VIII

தமது பயமுறுத்தல், பூச்சாண்டி எத்தகைய பலனையும் அளிக்க வில்லை என்பதை திரு. காந்தி கண்டார். மத்தியஸ்தம் செய்து ஒரு தீர்ப்பைத் தெரிவிக்குபடி கேட்டுக் கொள்ளும் வேண்டுகோளில் தாமும் கையெழுத்திட்டிருப்பதைப் பற்றி திரு. காந்தி கவலைப் படவில்லை. இவ்வேண்டுகோளில் கையொப்பமிட்டவர்களில் ஒருவர் என்ற முறையில் இத்தீர்ப்பை தாம் ஏற்றுக்கொள்ள கடமைப் பட்டிருப்பதை அவர் மறந்து விட்டார். பிரதமரது தீர்ப்பைச் சீர் குலைப்பதில் இறங்கினார். வகுப்புத் தீர்ப்பின் ஷரத்துக்களை மாற்றச் செய்வதற்கு முதலில் முயன்றார். இதன்படி பிரதமருக்குப் பின்கண்ட கடித்த்தை எழுதினார்:

எரவாடா மத்திய சிறைச்சாலை,

ஆகஸ்டு 18, 1932

அன்புள்ள நண்பர் அவர்களுக்கு,

Ambedkar Gandhi 600“தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் பிரச்சினை சம்பந்தமாக மார்ச் 11 ஆம் தேதி சர் சாமுவல் ஹோருக்கு நான் எழுதிய கடிதத்தை உங்களிடமும் அமைச்சரவையிடமும் அவர் காண்பித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அந்தக் கடிதத்தை இக்கடிதத்தின் ஒரு பகுதியாகப் பாவித்து, அதனுடன் சேர்த்து இதனைப் படிக்குமாறு வேண்டுகிறேன்.

“சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பது சம்பந்த மான பிரிட்டிஷ் முடிவைப் படித்தேன். சர் சாமுவல் ஹோருக்கு நான் ஏழுதிய கடிதத்தின் பிரகாரமும், வட்டமேசை மாநாட்டின் சிறு பான்மையினர் குழுவின் கூட்டம் செயிண்ட் ஜேம்ஸ் மாளிகையில் 1931 நவம்பர் 13 ஆம் தேதி நடை பெற்றபோது, நான் திட்டவட்ட மாக அறிவித்தபடியும் என் உயிரைப் பயணம் வைத்து உங்கள் முடிவை எதிர்க்க வேண்டியவனாக இருக்கிறேன். இதைச் செய் வதற்கு எனக்குள்ள ஒரே வழி சாகும்வரை உண்ணாவிரம் இருப்பதே ஆகும்.

உப்பு கலந்த அல்லது உப்பு இல்லாத தண்ணீரையும் சோடாவையும் தவிர உண்ணாவிரதத்தின் போது வேறு எந்த ஆகா ரத்தையும் உட்கொள்ள மாட்டேன். இதற்கு மத்தியில் பிரிட்டிஷ் அரசாங்கம் தானே முன்வந்தோ அல்லது பொதுமக்கள் கருத்தின் நிர்ப்பந்தத்தாலோ தனது முடிவை மாற்றிக் கொள்ளுமானால், தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்குத் தனித் தொகுதிகளை ஒதுக்கும் தனது திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமானால் என் உண்ணாவிரதத்தை நிறுத்திவிடுவேன். வழக்கமான தேர்தல் விதிகளின்படி அமைந்த பொதுத் தொகுதியிலிருந்து – அது எவ்வளவு விரிந்து பரந்ததாயினும் – தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்.

“அரசின் முடிவு மேலே தெரிவித்தபடி மாற்றப்படவில்லை யாயின் எனது உண்ணாவிரதம் அடுத்த செப்டம்பர் 20 ஆம் தேதி நண்பகலிலிருந்து தொடங்கும்.

“உங்களுக்குப் போதிய முன்னறிவிப்பு தரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தக் கடிதத்தின் வாசகத்தை உங்களுக்குத் தந்தி மூலம் தெரிவிக்கும்படி இங்குள்ள அதிகாரிகளைக் கேட்டுக் கொண் டிருக்கிறேன். எத்தகைய மிகத் தாமதமான மார்க்கத்திலும் கூட இந்தக் கடிதம் உங்களுக்கு உரிய சமயத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காக நிறைய அவகாசம் தந்திருக்கிறேன்.

”இந்தக் கடிதமும் நான் ஏற்கெனவே குறிப்பிட்ட சர். சாமுவல் ஹோருக்கு எழுதப்பட்ட என் கடிதமும் கூடிய விரையில் பிரசுரிக்கப் பட வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரையில், சிறை விதிகளை இம்மியும் பிசகாதபடி, மிகக் கண்டிப் பாகக் கடைப்பிடித்திருக்கிறேன். என் விருப்பத்தையோ அல்லது இவிவிரு கடிதங்களின் உள்ளடக்கத்தையோ என்னுடைய தோழர் களான சர்தார் வல்லபாய் பட்டேலையும் திரு. மகாதேவ தேசாயை யும் தவிர வேறு எவருக்கும் தெரிவிக்கவில்லை. எனினும் என் கடிதங்கள் குறித்துப் பொது மக்களின் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன். எனவே அவற்றை விரையில் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

”நான் மேற்கொண்டுள்ள முடிவுக்காக வருந்துகிறேன். சமய ஈடுபாடுபள்ள்வன் என்ற முறையில், மனச்சான்றினை மீறாப் பண்புடை யவன் என்ற வகையில், இதைத் தவிர எனக்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை. சர் சாமுவல் ஹோருக்கு நான் எழுதிய கடிதத்தில் குறிப் பிட்டிருந்தபடி, சங்கடமான நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு மன்னர் பிரான் அரசாங்கம் என்னை விடுதலை செய்ய முடிவு செய்தால் கூட என் உண்ணாவிரதம் நிற்காது; தொடர்ந்து நடைபெறும், ஏனென்றால் வேறு எந்த வழிகளிலும் உங்கள் முடிவை எதிர்த்து நிற்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை; கௌரவ மான முறையில் தவிர வேறு எந்த வழிகளிலும் என் விடுதலைக்குத் திட்ட மிடவும் நான் விரும்பவில்லை.

“ஒருக்கால் எனது கருத்து ஏறுமாறானதாக இருக்கலாம்; தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனித்தொகுதிகள் ஏற்படுத்துவது அவர்களுக்கும் இந்து சமயத்திற்கும் தீங்கானது என்ற என் கணிப்பு முற்றிலும் தவறானதாகவும் இருக்கலாம். இது உண்மையானால் என் வாழ்க்கைத் தத்துவத்தின் இதர அம்சங்களிலும் நான் தவறு இழைத்தவன் ஆகிறேன்; இக்சூழ் நிலையில் உண்ணாவிரதத்தில் எனக்கு நேரிடக்கூடிய மரணம் என் தவறுக்கெல்லாம் ஒரு பிராயச் சித்தமாக இருக்கும்; மேலும், என்னுடைய விவேகத்தில், அறிவு நுட்பத்தில் எண்ணற்ற ஆடவரும் பெண்டிரும் வேறுபாடின்றி குழந்தைகள்போல் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின், பாசத்தின், அன்பின் சுமையை இறக்கி விட்டதாகவும் இருக்கும். ஆனால், அதேசமயம் எனது நிர்ணயிப்புச் சரியாக இருக்கும் பட்சத் தில் – இதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை – நான் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் நடவடிக்கை நிச்சயம் வெற்றி பெறவே செய்யும்; வாழ்க்கைத் தத்துவத்தை நிறைவேற்ற கால் நூற்றாண்டுக்கும் மேலாக அயராது, சோராது நான் மேற்கொண்டு வந்துள்ள முயற்சி இதற்கு உறுதுணை புரியும்.

என்றும்,

 உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பன்,

 எம்.கே. காந்தி.

 இக்கடிதத்திற்குப் பிரதமர் பின்வருமாறு பதில் எழுதினார்:

10, டவுனிங் தெரு,

 செப்டம்பர் 8, 1932

“அன்புள்ள திரு. காந்தி அவர்களுக்கு,

”உங்கள் கடிதம் கண்டு மிகுந்த வியப்பும் வருத்தமும் அடைந் தேன். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்பந்தமாக மன்னர் பிரான் அர சாங்கம் எடுத்துள்ள முடிவு உண்மையில் எதைக் குறிக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளாமல் இக்கடிதத்தை நீங்கள் எழுதி யிருப்பதாகவே கருதுகிறேன். தாழ்த்தப்பட்ட வகுப்பினரை இந்து சமூகத்திலிருந்து நிரந்தரமாகப் பிரித்து வைப்பதை, தனிமைப்படுத்தி வைப்பதை நீங்கள் சற்றும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக எதிர்த்து வந்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறோம். வட்ட மேசை மாநாட்டின் சிறுபான்மையினர் குழுவில் உங்கள் நிலையை மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்; மார்ச் 11 ஆம் தேதி சர் சாமுஅல் ஹோருக்கு எழுதிய கடிதத்தில் இதனைத் திரும்பவும் வலியுறுத்தியிருக்கிறீர்கள். இந்து சமூகத்தில் மிகப் பெரும் பகுதியினர் உங்கள் கருத்தை ஆதரிக்கின்றனர் என்பதை யும் நாங்கள் அறிவோம். எனவே தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதி நிதித்துவப் பிரச்சினையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோது, இவற்றையும் மிகக் கவனமாகக் கருத்தில் கொண்டோம்.

”தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் அமைப்புகளிலிருந்து எங்க ளுக்கு எண்ணற்ற முறையீடுகள் வந்தன; அவர்கள் எத்தகைய கொடிய சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகி வேதனையும் வாதனையும் பட்டு வருகிறார்கள் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த உண்மை; இதனை நீங்களும் மிகப்பல சந்தர்ப்பங்களில் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, சட்ட மன்றங்களில் நியாயமான சத விகிதத்தில் பிரதிநிதித்துவம் பெறு வதற்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குள்ள உரிமைகளைப் பாது காப்பது எங்கள் கடமை என உணர்ந்தோம். அதேசமயம் தாழ்த்தப் பட்ட சமூகத்தினை இந்து சமுதாயத்திலிருந்து பிரிக்கக்கூடிய எதை யும் செய்து விடக்கூடாது என்பதிலும் மிகவும் கவனமாக இருந்தோம். சட்ட மன்றங்களில் இவர்கள் பிரதிநிதித்துவம் பெறுவதை எதிர்க்கவில்லை என்று நீங்களே உங்கள் மார்ச் 11 ஆம் தேதி கடிதத் தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

“அரசாங்கத் திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இந்து சமூகத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியினராகத் தொடர்ந்து நீடித்து வருவர்; இந்து வாக்காளர்களுடன் சேர்ந்து சரிசமத்துவ அடிப்படையில் வாக்களிப்பர்; ஆனால் அடுத்த முதல் இருபது ஆண்டுக் காலத்தில் அவர்கள் வாக்காளர்கள் ரீதியில் இந்து சமூகத் தின் ஒரு பகுதியினராகத் தொடர்ந்து நீடித்தவாறே சில குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள தனித் தொகுதிகளைப் பெறுவர்; இத்தொகுதி கள் அவர்களது உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கக் கூடிய சாதனங்களாக அமைந்திருக்கும்; தற்போதைய நிலைமை யில் இத்தகைய தனித் தொகுதிகளை உருவாக்குவது அவசியம் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்.

“இந்தத் தனித்தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ள பகுதி களில் தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள் பொது இந்துத் தொகுதிகளில் தங்களுக்கு இருக்கும் வாக்குரிமையை இழந்துவிட மாட்டார் கள்; அதற்குப் பதில் இந்து சமூகத்தில் அவர்கள் அங்கம் வகிப்பது பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்கு இரண்டு வாக்குகள் அளிக்கப்படும்.

“தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித்தொகுதி அமைத்து, எல்லாத் தாழ்த்தப்பட்ட இன வாக்குகளையும் பொதுத் தொகுதி களில் அல்லது இந்து தொகுதிகளில் சேர்க்கலாம் என்றும், இவ்வாறு செய்தால் உயர்ஜாதி வேட்பாளர்கள் தாழ்த்தப்பட்டோர் வாக்கு களையும் நாடிப்பெற வேண்டிவரும் என்றும், இதன்மூலம் இந்து சமுதாயத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் நீங்கள் தெரிவிக்கும் கருத்து எங்களுக்கு ஏற்புடையதல்ல.

மாகாணங்களில் தேர்தல்கள் நடைபெற்று அவற்றின் மூலம் சட்டமன்றங்களில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்று வோர்க்கு அதிகாரம் மாறி பொறுப்பாட்சி மலரும், அப்போது தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்ன? சாதி இந்துக்களால் பல நூற்றாண்டுக் காலமாக குரூரமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு வந்த வர்கள். இழிவுப்படுத்தப்பட்டு வந்தவர்கள், அலட்சியப்படுத்தப் பட்டு வந்தவர்கள் என்று சர் சாமுவல் ஹோருக்கு எழுதிய உங்கள் கடிதத்தில் நீங்களே தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பற்றிக் குறிப் பிட்டிருக்கிறீர்கள். பொருப்பாட்சியின் போது ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் இப்போதைய தாழ்த்தப்பட்ட மக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை அவர்கள் தாங்களே தேர்ந்தெடுத்து சட்டமன்றங்களுக்கு அனுப்புவது அவசியம் என்று நாங்கள் உணர்ந்தோம்.

அப்போதுதான் அவர்கள் தங்கள் மனக் குறைகளையும் லட்சியங்களையும் எடுத்துரைக்க முடியும், அவற்றை ஆதரித்துக் குரல் எழுப்ப முடியும், சட்டமன்றத்திற்கு வெளியே தங்களுக்கு எதிராக முடிவுகள் எடுப்பதைத் தடுக்க முடியும், தங்களது நிலையை அரசின் கவனத்துக்குக் கொண்டு வரமுடியும் – சுருக்கமாகக் கூறினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தாழ்த்தப்பட்ட மக்களே பேசும்படியான நிலையில் அவர்களை வைக்கமுடியும் என்று கருதி னோம். நியாய உணர்வு படைத்த எவருமே இதனை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

சில குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி அவற்றுக்கு விசேடப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை இன்றைய நிலைமைகளில் எந்த வாக்குரிமைத் திட்டத் தின் அடிப்படையிலும் காரியசாத்தியமானதென்று நாங்கள் கருதவில்லை; இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்துவார் கள் என்றோ, அவர்களுக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருப் பார்கள் என்றோ நாங்கள் நினைக்கவில்லை; ஏனென்றால், பெரும் பாலான சந்தர்ப்பங்களில் இத்தகைய உறுப்பினர்கள் பெரும்பான்மை யினரான மேல்சாதி இந்துக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

“எங்கள் திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மக்கள் பொது இந்துத் தொகுதியில் தங்களுக்குள்ள வழக்கமான தேர்தல் உரிமை களைப் பெறுவதோடு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள தனித் தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்படுவதன் காரணமாக ஆரம்ப காலத்தில் விசேட அனுகூலம் பெறுகிறார்கள். தனி வகுப்புவாத வாக்காளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் முஸ்லீமகள் போன்ற சிறுபான்மையினர் விஷயத்தில் கைக்கொள்ளப்படும் பிரதிநிதித்துவ முறையிலிருந்து இது கருத்தளவிலும் செயலளவிலும் முற்றிலும் மாறுபட்டதாகும். உதாரணமாக ஒரு முஸ்லீம் பொதுத்தொகுதி யில் வேட்பாளராக போட்டியிட முடியாது; வாக்களிக்கவும் முடியாது. ஆனால், அதே சமயம் தேர்தல் விதிகளின்படி தகுதி வாய்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் பொதுத் தொகுதியில் வாக்களிக்கவும் வேட்பாளராக நிற்கவும் முடியும்.

“முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்படும் பிரதேசவாரியான இடங் களின் எண்ணிக்கை மேற்கொண்டு அவர்கள் பிரதேச அளவில் இடங் களைப் பெறுவதை சாத்தியமற்றதாக்கும் முறையில் அமைக்கப்பட் டுள்ளது; ஏனென்றால் பெரும்பாலான மாகாணங்களில் தங்களது மக்கட்தொகை விகிதாசாரத்துக்கும் அதிகமாகவே அவர்கள் இடங் களைப் பெற்றிருக்கிறார்கள்; ஆனால் தாழ்த்தப்பட்ட இன மக்களின் விஷயம் அப்படியல்ல; அவர்களுக்கான தனித்தொகுதிகளிலிருந்து நிரப்பப்படும் விசேட இடங்களின் எண்ணிக்கை எவ்வாறு நிர்ண யிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட இனத்தோர் அனைவருக்கும் முழுப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் அவர்களது மக்கட் தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப அவர்களுக்கு இடங்களை ஒதுக்கும் அடிப்படையிலும் இந்த எண்ணிக்கை நிர்ணயிக்கப்படவில்லை.

அப்படியானால் வேறு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? முற்றிலும் தாழ்த்தப்பட்ட மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்காக வாதாடக் கூடிய, குரல் கொடுக்கக்கூடிய, அவர்களது எண்ணங்களை, ஆர்வ விருப்பங்களைப் பிரதிபலிக்கக் கூடிய, குறைந்தபட்ச எண்ணிக்கையுள்ள அவர்களது பிரதிநிதிகளைச் சட்டமன்றத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனேயே இந்த எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாழ்த்தப்பட்ட வகுப் பினருக்கான தனி இடங்கள் அவர்களது மக்கட் தொகை சதவிகிதத் திற்கு மிகவும் குறைவாகவே உள்ளன.

“சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் அதிதீவிர முடிவை நீங்கள் மேற்கொண்டிருக்கிறீர்கள். அது எதற்காக? தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இந்துக்களுடன் இணைந்து கூட்டுத் தொகுதிகளைப் பெறவேண்டும் என்பதற்காகவா? அப்படி இருக்க முடியும். ஏனென் றால் அதற்கு ஏற்கெனவே வழி செய்யப்பட்டிருக்கிறது. அல்லது இந்துக்களில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காகவா? அப்படியும் கூறமுடியாது. ஏனென்றால் அதற்கும் வகை செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதன் நோக்கம்தான் யாது? இன்று அவர்கள் சொல்லவொண்ணாத கொடுமைக்கு உள் ளாக்கப்பட்டிருக்கிறன்றனர்; எத்தனை எத்தனையோ வழிகளில் பயங் கரமாக இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய மக்கள், தங்கள் எதிர்காலத்தைப் பெருமளவுக்கு நிர்ணயிக்கக்கூடிய, தங்கள் கதிப் போக்கின் மீது மிகுந்த செல்வாக்குச் செலுத்தக்கூடிய, தங்களது குரலை எதிரொலிக்கக்கூடிய குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுத்து அனுப்புவதைத் தடுக்கும் ஒரே நோக்கத்துடனேயே நீங்கள் உண்ணா விரதத்தை மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கிறீர்கள். இவ்வாறுதான் உங்கள் போக்கை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

“எல்லாவற்றையும் கவனமாக ஆராய்ந்து நாங்கள் மிக நியாய மான இந்த யோசனைகளை முன்வைத்திருக்கும் பகைப் புலனில், நீங்கள் எடுத்துள்ள முடிவுக்கு என்ன காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை; உண்மை நிலையை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

“சிறுபான்மையினர் பிரச்சினையில் இந்தியர்கள் தங்களுக் குள்ளேயே ஓர் உடன்பாடு காணத் தவறிய பிறகு, அவர்களது வேண்டுகோளின் பேரில் அரசாங்கம் தனது சொந்த விருப்பத்துக்கு மாறாகவே இப்பிரச்சினை குறித்து ஒரு முடிவு எடுக்கும் பொறுப்பை ஏற்றது. இப்போது அத்தகைய முடிவை அது அறிவித்துள்ளது. ஏற் கெனவே திட்டவட்டமாக, தெளிவாக அது அறிவித்த நிபந்தனை களின் பேரில் அல்லாமல், இந்த முடிவை அரசு எவ்வகையிலும் மாற்றும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே, அரசின் முடிவு நீடிக்கும், அதில் எந்த மாற்றமும் இருக்காது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பல்வேறு சமுதாயத்தினரின் பலதரப்பட்ட முரண்பாடான கோரிக்கைகளையும் அவற்றின் தகுதி களையும் உள்ளார்ந்த முறையில் சீர்தூக்கிப் பார்த்தே அரசு இந்த ஏற்பாடுகளை வகுத்துத் தந்திருக்கிறது; இவற்றிற்குப் பதிலாக வேறு தேர்தல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமானால் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரின் உடன்பாட்டுடனேயே அதைச் செய்ய முடியும் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

“மார்ச் 11 ஆம் தேதி சர் சாமுவல் ஹோருக்கு நீங்கள் எழுதிய கடிதம் உட்பட இந்தக் கடிதப் போக்குவரத்து முழுவதையும் பிரசு ரிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். உபவாசம் மேற்கொள்ளு வதற்கு நீங்கள் எடுத்த முடிவுக்கான காரணத்தைப் பொதுமக்களுக் குத் தாங்கள் விளக்கிக்கூறும் வாய்ப்பினைத் தற்சமயம் தாங்கள் சிறை யில் இருக்கும் காரணத்தால் மறுப்பது நியாயமற்றது என்று எனக்குத் தோன்றுகிறது; எனவே மறுபரிசீலனை செய்து இந்த வேண்டு கோளை தாங்கள் மீண்டும் முன்வைத்தால் அதனை தடையின்றி ஏற்பேன். எனினும், அரசு இந்த முடிவை எடுத்ததற்கான உண்மை யான விவரங்களையும் சந்தர்ப்பங்களையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்குமாறும், நீங்கள் உத்தேசித்துள்ள நடவடிக்கையை மேற் கொள்வது உண்மையிலேயே நியாயமானதுதானா என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுமாறும் மீண்டும் வலியுறுத்து கிறேன்.

 தங்களது உள்ளார்ந்த,

ஜே. ராம்ஸே மக்டொனால்டு

பிரதமர் இறங்கி வர மாட்டார் என்பதைக் கண்ணுற்று திரு. காந்தி தாம் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதைப் பின்கண்ட கடிதத்தின் மூலம் உறுதிப்படுத்தினார்:

எரவாடா மத்திய சிறைச்சாலை,

 செப்டம்பர் 9, 1932

அன்பார்ந்த நண்பர் அவர்களுக்கு,

தாங்கள் மனம் விட்டு எழுதிய முழுக் கடிதத்தையும் தந்தி வாயிலாக இன்று கிடைக்கப்பெற்றேன். இதற்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் எனது உத்தேச நடவடிக்கைக்கு நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியாத வியாக்கியானத்தைத் தாங்கள் தந்திருப்பதற்கு வருந்துகிறேன். நான் எந்த சமூகத்தினருக்கு ஆதரவாக பேசுகிறேனோ, அந்த சமூகத்தினர் நலன்களைப் பலி யிடுவதற்கே சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க நான் விரும்பு வதாக என்மீது குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். இதுகுறித்து நான் எத் தகைய எதிர்வாதமும் செய்யப்போவதில்லை, நான் மேற்கொள்ள விருக்கும் தீவிர நடவடிக்கையே இத்தகைய சுயநலமிக்க வியாக்கி யானத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் சமயச் சார்புடைய பிரச்சினை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இரண்டு வாக்குகள் பெறுவதற்கு உரிமை பெறுவார்கள் என்று கூறியிருக்கிறீர்கள்.

