BHANGYA BHUKYA (2017) THE ROOTS OF THE PERIPHERY A HISTORY OF THE GONDS OF DECCAN INDIA OXFORD UNIVERSITY PRESS 

pagauuya 350பழங்குடிகள் அல்லது ஆதிவாசிகள் என்போர் காடு வாழ் மக்களாகவே பர்க்கப்படுகின்றனர். இந்தியாவின் மையப்பகுதியை விட்டு விலகி விளிம்பு நிலையிலேயே இவர்கள் வாழ்கிறார்கள். காடுகளின் எல்லையிலோ, காடுகளிலோ வாழும் இவர்கள் சமவெளியில் இருந்து விரட்டப்பட்டோ, தப்பியோடி வந்தோ காடுகளுக்குள் இடம் பெயர்ந்தவர்கள்தாம்.

சமவெளியில் ஆதிக்கம் செலுத்திய ஆளும் குழுவுக்கும் அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருந்த குழுவுக்கும் இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகவே இவ் இடப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. மையத்தில் இருந்து விளிம்புக்கு நிகழ்ந்த இவ்விடப் பெயர்ச்சியானது அரசியல் சார்ந்த ஒன்றாகும். நிர்வாக அல்லது பூகோள எல்லை சார்ந்ததல்ல. மையப்பகுதியும் விளிம்பு நிலையும் அரசியல் பண்பாடு சார்ந்தே நோக்க வேண்டியன. விளிம்பு நிலைக்கும் மையத்துக்கும் இடையிலான உறவை, நாகரிகம் - புராதனம், பழக்கப் பட்டது - பழக்கப்படாதது, நவீனமானது -

பின் தங்கியது, ஆளுகைக்கு உட்பட்டது - ஆளுகைக்கு உட்படாதது என்ற எதிர்மறைக் கூறுகளாகவே பார்க்க வேண்டும். விளிம்பு நிலை குறித்த ஆய்வுகள் பெரும் பாலும் சமூகவியல், மானிடவியல் என்ற இரு அறிவுத் துறைகளின் துணை கொண்டே நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் இதற்கு மாறாக தெக்கண இந்தியாவில் வாழும் கோண்ட்டுகள் என்ற பழங்குடி யினரின் வரலாறையும் அரசியலையும் இந்நூல் ஆராய்கிறது.

இவ் அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூலின் ஆசிரியர் பங்கய்யா புகுய்யா ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் வரலாற்றாசிரியராகப் பணியாற்றுகிறார். தென் இந்திய ஆதிவாசிகள் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர். ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களில் வாழும் லம்பாடிகள் என்ற பழங்குடிச் சமூகம் குறித்து இவர் எழுதிய நூல் குறித்த அறிமுகம் ஏப்ரல்  2012 உங்கள் நூலகம் இதழில் வெளியாகியுள்ளது.

விளிம்பு நிலையினரின் தோற்றம்

இந்திய விளிம்பு நிலையினர் குறித்த ஆய்வை ஆரியர் வருகையில் இருந்தே தொடங்க வேண்டும். இந்நாட்டின் பூர்வீகக்குடிகளான நாகர்களை வென்ற ஆரியர்கள் முதலில் பஞ்சாபில் குடியேறினர். பின்னர் கங்கை முகத்துவாரத்திலும், நீண்ட கடற்கரைப் பகுதி களிலும் நிலைபெற்றனர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கிழக்கு நோக்கி முன்னேறிய ஆரியர் காடுகளை எரித்து அழித்தார்கள். வேளாண்மைக்காக காடுகளை எரியூட்டி அழிப்பது அவர்களின் வழக்கமாகும். ரிக்வேத சுலோகங்களில் நெருப்பைக் குறிப்பிடும் போது அதற்கு இடும் அடைமொழிகள் இதை உறுதிப்படுத்துகின்றன. காடுகளை விழுங்குபவனாகவும் அவற்றை அழிக்கும் கோடரியாகவும் அக்கினி வருணிக்கப்படுகிறான்.

காடுகளை எதிர்ப்பதென்பது நிலத்தைத் துப்பரவு செய்வது மட்டுமின்றி அக்கினிக் கடவுளை நிறைவு படுத்தும் செயலுமாகும். யமுனை நதிக்கரையிலுள்ள காண்டவ வனத்தை அருச்சனன் அழித்த செய்தி பாரதத்தில் இடம் பெற்றுள்ளது. இச்செய்தி பேரழிவின் பதிவாகும். காட்டில் வாழும் உயிரினங்கள் அனைத் தையும் தன் உணவாக நெருப்பு, உண்டு தீர்த்ததாகப் பாரதம் கூறுகிறது.

