karlmarx 200 450வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவற்றுள் ஒன்று மதமாற்றம். அதிகாரத்திற்குப் பயந்தும் ஆதாயத்திற்காக ஆசைப்பட்டும் அன்புக்குக் கட்டுண்டும் எனப் பல நிலைகளில் மத மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

முன்னது மொகலாயர் படை எடுப்பின்போதும் அடுத்தது மேலை நாட்டினரின் வரவுக்குப் பின்னரும் இந்தியாவில் நிகழ்ந்ததாகக் கூறுகின்றார்கள். ஆதாயத்திற்காக நிகழ்ந்துள்ள மதமாற்றத்தைச் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மக்களிடையே பிறப்பு அடிப்படையிலும் தொழில் அடிப்படையிலும் நூலில் விழுந்த சிக்கல்போல் ஏற்றத் தாழ்வுகள் மண்டிக் கிடக்கின்றன. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு (பார.பாட. 1766) என மகாகவி பாடுகின்றார். சங்ககாலத்தில் கல்வி வளர்ச்சி பெற்றிருந்தது. ஒளவையார் உட்பட 41 பெண்பாற் புலவர்களின் பாடல்களைச் சங்க இலக்கியங்களில் காணலாம். ஆனால் பிற்காலத்தில் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்திற்கு முன்னர் ஏற்றத் தாழ்வுகள் உச்சக் கட்டத்தில் இருந்த காலத்தில் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.

அந்நியர் வருகைக்கு முன்னர் துண்டுதுண்டாகக் கிடந்த இந்தியாவில் வாய்ப்புள்ளோர்கள் கற்ற கல்வி ஏற்கெனவே உள்ள பக்திப் பாடல்களையும் இதிகாச புராணங்களையும் சிற்றிலக்கியங்களையும் மனப்பாடம் செய்யும் கல்விதான். அந்த காலக் கட்டங்களில் மேலை நாடுகளில் அறிவியல் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது.

தெட்டுவதற்கும் திறமை வேண்டும் என்பார்கள். உலகில் ஏறக்குறைய ஐரோப்பியர் தங்கள் காலனி ஆதிக்கத்திற்குக் கொண்டு வராத நாடே இல்லை. ஆன்மிகத்திலும் அறியாமையிலும் மூழ்கிக் கிடந்த நாடுகளை மேலை நாட்டினரால் எளிதாகக் கைப்பற்ற முடிந்தது; சூழ்ச்சிக்கும் பெரிய பங்குண்டு.

எல்லாக் காலத்திலுமே பொருட்குவிப்பு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. முடியாட்சிக் காலத்தில் தொடங்கியது இன்னும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தனக்கு உரிமையான நாடு, நகரம், மாட மாளிகை, குடும்பம் என அனைத்தையும் துறந்த புத்தரின் வாழ்க்கை உண்பது நாழி உடுப்பது இரண்டே... துய்ப்பேம் எனினே தப்புந பலவே (புறம். 189) என்னும் பழந்தமிழ் பாடலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது. புத்தரின் பஞ்சசீலக் கொள்கைகளுக்காக அவர் கோட்பாடு ஆசியாவில் பெருமளவில் வளர்ந்தது.

இப்படிக் கோட்பாடுகள் எந்த நிலையில் வேண்டுமானாலும் வளரலாம். ஆனால் எல்லா மக்களாலும் இல்லை என்றாலும் பெரும்பான்மையானவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவையாக இருக்க வேண்டும். பொருள் இடையில் வந்து இடையில் போவது. பிறக்கும்போதும் இறக்கும்போதும் மக்களிடம் எதுவும் இருக்காது. அரைஞாண் கொடியைக் கூட அறுத்துவிட்டுத்தான் ஈமச் சடங்கு செய்வார்கள்.

குறிப்பாக, பத்தொன்பது - இருபதாம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற மாமேதைகள் தோன்றியுள்ளனர். அவர்களில் கார்ல் மார்க்ஸ், நோம் சோம்ஸ்கி என்னும் இருவரையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இருவரில் சுரண்டுபவர் சுரண்டப்படுபவர் எனக் குறைந்த அளவிலேனும் முன்னவரைப் பற்றிப் புவி எங்கும் கோடிக்கணக்கானவர்களுக்குத் தெரிந்திருக்கும். இனி எந்தத் தேசமும் / மின் சாரத்தையும் / மார்க்ஸையும் ஒதுக்கிவிட்டு / உயிர் வாழ முடியாது (வைர.கவி.ப.309) என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளது நினைவிற்கு வருகின்றது.

எந்தக் கோட்பாடும் திடீரென்று முளைத்து விடுவதில்லை. எங்கோ ஒருவரிடம் கருக்கொண்டு வெளிப்படும். அடுத்து இன்னொருவரால் வளர்த்து எடுக்கப்படும். மொழி பற்றிய இலக்கணத்தில் கூட ஒரு மாபெரும் புரட்சி நடந்துள்ளது. மொழி பற்றியது என்பதால் அந்த ஆய்வு மேல்மட்ட நிலையிலேயே வலம் வருகின்றது.

கிரேக்கம், இலத்தீன், வடமொழி, தமிழ் போன்ற தொன்மையான மொழிகளில் இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. தமிழ் இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு என இருநிலைகளில் வழக்கில் உள்ளதால் தொல்காப்பியம் முதல் இக்காலம்வரை இலக்கண நூல் தோன்றுவதைக் காணலாம்.

ஒலிகளும் சொற்களும் தொடர்களும் மொழிக்கு மொழி வேறுபட்டிருந்தாலும் அமைப்பு ஒன்றாகவே இருக்கும். கார்ல் மார்க்ஸ் - ஏங்கல்ஸ் அளித்துள்ள பொதுவுடைமைக் கோட்பாடு நாடு, மொழி போன்றவற்றால் வேறுபட்ட மக்கள் அனைவருக்கும் பொருந்தி வருகின்றது. சாதி - மதம், உயர்வு - தாழ்வு என்னும் வேறுபாடுகள் மக்கள் உண்டாக்கியவை. மூல அமைப்பு வாழ்க்கை முறையை மீட்டுருவாக்கம் (Reconstruction) செய்தால் உலகம் முழுவதற்கும் பொருந்தி வரும். அதே நிலையை மொழி இலக்கணத்திலும் காணலாம்.

மரபிலக்கணத்தில் தொடங்கி ஒப்பிலக்கணம், வரலாற்றிலக்கணம், அமைப்பு மொழியியல் எனப் பல்வேறு நிலையில் மொழி பற்றிய ஆய்வு வளர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க மொழியியல் அறிஞரான சோம்ஸ்கி மாற்றிலக்கணம் (Transformational Grammar) என்னும் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். உலகில் காலங்காலமாக இருந்த இலக்கணக் கோட்பாடுகளை எல்லாம் அவர் கோட்பாடு அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. அவர் கோட்பாட்டு அடிப்படையில் ஆயிரக்கணக்கான நூல்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. இப்போதும் பலர் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

அவன் வந்தான்; அவன் வருவான்; அவன் வருகிறான்; அவன் வரவில்லை; அவன் வருவானா? இப்படிப் பல வாக்கியங்களைக் கூறி எத்தனை வாக்கியங்கள் என்றால் ஐந்து என்று பொதுவாக எல்லோருமே குறிப்பார்கள். எந்த மொழி பேசுவோரும் அவர்கள் மொழிகளில் சொன்னால் ஐந்து என்றுதான் கூறுவார்கள்.

சோம்ஸ்கி, ஐந்து வாக்கியங்களும் புறநிலையில் காணப்பட்டாலும் புதைநிலையில் ஒரே பொருளை உணர்த்தும் என்கின்றார். வருதல் என்னும் பொருளைச் சூழலுக்கு ஏற்பக் காலம் - எதிர்மறை வினா என்னும் அமைப்பில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

சோம்ஸ்கி தம்முடைய கோட்பாட்டைத் தெளிவாக வரையறை செய்து எழுதியுள்ளார். பிற மொழி இலக்கணங்கள் அவரின் பார்வையோடு தொடர்புடைய குறிப்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தொல்காப்பியத்தில் அவ்வகைக்கான குறிப்பு இருக்கின்றது.

தொல்காப்பியர் வினை முற்றுகளுக்கு விகுதிகளையும் (என், எம். இ, இர் அன், அள் அர்) எச்சங்களுக்கு வாய்பாடுகளையும் (செய்து, செய்த) குறிப்பிடுகின்றார். எதிர்மறை வடிவங்களைக் குறிப்பிடவில்லை. எதிர்மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா (தொல்.சொல். 231) என்பார். மரத்தைக் குறைத்தான் - மரத்தைக் குறையான் என்பவை முறையே உடன்பாடு - எதிர்மறை வாக்கியங்கள். குறைத்தல் என்னும் தொழில் நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் அடிப்படை வேற்றுமைப் பொருள் ஒன்றே என்பதைத் தொல்காப்பியர் நுட்பமாகக் குறிப்பிடுகின்றார் (தொல்.சொல். 103)

நோம்சோம்ஸ்கி ஒரு மாபெரும் மொழியியல் சிந்தனையாளராக இருந்தாலும் அமெரிக்க அரசின் மக்களுக்கு எதிரான எதேச்சதிகாரக் கொள்கைக்காகக் களம் இறங்கிப் போராடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சமுதாயத்தை இயங்கியல், பொருள்முதல்வாத அடிப்படையில் ஹெகல் போன்ற அறிஞர்கள் சிந்தித்தாலும் கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் சிந்தனைகளே வர்க்க முரண்பாடுகளை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்துள்ளன. காலங்காலமாக விதியை எண்ணி வீழ்ந்து கிடந்த சமுதாயத்தை - குறிப்பாக உலகத் தொழிலாளர் வர்க்கத்தை நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் வழங்கிய பெருமை கார்ல் மார்க்சைச் சாரும். அவருக்கு தோன்றாத் துணையாக நின்று தோள் கொடுத்த எங்கல்ஸை நினைக்கும்போது கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு நினைவுக்கு வரும்.

