The Non-Violent Struggle for Indian Freedom, 1905-1919, David Hardiman (2018),Penguin Viking, Gurgaon, Haryana
தென் ஆப்பிரிக்காவில் காந்தி மேற்கொண்ட அறப்போராட்டத்தை விவரித்த நூலாசிரியர், அவரது இந்திய வருகைக்குப்பின் இந்தியாவில் நிகழ்ந்த மூன்று குடியானவர் போராட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். இவை மூன்றும் வடஇந்தியாவில் நிகழ்ந்துள்ளன. இந்திய கிராமப்புறங்களில் தேசிய இயக்கத்திற்கான அடித்தளமிடுவதில் இவற்றின் பங்களிப்பு இருந்துள்ளது.
இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துவது, கிராமப்புறக் குடியானவர்களை அதில் இணைத்துக் கொள்வது குறித்த சிந்தனைப்போக்கை அரவிந்த் கோஷ் வெளிப்படுத்தியுள்ளார்.
நிலவரியைச் செலுத்தமாட்டோம் என்று பரந்த அளவில் குடியானவர்கள் முடிவெடுத்தால் அதை எதிர்கொள்வது ஆங்கிலேயருக்குக் கடினமானதாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது.
சமூகம் சார்ந்த அழுத்தத்தை இந்தியக் குடியானவர்களால் வெளிப்படுத்தமுடியும் என்றும், எழுத்து வடிவிலான சட்டங்களை விட சமூகப் புறக்கணிப்பு என்பது இந்திய மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தது என்றும் அவர் கருதினார்.
வன்முறை சார்ந்தும் சாராமலும் இந்தியக் குடியானவர்கள் தம் எதிர்ப்பை வெளிப்படுத்தியது தொடர்பாக நீண்ட வரலாறு உள்ளது. ஆங்கில ஆட்சியின் தொடக்கத்தில் ‘சர்கார் (அதிகாரிகள்) சவுகார்’ (வட்டித்தொழில் புரிவோர்) சமிந்தார் (பெருநிலக்கிழார்கள்) என்ற மூன்று தரப்பினருக்கும் எதிராக வன்முறை சார்ந்த எழுச்சிகள் பரவலாக அமைந்துள்ளதை ரணஜித்குகா எடுத்துக்காட்டியுள்ளார்.
குடியானவர் எழுச்சியில் பங்கேற்ற குடியானவர்கள் தம் நிலங்களை இழந்துள்ளனர்; சொத்துப் பறிமுதலுக்கும் சிறைத்தண்டனைக்கும், நாடுகடத்தலுக்கும் ஆளாகியுள்ளனர்.
இத்தகைய அச்சங்களின் காரணமாக வன்முறையில் இருந்து விலகி நின்றார்கள். தாம் உற்பத்தி செய்வதிலும், ஈட்டுவதிலும் இருந்து நியாயமான பங்கையே ஆட்சியாளர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்ற தார்மீகம் சார்ந்த வாதத்தை முன்வைத்ததுடன் நின்றுவிட்டார்கள். தன்னைவிட உயர்நிலையில் இருப்போருக்கு நிபந்தனையெதுவுமின்றி கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு சமூகம் முக்கியமாக இழப்பது அதன் தார்மீக நிலையைத்தான்.
சில போழ்து, ஒடுக்குவோர் ஆட்சிபுரியும் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வேறு பகுதிக்குக் குடியேறப் போவதாக அச்சுறுத்தினார்கள். தலத்தில் உள்ள நில உரிமையாளர்கள் அல்லது அதிகாரிகளின் அத்துமீறல்களில் இருந்து விடுபட அவர்களுக்கு மேலே உள்ள ஆட்சியாளர்களிடம் முறையிட்டு நியாயம் கேட்பதைத் தம் தார்மீக உரிமையாகக் கருதினர்.
இச்செயலின் வாயிலாக ஆளுவோனின் பார்வைக்கு இத்தவறான செயல்பாடுகளைக் கொண்டு சென்று அவனுக்கு உதவுவதாக எண்ணினார். இவ்வாறின்றி, ஒடுக்குமுறை மேற்கொள்ளும் அதிகாரியை அவன் பணிபுரியும் பகுதியிலேயே வெளிப்படையாகத் தண்டித்தனர். சான்றாக இமாசலப் பகுதியில் அதிகாரி ஒருவரை மக்கள் தண்டித்ததைக் குறிப்பிடலாம்.
தன் செயல்பாடுகளால் மதிப்பிழந்த ஓர் அதிகாரியின் தலையை மொட்டை அடித்து மீசையை மழித்தனர். அவர் முகத்தில் கரி பூசி, கழுதைமேல் ஏற்றி கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இருப்பினும் மிகக் கொடூரமான ஒடுக்குமுறையாளர்களைக் கூடக் கொல்வதென்பது அரிதாகவே இருந்தது.