கங்கை முகத்துவாரத்திலும், கடலோரப் பகுதி களிலும் அவர்கள் தம் ஆட்சியை விரிவுபடுத்திய போது, ஈவு இரக்கமின்றி நாகர்களை அழித்தனர். சிதறுண்டு வாழ்ந்த பல தொன்மையான குழுக்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் அழித்தே ஆரியர்கள் ஒரு புதிய சமுதாயத்தை நிறுவியதாக கோசாம்பி எழுதியுள்ளார்.

ஆரியவர்த்தனாவின் விளிம்பு நிலையாகச் சித்தரிக்கப்படும் மத்திய இந்தியாவுக்கும் வடகிழக்கு இந்தியா வுக்கும் நாகர்களை இடம் பெயரச் செய்தனர். மத்திய இந்தியாவில் வாழும் கோண்டுகளிடம் பழைய நாகர்களின் அடையாளம் காணப்படுகிறது. கங்கைப் பள்ளத் தாக்கு ஆரியவர்த்தனை என்று நிலைநிறுத்தப்பட்டது. இது இந்தியாவின் மையப்பகுதி என்றும் இதற்கு வெளியில் உள்ளவை விளிம்புநிலை என்றும் வரை யறுக்கப்பட்டது. இவ்வாறு தொடக்ககால ஆரியக் குடியிருப்புகள் உருவானபோது மையப்பகுதிகளுக்கும் காட்டுப்பகுதிகளுக்கும் இடையே ஓர் எல்லை முதன்முறையாக வரையறுக்கப்பட்டது. பின்னர் இந்து சமய நூல்களில் பண்பாட்டுடன் இணைத்து நிலை நிறுத்தப்பட்டது. இந்து புனித நூல்கள் மட்டுமின்றி, புத்த, சமண சமயப் புனித நூல்களும் ஆரியர்களை நாகரிகம் அடைந்தவர்களாகவும், சுயேச்சைத் தன்மை கொண்ட இனக்குழுக்களை காட்டுமிராண்டிகளாகவும் கி.மு. ஆறாம் நூறாம் நூற்றாண்டில் இருந்து குறிப்பிடலாயின.

இந்தியாவில் அரசு உருவாக்கும் முயற்சியில் ஆரியர்கள் ஈடுபட்டபோது ஆரியர்களுக்கும் ஆரியர் அல்லாதாருக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்தன. எண்ணிக்கையில் அடங்காத ஆரியர் அல்லாதாரை அரசு இல்லாப் பகுதிக்கோ காடுகள், மலைப்பகுதிக்கோ இம்மோதல்கள் இடம் பெயரச் செய்தன.

ஆரியக் குழுக்கள் ஆரியர் இல்லாத குழுக்களை வென்று அவர்களைத் தம் அரசின் குடிகள் ஆக்கினர். இதை விரும்பாத, உரிமை வேட்கை கொண்டோர் அரசு அமைப்பு செயல்படாத பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இம்மக்களே இனக்குழுவினர் என்றும் பழங்குடியினர் என்றும் அழைக்கப்படலாயினர்.

பண்டைய இந்திய வரலாற்றில் பேரரசு உருவாக்கம் நிகழ்ந்தபோது அதில் இருந்து தப்பித்தோடிய, மக்களே இன்றைய இந்திய ஆதிவாசிகள் ஆவர். சுயஆட்சியின் மீது உறுதியான பற்றுகொண்டவர்களாக இவர்கள் இருந்துள்ளார்கள். இருபதாம் நூற்றாண்டுவரை இப்போக்கு தொடர்ந்துள்ளது.

சுல்தான்களின் ஆட்சியின்போது நிகழ்ந்த படை யெடுப்புகளின் போது படையன்று ஒரு கிராமத்தை கடந்து செல்ல நேரிட்டால் அந்தக் கிராமம் அழிவுக்காளாகும்.