சமயம் சார்ந்த வேதங்கள், பைபிள், குரான் மற்றுமுள்ள இதிகாச புராணங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நூல்கள் ஏற்றும் முரண்பட்டும் இன்று வரை தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. தனிப்பட்ட ஒரு மனிதனின் நூல்கள் உலக மொழிகள் அனைத்திலும் பெரும்பாலும் ஏற்றும் அரிசியில் கல்போல் முரண்பட்டும் எழுதப்பட்டு வருகின்றன. அவற்றுக்குக் மாமேதை கார்ல் மார்க்சின் நூல்கள்தாம் மூலதனம்.

அண்மையில் சந்தித்த பொறியியல், மருத்துவத்துறையில் ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் கூறிய செய்தி வியப்பாக இருந்தது. பல பெரும் நிறுவனங்கள் - குறிப்பாகத் தங்கள் விளைச்சலை மக்களிடம் திணிக்க நினைப்பவர்கள் கூட கார்ல் மார்க்சைத் தீவிரமாகப் படிக்கிறார்களாம். யாகங்களில் உயர்ப்பலி செய்தவர்கள் புத்தரின் உயிர்க்கொலை செய்யக்கூடாது என்னும் கோட்பாட்டைத் தங்களுக்குள் சேர்த்து ஒரு கலவை ஆக்கிக் கொண்டதுபோலத்தான். அது இன்று மனிதரைக் கொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டது. அது ஒரு தனிக் கதை.

உயிர் எழுத்து என்னும் இதழில் பல்வேறு அறிஞர்கள் மார்க்சியம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே கார்ல் மார்க்ஸ் 200 என்னும் அரிய நூல். நூற்றுக்கணக்கான நூல்களையும் கட்டுரைகளையும் படித்து அறியத்தக்க மார்க்சியம் தொடர்பான செய்திகளை இந்நூலைப் படித்து அறிந்து கொள்ளலாம் என்பது மிகையன்று.

தமிழில் எழுதப்பட்டவை, நூல் மதிப்புரை, மொழி பெயர்க்கப்பட்டவை என முன்னுரை, பதிப்புரை தவிர்த்து முப்பத்தேழு கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சுதீர் செந்திலை ஆசிரியராகக் கொண்ட உயிர் எழுத்து என்னும் சிற்றிதழில் வெளிவந்தவை. ஆசிரியரின் முன்னுரையைப் படிக்கும்போது வருத்தமாக இருந்தது. சிற்றிதழ் - பேரிதழ் என்னும் பாகுபாடெல்லாம் வணிக நோக்கத்தில் செய்யப்பட்டவை. விற்பனை குறைவாக உள்ளவை சிற்றிதழ்; அதிகம் உள்ளவை பேரிதழ். நல்லவேளை பேரிதழ் என்னும் சொல் புழக்கத்தில் இல்லை. தமிழில் இன்று நிற்குமோ நாளை நிற்குமோ என்று அஞ்சும் வகையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வெளிவரும் சிற்றிதழ்கள் பலவற்றைப் படித்தாலே இலக்கியம், அரசியல், சமுதாயம், சுற்றுச் சூழல், வரலாறு என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

நூலின் பதிப்பாசிரியர் எஸ்.வி.ராஜதுரை. உலக அளவில் பலர் மார்க்சியத்தை அறிந்து எழுதுகின்றார்கள். இந்திய அளவில் சிலர் அம்பேத்கரியத்தை எடுத்துக் கூறுகின்றார்கள். தமிழக அளவில் பெரியாரியத்தைச் சிலர் நுட்பமாக அறிந்து எழுதுகின்றார்கள். ஆனால் மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் என்னும் மூன்று மாபெரும் கோட்பாடுகளையும் முழுமையாக அறிந்து பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்துபவர் கார்ல் மார்க்ஸ் 200 நூலின் பதிப்பாசிரியர் எஸ்.வி.ராஜதுரை. பெயரைப் போன்று அவருடைய எழுத்துகளும் படிப்பவரின் மனதில் கம்பீரமாக அமர்ந்து ஆட்சி செய்யா; கிளர்ச்சி செய்யும்.

வ.கீதாவையும் இணை ஆசிரியராகக் கொண்டும் தனித்தும் எஸ்.வி.ராஜதுரை எழுதிய நூல்களைச் சமுதாய வரலாற்றை அறிந்து கொள்ள விழைவோர் படிக்கலாம்.

கார்ல் மார்க்ஸ் 200 என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பல காலக் கட்டங்களில் எழுதப்பட்டுத் தனித்தனியாக இருந்தாலும் நூலை முழுவதுமாகப் படிக்கும்போது பட்டுக்கோட்டையாரின் பாடல் அடிகள் தாம் நினைவுக்கு வந்தன. காலம் தெரிந்து கூவும் சேவலைக் / கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது / கல்லைத் தூக்கிப் பாரம் வைத்தாலும் / கணக்காய்க் கூவும் தவறாது ( பட்.பாட.ப. 237).

முடியாட்சி ஆட்டங்கண்டு நிலவுடைமையும் முதலாளித்துவமும் தங்கள் கொடுங்கரங்களால் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தோன்றியவர் கார்ல் மார்க்ஸ்.

நாட்டில் இருக்க நெருக்கடி, குடி இருக்க வீட்டுக்கு நெருக்கடி, கால் வயிற்றைக் கழுவிக் கொள்ள உணவுக்கு நெருக்கடி; இவ்வளவு நெருக்கடியையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் முக்காலத்திற்கும் முதல்வனாக நிற்கும் கார்ல் மார்க்ஸ் ஒரு மாமனிதர்! அவருக்குத் துணை நின்ற பிரபு குலத்தில் பிறந்த துணைவி ஜென்னி மார்க்ஸ், எங்கல்ஸ் சங்க காலச் செவிலித்தாய் போன்ற ஹெலன் டெமூத் என இவர்கள் படிக்கும் பக்கங்களில் எல்லாம் பட்டாம் பூச்சியைப் போலப் பறந்து கொண்டிருக்கின்றார்கள். நாட்டை விட்டு விரட்டும் அரசு, வீட்டை விட்டு விரட்டும் உரிமையாளர் எனக் கொடுங்கோலர் மத்தியில் சந்திரமதியின் கழுத்தில் கிடக்கும் மங்கல நாண் அரிச்சந்திரனுக்கு மட்டும் தெரிவது போல அந்த மாமனிதரை இந்த மூவரும்தான் மிகுதியாக அறிந்திருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

பல்வேறு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக, கார்ல் மார்க்ஸ் 200 என்னும் இந்நூல் வெளிவந்துள்ளது. வரலாற்று நிலையில் கருத்துகளை அறிய முடியாவிட்டாலும் கார்ல் மார்க்சை முழுமையாக அறிந்து கொள்ளலாம். ஒரு பொருள் பற்றிப் பல கட்டுரையாளர்கள் விரிவாகவும் சுருக்கமாகவும் எழுதி இருப்பதைக் காணலாம்.  நூலை எளிமையாகப் புரிந்து கொள்ளச் சில தலைப்புகளில் அணுகலாம்.

ஊடுருவும் மார்க்சியம்

ஊடுருவுதல் என்னும் வினைச் சொல் இப்போது ஊடகங்களில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றது. பயங்கரவாதிகளின் ஊடுருவல் எல்லைப் பகுதிகளில் அதிகமாக உள்ளது. இடையில் புகுதல் என்பதுதான் இயல்பான பொருள்.

கேழ்வரகு, வரகு போன்றவற்றை சாகுபடி செய்து பயிர் வளரும்போது மேலாகக் கட்டி உழுவார்கள். களை போகும்; பயிர் கிளை வெடிக்கும். ஊடடித்தல் என்பார்கள். நிலக்கடலையைப் பயிரிடும்போது உளுந்து, பயறு, எள் போன்றவற்றைக் கொஞ்சமாகத் தெளிப்பார்கள். ஊடுபயிர் என்பார்கள்.

பெரிய அளவில் மக்கள் மதம் மாறுவதை எல்லாம் ஊடுருவுதல் என்று கொள்ள முடியாது. அடக்குமுறை மிகுந்த இடத்தில் கண்டிப்பாக ஊடுருவல் இருக்கும். உலகம் முழுவதும் பொதுவாக இருந்தாலும் தமிழகத்தில் நிலவளமும் நீர்வளமும் மிக்க பகுதிகளில் பேரளவு நிலங்கள் கோயில், மடம் சார்ந்தே உள்ளன. அடுத்து நிலவுடைமையாளர்களின் கைக்கு மாறியது. பண்ணைகளில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு வெளி உலகமே தெரியாது. உழைப்பு, கால் வயிற்றுக்குக் கஞ்சி, அப்போதைக்கு அப்போது சாட்டை அடி, சாணிப்பால் கொடுத்தல் நிகழும்.  ஊரில் நடமாட முடியாது. கல்வி அறிவு பெற வாய்ப்பே இல்லை.

உலகம் முழுவதிலும் தொழிலாளர்களைச் சுரண்டுவது உச்சக் கட்டத்தில் இருந்தது. மார்க்சியம் ஏட்டளவில் இருந்தது. அறிவு ஜீவிகள் ஆங்காங்கே அதன் இன்றியமையாமையை உணர்ந்தார்கள். மார்க்சிய கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள்.

