இந்திய சமூக, பொருளாதார வாழ்க்கையின் புனருத்தாரணம் பற்றி இந்தியர்கள் பேசும்போது தனியுரிமை கோட்பாட்டுக்கு எதிராக கூட்டுரிமைக் கோட்பாடு, முதலாளித்துவத்துக்கு எதிராக சோஷ லிசம், பழைமைவாதத்துக்கு எதிராக தீவிரவாதம் என்னும் ரீதி யிலேயே இதுவரை பேசி வந்திருக்கின்றனர். ஆனால் மிக அண்மைக் காலத்தில் இந்தியாவின் அடிவானத்தின் ஒரு புதிய ‘இயல்’ தோன்றி யுள்ளது. அது காந்தியம் என அழைக்கப்படுகிறது. காந்தியம் என்று எதுவும் இல்லை என்று சமீப காலம் வரை திரு. காந்தி மறுத்து வந் திருக்கிறார் என்பது உண்மையே.

gandhi 433இந்த மறுப்பு திரு. காந்தி வழக்க மாக அணியும் தன்னடக்கம் என்னும் அணிகலமே தவிர வேறன்று. எனினும் காந்தியம் இருந்து வருவதை இது எவ்வகையிலும் மறு தலித்து விடவில்லை. காந்தியம் என்ற தலைப்பில் ஏராளமான நூல் கள் வெளியிடப்பட்டிருந்தன; இவற்றிற்கு திரு. காந்தியிடமிருந்து எத்தகைய ஆட்சேபமும் எழுந்ததில்லை, இந்தியாவுக்கு உள்ளே யும் வெளியேயும் இவரது கவனத்தை இது ஏற்கெனவே கவர்ந் துள்ளது. இவருக்கு இதன்மீது அளவு கடந்த நம்பிக்கை; எனவே, மார்க்சியத்துக்கு ஒரு மாற்றாக இதனைக் கருத அவர்கள் தயங்கு வதில்லை.

முந்தைய பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்த கருத்துகளைப் படிக்க நேர்ந்த காந்தியவாதிகள் சிலர் பின்வருமாறு வினவக்கூடும்; தீண்டப்படாதவர்கள் திரு. காந்தியிடம் எதிர்பார்த்த அளவுக்கு அவர் களுக்கு அவர் நன்மை செய்யாதிருக்கலாம்; ஆனால் அதற்காக காந்தியம் தீண்டப்படாதவர்களுக்கு எத்தகைய நம்பிக்கையையும் அளிக்க வில்லை என்று கூற முடியுமா? தீண்டப்படாதவர்களுக்கு ஆதரவாக திரு. காந்தி இடைவிட்டு இடைவிட்டு, மிக மெதுவாக, சில குறுகிய நடவடிக்கைகளை எடுத்து வந்திருப்பதை மட்டுமே நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள், ஆனால் அவர் விளக்கி வந்திருக்கும் கோட்பாடுகளில் ஆற்றல்வளப் பரிமாணத்தை மறந்து விடுகிறீர்கள் என்று காந்தியவாதிகள் என்மீது குற்றப் பத்திரிகை வாசிக்கக்கூடும்.

ஒரு நீண்ட கோட்பாட்டை விரித்துரைக்கும் ஒருவர் சில குறுகிய நடவடிக்கைகளையே எடுத்துக் கொள்ளும் நிலை சில சமயங்களில் ஏற்படுவதுண்டு, எனினும் அந்தக் கோட்பாடே ஒருநாள் அதன் இயக் காற்றல் காரணமாக, விடப்பட்டுவிட்ட எல்லோருக்கும் பயனளிக் கும் விதத்தில் ஒரு நீண்ட நடவடிக்கையை எடுக்கும்படி நிர்ப்பந் திக்கும் என்ற நம்பிக்கையில் அவரை மன்னித்து விடலாம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். காந்தியம் என்பது நமது ஆய்வுக்குரிய ஒரு சுவையான விஷயம் என்பதில் ஐயமில்லை.

