"விளக்க முடியாத ஒரு வசீகரத்தால் இழுக்கப்பட்ட சாமர்வெல் அந்த ஆஸ்பத்திரியை நோக்கிச் சென்றார். அப்போது மூன்று வயதான இடுப்பில் ஒரு கந்தல் மட்டும் அணிந்த கரிய பெண் குழந்தை ஓடி வந்து அவரிடம் ஒரு சிறிய சிலுவையைக் கொடுத்துவிட்டு சென்றது என் தேவனே என்று வீரிட்டபடி அமர்ந்து கொண்டார் அவர். இரு பனை ஓலைகளை இணைத்து உருவாக்கப்பட்ட அந்த எளிய சிலுவையை நெத்தியின் மேல் அணைத்துக்கொண்டு, உங்கள் ஆக்கினை என் தேவனே உங்கள் சித்தப்படி ஆவியை இங்கே வைக்கிறேன் இயேசுவே" நெஞ்சுக்குள் வீரிட்டார்.

இந்தப் பகுதி ஜெயமோகன் எழுதிய அறம் தொகுப்பில் உள்ள போலிச்சிலுவை என்ற கதையில் வருகிறது. அறம் தொகுப்பில் உள்ள எல்லா கதைகளும் அறத்தை மையமாகக் கொண்டு சுற்றிச் சுழல்பவை. ஒரு வகையில் இதில் உள்ள எல்லா கதைகளுமே அறத்தின்படி வாழ்ந்தவர்களின் உண்மைக் கதைகள். மருத்துவர் சாமர்வெல் இந்த வரிசையில் வருகிறார். ஓலைச்சிலுவை கதை அவரை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. இவர் பணி செய்த இடங்களில் உத்தேசமாக எண்பத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு இன்றும் பேசப்படுகிறார்.

Somerwellசாமர்வெல் மருத்துவம் செய்த முறைகளைப் பற்றிய கதைகளை இன்றும் கேட்க முடியும். பழைய தென் திருவிதாங்கூரான இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் லண்டன்மிஷின் அமைப்பு கல்விக்கும் மருத்துவத்திற்கும் செய்த தொண்டு மறக்க முடியாதது. இதன் வரலாறு 1805 லிருந்து தொடங்குகிறது.

மறுமலர்ச்சி கிறித்தவம் (லண்டன் மிஷனரிகள்) தரங்கம்பாடிக்கு வந்து நூறு ஆண்டுகள் கழித்துதான் திருவிதாங்கூருக்கு வந்தது. அதுவும் தானாக வரவில்லை. நாஞ்சில் நாட்டு மயிலாடி ஊரினரான வேதமாணிக்கம் என்பவரின் தூண்டுதலால் ரிங்கிள் தவுபே என்பவரின் முயற்சியால் வந்தது. ஆரம்பத்தில் மயிலாடி ஊரில் இருந்த இந்த கிறித்தவ பிரிவு, பின்னர் நாகர்கோவிலைத் தலைமை இடமாகக் கொண்டது. இதன்பின் இதன் வளர்ச்சி வேகமானது.

வேதமாணிக்கத்தின் கொள்ளுப் பேரன் சி.எம்.ஆகூர். என்பவர் திருவனந்தபுரத்தில் ரெசிடென்சியல் அதிகாரியாக இருந்தார். இவர் Church History of Travancore என்னும் நூலை எழுதியுள்ளார். இந்தப் பெரிய நூலில் கிறித்தவத்தின் கல்வி, மருத்துவத் தொண்டு விரிவாக விளக்கப்படுகிறது. N Mratin Daniel Dhas என்பவர் Missionary. Medical work in Travancore என்ற நூலில் (1981) லண்டன் மிஷன் தொண்டர்களின் மருத்துவப் பணியை, விரிவாகக் கூறுகிறார்.