ஆனால் இந்த உரிமை அவர்களையோ, பிளவுபடுவ திலிருந்து இந்து சமுதாயத்தையோ காப்பாற்றப் போவதில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனித்தொகுதிகளை உருவாக் கும் ஏற்பாட்டில் இந்து தர்மத்தைத் திட்டமிட்டு அழிப்பதற்கு விஷம் வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். இந்த ஏற்பாட்டால் மக்களுக்கு எத்தகைய நன்மையும் கிட்டாது. நீங்கள் தாழ்த்தப்பட்ட வர்கள்பால் என்னதான் பரிவிரக்கம் கொண்டவராக இருந்தாலும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜீவாதாரமான, சமய முக்கியத் துவம் வாய்ந்த இத்தகைய ஒரு விஷயத்தில் சரியான முடிவெடுக்க முடியாது.

“தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அளவுக்கு அதிகமாகப் பிரதி நிதித்துவம் கொடுப்பதைக் கூட நான் எதிர்க்கவில்லை. இந்துக்களாக நீடிப்பதற்கு அவர்கள் விரும்பும்வரை, ஒரு வரம்புக்குட்பட்ட அளவில் கூட சட்டரீதியாக இந்துமத அரவணைப்பிலிருந்து அவர்கள் பிரிக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறேன். உங்கள் முடிவு மாறாது என்றால், அந்த அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுகிறது என்றால் அதன் பொருள் என்ன? வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுத் தாழ்ந்து கிடக்கும், வீழ்ந்து கிடக்கும் தங்கள் சகோதரர்களைக் கைதூக்கி விடுவதற்கு, அவர்கள் உய்வும் உயர்வும் பெறுவதற்கு இந்து சமூக சீர்திருத்தச் செம்மல்கள் தங்களைத் தன்னலமற்று அர்ப்பணித்துக் கொண்டு எத்தனை எத்தனையோ அரும்பெரும் பணியாற்றி இருக்கிறார்கள். அந்த மகான்களின் இத்தகைய சீரிய சேவையின், அற்புதப் பணி யின் வளர்ச்சியை, முன்னேற்றத்தை உங்களது இந்த நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?

“எனவே, உங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட முடிவைச் செயல் படுத்தும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளேன்; இதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

“உங்கள் கடிதம் வேறொரு தப்பபிப்பிராயத்தையும் தோற்று விக்கக் கூடும் என்று கருதுவதால், அதையும் இங்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினையை உங்களது முடிவின் இதர பகுதிகளிலிருந்து பிரித்து அதற்கு நான் தனி முக்கியத் துவம் அளித்திருப்பதைக் கொண்டு உங்கள் முடிவின் இதர அம்சங் களை நான் ஏற்றுக்கொண்டு விட்டதாக எவ்வகையிலும் பொருள் கொள்ளலாகாது. உங்கள் தீர்ப்பின் இதர பல பகுதிகளும் கடும் ஆட் சேபத்துக்குரியவை என்பதே என் கருத்து. தாழ்த்தப்பட்ட வகுப் பினரின் பிரச்சினையில் என் மனச்சான்றின் தூண்டுதலின் பேரில் உயிர்த் தியாகம் செய்ய எடுத்துள்ள முடிவைப் போன்று இவற்றின் விஷயத்திலும் அத்தகைய முடிவை மேற்கொள்ள வேண்டிய அவ சியம் இல்லை என்றே கருதுகிறேன்.

 உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பன்,

 எம். கே. காந்தி.”

ஆகவே, தீண்டாதோருக்குத் தனித்தொகுதிகள் ஒதுக்கப்படு வதை ஆட்சேபித்துத் திட்டமிட்டபடி திரு. காந்தி தமது “சாகும்வரை உண்ணாவிரதத்தை” 1932 செப்டம்பர் 20 ஆம் நாளன்று தொடங்கினார். “காவியப் புகழ் பெற்ற உண்ணா நோன்பு” எனும் கண்ணையும் கருத்தையும் கவரும் தலைப்பு கொண்ட ஒரு தொகுதியில் திரு. பியாரிலால் இந்த உண்ணா விரதத்தை வருணித்திருக்கிறார். வெறி யும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மிகுந்த இந்த நாட்களில் இந்தியா வில் என்ன நடைபெற்றது என்பதை இந்த நூலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இங்கு இதுகுறித்து நான் மேற்கொண்டு ஏதும் கூறத் தேவையில்லை. திரு. காந்தி சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டாலும், அவர் இறக்க விரும்பவில்லை என்பதை மட்டும் இங்கு கூறினால் போதும், உயிரோடிருக்கவே அவர் பெரிதும் விரும்பினார்.

எனவே இந்த உண்ணாவிரதம் ஒரு பிரச்சினையைத் தோற்று வித்தது; திரு. காந்தியின் உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதே அந்தப் பிரச்சினை. அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி அவரது மனச்சான்றுக்கு ஊறுவிளைவிக்காத வகையில் வகுப்புத் தீர்ப்பை மாற்றுவதுதான். இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதமர் ஒரு விஷ யத்தை மிகவும் தெளிவுப்படுத்தினார்; அதாவது பிரிட்டிஷ் அமைச் சரவை தானாகவே முன்வந்து இந்தத் தீர்ப்பை திரும்பப் பெறவோ, மாற்றவோ செய்யாது; ஆனால் இதற்குப் பதிலாக சாதி இந்துக்களும் தாழ்த்தப்பட்டோர்களும் இசைந்து, இணங்கி முன்வைக்கும் திட்டத்தை அது தட்டாது ஏற்கும் என்று அறிவித்தார்.

வட்டமேசை மாநாட்டில், தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக நான் பங்கேற்ற தால் எனது ஆதரவை பெறாத எந்த மாற்றுத் திட்டத்தையும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பது தெள்ளத் தெளி வாயிற்று. அச்சமயம் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களது பிரதிநிதி என்ற எனது தகுதி குறித்து எத்தகைய ஐயப்பாடும் எழுப்பப் படாததோடு, இது எதார்த்த உண்மை என்பதும் ஒப்புக்கொள்ளப் பட்டது. எனவே, இயல்பாகவே இந்திய மக்கள் அனைவரின் பார்வையும் என்மீதே பதிந்திருந்தது. திரு. காந்தியே கூறியது போல் அவரது உயிர் என் கையில்தான் இருந்தது.

இத்தகைய மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு, இரு தலைக் கொள்ளி எறும்பு போன்ற நிலைக்கு என்னைப் போன்று வேறு எவருமே ஆளாகியிருக்க மாட்டார்கள் என்று கூறினால், அது மிகை யல்ல. அது பெரிதும் திகைப்பூட்டும், திணறவைக்கும், குழப்ப மூட்டும் நிலைமை. என் முன்னால் இரண்டு வெவ்வேறான பணி கள், கடமை சார்ந்த பிரச்சினைகள் இருந்தன. மனிதத் தன்மை யுடன், மனிதப் பண்புடன் மரணத்திலிருந்து காந்தியைக் காப்பாற் றும் கடமை ஒருபுறம், பிரதமர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க முன்வந்துள்ள அரசியல் உரிமைகளை அவர்களுக்குக் காப்பாற்றித் தரும் கடமை மற்றொருபுறம். இந்நிலைமையில் மனித நேயத் தின், மனிதா பிமானத்தின் கட்டளையை, அறைகூவலை ஏற்க முன்வந்தேன். திரு. காந்தி மனநிறைவை அடையும் வகையில் வகுப்புத் தீர்ப்பு மாற்றப்படுவதற்கு இணங்கினேன். இவ்வாறு உருவான உடன்பாடே புனா ஒப்பந்தம் எனப்படுவது.

புனா ஒப்பந்தம்

இந்தப் புனா ஒப்பந்தத்தின் வாசகம், விதிமுறைகள் வருமாறு:

1) பொதுத் தொகுதியிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கப்படும். இந்த இடங் கள் மாகாண சட்டமன்றங்களில் பின்வருமாறு அமைந்திருக்கும்: சென்னை 30, சிந்துவுடன் கூடிய பம்பாய் 15, பஞ்சாப் 8. பீகாரும் ஒரிசாவும் 18, மத்திய மாகாணங்கள் 20, அசாம் 7, வங் காளம் 30, ஐக்கிய மாகாணங்கள் 20, மொத்தம் 148 (பீகாருக்கும் ஓரிசாவுக்குமான இடங்களை முறைப்படுத்தி இந்த 148 இடங்கள் 152 இடங்களாகப் பிறகு உயர்த்தப்பட்டன). பிரதமரின் முடிவில் அறிவிக்கப்பட்ட மாகாண சட்டமன்றங் களின் மூலம் மொத்த பலத்தின் அடிப்படையில் அமைந்ததே இந்த எண்ணிக்கை.

2) இந்த இடங்களுக்கான தேர்தல் கூட்டு வாக்காளர் தொகுதிகள் மூலம் நடைபெறும். இதில் பின்கண்ட நடைமுறை பின்பற்றப்படும். ஒரு தொகுதியின் பொதுவாக்காளர் பட்டியலில் பதிவு செய்துகொண்ட தாழ்த்தப்பட்ட இன உறுப்பினர்கள் அனை வரும் ஒரு வாக்காளர் குழுமமாக அமைவார்கள். இவர்கள் ஒவ் வொருவருக்கும் ஒரு வாக்கு இருக்கும்; இத்தகைய தனித்தொகுதி ஒவ்வொன்றுக்கும் நான்கு பேர் அடங்கிய ஒரு பட்டியலை இந்த வாக்காளர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுப்பார்கள்; இவ்வாறு நடைபெறும் பூர்வாங்கத் தேர்தலில் மிக அதிக வாக்குகள் பெற்ற நான்குபேர் பொதுவாக்காளர் பட்டியலைக் கொண்டு நடைபெறும் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பார்கள்.

3) மத்திய சட்டமன்றத்துக்குத் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மேலே 2ஆவது விதியில் கூறப்பட்டிருக்கும் அதே நடைமுறையே பின்பற்றப்படும்; கூட்டு வாக்காளர் கோட்பாடும் பூர்வாங்கத் தேர்தல் முறையும் கடைப் பிடிக்கப்படும்.

4 )மத்திய சட்டமன்றத்தில் பிரிட்டிஷ் இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட பொதுத் தொகுதிகளில் 18 சதவீத இடங்கள் மேற் கண்ட சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுக் காக ஒதுக்கப்படும்.

5) இதுவரை கூறப்பட்டு வந்துள்ளபடி, மத்திய, மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் நிற்கும் தாழ்த்தப்பட்ட இன மக்களின் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்யும் பூர்வாங்க தேர்தல் முறையை கீழே உள்ள 6 ஆவது விதியின் பிரகாரம் பரஸ்பர உடன்பாட்டின் பேரில் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்ய லாம்; அவ்வாறு செய்யாத பட்சத்தில் இந்தத் தேர்தல் முறை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வரும்.

6) விதி 1 மற்றும் 4ல் கண்டுள்ளபடி மாகாண சட்ட மன்றங்களிலும் மத்திய சட்டமன்றத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறையானது இந்த ஒப்பந்தத்தில் சம்பந் தப்பட்ட சமூகங்களுக்கிடையே பரஸ்பர உடன்பாட்டின் மூலம் தீர்மானிக்கப்படும் வரை தொடர்ந்து நீடிக்கும்.

7) மத்திய, மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வாக்களிப்பதற்கான தகுதி லோதியன் குழுவின் அறிக்கையின் சுட்டிக்காட்டியபடி அமையும்.

8) ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவராக இருக்கும் காரணத்துக்காக எந்த ஊராட்சித் தேர்தல்களிலும் வாக்களிக்கவோ, வேட்பாளராகப் போட்டியிடவோ அல்லது எந்த அரசு உத்தியோகங் களிலும் நியமிக்கப்படவோ எத்தகைய தடையும் இருக்காது.

அரசு உத்தியோகங்களில் நியமனம் செய்யப்படுவதற்குத் தேவையான கல்வித் தகுதிகள் இருக்கமானால் இத்தகைய நிய மனங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் பெற்றுத் தருவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

9) ஒவ்வொரு மாகாணத்திலும் தாழ்த்தப்பட்ட இனத்தவர் களுக்குக் கல்வி வசதிகள் செய்து தரக் கல்வி மானியத்திலிருந்து கணிசமான தொகை ஒதுக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் விதிகளை, திரு. காந்தி ஏற்றுக் கொண் டார். அரசும் இதனை இந்திய அரசாங்கச் சட்டத்தில் இணைத்து தனது ஒப்புதலை அளித்தது.