ஆனால் திரு. காந்தி யைப் பற்றி அலசி ஆராய்ந்த பிறகு காந்தியத்தைப்பற்றி ஆராய் வது சலிப்பூட்டக்கூடியதாகவே இருக்கும்; எனவே காந்தியத்தையும் தீண்டப்படாதவர்களையும் பற்றி ஆராய்வதை விட்டு விடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அதேசமயம் இந்த விஷ யத்தை ஆராய்வதை விட்டுவிடுவதால் ஏற்படக்கூடிய விளைவு மிகவும் துரதிர்ஷ்டவசமானதாக இருக்கும் என்ற உண்மையை யும் என்னால் உதாசீனம் செய்ய முடியவில்லை.

மேலும், திரு. காந்தியை நான் அம்பலப்படுத்தினானலும், காந்திவாதிகள் இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளக் கூடும்; தீண்டப் படாதோரின் பிரச்சினைக்குத் தீர்வு காண திரு. காந்தி தவறிவிட்டா லும், தீண்டப்படாதோரின் விமோசனம் காந்தியத்தில்தான் அடங்கி யுள்ளது என்று அவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்யவும் கூடும். இத்தகைய பிரசாரத்துக்கு இடம் தரலாகாது என்ற காரணத்தால், எனது பழைய முடிவைக் கைவிட்டுவிட்டு காந்தியம் பற்றிய விவா தத்தில் இப்போது இறங்கியுள்ளேன்.

 II

காந்தியம் என்றால் என்ன? அது எதை ஆதரித்து நிற்கிறது? சமூகப் பிரச்சினைகள் குறித்த அதன் போதனைகள் யாவை?

காந்தியம் குறித்த முற்றிலும் கற்பனையானதொரு கண் ணோட்டத்தை சில காந்தியவாதிகள் இட்டுக்கட்டி உருவாக்கி இருக் கிறார்கள் என்பதை முதலில் இங்கு குறிப்பிடுவது அவசியம். இந்தக் கண்ணோட்டத்தின்படி காந்தியம் என்பதற்கு கிராமத்துக்குத் திரும் புவது என்றும், கிராமத்தைத் தன்னிறைவுப் பெறச் செய்வது என்றும் பொருள். இது காந்தியத்தை ஒரு வெறும் பிராந்தியவாத விஷய மாக்குகிறது. காந்தியம் என்பது பிராந்தியவாதம்போல் அத்தனை எளிமையானதோ, சிக்கலற்றதோ அல்ல என்பது நிச்சயம்.

காந்தியம் பிராந்தியவாதத்தை விட அதிக உள்ளடக்கத்தைக் கொண்டது. பிராந்தியவாதம் அதன் மிகச் சிறுதிறமான ஒரு பகுதியேயாகும். காந்தியம் ஒரு சமூக சித்தாந்தத்தையும் பொருளாதாரச் சித்தாந்தத்தையும் தன்னுள் கொண்டுள்ளது. காந்தியத்தின் பொருளாதார, சமூக சித் தாந்தத்தைக் கண்க்கிலெடுத்துக் கொள்ளத் தவறுவது வேண்டு மென்றே காந்தியத்தைப் பற்றி ஒரு தவறான படப்பிடிப்பினை வழங்குவதையே குறிக்கும். எனவே, காந்தியம் குறித்த ஓர் உண்மை யான சித்திரத்தை அளிப்பது முதலாவதும் தலையாயதுமான தேவையாகும்.