திருவிதாங்கூரில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்), 1838ல் அலோபதி மருத்துவம் வருவதற்கு முன்பு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி உட்பட சில மருத்துவ முறைகள் வழக்கத்தில் இருந்தன. இவற்றில் சித்த மருத்துவர்கள் பரவலாகவும் சிறப்பாகவும் செயல்பட்டனர். இது பற்றிய செய்திகள் கதைப்பாடல்களில் குறிப்பாக வில்லுப்பாட்டுகளில் விரிவாகவே வருகின்றன. 17, 18, 19ஆம் நூற்றாண்டுகளில் தென் திருவிதாங்கூரில் நடந்த மகப்பேறு வைத்தியம் பற்றிய குறிப்புகள் வில்லுப்பாட்டுகளில் நுட்பமாக சொல்லப்பட்டிருக்கின்றன.

பொதுவாக தொழிலின் அடிப்படையில் ஜாதி அமைந்திருப்பதைப் போல் மருத்துவமும் குறிப்பிட்ட தொழிலைச் சார்ந்து இருந்தது என்பதற்கு இன்றும் வாய்மொழிச் செய்திகளைச் சேகரிக்க முடியும். குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு அல்லது குறிப்பிட்ட தொழில் செய்கின்றவர்களுக்கு மட்டுமே இந்த மருத்துவ முறை பின்பற்றப்பட்டது. எடுத்துக்காட்டாக பனைமரம் ஏறும் தொழிலாளர்களுக்கு என்று ஒரு மருத்துவம், கடல் தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு மருத்துவம், கோபுர வேலை செய்கின்றவர்களுக்கு ஒரு மருத்துவம், சிலம்பம் விளையாடுகின்றவர்களுக்கு ஒரு மருத்துவம் என்று இப்படியாக இருந்த மருத்துவ முறைகள் பற்றிய தகவல்கள் வாய்மொழியாகவே உள்ளன.

இவை அல்லாமல் மக்களுக்குப் பொதுவான வியாதிகளுக்கு வைத்தியம் செய்த வைத்தியர்கள் இருந்தார்கள். பெரும்பாலும் சிறிய வியாதிகளுக்குப் பாட்டி வைத்தியம் போதுமானதாக இருந்தது. குடும்பத்தில் வயது முதிர்ந்தோர் இந்த வைத்தியத்தை அறிந்து வைத்திருந்தார்கள். விஷ ஜந்துக்கள் கடித்தால் அதற்கென்ற வைத்தியம் தனியாக இருந்தது.

முந்தைய தென் திருவிதாங்கூர் பள்ளிக்கூட ஆசிரியர்கள் தன் வீட்டைப் பள்ளிக்கூடமாக மாற்றியது போலவே சித்த வைத்தியர்களும் தங்கள் வீட்டை வைத்தியக் கூடமாக, மருந்து தயாரிக்கும் இடமாக வைத்திருந்தார்கள். இந்த வைத்தியர்களிடம் பயிற்சியாளராக இருந்து பின் வைத்தியத் தொழிலை முறையாகச் செய்வது என்னும் நடைமுறையும் அப்போது இருந்தது.

தென் திருவிதாங்கூரில் லண்டன் மிஷன் வரவிற்குப் பின்னர் கல்வி, மருத்துவம் இரண்டும் வேறு திசையில் சென்று இருக்கிறது. சர்ச்சை ஒட்டி முறையான பள்ளிக்கூடங்கள் உருவாக ஆரம்பித்த பின் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் மாற்றம் ஏற்பட்டது. இது 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நடந்த நிகழ்வு. இதுபோலவே அலோபதி மருத்துவம் வந்த பின்பு சித்த வைத்தியர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

திருவிதாங்கூர் ராஜ்ஜியத்திற்கு வந்த முதல் அலோபதி மருத்துவர் அர்ச்சிபால்டு ராம் சே (Dr Archibald Ramsay) என்பவர் ஆவார். இவர் இந்தியாவுக்கு வந்த இரண்டாவது மருத்துவர் என்கிறார் டானியல் தாஸ் ராம் சே. 1838 ஏப்ரல் ஆறாம் தேதி தன் மனைவியுடனும், வளர்ப்பு மகனான பால் என்பவருடனும் (இவர் பின்னால் டாலி எனப்பட்டார்) நெய்யூர் என்ற ஊருக்கு வந்தார். பின்னர் நாகர்கோவிலுக்கு வந்தார். இவர் லண்டனில் ராணுவ மருத்துவராக இருந்தவர்.