புனா ஒப்பந்தம் பலதரப்பட்ட பிரதிபலிப்புகளை உண்டு பண்ணிற்று. தீண்டப்படாதவர்கள் வருத்தமும் சோர்வும் அடைந் தனர். இதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. எனினும் இதனை ஏற்றுக் கொள்ளதவர்களும் இருந்தனர். பிரதமர் தமது வகுப்புத் தீர்ப் பில் அளித்ததைவிட புனா ஒப்பந்தம் தீண்டப்படாதவர்களுக்கு அதிகமான இடங்களை வழங்கியுள்ளது என்று அவர்கள் சுட்டிக் காட்டினர். வகுப்புத் தீர்ப்பு தீண்டப்படாத மக்களுக்கு 78 இடங் களை மட்டுமே வழங்கியிருக்கும்போது, புனா ஒப்பந்தம் அவர் களுக்கு 148 இடங்களை அளித்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் இதை வைத்து வகுப்புத் தீர்ப்பு வழங்கியதைக் காட்டிலும் புனா ஒப்பந்தம் அவர்களுக்கு அதிகமாக வழங்கியுள்ளது என்ற முடிவுக்கு வருவது வகுப்புத் தீர்ப்பு உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன அளித்துள்ளது என்பதை உதாசீனம் செய்வதாகவே இருக்கும்.

வகுப்புத் தீர்ப்பு தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு இரண்டு அனுகூலங்களைக் கிடைக்கச் செய்துள்ளது; (1) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அது சில குறிப்பிட்ட இடங்களை ஒதுக்குகிறது; இவற் றிற்கு தனி வாக்காளர் பட்டியல் மூலமே தேர்தல் நடைபெறும்; தாழ்த்தப்பட்டா இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இடங்களை நிரப்ப முடியும். (2) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரண்டு வாக்குச் சீட்டுகள் அளிக்கப் படுகின்றன; அவற்றில் ஒன்றை தனித் தொகுதியிலும் மற்றொன்றைப் பொதுத் தொகுதியிலும் அவர்கள் பயன்படுத்தலாம்.

ஆனால் புனா ஒப்பந்தம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடங் களின் எண்ணிக்கையை அதிகரித்த அதேசமயம் இரட்டை வாக் குரிமையைப் பறித்துவிட்டது. இடங்கள் அதிகரிப்பு இரட்டை வாக் குரிமை இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. வகுப்புத் தீர்ப்பு வழங்கிய இரண்டாவது வாக்கு விலைமதிப்பற்ற தனிச் சலுகை யாகும். ஓர் அரசியல் ஆயுதம் என்ற முறையில் அதன் மதிப்பு கணக்கிடற்கரியது. ஒவ்வோரு தொகுதியிலும் தாழ்த்தப்பட்ட இனத்தவரின் வாக்குரிமை பலம் பத்துக்கு ஒன்றாக இருக்கிறது.

சாதி இந்து வேட்பாளர்களது தேர்தலில் பயன்படுத்தக்கூடிய இந்த வாக்குரிமைப் பலத்தைக் கொண்டு பொதுத் தேர்தலின் போக்கை ஆட்டிப்படைக்கக் கூடியவர்களாக அல்லாவிட்டாலும் அதனை நிர்ணயிக்கக்கூடிய நிலையிலாவது இருப்பார்கள். ஒரு சாதி இந்து வேட்பாளர் தாழ்த்தப்பட்ட மக்களது வாக்குகளைச் சார்ந்திருக்கும்படிச் செய்யப்பட்டால் அந்த வேட்பாளர் தனது தொகுதியில் தாழ்த்தப்பட்ட இனத்தோரை உதாசீனம் செய்யவோ அல்லது அவர்களது நலன்களுக்கு எதிராக செயல்படவோ துணிய மாட்டார். ஆனால் இன்று அவர்களது நிலை என்ன? வகுப்புத் தீர்ப்பு வழங்கியதைவிட அவர்களுக்கு ஒரு சில இடங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன.

ஆனால் அதேசமயம் ஏனைய உறுப்பினர்கள் தாழ்த்தப்பட்ட உறுப்பினர்களிடம் பகை உணர் வோடு நடந்து கொள்ளாவிட்டாலும் நிச்சயம் அலட்சிய உணர் வொடு நடந்து கொள்வார்கள். இரட்டை வாக்குரிமையுடன் கூடிய வகுப்புத் தீர்ப்பு நீடித்திருக்குமானால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரு சில இடங்கள் குறைவாகக் கிடைப்பினும் இதர உறுப்பினர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பிரதிநிதிகள் போலவே நடந்து கொள்வார்கள். எனவே, தாழ்த்தப்பட்ட இனத்தோருக்கான இடங்கள் அதிகரிப்பு உண்மையில் அதிகரிப்பே ஆகாது; தனி வாக்காளர் தொகுதி, இரட்டை வாக்குரிமை ஆகியவற்றின் இழப்பு இதனை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது.

இந்துக்கள் புனா ஒப்பந்தத்தைத் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடவில்லை; ஏனென்றால் அதை அவர்கள் விரும்பவில்லை. எனினும், திரு. காந்தியின் உயிரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு, ஆதங்கம் அவர்களிடம் மேலோங்கி இருந்தது. ஆதலால் ஒப்பந்தத் தின் ஷரத்துகள் அவர்களுக்கு திட்டவட்டமாக, நிச்சயமாகப் பிடிக்க வில்லை என்றாலும் அந்த ஒப்பந்தத்தை நிராகரிக்கும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை. இவ்வாறு, இந்துக்களால் வெறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பாத புனா ஒப்பந்தத்தை இரு தரப் பினரும் அங்கீகரித்தனர்; இதன்பேரில் அது இந்திய அரசாங்கச் சட்டத்தில் இடம் பெற்றது.

 IX

புனா ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து ஹேம்மாண்ட் குழு நியமிக்கப்பட்டது; தொகுதிகளின் எல்லைகளை வரையறுப் பதும், ஒவ்வொரு தொகுதிக்கும் எத்தனை இடங்கள் என்பதை நிர்ணயிப்பதும், புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப் படும் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் எத்தகைய வாக்களிப்பு முறையைக் கடைப்பிடிப்பது என்பதைத் தீர்மானிப்பதும் இக் குழுவின் பணியாகும்.

ஹேம்மண்ட் குழு தனது பணிகளை ஆற்றும்போது புனா ஒப்பந்தத்தின் ஷரத்துக்களையும், தீண்டப்படாதவர்களின் தேவை களை நிறைவேற்றும் பொருட்டு ஒப்புக்கொள்ளப்பட்ட விசேட தேர்தல் ஏற்பாட்டையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டி யிருந்தது. புனா ஒப்பந்தம் அவசர அவசரமாக செய்து கொள்ளப் பட்டதால் துரதிஷ்டவசமாக பல விஷயங்கள் சரிநுட்பமாக, துல் லியமாக, திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்படாமல் விடப்பட்டு விட்டன. இவ்வாறு சரிவர வரையறுக்கப்படாமல் விடப்பட்ட வற்றில் பின்வரும் இரண்டு விஷயங்களை மிக முக்கியமானவை யாகக் குறிப்பிட வேண்டும்.

(1) பூர்வாங்கத் தேர்தலில் ‘நான்கு பேர்’ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட் டிருக்கிறது; அப்படியானால் அதிகப்பட்சம் நான்கு பேர் தேர்ந் தெடுக்கப்பட வேண்டுமா, அல்லது குறைந்தபட்சம் நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா?

(2) இறுதி வாக்கெடுப்பில் எத் தகைய வாக்குரிமை முறையைக் கைக்கொள்ள வேண்டும்? ஒப்பந் தத்தில் காண்ப்படும் ‘நான்கு பேர்’ என்பது குறைந்தபட்சம் நான்கு பேர் போட்டியிட வேண்டும் என்பதையே குறிக்கிறது எனச் சாதி இந்துக் கள் சார்பில் வாதிடப்பட்டது. அவ்வாறு நான்கு பேர் போட்டியிட முன்வராவிட்டால் பூர்வாங்கத் தேர்தல் இருக்காது; இதனால் தனி இடத்துக்குத் தேர்தல் நடை பெறாமல் அந்த இடம் காலியாகவே இருக்கும்; தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவம் பெறமால் போக வேண்டியதுதான் என்றும் சாதி இந்துக்கள் குதர்க்கவாதம் செய்தனர், தகராறுக்குரிய பிரச்சினையில் என் கருத்தைத் தெரிவிக்கும்படிக் கேட்கப்பட்டேன்.

நான்கு என்பது அதிகப்பட்சம் நான்கு பேர் என் பதையே குறிக்கும் என்று கூறினேன். புனா ஒப்பந்தத்தில் காணப்படும் நான்கு என்பதற்கு “நான்கு பேருக்கு அதிகப்படாமல்” என்று பொருள் கொள்ள வேண்டுமேயன்றி, ‘நான்கு பேருக்குக் குறையாமால்’ என்று பொருள் கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தேன். வாக்களிப்புப் பிரச்சினையைப் பொறுத்தவரை கட்டாய பகிர்ந்தளிப்பு வாக் களிப்பு முறையே மிகவும் உகந்த முறை என்று இந்துக்கள் வாதிட் டனர். ஆனால் குவிப்பு முறை வாக்களிப்பே தேர்தலில் வாக்களிப் பதற்கு மிகச் சிறந்த, உசிதமான முறை என்று நான் வலியுறுத்திக் கூறினேன்.

ஹேம்மண்ட் குழு நான் முன்வைத்த கருத்துகளை ஏற்றுக் கொண்டு இந்துக்கள் தெரிவித்த கருத்துகளை நிராகரித்தது; இது தீண்டப்படாதவர்களின் அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். இந்துக் கள் ஏன் இவ்விதம் விதண்டாவாதம் செய்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது சுவையாக இருக்கும். ஹேம்மண்ட் குழுவின் முன் சாதி இந்துக்கள் ஏன் இத்தகைய கருத்துகளை முன்வைத்தார்கள் என் பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் மேற்கொண்ட இந்த நிலைக்கு ஏதேனும் குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறதா? ஒரு பூர்வாங்கத் தேர்தல் செல்லுபடியாகக் கூடியதாக இருக்க வேண்டு மானால், அந்தத் தேர்தலுக்கான பட்டியலில் குறைந்த பட்சம் நான்கு பேர் இடம் பெற வேண்டும்; அதற்குக் குறைவாகக் கூடாது என்று இந்துக்கள் ஏன் வலியுறுத்தினார்கள் என்றால், அப்போதுதான் தங்க ளுடன் பெரிதும் ஒத்துப்போகிற, இணங்கிப் போகிற, தங்களது கைக் கருவியாக இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட பிரதிநிதி ஒருவரை இறுதி வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டச் செய்ய முடியும் என அவர்கள் கருதியதேயாகும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இத்தகைய ஒரு தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர் இறுதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் பூர்வாங்கத் தேர்தல் பட்டியலில் அவர் முதல் இடம் பெறவேண்டும், பட்டியல் பெரிதாக இருந்தால் தான் அவர் அதில் இடம்பெற முடியும், முற்றிலும் தாழ்த்தப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட தனி வாக்காளர்களைக் கொண்டே இந்தப் பூர்வாங்கப் பட்டியலுக்கான தேர்தல் நடைபெறுவதால், பட்டியலில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே இருந்தால் அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் மிகவும் உருக்கு உறுதிபடைத்த பிரதிநிதியாக, மலைகுலைந்தாலும் நிலை குலையாதவராக, எதற்கும் விட்டுக் கொடுக்காதவராக இருப்பார்; இந்துக்களின் கண்ணோட்டத்தில் இப்படிப்பட்டவர் மிகவும் மோசமானவர் ஆவார்.

