அந்த சிறுவன் நடந்து வருகிறான். சுற்றிலும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த சூழலின் அழுத்தத்தை தாங்கும் வயதோ அல்லது உடல் பலமோ கொண்டவனாக அந்தச் சிறுவன் இல்லை. ஆயினும் அந்த சிறுவன் நடந்தான். அவனது கண்களில் குளமாய் தேங்கிய துக்க முத்துக்கள் சிதறி விழுகின்றன. சிதறிய முத்துக்கள் உள்ளக் கொதிப்பின் வெம்மையை படர விடுகின்றன. அதில், தோல்கள் கருகுகின்றனவோ என்று அய்யுறும் அளவு, ஆற்றாமையின் துயரம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.
கரி மருந்தின் நாற்றமும், புதிய ரத்தத்தின் நாற்றமும் கலந்து அந்த சூழலை இன்னும் மோசமாக்கியிருந்தன. இறந்து குளிந்த உடல்கள் வெளியேற்றியிருந்த வெப்பம் வெளியெங்கும் நிரப்பியிருந்தது. அந்த வெப்பம் அச்சமூட்டும் வகையில் அமனுஸ்யமாக இருந்தது. ஆழ்ந்த, புகை மண்டிய அமைதி பெரும் களக்கத்தை உருவாக்குவதாக இருந்தது. உயர்ந்து நின்ற மதில் சுவரில் தெறித்து சிதறி படிந்த புத்தம் புதிய சதை துணுக்குகள் அந்த பேரமைதிக்கு கருமை வண்ணம் பூசின. ஆம், அது மயானங்(களின்) அமைதி. ஆயினும் சிலர் குற்றுயிரும், கொலையுயிருமாக முனகும் குரல் ஆங்காங்கே கேட்கிறது. அந்த குரல்கள் அமைதியில் உறைந்துபோய் செவிகளின் கவனத்தை ஈர்க்கும் வலுவை இழந்து தேம்பின.
மண்ணின் நிறம் என்ன என்று மறந்து போகும் அளவு அங்கே ரத்தம் விளாறிக் கிடந்தது பூமி. அன்று சிவந்தது பூமி மட்டுமல்ல.
சிவந்த கண்கள்:
அமெரிக்காவில் ஒரு புரட்சிகர இதழில் வந்த விளம்பரம் இது: "இந்திய புரட்சிக்கு ஆள் தேவை, சம்பளம் - புரட்சிக்காரன் என்ற பட்டம், துப்பாக்கி குண்டு". அது கதார் பார்ட்டி எனப்படும் புரட்சிகர அமைப்பின் விளம்பரம். சம்பளத்தை ஏற்றுக் கொண்டு இணைந்தவர்களில் அஜித் சிங் என்ற பெரியவரும் ஒருவர். பிரிட்டிஸ் அரசை எதிர்த்து சதி செய்ததாக ஒன்றல்ல, 22 வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அவர் சம்பளத்திற்க்கேற்ற பணியைச் செய்தார்.
அவர் இப்போழுது பஞ்சாபின் கோதுமை வயல்களின் ஓடாக ஓடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னே குதறி எடுக்கும் கொலை வெறியுடன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு பெரும் மூச்சிறைப்புடன் ஏகாதிபத்திய பிரிட்டிஸ் வெறி நாய்கள் பெரும் வேகத்தில் துரத்திக் கொண்டிருந்தன. அவர் பிறகு துருக்கி, ஆஸ்திரியா, ஜெர்மனி, என்று கடைசியில் பிரெசில் வரை துரத்தப்பட்டார்.
