sapakoolus 360நம் சங்க இலக்கியங்களில் தொகுக்கப்பட்டிருக்கும் குறிஞ்சித்திணைப் பாடல்களின் இலக்கியத் தரத்திற்குக் குறையாத சில பாடல்கள் (45) அம் மக்களிடமிருந்து தொகுக்கப்பட்டிருக்கின்றன.  இருளர் என்னும் பழங்குடியினரின் வாழ்வு சார்ந்த மரபுவழி தொடர்கின்ற பல சிறப்பியல்புகளை வெளிப்படுத்துகின்ற அப்பாடல்களின் வழி வலிமை பெறும் கதைமொழியால் உருவாகியிருக்கிறது.  ‘சப்பெ கொகாலு’ என்ற நாவல்.

தமிழகத்திலும் இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளிலும் சில நூற்றாண்டுக் காலமாகப் பழங்குடியின மக்கள் தம் வாழ்விடங்களுக்கும் வாழ்வாதாரங்களுக்குமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  இங்கே நிகழ்ந்து வரும் ஈவு இரக்கமற்ற ஒடுக்குமுறைகள் நம்மை வெட்கப்பட வைக்கத்தக்கவை. 

அரசர்கள், ஜமீந்தார்கள், விதேசிகள், சுதேசிகள், வந்தேறிகள்...  எனக் காலம் காலமாய் அந்தப் பழங்குடி மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள்.  இப்போது சமகால நாகரீக அரசியல், ஜனநாயகம் சுமக்கும் அரசாங்கம், இடதுசாரிச் சிந்தனை சுமக்கும் அரசாங்கம்...  என எத்தனையோ மாற்றங்கள் வந்தபின்னும் அவர்களின் துயரம் தீர்ந்துவிடவில்லை.

தமிழகத்தில் இருளர் குடிமக்களின் வாழ்வு வெளி எவ்வாறு செழித்திருந்தது... பின் எவ்வாறு சிதையத் தொடங்கியது என நாவல் விவரிக்கிறது.  பாடல்களின் வழிவிரியும் கதைப் போக்கில் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை வாசகன் தன் வாசிப்பின் வழி அறிந்து கொள்கிற முறையில் சம்பவங்களும் பாத்திரங்களும் இயக்கமும் அமைந்துள்ளன. 

கால மாற்றத்தில் அம்மக்களின் அகவெளியில் நிகழும் மாற்றங்கள், வறுமை அறியாதவர்கள் வந்தேறி களின் சூழ்ச்சியால் தம் வாழ்வாதாரமான நிலத்தின் மீதான உரிமையை இழந்து உணவுக்காக பிறர் வருகையை எதிர்பார்க்கும் இழிநிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

பெருநெருப்பு, சூறைக்காற்று, இடியும் மின்னலும்...  ஓயாத மழை... பெருமழை உயிரற்ற உடல்கள் பாறை இடுக்குகளில், தலைவேறு கைவேறாய் பிரிந்து, இயல்பு திரும்ப வெகுகால மாகியது.  இருந்து கொண்டிருந்த மனிதத்திரள் முற்றாய் அழிந்துவிட்டது.  பேரழிவின் விளைவுகள் மனதில் விரிந்து பரவுகின்றன.

உலகைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறார்கள் மல்லன் - மல்லி ஆகிய தெய்வங்கள்.  மெல்லக் கேட் கிறது முனகல், எங்கோ ஒரு குகையிலுள்ளிருந்து - தூரமாயுள்ள கிழவி மலையிலிருந்து. குகை வாசலையடைந்து குரலுக்குரிய உடல்களை அறி கிறார்கள்.  நிர்வாணமாய் ஒரு ஆணும் ஒரு பெண்ணும். கொடுவன் ஆணின் பெயர், பெண்ணின் பெயர் சம்பி.

