காஷ்மீரைப் பாருங்கள்

நம்மால் அறியப்பட்ட காஷ்மீர்!

நாம் அறிய வேண்டிய காஷ்மீர்! 

1.  இந்திய ஆட்சியின்கீழ் உள்ள (அ) ஜம்மு சமவெளிப்பகுதி, (ஆ) காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் (இ) லடாக் என்கிற பனிமலைப் பகுதி;

2.‘ஆசாத் காஷ்மீர்’ எனப் பாக்கித்தானியராலும், ‘பாக்கித்தானியரால் கைப்பற்றப்பட்ட காஷ்மீர்’ என இந்திய அரசாலும் குறிப்பிடப்படும் - மிர்பூர், பூஞ்ச், முசாஃப்ராபாத் உள்ளிட்ட நிலப்பகுதிகள்;

3. பாக்கித்தான் அரசு தன் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்ட - கில்கிட், ஹூன்சா, நாகர், ஸ்கர்டு, பால்டிஸ்தான் முதலான பனிமலைப் பகுதிகள்;

4. சீனா, இந்தியாவிடமிருந்து நேரடியாகக் கைப்பற்றிக் கொண்ட அக்சாய்சின் என்ற பகுதியும், பாக்கித் தான் சீனாவுக்குத் தானமாகக் கொடுத்த ஷாக்ஸ்கம் என்ற நிலப்பகுதியும் உள்ளிட்ட பெரிய நிலப்பரப்பு கள் இவற்றையே ‘நம்மால் அறியப்பட்ட காஷ்மீர்’ என்பது குறிக்கும்.

இங்கே கீழே தரப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் படம் மேலே கண்ட விவரங்களை நமக்குத் தெளிவாக அறிவிக்கும்.

இந்திய அரசு தரும் விவரப்படி இந்த மொத்தப் பகுதியிலும் உள்ள மக்கள் எட்டு வெவ்வேறு மொழி களைப் பேசுகிறார்கள்; வெவ்வேறு பண்பாடுகளைக் கைக்கொண்டு வாழுகிறார்கள்.

ஜம்முவில் பெரும்பான்மையினர் இந்துக்கள்; காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையினர் இஸ்லா மியர்கள். இவர்கள் சன்னி, ஷியா பிரிவுகளாக உள்ளனர். லடாக் பகுதியினரில் பெரும்பகுதியினர் பௌத்தர்கள்.

இப்பகுதி மக்களுள் பெரும்பாலோர் காஷ்மீரி மொழி பேசுகிறார்கள். இவர்களுள் அய்ந்தில் ஒரு பங்கினராக இருக்கிற குஜ்ஜர்கள் காஷ்மீரி மொழி பேசுவதில்லை.

இந்த காஷ்மீர் ஒரு பழம்பெரும் நாடு என்பது உண்மை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் இந்த நாட்டை ஆண்டுள்ளார். இன்று காஷ்மீரின் தலைநகராக உள்ள சிறீநகரை உருவாக்கிய வரே அசோகர்தான்.

பிந்திய காலத்தில் குஷானரான கனிஷ்கர், ஹர்ஷர், இராசபுத்திரரான அவந்தி வர்மன் போன்றோர் ஆட்சி புரிந்தனர்.

கி.பி.1015, 1021ஆம் ஆண்டுகளில் முகமது கஜினி இப்பகுதியில் கொள்ளை யடிக்க முயன்று தோற்றுப் போனார்.

கி.பி.1192இல் படை யெடுத்த கோரி முகம்மது இரசபுத்திர அரசர்களைத் தோற்கடித்து விலை மதிப் பற்ற செல்வத்தைக் கொள்ளை கொண்டார்.

கி.பி.14ஆம் நூற்றாண் டின் தொடக்கத்தில் புல்புல் ஷா என்ற இஸ்லாமிய மன்னர், இந்துக்களில் கீழ்ச் சாதி மக்களாக வைக்கப் பட்டிருந்தவர்களை இஸ்லாமி யராக மாற்ற எல்லாம் செய்தார். இஸ்லாமியம் வலிமை பெற்றது.