அவருக்கு ஒரு பாசமிகு மருமகன் இருந்தான். அவன் ஒரு கன்றுக் குட்டியைப் போன்ற மென்மையும், துள்ளிக் குதிக்கும் உட்சாகமும் நிரம்பியவனாக இருந்தான். அவன் கண்கள் மட்டும்... நீங்கள் நேர்மையானவர் இல்லையெனில்.. அவனது கண்களைப் பார்க்காதீர்கள் பயந்து விடுவீர்கள். அவை நெருப்புக் கோளங்களைப் போல கனன்று கொண்டிருந்தன. பிரிட்டிஸ் ஏகாதிப்பத்தியம் எனும் பெருங்காட்டை எரித்து சாம்பலாக்க வந்த அந்த அக்னி குஞ்சின் பெயர் 'பகத் சிங்'. அவன் கண்களில் சுதந்திர தனலையும், உள்ளத்தில் உலை போல கொதிக்கும் விடுதலை ஊற்றையும் கொண்டிருந்தான்.
அது பிரிட்டிஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு தீ இந்தியா முழுவதும் பரவி படர்ந்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கி தனது முழு வேகத்தில் ஆடத் தொடங்கியிருந்த வேளை. இந்தியா முழுவதும் போராட்ட வடிவங்கள், நோக்கங்கள் மாறத் தொடங்கியிருந்த வேளை. பஞ்சாப் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்பாக முழித்துக் கொண்டு தனது போராட்டத்தை நவீன வழியில் ஏற்கனவே தொடங்கிவிட்டிருந்த வேளை.
அன்று, சுதந்திர வேள்வித் தீக்கு விறகுகளாய் வீழ்ந்த வாசமிகு மலர்களின் எண்ணிக்கை சொல்லிமாளாது. அந்த மலர்களுக்கும் குடும்பங்கள் இருந்தன, அழகிய குழந்தைகள் இருந்தன, நல்ல மனைவி வாய்த்திருந்தாள், ஒரு சலாம் போட்டால் நித்தம் சோறு தானே தேடி வர, உட்கார்ந்த இடத்தில் உண்ணும் வாழ்க்கைக்கான வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
முட்டாள்கள், அவர்கள் அந்த சுகங்களை ஆண்டு அனுபவிக்கும் அறிவைப் பெற்றிருக்கவில்லை, அதனால்தான் இன்று நாம் ஒரு அரைகுறை சுதந்திரத்தையும் கூட வீணடிக்கும் - மறுகாலனியத்தை, நாடு மீண்டும் அடிமையாவதை, கண்ணாற ரசிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.
************
இரண்டு இந்தியா, மத்தியில் பகத்சிங்:
1612-ல் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியார், ஜஹாங்கீர் மன்னனை பல்வேறு பரிசுப் பொருட்கள் கொடுத்து வளைத்துப் போட்டு சூரத்தில் தனது முதல் கம்பெனியை(வணிக மையம்) தொடங்கினான். கமிசன் பணத்திற்க்கு மயங்கிய ஜஹாங்கீர் மன்னன், பிரிட்டிஸாருடன் தனது உறவை குறிப்பிட்டு சிலாகித்து எழுதிய கடிதம் இன்றைய இந்திய தரகு வர்க்கத்தின் பிறந்த தேதி என்ன என்பதற்க்கு சாட்சியாக இன்றும் நிற்கிறது:
"உங்களது ராஜாங்கத்தின் அன்பிற்க்கு இணங்கி, எனது ஆளுமையின் கீழுள்ள அரசுகள், துறைமுகங்கள் அனைத்திலும் வந்திறங்கும் ஆங்கிலேய தேசத்து வியாபாரிகள் எனது நண்பர்களாக கருதி வரவேற்க்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளேன். இங்கு அவர்கள் எங்கு வாழ விரும்புகிறார்களோ அங்கு முழு சுதந்திரத்துடன், எந்த தடையுமின்றி வாழலாம். அவர்கள் எந்த துறைமுகத்தில் வந்திறங்குகிறார்களோ அங்கு போர்த்துகீசியர்களோ அல்லது வேறு யாரும் அவர்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க துணிய மாட்டார்கள். அதே போல அவர்கள் தங்கும் இடத்திலும் கூட யாரும் அவர்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க துணிய மாட்டார்கள். அவர்கள் விருப்பம் போல விற்க்கலாம், வாங்கலாம், அவர்கள் நாட்டுக்கு எதையும் கொண்டு செல்லலாம் என்பதற்க்கு உத்திரவாதம் கொடுக்குமாறு எனது ஆளுனர்கள், தளபதிகளுக்கும் கட்டளை பிறப்பித்துள்ளேன். இதே போல நமது நட்பையும், அன்பையும் பறைசாற்றும் நடவடிக்கையாக, எனது அரண்மனையை அலங்கரிக்க உதவும் அனைத்து விதமான பரிசுப் பொருட்களையும், கலைப் பொருட்களையும் கப்பல்களில் கொண்டு வருவதற்க்கு மேதகு அரசாங்கம் தனது வியாபாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்...."