பட்டியலில் இரண்டு பேர் இருந்தால் இரண்டாவது நபர் முதல் நபரை விட உறுதி குறைந்தவராக இருப்பார்; எனவே இப்படிப்பட்டவர் இந்துக்களின் பார்வையில் நல்லவராகக் கருதப்படுவார். பட்டிய லில் மூன்று பேர் இருந்தால், மூன்றாவது நபர் இரண்டாவது நபரை விடப் பற்றுறுதி குன்றியவராக இருப்பார்; அதனால் இந்துக்களின் நோக்கில் அவர் மேம்பட்டவராக எண்ணப்படுவார்; ஆக, நான்கு பேர் கொண்ட பட்டியல் இருப்பது இந்துக்களிடம் மிகவும் இணக்க மான, பெரிதும் விட்டுக் கொடுக்கக் கூடிய போக்கினைக் கடைப் பிடிக்கக் கூடிய தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதியை பட்டியலில் இடம் பெறச் செய்யும் மிகச் சிறந்த வாய்ப்பை இந்துக்களுக்கு வழங்கு கிறது. எனவேதான் பட்டியல் குறைந்தபட்சம் நான்கு பேரைக் கொண்டாதாக இருக்கும் வேண்டும் என்று ஹேம்மண்ட் குழுவிடம் அவர்கள் உடும்புக் பிடிவாதமாக வலியுறுத்தினார்.

இதேபோல், கட்டாயப் பகிர்ந்தளிப்பு வாக்களிக்கும் முறையை இந்துக்கள் வலியுறுத்துவதன் நோக்கம் தாழ்த்தப் பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை இந்துக்கள் கைப்பற்றிக் கொள்வதே ஆகும். மொத்தம் எத்தனை இடங்கள் இருக்கின்றனவோ அத்தனை வாக்குகள் குவிப்பு முறை வாக்களிப்பு ஏற்பாட்டில் வாக்காளருக்கு இருக்கும்; அந்த வாக்குகள் அனைத்தையும் அவர் ஒரே வேட்பாள ருக்கு அளிக்கலாம் அல்லது தம் விருப்பம்போல் இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கலாம். பகிர்ந்தளிப்பு வாக்களிக்கும் முறையிலும் எத்தனை இடங்கள் உள்ளனவோ அத்தனை வாக்குகள் வாக்காளருக்கு இருக்கும்; ஆனால் அவர் யாரே னும் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கை மட்டுமே அளிக்க முடியும். இந்த இரண்டு முறைகளும் வேறுபட்டவையாகத் தோன்றினாலும் நடைமுறையில் வேறுபாடு ஏதும் இல்லை. ஏனென்றால் குவிப்பு முறை வாக்களிப்பில் கூட ஒரு வேட்பாளர் தனது வாக்குகளைப் பகிர்ந்தளிப்பது தடை செய்யப்படவில்லை. அவர் ஒரு வேட்பாள ருக்கு ஒரு வாக்கு வீதம் அளிக்கலாம்.

ஆனால் இந்துக்கள் தங்களுக்குக் கிட்டக்கூடிய வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. கூட்டு வாக் காளர் தொகுதியில் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தனி இடத்துக்குத் தங்கள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவாக தங்களது உபரி வாக்குகளைக் கொண்டு போய் குவிப்பது அவர்களது பிரதான நோக்கம். தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளையும் விஞ்சி சென்று, அவர்கள் தங்களுடைய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்காதபடி தடுப்பதே அவர்களது குறிக் கோள். சாதி இந்து வாக்காளர்களின் உபரி வாக்குகள் சாதி இந்து வேட்பாளரிடமிருந்து தாழ்த்தப்பட்ட வேட்பாளருக்குத் திசை மாற்றப்பட்டாலொழிய இவ்வாறு செய்வது சாத்தியமில்லை. குவிப்பு முறை வாக்களிப்பு ஏற்பாட்டில் விடவும் பங்களிப்பு முறை வாக் களிப்பு ஏற்பாட்டில் இந்த உபரி வாக்குகளை திசை மாற்றுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. முதலில் குறிப்பிட்ட வாக்களிப்பு முறையில் சாதி இந்து வேட்பாளர் சாதி இந்து வேட்பாளருக்கு ஒரு வாக்கை மட்டும் தான் அளிக்க முடியும். சாதி இந்து வேட்பாளருக்குப் பயன்படுத்தப்படாத மற்ற வாக்கை பொதுவாக தாழ்த்தப்பட்ட வேட்பாளருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

பகிர்ந்தளிப்பு முறையில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கான தேர்தலில் வாக்குகளைக் கொண்டுபோய் குவிப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால்தான் குவிப்பு முறையை விடவும் இந்த முறையை இந்துக்கள் விரும்பினர். எனினும் அவர்களது கண் ணோட்டத்தில் பகிர்ந்தளிப்பு முறைகூட குறைபாடுகளற்றதல்ல. பகிர்ந்தளிப்பு முறையின்படி ஒரு வாக்காளர் தனது அனைத்து வாக்கு களையும் பயன்படுத்த வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை. அவர் ஒரு வாக்கை சாதி இந்து வேட்பாளருக்கு அளித்துவிட்டு மற்ற வாக்குகளைப் பயன்படுத்தாதிருக்கலாம். இவ்வாறு நிகழுமானால் தங்களது தாழ்த்தப்பட்ட இனப் பிரதிநிதியை வெற்றிபெறச் செய்யும் அவர்களது நோக்கம் தோல்வியடையும். எனவே, தாங்கள் வைத்த குறி தவறாதிருக்க அவர்க்ள் விரும்பினர்; பகிர்ந்தளிப்பு வாக்களிப்பு முறை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத் தினர்; அப்போதுதான் ஓர் இந்து வேட்பாளர் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்துக்களால் நியமிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இன வேட்பாளருக்கு வாக்களிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி யில்லாது போகும்; இதனால் இந்துக்களால் நியமிக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட இன வேட்பாளர் சர்வ நிச்சயமாக வெற்றி பெற முடியும்.

இவற்றை எல்லாம் கொண்டு பார்க்கும்போது, புனா ஒப்பந்தம் என்பது தீண்டப்படாதவர்களுக்குக் கொடுக்கப்பட்ட முதல் அடி என்பதும், இந்த ஒப்பந்தத்தை விரும்பாத இந்துக்கள் அவர்களுக்கு மேலும் பல அடிகளைத் தருவதில் முனைந்து ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாகும். ஹேம்மண்ட் குழுவின் முன்னர் சாதி இந்துக்கள் எழுப்பிய இரண்டு ஆட்சேபங்களும் எதைக் காட்டு கின்றன? இவை இந்துக்கள் தீட்டிய மிக ஆழமான சதியின் ஒரு பகுதியே என்பதைக் காட்டுகின்றன. புனா ஒப்பந்தத்தை நிராகரிக்க முடியாததால், அந்த ஒப்பந்தம் தீண்டப்படாதவர்களுக்கு எத்தகைய நன்மையும் செய்துவிடாதபடிப் பார்த்துக் கொள்வதே இந்த சதியின் நோக்க மாகும். தீண்டப்படாதவர்களின் அரசியல் உரிமைகள் விஷ யத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட விபரீதமான, ஆபத்தான போக்கின் கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. இக்கதையின் பின் பகுதி முன் பகுதியை விடவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 X

ஆகவே, அந்தக் கதையைத் தொடர்வோம். இதன் அடுத்த பகுதி 1935 ஆம் வருட இந்திய அரசாங்க சட்டத்தின்படி மாகாண சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல் சம்பந்தப்பட்டது. இதுதான் காங்கிரஸ் சந்திக்கும் முதல் தேர்தலாகும். இந்தத் தேர்தலில்தான். தீண்டப்படாதோர் தங்கள் சொந்தப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக் கும் உரிமையை முதல் தடவையாகப் பெற்றனர். புனா ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் திவான் பகதூர் எம்.சி. ராஜா போன்ற சில தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் காங்கிரசை ஆதரித்து நின்றனர். தீண்டப் படாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு நடைபெறும் தேர்தல்களில் காங்கிரஸ் தகாத நிலையில் தலையிட்டுக் குட்டையை குழப்பாது என்றே இவர்கள் நம்பினர். ஆனால் இந்த நம்பிக்கை தகர்ந்து தரைமட்டமாயிற்று.

தாழ்த்தப்பட்ட டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான தேர்தலில் இரண்டு காரணங்களுக்காக காங்கிரஸ் மிகுந்த ஆர்வம் காட்டியது. முதலாவதாக, ஆட்சி அமைப்பதற்கு அவசியமான பெரும் பான்மையை எப்படியும் பெற்றே தீருவது என்று அது உறுதி பூண்டிருந்தது. இரண்டாவதாக, காங்கிரஸ்தான் தீண்டப் படாதவர்களின் உண்மையான பிரதிநிதி, அவர்கள் காங்கிரசிடம் தான் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்ற திரு. காந்தியின் கூற்றை அது மெய்ப்பிக்க வேண்டியதாக இருந்தது.

எனவே, தாழ்த்தப்பட்ட இனப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் எத்தகைய பழிபாவத்துக்கும் அஞ்சாமல், மிகத் துணிச்சலோடு, மிக வலிமையோடு பங்கு கொள்ள காங்கிரஸ் எவ்விதத்திலும் தயங்க வில்லை; காங்கிரஸ் வேலைத் திட்டத்தை ஏற்க சம்மதிக்கும் தீண்டப் படாத இன வேட்பாளர்களை தாழ்த்தப்பட்ட இன மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு காங்கிரஸ் சார்பில் நிறுத்த அது தீர்மானித்தது. காங்கிரசின் பண பலம் இதற்கு மிகவும் அனுசரணையாக இருந்தது.

1935 ஆம் வருட இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி தீண்டப் படாதவர்களுக்கு மொத்தம் 151 இடங்கள் ஒதுக்கப்பட்டன (இது முதலில் 148 இடங்களாக இருந்தது. பீகாருக்கும் ஒரிசாவுக்குமான இட ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்ததால் இந்த எண்ணிக்கை பின்னர் 151 ஆக உயர்த்தப்பட்டது). காங் கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றனர் என்பதைப் பின்வரும் அட்ட வணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அட்டவணை 5

மாகாணங்கள்

தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்கள்

 

காங்கிரஸ் காப்பற்றிய மொத்த இடங்கள்

ஐக்கிய மாகாணங்கள்....

20

16

சென்னை .. .. ... .... ....

30

26

வங்காளம் ... ... ... ... .......

30

6

மத்திய மாகாணங்கள்........

20

7

பம்பாய் .... .... .... .... .... .... ...

15

4

பீகார் ... ..... ..... ...... ..... ..... ....

15

11

பஞ்சாப் .... .... .... ..... ..... ......

8

இல்லை

அசாம் ... .... ..... ..... .... .... ...

7

4

ஒரிசா .... ... ... ... ......... ..... .... 6

4

மொத்தம்

151

78

தீண்டப்படாதவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் சுமார் ஐம்பத்தொரு சதவிகித இடங்களைத்தான் காங்கிரஸ் கைப்பற்றி யிருக்கிறது என்பதையே இந்த அட்டவணை காட்டுகிறது. காங்கிரஸ் 78 இடங்களைக் கைப்பற்றிய போதிலும் உண்மை யில் 73 இடங்களைத்தான் தீண்டப்படாதவர்களின் மெய்யான, சுதந் திரமான பிரதிநிதிகள் நிரப்பினர் என்றே கூறவேண்டும். பிரதமரின் வகுப்புத் தீர்ப்பின் கீழ்விட புனா ஒப்பந்தத்தின் கீழ்தான் தீண்டப் படாதவர்கள் மிக மோசமான நிலைமையில் இருந்தனர். உண்மை யான பிரதிநிதித்துவம் என்ற பொருளில் எடுத்துக்கொண்டால் பிரதமர் அளிதத்தை விட குறைவாகவே தீண்டப்படாதவர்கள் பெற்றனர் என்று கூற வேண்டும். ஆனால் அதேசமயம் புனா ஒப்பந்தத்தில் காங்கிரஸ் மிகுந்த ஆதாயம் அடைந்தது. புனா ஒப்பந்தப்படி காங்கிரஸ் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 151 இடங்களை வழங்கினாலும் அவற்றில் 78 இடங்களைக் கைப்பற்றி தனது அரசியல் பேரத்தில் நல்ல ஆதாயத்தைப் பெற்றது.