கார்ல் மார்க்ஸ் - எங்கல்ஸ் வகுத்துக் கொடுத்துள்ள கோட்பாடு கற்பனாவாதம் அன்று. தொன்மைச் சமுதாய வாழ்வியல் படிநிலைகளின் விழுமியங்களின் தொகுப்பு. பொருள்முதல் வாதத்திற்கு முரண்பட்ட கருத்து முதல் வாதத்திலும் பல விழுமியங்கள் கூறப்பட்டுள்ளன. அவை சில பிரிவின் மேன்மைக்காகத் திட்டமிட்டு எழுதப்பட்டவை.

பூமியில் சுகமாக வாழும் மக்களுக்காக உழைக்கும் மக்கள் இங்கு நரகத்தில் உழல்கிறார்கள். பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்தால் சொர்க்கத்தில் சுகமாக வாழலாமாம். இப்படியே நாடு, மொழி, இனம் என்னும் வேறுபாடு இல்லாமல் உழைக்கும் மக்களுக்கு காது குத்திக் கொண்டிருந்தார்கள்; கடுக்கனை மாட்டினார்களா என்றால் அதுதான் இல்லை.

மதம், கடவுள், மூடநம்பிக்கை போன்றவற்றில் மூழ்கிக் கிடந்த மக்களுக்கு பொதுவுடைமைக் கோட்பாட்டு வழி விடியல் தோன்றியது. அதனை நடைமுறைப் படுத்திய பெருமை லெனினைச் சாரும். ஜார் மன்னனின் ஆட்சியை வீழ்த்திச் சோவியத்து ஒன்றியம் மலர்ந்தது. படைப்பாளர்கள் - குறிப்பாகக் கவிஞர்கள் அரைத்த மாவையே அரைக்காமல் உலகில் நடப்பவற்றை பருந்தைப் போல ஊச்சியமாகக் கூர்ந்து பார்க்க வேண்டும்; எலியைப் போலத் துல்லியமாகக் கேட்க வேண்டும். அவ்வகையான பார்வையும் கேட்கும் திறனும் புலவர்கள் சிற்றிலக்கியங்கள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் மகாகவி பாரதிக்கு இருந்தன. மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே / ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி (பார.பாட. 1700)

ரஷ்யாவில் நடந்த முதல் புரட்சி (1905 - 1907) முறியடிக்கப்பட்டது. 1917இல் சோவியத்து ஒன்றியம் மலர்ந்தது. படிப்படியாக அவிழ்த்துக் கொட்டிய மூட்டையின் நெல்லிக்காய்கள் போலப் பல நாடுகளில் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சிகள் வீழ்ந்தன. மக்களாட்சி மலர்ந்தது. பின்வரும் புள்ளிவிவரம் உலக அளவில் மார்க்சியத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

உலக சோஷலிச அல்பேனியா, பல்கேரியா, ஹங்கேரி, வியட்நாம், ஜெர்மன் ஜனநாயக் குடியரசு, சீன மக்கள் குடியரசு, கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு, கியூபா, லாவோஸ், மங்கோலியா, போலந்து, ருமேனியா, சோவியத் யூனியன், செக்கோஸ்லோவாக்கியா, யுகோஸ்லாவியா ஆகிய நாடுகளைக் கொண்டது.

அது 35.2 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பை அல்லது உலகத்தின் பரப்பில் சுமார் 30 சதவிகிதத்தைக் கொண்டிருக்கிறது. அதன் மக்கள் தொகை சுமார் 1.3 டிர்ல்லியன் ஆகும். அது உலகத்தின் மக்கள் தொகையில் சுமார் 33.7 சதவிகிதத்துக்கும் அதிகமாகும். உலக சோஷலிச அமைப்பு உலகத்தின் தொழில்துறை உற்பத்தியில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக உற்பத்தி செய்கிறது. அது வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் தொழில்துறை உற்பத்தியில் 70 சதவிகிதம் ஆகும். (மார்க் - லெனி. என்றால் என்ன? பக்.233 - 234).

இப்புரட்சிகள் அனைத்தும் உழைக்கும் மக்களின் கடுமையான போராட்டங்களால் நிகழ்ந்தவை. மதம், சாதி, இனம், மொழி, பொருளாதாரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்துக்கொண்டு சிறுபான்மை ஆளும் வர்க்கத்தினர் பெரும்பான்மையான உழைக்கும் மக்களைச் சுரண்டியதற்குக் கிடைத்த மரண அடியாகும்.

எதார்த்த உண்மைகள் அடங்கிய மார்க்சியக் கோட்பாட்டிற்கு உருவம் கொடுத்த லெனின், மாசேதுங், ஹோசிமின், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா எனப் பலர் வலிமை மிக்க தூண்கள்.

பகுத்தறிவு படைத்ததாக மானுடம் வளர்ந்த பிறகு ஏற்ற இறக்கம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் ஊழல், பொதுச் சொத்துக் கொள்ளை, கருப்புப் பணம், பதுக்கல், கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போய்விட்டது. மாசேதுங்கின் நீண்ட நெடும் பயணத்தில் உதித்த சீனாவிலேயே அதிகாரி ஒருவரிடம் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள 13.5 டன் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்னும் செய்தியைப் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. வாய்ப்புக் கிடைக்கும்போது ஊழல் வளைந்து நெளிந்து ஊடுருவும். தொன்மைக் காலத்திற்கு இருந்தவற்றைத் துறந்த புத்தரையும் அண்மைக் காலத்திற்கு வறுமையை ஒரு பொருட்டாக நினைக்காத மார்க்ஸ், மகாகவி போன்ற சிலரையும் விதிவிலக்காகக் குறிப்பிடலாம்.

இதுவரையிலான சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. சுதந்திர மனிதனும் அடிமையும் உயர்குலத்தோனும் பாமரனும் பிரபுவும் பண்ணையடிமையும் கைவினைச் சங்க விற்பன்னனும் கைவினைஞனும் சுருங்கக் கூறின் ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவரையருவர் எப்போதும் எதிர்ப்பவர்களாய், சிலவேளை மறைந்து கிடக்கிறதும் சிலவேளை பகிரங்கமாய் வெளிப்படுவதுமான போராட்டத்தை நடத்தி வந்துள்ளனர். இந்தப் போராட்டம், ஒவ்வொரு முறையும் சமுதாயம் அனைத்தையும் புரட்சிகரமாக மறுகட்டமைப்பு செய்வதிலோ, போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோ முடிவடைந்தது. (கார்ல். 114) என்னும் அடிப்படையான மார்க்சியச் சித்தாந்தம் மூக்கு இருக்கும்வரை சளி இருக்கத்தான் செய்யும் என்னும் சொலவச்சொல்லை நினைவு கூரும் வகையில் உள்ளது.

பெரும்பான்மையான தொழிலாள வர்க்கத்தின் வறுமையைப் போக்கப் போராடிய ரோஸா லுக்ஸம்பர்க், கார்ல் லீப்னெஹ்க் (கார்ல். ப. 542 - 555) சேகுவேரா போன்ற ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் தமக்காக மட்டுமே வாழும் பூர்ஷ்வா வர்க்கத்தினரால் கொல்லப்பட்டார்கள். இன்றுவரை எல்லா நாடுகளிலும் நிகழ்வதை எஸ்.வி.ராஜதுரை சுட்டிக் காட்டுகின்றார்.

மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாவில் பரவத் தொடங்கிய பொதுவுடைமைக் கோட்பாடு படிப்படியாக இந்தியா உட்படப் பல நாடுகளில் பரவத் தொடங்கியதைப் பதிப்பாசிரியர் எஸ்.வி.ராஜதுரை விரிவாக ஆராய்கின்றார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அறியாமையிலும் சுரண்டலிலும் சிக்கித் தவித்த தொழிலாளர்களுக்கு உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் (கார்ல். ப. 616) என்னும் வாசகம் அருமருந்தாகத் தெரிந்தது. அதனால்தான் காற்றுப் புக முடியாத இடங்களில் எல்லாம் மார்க்சியம் ஊடுருவுகின்றது.

அழிபசி

மன்னர்களுக்கும் மடாதிபதிகளுக்கும் சிறப்புப் பெயர், பட்டங்கள் இருக்கின்றன. நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே / மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (புறம் 186) என்று மன்னன் போற்றப்பட்ட அதே சங்ககாலத்தில் வறுமையின் உச்சத்தை உணர்த்தும் பசி என்னும் சொல்லுக்கு எத்தனை அடைமொழிகள்! அழிபசி (சிறு. 140) காய்பசி (நற். 374 : 3) கொல்பசி (அகம். 130 : 10) நீள் பசி (பொருந. 62) வாடுபசி (புறம். 227 : 7) உறு பசி (நெற். 164 : 9), கடும்பசி (பதிற். 23 : 6) தொல்பசி (பெரும். 263) பழம்பசி (பெரும். 25). இவை அல்லாமல் பசிநோய் (மணி. 20 : 32), பசிப்பிணி (புறம். 173 : 11) எனப் பசி என்னும் சொல்லும் அடையாக வந்துள்ளது.

அக்காலம் முதல் இக்காலம் வரை உழைக்கும் மக்களைச் சுரண்டுவது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சுரண்டப்படும் முறையே மாறிக் கொண்டிருக்கிறது. முடியாட்சி, பக்தி இயக்கம், நிலவுடைமை, முதலாளித்துவம் என அன்று முதல் இன்று வரை உள்ள காலக் கட்டத்தைச் சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

மார்க்சினுடைய ‘மூலதனம்’ நூலின் நோக்கம் முதலாளிய மதிப்பு விதியின் கீழ் செல்வம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை ஆய்வதுதான். அதில் உழைப்புச் சக்தியினால் உருவாக்கப்படும் உபரி உழைப்பு எவ்வாறு செல்வத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறது என்பதை நிறுவுவதுதான் (கார்ல். ப. 482) என மு.வசந்த குமார் மூலதனம் என்னும் நூலின் அடிப்படைக் கோட்பாட்டைக் குறிப்பிடுகின்றார்.