இன்றைக்கு ஸ்பெசல் எக்கானாமிக் சோன்(SEZ) என்ற பெயரில் அதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜஹாங்கீருக்குப் பதில் நாம் வோட்டு போட்டு தேர்ந்தெடுத்த புரோக்கர்கள். இதை வெறுமனே கட்டுரையின் வசதிக்காக SEZயையும், அன்றைய பிரிட்டிஸ் வணிக மையங்களையும் ஒப்பீட்டு கூறவில்லை. உண்மையில் அதன் அனைத்து அம்சங்களிலும் SEZ என்பவை இந்தியாவுக்குள் இருக்கும் அன்னிய தேசங்கள். அவை ஆரம்ப கால கிழக்கிந்திய கம்பேனியின் வணிக மையங்களிலிருந்து எந்த வகையிலும் மாறுபட்டதில்லை.
1600 களில் மன்னரிடம் சலுகைகளை கெஞ்சிப் பெற வேண்டிய நிலையிலிருந்த கிழக்கிந்திய கம்பேனி. 1700 களில் தனக்கென சொந்த ராணூவத்துடன் தனது வணிக மையங்களில் முழு கட்டுப்பாட்டை உறுதி செய்த, அரசை நிர்ப்பந்திக்கும் சக்தி பெற்றவையாக மாறின. இதனைக் கொண்டு 1717-ல் முழுமையான சுங்க வரி விலக்கைப் பெற்றனர்.
இதே நடைமுறை இன்றும் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் மன்மோகன் சிங், தனது பொருளாதார திட்டங்களின் ஒரு இலக்காக சேவை வரி ராஜாங்கத்தைச் சொல்கிறார். அதாவது சுங்க வரியை முற்றிலுமாக ஒழித்து, வெறும் சேவை வரி மட்டும் இருக்கும் வரி அமைப்பை நோக்கி போவதுதான் அவரது திட்டம். இதற்க்காக வருடம் 1% வீதம் சேவை வரியை உயர்த்துவது, சேவை வரியின் கீழ் வரும் துறைகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, சுங்க வரியின் கீழ் வரும் துறைகளை குறைத்துக் கொண்டே வந்து முற்றிலும் அதை ஒழிப்பது. இதுதான் திட்டம். ஆக, ஏகாதிபத்தியங்கள் கட்ட வேண்டிய வரிகளையும் நாம்தான் கட்ட வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.
பிளாசிப் போரின் வெற்றிக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பேனி தனது ராணுவ வலிமையைக் கொண்டே இந்திய தேசங்களை தனது பொருளாதார, அரசியல் நலன்களுக்கு அடிபணியச் செய்தது. அதில் இரண்டு விதமான தேசங்கள் உருவாகின. ஜான்ஸி ராணி போன்றவர்களிடமிருந்து பிடுங்கிய நேரடி ஆட்சியில் உள்ள பகுதிகள். பகுதி ராஜாக்களிடமிருந்து வரி விதிப்பு, வெளியுறவுத் துறை, ராணுவம் போன்ற துறைகளைக் கட்டுப் படுத்தும் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்ட பதிலி அரசு உள்ள பகுதிகள். அதாவது ராஜாக்கள் எல்லாம் கம்பேனியின் பிரதினிதிகளாயினர். இதை எதிர்த்து விடுதலைப் போரில் மாண்ட மாவீரர்கள்தான் வீரபாண்டிய கட்ட பொம்மன், சின்ன மருது முதலானோர்.
