நோயில்லா நெறியை உணர்த்துவது உணவு நெறியாகும்.  உண்ணும் உணவில் குற்றமுடைய உணவு, நல்ல உணவிலும் உண்போர் உடலுக்கு ஒவ்வாத உணவு என்னும் வகை உணவை நீக்கி விட்டு, உடலுக்கும் மனத்துக்கும் ஏற்ற உணவை உட்கொண்டால் உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் குற்றம் உண்டாகாது என்பர்.

உணவே உயிர் வாழ்வதற்குத் தேவையாகவும், உணவே உடல் நோய்க்கு மருந்தாகவும், அவ்வுணவே பல சமயங்களில் உடல் நோயைக் கொடுக்கும் மருந்தாகவும் அமைவதுண்டு.

“நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்

                உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டிமுதற்றே உணவின் பிண்டம்

                உண வெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரியோ ரீண்டு

                உடம்பும் உயிரும் படைத்தி சினோரே.”

எனும் புறப்பாடல் பழந்தமிழர்களின் உணவுசார் மருத்துவ அறிவைப் படம் பிடித்துக்காட்டுகிறது.

உயிர் வாழவேண்டுமானால் உணவு உண்ண வேண்டும்.  உணவு இல்லாமல் உயிர் வாழ்தல் என்பது இயலாது என்பதை உணர்ந்து;

“உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே

  உண்டிமுதற்றே உணவின் பிண்டம்.”

                (புறம்-18: 19-20)

என்று உரைத்தனர்.  உணவு உண்பதில் அளவை மேற்கொண்டிருந்தனர்.  பெருந்தீனி தின்றால் நோயும், சிறுதீனி தின்றால் வலுவிழப்பும், நோயும் வரக்கூடும் என்றறிந்து,

“உண்பது நாழி உடுப்பவை இரண்டே.”

(புறம்: 61-6)

என்னும் கொள்கையை நமது முன்னோர் வகுத் திருந்தனர்.  ஒவ்வொருவரும் நாழி அளவு உணவு உண்ண வேண்டும் என்பதும், ஆடை வகையால் இரண்டு ஆடைகள் மேலாடை, இடையாடை என உடுத்தவேண்டும் என்பதும் அவர்தம் கொள்கை.

நியதிகளைத் தொகுத்துரைக்கும் ஆசாரக் கோவை, உணவு உண்ணும் போது கிழக்கு நோக்கி அமர்ந்து, உணவு உண்ண வேண்டும்.  நின்று கொண்டோ, படுத்துக்கொண்டோ, கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டோ உணவுண்ணக் கூடா தென்கிறது.

உணவு உண்ட பின் நடை:

உணவு உண்ட பின்னர், ஒவ்வொருவரும் சிறிது தூரம் நடக்க வேண்டும்.  அவ்வாறு நடப்பது உண்ட உணவு செரிமானமாவதற்கு உதவும் எனக் கூறப்படுகின்றது. நோயாளி உணவு உண்டபின் சிறிது தூரம் நடக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்துவர்.

உணவு உண்ட பின்னர், நூறடிதூரம் உலாவி விட்டு வரவேண்டுமென்று மருத்துவ நூல் கூறு கின்றது.  அதற்கு ஏற்றவாறு, உணவு மண்டலம் நூறடி நீள நடை மண்டபத்துடன் அமைக்கப் பட்டிருப்பதாகவும், சீவக சிந்தாமணி உரையா சிரியர் நச்சினார்க்கினியர் உரைக்கக் காணலாம்.

இக்கருத்தை ஒட்டியே வள்ளல் இராமலிங்க அடிகளும் உண்டபின் உலாவுதல் வேண்டும் என்பார்.

உணவு உண்ண வாழை இலை:

உண்டதற்கு உண் கலங்கள் உடலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற விதிக்கு இணங்க பொன், வெள்ளி, வாழை இலை, தேக்கிலை, தாமரை இலை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

“செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும்.”

(புறம் 168: 13)

“குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு

அமுதம் உண்க அடிகள் ஈங்கென.”

(சிலம்பு-16: 41-42)

இவ்வடிகளின் மூலம் வாழையிலையில் உணவு உண்ணும் மரபு தெரியவருகிறது.

மருந்தே உணவு: ‘நெல்லிக்கனி’

சாக்காட்டினைத் தள்ளிப்போடும் ஆற்றல் வாய்ந்த மருத்துவ குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதைப் பழந்தமிழர் உணர்ந்திருந்தனர்.  அதற்குச் சான்று அதியமான்-ஒளவையார் வாழ்க்கை வரலாறு. இதனைப் புறநானூற்றுப் பாடல் மூலம் அறியலாம்.