கி.பி.1420இல் குத்புதீனின் பேரன் சுல்தான் ஜெயனுலாபுதீன் ஆட்சிக்கு வந்தார். அவர் மதங்களைக் கடந்து எல்லா மக்களிடமும் அன்பு காட்டினார். அதனால் 50 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

சில தலைமுறைகளுக்குப் பிறகு, 1586இல் முகலாயப் பேரரசர் அக்பர் காஷ்மீர் மீது படையெடுத்துத் தன் ஆட்சியை நிறுவினார். பின்னர் ஜஹாங்கீர், ஷாஜஹான் ஆகியோர் ஆண்டனர். பிறகு ஆட்சியேற்ற ஒளரங்கசீப் ஷியா முஸ்லிம்களை வெறுத்தார்; சன்னி முஸ்லிம் களை ஆதரித்தார். எனவே நாட்டில் குழப்பங்கள் அதிகரித்தன. 1752இல் ஆப்கானிஸ்தானத்து அகமது ஷா அப்தாலி என்பவர் காஷ்மீரைக் கைப்பற்றினார். ஆப்கானியர் ஆட்சி 60 ஆண்டுகள் நடைபெற்றது.

ஆப்கன் அரசின் பிரதிநிதிகளாக ‘சுபேதார்கள்’ செயல்பட்டார்கள். அவர்களின் கொடுமையைத் தாங்க முடியாத காஷ்மீரி பண்டிட்கள் என்கிற பார்ப்பனர்கள் பஞ்சாப் நாட்டை ஆண்ட சீக்கிய மன்னரிடம் முறை யிட்டனர். அப்போதைய சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் 1819 சூன் மாதம் படையெடுத்து, காஷ்மீரைக் கைப் பற்றினார்.

ரஞ்சித் சிங்கிடம் போர் வீரராக இருந்த இராசபுத் திரரான குலாப் சிங், அப்படைக்கே தளபதியாக மாறி னார். இறுதியில் ஜம்மு பகுதியின் குறுநில மன்னரா கவே அமர்த்தப்பட்டார்.

ரஞ்சித் சிங் காலத்திலேயே, குலாப் சிங் 1834இல் லடாக் மீது படையெடுத்து வென்று அதையும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தார். 1838இல் ரஞ்சித் சிங் மறைந்தார்.

ரஞ்சித் சிங்கின் பிறங்கடைகளுடன் குலாப் சிங் ஒத்துப்போக முடியவில்லை.

அப்போது பிரிட்டிஷாரின் பிடி வலிவாக இருந்தது. பிரிட்டிஷாரின் படையுடன் 3 தடவைகள் மோதிய ரஞ்சித் சிங் வழியினர் தோற்க நேர்ந்தது. இவர்களின் தோல்வியை அடுத்து, இவர்கள் வெள்ளையர்களுக்கு ஒரு கோடி ரூபா தரவேண்டும்; இல்லாவிட்டால் லாகூர் அரசின்கீழ் உள்ள காஷ்மீர், பால்டிஸ்தான், ஹசீரா பகுதிகளை ஒப்படைக்க வேண்டுமென்று உடன்படிக் கை ஒன்று ஏற்பட்டது. இதில் நடுவராக இருந்தவர் இராசபுத்திரரான - டோக்ரா குலாப்சிங் தான்.

பிரிட்டிஷார் குலாப் சிங்குடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதில் மூன்று கூறுகள் இருந்தன.

மூன்றாவதான கூறு, “பிரிட்டிஷ் அரசு கை மாற்றித்தரும் இந்த நிலப்பகுதியின் சுயாட்சி அதிகார உரிமை, குலாப் சிங் மற்றும் அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரியது” என்பதே ஆகும்.

இருப்பினும் பிரிட்டிஷாரின் தலையீடு அதிகரித்தது. மேலும் தன் தம்பிகளின் வாரிசுகள் அதிகாரத்தில் பங்கு கேட்கக்கூடும் என்ற அச்சமும் இருந்தது. எனவே தன் ஒரே மகன் ரன்பீர் சிங்கை, 1856இல் காஷ்மீரின் மகாராஜாவாக ஆக்கினார்.

இச்சூழலில் இந்தியாவில் சுதேச மன்னர்களும் மக்களும் 1857 மே திங்களில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர் தொடுத்தனர். எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி, பிரிட்டிஷார் குலாப் சிங் உதவியை நாடினர்; அவர் படையை அனுப்ப ஒப்புக்கொண்டார். ஆனால் 1857 ஆகத்தில் அவர் இறந்துவிட்டதால், படையை அனுப்பிட ரன்பீர் சிங்கால் முடியவில்லை.

ரன்பீர் சிங் 1860இல் கில்கிட் பகுதியையும், அடுத்த பத்தாண்டுகளில் அண்டைப் பகுதிகளான சிலாஸ், போனியல், யாசின், டாரல், ஹூன்சா, நாகர் போன்றவற்றையும் இணைத்துக் கொண்டார்.