இதனால் இப்படை வருவதை அறிந்த கிராமத்தினர் சமவெளிப்பகுதியை விட்டு வெளியேறி காடுகளுக்குள் சென்று விடுவார்கள். நிலவரி செலுத்துவதில் இருந்து தப்பிக்கவும் காடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

நிலக்கொடைகள் வாயிலாக அரசின் விரிவாக்கம் காடுகளை நோக்கிச் சென்றது. இம்முறை கி.மு.150இல் வாகடகர் ஆட்சியில் தொடங்கி, பின்னர் இந்திய வரலாற்றில் நீடித்தது. தொடக்கத்தில் பௌத்தப் பள்ளிகளுக்கு நிலக்கொடை வழங்கும் முறை அறிமுக மாகி, பின்னர் இந்துக்கோவில்களுக்கும் பிராமணர் களுக்கும் வழங்கப்படாலாயிற்று. குப்தர்கள் ஆட்சியில் இது விரிவடைந்து உச்சத்தை எட்டியது. இக்காலத்தில் காடுகள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கொண்டு வரப்பட்டன.

வேளாண்மைக்காக காடுகளை அழிப்பது பேரரசுகளின் ஆட்சியில் தீவிரமானது. முகலாயர் ஆட்சியில் வேளாண்மை வளர்ச்சியுற்றது. பயிரிடலை மேற்கொள்ளச் செய்தனர். சாகுபடிக்கு உட்படாத நிலங்களில் பயிர் செய்யும்படி குடியானவர்களைத் தூண்டினர். அவர்களுக்கு வரிச் சலுகை வழங்கினர். முதல்முறையாக வேளாண்மை செய்யப்படும் நிலத்திற்கு அய்ம்பது விழுக்காடு அல்லது அதற்கும் குறைவாக ஓராண்டுக்கு வரி விதிக்கப்பட்டது. பின்னர் அய்ந்தாண்டு வரை வழக்கமான வரித்தொகைக்குப் படிப்படியாக உயர்த்தப்பட்டது. இவ்வரிச் சலுகையானது காடு களுக்கும் மலைகளுக்கும் அருகில் புதிய கிராமங்களை உருவாக்கியது.

தென் இந்தியாவிலும் பயன்படுத்தப்படாத நிலங்களும், காட்டு நிலங்களும் வேளாண்மைக்குரிய நிலங்களாக மாற்றப்பட்டன. காகதீய, விஜயநகர, குர்சாகிப் ஆட்சிக்காலத்தில் தெக்கணப் பகுதியில்  13-ஆம் நூற்றாண்டில் இருந்து காடுகள் விளை நிலங்களாக மாற்றப்படலாயின.

காகதீயர்கள் ‘நாயக்கமுறை’ என்ற முறையை அறிமுகம் செய்தனர். இதன்படி காட்டுப்பகுதிகளில் வேளாண்மை விரிவுபடுத்தப்பட்டது. இவ்வாறு உருவான புதிய கிராமங்களுக்கு ‘நாயக்’ என்ற பதவி வகித்தவன் தலைவனாக விளங்கினான் (நாயக் - தலைவன்) இந்நாயக்கர்கள்  காடுகளை அழித்து வேளாண் நிலங்களாக்குவதில் தீவிரம் காட்டினார்கள். பாசனத்திற்காகக் குளங்களை வெட்டினார்கள்.

காகதீயர் ஆட்சியில் 5000 குளங்கள் வெட்டப்பட்டன. இச்செயல்கள் ஆந்திரப்பகுதியில் நிலவுடைமை முறை உருவாகத் துணை நின்றது. இதே நடைமுறைதான் விஜயநகர ஆட்சியிலும் குதுப்சாகிப் ஆட்சியிலும் தொடர்ந்தது. மொத்தத்தில் ஏராளமான காட்டுநிலங்கள் விளைநிலங்களாக்கப்பட்டன.

கோண்ட்டுகள்

இதுவரை நாம் பார்த்த வரலாற்றுச் செய்திகள் விளிம்பு நிலையின் வேர்களை அறிமுகம் செய்துள்ளன. இச்செய்திகளின் பின்புலத்தில் கோண்ட்டுகள் என்ற விளிம்பு நிலை மக்களைக் குறித்த ஆய்வை ஆசிரியர் நடத்திச் செல்கிறார்.