1937 ஆம் ஆண்டுத் தேர்தலில் தீண்டப்படாத மக்களுக்கு காங்கிரஸ் இழைத்த தீமைகள் இவ்வளவுதான் என்று நினைத்து விடா தீர்கள். தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரஸ் தந்த மற்றொரு பலத்த அடியையும் இங்கு குறிப்பிட வேண்டும். நிர்வாகத்தில் அவர்களுக்கு எத்தகைய பங்கும் அளிக்காததுதான் அந்தக் கடுமையான அடி யாகும்; அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையிலும் கொடுமையாகும். சட்டமன்றங்களில் பிரதிநிதித்துவம் பெறும் உரிமை தீண்டப் படாதவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, அமைச் சரவையில் இடம் பெறும் உரிமையும் அவர்களுக்கு இருக்க வேண் டும் என்று வட்டமேசை மாநாட்டின் நான் ஆரம்பம் முதலே வலி யுறுத்தி வந்திருக்கிறேன்.

தீண்டப்படாதவர்கள் தீய, கொடிய சட் டங்களால் சொல்லொண்ணா அவதிப்படுவது மட்டுமல்ல, தீண்டப்படாதவர்களுக்கு எதிராக காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பகைமை உணர்வுகள், தீங்குகள், கேடுகள் இந்துக்களின் ஆதிக்கத் திலுள்ள நிர்வாகத்தில் புகுத்தப்பட்டு அதன் காரணமாக தாழ்த்தப் பட்ட மக்கள் அனுபவித்துவரும் துன்ப துயரங்கள், இன்னல் இடுக் கண்கள் அளப்பரியவையாகும். இந்துக்களின் கையில் அதிகாரம் ஏகபோகமாகக் குவிந்திருக்கும் வரையில் தீண்டப்படாதவர்கள் காவல் துறையினரிடமிருந்து பாதுகாப்பையோ, நீதித் துறையினரிடமிருந்து நீதியையோ, நிர்வாகத் துறையிடமிருந்து சட்டத்தின் அனுகூலத்தையோ ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் உயர் நிர்வாகத்தில் இடம்பெறச் செய்வதுதான் பொது ஊதியத் துறையை தீங்கு குறைந்ததாகவும், தீணப்படாதவர்களின் தேவைகள் விஷயத்தில் பொறுப்பு மிக்கதாகவும் ஆக்குவதற்கான ஒரே வழியாகும்; ஒரே நம்பிக்கையாகும்.

இந்தக் காரணங்களுக்காகத்தான், சட்டமன்றத்தின் பிரதி நிதித்துவம் பெறுவதற்கு தீண்டப்படாதவர்களுக்குள்ள உரிமையை வட்டமேசை மாநாட்டில் எவ்வாறு வலியுறுத்தினேனோ அமைச் சரவையில் இடம் பெறுவதற்கு அவர்களுக்குள்ள உரிமையை அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக வலியுறுத்தினேன். வட்ட மேசை மாநாடு இந்தக் கோரிக்கையின் நியாயத்தை, நேர்மைத் தகைமையை ஏற்றுக்கொண்டு, அதனை நடைமுறையில் செயல் படுத்துவதற்கான வழிமுறைகளைப் பரிசீலித்தது. இந்தக் கோரிக் கையைச் செயல்படுத்துவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. அமைச் சரவையில் தாழ்த்தப்பட்ட இன மக்களது பிரதிநிதிகளைச் சேர்ப் பதைக் கட்டாயமாக்கவும், அதனைத் தட்டிக் கழிக்கவோ, அதிலிருந்துதப்பவோ முடியாதபடி செய்யவும் இந்திய அரசாங்கக் சட்டத்தி லேயே ஒரு விதியை சேர்ப்பது முதல் வழியாகும்.

இவ்வாறு சட்டரீதியாக வலியுறுத்தாமல் பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தில் இருப்பது போன்று இதனை ஓர் எழுதாச் சட்டமாக அல்லது மரபு முறையாக விட்டுவிடுவது இரண்டாவது வழியாகும். உங்கள் சொந்த நாட்டி னரிடமே இவ்வாறு அவநம்பிக்கையை வெளியிட வேண்டாம் என்று சில இந்தியப் பிரமுகர்களின் விருப்புக்கு இணங்க நானும் ஏனைய சிறுபான்மையினரின் பிரதிநிதிகளும் முதல் வழியை வற்புறுத்த வில்லை; ஆனால் அதேசமயம் இரண்டாவது வழி சட்ட வலிமை யற்றதாக இருக்கும் காரணத்தால் அதனை ஏற்க நாங்கள் தயாராக இல்லை. இந்நிலையில் ஒரு நடுவாந்தர வழி ஒப்புக்கொள்ளப்பட் டது. ஆளுநர்களுக்குப் பிறப்பிக்கப்படும் செயல்முறைக் கட்டளை களில் ஒரு புதிய விதியைச் சேர்ப்பது என்று முடிவாயிற்று. இதன் படி, அமைச்சரவை அமைக்கும் போது, அதில் சிறுபான்மை யிரனது பிரதிநிதிகள் இடம் பெரும்படியாகப் பார்த்துக் கொள்வது ஆளுநர்களின் கடப்பாடாக, கடமைப் பொறுப்பாக ஆக்கப்பட்டது. அந்த விதி பின்வருமாறு கூறுகிறது:

“நமது ஆளுநர் தமது அமைச்சரவைக்கு நியமனங்கள் செய்யும்போது பின்கண்டவாறு நடந்து கொள்ள  வேண்டும்: சட்டமன்றத்தில் ஒரு ஸ்திரமான பெரும்  பான்மையைப் பெற்றிருப்பவர் என்று தாம் கருதுபவ  ருடன் கலந்தாலோசித்து சட்டமன்றத்தின் நம்பிக்கையைக் கூட்டாகப் பெற்றிருப்பவர்களை (கூடிய மட்டும்  கள் உட்பட) அமைச்சர்களாக நியமிக்க வேண்டும். இவ் வாறு செய்யும்போது, தமது அமைச்சர்களிடையே கூட்டுப் பொறுப்புணர்வை வளர்க்க வேண்டிய அவசி  யத்தை இடையறாது அவர் தமது மனத்தில் கொள்ள  வேண்டும்.”

இந்த ஏற்பாட்டுக்கு என்ன நேர்ந்தது, அதன் கதி என்ன வாயிற்று என்பது ஒரு சுவையான கதையாகும். 1935 ஆம் வருட இந்திய அரசாங்கச் சட்டத்தை பல்வேறு காரணங்களுக்காக தான் ஏற்கவில்லை என்று காங்கிரஸ் அறிவித்தது. அந்தக் காரணங்களை எல்லாம் இங்கு விவரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசிய மில்லை என்று கருதுகிறேன். இந்த அறிவிப்புக்குப் பின்னால் எத் தகைய வாய்மையும் நேர்மையும் இல்லை என்பதை அனைவரும் அறிவர்; ஏன் பல காங்கிரஸ்காரர்கள் கூட அறிவர். காங்கிரஸ் ஒரு தீவிரமான புரட்சிகர அமைப்பு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வேரோடு வேரடி மண்ணோடு ஆழக் குழிதோண்டிப் புதைக்கவே அது நெடு கிலும் அயராது சோராது. சலியாது சளைக்காது பாடுபட்டு வந்திருக் கிறது என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து, மக்கள் கண்ணோட்டத்தில் அதன் செல்வாக்கை உயர்த்துவதைத் தவிர அதற்கு வேறு குறிக்கோள் ஏதுமில்லை. உண்மையில் இது ஒரு நடைமுறைத் தந்திரமே அன்றி வேறல்ல. தமது கடமைப் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசியம் நேரிடும்போது தலையிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தனது கையில் எடுத்துக்கொள்ள காங்கிரஸ் விரும்பிற்று.

அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரிக்கும் இந்த அறிவிப்பை வெளியிடுவது பற்றி காங்கிரஸ் சிறிதும் கவலைப்படவில்லை; ஏனென்றால் புதிய சட்டமன்ற ஏற்பாட்டைச் செயல்படுத்தக்கூடிய ஒரே அமைப்பு தான்தான் என்றும், எனவே பிரிட்டிஷ் அரசாங்கம் தன்னுடன் ஓர் உடன் பாட்டிற்கு வருவதற்கு நிர்ப்பந்திக்கப்படும் என்றும் காங்கிரஸ் எண்ணிற்று. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் காங்கிரசைப் புறக்கணிக்கப் போவதாக அச்சுறுத்திற்று. அரசிய லமைப்புச் சட்டத்திலுள்ள மாகாணம் சம்பந்தப்பட்ட பிரிவின் தொடக்க விழா 1937 ஏப்ரல் 1 ஆம் நாளன்று நடைபெறும் என்று தேதி நிர்ண யித்ததோடு நில்லாமல். காங்கிரஸ்காரர்கள் அல்லாதவர்களைக் கொண்ட ஓர் இடைக்கால அமைச்சரவையை அமைக்கும் அள வுக்கும் அது சென்றது.

அதிகாரப் பசி கொண்ட, நப்பாசை கொண்ட காங்கிரஸ்காரர்கள், சுத்த சுயம்பிரகாச சுயநல வாதிகளான அந்த அரசியல்வாதிகள் கூட்டத்தினர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கண்டு மிகவும் அதிர்ந்து போயினர்; தங்களது உழைப் பின் பலன், சுகபோகம் எங்கே தங்களுக்குக் கிட்டாது போய்விடுமோ, கைக்குக் கிடைத்தது வாய்க்கு எட்டாது போய்விடுமோ என்று மிகுந்த கலவர மடைந்தனர். இதன்பேரில் மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் அரசாங்கத்துக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் தொடங்கின.

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள விசேடப் பொறுப்பு சம்பந்தப்பட்ட விதிகள் தங்களுக்கு அளிக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மாகாணங்களின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவதில்லை என்று பிரிட்டிஷ் அரசாங்கம் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கோரிற்று. அவ்வாறு வாக்குறுதி அளித்தால் பெரும்பான்மையினரின் நல்லெண் ணத்தோடு புதிய அரசியலமைப்புச் சட்டம் செயல்படுவதை தான் வரவேற்பதாகவும், இது விஷயத்தில் தான் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பாதகவும் அது தெரிவித்தது. இதில் விந்தை என்னவென்றால் காங்கிரஸ் ஒரு விபரீதமான போக்கையும் இச்சந்தர்ப்பத்தில் கடைப்பிடித்தது.

அதாவது மாகாண அமைச்சரவைகளில் சிறுபான்மை யினரின் பிரதிநிதிகள் இடம்பெறும்படியாகப் பார்த்துக் கொள்வ தற்கு செயல்துறைக் கட்டளைகளின்படி ஆளுநர்களுக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரங்களை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து தான் கோரிய வாக்குறுதியில் காங்கிரஸ் சேர்த்துக் கொண்டது. பின்னர் என்ன? ஆளுநர்கள் காங்கிரசுடன் முற்றிலும் இணங்கிப் போயினர்; தங்கள் அதிகாரத்தை காங்கிரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர்; அது மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த முக்கியமான பகுதியைச் சிதைத்துக் சீர்குலைக்குவும் காங்கிரசை அனுமதித்தனர். காங்கிரசின் தாந்தோன்றித்தனமான, தறிகெட்ட, நெறியற்ற இந்தப் போக்கின் விபரீத விளைவாய் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்குத் தங்களுக்குள்ள உரிமையை தாழ்த்தப்பட்ட இனத் தவர்களும் ஏனைய சிறுபான்மையினரும் இழந்தனர்.

அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட இன மக்களுக்குள்ள உரிமையை காங்கிரஸ் பறித்ததானது வன்ம உணர் வோடு, மனக்காழ்ப்போடு முன்கூட்டியே திட்டமிட்டு மேற் கொள்ளப்பட்ட சதியாகவே தோன்றுகிறது. தனது அமைச்சரவை களில் சிறுபான்மையினரது பிரதிநிதிகளைச் சேர்க்காததற்கு காங் கிரஸ் தெரிவித்த காரணங்களில் ஒன்று மிகவும் விந்தையானதாகும். கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டுமானால் ஓர் அமைச்சரவை ஒரு கட்சி சார்புடைய அமைச்சரவையாக இருக்க வேண்டும், எனினும் அதேசமயம் சிறுபான்மையினத்தவர்களது பிரதிநிதிகளை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள காங்கிரஸ் முற்றிலும் தயாராக இருக்கிறது, ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உண்டு, அதாவது அந்தச் சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் காங்கிரசில் இணைந்து அதன் பிரதிக்ஞையில் கையொப்பமிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை வாதித்தது.

இத்தகைய வாதம் இதர சிறுபான்மையினர் விஷயத்தில் எப்படிப்பட்ட மதிப்புடையதாக இருந்தாலும் தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் அது முற்றிலும் பொருந்தாது. அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட இனப் பிரதிநிதிகளை சேர்க்காதிருக்கும் தனது போக்கை நியாயப்படுத்த இரண்டு காரணங்களுக்காக காங் கிரஸ் இதனைப் பயன் படுத்த முடியாது. முதலாவதாக, தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க புனா ஒப்பந்தப்படி காங்கிரஸ் கட்டுப்பட்டுள்ளது. இரண்டாவதாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களல்லாத தீண்டப்படாத இனத் தவர் எவரும் சட்டமன்றங்களில் இல்லை என்று காங்கிரஸ் கூற முடியாது. மாறாக, காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று வெற்றிபெற்ற, காங்கிரஸ் கொள்கையை ஏற்றுக்கொண்ட தாழ்த்தப்பட்ட உறுப்பினர் கள் 78 பேர் வரை சட்டமன்றங்களில் இருக்கின்றனர். அவ்வாறிருக் கும்போது அவர்களை அமைச்சரவையில் காங்கிரஸ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை? அமைச்சரவையில் இடம்பெறுவதற்குத் தீண்டப் படாதவர்களுக்குள்ள உரிமையை ஏற்காதிருப்பது காங்கிரஸ் கொள்கை யின் ஒரு பகுதியாகும் என்பதும், இந்தக் கொள்கை திரு. காந்தியின் ஆதரவைப் பெற்ற கொள்கை என்பதும்தான் இதற்குரிய ஒரே பதி லாகும். இந்துக் கூற்றின் உண்மையைப் பற்றி எவருக்கேனும் ஐயம் இருப்பின் பின்கண்ட நிகழ்ச்சியை அவர்களது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

முதலாவதாக இங்கு நான் குறிப்பிடும் நிகழ்ச்சி காங்கிர சிலிருந்து டாக்டர் காரே நீக்கப்பட்டது சம்பந்தப்பட்டதாகும். மத்திய மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபை பதவியில் இருந்தது. டாக்டர் காரே அதன் பிரதமராக இருந்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர் களிடையே உள் தகராறுகள் எழுந்தன. தொல்லை தருபவர்களை நீக்குவதற்கு அவர் விரும்பினார். இதன் பொருட்டு முற்றிலும் நியாய மான, வழக்கமான வழிமுறையைக் கையாண்டார்; ஒரு புதிய அமைச் சரவையை அமைக்கும் நோக்கத்தோடு தனது ராஜினாமாவையும் ஏனைய அமைச்சர்களின் ராஜினாமாவையும் ஆளுநரிடம் சமர்ப்பித் தார்.

ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் அரசிய சட்ட நடைமுறை விதிகளுக்கு முற்றிலும் இணங்க ஆளுநர் டாக்டர் காரேவைத் திரும்பவும் அழைத்து மற்றொரு அமைச்சரவையை அமைக்கும்படிக் கேட்டுக் கொண்டார். டாக்டர் காரேயும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு புதிய அமைச்சரவையை அமைத் தார்; முன்பு தொல்லை கொடுத்து வந்தவர்களுக்கு அமைச்சரவை யில் மீண்டும் இடம் கொடுக்காமல் புதியவர்கள் சிலரை நியமித்தார். டாக்டர் காரேயின் புதிய அமைச்சரவை முந்திய அமைச்சரவை யிலிருந்து ஒரு முக்கியமான விஷயத்தில் மாறுபட்டிருந்தது; அதாவது திரு. அக்னிபோஜ் என்ற தீண்டப்படாதவரை அமைச்சரவையில் புதிதாக சேர்த்துக் கொண்டார். இத்தனைக்கும் டாக்டர் காரே அமைச்ச ராக நியமித்தவர் மத்திய மாகாணங்களின் சட்டமன்றத்திலுள்ள தாழ்த்தப்பட்ட இன உறுப்பினர்; பட்டதாரி; காங்கிரஸ்காரர்; தீவிர கட்சிக்காரர்; அமைச்சராவதற்கு எல்லா விதத்திலும் தகுதியானவர்.

இந்நிலைமையில் 1938 ஜுலை 26 ஆம் தேதி காங்கிரஸ் நிர்வாகக் குழுவார்தாவில் கூடிற்று; பழைய அமைச்சரவையிலிருந்த தனது சகாக் களின் ராஜினாமாவைச் சமர்ப்பித்ததன் மூலம் டாக்டர் காரே ஒரு பெரும் குற்றம் இழைத்துவிட்டார் என்று அது அவரைக் கண்டித்தது; அது மட்டுமன்றி, ஒரு புதிய அமைச்சரவையை அமைத்ததன் மூலம் கட்சிக் கட்டுப்பாட்டை அவர் மீறி விட்டார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்திற்று.

புதிய அமைச்சரவையை அமைத்ததன் மூலம் கட்சிக் கட்டுப்பாடு மீறப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் இந்தக் குற்றச் சாட்டின் பின்னணியைப் பற்றி விவரிக்கும்போது, தாழ்த்தப்பட்ட இனத்தவர் ஒருவரை அமைச் சரவையில் சேர்த்துக் கொண்டதே திரு.காந்தியின் கருத்துப்படி கட்டுப்பாட்டை மீறிய செயலாகும் என்று டாக்டர் காரே பகிரங்கமாகவே கூறினார். தீண்டப்படாதவர்களிடையே இத்தகைய ஆர்வ விருப்பங்களையும் அபிலாஷைகளையும் கிளர்த்தி விடுவது தவறென்றும், இத்தகைய மோசமான தவறைச் செய்தமைக்காக உங்களை நான் ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் திரு. காந்தியே தம்மிடம் கூறியதாகவும் டாக்டர் காரே தெரிவித்தார். டாக்டர் காரே இதனை பல மேடைகளில் பகிரங்க மாகவே, பட்டவர்த்தனமாகவே கூறினார். திரு. காந்தி ஒருபோதும் இதனை மறுத்துரைத்ததில்லை.

இது ஒருபுறமிருக்க, இது விஷயத்தில் இதைவிடவும் நேரடி யான சான்று உள்ளது. 1942ல் தீண்டப்படாதவர்களின் மாநாடு ஒன்று நடைபெற்றது. தீண்டப்படாதவர்களின் அரசியல் கோரிக்கைகளை விவரித்து அந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தவர் ஒருவர் அந்த மாநாடில் பங்கு கொண்டார். மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கைகள் குறித்து திரு. காந்தி என்ன கருதுகிறார் என்பதை அறியும் பொருட்டு அவர் திரு. காந்தியிடம் சென்றார்; பின்வரும் ஐந்து கேள்விகளை அவர்முன் வைத்தார்;

 “1. எதிர்காலத்தில் வகுக்கப்படவிருக்கும் அரசிய  லமைப்புச் சட்டத்தில் ஹரிஜன்களின் நிலைமை எவ்  வாறு இருக்கும்?

 2. பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கி சட்ட  மேலவை வரை மக்கட் தொகை அடிப்படையில் ஹரி  ஜனங்களுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்குவதற்கு   இணங்கும்  படி அரசாங்கத்துக்கும் காங்கிரசுக்கும் பரிந்துரைப்பீர்களா?

 3. மாகாண சட்டமன்றங்களில் உள்ள பெரும்  பாலான தாழ்த்தப்பட்ட இன உறுப்பினர்களின் நம்பிக  கையைப் பெற்ற தாழ்த்தப்பட்ட இன சட்டமன்ற  உறுப்பினரிகளிலிருந்து அமைச்சர்களை நியமிக்குபடி காங்  கிரசுக்கும் சட்டமன்றங்களிலுள்ள பல்வேறு பெரும்  பான்மைக் கட்சிகளின்     தலைவர்களுக்கும் நீங்கள் ஆலோ  சனை கூறுவீர்களா?

 4. ஹரிஜனங்களின் பின்தங்கிய நிலையைக் கருத்திற்  கொண்டு அவர்கள் பஞ்சாயத்து போர்டு தலைவர்களாக  வும் நகரசபை தலைவர்களாகவும் வருவதை சாத்திய  மாக்குவதற்கு இந்த அமைப்புகளிலுள்ள நிர்வாகப் பதவிகளை சுழல் முறையில் வகிப்பதற்கு சட்டத்தில் வகை  செய்யும்படி அரசாங்கத்துக்கு நீங்கள் பரிந்துரைப்பீர்களா?

 5. மாவட்ட காங்கிரஸ் குழு முதல் காங்கிரஸ்  நிர்வாகக் குழுவரை ஹரிஜனங்களுக்கு சில குறிப்பிட்ட  இடங்களை நீங்கள் ஏன் ஒதுக்கக் கூடாது?

 1942 ஆகஸ்டு 2 ஆம் தேதியிட்ட ஹரிஜன் இதழில் இக் கேள்வி களுகு திரு. காந்தி பதிலளித்தார். அதில் திரு. காந்தி கூறியிருந்தது இதுதான்:

 ”1. தீண்டாமையை எவ்வகையிலும், எந்த வடிவத்  திலும் கடைப்பிடிப்பதை குற்றமாக்கும் ஒரு ஷரத்து நான்  விரும்பும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்  றிருக்கும். ‘தீண்டப்படாதவர்கள்’ எனப்படுபவர்களுக்கு  தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட பிரதேசத்திலுள்ள  அவர்களது மக்கட் தொகையின் அடிப்படையில் எல்லாத்  தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளிலும் அவர்களுக்கு  இட ஒதுக்கீடு செய்யப்படும்.

 ”2. முந்தைய எனது பதிலிலேயே இந்தக் கேள்விக்  கானபதிலும் அடங்கியுள்ளது.

 “3. இவ்வாறு நான் ஆலோசனை கூற இயலாது.  சமுதாயத்தின் புறக்கணிக்கப்பட்ட இனங்களைப் பாது  காக்கும் பணியை அவர்களுக்கும் நாட்டுக்கும் ஊறு  விளைவிக்கும் அளவுக்குச் செயல்படுத்த முற்படலாகாது.  ஓர் அமைச்சர் என்பவர் அனைவரது நம்பிக்கையையும்  பெற்ற தலைசிறந்த நபராக இருக்க வேண்டும். ஒருவர்  ஓர் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பில் இடம் பெற்று

 விட்ட பிறகு உயர் நிலையை அடைய வேண்டுமானால்  அவர் தமது உள்ளார்ந்த தகுதிகளையே, திறமையையே,  செல்வாக்கையே சார்ந்திருக்கும் வேண்டும்.

 ”4. முதலாவதாக, இப்போதைய சட்டத்தில் நான்  ஆர்வமோ, அக்கறையோ கொண்டிருக்கவில்லை. அது  கிட்டத் தட்ட மடிந்துபோன மாதிரிதான். எனினும் நான்  ஏற்கெனவே கூறிய காரணங்களின் அடிப்படையில்  உங்கள் யோசனையை எதிர்க்கிறேன்.

 “5. முன்னர் கூறிய காரணங்களால் இதை எதிர்க்  கிறேன். ஆயினும் காங்கிரஸ் உறுப்பினர் பட்டியலில்  காணப்படும் ஹரிஜன உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு  ஏற்ற விகிதாசாரத்தில் அரிஜன உறுப்பினர்கள் தேர்ந்  தெடுக்கப்பட்ட வேண்டும் என்று பெரிய காங்கிரஸ் அமைப்பு  களுக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.”