1877-79இல் காஷ்மீரில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது.

தன் மூன்று மகன்களில் கடைசி மகனான அமர்சிங் என்பவனை மன்னராக அறிவிக்க ரன்பீர் சிங் முயன்றார். தீய பழக்கங்கள் உள்ளவனாக இருந்தாலும் முதலாவது மகன் பிரதாப் சிங் தான் மன்னராக ஆக்கப்பட வேண்டும் என்று பிரிட்டிஷார் கூறித் தலையிட்டனர்.

விரைவில் ரன்பீர் சிங் மறைந்தார். பிரதாப் சிங் மன்னர் ஆனார். ஏற்கெனவே பிரிட்டிஷார் அறிவித்த படி, கர்னல் ஓ செயிண்ட் ஜான் என்பவர் அரசியல் ஆலோசகராகப் பொறுப்பேற்றார்.

பிரதாப் சிங் சில நல்ல திட்டங்களை அறிமுகப் படுத்தினார். இருப்பினும் கடைசி மகன் அமர்சிங்கை ஆதரித்து பிரிட்டிஷார் பிரதாப் சிங்கை முடக்கினர். மன்னருக்கு உதவுவதற்கு என்று நிர்வாக ஆலோச னைக்குழு ஒன்றை பிரிட்டிஷார் அமைத்தனர். அதன் தலைவராகவும் பிரதம மந்திரியாகவும் ரன்பீரின் கடைசி மகன் அமர்சிங் அமர்த்தப்பட்டார்; இரண் டாவது மகன் ராம்சிங் ஆலோசனைக் குழு உறுப்பின ராக்கப்பட்டார். மூன்றாவதாக, அய்ரோப்பியர் ஒருவர் நிரந்தரப் பிரதிநிதியாக அமர்த்தப்பட்டார். இவருக்கு ஆலோசனைக்குழுவின் எந்த முடிவையும் தன்னிச் சையாக நடைமுறைப்படுத்தத் தனி அதிகாரமும் தரப் பட்டது. இவரே உண்மையான நிர்வாகியாகத் திகழ்ந்தார்.

புதிய அரசமைப்புச் சட்டம் ஒன்றும் அறிமுகப்படுத் தப்பட்டது. அதன்படி மன்னர் பிரதாப் சிங்கின் அதி காரங்கள் பலவும் நிர்வாக ஆலோசனைக் குழுவுக்கு மாற்றப்பட்டன.

இரஷ்ய ஜார் மன்னன் காஷ்மீர் மீது படையெடுப் பான் என்று ஒரு கட்டுக்கதையை பிரிட்டிஷார் பரப்பினர். கடைசியில் பிரிட்டிஷாரே அதற்கு அஞ்சினர். 1888இல் பிரிட்டிஷார் கில்கிட் பகுதியின் நிர்வாகத்தை, பிரதாப் சிங்கிடமிருந்து விடுவித்து, அங்கு நிரந்தரமாக ஒரு படைத்தளம் அமைத்துக் கொண்டனர். இந்தப் படைக்கு ஆகும் செலவுகளை மன்னரும், மந்திரி சபையும் ஏற்கும்படிச் செய்தனர்.

அப்போது வெளியான இந்தியச் செய்தி ஏடுகள் பிரதாப் சிங்கின் இரங்கத்தக்க இந்த நிலை பற்றி எழுதின; நியாயம் கேட்டன.

அந்நேரம் காஷ்மீர் மக்கள் வறுமையில் வாடினர். அதனால், “இதுபற்றி ஒன்றும் எழுதாமல், ஒரு இந்து மகாராஜாவின் சுகபோக வாழ்க்கைக்கு மட்டும் பத்திரிக்கைகள் பரிந்து பேசுவதா” என்று காஷ்மீர் மக்கள் குமுறினர்.

கர்சன் பிரபு வைஸ்ராய் ஆனபின், 1905இல் ஆலோசனைக்குழு கலைக்கப்பட்டு, மன்னருக்கு மீண்டும் சில அதிகாரங்கள் தரப்பட்டன. ஆனால் முதன்மையான அதிகாரங்கள் பிரிட்டிஷார் அமர்த்திய சிறப்பு அதிகாரியிடமே இருந்தன. 1909இல் அமர்சிங் மறைந்தார்.