“நெல்லி அம்புளி மாந்தி”

என குறுந்தொகையும்,

“புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றனர்”

என அகநானூறும்,

“சுவைக்காய் நெல்லி” என்று நற்றிணையும்,

“கவினிய நெல்லி அமிழ்து விளை தீங்கனி”

என சிறுபாணாற்றுப்படையும்

“சிறியிலை நெல்லித் தீங்கனி.”

எனப் புறநானூறும் குறிப்பிடுகின்றன.  இவற்றுள் கருநெல்லி என்னும் கனியே சிறப்புக்குரிய மருந்தாகக் கருதப்படுகிறது.  இது மரணத்தை வெல்லும் ஆற்றல் மிக்கது.  காயகற்ப வகையைச் சார்ந்தது என்று கருதப்படுகிறது.

நெல்லிக்கனியும் - வாழ்நாளும்:

மனிதனின் சராசரி இறப்பு வயது 70 ஆக இருந்ததாகத் திருமந்திரம் (பாடல்-163) தெரிவிக்கிறது.  அதிக அளவு வாழ்நாள் பெறுவதற்கு நெல்லிக்கனி மருந்தாகப் பயன்பட்டுள்ளது.

எ.கா: நெல்லிக்கனியைச் சங்கஇலக்கியங்கள் சிறப்பித்துக் கூறக் காண்கிறோம்.  குறிப்பாக,

“..... நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின்னகத் தடக்கிச்

சாதல் நீங்க எமக்கீத்தனையே.” (புறம்: 91)

எனும் ஒளவையார் பாடல் வாயிலாக நெல்லிக் கனிக்குச் சாதலை நீக்கும் மருத்துவக்குணத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

இதுபோலவே,

“மால்வரைக் கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி

அமிழ்து விளை தீங்கனி அவ்வைக்கீந்த

... ... அதிகனும்.”

எனச் சிறுபாணாற்றுப்படையும்;

“சாதலை நீக்கும் அருநெல்லி தன்னைத்

தமிழ் சொல் ஒளவைக்கு

ஆதரவோடு கொடுத்த”

என கொங்கு மண்டலச் சதகமும் எடுத்தியம்பு கின்றன.

“நெல்லிக்கனி அமுதை ஒளவைக்களித்து வேலதிகன்

மல்கு புகழ் கொண்டான் வடமலையே.”

என வடமலை வெண்பா எனும் நூல் குறிப்பிடுகிறது.

மேற்கூறப்பட்ட கருத்துக்களை ஆராயும் பொழுது, மலையில் விளையும் கருநெல்லிக்கனி என்பது உண்டாரை வாழ வைக்கும் அமிழ்தத்தைப் போன்று வாழ்நாளை நெடிது நீட்டிச் சாதலைத் தடுத்துத் தள்ளிப்போடும் தன்மையுடையது என்பதை உணரலாம்.

அஞ்சறைப்பெட்டி பொருள்கள்:

மிளகு, அது தமிழ் நாட்டின் வீட்டு மருந்து எனல் பொருந்தும்,

“பகைவன் வீட்டிற்குச் சென்றாலும்

                பத்து மிளகோடு போ.”

“பத்து மிளகிருந்தால்

                பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.”

என்பன பழமொழிகள்.  மிளகு மருத்துவத்தின் மூலப்பொருளாக அமைவதோடு உணவாகவும் அமையும்.

“கருங்கொடி மிளகின் காய்த்துணர் பசுங்கறி.”

(மலைபடு கடாம்: 520)

விஷ முறிவிற்கு மிளகு அபூர்வ மருந்தாகும்.         இதுபோலவே இஞ்சி, மஞ்சள் ஆகியவை உணவாகி மருந்தாகிறது.

“இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்.”

என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.  இது போல சீரகம் முதலிய அஞ்சறைப் பெட்டியில் உள்ள சமையல் பொருள்கள் பல மருந்தாகவும், நோயைத் தடுக்க வல்லதாகவும் அமைந்திருப்பது எண்ணற்பாலது.

தமிழகச் சித்தர்கள் பலர் உடலை வளர்ப்பதற்கும் காப்பதற்கும் வளப்படுத்துவதற்கும் பல அரிய மூலிகைகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

“காக்கை கருநீலி கரந்தை கரிசாலை

வாக்குக்கு இனிமை வல்லாரை

இவ் வைந்தும் பாக்கள வேணும்

பாலில் கரைத்து உண்ண ஆக்கைக்கு

ஓதாது உணர்ந்தேன் மீதானம் உற் றேன்

அழிவு இல்லை ஆயிரம் எட்டு ஆண்டும்.”