சமூகப் பிரச்சினை சம்பந்தமான திரு.காந்தியின் போதனை களுடன் தொடங்குவோம். சாதி அமைப்புமுறைதான் இந்தியாவில் பிரதான சமூகப் பிரச்சினையாக இருந்து வருவது தெரிந்ததே. சாதி அமைப்பு முறை குறித்து திரு. காந்தியின் கருத்துகள் என்ன? 1921- 22-ல் நவஜீவன் என்னும் குஜராத்தி சஞ்சிகையில் இது குறித்த தமது கருத்துகளை மிக விரிவாக தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுரை ( இது காந்தி சிக்ஷன் எனும் தொடரின் தொகுதி II –ல் 18ஆவது கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.) குஜராத்தி மொழியில் எழுதப்பட்டியிருக்கிறது. அவரது கருத்துகளின் ஆங்கில மொழியாக்கத்தை கூடிய மட்டும் அவரது சொந்த சொற் களிலேயே இங்கு தருகிறேன். திரு. காந்தி கூறுகிறார்:

“1. இந்து சமுதாயம் இதுவரை தாக்குப்பிடித்து நின்  றிருக்கிறது என்றால் சாதி அமைப்பு என்னும் அடித்தளத்  தின்மீது அது அமைந்திருப்பதே காரணம்.

“2. சுயராஜ்யத்தின் விதைகள் சாதி அமைப்பு முறை  யில்தான் பொதிந்துள்ளன. பல்வேறு சாதிகள் ராணுவத்  தில் பல்வேறு படைப்பிரிவுகள் போன்றவை. ஒவ்வொரு  படைப் பிரிவும் ஒட்டு மொத்த நலனுக்காகப் பாடுபட்டு  வருகிறது.”

“3. சாதி அமைப்பு முறையைத் தோற்றுவிக்கக்கூடிய ஒரு சமூகம் தன்னேரில்லாத ஒழுங்கமைப்பு ஆற்றலைப் பெற்றிருக்கவே செய்யும்.

“4. ஆரம்பக் கல்வியைப் பரப்புவதற்கான ஆயத்த வழிமுறையை சாதி பெற்றுள்ளது. ஒவ்வொரு சாதியும் அந்தச் சாதியைச் சேர்ந்த குழந்தைகளின் படிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள முடியும். சாதிக்கு ஓர் அரசியல் அடித்தளம் இருக்கிறது. ஒரு பிரதிநிதித்துவ அமைப்புக்கு ஒரு வாக்காளராக அது பணியாற்றா முடியும். நீதிமன்ற பணி களையும் சாதியால் செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட சாதி யைச் சேர்ந்த நபர்களை நீதிபதிகளாகச் செயல்படுவதற்குத் தேர்ந்தெடுத்து, அதே சாதியைச் சேர்ந்த உறுப்பினர்க ளிடையே எழும் தகராறுகளை அவர்களைக் கொண்டு தீர்த்து வைக்க முடியும். சாதிகள் இருப்பதால் பாதுகாப்புப் படையைத் தோற்றுவிப்பது எளிது; ஒவ்வொரு சாதியும் ஒரு படைப்பிரிவை உருவாக்கும்படிச் செய்யலாம்.”

“5. சமபந்தி விருந்தோ அல்லது கலப்புத் திருமணமோ தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கு அவசியம் என்று நான் கருதவில்லை. இவ்வாறு ஒன்று சேர்ந்து உணவு அருந்துவது நட்புறவை வளர்க்கிறது என்பதை அனுபவம் மறுக்கிறது: இது உண்மையானால் ஐரோப்பாவில் போர்களே நடந் திருக்க மாட்டா........ இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்வது போன்றே உணவு அருந்துவதும் ஓர் அனுசித மான செயலாகும்; இதிலுள்ள ஒரே வித்தியாசம் இயற்கைக் கடன்களை முடித்த பிறகு நாம் ஓரளவு நிம்மதி பெறு கிறோம்; ஆனால் உணவு அருந்திய பிறகோ மன உலைவு அடைகிறோம். இயற்கைக் கடனை தனிமையில் முடிப்பது போன்றே உணவு அருந்துவதையும் தனிமையில் மேற் கொள்ள வேண்டும்.”