ராம் சே நாகர்கோவிலில் தன் மருத்துவமனையை ஆரம்பித்தபோது திருவிதாங்கூர் அரசராக சுவாதி திருநாள் என்பவர் இருந்தார் (1829-1847). இவர் கிழக்கு இந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு விசுவாசமாக இருந்தவர். இவர் அரசு உயர் பதவிகளில் ஐரோப்பியர்களையே நியமித்திருக்கிறார். இவர் காலத்தில் தலைமை பொறியாளராக ஹார்வி என்பவர் இருந்தார்.

நாகர்கோவில் நகரத்தில் இப்போது பெண்கள் கிருத்துவக் கல்லூரி இருக்கும் இடத்தில் ஒரு வீட்டில் ராம்சே தங்கியிருந்தார். வீட்டின் ஒரு பகுதி ஆஸ்பத்திரியாக இருந்தது ஆரம்ப காலத்தில் நோயாளிகளுக்கு மருந்தும் உணவும் இலவசமாக கொடுக்கப்பட்டது. ராம் சே மருத்துவவிடுதியை ஆரம்பித்த சில நாட்களிலேயே பெரும் கூட்டம் வர ஆரம்பித்தது.

ஆஸ்பத்திரியில் மருத்துவருக்காகக் காத்திருக்கும் நோயாளிகளின் நேரத்தைக் கழிப்பதற்குத் தமிழ், மலையாள மொழிகளில் அச்சிடப்பட்ட விவிலிய நூலும் நற்செய்தி நூல்களும் வைக்கப்பட்டிருந்தன. அப்போது அச்சு நூற்கள் பரவலாக அறியப்படவில்லை அரசு அலுவலகத்தில் கூட ஓலையைப் பயன்படுத்தும் போக்கு மாறவில்லை . ராம்சேயின் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் விவிலிய அச்சு நூலை அதிசயமாக புரட்டிப் பார்த்தார்கள்.

ராம் சேயின் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் சுப்பையர் என்பவரும் ஒருவர். அவர் ராம் சே இடம் ஏதோ காரணத்தினால் நெருங்கி இருக்கிறார். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த விவிலிய நூலைப் படித்திருக்கிறார். மனம் மாறி கிறிஸ்தவ சமயத்திற்கு மாறினார். தேவதாசன் என்ற பெயரைப் பெற்றார். இவர் பாஸ்டர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்.

ராம்சே ஆஸ்பத்திரி ஆரம்பித்த மூன்று மாதங்களில் 1500 நோயாளிகள் வந்திருக்கின்றனர். பின்னர் இரண்டு வருடங்களில் பிரபலமாகிவிட்டார். அப்போது, தான் வாழ்ந்த வீட்டின் அருகே ஒரு ஆஸ்பத்திரி கட்ட திட்டமிட்டார். கட்டிட வேலை ஆரம்பித்த போது மிஷனரிகளிடம் எதிர்ப்பு வந்தது. வேலை பாதியில் நின்றது. மனம் ஓய்ந்த ராம்சே திருவனந்தபுரம் சென்றார். அங்கே அவரை அரசு மருத்துவராக அரசரே நியமித்தார். பல ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தார்.

ராம்சே இரண்டு ஆண்டுகள் நாகர்கோவிலில் மருத்துவராகப் பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். மருத்துவம் என்பது அவரது நோக்கமாக இருந்தாலும் மதமாற்றம் அவரது முக்கிய இலட்சியமாக இருந்தது.

ராம்சே "என்னிடம் பிராமணர் முதல் சகல ஜாதியரும் உதவிக்காக வருகிறார்கள். நான் அவர்களிடம் தாராளமாகப் பழகி வருவதால் அதிக நன்மை செய்யலாம் என்று நினைக்கிறேன். ஜனங்கள் சுகமாக இருக்கின்றபோது நற்செய்திகளை கேட்க விரும்புவதில்லை. ஆனால் வியாதிப் படுக்கையில் மரித்தும் போவதாக நினைக்கும்போது செவி கொடுக்கிற வரை காண்கின்றேன். சுகம் அடைந்த சிலர் நான் சொன்னவற்றை மறக்காமல் நினைவு கூருகிறார்கள். கிறித்தவ மார்க்கத்தைக் குறித்து அறிய அதிகமாக ஆசிக்கிறதாகவும் சொன்னார்கள்" என்கிறார் (லண்டன் மிஷனரி சங்க வரலாறு 1941).