‘நீங்கள் இனி புருசனும் பெஞ்சாதியும்’ என்று மறைந்தன தெய்வங்கள்.  இவ்வழி பல இணைகள் பல்கிப் பெருகியதே குப்பிலிகா, ஆறுமூப்பு, செமக் காரர்கள், கரட்டி குலம், ஊஞ்சகுலம், வெள்ளக் குலம், குறுநகர் குலம், தேவனெ குலம், கொடுவே குலம், சம்பகுலம்... எனப் பனிரெண்டு குலங் களாகப் பல்கிப் பெருகிய இருளர் இனம்.  தங்கள் இனத்தின் தோற்றம் குறித்து இருளர்கள் மதிக்கும் தொன்மம் இது.

இவ்விதம் வனங்களில் பெருகிய இருளர் இன மக்களின் வாழ்வியல் சடங்குகள், நட்பு, காமம், காதல், மகிழ்ச்சி, வெற்றிதோல்வி, துன்பம், வன்மம், பகை, ஏமாற்றம், திருமண விதிகள், முரண்கள், மீறல்கள், சமரசங்கள், பகைவரை எதிர்த்தல், போரிட்டு மடிதல், பகைவரின் கை ஆளாய் மாறுதல், நம்பிக்கையின் அடியாக நிகழும் நற்பயன்கள், தீமைகள் கலைகள், சாகசங்கள், கட்டுமீறிச் செய்தல், பெண்ணுரிமை, வேளாண்மையில் இம்மக்களின் உழைப்பு அநியாயமாக ஏமாற்றப்படுதல், புலம் பெயர்தல்... என மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட பழங்குடி இனத்தின் சமூக வரலாற்றினை ஆய்ந்து பார்க்கத் தூண்டும் படைப்பாக ‘சப்பெ கொகாலு’ இயக்கம் கொள்கிறது.

“காலம் காலமாக ஒன்றாக இருந்த இருளர்கள் மன்னனின் கட்டளையின் பேரில் காடுகளை அழிக்கவும் அங்கே படைகளைக் கட்டவும் ஆரம்பித் தார்கள்.  வேட்டுவர் ஒ இருளர் சச்சரவுகள் நாளடைவில் பெரும் சண்டைகளாக மாறின.  சின்னச் சின்னச் சலுகைகளுக்காக தாங்கள் உரிமை பாராட்டிய மண்ணின் இண்டு இடுக்குகளை விரல் நுனியில் வைத்திருந்த வேடர்கள், வேறு வழியின்றி சோழர்களின் படைகளில் சேர்ந்து சேவகம் புரியத் தொடங்கினர்.  வேடர்களின் பாம்புச் சின்னம் பொறித்த மரங்களில் புலிக் கொடி பறக்க ஆரம்பித்தது” (பக். 221)

இயற்கையின் ஒத்திசைவுடன் சூழல் பரா மரிப்பைக் கடவுளுக்கு நிகராக மதித்துப் பேணி வருகிற இம்மக்களின் வாழ்வுச் சுதந்திரத்தை அழிக்கிற அத்துமீறல்களை எக்காலத்திலுமே அரசமைப்புகள் கண்டுகொள்வதில்லை; வனங் களை முறையற்ற அரசியல் செல்வாக்கு, கையூட்டு ஆகியவற்றால் தமதாக்கிக் கொள்கிற பேராசைக் காரர்களின் கருவியாகவே அவை தொடர்ந்து இயங்குகின்றன.

நவீனத் தொழில் வளர்ச்சி என்று வியந்தோதப் படும் இயற்கை அழிப்புச் செயல்கள் வேறு பெயரால் சோழர்கள் காலத்திலேயே தொடங்கி விட்டது.  தங்களின் உபரியைப் பெருக்கிக்கொள் வதற்காக தம் முகவர்களின் தந்திரங்களோடும் வன்முறையாலும் இப்பழங்குடியினரை வாழ் விடங்களைவிட்டு விரட்டியடித்த கொடுமை தொடங்கி இன்றைய தென் இந்தியாவின் ‘மான் செஸ்டர்’ என்று ஆட்சியாளர் பெருமிதப்பட வைக்கும் கோயம்புத்தூர் நகரம் எவ்வாறு உரு வானது? அங்கே தொழிற் பெருக்கத்திற்காக இப் பழங்குடியினர் எத்தகைய துயரங்களை எதிர் கொள்ள வேண்டியதாயிற்று என்பது வரை நிகழ்ந்த அழிமதிகளை நாவல் விவரிக்கிறது.