இது போன்ற செயல்பாடுகளில் கிராமத்தின் மேட்டிமையோரும் அடித்தள மக்களும் இணைந்தே செயல்பட்டனர். ஆங்கில ஆட்சியில் உருப்பெற்ற வழக்கறிஞர்களும், தேசிய அரசியல்வாதிகளும் இவர்களுக்கு உதவ முன்வந்தனர். ஆங்கிலேயரின் நேரடி ஆட்சி நிலவிய பகுதிகளிலும், அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கிய மன்னராட்சிப் பகுதிகளிலும் குடியானவர்களின் வன்முறையற்ற எதிர்ப்புகள் 19-ஆவது நூற்றாண்டில் நிகழலாயின. குறிப்பாக 1857 சிப்பாய் எழுச்சி ஒடுக்கப்பட்ட பின்னர் குடியானவர்களின் எதிர்ப்புகள் வெளிப்பட்டன.
கிராமப்புற மக்களிடம் இருந்து ஆயுதங்களைப் பறித்து அவர்களின் போராட்டங்களை வலுக்குன்றச் செய்ததுடன், தமது இராணுவப் பலத்தையும் ஆங்கிலேயர் வலுவாக்கிக் கொண்டனர்.
இரயில்போக்குவரத்தின் வளர்ச்சியானது அவர்களது படைவீரர்களை விரைவாக அனுப்பத் துணைபுரிந்தது. அவர்கள் கையாண்ட, படைக் கருவிகள் சார்ந்த தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து அவர்களை வலுவுள்ளவர்களாக்கியது.
அதே நேரத்தில் அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கவும் செய்தது. 1873ஆவது ஆண்டில் சமின்தார்களுக்கு எதிரான போராட்டம் பாட்னா நகரில் நிகழ்ந்தபோது கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்கியது. வன்முறையால் சிறிதளவே பயன் கிட்டுவதாக அடித்தள மக்கள் உணர்ந்திருந்தார்கள். ஆங்கிலேயர்களின் மிதவாதக் கோட்பாடுகள் வெற்றி தரும் என்று எண்ணினார்கள். காலனிய ஆட்சியும் வன்முறை வடிவிலான எதிர்ப்புக்கு மாறாக வன்முறையற்ற போராட்டங்களை நிகழ்த்தத் தூண்டியது.
இருப்பினும் ஆங்காங்கே பொதுமக்களின் எழுச்சிகளில் வன்முறை நுழைந்து அரசு அல்லது உள்ளுர் மேட்டிமையோரின் தாக்குதலுக்கு ஆளானது.
***
இராஜஸ்தானில் உள்ள பிஜ்ஜோலியா பகுதியில் 1897-இல் நிகழ்ந்த குடியானவர் கிளர்ச்சியானது, தேசிய இயக்கத்தினர், முற்போக்கான மேட்டிமையோர் ஆகியோரின் தலைமைக்கு வழிவகுத்தது.
பிஜ்ஜோலியா, 1897-1922
இராஜஸ்தான் பகுதியானது பெரும்பாலும் மன்னர் ஆட்சிப்பகுதியாக விளங்கியது. இம்மன்னர்களில் பெரும்பாலோர் இராஜபுத்திரர் சாதியைச் சேர்ந்தவர்கள். முகலாயர் ஆட்சியின் போது, முகலாயப் பேரரசர்களின் தலைமையை ஏற்றுக் கொண்ட சிற்றரசர்களாக இருந்தனர். ஆங்கில ஆட்சியின்போது அந்நிய நாட்டு ஏகாதிபத்தியவாதிகளின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். (இந்திய விடுதலைக்குப் பின் காங்கிரஸ் கட்சி, பி.ஜே.பி. ஆகிய இருகட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மத்திய அமைச்சர்களாகவும், மாநில முதல்வர்கள், அமைச்சர்களாகவும் விளங்கி வருகின்றனர்)
மன்னர் ஆட்சிப்பகுதியில் அவர்களைக் கண்காணிக்க ‘அரசியல் முகவர்’ என்ற பதவியை ஆங்கில அரசு உருவாக்கியிருந்தது. திறமையற்றவர்கள், ஊழல் புரிபவர்கள், விசுவாசமில்லாதவர்கள் என்போர் மன்னர்களாக இல்லாதவாறு பார்த்துக்கொள்வது அரசியல் முகவர்களின் பணியாக இருந்தது. மன்னர்களின் ஊழியர்களாக ஆங்காங்கே விளங்கிய ராஜபுத்திரர்கள் தம் பொறுப்பில் இருந்த பகுதிகளில் வாழ்ந்த குடிமக்களிடம் வரிவாங்கி மன்னரிடம் கொடுத்தார்கள். இராணுவப் பணிகளை மேற்கொண்டார்கள். இவர்களின் பொறுப்பில் இருந்து பகுதிகள் ஜாகிர்கள் எனப்பட்டன. ஜாகிரின் நிர்வாகியாகச் செயல்பட்டமையால் ஜாகிர்தார்கள் என அழைக்கப்பட்டனர்.