இதில் இந்த இரண்டாவது விசயம்தான் தற்பொழுது இந்தியாவில் நடந்து வருகிறது. அதாவது உள்ளூர் ராஜாக்கள் ஏகாதிபத்திய பிரதினிதிகளாக நம்மை சுரண்டக் கொடுப்பது. இதற்க்கு ஜனநாயகம் எனும் கவர்ச்சிகரமான பெயர் வேறு.
வரி விதிப்பைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியத்துக்கு வருமான வரிச் சலுகை, குறைந்த விலை மின்சாரம், இலவச நிலம், சுங்க வரி ரத்து என ஒரு பக்கம் கொடுத்து இன்னொரு பக்கம் மக்களின் பெயரில் கடன் வாங்கி அவர்களுக்கான உள் கட்டுமானங்களை கட்டி வருகிறார்கள். இதே நேரத்தில் உள்ளூர் போட்டியை ஒழிப்பதற்க்கு VAT வரி விதிப்பை திணித்து முற்று முதலாக நமது வரிவிதிப்பின் பலன்களை அவர்களின் வியாபார நலன்களுக்கு மாற்றி விட்டார்கள்.
வெளியுறவுத் துறை: ஈரானுக்கு எதிராக நாம் ஐ.நா. வில் போட்ட வோட்டு, நட்வர் சிங் பிரச்சனை, சமீபத்தில் இந்தியாவின் நிலைப்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து கண்டனத்துக்காளான அமெரிக்க தூதுவர், முசாரபின் சமீபத்திய புத்தகமான- தீச் சுவட்டில் நான்(In the Line of fire) - அவர் ஏதோ ஒரு சக்தி இந்திய பாகிஸ்தான் ஒப்பந்தத்தை நிறைவேறாமல் கெடுத்ததாக கூறியிருந்தது ஆகியன மிகத் தெளிவாக இந்திய வெளியுறவுத் துறை நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதைக் கூறியது.
ராணுவம்: சமீபத்தில் போடப்பட்ட ராணுவ ஒப்பந்தம் நமது ராணுவத்தை அமெரிக்க ராணுவத்தின் துணை ராணுவமாக மாற்றி விட்டது. இது தவிர்த்து அணு ஆயுத ஒப்பந்தம் நமது நாட்டின் பாதுகாப்பு அமெரிக்காவின் கையில் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஆக இந்த விசயத்திலும் கூட நமது நாடு எந்த வகையிலும் பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இருந்த எட்டப்பரின் சமஸ்தானத்தில் இருந்த சுய உரிமையின் அளவைத் தாண்டி ஒரு எட்டு அடிகூட போகவில்லை.
அன்றைக்கு பிரிட்டிஸாரின் வரி சுரண்டலை ஈடுகட்ட விவசாயிகளைச் சுரண்டியதால் பல இடங்களில் விவசாய கிளர்ச்சிகள் வெடித்துக் கிளம்பின. மாப்ளா கலகம்(1805), முதல் இந்திய சுதந்திரப் போர்(1857), முதல் தென்னிந்திய சுதந்திரப் போர்(1805) இவையெல்லாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயிகளின் கோபத்துடன் தொடர்பு கொண்டிருந்தன.
இந்தியா அரசர்களைப் பற்றிய பாடங்களில் நாம் இன்றும் படிப்பது அசோகர் மரம் நட்டினார், குளம் வெட்டினார் என்பதைத்தான். இதன் பொருள் என்னவென்றால் இந்தியாவில் பொது பணித்துறை என்பது அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இதில் செலவாகும் பணத்தை மிச்சப்படுத்தி பிரிட்டிஸ்சார் கொழுக்கலாம் என்று பொதுப்பணித்துறையை முற்றிலுமாக பிரிட்டிஸ் அரசு கைகழுவியது. இதன் விளைவாக விவசாயம் பொய்த்து பல கொடுமையான பஞ்சங்கள் வந்து லட்சங்களில் காவு கொண்டன.