நர்மதை ஆறு, கோதாவரி ஆறு என்ற இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்கள் உருவாக்கிய மத்திய மாநிலத்தின் ஒரு பகுதியானது. இப்பகுதியில் 13-ஆவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து 18-ஆவது நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான 500 ஆண்டுக் காலம் கோண்ட்டுகள் மிகுதியான எண்ணிக்கையில் வாழ்ந்து வந்துள்ளனர். இது Ôகோண்ட்வானாÕ என்றே அழைக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு சாதிகள், ஆதிவாசிகள் ஆகியோருக்கு இருப்பது போன்றே கோண்ட்டுகளும் தமக்கென தோற்றப் புராணக்கதையைக் கொண்டு உள்ளனர். இதன்படி விசுவாமித்திரர் தமது அய்ம்பது மகன்களின் வழித்தோன்றல்களை ஆரியக் குடியிருப்பு களின் எல்லையில் வாழும்படி சபித்தார். இவர்கள் இந்துப் புராணங்களில் Ôபுலிந்தர்கள்Õ என்று குறிப்பிடப்படுகின்றனர்.  இவர்கள் விந்திய மலைக்கும் சத்புரா மலைக்கும் இடையில் வாழ்ந்தனர். இப்புலிந்தர்களே கோண்ட்டுகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

அண்மைக்கால ஆய்வுகள் சிந்துசமவெளி நாகரிகத்துடன் தொடர்புடையவர்களாக கோண்ட்டு களை கூறுகின்றன. ஆரிய நாகரிகத்திற்கு முந்தைய திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அவர்களது மொழி திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தமிழ், கன்னட மொழிகளுடன் நெருக்கமானது என்றும் அறியப்பட்டுள்ளது. சிந்துசமவெளி மக்களின்  வழித் தோன்றல்களே கோண்ட்டுகள் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ற ஆங்கில அதிகாரி கிழக்கிந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்தவர் களாகவும் ஆர்.வி. ரஸ்ஸல் என்பவர் தென்இந்தியாவில் இருந்தும், மத்திய இந்தியாவில் இருந்தும் இடம் பெயர்ந்தவர்களாகவும் கோண்ட்டுகளைக் கருது கிறார்கள். ஆரியர்களுக்கு முற்பட்ட திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று திராவிட மொழி களுடனான கோண்ட்டுகளின் மொழி கொண்டு மொழித் தொடர்பின் அடிப்படையில் கூறப்படுகிறது.

ஆனால் இன்று தம் தாய்மொழியான கோண்டி மொழியைக் கைவிட்டு தாம் வாழும் பகுதியின் இந்தி, தெலுங்கு மொழியைப் பயன்படுத்துகிறார்கள்.

கோண்ட்டு மன்னர்கள்

ஆதிவாசிகள் பிரிவினராக இன்று காட்சியளிக்கும் கோண்ட்டுகளின் சமூகத்தில் இருந்தே அவர்கள் ஆளும் மன்னர்கள் உருவாகியிருந்தனர். அவர்களின் ஆளுகைக் குட்பட்ட பரந்த நிலப்பரப்பு இருந்துள்ளது. இக்கடந்த கால வரலாறு அவர்களிடையே வழங்கும் வாய்மொழிக் கதைகளில் நிலை பெற்றுள்ளது.

கோண்ட்டுகளின் வரலாற்று நினைவுகள் புதைந் துள்ள பழமரபுக்கதைகளை காலனிய ஆட்சி அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். ஃபெரோஸ்ஷா என்ற சுல்தான் முதல் முறையாக கோண்ட்டுகளின் கோண்ட்டுவான அரசின் மீது படையெடுத்தான். நர்சிங்ரே என்ற கோண்ட் மன்னன் ஏராளமான செல்வத்தைக் கொண் டிருந்தான். தன்னுடைய மேலாண்மையை ஏற்றுக் கொள்ளும்படி சுல்தான் செய்தியனுப்பினான்.

இதை ஏற்க மறுத்து அவனுடன் போரிட விரும்பிய நர்சிங்ரே மால்வா, கண்டேஷ் மன்னர்களிடம் உதவி வேண்டினான். நர்சிங்ரே தோற்க வேண்டும் என்று விரும்பிய அவ்விரு மன்னர்களும் உதவ வரவில்லை. இருந்தபோதிலும் அவன் சுல்தானை எதிர்த்துப் போரிட்டுத் தோற்றான். போர் முடிந்த பின்னர் சுல்தானுடன் பேசி போருக்கான ஈட்டுத் தொகையை வழங்கி தன் ஆட்சிப்பகுதியைத் திரும்பப் பெற்றான். ஆண்டுதோறும் கப்பம் கட்டுவதாகவும் ஒப்புக் கொண்டான். அத்துடன் சுல்தானின் அந்தப்புரத்துக்கு தன் மகள்களுள் ஒருத்தியை அனுப்பிவைத்தான்.