ராஜஸ்தானின் தென்பகுதியில் இருந்த உதயபூர் நகரை உள்ளடக்கிய மேவார்ப் பகுதியின் மகாராணாவாக (பேரரசன்) விளங்கிய பதேசிங் 1849ல் பிறந்தவர். 1884ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர். பிற்போக்கான சிந்தனை கொண்டவராகவும், விட்டுக்கொடுக்கும் தன்மையற்ற நிர்வாகியாகவும் விளங்கிய இவர் நிலவுடைமை அரசின் பழைய முறைகளில் மாற்றம் செய்வதை விரும்பாதவராய் இருந்தார்.
அதிக வரிவிதிப்பு குறித்தும், அதிகாரிகள் ஜாகிர்தார்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகள் குறித்தும் மனுக்கள் வாயிலாக மகாராணாவுக்குத் தெரிவிப்பது மரபாக இருந்தது. இவ்வகையில் பிஜ்ஜோலியா ஜாகிரில் வாழும் மக்களின் அவலம் குறித்து மனுக்கள் வாயிலாக அப்பகுதியினர் தெரிவித்தனர். நீதி வழங்கும் முறையின் ஒழுங்கற்ற தன்மை, அதிக வரிவிதிப்பு, ஜாகிர் அதிகாரிகளின் குதிரைகளுக்கு இலவசமாகத் தீனிவழங்க வேண்டிய கட்டாயம், கட்டணமின்றி மாட்டுவண்டிகளை வழங்குதல், எந்த நேரத்திலும் பொருள் வடிவிலோ, உழைப்பு வடிவிலோ ஊதியம் வாங்காது அரசு அதிகாரிகளுக்கு உழைக்கவேண்டிய கட்டாயம் என அவர்கள் அல்லலுக்கு ஆளாகிவந்தனர். இப்பணிகளைப் பெற, குடியானவர்களைக் கடுமையாக அடிக்கவும் செய்தனர். இதனால் குடியானவர்களில் சிலர் இறந்தும் போயினர். இவற்றைப் பொருட்படுத்தாது ஆளுவோர் ஊதாரித்தனத்தில் திளைத்தனர்.
குடிமக்களின் வீடுகளில் நிகழும் திருமணத்திற்கு வரிவிதிக்கும் முறையை கிருஷ்ணாசிங் என்ற ஜாகிர்தார் அறிமுகம் செய்தார். இதை எதிர்த்து 1897ல் தக்காட் சாதியைச் சேர்ந்த குடியானவர்கள் ஜாகிர்தாரின் இல்லம் நோக்கிச் சென்றனர். இவ்வரியின்றி திருமணம் செய்ய அனுமதி வழங்க வேண்டி திருமணமாகாத 200 பெண்களும் இவ் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அவர்களது வேண்டுகோளை கிருஷ்ணாசிங் ஏற்றுக்கொள்ளவில்லை.
தம் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வழிமுறையாக வேறுபகுதிக்குக் குடியேறப்போவதாக அவர்கள் அறிவித்தனர். அக்குடியானவர்கள் செலுத்தும் வரி நின்றுவிடும் என்ற அச்சத்தால், திருமணவரியை நீக்கிவிடுவதாக அவன் அறிவித்தான். அதன் பிறகு கிளர்ச்சியாளர்கள் தம் கிராமத்திற்குத் திரும்பினர். திருமணவரியை நிறுத்தியதில் பெற்ற வெற்றியின் தூண்டுதலால், வேறு சில குறைபாடுகளையும் நீக்கும்படி மேவாரின் மகாராணாவை அக்குடியானவர்கள் வலியுறுத்தினர்.
நிலவாடகை தொடர்பாக சீர்திருத்தங்கள் தேவை என்பதை அவர்கள் தெரிவித்த போது, ஓர் அதிகாரியை மகாராணா அனுப்பி வைத்தார். தன் உரிமைக்கு அப்பாற்பட்டு அவர் வரிவாங்குவதாக அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக ஜாகிர்தாருக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது. ஆயினும் இக்குறைபாட்டை வெளிப்படுத்திய இரு தலைவர்களின் பண்ணைகள் பறிமுதல் செய்யப்பட்டு வெளியேற்றத்திற்கு ஆளானார்கள். கடுமையான தண்டம் கட்டிய பின்னரே அவர்களால் திரும்பிவர முடிந்தது. வளம் படைத்த குடியானவர்கள் சிலருக்கு சலுகைகள் வழங்கி குடியானவர்களின் ஒற்றுமையை ஜாகிர்தார் குலைத்தான்.
1899-1900 ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட கடும்பஞ்சத்தினால் குடியானவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். பஞ்சத்தின் தாக்கம் தொடர்ந்த நிலையில் தம் அவல நிலை குறித்து மகாராணாவுக்கு குடியானவர்கள் மனு அனுப்பினர். நிலைமையை ஆராய அதிகாரி ஒருவரை மகாராணா அனுப்பினார். ஜாகிர்தார் தன் நிலையில் இருந்து மாறவில்லை.