இன்றைய அரசும் தனது பொதுப் பணித்துறையை கைகழுவிக் கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி இயற்கை வளங்களை ஏகாதிபத்தியத்துக்கு பட்டயம் வேறு எழுதிக் கொடுத்து வருகிறது. ஆறு, குளம் முதலான அனைத்து வளங்களும் அவனது சந்தைக்கு சேவை செய்ய தாரை வார்க்கிறது. விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அன்றைக்கு தனது துணி தொழிற்சாலைகளுக்கு தேவையான் சாய பயிர்களை பயிரிட நிர்பந்தித்து விவசாயிகளை கொன்று குவித்தான் கும்பினிக்காரன். இன்று அரிசி, கோதுமை, கரும்பு என்று நாட்டு மக்களுக்கு தேவையான விவசாய பொருட்களை விளைவிப்பவர்களை நஸ்டத்திற்க்கு தள்ளி அவர்களை பூ பயிரிட செய்து தனது சென்ட் வியாபரத்திற்க்கான பின் நிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறான்.
"ஊரன் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய் காசுக்கு ரெண்டு விற்க்க சொல்லி காயிதம் போட்டான் வெள்ளக்காரன்" -என்பதுதான் இன்றைய தேசிய முதலாளிகளின் நிலை. தனது சொந்த முதலீட்டில் ஆரம்பிக்கும் பனியன் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பனியனுக்கு ஒரு பன்னாட்டு கம்பேனி வந்து விலை வைப்பான்.
பிரிட்டிஸின் நேரடி ஆதிக்கதில் இருந்தது முதல் இந்தியா, தற்பொழுது WTO, உலக வங்கி, மற்றும் பன்னாட்டு நிதி ஆதிக்க கும்பல்களின் நேரடி ஆதிக்கதில் இருப்பது இரண்டாவது இந்தியா. இரண்டுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். முதலில் வைப்பாட்டி, இரண்டாவதில் பொட்டு கட்டி விடப்பட்ட தேவதாசி. வேறு வித்தியாசம் எதுவும் இல்லை.
***********
விடுதலை வேள்வியில் பகத்சிங்:
1600-ல் ஆரம்பித்த இந்த சுரண்டல் வளர்ந்து முழுமையாக இந்தியா முழுவதும் ஆக்கிரமித்து ஒரு அரசாங்கமாக தன்னை 1800களில் மாற்றிக் கொண்டது. இந்த காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் இந்தியா முழுவதும் கிளர்ந்தெழுந்தன.
இவை ஒரு அலை வடிவில் மேலோங்குவதும் பின்வாங்குவதுமாக பிரிட்டிஸ் இந்தியாவைத் தொடர்ந்து தாக்கி அரசியலமைப்பில் தொடர் மாற்றங்களை ஏற்படுத்தி வந்த போராட்டங்களாக இருந்தன. இந்த நிலையில் இந்த போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய காந்தி ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டார்.
காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை அவர் காட்டிக் கொடுத்த பிற்பாடு ஏற்பட்ட ஒரு மோன நிலையைக் கலைக்கும் சிங்கத்தின் கர்ஞனையாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உள்ளே நுழைகிறார் பகத் சிங்.
செப்டம்பர் 27, 1907 அதாவது நேற்றிலிருந்து சரியாக 99 வருடங்களுக்கு முன்பு. விவசாயிகள் சாயப் பயிர் விளைவிக்க மறுத்து போரிட்ட வீரம் செறிந்த இந்திய திரு நாட்டில். துப்பாக்கி பயிரிடலாமா என்று யோசித்த பகத் சிங் என்ற புரட்சிகர இளைஞன் பூமிக்கு வந்தான்.
அவனது குடும்பமே சுதந்திரப் போராட்டத்தில் சிறப்பான பங்களிப்பு செய்த பாரம்பரியத்தை உடையது. அவனும் கூட தனது மக்களுக்கு ஏகாதிபத்தியம் இழைத்த கொடுமைகளை மனதில் பெரும் நெருப்பாய் பூட்டி வைத்திருந்தான்.
