்ய வேண்டிய ஏற்பாடுகள், பேறுகால இடர்ப்பாடுகள் மற்றும் சிசுநோய்கள் போன்றவைகளைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது இறுதிக்காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தையே மேற்கொண்டார். ஒருவேளை தான் நோயிலிருந்து மீண்டிருந்தால் ஆண் ஆதிக்கக் கோட்டையான ஆயுர்வேதத்திற்கு மருத்துவராகக் கூட ஆகியிருக்கக்கூடும்.

கருவுற்ற மகளிர் பாதுகாப்பு நிறுவனங்கள்

இந்தியாவில் கருவுற்ற மகளிரைப் பேண, பிரசவ இறப்பைக் குறைக்க, கல்கத்தாவில் முதன்முதல் கருவுற்ற பெண்கள் தங்கும் மருத்துவமனை உருவானது. இது போன்று மிகப் பழைமையான மகளிர் நல நிறுவனம் 1844 ஜூலை 26இல் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனை மதராசில் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் இதன் பெயர் கருவுற்றவர் தங்கும் மருத்துவமனை (Lying in Hospital) என்பதாகும். இதன்படி கருவுற்ற மகளிர் தன்னுடைய வீட்டில் பிரசவம் வைத்துக்கொள்ளாது, மருத்துவமனையில் உள்ளிருந்து பிரசவம் பார்ப்பதே ஆகும்.

இதற்கான அடித்தளம் 1841இல் மருத்துவர் கமிட்டி ஒரு விண்ணப்பத்தைச் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முதன்மை காரியதரிசிக்கு அனுப்பி வைத்ததே காரணம். இதன் அடிப்படையிலேதான் பிரசவ மருத்துவமனை கூவத்தின் கரையில் கட்டப்பட்டது. இதன்பிறகு, 1847இல் மற்றொரு மருத்துவமனை தோன்றிற்று. 1854இல் சுதேசிகளும் இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 1857இல் மதராஸ் மாநகரத்தை விட்டு வெளியேயும் இதுபோன்ற மருத்துவமனை திறக்கப்பட்டது. இதில் சில தாதிகளுக்கு 1850-1870 வரை பயிற்சி அளிக்கப்பட்டது.

மதராஸ் மகளிர் மருத்துவமனை எல்லா மக்களுக்கும் பொதுவானது என்றாலும், இதனைப் பயன்படுத்தியவர்கள் ஐரோப்பியர், ஆங்கிலேய இந்தியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட இந்தியர்களாவர். உயர்குல வகுப்பினர் மற்றும் முஸ்லீம்கள் தங்கள் சமூக சமய சிந்தனைகளுடன் இந்த மருத்துவமனைகளில் மருத்துவம் பெறுவதைத் தவிர்த்தனர்.

இந்த மருத்துவமனையின் சிறப்பு என்னவென்றால், மருத்துவமனைக்குப் பிரசவம் பார்க்க வருபவர்களின் யோனியை அசுத்த நீரால் கழுவி, சுத்தமற்ற கருவிகளைப் பயன்படுத்தி, பனிக்குடம் உடைந்து வெகுநேரம் ஆனபின் வருபவர்களுக்குத் தொற்று தொற்றியிருக்கக்கூடும் என்ற பொருளில் தனியான ஒரு பகுதியில் மற்ற பிரசவம் பார்க்க வருபவர்களிடமிருந்து தொடர்பற்று இருக்க வசதி செய்து கொடுக்கப்பட்டதால் மற்றவருக்குத் தொற்று பரவுவது தடுக்கப்பட்டது.

தாதியர்களைத் தகுதியுள்ளவர்களாக்க முயற்சி

1854இல் இம்மருத்துவமனையில் தாதிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 12 மாதங்கள் படிப்பிற்குப் பிறகு தேர்வின் அடிப்படையில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்கட்கு வாரம் ஒருமுறை செயல்முறை பயிற்சியுடன் (practical) உடல்கூறு பாடங்கள் கண்காணிப்பாளராலும், உதவி மருத்துவராலும் நடத்தப்பட்டன. இப்பயிற்சியில் அனுமதி பெற 5-ஆவது பாரத்தில் தேர்ச்சி பெற்று உள்நாட்டு மொழியில் மேம்பட்ட அறிவும் இருக்க வேண்டும். இதன் காரணமாக எல்லோரும் படிக்கலாம் என்பது முடியாததாகி இந்தியக் கிறித்தவர், உயர்குடி மக்கள்தான் பயிற்சிபெற சேர்ந்தார்கள். மிகக் குறைவாகவே திராவிட இன மக்கள் சேர முன்வந்தனர். இவர்கட்கு உதவித்தொகையாக ரூ.15 வழங்கப்பட்டது.