பிரிட்டிஷ் சிறப்பு அதிகாரி, திறமையான நிர் வாகிகளை அமர்த்துகிறேன் என்று கூறி, பல ரையும் உயர்ந்த வேலைகளில் அமர்த்தினார். அப்படி அமர்த்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் வங்காளிகளும் பஞ்சாபியர்களுமாக இருந்த னர். நல்லபடிப்புப் பெற்ற சில காஷ்மீரிகள் கூட, ‘முன் அனுபவம் இல்லாதவர்கள்’ என்று கூறி வேலை தராமல் ஒதுக்கப்பட்டனர்.

ஆங்கிலேயர் இப்படித் தவறு செய்ததைப் படிப்பறிவு இல்லாத காஷ்மீர் மக்கள் புரிந்து கொள்ளாமல், மன்னர் மீதே பழிஞுதூற்றினர்.

முஸ்லீம்களில் சில பெரியவர்கள் கல்வியின் முதன் மையைப் புரிந்துகொண்டனர். காஷ்மீர் முஸ்லிம்களின் மதத்தலைவராக இருந்த ‘மிர்வைஸ்’ இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். பல முஸ்லீம்கள் முதல் முறையாகப் பள்ளிக் கூடங்களில் காலடி வைத்தனர்.

இடையில் 1914-18இல் முதலாவது உலகப் போர் நடந்தது.

அப்போர் முடிந்தவுடன் பிரிட்டிஷார் அறிமுகம் செய்த ‘மாண்டேகு-செம்ஸ்போர்டு திட்டம்’ - இந்தி யாவுக்கு மட்டும் சுயாட்சி உரிமை வழங்குவதோடு நிற்காமல், காஷ்மீர் போன்ற மன்னர் ஆட்சிப் பகுதிக் கும் சுயஆட்சி உரிமையை வழங்கும் என்று கூறினர். இந்த உரிமையைக் காஷ்மீருக்கு வழங்கும்படி 1918 இல் பிரதாப் சிங் கோரினார்.

1921இல் பிரதாப் சிங் முழு அதிகாரம் பெற்ற மன்னர் ஆனார். ஆனால் அரச அவையில் பிரிட்டிஷ் அரசப் பிரதிநிதி தொடருவார் என்றார்கள், பிரிட்டிஷார்.

பிரதாப் சிங்குக்குக் குழந்தைகள் இல்லை. வேறு வழிவகை இல்லாமல், தன் தம்பி அமர்சிங்கின் மகனான அரிசிங்கையே தன் அதிகாரம் வாய்ந்த வாரிசாக ஏற்று, அவரை இளவரசராக ஆக்கி, நிருவாக ஆலோசனைக்குழுவிலும் இடம் தந்தார், பிரதாப் சிங்.

1924இல் அப்போது மாமன்னரின் கட்டுப்பாட்டி லிருந்த பட்டு உற்பத்தி ஆலையின் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிப் போராடினர்; மறியல் செய்தனர்; பட்டினிப் போராட்டம் செய்தனர். அந்த ஆலைத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் முஸ்லீம்கள்.

பிரதாப் சிங் ஆட்சியின் போது பணியில் அமர்த் தப்பட்டவர்களே அதிகாரிகளாகத் தொடர்ந்ததால், படித்துவிட்டு வந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வில்லை. இதனால் வேலை கிடைக்காத இளைஞர் கூட்டம் பெருகியது. இந்த மனக்குறையும் வெறுப்பும் போராட்டமாக வெடித்தது.

பஞ்சாபியர்களும், வங்காளிகளும் காஷ்மீரில் அரசு நிர்வாகப் பணிகளைச் செய்து கொண்டி ருக்க, காஷ்மீர் மண்ணின் மைந்தர்கள் பட்டினி கிடக்க நேர்ந்தது.

அதன் விளைவாகவே, “காஷ்மீர் காஷ்மீரி களுக்கே!” என்ற உரிமை முழக்கம் எழுந்தது.

இந்தப் போராட்டத்தில் முஸ்லீம்கள் மட்டுமின்றி, காஷ்மீரி இந்துக்களும், பண்டிட்களும் பங்கேற் றனர்.

இதன்விளைவாகத்தான், 1927இல், “புதிய ஜம்மு வம்சாவழி மக்கள் உரிமைச் சட்டம்” நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி,

1. காஷ்மீர் மன்னராட்சிப் பகுதியின் அரசு நிருவாகத்தில், இனி காஷ்மீர் மக்களை மட்டுமே பணியில் அமர்த்தலாம்;

2.            காஷ்மீர் மண்ணில் வெளியாள்கள் யாரும், இனி சொத்து வாங்க முடியாது.