இன்று பெருநகரங்களின் உடலுறுப்புகளைப் போல நம்முன் நீண்டு பெருகும் தீமைகள் எங்கிருந்து தொடங்கின என எண்ணிப்பார்க்க, வளர்ச்சி என்பது ஒரு பகுதிமக்களின் வீழ்ச்சிக்கான விதைகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது? நதிகளை, நிலத்தை, காற்றை, மழையை மீளமுடியா அழிமதிகளினுள் ஆழ்த்திவிட்ட நவீன முன்னேற்றத்தின் வேர்கள் எங்கே நிலைகொண்டிருக்கின்றன என்பதை வாசகனுக்கு  அக்குலங்களினூடாக நிகழ்கின்ற ஒருதலைக் காதல், நிறைவேறாக்காதலால் உருக்கொண்ட வன்மம், பிடிக்காதவனை தங்கை மணந்தாள் என்பதற்காக அவளுடைய கணவனை ஏமாற்றி அழைத்துச் சென்று அண்ணன்மார் ஏழுபேர் சேர்ந்து கொலை செய்தல் ஒத்த இரு மனங்கள் காதலால் குலவிதி மீறி இடம்பெயர்தல், வேண்டா தவனை விஷமுள் வைத்துக் கொலை செய்தல், அதற்கென மூலிகை கொண்டு விஷம் தயாரித்தல், காமம் மிகுந்துவர அட்டைப் பூச்சியைக் கடுகு எண்ணெயில் வறுத்துத் தின்ன ஆலோசனை வழங்குதல், தம்பியின் காதலியை வெறுப்பதால் காதலியின் குல சாபத்திற்கு அஞ்சி சொந்தத் தம்பியைக் கொலை செய்ய முயல்தல்...

என மனித மனங்களின் குரூரங்களையும் பதிவு செய்திருக்கிறது நாவல்.

வாசகரின் அனுபவ எல்லைக்குள் வர வாய்ப் பற்ற ஓர் இனக்குழு மக்களின் வாழ்வியலை அதன் மீதான அந்நியத் தாக்குதல்களை, அவை நவீன அரசு நிறுவனங்களுடன் கொண்டிருக்கும் ஒத்திசைவை எளிய எடுத்துக்காட்டு நிகழ்வுகளின் வழி சிந்தனைப் பரப்பினுள் தங்கவைக்கிறது பிரதி.  மனிதர்கள் வாழும் வெளி என்ற நிலையில் வேறுபட்டாலும் அதிகாரத்தின் அச்சுறுத்தல்களின் முன் பலவீனர்கள் என்ற ஓர்மைக்குள் நம்மை அடையாளம் காணவும் உதவுகின்றது வாசிப்பு.

“ஒரு நாவல் அதன்மொழி எப்படி அமைவு பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் அந்த நாவல் பேசும்.  மனித விழுமி யங்களும் சமூக உளவியல் விழுமியங்களும் மொழி விழுமியங்களே- மொழியில் வெளிப் படும் வடிவத்திலும் வெளிப்படா வடிவத் திலும் வரலாறு இயங்குகிறது” என்கிறார் தமிழவன் (தீராநதி, ஜீன்- 2015).

ஐஐ

பழங்குடி இனமக்களின் நிலவெளியில் எஞ்சி யிருக்கும் வாய்மொழி இலக்கியங்களை அவர் களால் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பாது காத்து வைக்கமுடியும்? என்ற கவலையோடு பல வழிகளில் முயன்று இருளர் இனமக்களுடன் சில காலம் இணக்கமான உறவுகொண்டு அவர்களிடையே நிலவும் நம்பிக்கைகள் சடங்குகள் போன்றவற்றை அறிந்துகொண்டிருக்கும் நாவலாசிரியர் அம் மக்களினூடாகப் புழங்கும் 45 வாய்மொழிப் பாடல் களைப் பதிவு செய்து அவற்றின் துணை கொண்டு சம்பவங்களை அமைத்து நாவலை இயக்கியிருக் கிறார்.