 ராம் சே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற பிறகு 12 வருஷங்கள் கழித்து டாக்டர் லீக் என்பவர் தென் திருவிதாங்கூருக்கு வந்தார். இவர் ஸ்காட்லாந்துக்காரர். இவர் 18 மாதங்களில் 82 அறுவை சிகிச்சை செய்தவர். இவர் வேகமாகச் செயல்பட்டு இருக்கிறார். 1864 அளவில் நாகர்கோவிலில் அலோபதி மருத்துவப் பயிற்சி மையம் செயல்பட்டது. இதில் மறுமலர்ச்சி கிறித்தவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இங்கு பயிற்சி பெற்றவர்களை டிரஸர் என கிராமத்து மக்கள் அழைத்தனர். இக்காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் ஆயில்யம் திருநாள் அரசராக இருந்தார். இவர் கிராமத்து மக்களுக்கு நோய் தடுப்பூசி போட உத்தரவிட்டிருக்கிறார். அப்போது இப்பொறுப்பை ஏற்ற டாக்டர் லோங் என்பவர் ஏழு ஆண்டுகளில் 1100 பேருக்குத் தடுப்பூசி போட்டார். 1888 ல் ஆலங்கோடு ஊரில் தொழுநோய் மருத்துவ மையம் ஒன்று நிறுவுவதற்கு இவர் உதவி இருக்கிறார். இங்கு 12 பேர்கள் சிகிர்சை பெற்றனர்,

தென் திருவிதாங்கூர் மருத்துவ பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்ற உள்நாட்டு மருத்துவர்கள் தாங்களாகவே சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர். டாக்டர் எஸ் ஆசிர்வாதம் என்பவர் நாஞ்சில் நாட்டு திட்டுவிளை என்ற ஊரில் ஒரு ஆஸ்பத்திரி நடத்தி இருக்கிறார். இவர் ஐந்து ஆண்டுகள் பயிற்சி பெற்ற உள்நாட்டு அலோபதி மருத்துவர்.

திருவிதாங்கூருக்கு வந்த ஐரோப்பிய மருத்துவர்களில் கதாநாயகனுக்கு அல்லது வீர புருஷனுக்கு உள்ள தகுதியைப் பெற்றவர் டாக்டர் சாமுவேல் ஒருவரே. இவர் பணி செய்த நெய்யூர் ஆஸ்பத்திரியில் எத்தனையோ ஐரோப்பிய மருத்துவர்கள் பணி செய்தாலும் அந்த ஆஸ்பத்திரியை சாமர்வெல் ஆஸ்பத்திரி என்று பாமர மக்கள் அழைத்தனர்.

Somerwell 1தியோடர் ஹோவேர்டு சாமர்வெல் MA, MB BCh FR CS (Dr.Theodore Howard Somerwell 1890 - 1975) தன் 43 ஆம் வயதில் நிறைய அனுபவங்களையும் ஆழ்ந்த படிப்பையும் சுமந்து கொண்டுதான் தென் திருவிதாங்கூர் வந்தார். அவர் நெய்யூருக்கு வரும்போது ஐரோப்பிய மருத்துவர்களும் உள்ளூர் மருத்துவர்களும் இருந்தார்கள்.

 சாமர் வெல் இங்கிலாந்து நாட்டினர். தந்தை W.H.சாமர் வேல் லண்டன் மிஷினரி சொசைட்டி பொருளாளராக இருந்தவர். கிறிஸ்தவத்தில் ஆழ்ந்த பக்தி உடையவர். தன் மகனை அப்படியே வளர்த்தார். சாமர்வெல் ஆரம்பத்தில் கேம்பிரிட்ஜில் அறிவியல் படிப்பு படித்தார். எம்.ஏ பட்டம் பெற்ற பின்பு லண்டன் மருத்துவக் கல்லூரியில் படித்தார். பின் முதல் உலகப்போர் நடந்த காலத்தில் ராணுவ டாக்டராகப் பணி செய்தார்.