இந்த வம்சாவழி உரிமைச் சட்டத்தின்படி, பல் வேறு அரசுப் பணிகளில் வேலை பெற்றவர்கள் ஜம்மு பகுதியைச் சார்ந்த இரசபுத்திரர்கள் மற்றும் அவர்க ளைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள்.

இப்படி ஒரு சாராரே பயனடைந்ததைக் கண்டு, வாய்ப்புக் கிடைக்காதவர்கள் வெறுப்படைந்தனர். இது இந்துக்களின் மீதான வெறுப்பாக உருவாயிற்று.

ஏமாற்றத்துக்கு ஆளானவர்கள் ஒன்றுதிரண்டு போராடினார்கள். நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன.

அதனால் அரிசிங் அரசு :

1.            முஸ்லீம்கள் யாரும் எக்காரணம் கொண்டும் வெடிப் பொருள்கள் எதைiயும் வைத்திருக்கக் கூடாது;

2.            காஷ்மீர் முஸ்லீம்கள் யாரும் இராணுவத்தில் சேர அனுமதி கிடையாது என அறிவித்தது.

பூஞ்ச் பகுதியின் ‘சுல்தான்களும்’, மீர்பூரின் ‘சந் தான்களும்’ மட்டுமே தொடர்ந்து படையில் சேர்க்கப் பட்டனர். அவர்களைக் கொண்டு கலவரங்கள் அடக் கப்பட்டன.

அரிசிங்கின் வெளியுறவு அமைச்சராகவும் அரசியல் ஆலோசகராகவும் இருந்த வங்காளக் கிறித்துவரான அல்பியன் பானர்ஜி என்ற பார்ப்பனர், 1929இல், தான் பதவியை விட்டு விலகிய போது, “இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் வாயில்லாப் பூச்சிகள் போல - ஆடு, மாடுகளைப் போல நடத்தப்படுகிறார்கள். அவர் களுடைய வாழ்நிலை, பொருளாதாரம் நாளுக்கு நாள் நசித்து வருகிறது” என்று ஒரு அறிக்கையை வெளி யிட்டார்.

அதை எல்லாச் செய்தி ஏடுகளும் முதன்மை தந்து வெளியிட்டன.

இந்தச் சமயத்தில் தான், படித்த முஸ்லிம் இளை ஞர்கள் ஒன்றுசேர்ந்தனர். ஜம்முவில், குலாம் அப்பாஸ் என்ற இளைஞர் ‘ஜம்மு முஸ்லிம் இளைஞர் பேரவை’ யைத் தொடங்கினார். சிறீநகரில் ‘படிப்பறைக்கட்சி’ (Reading Room Party) என்ற ஓர் அமைப்பை பிரேம் நாத் பாஸ், முகமது யூசப் ஷா மற்றும் பலர் சேர்ந்து தொடங்கினர்.

முஸ்லிம்கள் மசூதிகளில் கூட்டு வழிபாடுகளைச் செய்ததை வைத்து, “மசூதிகள் அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் களங்களாக உள்ளன. உடனடியாக இப்பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்” என, காவல் துறை குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுத்தது.

1931 சூனில் சிறீநகரில் பெரிய அளவில் முஸ்லிம்கள் கூடி, அரிசிங்கின் அடக்குமுறைக்கு எதிரான செயல் பாடுகளுக்காக, படிப்பறைக் கட்சி சார்பில் 11 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தனர். இதில் ‘மிர்வைஸ்’ முகமது யூசுப் ஷா, குலாம் அப்பாஸ் ஆகியோருடன் ஷேக் அப்துல்லாவும் இடம்பெற்றிருந்தார். அப்போது அவர் இளைஞர்.

காஷ்மீரி இந்து பண்டிட் குடும்பத்தில் பிறந்து, 1796இல் முஸ்லிமாக மாறியவரின் வழியில் பிறந்த வர்தான் ஷேக் அப்துல்லா. அவர் 1905இல் பிறந்தார். அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அவரு டைய தந்தை இறந்து போனார்.

முதுநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற ஷேக் அப்துல்லாவின் இலக்கு, அரிசிங் அரசின் உயர் நிருவாகப் பதவியில் அமர வேண்டும் என்பதுதான். அந்த வாய்ப்பு ஷேக் அப்துல்லாவுக்கு மறுக்கப்பட்டது. குடும்பம் துன்பத்தில் துவண்டது. அதனால் ஷேக் அப்துல்லா பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

அரிசிங்குக்கு எதிராக 25.6.1931இல் நடந்த போராட் டத்தில் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்; சிறைப்படுத்தப்பட்டனர்.