இதுபோன்ற போர்களும் ஒப்பந்தங்களும் மொகலாய ஆட்சியாளர்களுக்கும் கோண்ட்டு மன்னர் களுக்கும் இடையே நிகழ்ந்தன. ஆட்சிபுரிவோராக கோண்ட்டுகள் இருந்த வரலாற்றை ‘பந்தான்கள்’ என்றழைக்கப்படும் அவர்களது பரம்பரைக் கதை சொல்லிகள் பாதுகாத்து வந்துள்ளனர். இவ்வரலாறும் வரலாறு அடங்கிய பழமரபுக் கதைகளும் பெருமளவில் காலனிய ஆட்சிக்காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

பழ மரபுக் கதைகள் மட்டுமின்றி இப்பகுதியில் காணப்படும் சிதைவுற்ற கோட்டைகளும் கோண்ட்டுகளின் ஆட்சியையும் சமூகத்தையும் வெளிப்படுத்தும் சான்றுகளாக அமைந்துள்ளன.

செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் இந்துக்கள் கொண்டாடும் தசரா பண்டிகை தொடர்பாக பல்வேறு புராணக்கதைகள் உள்ளன. ஆனால் கோண்ட்டுகளின் தசரா கொண்டாட்டம் அவர்களது கடந்தகால ஆட்சி அதிகாரத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

1860-இல் நாகபுரி அரசை, ஆங்கிலேயர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்வரை கோண்ட்டு அரசர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் நிஜாம் மன்னர் ஆளும் பகுதிகளில் நுழைந்து தாக்குதல் நடத்திப் பொருட்களைக் கவர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நிலத்தின் மீதும் காடுகளின் மீதும் அவர்களது கடந்தகால உரிமையை நிலைநாட்டும் வழிமுறையாக இதைக் கருதினார்கள். அவர்களைப் பொறுத்தளவில் வரி வாங்கும் தம் உரிமையை நிலை நாட்டும் வழிமுறையாகும். ஆனால் ஆங்கிலேயர்கள் இதைக் குற்றச்செயலாகக் கருதினார்கள்.

இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆங்கிலேயர்கள் தம் படை பலத்தால் கோண்ட்டு அரசர்களையும் தலைவர்களையும் தோற்கடித்தாலும் முழுமையான வெற்றியை அவர்களால் அடையமுடிய வில்லை. அவர்களால் எளிதில் செல்லமுடியாத காட்டுப் பகுதியில் கோண்ட்டுகள் மறைந்து கொண்டதாலும் ஆங்கிலப் படையின் மீது கொரில்லாத் தாக்குதல் நிகழ்த்தியதாலும் அவர்களை முழுமையாக வெற்றி கொள்ள இயலவில்லை. கோண்ட்டு சமிந்தார்களிடம் உறுதிமொழிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள மட்டுமே முடிந்தது. திருடர்களுக்குப் பாதுகாப்பு அளிக்காமலிருப்பது வழிப்போக்கர்களின் உடைமைக்குப் பாதுகாப்பு வழங்குவது கொள்ளைகளைத் தடுப்பது என்பன உடன்படிக்கையில் இடம் பெற்றன.

இதற்குக் கைமாறாக கோண்ட் சமிந்தார்களின் சொத்துரிமையைப் பாதுகாப்பதாகவும் கோண்ட் மன்னர்களைச் சிறப்பித்து மரியாதை செலுத்துவதாகவும் ஆங்கிலேயர் ஒத்துக்கொண்டனர்.

ஆனால் பல கோண்ட்டு மன்னர்கள் ஒப்பந்தத்தை மீறி ஆங்கில ஆட்சிப் பகுதியில் சூறையாடலை நிகழ்த்தினர். கோண்ட்டு மன்னர்கள், சமிந்தார்கள் கிராமத் தலைவர்கள் இச்செயல்களின் பின்னால் இருந்தனர். ஆங்கில அதிகாரிகள் சிலர் கொலையுண்டனர். கோண்ட்டுகளின் கலகம் என்று கூறத்தக்க அளவில் பல வன்முறைச் செயல்கள் ஆங்கிலேயருக்கு எதிராக நிகழ்ந்தன. இதைக் கடுமையான முறையில் இராணு வத்தின் துணையுடன் ஆங்கிலேயர் ஒடுக்கினர்.