முழுமையாக இல்லை என்றாலும் மார்க்சியத்திற்கு முன் பின் என்று ஒப்பிட்டுப் பார்க்கும்போது மக்களிடம் பகுத்தறிவு, விழிப்புணர்வு போன்றவை ஏற்படுவதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மார்க்சியமே காரணம். எதிர்ப்பவர்கள் கூட வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சுரண்டும் முதலாளி வர்க்கத்திற்குத் தொழிலாளர்களில் வேறுபாடுஇல்லை. மார்க்சியத்தை எதிர்ப்பவர்கள், ஆதரிப்பவர்கள் என எல்லோரும் ஒத்த தன்மையர். தொழிற்சங்கள் தோன்றுவதற்கு முன்னர் தொழிலாளர்கள் அனைவருமே பதினைந்து - இருபது மணி நேரத்திற்குக் குறையாமல் உழைக்க வேண்டும். உடல் உழைப்பாளர், அலுவலகங்களில் பணிபுரிவோர் என அனைவருக்கும் உரிமை பெற்றதுத் தந்தது மார்க்கியச் சித்தாந்தம் என்பதை நெஞ்சைத் தொட்டுப் பார்த்தாலே தெரியும். வரலாறு தெரியாதவர்கள் மார்க்சிய வழிப் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.

உலக நாடுகளின் பெரும்பான்மையான மக்கள் வறுமைக்கு ஆட்படுவதும் ஒடுக்கப்படுவதும் சிறுபான்மையினரான படித்த மேட்டுக்குடி மக்களால்தான். இதனால்தான், “படித்தவன் சூது செய்தால் ஐயோ ஐயோ என்று போவான்” என்றார் மகாகவி. அவர்கள் போகிறானோ இல்லையோ, காலங் காலமாக இவர்களால் பல நூறு கோடி மக்கள் பாதிக்கப்பட்டு மடிந்து மண்ணாய்ப் போகிறார்கள்.

ஐரோப்பியர்கள் உலகில் பெரும்பான்மையான நாடுகளைத் தங்கள் காலனியாகக் கொண்டு சுரண்டினார்கள். மக்களைக் கல்வி அறிவில்லாமல் ஆக்கினாலே அவர்களை எப்போதுமே பொதிகழுதைகளாகவே பயன்படுத்தலாம் என்பதற்கு இந்தியாவே நல்ல சான்று.

மக்களை நால்வருணமாகவும் பஞ்சமர்களாகவும் பாகுபாடு செய்து உழைப்பை உயர்ந்தது - தாழ்ந்தது ஆக்கிய ஆரியக் கொள்கைக்கு மரண அடி கொடுத்தது மார்க்சிய சித்தாந்தமே. அதன்வழி விழிப்புணர்வை ஏற்படுத்திய அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாரின் சிலைகள் மீது சினத்தைக் காட்டுகிறார்கள்.

பெரியாரால்தான் சாதிப்பாகுபாடு வளர்ந்துள்ளது என்று வருணர் பாகுபாட்டை ஏற்கும் சிலர் பேசுகின்றார்கள். பெரியார் கூறும் சாதிப்பாகுபாடு அந்தந்த சாதியினர் அவரவருக்கான கல்வி, வேலை, வாய்ப்பைப் பெறுவதற்கானது. மூன்று விழுக்காட்டினர் தொன்ணூற்று ஏழு விழுக்காட்டினர் உரிமைகளைப் பறித்ததை சுட்டிக்காட்டும் தன்மையிது.

வேறுவேறு சிக்கல்கள் முதலாளித்துவத்தால் ஏற்பட்டாலும் உலகம் முழுவதும் ஓரளவு விழிப்புணர்வு தோன்றவும் வறுமை ஒழியவும் மார்க்சிய சித்தாந்தமே வழி வகுத்தது; இப்போது போலவே இனிவரும் காலத்திற்கும் வழிகாட்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

சூழலியல்

உலகம் உள்ளங்கைக்குச் சுருங்கி வந்துவிட்டது. வளர்ச்சி அடைந்துள்ளது என்று ஆரவாரமாகப் பேசப்படுவதை அடிக்கடி கேட்கலாம். ஓசோன் படலத்தை ஓட்டை போடும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளது உண்மைதான். ஆனால் அந்த வளர்ச்சியில் உலகமே மூச்சு விடத் திணறிக் கொண்டிருக்கிறது.

உயிரினங்களுக்குள்ளேயே ஒன்றுக்கொன்றுள்ள உறவு; உயிரினங்களுக்கிடையே ஒன்றுக்கொன்றுள்ள உறவு; உயிரினங்களின் சுற்றுச் சார்புகளிலுள்ள உயிருள்ள, உயிரற்ற கூறுகள் அனைத்துடனும் அவை கொண்டுள்ள உறவு ஆகியன பற்றிய அறிவியல் ஆய்வுதான் ‘சூழலியல்’ (கார்ல். ப. 134) என இந்நூலின் பதிப்பாசிரியர் எஸ்.வி.ராஜதுரை மிகவும் எளிமையாகப் புரியும் வகையில் சூழலியலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

முதலாளித்துவ உற்பத்தி முறையாலும் மக்களின் நுகர்வு மோகத்தாலும் பக்கத்தில் கிடக்கும் காலி மனை குப்பைத் தொட்டி; தெரு ஓரம் குப்பைத் தொட்டி; அழிக்கப்பட்டவை போக இருக்கும் நீர்நிலைகள் எல்லாம் சாக்கடைக்குப் போக்கிடம். புறவழிச்சாலை ஓரம் ஓர் அருமையான குப்பைத் தொட்டி; பக்கம் பக்கமுள்ள ஊர்களுக்கும் மாநிலங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடைப்பட்ட பகுதி குப்பைத் தொட்டி; இப்போது வளர்ந்த நாடுகள் பெரும் வாகனத்தில் அந்நாடுகளில் குவியும் மருத்துவமனைக் கழிவு, ஆலைத் கழிவு என அனைத்தையும் வளரும் - ஏழை நாட்டுப் பக்கம் அனுப்புகின்றன. இப்படிச் செய்வதைத்தான் தேனை நக்கிவிட்டு இளிச்சவாயன் தலையில் தடவுவது என்பார்கள்.

ஒரு நாளைக்கு உலகில் மக்கள் பயன்படுத்தியவை குப்பையாக குறிப்பாக மக்காத குப்பையாகப் பல கோடி டன்கள் நிலத்திலும் நீரிலும் கொட்டப்படுகின்றனவாம்.

சூழல் பேரழிவுக்கும் இயற்கையின் மிதமிஞ்சிய அழிவுக்கும் காரணமாக அமைவது இயல்பான தேவையின் அடிப்படையில் இல்லாமல் இலாபம் ஒன்றையே இலக்காகக் கொண்டு இயங்கும் முதலாளிய உற்பத்தி முறைதான் (கார்ல். ப. 384) என்னும் மு.வசந்தகுமாரின் கருத்தும் நோக்கத்தக்கது.

மட்டுமீறிய நுகர்வுப் போக்கு வாழ்க்கை முறையாக பரிணமித்து விட்டதும் வளங்களை வரம்பின்றிச் சூறையாடும் அபத்தமும் சுற்றுச் சூழலின் முக்கிய எதிரிகளாக உள்ளன (ஏழாவது ஊழி. ப. 17). என பிடல் காஸ்ட்ரோ போன்ற மார்க்சியச் சிந்தனையாளர்கள் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஐம்பெரும் பூதங்கள் ஆண்டானின் அடியைத் தாங்கும் அடிமைகளாக இருந்தன. இப்போது அவற்றுக்கான வாய்ப்புக் கிடைத்துவிட்டது. தாக்குப் பிடிப்போமா என்பதை எதிர்காலம் இல்லை; நிகழ் காலமே நிரூபித்துக் கொண்டுள்ளது.

சுற்றுச் சூழல் மட்டும் இல்லை. மனமும் மாசடைந்து விட்டது. சாதிமதச் சண்டை, இளைஞர்கள். பணியில் இருக்கும் காவலர், மருத்துவர் உட்பட பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வறுமைப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் வசதி உள்ளவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். அவ்வளவு மன அழுத்தம் உள்ளது. இருபது முப்பது வயதுள்ள இளைஞர்களுக்கே மாரடைப்பு வருகின்றது.

இந்தப் பூவுலகில் இப்போதுதான் மக்கள் அதிசயமாக வாழ்கிறார்களா? மக்களாக வளர்ச்சி அடைந்த காலத்திலிருந்து வாழ்கின்றார்கள். ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் தழையைத் தின்றாலும் புல்லை மேய்ந்தாலும் அவை பாதிப்புக்கு உள்ளாவதில்லை. தொடர்ந்து தழைக்கும்; வளரும். பன்றி அலகால் மஞ்சிக் கிழங்கை அகழ்ந்து எடுப்பதுபோலப் புதுவகைப் பயிர்கள் செய்யவும் பல்வேறு பயன்பாட்டிற்காகவும் உலகிலுள்ள காடுகளை எல்லாம் அழித்து விட்டோம். மலைகளை எல்லாம் பாளம் பாளமாப் பிளந்து சுக்கு நூறாகச் சிதைந்தும் விட்டோம்.

உலகின் நுரையீரல் என்று போற்றப்படும் அமேசான் காடு, கலிபோர்னியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள காடுகள் எல்லாம் பற்றி எரிவதைப் படிக்க முடிகின்றது; பார்க்க முடிகின்றது.