மல்லி - பொன்னன் காதலர் இணை எதைப் பற்றியும் கவலையின்றி சேர்ந்தே சுற்றினார்கள்.  குருவியடிக்க, தேன் எடுக்க என.  கொடுவே குலத்துக் குருவின் பெண் மந்திரம், சத்தியம், சடங்குகள், வாழ்வு என்ற குடும்பப் பின்புலம்.  பொன்னனின், அண்ணன்மார் சாபத்துக்குப் பயந்து மல்லியைக் கொல்லாமல் தங்களின் உடன் பிறந்த தம்பியை ஏமாற்றிக் கொலை செய்ய முயல்கின்றனர்.  தப்பிப் பிழைத்து இடம்பெயர்ந்து செல்கிறார்கள் காதலர்கள்.  தன் காதலனை அண்ணன்மார் ஆழக்குழியினுள் வைத்துப் பெரிய கல்லை வைத்து மூடினர்.  மந்திரித்த தண்ணீரைத் தெளித்து பாறையை நொறுங்கச் செய்கிறார் மல்லி (அத்: 4).

‘களவுக்காலத்தில் பிறர் அறியாது வந்து தன்னுடைய நலத்தை நுகர்ந்து சென்றவன் தந்த உறுதிமொழியை நிறைவேற்றாது போய் விடு வானோ என்று அஞ்சுகிறாள்’ என்று குறுந் தொகைப் பாடல் 25 கூறுகிறது.

நாவலில்: நீலி என்ற தலைவிக்குத் தன் காதலன் பாண்டனைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.  பாண்டன் நீலியின் ஆண்வடிவமாக இருந்தான். அவனோடுதான் இவள் கூடி வாழப்போகிறாள்.  அம்மாவின் கட்டளையைத் தூக்கி வீசிவிட்டு அள்ளன் தக்கை கடந்து அருகிலுள்ள சோலைக்குப் போய் அவனைத் தேடினாள் (15வது அத்தியாயம்).

‘காமத்தால் தன்நெஞ்சு அழிதலும் ஒருதலை என்றும் தலைவன் வருந்தினான், நெகிழும் பசுமட் கலம் கொண்டு (பச்சை மண் கலயம்) மழைநீர் வெள்ளைக்கை நீந்த நினைக்கும் செயல்போல தலைவன் காம வெள்ளத்தைத் தன் நெகிழும் மனத்தால் நீந்த முற்பட்டமை போன்றது’ குறுந்தொகை: 25

நாவலில் 12வது அத்தியாயம்:

கோஞ்சன்- சீங்கியை விரும்பி மிக விரும்பி வருகைக்காகக் காத்திருக்கிறான்.  பலமுறை வரு வதாகக் கூறி அவள் வராது ஏமாறுகிறான்.

“சீங்கி கோஞ்சே புட்டு திங்கானான்னு கேளுவி” என்று வீட்டிலுள்ளோர் அவனை அவளுக்குப் பிடித்திருக்கிறதா என அறிய விரும்புகின்ற கணங்கள்:

“கோஞ்சனுக்கு திக்திக் என்றிருந்தது; (பிடித் திருந்தால் வெளியே வந்து ஒரு சொம்பு தண்ணீரும் ரசீங்கி) சேந்தி வெளியே வரவுமில்லை, தண்ணீரைக் கொடுக்கவுமில்லை; கோஞ்சனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது, காத்திருக்க முடி யாமல் எழுந்தான்; அப்போதும் அவள் வர வில்லை; ஆனால் உள்ளிருந்து ‘ஆமா திம்பினா’ என்ற சப்தம் மட்டும் கேட்டது” (அவளுடைய குரல்).