சாமர் வேல் தென்திருவிதாங்கூருக்கு வரும் முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய டென்சிங் ஹில்லாரி குழுவுடன் சென்றிருக்கிறார். இந்த காலகட்டத்தில் டாக்டர் பச் என்பவருடன் தொடர்பு கொண்டிருந்தார். அவர் நெய்யூர் ஆஸ்பத்திரி பற்றி சொல்லி இருக்கிறார். அப்போது அந்த ஆஸ்பத்திரி நூறு படுக்கைகளுடன் பதினைந்து கிளைகளுடன் இருந்தது. ஆரம்பத்தில் சாமர்வெல்லைக் கட்டாயப்படுத்திதான் நெய்யூருக்கு அழைத்து வந்தார். லண்டன் மெஷின் வரலாற்றை எழுதிய நார்மன் குட் கால் என்பவர் நெய்யூர் மருத்துவமனையில் 1923 - 1945 ஆண்டுகளை சாமர்வேலின் காலம் என்று வருணிக்கிறார்.

சாமர்வெல் இங்கே பணியாற்றியபோது சக மருத்துவர்களுடன் நல்ல உறவுடன் இருந்திருக்கிறார். இவர் "நான் நெய்யூரில் இருந்தபோது, டாக்டர் புச் மிகவும் உறுதுணையாக இருந்தார். அதனால் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய முடிந்தது" என்று எழுதுகிறார்.

நெய்யூரில் சாமர்வெல் பணிபுரிந்தபோது உள்ளூர் மருத்துவர்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார். மறுமலர்ச்சி கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு தடையில்லாத அன்பைக் கொடுப்பதில் தயக்கம் காட்டவில்லை. ஜெயமோகனின் அறம் தொகுப்பின் ஓலைச் சிலுவை கதையின் நாயகனாக சாமர் வேல் இருந்ததற்கு மதம் தாண்டிய அவரது அன்பு ஒரு காரணம். கல்வியும் மருத்துவமும் மதமாற்றத்திற்கான அடையாளங்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட்ட மிகச் சிலரில் இவரும் ஒருவர். இதனால் இவருக்கு மௌனமான எதிர்ப்பு இருந்தது.

 1928 இல் தென் திருவிதாங்கூரின் இட நாட்டுப் பகுதியில் (கல்குளம் விளவங்கோடு வட்டம்) காலரா என்னும் கொடிய வியாதி ஆட்டிப் படைத்தது. நாட்டு வைத்தியர்கள் கொடுத்த மருந்துகள் கொத்துக் கொத்தாக மடிந்த உயிர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவில்லை. காலரா வந்து அவர் சாகப் போகிறார் என்று அறிந்ததால் கடைசியாக அவரைக் காப்பாற்ற காந்தாரி மிளகாய் அரைத்துக் கட்டாயமாக புகட்டியதும் உண்டு (இது சண்டாள வைத்தியம் என்று அப்போது பேசப்பட்டது).

இந்தக் காலகட்டத்தில் சாமர் வேல் செய்த பணி அவரை தேவ தூதன் ஆக்கியது. திருவிதாங்கூர் அரசு இக்காலத்தில் மக்களுக்கு உதவினாலும் கிராமங்களுக்கு அது செல்லவில்லை. ஆனால் சாமர்வெல் சாதாரண மக்களுக்கு பணி செய்யச் சென்றார். அவர் சில இடங்களுக்கு நடந்தும் சைக்கிளிலும் சென்று இருக்கிறார். இதற்காகத் தனியான நேரம் ஒதுக்கவில்லை. மதம் தாண்டிய அன்பு அவரைப் பேயாய் உழைக்க வைத்திருக்கிறது.