எங்கும் பருவ காலத்திற்கு ஏற்பப் பனி மூட்டம் இருப்பது இயல்பு; ஆனால் தற்போது தில்லியே புகை மூட்டத்தில் இருப்பதாகப் பேசப்படுகின்றது. சில ஆண்டுகளாகவே இந்தச் செய்தி அறுவடை நேரத்தில் வெளிவருகின்றது. பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அறுவடைத் தாள் ஒட்டுமொத்தமாக எரிக்கப்படுவதால் எழும் புகைதான் தில்லியை முகாமிட்டுள்ளது. ஏதோ ஒன்றுக்காக ஏதோ ஒன்றைக் காரணம் சொன்னால் தென்னை மரத்திற்குத் தேள் கொட்டியதும் பனை மரத்திற்குப் பல்லைக் கிட்டியதாம் என்று ஒரு சொலவச் சொல்லைக் கூறுவார்கள். ஆனால் இந்தப் பழமொழி தில்லிப் புகை மூட்டத்திற்கு உண்மையாக இருக்கிறது.

தொழிற்சாலை, வாகனப் புகை, இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துப் பயன்பாடு, புதுப்புது நோய்கள் என அறிவியல் உலகம் மக்களைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. பல்வேறு நோய்களுக்குப் புகைப்பதும் குடிப்பதும் காரணம் என்று கூறி இன்னொன்றை ஆளும் வர்க்கம் மறைக்கின்றது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இரசாயன உரம், உயிர்க் கொல்லி மருந்தால் விளையும் உணவுப் பொருள்களே நோய்க்குக் காரணம் என நம்மாழ்வார் போன்றோர் எடுத்துச் சொல்லியும் அதிகமாக மக்கள் விழித்துக் கொள்ளவில்லை.

காற்றில் உள்ள மாசை சதவிகித அளவில் கணக்கிட்டுச் சொல்வதெல்லாம் குறைவில்லை. புவி வெப்பமாதலைக் குறைக்க நாடுகள் எல்லாம் கூடி மாநாடு போடுகின்றன.

பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தொழிற்சாலைகள் தோன்றிப் புகையைக் கக்கி வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தன. அப்போது அந்த மாசு நிச்சயமாகக் கடலில் பெருங்காயம் கரைத்ததைப் போலத்தான் இருந்திருக்கும். அப்போதே அதையும் நுட்பமாக உணர்ந்து, சுவாசித்து வரக்கூடிய கேட்டை முன்கூட்டியே தெரிவித்தவர் ஒரு மாமேதையாகத்தான் இருக்க முடியும். தூய காற்றுக்கான தேவைகூட இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. மனிதன் மீண்டும் குகையில் வாழச் செல்கிறான். ஆனால் இக்குகை இப்போது நாகரிகத்தால் சுவாசித்து வெளியேற்றப்பட்ட நாசகரமான நச்சுக் காற்றால் மாசுபட்டுள்ளது. அவன் அங்கு இன்றோ நாளையோ என்ற நிச்சயமின்மையுடன் தொடர்ந்து தங்கியிருக்க முடிகிறது. (கார்ல். ப. 21)

சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னரே சுற்றுச் சூழலில் கேடு இந்த அளவு என்றால் தற்போது புகைமூட்டம் சூழ்ந்த சாக்கடை உலகில் பன்றிகளைப் போல உழன்று கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கண்ணை மூடிக்கொண்டே எந்த இடத்தைக் கடக்கிறோம் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். சாக்கடை, இரசாயன ஆலை, தோல் தொழிற்சாலை போன்றவற்றின் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடும்.

சங்க காலத்தை ஒட்டிய தொன்மையான காலத்தில் தேவைக்காகக் காட்டை அழித்துள்ளார்கள். நீர் தேங்கிய இடத்தை நீர்நிலை ஆக்கியுள்ளார்கள். காடுகொன்று நாடாக்கிக் / குளந்தொட்டு வளம் பெருக்கி (பட். 283-284). நீர்நிலைகள், காடுகள், மலைகள் இருந்த இடங்களில் எல்லாம் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் புற்றுகள் போல் உயர்ந்து நிற்கின்றன. ஆதிகாலம் போலப் பருவத்தோடு மழை பெய்யவில்லை. பெய்து கெடுக்கிறது அல்லது பெய்யாமல் கெடுக்கிறது. இருப்பினும் தொடர் மழை பெய்யும்போது நீர் நிலைகள் தாங்கள் இருந்த இடத்தைக் காட்டிக் கொடுக்கின்றன.

பல்வேறு நாடுகளில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள விளைவுகளை எங்கல்ஸ் சுட்டிக் காட்டும்போது முன்னத்தி ஏர் வழியாகத்தான் இன்று வரை உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. மெஸோ பொடேமியா, கிரிஸ், ஆசியா மைனர் ஆகியவற்றிலும் இன்னும் பிற இடங்களிலும் சாகுபடி நிலங்களைப் பெறுவதற்காகக் காடுகளை அழித்த மக்கள், காடுகளை அழித்ததன் கூடவே ஈரப்பதம் ஒருங்கு சேரும் இடங்களையும் நீர்த்தேக்கங்களையும் ஒழித்ததன்மூலம் தாங்கள் அந்த நாடுகளின் தற்போதைய அவல நிலைக்கு அடிகோலியதாகக் கனவு கூடக் காணவில்லை.

இத்தாலியர்கள் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் வடபகுதிச் சரிவுகளில் அத்தனை பரிவுடன் பேணிக்காக்கப்பட்ட ஊசியிலை மரக் காடுகளைத் தென்பகுதிச் சரிவுகளில் முழுமையாக வெட்டிப் பயன்படுத்தியதன் மூலம், அப்பகுதிப் பால்பண்ணைத் தொழிலின் அடிவேர்களையே வெட்டி விட்டனர் என்பதையோ, அந்த மரங்களை வெட்டியதன் மூலம் ஆண்டின் பெரும்பகுதி, மலையிலுள்ள ஓடைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் போய்விட்டதையும் அதன் காரணமாக மழைக் காலங்களில் அவை கூடுதலான வெள்ளத்தைச் சமவெளியில் பாய்ச்ச வகை செய்தனர் என்பதையும் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை...

கூபாவில் மலைச் சரிவுகளிலிருந்த காடுகளை எரித்து அதிலிருந்து கிடைத்த சாம்பலை மிக இலாபகரமான காப்பிச் செடிகளுக்கு ஒரு தலைமுறைக்குப் போதுமான உரத்தைப் பெற்ற ஸ்பானியக் காப்பித் தோட்ட முதலாளிகளுக்கு, பின்னாளில் வெப்பப் பிரதேசக் கன மழை பாதுகாப்பற்ற மேல் படிவ மண் முழுவதையும் அடித்துக்கொண்டு போய்ப் பாறைகளை மொட்டையாக விட்டுச் சென்றதைப் பற்றி என்ன கவலை இருந்திருக்கும் (கார்ல்.பக்.126-128).

கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் வாழ்ந்த காலத்தில் கடலடி இயற்கை அழிப்பை இந்தியாவிலோ உலகில் வேறு பகுதிகளிலோ இவர்களைப்போல் வேறு யாராவது எழுதி இருந்தால் பாராட்டத்தக்கவர்களே!

புவி வெப்பத்தால் ஓசோன் படத்தில் ஓட்டை விழுந்து விட்டதாகக் கூறுகின்றார்கள். பனிப்பாறை கரைகின்றது; கடல் மட்டம் உயர்கின்றது. பல தீவுகள் மூழ்கப் போகின்றன என்றெல்லாம் கூறுகின்றார்கள். ஐம்பது - அறுபது ஆண்டுகளுக்குள்ளேயே சுற்றுச் சூழலில் எவ்வளவு மாற்றம்.

நீண்ட நாள் காணாதவரைக் கண்டு விட்டால் கார்த்திகை மாதப் பிறையைப் போல ஆளைக் காண முடியவில்லையே என்பார்கள். ஐப்பசி தொடங்கி தை வரை மழையும் மந்தாரமுமாக இருக்கும்; குளிரடிக்கும். நிலவைச் சுத்தமாகப் பார்க்க முடியாது. இப்போது கார்காலத்தில் நிலவு வெள்ளை வெயில் போலக் காய்கிறது. சுற்றுச் சூழல் கேட்டை ஐப்பசி - கார்த்திகையில் இளநீர் விற்பதையும், செடி, கொடிகள் வாடி, வதங்குவதையும் கண்டு அறிந்து கொள்ளலாம்.

சிற்றுயிர்களாகிய கரையான், புழு, பூச்சிகள், பட்டாம் பூச்சி, ஈசல், தட்டான் போன்றவை அழிவின் விளம்பில் உள்ளன. யானை, புலி, காட்டெருமை நீருக்காகவும் தீனிக்காகவும் கிராமப் புறங்கள் நோக்கிப் போகின்றன. இப்படியே போனால் மானுடமும் வெள்ளம், வெப்பம், வறட்சியால் பாதிப்பு அடையப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தண்ணீர் விற்பனைக்குப் பிறகு இப்போது சுவாசிக்கும் காற்றும் விற்பனைக்கு வந்துள்ளது.

சுற்றுச் சூழல் கேடும் இரசாயனத்தால் விளையும் உணவுப் பொருள்களும் சாதி - மதம், ஏழை - பணக்காரர் பார்ப்பதில்லை.  தொற்றா நோய்கள் எல்லோருக்கும் வருகின்றன. ஐம்பது - அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு மட்டும்தான் சர்க்கரை நோய், இதயநோய், மூட்டுவலி, புற்றுநோய் போன்ற தொற்றா நோய் வரும்.

சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் பொருளாதார வளர்ச்சியை முதலாளித்துவத்தால் சாதிக்க இயலாது (கார்ல். ப.133) எனப் பல மார்க்சியவாதிகள் கருதுவதை எங்கல்ஸ் சுட்டிக்காட்டுகின்றார். பல்வேறு தொழிற் சாலைகளின் கழிவாலும் பசுமைப் புரட்சியால் விளைந்த நச்சு உணவாலும் உலகம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. மனித குலம் இயற்கையைச் சார்ந்துதான் இருக்கும். இயற்கையும் மனித குலம் உள்ளவரை அதைச் சார்ந்துதான் இருக்க முடியும் (கார்ல். ப. 163) என்னும் மார்க்சின் கருத்தைப் பட்டபிறகும் உலகம் அறியவில்லை.

இந்தியாவில் அந்நியர்கள் வந்து காடுகளை அழித்துப் புகைவண்டித் தடம் அமைத்தார்கள். காபி, தேயிலைத் தோட்டம் அமைத்தார்கள், நம்மவர்கள் காடுகளை அழித்து மலைகளைப் பிளந்து கட்டடங்கள் கட்டிவிட்டார்கள்.

இவ்வாறு இன்னும் சில கட்டுரைகளில் சூழலியல் கேடு அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி எழுதப்பட்டுள்ளன.

வேளாண்மை

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்; உழுவார் உலகத்தார்க்கு ஆணி; உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் (திருக். 1031, 1032, 1033) என உலகப் பொதுமறையைத் தந்த திருவள்ளுவர் கூறுபவற்றை இக்காலத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது. மானுட வளர்ச்சியில் காய்கனிகளை உண்பது, வேட்டையாடுவது என்னும் நிலைக்குப் பிறகு அது கற்றுக் கொண்ட தொழில் வேளாண்மைதான். அதனால்தான் திருவள்ளுவர் உழவுத் தொழிலையும் அதனைச் செய்வோரையும் உச்சிமேல் வைத்துப் போற்றுகின்றார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (பார. பாட. 356) என்கிறார் மகாகவி.

காலங்காலமாகச் செய்து வந்த மரபு சார்ந்த வேளாண்மை, இந்திய விடுதலைக்குப் பிறகு புகுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால் மண்ணும் மலடாகிச் செத்துப் போனது. பல்வேறு வகையான உயிரினங்களும் தாவரங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. மக்களும் நோய் நொடியுடன் மருந்து மாத்திரைகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காலங்காலமாகப் பயன்பாட்டில் இருந்த நூற்றுக்கணக்கான நெல்வகைகளும் சிறுதானியங்களும் திட்டமிட்டே அழிக்கப்பட்டு விட்டன. நாட்டின் பஞ்சத்தைப் போக்கப் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்ததாகக் கூறுகிறார்கள். அப்படி என்றால் பஞ்சம் போய் இருக்க வேண்டுமே? இப்போது கூட ஒரேவேளை உண்பவர்கள், இருவேளை உண்பவர்கள், உணவே கிடைக்காதவர்கள் என்று விழுக்காட்டுக் கணக்கில் பட்டியல் போட்டுக் காட்டுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பூச்சிக்கொல்லியைக் குடித்தாலோ காதில் ஊற்றிக் கொண்டாலோ உயிர் போவது உறுதி. ஆனால் நிலத்தில் தெளிக்கும்போது பூச்சி சாகுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது; நட்ட பயிரில் இருந்து அறுவடை வரை பூச்சிக் கொல்லியை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லி, களைக்கொல்லியை நேரடியாகக் குடித்தால் அன்றே கொல்லும்; இரசாயன உரம், பூச்சி களைக் கொல்லிகளைப் பயன்படுத்தி விளைந்தவற்றை உண்டால் நின்று கொல்லும்.

பசுமைப் புரட்சியால் இருபோகம், முப்போகச் சாகுபடி; நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு விட்டது. இரசாயன உரத்தைக் கொட்டிக் கொட்டி விளைந்தது கிணற்றடிப் பிள்ளைதான். கையாட முடியுமா? என்பதே ஐயம். அறுவடைக்குச் சில நாட்களுக்கு முன்பாக நெல்லில் புகையான் என்னும் பூச்சி தாக்குகிறது.

வேளாண்மையில் வேதியல் பொருட்களை இடுவது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்தான் என்று சில நூல்களும் கட்டுரைகளும் குறிப்பிடுகின்றன. பயிரிடப்பட்ட நிலம் இழந்த சத்தை மீட்டெடுக்க வேதியல் பொருள் இடுவது பற்றிய பேச்சு மார்க்ஸ் - எங்கல்ஸ் காலத்திலேயே இருந்ததைக் கார்ல் மார்க்ஸ் 200 என்னும் இந்நூல் வழி அறிந்தபோது வியப்பாக இருக்கிறது.

த.வி.வெங்கடேஸ்வரன் (17, 32) எழுதியுள்ள இரண்டு கட்டுரைகளில் மார்க்ஸ் - எங்கல்ஸ் வாழ்ந்த காலத்தில் சூழலியலோடு வேளாண்மை எவ்வாறு பார்க்கப்பட்டது என்பதைத் தெளிவாக அறிய முடிகின்றது. த.வி.வெங்கடேஸ்வரன் பின்வருமாறு எழுதுகின்றார்.

1865 துவக்கத்தில் வேதியல் பார்வையில் நடந்து வந்த விவாதத்தை மட்டுமே மார்க்ஸ் கவனித்து வந்தார். நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகியவற்றில் எது கூடுதல் சாகுபடிக்கு மிகவும் அவசியம் என்ற சர்ச்சை அந்தக் கட்டத்தில் இருந்து வந்தது. லாவ்ஸ், ஃப்ரீட்ரிஸ் ஷான்பீன் முதலிய விவசாய வேதியியல் ஆய்வாளர்கள் பாஸ்பரஸையும் லீபிக் நைட்ரஜனையும் முதன்மைப்படுத்தி வாதம் செய்து வந்தனர். ஃப்ராஸின் கருத்துகளை அறிந்த பின்னர் “விவசாய அறிவியலில் ஏற்படும் புதிய வளர்ச்சிகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இயற்பியல் பார்வை வேதியல் பார்வைக்கு எதிராக உள்ளது” என எங்கல்ஸ¨க்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டார் (கார்ல். ப. 508).

வேளாண்மையால் சத்தை இழந்த மண்ணுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ் இடுவது நல்லது என்னும் கருத்து இருந்தது போன்று விவசாய நிலங்களில் செயற்கையாகச் சிறு அணை கட்டி, செயற்கையாக வண்டல் கலந்த நீரை நிலத்தில் பாய்ச்சி மண் வளத்தை மீண்டும் பெற்று விடலாம் (கார்ல். ப. 508) என்று ஃபார்ஸ் என்னும் அறிஞர் குறிப்பிடுகின்றார்.

வேதியல் பொருள்கள் இடுவதைவிட வண்டல் போன்றவற்றைக் கொண்டு நிலத்தைச் செழுமையாக்குவதே சிறந்தது என்று மார்க்ஸ் கருதியதை அறிய முடிகின்றது. பல தலைமுறைகளாகத் தமிழகக் கிராமங்களில் வேளாண்மை செய்யப்பட்ட நலம் களைத்துப் போகாமல் இருக்கப் பல்வேறு நிலையில் உரம் சேர்ப்பார்கள்.

பெருவாரியான நிலத்தில் நீண்ட நாள் வயதுடைய நெல், கேழ்வரகு, கடலை, மரவள்ளி போன்றவற்றை ஒரு போகமாகச் சாகுபடி செய்வார்கள். இரு போகச் சாகுபடி மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

நெல் அறுடைக்கு முன் பொழிஞ்சி, சணப்பு விதையை விதைப்பார்கள். தழைச் சத்துக்காக வளர்ந்த பிறகு மடக்கி உழுவார்கள். கோடைக்காலத்தில் ஆட்டுக் கிடை, மாட்டுக் கிடை போடுவார்கள். ஆட்டுக் கிடைக்கு அந்த வருடத்தில் பலன்; மாட்டுக் கிடைக்கு மறு வருடத்தில் பலன் என்று சொலவுச் சொல்லே இருக்கிறது.

கோடையில் நீர்நிலை காய்ந்து கிடக்கும்போது பொருக்கு அடிப்பார்கள். பொருக்கு என்பது நீர்நிலைக்கு ஆற்றுவழிப் பாய்ந்த வண்டல். பாளம் பாளமாக காய்ந்து கிடக்கும். வண்டியில் வெட்டிக் கொண்டுபோய் வயலில் கொட்டுவார்கள்.

நவீன அரிசி ஆலைகள் வந்த பிறகு அங்குக் கிடைக்கும் சாம்பலை அள்ளிக் கொண்டு வந்து கொட்டுவார்கள். ஆற்றில் தண்ணீர் வரும்போது எரு அடிப்பார்கள். வீட்டுக்கு வீடு ஆடு மாடுகள் சத்துக்கு ஏற்றாற் போல இருக்கும். மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, வீட்டைச் சுற்றியுள்ள மரங்களில் இருந்து கொட்டிய தழை, மாடு கழித்த வைக்கோல், புல் போன்றவற்றைக் கூட்டி அள்ளிப் போட்டுக் குப்பை சேர்ப்பார்கள். குப்பை உயர்ந்தால் குடி உயரும் என்று பழமொழியே இருக்கிறது.

இரண்டாம் உலகப்போர் பல கோடி மக்களைக் காவு வாங்கி முடிவுக்கு வந்தது. குண்டு தயாரிக்க டன் கணக்கில் அமோனியம் என்னும் வேதியல் பொருளைக் குவித்து வைத்திருந்தார்கள். இனிமேல் அண்மையில் போருக்கு வாய்ப்பே இல்லை என்பதை உறுதி செய்துவிட்டுக் கொண்டுபோய்க் கண்ட இடங்களில் கொட்டினார்கள். விளை நிலங்களில் கோதுமை, நெல் போன்றவை செழித்து வளர்ந்து சாய்ந்தன.