இதுபோலவே மதராஸ் பொது மருத்துவமனையிலும் செவிலியர்கள் படிக்கத் திட்டம் தீட்டப்பட்டு, அரசிற்கு அனுமதிக்கு அனுப்பியபின், 6 செவிலியர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்பொருட்டு இங்கிலாந்திலிருந்து நான்கு பயிற்சி பெற்ற செவிலியரையும் ஒரு கண்காணிப்பாளரையும் செவிலியர் பயிற்சிப் பள்ளி தொடங்க வரவழைக்கப்பட்டனர். இதற்கான பயிற்சிப் பள்ளி 1871 ஜூலை 1இல் ஆரம்பிக்கப்பட்டது.

மகளிருக்கு உதவிய நிறுவனங்கள்

(1) சர் ராமசாமி முதலியார் மருத்தவமனை - மேல்குடி மக்களுக்கான மருத்துவமனை (ஆர்.எஸ்.ஆர்.எம். பெண்கள் மருத்துவமனை):

சர் ராமசாமி முதலியாரின் தங்கிப் பார்க்கும் பிரசவ மருத்துவமனை வடசென்னையில் மணியக்காரச் சத்திரத்தில் 1880இல் டியூக் பக்கிங்ஹாமினால் தொடங்கி வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையைப் பராமரிப்புக்காக, ராமசாமி முதலியாரின் அறக்கட்டளை ரூ. 15 ஆயிரம் வழங்கியது.

பொது மருத்துவமனைகளில் சேர்ந்து பிரசவம் பார்க்க விரும்பாத, மேல்குடி மக்கள் தங்கள் ஆசாரத்தையும், சமூகப் பழக்க வழக்கங்களையும் விட்டுக்கொடுக்காது இருப்பவர்களும் அப்படி விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமானால் இறப்பதற்குக் கூட தயாராக இருந்தவர்களும் இந்த மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவம் பெற்றனர். இதன் காரணமாக இம்மருத்துவமனை தொடங்கிய முதல் ஆண்டு 150 பெண்கள் பிரசவம் பார்த்துக் கொண்டார்கள். 32 படுக்கைகளே கொண்ட இம்மருத்துவமனையில் நோயாளிகளைக் கவரும் வண்ணம் ஸ்பிரிங் கட்டில், படுக்கைத் தலையணைக்கு உறைகள், சுவருக்கு வண்ணப் பூச்சு, அறை நடுவில் அலங்காரப் பூச்செடிகள் ஆகியவை - அதாவது ஒரு சராசரி மருத்துவமனையில் கிடைப்பதைவிடக் கூடுதலான வசதிகள் இங்கு தரப்பட்டன. மருத்துவமனையும் சற்று விசாலமாகக் காற்றோட்டமாக இருந்தது. இதில் ஒரு விதியாக உழைக்கும் பெண்கள், ஊட்டம் குறைவானவர்கள், 19 வயதுக்குக் குறைந்தவர்கள் பிரசவமாவதற்கு முன்பு 15 நாட்கள் தங்க அனுமதிக்கப்பட்டார்கள். (Billington Women in India, p. 10)

இங்கிலாந்து ராணியின் 50ஆவது பிறந்த நாள் நினைவாக மற்றொரு உள்நோயாளி தங்கும் பகுதி திறக்கப்பட்டு, பின்னர் மேலும் ஒன்று அவர் இந்திய வருகையை முன்னிட்டும் திறக்கப்பட்டது. ஏனெனில், இம்மருத்துவமனையின் அருமை பெருமைகளை அறிந்த மக்கள் நெடுந்தொலைவிலிருந்து ஏராளமாக வந்து மருத்துவம் பெற்றனர். இதன் காரணமாக சர் செவாலியர் ராமசாமி முதலியாரால் தொடங்கப்பட்ட இம்மருத்துவமனை இந்தியாவில் சிறந்த ஒரு மருத்துவமனையாக இயங்கியது. 1914இல் ராமசாமி முதலியார் இம்மருத்துவமனையை முனிசிபாலிடியிடம் ஒப்படைத்தார். இம்மருத்துவமனையே ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை என்று இன்றும் நடைபெற்று வருகிறது.