“6. இந்தியாவில் உடன்பிறப்புகளின் பிள்ளைகள் தங்களுக்குள் கலப்பு மணம் செய்து கொள்வதில்லை. அவ் வாறு கலப்பு மணம் செய்து கொள்ளாததால் பரஸ்பரம் ஒருவர் மற்றவரிடம் பாசம் காட்டுவதில்லையா? வைஷ்ண வர்களிடையே பல பெண்கள் மிகவும் ஆசாரமானவர்கள்; அவர்கள் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் சேர்ந்து

சாப்பிடமாட்டார்கள்; பொதுத் தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் எடுத்தும் அருந்த மாட்டார்கள். அப்படியிருப் பினும் குடும்பத்தில் பந்தபாசம் இருப்பதில்லையா? பல் வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் சமபந்தி போஜனம் சாப் பிடாததைக் கொண்டும், கலப்புத் திருமணம் செய்து கொள் ளாததைக் கொண்டும் சாதி அமைப்பு முறை மோசமானது என்று முடிவுக்கு வந்துவிட முடியாது.”

“7. சாதி என்பது கட்டுப்பாடு என்பதன் மற்றொரு பெயர். சாதி துய்த்து மகிழ்வதற்கு ஒரு வரையறை நிர்ண யிக்கிறது. ஒருவர்ன் தனது இன்ப நாட்டத்தில் சாதிவரம்பு களை மீறுவதற்கு சாதி அனுமதிப்பதில்லை. சமபந்தி போஜ னங்களையும் கலப்புத் திருமணங்களையும் சாதி நடை செய் திருப்பதன் பொருள் இதுதான்.”

“8. சாதி அமைப்பு முறையை ஒழித்துக் கட்டிவிட்டு, மேற்கத்திய சமூக அமைப்பு முறையைப் பின்பற்றா வேண்டு மானால் இந்துக்கள் பரம்பரைத் தொழில் என்னும் கோட் பாட்டைக் கைவிட்டாக வேண்டும்; சாதி அமைப்பு முறை யின் ஆன்மாவே இந்தப் பரம்பரைத் தொழில் கோட் பாடாகும். பரம்பரைக் கோட்பாடு நிலைபேறுடைய கோட் பாடு; இந்த சாசுவதமான கோட்பாட்டை மாற்றுவது குழப் பத்தைத் தான் உண்டு பண்ணும். ஒரு பிராமணனை அவன் வாழ்நாள் முழுவதும் பிராமணன் என்று நான் அழைக்கா விட்டால் அந்தப் பிராமணனுக்கு என்னால் எந்தப் பலனும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு பிராமணன் ஒரு சூத்திர னாகவும் ஒரு சூத்திரன் பிராமணனாகவும் மாற்றப்பட்டால் பெருங்குழப்பமும் சீர்குலைவும்தான் ஏற்படும்.”

“9. சாதி அமைப்பு முறை சமுதாயத்தின் ஓர் இயல்பான விதிமுறை. இந்தியாவில் அதற்கு மத முலாம் பூசப்பட்டுள்ளது இதர நாடுகளில் சாதி அமைப்பு முறையின் பயனுடைமை சரி வரப் புரிந்து கொள்ளப்படவில்லை; மேலும் அங்கு அது கட் டுறுதியற்ற, வலுவற்ற நிலைமையிலேயே இருந்து வந்தது. இதன் விளைவாக, சாதி அமைப்பு முறையிலிருந்து இந்தியா எந்த அளவுக்குப் பயனடைந்து வருகிறதோ அந்த அளவுக்கு ஏனைய நாடுகள் பயன்பெற முடியவில்லை. இத்தகைய கருத்துகளை நான் கொண்டிருப்பதால் சாதி அமைப்பு முறையை ஒழித்துக்கட்ட முனைந்து நிற்கும் அனைவரையும் எதிர்க்கிறேன்.”