1904-ல் பெரும்பாலான குடியானவர்கள் தம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பயிர் செய்யாமல் இருந்தனர். அத்துடன் பலமுறை ஜாகிர்தாருக்கு மனுக்கள் அளித்தனர். இதனால் வேண்டா வெறுப்பாக வரிக்குறைப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார். 1906ல் இதை மீறியதுடன் புதியவரிகளை விதித்தார்.
சாது சீத்தாராமதாஸ் (1883)
இருபதாம் நூற்றாண்டின் முதல்பகுதியில் சாது சீத்தாராமதாஸ் என்ற இளைஞர் இப்பகுதியில் சமூகப் பணியாற்றி வந்தார். கற்றறிந்த இவர் சமஸ்கிருத மொழியிலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். மித்திரா மண்டல் (நண்பர்கள் கழகம்) என்ற அமைப்பை 1905-இல் இப்பகுதியில் நிறுவி தேசிய இயக்கத்தை அறிமுகம் செய்யலானார். ஜாகிர்தார் மீது எதிர்ப்புணர்வு கொண்ட கல்வியறிவு கொண்ட மேட்டுக்குடியினர் சிலர் இவ்வமைப்பில் இணைந்தனர்.
1907-இல் இவர் ஜாகிர்தாருடன் இணைந்து சில பொறுப்புக்களை வகித்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1908-இல் அவருடன் இருந்து விலகினார். பின் ஹோமியோ மருத்துவராகச் செயல்பட்டர். இப்பணியின் காரணமாகக் குடியானவர்களுடன் அவருக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது. குடியானவர்களின் அவல வாழ்க்கையை அவர் அறிய இவ்வுறவு உதவியது. அவர்களது வாழ்க்கையை மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டதால் கிராமங்களுக்குப் பயணித்தார்.
அதிக வரிகளையும், கட்டாய வேலை முறையையும் எதிர்க்கும்படிக் கூறியதுடன் எவ்வளவு காலம் விளைச்சலில் நாற்பது விழுக்காட்டை ஜாகிர்தாருக்கு வழங்குவீர்கள்? அடிமையாக வாழ்வதை எவ்வளவு காலம் ஏற்றுக்கொள்வீர்கள்? என்ற வினாக்களை அவர்களை நோக்கி எழுப்பினார். சிறிதளவாவது சுயமரியாதையுடன் இருக்கும்படியும், முறையாக அமைப்பின் அடிப்படையில் ஒன்று திரண்டால் இறுதியில் அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்றும் அறிவுறுத்தினார். இந்தியாவில் நடைபெறும் புரட்சிகர நடவடிக்கைகள் குறித்துக் கூறியதுடன் தேசிய இயக்கப் பாடல்களையும் பாடிக்காட்டினர்.
தாக்காட் சாதித் தலைவர்களுடன் நெருக்கமானதுடன் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஒன்று உருவாக்கும்படியும் அறிவுறுத்தினார். அப்பட்டியலில், அதிக வரி விதிப்பில் இருந்து விடுபடல், குடியானவர்களிடம் இருந்து சேகரிக்கும் தானியங்களை எடை போட, நேர்மையான அதிகாரிகளை நியமித்தல், வாங்கிய பணத்திற்கான கணக்கைப் பராமரித்தல் என்பன அப்பட்டியலில் இடம்பெற்றன.
மார்ச் 1913இல் சாது சீதாராமதாஸ் தலைமையில், குடியானவர்களுடனும், கற்றறிந்த மேட்டுக்குடியினருடனும் இணைந்து ஜாகிர்தாருக்கு எதிரான இயக்கத்தை தாக்காட் சாதித்தலைவர் தொடங்கினார்.
தம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழிமுறையாக இரண்டாண்டுக் காலம் பயிர் செய்தலையும், ஊதியம் பெறாத உழைப்பை ஜாகிருக்காக மேற்கொள்வதையும் நிறுத்திவிட்டனர். தம் குறைகளைக் கூறுவதற்குச் சென்ற இம்மக்களைச் சந்திக்க அதிகாரிகள் மறுத்துவிட்ட நிலையில், குடியானவர்களில் பலர் இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர்.
ஏறத்தாழ இரண்டாயிரம் குடியானவர்கள் உணவும் தண்ணீரும் இன்றி ஜாகிரின் தலைமை அலுவலகத்தை மூன்று நாட்கள் முற்றுகையிட்டனர். சாது சீதாராமதாஸ் கைதாகி ஆறுமாதம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிகழ்வுகளை அவர் திலகருக்குத் தெரிவிக்க இது குறித்து, தமது பத்திரிக்கையில் திலகர் எழுதினார். இதன் பின்னர் ஆங்கில அரசு மகாராணாவுக்கு கடிதம் அனுப்பி சீதாராமதாசை விடுவிக்கும்படிச் செய்தது. குடியானவர்களின் வேண்டுகோள்கள் சில ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதன்படி சில வரிகள் நீக்கப்பட்டன, சில வரிகளின் அளவு குறைக்கப்பட்டது. 1913-இல் தொடங்கி போராட்டம் 1915 டிசம்பரில் முடிவுற்றது.