சாமர்வேல் கல்குளம் விளவங்கோடு வட்டம் ஊர் மக்களுக்குக் காலரா காலத்தில் செய்த பணி சமயோசிதமாகவும் இருந்தது. குளுக்கோஸ் அப்போது இங்கு அறிமுகம் ஆகவில்லை. அதனால் நோயாளிகளுக்கு குளுக்கோசுக்கு பதில் இளநீரை ஊசி மூலம் ஏற்றிய செயல் அன்று பரவலாகப் பேசப்பட்டது.

 காலரா பரவியதற்கு உரிய காரணங்களில் கிளாத்தி மீனை சாப்பிட்டதும் ஒன்று என்பதை அவர்தான் முதல் முதலில் கண்டுபிடித்திருக்கிறார்.

வள்ளியாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் கடியப்பட்டணம் கடற்கரையில் தோல் கிளாத்தி என்ற ஒரு வகை மீன் கரையில் ஒதுங்குவது சாதாரணமாக இருந்தது. ஆற்றுப்படுகையில் கழிவுகளைத் தின்பதற்காக தோல் கிளாத்தி கூட்டம் கூட்டமாக மொய்த்தன. அதனால் அந்த மீனை சில சமயம் இலவசமாகக் கூட பெற்றார்கள். இந்த கிளாத்தி காலராவுக்குக் காரணம் என்பதைக் கண்டுபிடித்த சாமர்வெல், அதை சாப்பிடக்கூடாது என்று செய்த பிரச்சாரம் பெரிதும் பலன் அளிக்கவில்லை.

சாமர் வெல் அவரது குறிப்பு ஒன்றில் ‘காலரா காலத்தில் ஆண்டவனைத் தேடும் முயற்சி மக்களிடம் அதிகரித்து இருந்தது’ என்று எழுதுகிறார். மறுமலர்ச்சி கிறித்தவர்களிடம் பஜனை என்ற வழக்கத்தை ஊக்கப்படுத்தியதற்கு இதுதான் காரணம் என்று அவர் கூறுகிறார். திருவிதாங்கூர் அரசு சாமர்வெல்லைப் பாராட்டி தங்க மெடல் பரிசளித்திருக்கிறது.

காலரா ஓய்ந்த காலத்தில் சாமர்வெல் ஓயவில்லை. கான்சர் நோய் அப்போது மக்களைப் பயமுறுத்தியது. அதற்கு ரேடியம் செலுத்துவதன் மூலம் குணப்படுத்தலாம் என்பதை அறிமுகப்படுத்தினார். இதற்காகப் பொதுமக்களிடம் 1930இல் ஆயிரம் ரூபாய் சேகரித்து இருக்கிறார். இதைக் கொண்டு லண்டனில் இருந்து அபூர்வமான எந்திரங்களை வரவழைத்தார். கான்சருக்கு என்று தனியான வார்டு கட்டுவதற்கு முயற்சி செய்தார். இந்த வார்டை திருவிதாங்கூர் பிரிட்டிஷ் ரெசிடென்ஸ் கர்ணல் பிரிசார்க்கு என்பவர் திறந்து வைத்தார். கான்சர் வார்டு ஆரம்பித்த ஓராண்டுக்குள் 500 அறுவை சிகிச்சை நடந்தது. 1933ல் இங்கு ஒரு சோதனைக் கூடம் உருவாக சாமர்வெல் காரணமாக இருந்தார்.

சாமர்வெல் 1945 இல் இங்கிலாந்து சென்றார். 1948இல் மறுபடியும் தமிழகத்திற்கு வந்து வேலூர் ஆஸ்பத்திரியில் இரண்டு ஆண்டுகள் இருந்தார். 1951இல் நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஓராண்டு இங்கே இருந்தார். மறுபடியும் வேலூர் சென்றார். அங்கே மூன்று ஆண்டுகள் இருந்து விட்டு 1954 ல் லண்டன் சென்றார். அங்கே 21 ஆண்டுகள் வாழ்ந்து 1975 ஜனவரி 23 மறைந்தார். அப்போது அவருக்கு வயது 85..

- அ.கா.பெருமாள், ஓய்வு பெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It