காங்கிரசில் நான்கு அணா உறுப்பினர்களாகச் சேரு  வதில் ஆர்வம் காட்டாத ஹரிஜனங்கள் தேர்ந்தெடுக்கப்  பட்ட அமைப்புகளில் தங்கள் பெயர்கள் இடம் பெறும்  என்று எதிர்பார்க்க முடியாது. காங்கிரஸ் ஊழியர்கள் ஹரி  ஜனங்களை அணுகி அவர்களை காங்கிரசில் சேரும்படி  வலியுறுத்த வேண்டும்.

அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு தீண்டப்படாதவர் களுக்குள்ள உரிமையை கொள்கை, அளவில் அங்கீகரிக்காதிருக்க காங்கிரசும் காந்தியும் உறுதிபூண்டுள்ளனர் என்பது குறித்து இதற்கு மேல் என்ன ஐயம் இருக்க முடியும்? தகுதிகள் பிரச்சினையைப் பொறுத்தவரையில் இந்த அளவுகோலை திரு. காந்தி எல்லாச் சிறு பான்மையோர் விஷயத்திலும் பயன்படுத்தியிருந்தால் அதில் ஒரளவு அர்த்தம் உண்டு. முஸ்லீம் கோரிக்கை விஷயத்தில் இதேபோன்று கூற திரு. காந்திக்கு துணிச்சல் உண்டா? தீண்டப்படாதவர்கள் விஷ யத்தில் மட்டும் அமைச்சரவையின் கதவுகளை இழுத்து மூடுவது என்ன நியாயம்? திறமையற்ற, தகுதியற்ற ஒரு தீண்டப்படாதவர் அமைச்சராக்கப்பட வேண்டும் என்று யாரும் கோரவில்லை. தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு எதிராக திரு. காந்தியின் உள்ளத்தில் தீவிர வெறுப்பு உணர்வு ஆழப் புதைந்து போயிருக்கிறது என் பதையே இது உறுதிப்படுத்துகிறது.

புனா ஒப்பந்தத்தைப் பயனற்றதாக்க, செல்லுபடியற்றதாக்க, செல்லாக்காசானதாக்க காங்கிரஸ் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ள பல நடவடிக்கைகளில் இங்கு குறிப்பிட வேண்டியவை மேலும் இரண்டு இருக்கின்றன. இவற்றில் முதல் நடவடிக்கை தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு கடைப்பிடித்து வந்து கொள்கை சம்பந்தப் பட்டதாகும். இது மிக முக்கியமான பிரச்சினையாகும். இவ்வளவு முக்கியமான பிரச்சினை போதுமான அளவு ஆழமாக, நுணுக்க மாக ஆராயப்படாதது துரதிர்ஷ்டவசமானதே ஆகும். இந்தப் பிரச் சினையை நான் உரிய முறையில் ஆராய்ந்திருக்கிறேன். என் ஆய்வின் முடிவுகளை தக்க ஆதாரங்களுடன் ஒரு தனி ஆய்வுக் கட்டுரையாக வெளியிட எண்ணியிருக்கிறேன். இப்போதைக்கு நான் செய்யக்கூடிய தெல்லாம் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இந்தப் போர்டுகள் கடைப்பிடித்து வந்துள்ள பொதுக் கோட்பாடுகளை எடுத்துக் கூறுவதுதான். சாதி இதில் மிக முக்கிய பங்கு வகித்தது. ஒரு தொகுதியில் போட்டியிட இரண்டு பேர் முன்வந்தால் அவர்களில் மிகவும் தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என்று காங்கிரஸ் உணரவில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எந்த சாதி வாக்காளர்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்களோ அந்தச் சாதியைச் சேர்ந்தவரையே அது வேட்பாளராகத் தேர்ந் தெடுத்தது.

பண பலமும் இதில் முக்கிய பங்கு வகித்தது. ஏழையான அதேசமயம் மிகவும் தகுதிவாய்ந்த வேட்பாளரைவிட மிகவும் செல்வந்தரான வேட்பாளருக்கே அது முன்னுரிமை தந்தது. இவை எல்லாம் சற்றும் நியாயமற்ற போக்குகளாகும். ஆனால் எப்படி யேனும் வெற்றிபெறக்கூடிய வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதே காங்கிரசின் ஒரே நோக்கமாதலால் இது புரிந்து கொள்ளக் கூடியதே. இது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் கடைப்பிடித்து வேறு சில கோட்பாடு களும் அது ஓர் ஆழமான சதித்திட்டம் தீட்டி யிருந்ததை அப்பட்டமாக அம்பலப்படுத்தின. வெவ்வேறு வகைப்பட்ட வேட்பாளர்களுக்கு வெவ்வேறு விதமான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. பிராமணர்கள் மற்றும் அவர்களைஒத்த உயர்சாதி இந்து வேட்பாளர்களில் மிக உயர்ந்த தகுதி படைத்தவர்களே பொறுக்கியெடுக்கப்பட்டனர்.

ஆனால் அதே சமயம் பிராமணர்கள் அல்லாதவர்கள் விஷயத்தில் உயர் தகுதி படைத்தவர்களை விடக் குறைந்த தகுதிபடைத்த வர்களே முன்னுரிமை பெற்றனர். இதேபோன்று தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் விஷயத்திலும் தகுதி படைத்தவர்கள் ஒதுக்கப்பட்டு தகுதியே இல்லாதவர்களோ அல்லது மிகக் குறைந்த தகுதி பெற்ற வர்களோதான் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு எல்லோர் விஷயத்திலும் நடைபெற்றதாக இங்கு நான் கூறவரவில்லை. ஆனால் காங்கிரஸ் கடைப்பிடித்த இத்தகைய விபரீதப் போக்கின் பொது விளைவு என்னவென்றால், பிராமண வகுப்பையும் அவர் களைப் போன்ற இதர வகுப்புகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் மிக அதிகம் கல்வி கற்றவர்களாகவும், பிராமணரல்லாத வேட்பாளர்கள் சுமாரான கல்வி கற்றவர்களாகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் ஏதோ ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்தவர் களும் இருந்தனர்.

இத்தகைய தேர்வு முறை மிகவும் புதிராக இருக் கிறது. இதற்குப் பின்னால் ஒரு மாபெரும் சதித்திட்டம், சூழ்ச்சி வலை இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த்த் தேர்வு முறையைக் கவன மாக ஆராயும் எவரும் ஒரு விஷயத்தைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்வார்கள்: அதாவது பிராமணர்களையும் அவர்களைப் போன்றவர்களையுமே பிரதானமாக அமைச்சரவையில் அங்கம் வகிக்கச் செய்வதும், கல்வியறிவில் கீழ்நிலையிலுள்ள பிராமண ரல்லாதோர் மற்றும் தீண்டப்படாதோர் போன்ற பணிவிணக்கமுள்ள வர்களின் ஆதரவை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதுமே இந்தத் தேர்வு முறையின் உள்நோக்கம்; இந்தத் தேர்வுமுறை காரணமாக பிராமணரல்லாதோரும் தாழ்த்தப்பட்ட இனத்தவரும் இனத்தவரும் அமைச்சரவை இடங்களுக்குப் போட்டியிடுவது குறித்துக் கனவுகாண முடியாது; சட்டமன்றங்களுக்குத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதையே ஒரு வரப்பிரசாதமாக, சுவர்க்கபோகமாக நினைத்து அவர்கள் திருப்தி யடைவதைத் தவிர வேறு வழியில்லை.

அமைச்சராவதற்கு விழை யும் ஒரு தீண்டப்படாதவர் அதற்குத் தகுதியுடையவராக இருக்க வேண்டும் என்று திரு. காந்தி கூறியபோது இந்த அம்சத்தைக் காணத் தவறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இல்லையென்றால், தாழ்த்தப்பட்ட இனக் காங்கிரஸ்காரர்களிடையே அமைச்சராவ தற்குத் தகுதியுடையவர்கள் எவரும் இல்லை என்றால், தீண்டத் தகாதவர்களிடமிருந்து நன்கு தகுதிபெற்ற வேட்பாளர்களை காங் கிரஸ் பார்லிமெண்டரி போர்டு தேர்வு செய்யத் தவறிவிட்டதே இதற்குக் காரணம் என்பதை திரு. காந்தி தெரிந்து கொண்டிருப்பார்.

இப்போதைய தேர்தல் முறை தொடருமானால், நன்கு கல்வி கற்ற இந்தியர்கள் அமைச்சர்களாவதற்கு முதல் படியாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவதை எப்போதும் காங்கிரசால் தடுக்க முடியும். இது மிகவும் வருந்தத்தக்க ஒரு நிலையாகும். இந்த அவல நிலையை சீர்செய்ய ஏதெனும் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது அவ சியம். இது ஒருபுறமிருக்க, வேட் பாளர்களைத் தெரிவு செய்வதற்கு காங்கிரஸ் மேற்கொண்ட முறை தீண்டப்படாதவர்களுக்கு ஒரு பலத்த அடியாக அமைந்தது எனலாம்; தீண்டப்படாதவர்களில் தகுதி வாய்ந் தவர்கள் இல்லை என்று நொண்டிச் சாக்குக் கூறி அவர்கள் நிர்வாக அதிகாரத்தைப் பெற முடியாமல் அது செய்தது; இத்தனைக்கும் தகுதி வாய்ந்த தீண்டப்படாதவர்கள் ஏராளமானோர் இருந்தபோதிலும் வேண்டுமென்றே, திட்டமிட்டு, வஞ்சகமாக, ஒளிவு மறைவாக தகுதியற்றவர்களைத் தெரிவு செய்ததே இதே காங்கிரஸ்தான். குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமன்றி குழியை வேறு பறித்த கதையாகத் தான் இருக்கிறது!

காங்கிரஸ் இழைத்த இரண்டாவது குற்றச்செயல், பழிச் செயல் தீண்டப்படாத இனத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்களை மிகக் கடுமையான, கொடுமையான கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி யதேயாகும். அவர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழுவினது முழுக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தனர். நிர்வாகக் குழு விரும்பாத எந்தத் தீர்மானத்தையும் அவர்கள் கேட்க முடியாது. அது அனுமதிக் காத எந்தத் தீர்மானத்தையும் அவர்கள் முன்மொழிய முடியாது. அது ஆட்சேபிக்கும் எந்த ஒரு மசோதாவையும் அவர்கள் சட்ட மன்றத்தில் கொண்டுவர முடியாது. அவர்கள் தாங்கள் விரும்பியபடி வாக்களிக்க முடியாது; தங்கள் மனத்துக்குப்பட்டதை, நியாயமென உணர்ந்ததை அவர்கள் சட்டமன்றத்தில் பேசமுடியாது. வாய் பேச முடியாத ஆடுமாடுகள் போலவே அவர்கள் இருந்தனர்; ஆரறிவற்ற கால்நடைகளைப் போலவே அவர்கள் காட்சியளித்தனர்.

தீண்டப்படாதவர்களுக்குச் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்கக் செய்ததன் நோக்கங்களில் ஒன்று அங்கு அவர்கள் தங்களது மனக் குறைகளை வாய்விட்டு சொல்லுவதற்கும்,ட் தங்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளுக்கு, அநீதிகளுக்கு, அநியாயங்களுக்கு தீர்வு காணுவதற்கும் பரிகாரம் தேடுவதற்கும் வகை செய்வதே ஆகும். ஆனால் காங்கிரசோ இது நடைபெறாதபடி தடுப்பதில் வெற்றி பெற்றுவிட்டது.

இந்த நீண்ட நெடிய துயரமிக்க சோகக் கதையின் முடி வுக்கு இனி வருவோம்; காங்கிரஸ் புனா ஒப்பந்தத்தின் சாரத்தை உறிஞ்சிவிட்டுச் சக்கையை தீண்டப்படாதவர்களின் முகத்தில் எறிந்து விட்டது என்றே கூறவேண்டும்.

Pin It