குடியானவர்களின் இவ்வியக்கமானது நீண்ட காலப் போராட்ட வடிவமான இடப்பெயர்ச்சி முறையைக் கொண்டிருந்தாலும், தலத்தில் உள்ள கற்றறிந்தோர், தேசிய இயக்க ஆதரவாளர்கள், சமூக சேவையுணர்வு கொண்டோர் என்போரை உள்ளடக்கியதாக விளங்கியமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
***
1915-இல் ஆசிரியர் ஒருவர் மேவார் நகரில் ‘வித்யா பிரச்சாரினி சபா’ (கல்வி பரப்பும் கழகம்) என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கி இருந்தார். சிறார்களுக்குக் கல்வி கற்பித்தலும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலும் இதன் குறிக்கோளாகும். இவ்வமைப்பின் கிளை ஒன்றை சீதாராமதாசும் அவரது தோழர்களும் இணைந்து பிஜ்ஜோலியாவில் நிறுவினார்கள். இதன் வாயிலாக விஜய்சிங் பத்திக் என்ற தேசிய இயக்கவாதியுடன் இப்பகுதியின் தலைவர்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது.
விஜய்சிங் பத்திக் (1882 )
இவரது இயற்பெயர் பூபசிங் குஜார் என்பதாகும். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் புரட்சிகர தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா 1857 சிப்பாய் எழுச்சியில் முக்கிய பங்கு வகித்தார். புரட்சிகர தேசிய இயக்கத்தில் பத்திக் இணைந்திருந்தார். இவ் இயக்கப் பணிகளை மேற்கொள்ள இராஜஸ்தான் பகுதிக்கு இவரை அனுப்பி வைத்தனர். இப்பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து தப்பி வந்து தன் பெயரை விஜய்சிங் பத்திக் என்று மாற்றிக் கொண்டு வித்தியா பிரச்சாரினி சபையின் செயல்பாடுகளில் ஈடுபட்டார். இத்தொடர்பினாலேயே குடியானவர் போராட்டத்திற்குத் தலைமையேற்க அழைக்கப்பட்டார். இச்சபையில் ஆசிரியராகவும், 1917இல் பணியாற்றினார்.
தேசிய இயக்கம், அஞ்சாமை, அநீதிக்கும் சித்திரவதைக்கும் எதிராக அச்சமின்றியும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், போராடல் என்பனவற்றை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அத்துடன் இலத்திக்கம்புகளையும், வாட்களையும் பயன்படுத்துதல், மற்போர், அடக்குமுறையில் இருந்து தப்பிக்க, காட்டில் எவ்வாறு ஒளிந்து கொள்வது என்பனவற்றையும் கற்றுக் கொடுத்தார்.
ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்குச் செய்தி அனுப்பும் வழிமுறைகளையும் உருவாக்கினார். நல்ல சொற்பொழிவாளராகவும், கவிஞராகவும், பாடகராகவும் விளங்கினார். கீழ்நிலையில் இருந்து மேல்நிலை வரையிலான அரசு அதிகாரிகளுடனும் அவருக்குத் தொடர்பிருந்தது.
அநீதிக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்க உதவும் வகையில் ‘உபர்மால் கிசான் சபா’ (குடியானவர் சேவைக்குழு) என்ற அமைப்பை உருவாக்கினார். இதை வழிநடத்திச் செல்ல தலைவர், செயலாளர், நிர்வாகக்குழுவினர், என்ற பதவிகளை உருவாக்கி குடியானவர்களில் இருந்து சிலரை இப்பொறுப்புகளை ஏற்கும்படிச் செய்தார். இவர்களில் சிலர் தேர்தல் வாயிலாகவும், சிலர் நியமனத்தின் வாயிலாகவும் இப்பொறுப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இவ்வமைப்பானது நீதிவழங்கல், கல்வி, சமூக நலம் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொண்டது. ஜாகிரில் இருந்த நீதிமன்றத்திற்கு மாற்றாகச் செயல்பட்டு, உரிமையியல், குற்றவியல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியது. அரசு நீதிமன்றம் போன்று இதுவும் தனக்கென, நீதிமன்ற முத்திரைத்தாள், நீதிமன்றக் கட்டணம், எழுத்தாவணமாக (அபிடவிட்) வழக்குகளைத் தாக்கல் செய்தல், சாட்சிகளின் பட்டியல் தரல் என்பனவற்றை உருவாக்கிக் கொண்டு செயல்பட்டது. ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
யாரேனும் அரசு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தால் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவதுடன் சாதிவிலக்கிற்கும் ஆளாயினர். அவர்களுடன் சமூக உறவு கொள்ளாமை, திருமண உறவுகளை மேற்கொள்ளாமை என்பன சாதிவிலக்கத்தின் முக்கிய கூறுகளாக இருந்தன.