சந்திரசேகர் ஆசாத்தால் உருவாக்கப்பட்ட இந்துஸ்தான் சோசலிச ராணுவ குடியரசு எனும் அமைப்பில் தன்னை பகத்சிங் இணைத்துக் கொண்டார்.
லாலாலஜபதிராயை லத்தியால் அடித்தே(1928) கொன்ற சாண்டர்சன் என்ற ஏகாதிபத்திய கொழுப்பு ஏறிய பன்றியை சுட்டுக் கொன்றதுதான் மக்கள் மத்தியில் இந்த அமைப்பை பிரபலப்படுத்திய முதல் நடவடிக்கை.
இதயனையடுத்து, தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் சட்டம் ஒன்றும், மக்களின் போராடும் உரிமைகளைப் பறிக்கும் சட்டம் ஒன்றும் நிறைவேற்றப்பட்ட அன்று பாராளுமன்றத்தில் யாரும் இல்லாத இடத்தில் குண்டு வீசி சரணடைந்தனர்.
யார் இந்த பகத்சிங்:
பகத்சிங்கை சாதரணமான பரவசமான துணிச்சல நடவடிக்கைக்கு சொந்தக்கார இளைஞர் என்று சுருக்கிப் பார்க்க முடியுமா?.
அவரது தெளிந்த சிந்தனைகளைப் பார்க்கும் பொழுது அவ்வாறு எண்ணத் தோன்றவில்லை. அரசியல் ரீதியாக் சுதந்திரப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் காந்தியின் ஏகாதிபத்திய சேவை-அகிம்சா எனும் போலி தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளாகவே பகத்சிங்கின் நடவடிக்கைகள் இருந்தன.
காந்தி 'வெடிகுண்டின் பாதை' என்ற புத்தகத்தை எழுதினார் அதற்க்கு எதிராக 'வெடிகுண்டின் தத்துவம்' என்ற ஒரு அருமையான புத்தகத்தை எழுதினார்.
முக்கியமாக, இந்துஸ்தான் சோசலிஸ்டு ராணுவ குடியரசின் பல்வேறு பிரிட்டிஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, காந்தியின் போலி அஹிம்சா தத்துவ மயக்கதிலிருந்து மக்களின் அரசியல் உணர்வு மட்டத்தை மீட்டெடுத்து, தட்டி எழுப்ப வேண்டியதன் தேவையை உணர்ந்து, வரலாறு முழுவதும் காந்தியின் சுதந்திரப் போராட்ட பங்களிப்பை கேள்விக்குள்ளாக்கும் ஒரு மிகப் பெரிய நடவடிக்கையாகவே பாரளுமன்ற குண்டு வேடிப்பைப் பார்க்க முடியும்.
அதாவது இந்திய சுதந்திரப் போராட்ட மரபில் தமது பங்களிப்பு என்றென்றைக்கும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் ஒரு விசயம் என்பதை தெளிவாக உணர்ந்து திட்டமிட்டதுதான் அந்த குண்டு வீசி சரணடையும் நடவடிக்கை. அது உண்மையில் தூங்கிக் கொண்டிருந்த இந்தியர்களின் காதுகளை கிழித்து விடுதலை உணர்வு ஊட்டச் செய்வதற்க்கான ஒரு அரசியல் செயல் தந்திர நடவடிக்கையாகவே உள்ளது. அந்த இலக்கை வெற்றிகரமாக எட்டினார் பகத்சிங்.
கோர்ட் நடவடிக்கைகளை பிரச்சார மேடையாக மாற்றி நாடு முழுவதும் ஒரு பேரலையை உருவாக்கினார். அவர் இருந்த வரை காந்திக்கும், ஏகாதிபத்தியத்திற்க்கும் பேரச்சத்தை ஏற்படுத்தி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் பகத் சிங்.
அன்றைக்கு இப்படி புரட்சிகரமாக இளைஞர்கள் இருந்த பொழுதுதான். இந்திய கம்யுனிஸ்டு கட்சி தனது முதல் மாநாட்டில் வன்முறை போராட்டம் பற்றி தெளிவான தீர்மானம் கூட இயற்ற வக்கின்றி தடுமாறிக் கொண்டிருந்தது. வோட்டுக் கட்சிகளின் தடுமாற்றம் அங்கே ஆரம்பிக்கிறது.