பசுமைப்புரட்சி ஏற்பட்ட பிறகு யூரியா, பொட்டாஷ், அமோனியம் சல்பேட், கலப்பு உரம் எனக் கண்ட உப்புகளைக் கொட்டியும் பல்வேறு பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகளைத் தெளித்தும் கடன்பட்டு மக்கள் தற்கொலை செய்து கொள்வது ஒருபுறம். மண்ணே மலட்டுத் தன்மை அடைந்தது மறுபுறம்.

பருவத்தே பயிர் செய்ய வேண்டும்; கோப்புத் தவறினால் குப்பையிலும் பயிர் ஏறாது என்பார்கள். வேளாண்மைக்கு இயற்பியல் தொடர்பான கோட்பாடே வேதியல் கோட்பாட்டை விடச் சிறந்தது என்று மார்க்ஸ் கருதியுள்ளார். முதலாளிய வேளாண்மையில் ஏற்படும் அனைத்து முன்னேற்றமும் உழைப்பாளியைக் கொள்ளையடிக்கும் கலையில் மட்டுமல்லாமல் மண்ணைக் கொள்ளையடிக்கும் கலையிலும் ஏற்படும் முன்னேற்றமாகும்; குறிப்பிட்ட கால அளவுக்கு மண்ணின் வளத்தை அதிகரிக்கும் அனைத்து முன்னேற்றமும் நீடித்து நிற்கும் வளத்தின் மூலாதாரத்தை அழிப்பதை நோக்கிய முன்னேற்றமாகும். (கார்ல். ப. 129)

எதிர்காலத்தை நோக்கி வேதியல் உரங்களை விளை நிலங்களில் போட்டால் இப்படித்தான் ஆகும் என்பதை 175 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் கூறியுள்ளது வியப்பை அளிக்கின்றது. காந்தியடிகளும் வேளாண்மைக்கு இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை விரும்பவில்லை என்பதை அறிய முடிகின்றது.

மனித குலம் இயற்கையைச் சார்ந்துதான் இருக்கும். இயற்கையும் மனிதகுலம் உள்ளவரை அதைச் சார்ந்துதான் இருக்கும் (கார்ல். ப. 162) கார்ல் மார்க்சின் இக்கூற்று எவ்வளவு உயிர்ப்புள்ளது! இரசாயன உரம், உயிர்க்கொல்லிகள் விதை, உழவு, நீர்ப்பாசனக் கருவிகள் என அனைத்துமே வேளாண் மக்களை வதைக்கின்றன. பெரும் நிறுவனங்களை வாழ வைக்கின்றன. வேளாண் மக்கள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேளாண்மையை நம்பி வாழ்ந்த தொழிலாளர்கள் இடம் பெயர்கிறார்கள்.

இளைஞர்கள் நிறைந்த நாடு எனப் பெருமையாகப் பேசுகின்றோம். கிராமப் புறங்களில் அத்தி பூத்தது போலச் சில இளைஞர்களையே பார்க்க முடிகின்றது. பெரும்பாலான இளைஞர்ள் நகரம், வெளிமாநிலம், வெளிநாடு என நீரற்ற குளத்துப் பறவைபோலப் போய்விடுகின்றார்கள்.

எவ்வழி நல்லவர் ஆடவர் / அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம். 187) பெண்பாற்புலவர் ஒளவையார் விளை நிலத்தை உவர் நிலம் ஆக்குவதும் அமைதியான பூமியைப் போர்க்களம் ஆக்குவதும் ஆண்பாலரே என்பதை எவ்வளவு நாசுக்காகக் குறிப்பிடுகின்றார்!

நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும் பள்ளமாக இருந்தாலும் மேடாக இருந்தாலும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டு உயர்வு - தாழ்வு, மொழி, சாதி - மத அடிப்படையில் பதற்றம் தூங்காமலேயே திரிந்து கொண்டிருக்கும்; குறிப்பாக ஆடவர்களால்தான் இந்த நிலை இருக்கும் என்பதை ஒளவையார் சொல்லாமல் சொல்கிறார்.

மகளிருக்காக உலகில் எவ்வளவோ போர்கள் நிகழ்ந்துள்ளன. இனிமேல் காலங்காலமாக தாங்கள் இழந்த உரிமைகளுக்காகப் பெண்களின் போராட்டங்கள் நிகழ அதிக வாய்ப்பிருக்கிறது.

இயற்கை வளங்களைக் காக்கவும் உடல் ஆரோக்கியத்திற்கு நஞ்சில்லா உணவைப் பெறவும் அடிப்படையான மரபு சார்ந்த வேளாண் தொழில் நீடித்து நிலைபெறவும் முதலாளித்துவப் புத்தி உதவாது. மார்க்சியச் சித்தாந்தம்தான் தோள்கொடுக்கும். முழித்துக் கொண்டிருக்கும்போதே முழியைத் தோண்டி விடுவான் என்பார்கள்.

எவ்வளவுதான் விழிப்புணர்வு வளர்ந்திருந்தாலும் சமூக ஆர்வலர்கள் தொண்டை கிழியக் கத்தினாலும் கை வலிக்க எழுதினாலும் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதும் உலகம் குப்பைத் தொட்டியாகி நச்சு வாயு சூழ்வதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. முதலாளித்துவத்தின் கைப்பாவையாக அரசுகள் செயல்பட்டால் இவை என்ன? இன்னும் என்னென்ன கொடுமைகள் உள்ளனவோ அவை எல்லாம் நிகழும். மார்க்சியக் கோட்பாடுபோல, பேய் அரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள் (பார.பாட. 796) என்னும் மகாகவியின் கோட்பாடும் உலகப் பொதுமையானது.

கார்ல் மார்க்ஸ்

ஆடு, மாடு மேய்ப்போர் அவற்றின் வயிறு நிரம்ப வேண்டும் என்பதற்காக மதியச் சாப்பாட்டையே மறந்து விடுவார்கள். உழைக்கும் வர்க்கத்தின் உயர்வுக்காக மார்க்சும் வறுமையை மனமுவந்து ஏற்றுக்கொண்டார் என்று தான் கூற வேண்டும். அதிகார வர்க்கத்திடமிருந்து பாட்டாளி வர்க்கத்தைக் காப்பாற்ற ஏற்பட்ட இன்னல்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே அவர் நினைக்கவில்லை. ஜெர்மனியிலிருந்தும் பின்னர் பிரான்ஸிலிருந்தும் வெளியேற்றப்பட்ட மார்க்ஸ் 1846ஆம் ஆண்டு கோடை காலத்தில் இலண்டனுக்கு வந்து சேர்ந்து தமது வாழ்வின் எஞ்சிய காலம் முழுவதையும் அங்கேயே கழித்தார். புகலிடம் தேடி இலண்டனுக்கு வந்து சேர்ந்த பிற அகதிகளைப்போலவே மார்க்சும் அவரது குடும்பமும் வறுமையில் வாட வேண்டியிருந்தது (கார்ல். ப. 568) என எஸ்.வி.ராஜதுரை கூறுவதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

குடும்பத்தில் வறுமை, குழந்தைகளின் இறப்பு, வீட்டு உரிமையாளர் கொடுத்த தொல்லை என எதுவும் மார்க்சின் படிப்பையும் எழுத்தையும் பாதிக்கவில்லை. கணிதவியல் உட்படப் பல்வேறு துறைகளை நுட்பமாகக் கற்றறிந்தார். ஆ.சிவசுப்பிரமணியன் (2017:160) குறிப்பதைப் போல, மார்க்ஸ் ஹெகலின் இயங்கியல் கோட்பாட்டையும் பாயர்பாக்கின் பொருள்முதல்வாதக் கோட்பாட்டையும் பொருத்தி, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் மார்க்சியச் சித்தாந்தத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

தம்முடைய சித்தாந்தம் தெளிவாகவும் உண்மைத் தன்மையோடும் நீடித்து நிலை பெற்றிருக்கக் குடும்ப வறுமையை நினைக்காமல் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தரவு திரட்டியுள்ளார். எந்தக் கற்பனை சக்தியும் அவருக்கு உண்மையை விளக்கி விடவில்லை. இந்த உலகின் இயக்கம் அவருக்குப் போதி மரமாகத் திகழ்ந்தது.

பல நூல்களிலும் கட்டுரைகளிலும் கார்ல் மார்க்சின் வாழ்க்கை பற்றிய செய்திகளை அறியலாம். வெ.சாமிநாத சர்மா எழுதியுள்ள கார்ல் மார்க்ஸ் என்னும் நூலில் இருந்து இந்நூலின் பதிப்பாசியர் எஸ்.வி.ராஜதுரை சில குறிப்புகளைத் தெரிவு செய்து ஒரு கட்டுரையாகக் கொடுத்துள்ளார் (கார்ல்.பக். 218-225)

இதற்கு முன்னர் கடவுளர்கள், பூலோகத்திற்கு மேற்பட்டவராக வசித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் பூலோகத்தின் மையமாகி விட்டார்கள். (கார்ல்.பக். 219) என்னும் மார்க்சின் கருத்தைப் படிக்கும்போது கடவுளை வைத்துச் செய்யப்படும் வணிகம்தான் நினைவுக்கு வருகின்றது. எல்லா மதக் கடவுள்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய முரண்பட்ட கருத்து காலங்காலமாகவே உள்ளது. தொடக்க காலத்தில் மனிதனின் அமைதிக்காகப் படைக்கப்பட்டவை படிப்படியாக சுரண்டலுக்கு வழிகோலின.