சிறை சென்று விடுதலையான முஸ்லிம் இளை ஞர்கள் ஒன்றுகூடி, 1932 சூனில், “முஸ்லிம் மாநாட் டுக் கட்சி” என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினர். அதன் தலைவராக ஷேக் அப்துல்லாவும், பொதுச் செயலாளராக குலாம் அப்பாஸ் என்பவரும் அமர்த்தப் பட்டனர்.

இந்தக் கட்சி, பிரிட்டிஷார் அறிவித்த - ஒருங்கிணைந்த “இந்திய நிர்வாகக் குழு”வில் தங்களுக்கு இடம்தர வேண்டும் என்று கோரியது. ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியாகவே தங்கள் நாடான காஷ்மீரையும் முஸ்லிம் மாநாட்டுக் கட்சி கருதியது போலும்!

இந்த நிலையில் சர். பெர்டிராண்ட் டக்ளஸ் கிளான்ஸ் தலைமையிலான கமிஷன், காஷ்மீர் பகுதியிலும் “மக்கள் பிரதிநிதித்துவ அவை” அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இந்த முடிவை அரிசிங் ஏற்றார். ‘பிரதிநிதித்துவ அவை’யில் 75 உறுப்பினர் கள். இதில் 15 பேர் அரசு அதிகாரிகள்; 33 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; மீதி 27 பேர் நியமிக்கப்படுவார்கள் என அரிசிங்கே முடிவு செய்தார்.

தேர்ந்தெடுக்கப்படும் 33 பேர்களில் 21 இடங்கள் முஸ்லிம்களுக்கும், மீதி 12 இடங்கள் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினருக்கும் என்று பிரித்துத் தரப்பட்டன.

பிரதிநிதித்துவ அவைக்கான தேர்தல் 1934இல் நடந்தது. முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட 21 இடங்களில் 14 இடங்களை முஸ்லிம் மாநாட்டுக் கட்சி கைப்பற்றி யது. பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 19 இடங்களை அக்கட்சி பெற்றது.

மன்னர் அரிசிங் சிந்து ஆற்றுக்கு வட பகுதியிலுள்ள கில்கிட் நிலப்பகுதியை 1935ஆம் ஆண்டு மார்ச்சு முதல் 60 ஆண்டுகளுக்கு பிரிட்டிஷாருக்குக் குத்த கைக்கு விட்டார்.

எது எப்படியிருந்தாலும், ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை முஸ்லிம் மாநாட்டுக் கட்சி தொடர்ந்து நடத்தியது. முஸ்லீம் மாநாட்டுக் கட்சியில் ஷேக் அப்துல்லாவுக்கு எதிர்ப்பு முளைத்தது. அதைச் சமாளித்த ஷேக் அப்துல்லா, மீண்டும் 1937இல் முஸ்லிம் மாநாட்டுக் கட்சியின் தலைவரானார்.

அரிசிங்கின் அமைச்சரவையில் பிரதம மந்திரியாக என். கோபாலசாமி அய்யங்கார் இருந்தார். அவருடன் அப்துல்லா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதால், முஸ்லீம் கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கொடுக்கக் கூடாது என்று இருந்த சட்டத்தைத் திருத்த அப்போது ஒரு முயற்சி நடந்தது. அப்துல்லா குழுவினர் மட்டும் அரசுக்குச் சார்பாக வாக்களித்தனர். அதனால் கட்சிக் குள் உள்சண்டை காரணமாகத் தகராறு வரும்போது, அரசு அப்துல்லாவுக்கு ஆதரவாக இருந்தது. மேலும் அப்துல்லா இந்திய தேசிய காங்கிரசின் முன்னணித் தலைவர்களான நேரு, படேல் போன்றவர்களுடன் நெருக்கமான உறவு கொண்டார்.

1939 ஏப்பிரலில் நடந்த கட்சியின் சிறப்புக் கூட்டத்தில், கட்சியின் பெயரை ‘ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி’ என்று அப்துல்லா மாற்றினார்.

அதுசமயம் இரண்டாம் உலகப் போர் தீவிரமாக நடந்தது. பிரிட்டிஷாரால் இந்தியப் படைகள் போருக்கு அனுப்பப்பட்டன. காங்கிரசு அதை எதிர்த்தது. ஆனால், முகமது அலி ஜின்னா அதை ஆதரித்தார். காங்கிரஸ்-முஸ்லீம் லீக் இடையே கருத்து வேறுபாடு ஆழமானது.