பள்ளிக்கூடம் ஒன்றை கிராமம் ஒன்றில் இவ்வமைப்பு நிறுவியது. அது இரவு நேரத்தில், ஆண்களுக்கும், பெண்களுக்குமான முதியோர் கல்வி நிறுவனமாகவும் செயல்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் இணையரசாகவும், சனநாயகத்தன்மை கொண்டதாகவும் செயல்பட்டது. மேவார் ஆட்சியாளர்கள் ஜாகிர்தார்கள் ஆகியோரின் நிலவுடைமைக் கொடுமைகளை எதிர்த்துச் செயல்பட்டது. இதன் சனநாயகத் தன்மையினால் இதன் தலைவரை, அரசு அதிகாரிகளுக்கும் மேலாக மதித்து அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தனர்.
தம்மைப் பற்றிச் சிந்தித்து ஜாகிர்தார்களின் செயல்பாடுகளில் உள்ள நியாய - அநியாயத்தன்மைகள் குறித்துக் கேள்வி கேட்கும் துணிச்சலைப் பெற்றனர். மன்னராட்சிப் பகுதிகள் என்பன, தேவையற்ற ஒன்று என்பதையும், சுரண்டல் தன்மையுடன் கூடிய அராஜகத்தன்மை கொண்டவை என்பதையும் வெளிப்படுத்தினர்.
நிலத்தைவிட்டு வெளியேறி அருகாமையில் உள்ள வேறு பகுதிகளில் குடியேறல், ஜாகிருக்கு வரி கொடாமை என்ற வழிமுறைகளை இவ்வமைப்பு மேற்கொண்டது. பத்திக், சீதாராமதாஸ் ஆகியோரும் ஏனைய தலைவர்களும் இதன் கூட்டங்களில் கலந்து கொண்டு அறிவுரை கூறினாலும் இதன் செயல்பாடுகளில் தம் ஆதிக்கம் உள்ளது என்ற கருத்து குடியானவர்களிடம் தோன்றாதவாறு பார்த்துக் கொண்டனர்.
நிலத்தில் பயிரிடும் பயிருக்கு ஏற்ப வரி வாங்குவதை நிறுத்திவிட்டு, நிலத்தின் பரப்பளவுக்கு ஏற்ப நிலையான வரிவிதிப்பை வலியுறுத்தினர். கால்நடைக்கான மேய்ச்சல் நிலம் ஒதுக்குதல், நில உரிமைகளில் மாற்றம் செய்தல், பள்ளிக்கூடங்களும், மருந்தகங்களும் நிறுவுதல், எழுத்து வடிவில் வெளியிடப்பட்ட சட்டங்களைப் பின்பற்றி நீதி வழங்கும் நீதிமன்றங்களை நிறுவுதல், நிர்வாக ஆணைகளை வாய்மொழியாக அன்றி எழுத்துவடிவில் வெளியிடல் என்பன இவ்வமைப்பு முன்வைத்த பிற வேண்டுகோள்களாக அமைந்தன.
குடியானவர்களின் போராட்ட உணர்வைத் தூண்டும் தன்மையிலான பாடல்களை, மார்வாரி மொழியிலும், இந்தி மொழியிலும் எழுதி, பத்திக்கும் ஏனைய செயல்பாட்டாளர்களும் பரப்பினர். இவை நூல் வடிவிலும், வெளிவந்தன. ஜாகிரின் அவலநிலை, ஒற்றுமையை வலியுறுத்தல், குடியானவர்களின் இவ்வமைப்பையும், அதன் தலைவர்களையும் போற்றுதல், சமூக சீர்திருத்தம் வேண்டல் என்பன இவற்றின் கருப்பொருளாக அமைந்தன. கையெழுத்து வடிவிலான வாரஇதழ் ஒன்றும் வெளிவரலாயிற்று.
1917இல் தொடங்கிய இவ்வியக்கம் வலுப்பெறலாயிற்று. இவ்வமைப்பின் முக்கிய தலைவர்களைக் கைது செய்ய அனுமதிக்கும்படி மேவார் நிர்வாகத்திடம் ஜாகிர் அதிகாரிகள் வேண்டினர். மேவாரில் அரசுப் பணியில் இருந்த நண்பர்கள் வாயிலாக, தம் மீது கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதை அறிந்து கொண்ட பத்திக் அங்கிருந்து வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கிருந்து இரவு நேரத்தில் பயணித்து வந்து இயக்கத்தை நடத்துவதற்கு வழிகாட்டிக்கொண்டிருந்தார். சீதாராமதாசும் வேறு ஒரு தலைவரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் தூண்டுதலின் அடிப்படையிலேயே அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாக சாட்சியம் அளிக்க குடியானவர்கள் மறுத்துவிட்டனர். தன்னிச்சையாகவே தாங்கள் செயல்பட்டதாகக் கூறினர்.