என்றாலும் கோண்ட்டுகளின் இனவரலாற்றில் அவர்களது கடந்தகால மன்னர்களும் சமிந்தார்களும் அவர்கள் கட்டிய கோட்டைகளும், பயன்படுத்திய பீரங்கிகளும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இக் கடந்த கால வரலாறு, மலைகளிலும் காடுகளிலும் அவர்களுக்கு இருந்த தன்னாடசி உரிமையை நினைவூட்டியது.

அவர்களது மன்னர்களைக் குறித்த கதைகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதானது சுற்றியுள்ள பகுதிளைச் சூறையாடுவதை நியாயப்படுத்த உதவியது.

கோண்ட்டு மன்னர்களைக் கட்டுப்படுத்தல்

ஆங்கில ஆட்சியின் தொடக்கத்தில் இருந்தே சமவெளிப் பகுதியின் மன்னர்களும் சமிந்தார்களும் ஆங்கிலேயரின் அதிகார மையமாக விளங்கினர். மராத்தியரின் அதிகாரத்துக்கு துணைநிற்பவர்களாகவும் மக்களின் ஆதரவு பெற்றவர்களாகவும் இருந்தமையே இவர்களைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும்படி ஆங்கிலேயரைத் தூண்டியது.

மலைப்பகுதிகளில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தவும் அம்மக்களைக் குடியானவர்களாக மாற்றவும் கோண்ட்டு களின் மன்னர்களுடன் நல்லுறவைப் பேண விரும்பினர். கோண்ட்டுகளைத் தம் பக்கம் இழுக்கும் வழிமுறையாக சமவெளி மன்னர்களுக்குரிய அடையாளங்களையும், சலுகைகளையும், ஓய்வூதியங்களையும் ஒப்பந்தங்கள் வாயிலாக கோண்ட்டு மன்னர்களுக்கு வழங்கினர். அவர்களுக்குத் தர்பார் நடத்தும் உரிமையையும், அன்பளிப்புகளையும் தலைப்பாகைகளையும், பட்டங்களையும் இராணுவ மரியாதையையும் வழங்கினர்.

இந்து சமயத்தில் இவர்களது இருப்பை வெளிப் படுத்தியதுடன் ஆங்கிலக் கல்வியை அறிமுகம் செய்தனர். இவற்றின் வாயிலாக ஆதிவாசித் தலைவர் களையும் மன்னர்களையும் தம் பிடிக்குள் கொண்டு வந்தனர். கோண்ட்டுகளை அடக்கிவைக்கும் வழி முறையாக, அவர்கள் மேற்கொண்ட இச்செயல்களை ‘நாகரிகமாக்குதல்’ என்று குறிப்பிட்டனர்.

‘நாகரிகமாக்குதல்’ என்ற பெயரில் அவர்கள் மேற்கொண்ட இந் நடவடிக்கைகளின் விளைவால், கோண்ட்டுகள் வாழும் பகுதிகளில் பள்ளிக்கூடங்களும் அதில் பயில்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கலாயிற்று. 1901-ஆம் ஆண்டில் 288 பள்ளிக்கூடங்கள் இருந்தன. 13,404 மாணவர்கள் பயின்றனர். 1941-இல் மாணவர் களின் எண்ணிக்கை 69,164 ஆக உயர்ந்தது. கல்வி பயின்ற ஆதிவாசிகள் ஆசிரியர்களாகவும், படேல் என்ற பெயரிலான கிராம அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டனர்.

கல்வியும், அரசு வேலைவாய்ப்பும் பெற்ற ஆதிவாசிகள் அய்ரோப்பியமயமாதலுக்கு ஆட்பட்டனர். மற்றொரு பக்கம் இந்துமயமாதலும் இராஜபுத்திர மயமாதலும் நிகழலாயின. கோண்ட்டு தலைவர்கள் மட்டுமின்றி கோண்ட்டு மக்களும் சாதி இந்துக்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றலாயினர். வருண முறையை ஏற்றுக்கொண்டு தம்மை இராஜபுத்திரர்கள், ஷத்திரியர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆதிவாசி சமூகத்தைவிட சாதி அடிப்படையிலான சமூகம் மிகவும் நாகரிகம் அடைந்த சமூகம் என்பதால் காலனிய அரசு இதை ஆதரித்தது. அவர்களைக் கட்டுப்படுத்துவதை இது எளிதாக்கும் என்பதும் அவர்களது கருத்தாகும்.