(மூலிகைத்தாவரங்கள்,

இராஜ மார்த்தாண்டம்- 2002:60)

என்னும் பாடல் மூலம் மூலிகைகளின் வகை களையும் இயல்பையும் காணலாம்.  காக்கை என்பது அவுரி இலையைக் குறிக்கும்.  அது இரத்தத்தி லுள்ள கிருமிகளை ஒழிக்கும் ஆற்றல் உடையது.  சிவகரந்தை கண்களுக்குக் கூரிய பார்வை ஏற்படுத்துவது.  கரிசாலை என்னும் மஞ்சள் கரிசலாங்கண்ணி ஈரலையும் சிறுநீரகத்தையும் சரி செய்ய வல்லது.  வல்லாரை நினைவாற்றலையும், அறிவையும் வளர்ப்பது.  இவ்வைந்து மூலிகை களையும், உண்டு வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் என்று தமிழர்கள் அறிந்திருந்தனர்.

உப்பு:

நெல்லின் அளவுக்கே உப்பும் விற்கப்பட்டது என்பதால் உப்பு எவ்வளவு உயர்ந்த பொருளாக மதிக்கப்பட்டது என்பது விளங்கும்.

“நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்

சேரி விலை மாற கூறலின் மனைய.” (குறள்: 140)

என்று பண்ட மாற்றாக உப்பு விற்கப்பட்டதை அகநானூறு குறிக்கும்.

உப்பின் அளவு இரத்த அழுத்தத்தைக் கூட்டவும், குறைக்கவும் செய்யக் கூடும் நோயாளிகள் உப்பைக் கட்டுப்படுத்தினால் நோயின் வேகம் குறையும்.

இதனை:

“உப்பு அமைந்தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.”            (குறள்: 1302)

என்றதனால் காதலர்களிடையே தோன்றும் பொய்க் கோபமும் உப்பின் அளவாக இருக்க வேண்டும் என்றும், இவ்விரண்டும் அதிகரித்தால் காதலும் கெடும்; உணவும் கெடும் என்னும் கருத்தில் எடுத்துக்காட்டாக அமைந்து உப்பின் பயன் உணர்த்தப்பட்டது.

தேன்:

தேன், தமிழ் மருத்துவத்தின் துணை மருந்தாகப் பயன்படுகிறது.  அதனால்தான்;

“பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கி”            (புறம்-34:10)

புண்ணுக்குத் தேனும் மருந்தாகப் பயன்பட்டு உள்ளது.

பால் சோற்றோடு தேன் கலந்து உண்டதாகப் புறநானூறு உரைக்கிறது.  இதனை மேலும் சிறப்பாகத் திருக்குறள்;

“பாலோடு தேன் கலந்தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்.”                                (குறள்: 1121)

என்று குறிப்பிடுகிறது.  பாலோடு தேன் கலந் துண்டால் உடல் வலிமையுறும் என்பது வள்ளுவர் கூறும் மருந்தியல் நுட்பமாகும்.

அறுசுவை:

உணவின் சுவை வகைகள் ஆறாகும்.  அவை, இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு, கைப்பு, புளிப்பு ஆகியன.  இவை முறையே ஆற்றல், வீறு, வளம், தெளிவு, மென்மை, இனிமை ஆகிய வற்றைத் தரும் என்பது உணவு மருத்துவ நெறி.  இதை நம் முன்னோர் அறுசுவையாக அமைத்துக் கொண்டனர்.

“அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கி உண்டாரும்.”

என்பது நாலடியார்.

இவ்வுணவைக் காலத்திற்கும், இடத்திற்கும் உடலுக்கும், வயதிற்கும் ஏற்றவாறு திட, திரவ உணவு எனப்பிரித்து உண்டனர்.  அவை எட்டு வகைப்படும்.

“மெய்தெரி வகையின் எண் வகை உணவின்

செய்தியும் வரையார்.”    (தொல். மரபியல்- 79)

உரையாசிரியர் இளம்பூரணர் நெல், காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதுமை எனவும், பேராசிரியர் பயறு, உளுந்து, கடுகு, கடலை, எள்ளு, கொள்ளு, அவரை, துவரை என்றும், அடியார்க்கு நல்லார் நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி எனவும் உரைக்கின்றார். 