அவர் இறந்தார். ஆனால் ஒரு விதையாக மண்ணில் புதைந்தார். ஆயிரமாயிரம் வீரர்களை தேசாபிமானிகளை இன்றுவரை உருவாக்கும் வல்லமை படைத்த ஒரு கற்பக விருட்சமாக இந்த மண்ணில் வேரூண்றி நிற்கிறார். இந்த விசயத்தில் காந்தி எந்த காலத்திலும் பகத்சிங்கின் அருகில் கூட வர அருகதையின்றி வெறும் கதையாடல்களுக்கான கருப்பொருளாக, புனித பிம்பமாக எஞ்சி நிற்கிறார்.
இதோ பகத்சிங்கின் செய்தி, சிறை எண் 14-ல் பொறிக்கப்பட்டிருந்தது. "உயிர்வாழ வேண்டும் என விரும்பும் எனது இயற்கையான விருப்பத்தை மறைக்க எதுமில்லை. ஆனால் நான் உயிர்வாழ்வது சில வரையறைகளுக்குற்பட்டது. பரோலிலோ அல்லது சிறையிலோ வாழ்வதற்க்கு எனக்கு விருப்பமில்லை. புரட்சிகர அமைப்புகளின் குவிமையமாக இன்று நானிருக்கிறேன். அதன் தியாகங்கள் என்னை மிக உயர்ந்த இடத்தில் வைத்துள்ளன. இந்த இடம் மிக உயர்ந்தது, எந்தளவுக்கு என்றால் ஒருவேளை நான் உயிருடன் மீண்டு வந்தால், அந்த உயர்ந்த மதிப்பிற்க்கு தகுதியாக நான் வாழ்வது சந்தேகமே. தற்பொழுது எனது பலகீனங்கள் மக்களுக்கு தெரியாது, ஆனால் தூக்குமேடையை என்னால் ஏமாற்ற முடிந்தால், ஒரு நாள் எனது பலகீனங்கள் வெளி தெரிந்து விடும். எதிர்காலத்தில் எனது புரட்சிகர மன உணர்வு குன்றலாம், அது அணைந்தும் கூட போகலாம்.
ஆனால், ஒரு வீரனைப் போல முகத்தில் புன்னகை வழிய இப்பொழுது தூக்கிலிடப்பட்டால், காலாகலத்திற்க்கும் இந்தியத் தாய்மார்கள் தங்களது குழந்தைகளையும் கூட எனது எடுத்துக்காட்டை பின்பற்றச் சொல்லி ஊக்கப்படுத்துவார்கள். எங்களை தூக்கில் போடுவது, விடுதலை வேள்வியில் மலரும் மலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். அதன் அளவு எந்தளவுக்கு இருக்குமென்றால், இனிமேலும் ஏகாதிபத்திய சாத்தான்களால் புரட்சியை எதிர்த்து நிற்க முடியாது என்ற அளவில் இருக்கும்........"
**********
மீண்டும் பகத்சிங்கின் தேவை:
கமிசன் பணத்துக்கு நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்கம் எனும் ஒரு புதிய வர்க்கத்தின் வித்து, அன்றைய ஜஹாங்கீர் மன்னன் பிரிட்டிஸ்ஸாருடன் செய்து கொண்ட வியாபார உறவில் போடப்பட்டது. அது இன்று பரிணாம வளர்ச்சியடைந்து அம்பானிகளாக, மன்மோகன்களாக, வாஜ்பேயிகளாக, புத்ததேவ்களாக நிற்கிறது.