அரசு எதிர்ப்புச் செயல்பாடுகளை 1918-இல் இவ்வமைப்பு நிறுத்திவிட்டு ‘சேவா சமிதி’ (சேவை அமைப்பு) என்ற அமைப்பைத் தோற்றுவித்தது. ஜாகிர் அதிகாரிகளின் தவறான பரப்புரைகளுக்கு எதிர்வினையாற்றியது. அத்துடன் கிணறுகள் ஏரிகளைத் தூர்வாருதல் போன்ற பணிகளை ஒவ்வொரு மாதமும் குடியானவர்களின் துணையுடன் இருநாட்களுக்கு மேற்கொண்டது. இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்ட கிராமத்தினரின் கிணறுகளை அழித்தும், பயிர்களைக் கொளுத்தியும், மரங்களை வெட்டியும், வேலிகளை அழித்தும் தண்டனை வழங்கியது. காந்தியின் பார்வையில் இது ‘அனாத்மா’ (ஆன்ம விரோதம்) ஆகும். அதே நேரத்தில் உடல் சார்ந்த வன்முறை எதுவும் நிகழவில்லை.
குடியானவர் எழுச்சியை அடக்கும் வழிமுறையாக அவர்களது கிசான் சபாவும் சேவை அமைப்பும் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு, தடை செய்யப்பட்டன. மாதவ்சிங் கோத்தாரி என்ற கடுமையான அதிகாரி புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அனைத்துக் கூட்டங்களும் தடை செய்யப்பட்டன. சபாவின் தூதர்கள் கைது செய்யப்பட்டனர். குடியானவர்கள் சித்ரவதைக்கு ஆட்படுத்தப்பட்டதுடன், ஊதியமில்லாத கட்டாய வேலையை மேற்கொள்ளும்படி பணிக்கப்பட்டனர். வலுக்கட்டாயமாக வரி வாங்கப்பட்டது.
சில நேரங்களில் குடியானவர்களுக்கும் ஜாகிர் அதிகாரிகளுக்கும் இடையே வன்முறையிலான மோதல்கள் நிகழ்ந்தன. அறப்போராட்டம் என்ற எல்லையைக் கடந்து குடியானவர் போராட்டம் பழைய நிலைக்குச் சென்றது. இந்நிகழ்வுகளையெல்லாம் செய்தித்தாள்களின் வாயிலாக இந்தியாவின் பிற்பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் பத்திக் ஈடுபட்டார்.
1918-இல் டில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் கலந்து கொண்டு காந்தியைச் சந்தித்தார். அவரும் பிஜோலியாவில் நடைபெறும் நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். 1919-இல் அவரை பம்பாய் வரும்படி அழைப்பு விடுத்தார். பத்திக் உருவாக்கிய இயக்கம் அவருக்கு நிறைவளித்த நிலையில் தன் செயலாளர் மகாதேவ் தேசாயை பிஜோலியாவுக்கு அனுப்பி அங்கு நிகழும் நிகழ்வுகளை அறிந்துவரும்படிக் கூறினார். அவரும் அங்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்வுகளைத் தெரியப்படுத்தினார்.
இந்தியாவின் முக்கிய தேசியத் தலைவர்களுடன் போராட்டக்காரர்கள் தொடர்பு கொள்கிறார்கள் என்பதையறிந்தவுடன், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகி மதோசிங் கோத்தாரி போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் முனைப்புடன் செயல்பட ஆரம்பித்தார். குடியானவர்களின் தலைவர்கள் அய்ம்பது பேரைக் கைது செய்து ஜாகிரின் தலைமை அலுவலகத்தில் அடைத்து வைத்தார்.
ஏனைய குடியானவர்கள் கைது ஆணை இன்றியே கைது செய்யப்பட்டனர். வரிகளைக் கட்டுவதாகவும், ஊதியம் இல்லா கட்டாய வேலையை மேற்கொள்ளுவதாகவும் எழுத்து வடிவில் ஒப்புக்கொள்ளும்வரை அடிக்கப்பட்டனர். பெற்றோர் கண்முன்பே சிறார்கள் அடிக்கப்பட்டனர். உறவினர்களின் கண்முன்பே ஜாகிர் அதிகாரிகளால் குடியானவர் குடும்பப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். குடியானவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. பயிர்களை அழித்ததுடன் கால்நடைகளைக் கவர்ந்து சென்றனர்.
இத்தகைய சூழலில் மேவாரின் மகாராணர் பிஜோலியா ஜாகிர் குறித்து ஆய்வு நிகழ்த்த 1919 ஏப்ரலில் உத்தரவிட்டு மூவர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்தார். தம் தலைவர்கள் அய்ம்பது பேரையும் விடுவித்தால்தான் விசாரணைக்குழுவிடம் பேசமுடியும் என்று கூறும்படி, பத்திக் குடியானவர்களை அறிவுறுத்தினார். அக்குழுவிடம் வழங்க மனு ஒன்றையும், தயாரித்துக் கொடுத்தார். கல்வி மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற வேண்டுகோளும் அம்மனுவில் இடம் பெற்றிருந்தது.