மாறல்ல துய்க்க:

உணவு வகைகளை, இளமைக்கு ஏற்றது, முதுமைக்கும் வேனிற்கும் ஏற்றது, கார் கூதிர்க்கும் நாற்காலத்துக்கும் ஏற்றது உண்டு.  சில நோய்க் காலத்து ஒவ்வாது ஊறு செய்யக்கூடும் என்பதை முன்னோர்கள் அறிந்திருந்தனர்.  பருவ காலத்துக்கு ஏற்ற உணவு வகைகளை உண்பது உடல் ஓம்பும் வழியாகும்.

ஒன்றுக்கொன்று தேனும், நெய்யும் அளவொத்து உண்டால் நஞ்சாகும் என்பார் பரிமேலழகர் (குறள்:944) “ஒவ்வாமை ஏற்படாதிருக்க பலாப் பழம் உண்டால் சுக்கு உண்க.” என்பார் மணக் குடவர். (குறள்-945)

கைப்பு, புளிப்பு, தித்திப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்று சொன்ன அறுவகைச் சுவையும் இப்படி மாறுபட வகுத்து உண்ணாது, ஒருபடியே உண்ணும் சில்சுவை உண்டி ஒழித்து மருத்துவர் கூறியாங்கு உண்க என்பார் காளிங்கர் (946)

சித்த மருத்துவர்கள் ஒரு சுவை மட்டும் உண்ணாது அறுசுவையும் மாற்றி, மாற்றி உண்க என்பர்.

கள்ளும் உணவானது:

அக்காலத்தில் வெற்றி பெற்றோர் தமது வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் கள்ளுண் பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தனர்.  இது தவிர மக்கள் கள்ளை உணவாகவும் பயன்படுத்தினர் என்பதை;

“இலங்குவளை இடுஞ்சேரிக்

கட் கொண்டிக் குடிப்பாக்கத்து

நல் கொற்கையோர்.”

என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.

மேலும் போர்க் காலத்தில் கள்ளும், இறைச்சியும் உணவாக உண்டு உண்பவரின் மனத்தையும் உடலையும் திண்மையடைய செய்துள்ளதையும் அறியமுடிகிறது.

குறிப்பு:- சித்த மருத்துவத்தில் பல மருந்து களைக் கள் போன்றவற்றின் அனுபானத்தில் கொடுக்கக் கூறப்பட்டுள்ளது.  எ.கா: அன்னபேதிச் செந்தூரத்தைக் கள்ளில் அனுபானித்துக் கொடுக்க இரும்புச் சத்து குறைவினால் ஏற்படும் நோய் மாறி விடும். (சித்த மருத்துவ ஆய்வுக் கோவை: பக்.138)

கள் என்பது பழந்தமிழரின் இன்றியமையாத உணவாக அமைந்திருந்ததை இலக்கியங்கள் சுட்டிக் காட்டுவதை அறிந்தோம்.  இதற்கு ஒத்த கருத்தாக கள் என்பதை மயக்கம் தரும் கள் என்று எடுக்கக் கூடாது என்று உ.வே. சாமிநாதய்யர் குறிப்பிடு கிறார்.  அரசர்களும் வேறு சிறந்த வாழ்க்கை

நிலையுடைய மக்களும் கள் உண்பர் என்று அவர் கூறுகிறார்.  நெல்லால் செய்த கள், பனங்கள், இனிமையும் வெப்பமுடைய கள், தேனாலாகிய கள் முதலியவை மக்களுக்கு உணவாகப் பயன் பட்டிருக்கின்றன.  ‘இன் கடுங்கள்’ என்று குறுந் தொகை (330) பாடலில் வரும் சொற்றொடர் ஒருவகைக் கள்ளிற்கு இனிய சுவையும் ‘வெப்ப வீரியமும் உள்ளது’ என்ற மருத்துவப் பண்பைக் குறிக்கிறது.  ‘வெங்கட்தேறல்’ என்பதும் மருத்துவப் பண்பையே குறிக்கிறது. (சித்த மருத்துவ ஆய்வுக் கோவை: 103)

மேலும், போருக்குச் செல்லும் பொழுது குளிரைப்போக்கி வெம்மையைப்பெற , “நறவு”, என்னும் கள்ளுண்டதைப் புறநானூற்றிலும் (2077) வழிநடையின் பொழுது ஏற்படும் உடல் வலியைப் போக்கிக்கொள்ள கள்ளுண்ட செய்தியையும் அறியமுடிகின்றது. (பொ.ஆ.படை: 85-88)

முடிவுரை:

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் ஆய்வுகள் நடத்திக் கண்டுபிடித்திருக்கும் உண்மை.  இந்த உண்மையைப் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உணர்ந்திருந்ததை, மேற்கண்ட குறிப்புகள் சுட்டுகின்றன.

Pin It