“மேகம் திரண்டு கிழக்கை மூடிக்கொண்டு வந்தது, மரக்கிளையில் உட்கார்ந்திருந்த குருவி பறந்துபோய் புதரில் உட்கார்ந்தது. லேசான தூறலோடு மே காத்து மரத்தை முறிப்பது போல வீச மின்னல் வானத்துக்கும் பூமிக்கும் வெளுத்தது; பெரிய குடை போல விரிந்திருந்த மல்லம் பாறைக்குக் கீழே விருகனும் நேரியும் நடுங்கியபடி நின்றார்கள்.  காற்றும் மழையும் குறையக் குறைய இருவருக்கும் காதல்கிறுக்கும் ஏறிக்கொண்டே இருந்தது.  கொடாலி மரத்துக்குப் பக்கத்திலிருந்த கள்ளிமரத்தை தட்டி விட்டு பரளிப்புதருக்குள் புகுந்து போய் அங்கே கிடந்த பலகைப் பாறையில் வெகுநேரம் தம்மை மறந்து கிடந்தார்கள்” (பக். 62, 63).

குறுந்தொகைப் பாடல் 42:

“முதல் நாள் இடையாமத்தில் பெய்த மழை பிற்றை நாளிலும் அருவியாய் தொடர்ந்து ஒழுகுவது போல காமக்கூட்டத்தால் பெற்ற தொடர்பு இரவுக் குறி இடையீடு போன்றவற்றால் தடைப்பட்டாலும் நீங்காது தொடரும்” என தலைவி குறிப்பிட்டாள்.

இருளர் இனப்பெண்கள் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யவும் தனக்குக் கண வனாக விரும்புகிற ஆணின் தகுதியினைச் சோதித்து அறிந்துகொள்ளும் முறையில் அந்த ஆணோடு சில நாட்கள் பழகுதற்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தனர்.  தலைமைப் பண்பு கொண்டிருத்தல், தம் இனத்தின் சிறப்பினைக் காக்கவும் செயலூக்கம் கொண்டிருத்தல், அதீத மனவலிமை, உரிமைக் காகக் குரல் கொடுத்தல் - ஆகிய பண்புடையவர் களாகவுமிருந்தனர்.  வல்லுறவுக்குள்ளாகி உயிரிழத்தல். காதலின் பொருட்டு குலவிதி மீறல், தன் குலம் காக்கும் அரணாக பகைவருடன் மோதுதல் போன்ற சிறப்பினையும் பெற்றிருந்தனர் என்பன போன்ற செய்திகள் நாவலில் இயங்கும் பாத்திரங் களின் வழி வாசகர்க்கு அறியக் கிடைக்கின்றன.

பழங்குடியினர் தெய்வமென மதிக்கும் அவர் தம் சூழலை இயற்கையைச் சீரழிக்கும் போக்கு குறுநில (இனக்குழுத் தலைவர்கள்) மன்னர்களின் காலத்திலேயே தொடங்கி விட்டது என்பதை சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல்கள் வழி அறிகிறோம்.

மரங்களை வெட்டி எறிந்த கொல்லை

யில் களைக்கோட்டினால் களையை

நீக்கி கருந்தினையை விதைப்பர்

வேடர்     (குறுந்தொகை; 214)

காடுகளைச் சுட்டு உண்டாக்கிய

கொல்லைப் பகுதியில் செழித்துள்ள

தினைகளில் வீழும் கிளிகள் (குறுந்: 291)

யானைகள் ஊர்பகுதியில் வீட்டின்

கதவுகளைத் திறக்க முயல்வதுண்டு    (குறுந்: 244)

திருப்பரங்குன்றம் சென்ற தலைவனும், தலைவியும் அங்கிருந்த பாறையில் வரையப் பட்டிருந்த ஓவியமொன்றைக் கண்டுகளிப்பதாக பரிபாடல் விளக்குவதாவது:

சிலர் தான் மீன்களையும் தாரகைகளையும் உடைய சுடர்ச்சக்கரத்தைப் பொருத்திய ஆதித்தன் முதலாக கோள்களின் நிலைமையைத் தீட்டிய ஓவியங் களை நோக்கியபடி இருப்பர்.  சில ஆடவர், காம வயப்பட்ட தம் பெண்டிர் வினவ, இவன் காமன், இவள் இரதி என்று விடை இறுத்தனர், சிலர் இப்பூனையே இந்திரன், இவன் அவ்விடத்தே சென்ற கௌதம முனிவர், இவள்தான் முனிவரின் மனைவி அகலிகை; அவள் கல்லுருவடைந்தவகை இது என்றவாறு விளக்கம் தருவர் சிலர்.