st 600காலனிய நிர்வாகத்தின் விரிவாக்கம்

காலனிய ஆட்சிக்கு முன்னர் நிலவிய மன்னர் ஆட்சியில் அரசுக்கும், தனிமனிதர்களுக்கும் நிலத்தின் மீதான சொத்துரிமை இல்லாதிருந்தது. காலனிய ஆட்சியில் நிலத்தின் மீதான சொத்துரிமை சமிந்தார் களுக்கும் கிராமத்தலைவர்களுக்கும் வழங்கப்பட்டது. ரயத்துவாரி முறையில் நிலஉரிமை பெற்றவர்களிடம் இருந்து வரிவாங்கப்பட்டது. காடுகளைப் பொறுத்த அளவில் அரசே முழு உரிமைகொண்டிருந்தது.காடுகள் ஒழுங்கமைப்பு, காடுகள் பாதுகாப்புச் சட்டம் என்பன வற்றின் துணையால் தன் உரிமையை நிலைநிறுத்திக் கொண்டது. காட்டுவளங்களைத் திட்டமிட்டுச் சுரண்டியது. காட்டு நிலங்களையும், தரிசு நிலங்களையும் வேளாண்மை நிலங்களாக்கியது.

ஆதிவாசிகள் மீதான கட்டுப்பாடுகள்

காலனிய ஆட்சி நிலைபெற்ற பின் தன் ஆட்சியை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. மலைப்பகுதி களிலும், காட்டுப்பகுதிகளிலும் வாழ்ந்துவந்த ஆதிவாசி களை அங்கிருந்து வெளியேற்றி நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக்கியது. இவர்களுள் சிலர், அரசின் பாதுகாப்பிலுள்ள காடுகளுக்குள் இடம்பெயர்ந்தனர். அவ்வாறு சென்றவர்கள் அவர்களது பழைய மரபுப் படியான வேட்டையாடுதல், வனப்பொருட்களைச் சேகரித்தல், எரியூட்டு வேளாண்மை கால்நடைகளை மேயவிடுதல் என்பனவற்றை மேற்கொள்ளக்கூடாது என்ற தடைக்கு ஆளானார்கள். மொத்தத்தில் சமவெளியில் வாழ்ந்தாலும் காடுகளில் வாழ்ந்தாலும் காலனிய ஆட்சியின்போது இந்தியா முழுமையும் ஆதிவாசிகள் விளிம்பு நிலையினராக மாறுவது அதிகரிக்கத் தொடங்கியது.

சமவெளியினரான சாதி இந்துக் குடியானவர்கள் மலைப்பகுதிகளில் குடியேறி வேளாண்மை செய்வதை ஆங்கிலேயர்கள் ஆதரித்தனர். வட்டிக்குக் கடன் கொடுத்தல் வாயிலாகவும், வலுக்கட்டாயமாகவும் இவர்கள் ஆதிவாசிகளின் நிலங்களைக் கைப்பற்றி அவர்களை வெளியேற்றினர். அத்துடன் அவர்களது சமூகப் பண்பாட்டு வாழ்விலும் ஊடுருவினர்.

காலனியத்தின் நிலவரிமுறையும், நவீன வேளாண் முறையும் மலைப்பகுதிகளிலும் காடுகளிலும் நிலங்களின் மீதான வேட்கையை அதிகரிக்கும் வகையிலேயே அமைந்தன.

நிலப்பட்டா வழங்கப்பட்ட போது அதன் மதிப்பு என்ன என்பதை கோண்ட்டுகள் புரிந்து கொள்ள வில்லை. நல்ல விளைச்சல் இருக்கும் போது அதை அறுவடை செய்வதும், வறட்சிக்காலங்களில் இடம் பெயர்ந்து செல்வதும் பின்னர் மீண்டும் திரும்பி வருவதும் கோண்ட்டு மக்களின் வழக்கம். விளைநிலம் கிராமத்தின் பொதுச் சொத்தாய் இருந்தது. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த புதியமுறையில் பயிர் செய்தாலும் செய்யாவிட்டாலும் வரி கட்டியாக வேண்டும். வரி செலுத்த அல்லது வரி பாக்கிக்காக கோண்ட்டுகள் தம் நிலத்தை இழந்தனர். அவர்களது நிலம் சாதி இந்து விவசாயிகளைச் சென்றடைந்தது. சாகுபடியாளர்கள் நில உடைமையாளர்களின் விவசாயத் தொழிலாளர்களாக மாறினார்.