இப்பெண்களுக்கான மருத்துவமனையைக் கட்டிய சர் ராமசாமி முதலியாரைப் பற்றிய சில கூடுதல் செய்திகள் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் பழைய மூர் மார்கெட் எதிரில் «க்ஷதராடனம் செய்யக்கூடிய யாத்திரிகர்கள் இலவசமாகத் தங்குவதற்கான சத்திரம், 1899இல் திருப்பாப்புலியூரில் தாய் சேய் மருத்துவமனை காஞ்சிபுரத்தில் இன்னொரு மருத்துவமனை ஆகியவைகளையும் திறந்த வள்ளல் ஆர்.எஸ்.ராமசாமி முதலியார் ஆவார்.

(2) லேடி வெலிங்டன் பெண்கள் மருத்துவப் பள்ளி, சென்னை:

பெண்களுக்கான அரசு மருத்துவப் பள்ளி எச்.இ.லேடி வெலிங்டனால் 1923 ஜூலையில் மதராஸ் மாகாணத்தில் மற்ற மருத்துவப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் உதவித் தொகை பெறும் இருபது மாணவர்களுடன் எழும்பூர் விக்டோரியா கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1927 இல் இக்கட்டிடத்திற்கு அருகில் உள்ள மற்றொரு கட்டிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு, பிறகு 1933 லக்ஷ்மி விலாசத்திற்கு மாற்றப்பட்டது. மாணவர்கள் உடற்கூறை லாயிட்ஸ் ரோடிலுள்ள ராணிமேரி கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் கற்றுக்கொண்டனர். நோயாளிகளைப் பார்த்து மருத்துவம் கற்றுக்கொள்ள திருவல்லிக்கேணி விக்டோரியா கோஷா மருத்துவமனைக்கும், ராயப்பேட்டை மருத்துவமனைக்கும் வாரம் இரண்டு நாட்கள் சென்று வந்தனர். இம்மாணவர்கள் பள்ளியில் சேர கல்வித் தகுதி, குறைந்த அளவு மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு ஈடானதைப் படித்திருக்க வேண்டும். இப்பள்ளி 10 ஆண்டுகள் நடைபெற்ற பிறகு, ஸ்டான்லி மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது. (Growth of Medical Education, p. 6)

(3) கவுன்டீஸ் ஆப் டப்ரின் நிதியம் (Countess of Dufferin Fund):

லேடி டஃப்ரினால் 1885ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்கள் உடல் நலத்தைக் காக்க தி கவுண்டீஸ் ஆப் டப்ரின் நிதியம் தொடங்கப்பட்டது.

காலனிய ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் பிரசவம் என்பது ஒரு கெட்ட கனவாகவே உள்ளது என்று மிஷனரிகளும், இதற்காக செலவுகளைச் செய்துவந்த பரோபகாரிகளும் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் இராணி விக்டோரியாவின் ஆழ்ந்த சிந்தையின் வெளிப்பாடாக லேடி டப்ரினை இதற்காகப் பெருமுயற்சி எடுக்கப் பணித்து மகளிர் மருத்துவர்களை இந்தியாவின் மகளிர் நலம் பேண அனுப்பக் கோரினார். இதன் அடிப்படையில் இந்தியாவில் நிதியம் 1885இல் ஆரம்பிக்கப்பட்டு மேலை நாட்டு மகளிர் மருத்துவர்கள் இந்தியா வந்து மகளிர் மருத்துவம் அளித்தனர். என்றாலும், இவர்கள் செயல் தங்களைப் பிரிட்டிஷ் உயர்குடி மக்கள் என்று விளம்பரப் படுத்திக்கொண்டார்களே தவிர, பெருமளவில் மகளிர் மேம்பாட்டிற்கு உதவவில்லை.

டப்ரின் நிதியத்தின் திட்டத்தின்படி பல மாவட்டங்களில் தாதிக்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். 1888இல் 159 நபர்களும், 1890இல் 208 நபர்களும் வேலை பார்த்தனர். இக்கூடுதலான தாதிக்களின் சேவையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கானது. இக்கால கட்டத்தில் இவர்கள் மிஷனரி செவிலியர் பள்ளிகளுடன் போட்டி போட வேண்டியதாய் இருந்தது. என்றாலும் இவர்களின் சேவை மிஷனரிகளின் சேவைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

மேலும், தாழ்ந்த சாதியினரை உள்நோயாளிகளாக அனுமதிக்கக்கூடாது என்றிருந்த விதியை இம்மருத்துவர்கள் மற்றும் தாதிக்கள் கடைப்பிடிப்பது எளிதாக இல்லை. ஏனெனில் இது நடைமுறையில் சாத்தியமற்றும் இருந்தது.