நாவலில் இதையொத்த செய்தியொன்று:

“சுண்ணாம்பு மண்ணில் யானையின் கொம்பை முக்கியெடுத்து கொஞ்சம் பிசினும் லக்கே சாறையும் அதில் பிழிந்து, பாறையில் ஒரு மானை வரைந்துவிட்டு உட்கார்கிறான் ஒருவன்.  பக்தி தலைக்கேறிய கூட்டம் அவர்கள் பங்குக்கு எதைஎதையோ வரைந்தனர்.  சிலர் அம்புகள்.  வயதான கிண்டன் போய் ஒரு ஆளை வரைந்துவிட்டு வந்தான்.  கிழக்கைக் குறிக்கவும், பெசாது கைவிடாது என்பதற்கு அடையாளமாகவும் சூரியனை வரைந்தான்.  விலங்குகளை விருந்துக்கழைக்க மந்திரமும் பாடலும் தொடங்கியது.  இப்போது அவர்கள் வேட்டையின் திசையையும் வேட்டையாடப் படவேண்டிய விலங்கையும் முடிவு செய் திருந்தார்கள்” (பக் 48).

இருளர்கள், கண்ணில்பட்ட விலங்குகளை யெல்லாம் வேட்டையாடுவதில்லை.  தேவைக்கு மட்டும் குறிப்பிட்ட விலங்கினை மட்டுமே வேட்டை யாடுவர்.

அந்நியர்கள் உள் நுழைந்து காட்டைத் தம தாக்கி விருப்பம்போல் விலங்குகளை அழிக் கின்றனர்.  முடிந்தவரை தடுக்கப் போராடுகின்றனர், ஆயினும் ஆயுத பலமும் அதிகாரமும் அவர்களை பல இடங்களில் செயலிழக்கச் செய்கின்றன.

சுல்தான்களின் பேச்சு அடங்கிவிட்டது.  எங்கு பார்த்தாலும் துரைகளின் நடமாட்டம்.  பதிக்குப் பக்கத்தில் நிறைய புதிய ஆட்கள், ஏற்கனவே காடழிந்திருந்த இடத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினர்.  ஒரு துரை யானையைக் கொல்ல வருகிறான்:

“தொரே கொலவாண்டா கொலவாண்டா சாமி” - தூமனின் அலறல் அடுத்தடுத்து வந்த துப்பாக்கி வெடிச் சத்தத்தில் அமுங்கிப் போனது...  ஒண்டி (யானை) ஒருக்கழித்து சாய்ந்து கிடந்தது; நெற்றியிலும் தொண்டை யிலும் பட்டிருந்த குண்டடியிலிருந்து இரத்தம் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது...” (பக்: 43)

வனத்தையும் விலங்குகளையும் பாதுகாத்து இயற்கையோடு ஒத்திசைவு கொண்ட வாழ்க் கையை நடத்துகிறவர்கள் எதிர்ப்புக்காட்டுகிறார்கள்:

“அவ்வளவு எளிதாக அவர்களால் கோவனின் பதிக்குள் கால்வைத்துவிட முடியவில்லை. மற்ற இடங்களில் சந்திக்காத இடங்கள்.  செந்நாய்களும், சிறுத்தைகளும், யானை களும், புலிகளும் எங்கிருந்து வருகிறதெனத் தெரியாமல் திடீர்திடீரென மழை போலப் பொழியும் அம்புகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதாயிருந்தது; சமய முதலி சொன்ன படி அந்த வனத்துக்கருகில் வந்த படையின் தலைவன் கோவனுக்கு ஆள் அனுப்பினான். “நாங்க இந்தக் காட்டை வெட்டி வெள்ளாமை செய்யப்போகிறோம், ஒதுங்கி நின்னா அது உங்களுக்கு நல்லது.  இது அரச கட்டளை.”

“காலம் காலமாக சோறூட்டிக் கொண் டிருக்கும் வனத்தை அழித்து வயல்களாகவும் ஊர் கட்டிக் கொள்ளவும் கோவன் சம்மதிக்க வில்லை.”