இக்காரணங்களால் கோண்ட்டுகளின் வளமும் பண்பாடும் சிதையத் தொடங்கின. அவர்கள் வாழ்ந்த காடுகளினுள் நுழைய அவர்களை அனுமதிக்கவில்லை. காடுகளின் பலன்களை அரசு ஏலத்தில் விட்டது. ஏலம் எடுத்த ஒப்பந்தக்காரர்கள் ஆதிவாசிகளிடம் வரி வாங்கினர். ஊதியம் தராது வேலை வாங்கினர்.

மஹ§வா என்ற மரத்தின் பூக்களை தம் கால்நடை களுக்கு உணவாகக் கோண்ட்டுகள் வழங்குவர். அப்பூக்களைப் பயன்படுத்தி சாராயம் காய்ச்சுவர். உணவு கிடைக்காத போது, அப்பூக்களை உணவாகக் கொள்வர். மஹ§வா மரத்தின் பூக்களைச் சேகரிக்கும் உரிமை ஏலம் விடப்பட்ட பின், கோண்ட்டுகள் இவ்வுரிமைகளை இழந்தனர்.

இதுபோன்றே காடுகளில் வளரும் புல், வீட்டின் கூரைவேய கோண்ட்டுகளால் பயன்படுத்தப்பட்டது. மூங்கில் மரம் வேலி அடைக்கவும், கால்நடைக் கொட்டிலில் சுவர் அமைக்கவும், பரண் அமைக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஒப்பந்தக்காரர்கள் ஒவ்வொரு ஆதிவாசிகளிடமும், இவற்றைப் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் ஒரு வீட்டிற்கு இவ்வளவு என்று கட்டணம் வாங்கினார்கள். காடுகளில் மேயப் போகும் கால்நடைகளுக்கு கட்டணம் வாங்கப்பட்டது.

அரசு தன் ஆட்சியைக் காடுகளுக்கு விரிவுபடுத்திய போது பல நூற்றாண்டுகளாக அனுபவித்து வந்த இவ்உரிமைகளை ஆதிவாசிகள் இழந்தனர். அவர்களது சுயேச்சையான இடப்பெயர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு ஒரே இடத்தில் வாழும்படி கட்டாயப்படுத்தப் பட்டார்கள். காட்டில் இலை ஒன்றைப் பறிக்கக்கூட கட்டணம் செலுத்த வேண்டியதாயிற்று. வனக் காவலருக்கு ஆண்டுக்கு ஒரு ரூபாய் மாமூலும் கொடுத்தனர். வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு தங்கினால் இலவசமாகப் பொருட்கள் வழங்க வேண்டியதாய் இருந்தது.

மலைப்பகுதிகளில் நிகழ்ந்த மிகையான மக்கள் தொகைப் பெருக்கம் கோண்ட்டுகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தியது. மக்கள் தொகைப் பெருக்கத்தை மலைப்பகுதிகளில் ஏற்படுத்துவதென்பது காலனிய அரசின் திட்டமாக இருந்தது. இதன் வாயிலாக கோண்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதிருந்த நிலப்பகுதிகளை அரசிற்குரிய பகுதியாக மாற்ற முடிந்தது. காலனிய அதிகாரத்தை விரிவுபடுத்தலையும், வேளாண்மையை நவீனப்படுத்தலையும் வேளாண் உற்பத்தியை சுரண்டவும் முடிந்தது; காட்டு வளங் களையும் தாதுவளங்களையும் சுரண்ட முடிந்தது. அத்துடன் ஆதிவாசிகளை அமைதியான குடிகளாக  கட்டாயப்படுத்தி மாற்றவும் முடிந்தது.

இதற்காகவே சமவெளியில் இருந்து, இந்துக் குடியானவர்களை நிலவரி, நிலவாடகையில் சலுகை வழங்கியும், கிராம அளவிலான பதவிகள் வழங்கியும் மலைப்பகுதிகளுக்கு அழைத்து வந்தனர். இதனால் மலைப்பகுதிகளில் சமவெளி மனிதர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. (இது தொடர்பான புள்ளிவிவரங்களை ஆசிரியர் தந்துள்ளார். பக்கம். 114-116).

(தொடரும்)