1940 மார்ச்சு 23இல் லாகூரில் கூடிய இந்திய முஸ்லிம் லீக், முதன்முலாக, “முஸ்லிம் களுக்குத் தனிநாடு வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியது. ... அது தன்னாட்சி அதிகாரத் துடன் சுதந்தர நாடாக இருக்க வேண்டும் என்றும் அத்தீர்மானம் கூறியது.

இச்சூழலில் ஜம்மு-காஷ்மீரில் அப்துல்லாவின் செல்வாக்குக் குறைந்தது.

இந்தியாவில், 1942இல் “வெள்ளையனே வெளி யேறு!” என்ற இயக்கம் தீவிரமடைந்தது.

உலகப் போர் முடிவுக்கு வரவே, சுதந்தர இந்தியாவுக்கான புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியை இந்திய அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்க பிரிட்டிஷார் திட்டமிட்டனர்.

இந்தியாவுக்கான இடைக்கால அரசில் முஸ்லிம்களும் இடம்பெறலாம் - ஆனால் எல்லா முஸ்லிம்களும் முஸ்லிம் லீக்காரர்களாக இருக்கக் கூடாது என்று காங்கிரசு கூறியது. காங்கிரசில் இருந்த கான் அப்துல் கபார்கான் முஸ்லிம்கள் சார்பில் இடம்பெற வேண்டும் என்றது காங்கிரசு. தொடக்கத்தில் அதை ஜின்னா எதிர்த்தார்; பின்னர் ஒப்புக் கொண்டார்.

ஆனால் இடைக்கால அரசில் எல்லா முக்கியத் துறைகளையும் நேரு, படேல் போன்ற காங்கிரசாரே பிடித்துக் கொண்டனர். காங்கிரசார் எல்லா மாகாணங் களிலும் அமைச்சரவையை அமைத்தனர்.

சுதந்தரம் பெற்றவுடன் சுதேச மன்னர் ஆட்சிப் பகுதிகளை இந்தியா அல்லது பாக்கித்தான் ஏதாவது ஒன்றுடன் இணைத்துவிடுவது, இதற்கான ஒப்பந்தத்தில் சுதேச மன்னர்கள் கையொப்பம் போட வேண்டும் என்று வற்புறுத்துவது என்பது காங்கிரசின் திட்டம்.

ஷேக் அப்துல்லா, “மன்னர் அரிசிங் காஷ்மீரில் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறாதவர்; எனவே காஷ்மீர் பற்றி முடிவெடுக்க அவர் தகுதி அற்றவர்” என்று கருத்துக் கூறினார். மேலும், “காஷ்மீர் மக்களிடம் நேரடியாக ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி, காஷ்மீரின் நிலை குறித்து முடிவெடுக்க வேண்டும்” என அவர் வற்புறுத்தினார். இதற்காக, “காஷ்மீரை விட்டு வெளியேறு” என்ற இயக்கத்தை, அரிசிங்கை எதிர்த்து நடத்தினார்.

“அப்துல்லா, நேரு மற்றும் காங்கிரசாரின் ஏவலாள் தான்” என்று முஸ்லிம் மாநாட்டுக் கட்சியினரே கிண்டலாகப் பேசினர்.

1944இல் முகமது அலி ஜின்னா, இரண்டாவது தடவையாகக் காஷ்மீருக்குச் சென்றார். ‘முஸ்லிம் மாநாட்டுக் கட்சி - தேசிய மாநாட்டுக் கட்சி’ இரண்டை யும் இணைக்க முயன்று தோற்றார்.

அடுத்து 1945இல் நேரு இரண்டாவது தடவை காஷ்மீருக்குச் சென்றார். தேசிய மாநாட்டுக் கட்சி அவருக்கு ஆடம்பரமான வரவேற்பு அளித்தது. ஆனால் காஷ்மீர் பொதுமக்களிடம் நேருவுக்கு முன்னைவிட அதிக எதிர்ப்பு இருந்தது.

பிரிட்டிஷ் அரசாங்கம் 20-2-1947இல் ஓர் அறி விப்பை வெளியிட்டது. அதன்படி, 1948 சூனுக்குள் இந்திய நாட்டைப் பிரிக்கும் வேலையை முடித்து, அதன்பிறகு சுதந்தரம் பற்றிய அறிவிப்பு வெளியிடப் படும் என்று அறிவித்தது.

இந்தியாவை இரு நாடுகளாகப் பிரிக்க 18.7.1947 இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப் பட்டது. அதற்குமுன் 1947 மார்ச்சில் மவுண்ட்பேட்டன் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் ‘ஒருமித்த இந்தியா’ என்பது ஒரு பகற்கனவு என்று 2 மாதங்களுக்குள் புரிந்து கொண்டார்.