அரசனின் படைமுகாமில் போய் அப்பகுதி இருளர் இனத் தலைவன் கோவன் சொன்னார்:

“இந்த வனம் எனக்கு மட்டும் சொந்தமான தில்லை, கோண மாகாளிக்குச் சொந்த மானது. இங்கிருக்கும் நரிகளும் உடும்புகளும் மான்களும் சிறுத்தைகளும் பாம்புகளும் புலிகளும் ஏன் நாங்களும் கூட அவளுடைய குழந்தைகள் தாம். எங்கள் அத்தனை பேருக்கும் படியளக்கும் அவள் சம்மதமில்லாமல் இதைச் செய்யமுடியாது, அப்படிச் செய்தால் நானும் வாழமுடியாது; நீங்களும் ஆபத்தில்லாமல் இருக்கமுடியாது.”

இதுவே நாவலின் குரலாக வாசகனுக்குக் கேட்கிறது.

“காடுகள் அழிந்து எல்லாப் பருவமழையும் பொய்த்தது. நாளிகள் (ஆறுகள்) வற்றியது. காடுகளில் கட்டிடங்கள் விளைந்தன. விலங்கு களுக்கு மூச்சுத் திணறியது. ஆண்கள் பெண் களைக் கையோங்க ஆரம்பித்தனர். கூலிகள் என்ற வார்த்தையை முதன்முதலாகக் கேட் டார்கள்.  பழைய பண்பாடுகளை இழந்து கொண்டிருந்தனர்.  வனத்துறை தனது கட்டுப் பாடுகளை இன்னும் தீவிரமாக்கிக் கொண் டிருந்தது.”

அதிகாரத்தின் பிரதிநிதியாகிய தொப்பித் துறையை அழித்தொழித்து எளிய இருளர் மனங்கள் தற்காலிகமாக ஆசுவாசம் கொள்கின்றன. ஒதுங்கி, கூனி நிற்கும் சாத்தனுக்கு வந்தது தைரியம். ஆயினும் சிறிய எதிர்ப்பினையும் கிள்ளி எறிவதில் அதிகாரம் முனைப்புடன் இருக்கிறது. அதிகார அமைப்பு களின் உறுப்புகளும் ஒடுக்குமுறைக்கு ஒத்துழைக் கின்றன.  சொந்த இனத்திலேயே கருங்காலிகள் முளைத்து வளர்கின்றனர்.

“ஜாகிர் இருக்கும் நாளென்றால் வெள்ளைச் சோறும் சாராயமும் வேண்டிய மட்டும் கிடைக்கும். ஆட்டமும் பாட்டமும் களை கட்டும் - கல்லன் சந்தோஷத்தில் பாடுவான்.

கடேசியாக ஒன்று சொல்ல வேண்டும்:

நாவலின் கதைமொழி அந்த மக்களின் வாய் மொழியாகவே இருப்பதால் வேகமான வாசிப்பு என்பது இயலாது (கூடாதுதானே வேகம்).

பாடப்புத்தகங்களில் செய்யுட்பகுதியில் கடின மான சொற்களுக்கான அர்த்தம் கொடுக்கப் பட்டிருப்பதைப்போல நாவலில் ஒவ்வொரு அத்தி யாயத்தின் இறுதியிலும் நமக்கு அறிமுகமற்ற சொற் களுக்கு அர்த்தம் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

கதை சொல்லலில் ஆசிரியர் தலையீடு இல்லாத தையும் சொல்ல வேண்டும்.  இருளர் குடியின் வாழ்வு வெளியும் அதன் சரித்திரமும் நிகழ்வு களின் வழி வாசகன் உணரும்படியான நாற்பத் தைந்து பாடல்களால் உருவாகியிருக்கிறது இக்காவியம்.

சப்பெ கொகாலு
லட்சுமணன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41 - B, சிட்கோ இண்டஸ்டிரியல் லிமிடெட், அம்பத்தூர்,
சென்னை - 600 098.
விலை: ரூ. 225/

Pin It