இம்மனு விசாரணை ஆணையத்திடம் ஏற்படுத்திய தாக்கத்தினால், குடியானவர் தலைவர்கள் அய்ம்பது பேரையும் விடுவிக்கும்படி அது உத்தரவிட்டது. சிறிதளவு வரிக்குறைப்பும் செய்தது. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதன் பின்னர் ஆங்கில ஆட்சியில் இருந்த ஆஜ்மீரில் தங்கி பிஜோலியா குடியானவர்களை பத்திக் வழிநடத்திக் கொண்டிருந்தார். ஜாகிரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்றும் வரிசெலுத்தவும், கட்டாய வேலை செய்யவும் மறுக்கும்படியும், ஜாகிரின் தலைமை அலுவலத்திற்குச் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தினார். இவை தவிர பின்வரும் புதிய வேண்டுகோள்களையும் முன்வைத்தார்.
குடிப்பதை நிறுத்த வேண்டும்.
இறப்பு விருந்துகளை நிறுத்த வேண்டும்.
ஜாகிர் நிலங்களில் பயிரிட வேண்டாம்.
அந்நியத் துணிகளைப் புறக்கணிக்க வேண்டும்.
அவ்வப்பகுதியில் உள்ள பனியாக்களையும் வட்டித் தொழில் புரிவோரையும் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வேண்டுகோள்கள் நல்ல பயனை அழித்தன. ஜாகிரின் வருவாயும் சிறு ஜாகிர்தார்களின் வருவாயும் குறைந்து போயின. மிகுந்த நெருக்கத்திற்கு ஆளான நிலையில் சிறு ஜாகிர்தார்கள் பத்திக்கை அணுகி, குடியானவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். அவரும் அவர்களது நிலங்களில் பயிர் செய்து உரிய நிலவாடகையைக் கொடுக்கும்படிக் கூறினார். இப்பொழுது அவர் காந்தியவாதியாக மாறி இருந்தார். வன்முறையற்ற போராட்ட வழியில் இருந்து விலகி வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடுவது, போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்குவதை நியாயப்படுத்த, ஆட்சியாளர்களுக்கு உதவும் என்பது அவரது கருத்தாக இருந்தது.
1921-இல் கிசான் சபை கூறியதன் அடிப்படையில் குடியானவர்கள் சாகுபடி செய்தனர். பழைய சாகுபடிப் பாக்கியைச் செலுத்திய பின்னரே தற்போதைய சாகுபடிக் கணக்கு ஒழுங்கு செய்யப்படும் என்று ஜாகிர் அதிகாரிகள் கூறிவிட்டனர். குடியானவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அறுவடை செய்து விளைச்சலைக் கொண்டு சென்றனர். அதிகாரிகள் படைவீரர்களை அனுப்பினர். ஆனால் தானியங்களைக் கைப்பற்ற படைவீரர்கள் மறுத்துவிட்டனர். வேறுவழியின்றி ஆஜ்மீரில் பேச்சு வார்த்தைக்கு அதிகாரிகள் வந்தனர். இறுதியில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. இப்போது அருகில் உள்ள ஒன்பது ஜாகிர்களின் குடியானவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, ராபர்ட் ஹாலந்து என்ற ஆங்கிலேயர் ராஜபுதனாவில் அரசியல் முகவராகப் பணியாற்றி வந்தார். தலத்தில் செயல்படும் ராஜபுத்திர ஜாகிர்தார்கள் மற்றும் அவர்களது கைக்கூலிகளின் வழிமுறைகளை ஆதரிக்கமுடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். இராஜஸ்தான் குடியானவர்களின் கிளர்ச்சிகளில் நியாயம் உள்ளது என்பதும் அவரது கருத்தாக இருந்தது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மகாராணா தடைக்கல்லாக இருப்பதையும் அவரது அதிகாரிகள் ஊழல் புரிபவர்களாகவும், சுயநலவாதிகளாகவும் இருப்பதையும் நீதிவழங்குதல் குறைபாடுமிக்கதாக இருப்பதையும் அவர் கண்டறிந்தார். நீக்குபோக்கு இல்லாதவராகவும் பிற்போக்கான சிந்தனை கொண்டவராகவும் விளங்கும் தற்போதைய மகாராணாவை அப்பதவியில் இருந்து நீக்குவதன் வாயிலாகவே குடியானவர் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்ற முடிவுக்கு வந்தார்.
இம்முடிவின் அடிப்படையில் தந்தையைப் போலன்றி, கல்வியறிவும், பரந்த மனப்பான்மையும் கொண்ட அவரது மகனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும்படி வற்புறுத்தினார். முதலில் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த மகாராணா வேறு வழியின்றி, தன் மகனிடம் தன் அதிகாரங்களை வழங்குவதாக வெளிப்படையாக அறிவித்தார்.
தொடரும்