சான்றுக்குத் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நிலங்களை ஆலயங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. ஒரு சிற்றூரில் கூடப் பல கோயில்கள் இருக்கும் நிலமும் பெரும்பாலும் அவற்றுக்கும் அவற்றைச் சார்ந்து வாழ்வோருக்குமே உரிமையாக இருக்கும். தற்போது வானை முட்டும் சிலைகள்! பூலோகத்திற்கு மேற்பட்டு வசித்த தெய்வங்கள் பூலோகத்தில் மையம் கொண்டுவிட்டன என மார்க்ஸ் கூறுவதை இன்றைய சூழலில் இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜென்னி மார்க்ஸ் மகா பொறுமைசாலி. ஆனால் பொறுமையைக் கொண்டு வறுமையைக் கடந்து விட முடியுமா? (கார்ல். ப.221) என்னும் கேள்விக் குறியுடன் சாமிநாத சர்மா மார்க்ஸ் குடும்ப வறுமையை விளக்குவது இதயத்தை அமுக்குவதுபோல உள்ளது. உண்மையான அறிவாளிகளின் நிலை இப்படித்தான் இருக்கும் போலும்.

ஜென்னி மார்க்சின் பாதிக்கப்பட்ட மார்பகத்தில் குருதியையும் பாலையும் குடித்துக் குழந்தை படும் வேதனை, தூக்கமின்றித் துடிக்கும் கொடுமை, வீட்டு வாடகைக்காக உரிமையாளர் படுத்தியபாடு, வீட்டு உபயோகப் பொருள்களை விற்று வைத்தியம் செய்தவருக்கும் ரொட்டி, இறைச்சி, பால் கொடுத்தவர்களின் கடனைத் தீர்த்தது போன்றவற்றை ஜென்னி மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். இவற்றை எல்லாம் சகித்துக் கொண்ட அந்தப் பெண்மணி, ஒரே ஒரு விஷயந்தான் என்னை வாட்டியெடுக்கிறது; என் இதயத்திலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டு வரும்படி செய்கிறது. அஃதென்ன என்பீர்களோ, அவர், என் கணவர், சில்லரைத் தொந்தரவுக்கு எல்லாம் உடன்பட வேண்டியிருக்கின்றதே என்பதுதான் (கார்ல். ப.224) என அந்த மாமேதைக்காக வருத்தப்படுகின்றார்.

வறுமையின் வலி தெரிந்தாலும் மார்க்ஸ் அதற்காக வருந்தவில்லை. பத்தும் பசி வந்திடப் பறந்து போம் (நல்.26) என்று ஒளவையார் கூறுவதும் நோக்கத்தக்கது. ஆனால் அந்த மாமேதைக்குப் பசி வந்தபோது அவரது கண்களுக்குக் கண்ணுக்குத் தெரியாத நாடுகளில் எல்லாம் சுரண்டலால் பாதிக்கப்பட்டு அறியாமையிலும் வறுமையிலும் நோயிலும் வாடிய மக்கள்தான் தெரிந்தார்கள். அதனால்தான் மார்க்சியச் சித்தாந்தம் திருக்குறளுக்கு அடுத்தபடியாக உலகப் பொதுமறையாகப் பெரும்பான்மையான மக்களால் போற்றப்படுகிறது.

கார்ல் மார்க்ஸ் 200 என்னும் இந்நூலைப் பற்றி ஒரு நூலே எழுதலாம்; அவ்வளவு கருத்துகள் நூலுள் செரிந்துள்ளன. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் மார்க்சியக் கண்ணோட்டத்துடன் ஆராயலாம் என்பதை நூலில் உள்ள எல்லாக் கட்டுரைகளும் மெய்ப்பிக்கின்றன.

இதுவரையிலான (ஏடறிந்த) வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே (கார்ல். ப. 117) என்னும் மார்க்சியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள தூத்துக்குடியில் வர்க்கப் போராட்டம் என்னும் கட்டுரை இக்காலத்திய முதலாளித்துவத்தின் கொடூரமான முகங்களுக்குச் சாட்சியமாகும். மற்றய காலனிய நாடுகளைப் போன்று இந்தியாவைப் பற்றிய மார்க்சின் சிந்தனைகளை இந்தியாவைப் பற்றிக் கார்ல் மார்க்ஸ் (கார்ல். பக். 556 - 612) என்னும் கட்டுரையில் காணலாம். கட்டுரையாளர் எஸ்.வி.ராஜதுரையின் தன்னடக்கத்தை விஞ்சும் வகையில் இந்தியா பற்றிய கருத்துகள் பதிவாகி உள்ளன.

இந்த நூலிலுள்ள கட்டுரைகளைப் படிக்கும்போது புத்தம் புதிய கலைகள் / பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் / மெத்த வளருது மேற்கே (பாரா. பாட. 179) என்னும் மகாகவியின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் அறிவியல் படிக்கப்படுகின்றது. கண்டுபிடிப்புகள் நிகழவில்லை. காலங்காலமாக ஆன்மீகம் பேசப்பட்டு நிலங்கள் கோயில், மடங்களுக்கு உரிமையாக்கப்பட்டுப் பாட்டாளி மக்களைச் சுரண்டி அடிமைப்படுத்தி அந்நியரின் வரவுக்குக் கதவு திறந்து வைத்த நிகழ்வுதான் நடந்துள்ளது.

கார்ல் மார்க்ஸ் 200 நூலின் இறுதியில் ரஷ்யக் கவிஞர் வி.கிரில்லோவ் எழுதிய கவிதையை எஸ்.வி.ராஜதுரை மொழிபெயர்த்துத் தந்துள்ளார் (கார்ல். பக். 651 - 652). ‘அழகைத் தூக்கிலிடுபவர்கள் நீங்கள்’ என்று அவர்கள் நம்மைப் பார்த்துக் கத்தட்டும் / நமது நாளை என்பதன் பெயரால் / ரஃபேலின் ஓவியங்களை எரித்துப் பொசுக்குவோம் / அருங்காட்சியகங்களை அழிப்போம் / கலை என்னும் மலர்களைக் காலில் போட்டு மிதிப்போம் / சுமையான நசுக்குகின்ற மரபுகளைத் தூக்கியெறிந்துள்ளோம் / சாரம் உறிஞ்சப்பட்ட ஞானக் கதைகளை நிராகரித்துள்ளோம் எனக் கவிதை நீள்கிறது. இவ்வுலகின் பிரமாண்டங்களை எல்லாம் இக்கவிதை கேள்விக்குள்ளாக்குகின்றது.

சீன நெடுஞ்சுவர், தஞ்சைப் பெரிய கோயில் முதலான உலகின் பிரமாண்டமான ஆலயங்கள், தாஜ்மகால் என அனைத்துக்குள்ளும் பாட்டாளி மக்கள், போர்க்கைதிகள் போன்றோரின் குருதியும் வியர்வையும் ஈரங்காயாமல் இருப்பதை இக்கவிதை சொல்லாமல் சொல்கிறது. உலகின் பெரும்பான்மையான பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பையும் அதன் உபரியையும் உறிஞ்சி எழுப்பப்பட்டவை, எழுதப்பட்டவை, வளர்க்கப்பட்டவை அனைத்தையும் கவிஞர் என்னென்னவோ செய்ய வேண்டும் என்கிறார்.

இந்நூலில் உள்ள கட்டுரைகளை உயிர் எழுத்தில் வெளியிட்ட அதன் ஆசிரியர் சுதீர் செந்திலை முதலில் பாராட்ட வேண்டும். பொது நல நோக்கத்துடன் குறிப்பாக வணிக நோக்கம் இல்லாமல் கடமை ஆற்றுவோர் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்ததுதான் ஆக வேண்டும்.

ஐம்பது - அறுபதுகளுக்கு முன்னர் தமிழ் வளர்ச்சிக்குப் பல நூல்களைப் பதிப்பித்தவர்கள் எழுதியவர்கள் வழக்குரைஞர்களாக இருந்தார்கள். பிறகு தமிழ்த் துறை சார்ந்தவர்களைவிடப் பிற துறை சார்ந்தவர்களின் பங்களிப்பைக் குறிப்பாகப் படைப்பிலக்கியங்களில் அதிகமாகக் காணலாம். இந்நூலின் பதிப்பாசிரியர் எஸ்.வி.ராஜதுரை மார்க்சியம் பெரியாரிம், அம்பேத்கரியம் தொடர்பாக நிறைய எழுதியுள்ளார். இந்த இயக்கங்களுக்குள்ளே உலகின் எல்லாப் பிரச்சினைகளையும் காணலாம். வங்கியில் பணிபுரிந்து ஓய்வுக்குப் பின்னும் ஓயாது பணிபுரியும் இந்நூலின் பதிப்பாசிரியர் எஸ்.வி.ராஜதுரை இன்னும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து பல நூல்களை எழுதிட வாழ்த்தி வணங்குவோம்.

மாமேதைகளாகவும் அறிஞர்களாகவும் போற்றப்படுபவர்களின் கோட்பாடுகள் உலகின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு ஆன கதைதான் ஐன்ஸ்டீன் அணுக்கோட்பாடு. டார்வினின் பரிணாமக் கோட்பாடு போன்று நோம்சோம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடு புரட்சிகரமானது. அதனால்தான் அவரைப் பற்றிய ஓர் அறிமுகம் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளது. மார்க்ஸ், சோம்ஸ்கி இருவரும் கணிதத்திலும் வல்லுநர்கள். அதனால்தான் சமுதாயப் பார்வையும் மொழிப் பார்வையும் ஒட்டுமொத்த உலகிற்கானவையாக உள்ளன.

காலம் அறிந்து இந்நூலை விரைந்து வெளியிட்ட நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மேலாண்மை இயக்குநர் கவிஞர் சண்முகம் சரணவன், மேலாளர்

எம். இரத்தினசபாபதி, திருமதி துர்க்காதேவி மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

கார்ல் மார்க்ஸ் 200
பதிப்பாசிரியர்: எஸ்.வி.ராஜதுரை
நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை.
ரூ.675/-

Pin It