ஏற்கெனவே ஜின்னா நேரடி நடவடிக்கை (னுசைநஉவ ஹஉவiடிn) திட்டத்தை அறிவித்திருந்தார். இதனால் எல்லைப் பகுதிகளான பஞ்சாப் போன்ற இடங்களில் பெரிய மத, இனக்கலவரம் மூண்டது.

இந்தியாவில் 565 சுதேச மன்னர் பகுதிகள் இருந்தன. அவற்றுள் தனிச்சுதந்தர நாடாக, இராணுவம், நாணயம், தொலைத்தொடர்பு மற்று முள்ள அதிகாரங்களைத் தாங்களே வைத்துக் கொள்ளும் அளவுக்குப் பெரியவை மிகச்சிலவே இருந்தன. அவற்றுள்ளும் மிகப் பெரிய பிரதேசம் காஷ்மீர் மட்டுமே.

காஷ்மீர்-இந்தியா, பாக்கித்தான் எல்லைகளை ஒட்டியதாக அமைந்திருந்தது. இருதரப்பும் உரிமை கொண்டாட இது ஏதுவாக இருந்தது.

மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியிருந்த அரிசிங் தடுமாறினார். ஷேக் அப்துல்லா மக்களைத் திரட்டிப் போராடி வந்ததால், அதற்கு எதிராகத் தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஏற்ற வாய்ப்பை அவர் தேடினார்.

‘பாக்கித்தான் முஸ்லிம் தேசம்’ என அறிவிக் கப்பட இருந்ததால், அதோடு சேரக்கூடாது என அவருடைய ஆலோசகர்கள் கூறினர்.

நாடாகவே இருக்க வேண்டும் எனவும் அவர்கள் அரிசிங்கை வற்புறுத்தினர்.

இந்தியாவுடனோ, பாக்கித்தானுடனோ சேராமல் - “தனிநாடாக இருக்கவே விரும்புகிறோம்” என்று கூறிய அரசுகள் 3 மட்டுமே. அவை, 1. வடக்கே காஷ்மீர், 2. தெற்கே ஹைதராபாத் நிஜாம், 3. மேற்கே ஜுனோகர்.

ஹைதராபாத்திலும், ஜுனோகரிலும் மன்னர்கள் முஸ்லிம்கள்; ஆனால் இந்த இரண்டு பகுதிகளின் மக்களில் பெரும்பாலோர் இந்துக் கள். காஷ்மீரில் - மன்னர் இந்து - மக்களில் பெரும் பாலோர் முஸ்லிம்கள்.

தொடர்ந்து, அப்துல்லா, “எந்த நாட்டுடன் காஷ்மீர் சேருவது என்ற முடிவை எடுக்கும் பொறுப்பு மன்ன ருக்கு இல்லை; அது மக்களுக்குத்தான்” எனக் கூறிப் போராடினார்.

3.6.1947இல் பிரிட்டிஷார் வெளியிட்ட நாட்டின் பிரிவினை பற்றிய அறிவிப்பில், 2 எல்லை வரைய றைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதற்கிடையில், 12.8.1947 அன்று, புதிதாக உருவாகும் இரு நாடுகளுடனும் பொதுவான ஒரு ஒப் பந்தம் செய்துகொள்ள அரிசிங் முன்வந்தார். அது என்ன?

“காஷ்மீரைப் பொறுத்தவரை, இப்போதைக்கு, பாக்கித்தான், இந்தியா என இரு நாடுகளில் எதனுடன் சேருவது என முடிவெடுக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே இரு நாடுகளுடனும் நட்புறவைத் தொடரு வோம்” என அரிசிங் முடிவெடுத்தார்.

பாக்கித்தான் இந்த ஒப்பந்தத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு ஆவணத்தில் கையொப்பமிட்டது. ஆனால், இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஆய்வு செய்ய வும், கவனித்து முடிவெடுக்கவும் தற்போதைக்குப் போதுமான நேரமில்லை எனக்கூறி, அந்த ஆவ ணத்தில் கையொப்பம் இடாமல் தள்ளி வைத்தது.

இந்த நிலையில்தான் 1947 ஆகத்து 14 அன்று பாக்கித்தானுக்கும், 15 அன்று இந்தியாவுக்கும் சுதந்தரம் அளிக்கப்பட்டு, இந்தியா, பாக்கிஸ்தான் என்னும் புதிய இரு நாடுகள் உருவாயின.

(தொடரும்)

Pin It