இவ்வாறு டப்ரின் நிதியம், இந்தியாவில் உள்ள பெண்கள் நல வாழ்வை முன்னேற்ற மகாராணி விக்டோரியா இட்ட பணியைத் தொடர, ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியப் பெண்களின் நலவாழ்வு குறித்து அக்கறை ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணம் பற்றி, பொப்பிலி அரசி இங்கிலாந்து ராணிக்கு செய்தி அனுப்பி இருந்தார். மேலும் இந்தியாவில் மருத்துவப்பட்டம் பெற்ற டாக்டர் டப்ரின் என்ற பிரிட்டிஷ் பிரஜையும் விக்டோரியா மகாராணியிடம் பொப்பிலி அரசியைப் போலவே இந்தியாவில் பெண்கள் நலம் குன்றி வருகிறார்கள், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார். (Bulletin of the History of Medicine p. 68 No. 1 - 1994 29 - 66)

இதன் பயனாகவே “The National Association for supplying medical aid to the women of India” என்ற டப்ரின் நிதியம் ஏற்படுத்தப்பட்டது. இது, உலக நலவாழ்வு முன்னேற்றத்திற்கும், மேலை மருத்துவத்தை இந்திய மகளிருக்கு அறிமுகப்படுத்தவும் உதவியது. இந்நிறுவனம் தொடங்கியவுடனே, பல திட்டங்களை உருவாக்கி மகளிர் நலனைக் காக்க உதவும் மருத்துவம் கற்பிக்கவும் முனைந்தது.

நிதியத்தின் நோக்கம்:

இந்நிதியம் மூன்றுவித முக்கிய இலக்கை நோக்கியே இயங்கியது. அவை, (1) மருத்துவம் கற்பித்தல் (2) மருத்துவ உதவி மற்றும் (3) பெண்களுக்கான செவிலியர், தாதிகளை மருத்துவமனை மற்றும் தனிப்பட்ட பெண்களுக்கும் அளித்து உதவுவதே ஆகும். இந்நிதியம் மருத்துவம் கற்க உதவித் தொகையை இந்திய மாணவிகளுக்கு அளித்தது. இந்திய நாட்டுப்புற, பண்டைய முறைகளைக் கடைப்பிடிக்கும் தாதிக்களுக்கு முக்கியமாக அதிகமான நிதி உதவி அளித்தது.

ஏனெனில், பல மேலை மருத்துவம் புரியும் மருத்துவர்கள் இத்தாதிகளின் செயல்பாடு பல தீங்குகளை விளைவிப்பதை அறிந்து கூறியதால் ஆகும். எடுத்துக்காட்டாக, இத்தாதிகள் கருவுற்றவர் பிரசவிக்க ஆரம்பிக்கும்போது, அதனை வேகப்படுத்த வயிற்றை அமுக்கிவிட்டு, மசாஜ் செய்வதால், பிரசவித்த பிறகு, பெண்கள் கருப்பை பிதுக்கம் ஏற்படுகிறது என்பது மிக முக்கியமான பக்க விளைவாக அக்கால கட்டத்தில் அறியப்பட்டது.

இந்த முரட்டுத்தனமான தீங்கு விளைவிக்கும் முறைகளைத் தவிர்த்து, நல்ல முறையில் பிரசவம் பார்க்க, பிறந்த குழந்தையைப் பேண, அவர்களுக்கு கற்பிக்க, பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது. நிதி உதவி மகளிர் கண்காணிப்பில் மருந்தகங்களுக்கும், கிராமப்புற மருத்துவமனைகளுக்கும், மருத்துவ உதவி மக்களுக்கு அளிக்கவும் கொடுக்கப்பட்டது. இதுதவிர, இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனைகளில் ‘ஜனன’ மருத்துவமனை என்ற பெயரில் இணைப்பு மருத்தவமனைகளும், சில புதிய மகளிர் மருத்துவமனைகளும் ஏற்படுத்தப்பட்டன. மேலும் பயிற்சிபெற்ற செவிலியர்களையும் தாதியர்களையும் மருத்துவமனைக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் வேலைக்கு அமர்த்தவும் உதவி செய்தனர்.

இவ்வாறு உதவி அளிக்கும் செயல் மதராஸ் உட்பட இந்தியா முழுமைக்கும் நடைபெற்றது. எடுத்துக்காட்டாக, 1893 - 94இல் மதராசில் மருத்துவம் கற்கும் 14 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இதுபோலவே தாதிகள், செவிலியர்கள் பலர் பயன் அடைந்தனர். இதற்கான நிதியானது அன்பளிப்பு மூலமே வைஸ்ராய் கவுன்சில், உள்துறை நிர்வாகம், உள்நாட்டு அரசர்கள் மற்றும் செல்வந்தர்கள் மூலம் பெறப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெறும் வரை இந்த நிதி உதவி நீடித்தது.

Pin It