காலனியாதிக்கத்துக்கு நன்றி சொல்லிய மன்மோகன் சிங் எனும் மாமா, என்ரான் கம்பேனிக்கு இந்தியாவை கூட்டிக் கொடுக்கும் வேலை செய்த மாமா பா. சிதம்பரம், புனிதம், பாரம்பரியம் என்று புருடா விட்டு மத வேறியைத் தூண்டிக்கொண்டே இன்னொரு பக்கம் புனித கங்கை மாதாவை சுயஸ் டிமெடரண்ட் கம்பேனிக்கு கூட்டிக் கொடுத்த வாஜ்பேயி, SEZ மற்றும் இதர உலகமய திட்டங்களை மனித முகத்துடன் செயல்படுத்த சொல்லும் வோட்டுக் கட்சி கம்யுனிஸ்டுகள்.
இப்படி இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில், நவீன கறுப்புப் பார்ப்பனர்களாகவும், தரகு வர்க்க அரசியல் வியாபாரிகளாகவும் வோட்டுக் கட்சி தலைவர்கள் பரிணமித்திருக்கிற நிலையை பார்த்தால் வேறு என்ன சொல்லத் தோன்றும், நாடு அடிமையாகிறது என்பதை தவிர்த்து.
எப்படி இன்றைக்கு பார்ப்பினிய கட்டமைப்பு, பார்ப்பனியத்தை உள்வாங்கிய எந்த சாதியைச் சேர்ந்தவனும் அதிகார தலைமை பீடத்திற்க்கு வரலாம் என்று காலத்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டதோ அது போல இன்றைய ஏகாதிபத்திய மறுகாலனிய கட்டமைப்பு, ஏகாதிபத்திய தரகு பண்பாட்டை சுவிகரித்துக் கொண்ட யாரும் அரசியல் தலைமை பீடத்திற்க்கு வரலாம் என்று காலத்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டது.
அதுதான் புதிய மொந்தையில் பழைய கள். அதுதான் இந்த போலி ஜன நாயகம் சட்டமன்ற நாடாளுமன்ற அரசியல். இந்த சட்டமன்ற நாடாளுமன்ற சட்டிக்குள் உட்கார்ந்து எவ்வளவு உயர்ந்த ரக குதிரையை ஓட்டினாலும், அது ஏகாதிபத்தியம், பார்ப்பனியம் வரையறுத்த எல்லையைத் தாண்டி ஓடாது.
இந்த கட்டமைப்புக்கு வெளியே, மாற்று அமைப்பு தேடி, வழி தெரியாமல், விஜயகாந்துகளை ஊக்குவிக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம் சரியான அரசியல் விதைகளை விதைத்து, தோழர் பகத்சிங் வழியில் இந்திய விடுதலையை முழுமைப் பெறச் செய்யும் கடமை, நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
அது உறுதியாக சட்டங்களிடையே கடவுளர் படங்களாக மாற வழிவகுக்கும் காந்தியின் வழியல்ல, நடைமுறையில் மக்களின் விடுதலையை உத்திரவாதப் படுத்திக் கொடுக்கும் பகத்சிங் வழிதான் என்பது வரலாறு நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம். இன்றைக்கு பகத்சிங்கின் பிறந்த நாளில் நமது அண்ணை தேசத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் பங்கெடுக்க உறுதியெடுப்போம்.
ஊர் கூடி தேரிழுத்தோம், தேர் நகர்ந்தது தெரியும், அதன் இலக்கை அடைந்ததா தெரியவில்லை?
இன்று, வீழழுக்கு நீரிறைக்கிறோம். தேர் நடுவீதியில் சமைந்து நிற்கிறது. வா மீண்டும் இழுப்போம். அதன் வழித் தடத்தில் கொண்டு சேர்ப்போம்!
(பகத் சிங், ஜாலியன் வாலாபாக் படுகொலைக் களத்தில் இருப்பதாக வரும் பகுதி மிகைப் படுத்தப்பட்டது. அவர் அங்கு சென்று இரத்தம் தோய்ந்த மண்ணை அள்ளி பத்திரப்படுத்திக் கொண்டார் என்ற அளவில்தான் எனக்கு விசயம் தெரியும். மற்றபடி அவர் அங்கு சென்ற பொழுது அந்த கொலைக் களம் என்ன நிலைமையில் இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சி எடுக்கவில்லை.)
- அசுரன்