இவ்வாறு 1922-ல் திரு. காந்தி சாதி அமைப்பு முறையின் பாது காவலராக இருந்தார். நமது விசாரணையை மேலும் தொடரும்போது 1925 ஆம் ஆண்டில் சாதி அமைப்பு முறையை ஓரளவு கண்டிப்பவ ராக திரு. காந்தி மாறியிருந்ததைக் காண்கிறோம். 1925 பிப்ரவரி 3-ஆம் தேதி திரு. காந்தி பின்வருமாறு கூறினார்:

“தற்கட்டுப்பாடு சாதிக்கு இருப்பதால் அதனை நான் ஆதரித்தேன். ஆனால் தற்போது சாதி என்பது தற்கட்டுப் பாட்டைக் குறிக்கவில்லை; மாறாக ஒரு வரையறையைத் தான் குறிக்கிறது. தற்கட்டுப்பாடு சிறப்பானது, சுதந்திரம் பெறுவதற்கு துணை புரிகிறது. ஆனால் வரையறை என்பது சங்கிலியைப் போன்று பிணைக்கிறது. இப்போதுதான் நிலைமையில் சாதிகளில் பாராட்டத்தக்க எதுவும் இல்லை. அவை சாஸ்திரங்களின் தத்துவங்களுக்கு மாறாக இருக் கின்றன. சாதிகளின் எண்ணிக்கை முடிவில்லாமல் பெருகி விட்டது. கலப்புத் திருமணங்களுக்குத் தடையும் இருந்து வருகிறது. இது ஏற்றத்துக்கு, பெருமிதத்துக்குரிய நிலை அல்ல. பெரும் இறக்கத்தை, வீழ்ச்சியையே இது குறிக் கிறது.”

இதிலிருந்து மீள்வதற்கு வழி என்ன என்று கேட்டபோது திரு. காந்தி கூறியதாவது:

சிறு சிறு சாதிகள் ஒன்றிணைந்து மாபெரும் சாதி  யாக உருவெடுப்பதே மிகச்சிறந்த பரிகாரமாகும். இத்தகைய  பெரிய சாதிகள் நான்கு இருக்க வேண்டும். பழைய சதுர்  வருண முறையைப் புனரமைக்க இது உதவும்.”

சுருக்கமாகக் கூறினார்ல, 1925-ல் திரு. காந்தி வருண அமைப்பு முறையின் தீவிர ஆதரவாளராக மாறினார்.

பண்டைய இந்தியாவில் நடைமுறையிலிருந்த பழைய வருண அமைப்பு முறையின்படி சமுதாயம் நான்கு அமைப்புகளாகப் பிரிந் திருந்தது; (1) பிராமணர்கள், கல்விகற்றல், கற்பித்தல் இவர்களது  தொழில்; (2) சத்திரியர்கள், போர் புரிதல் இவர்கள் தொழில்; (3) வைசியர்கள், வாணிகம் இவர்களது தொழில்; (4) சூத்திரர்கள், ஏனைய வருணத்தினருக்கு ஊழியம் செய்தல் இவர்களது தொழில், திரு. காந்தி ஆதரிக்கும் வருண அமைப்பு முறை வைதிக இந்துக்கள் பின்பற்றிய பழைய வருண அமைப்பு முறை போன்றதுதானா? திரு. காந்தி தமது வருண அமைப்பு முறையை பின்கண்டவாறு விவரித்தார் (இந்தப் பகுதிகள் இவ்விஷயம் குறித்து திரு. காந்தி எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றன; குஜராத்தியில் திரு. காந்தியின் கட்டுரைகள் அடங்கிய வருண வியவஸ்தை என்னும் நூலில் இது மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது.):

 

“1. வருணப் பிரிவினைகள் பிறப்பை அடிப்படை யாகக் கொண்டவை என்று கருதுகிறேன்.

“2. சூத்திரன் கல்வி கற்பதற்கோ, ராணுவப் பயிற்சி பெறுவதற்கோ வருண அமைப்பு முறையில் எந்தத் தடை யும் இல்லை. அதே போன்று சத்திரியன் மற்ற வருணத் தாருக்கு ஊழியம் செய்யலாம். இது விஷயத்தில் வருண அமைப்பு முறையில் அவனுக்கு எந்தத் தடையும் இல்லை ஆனால் சதுர்வருண முறை கட்டளையிடுவதெல்லாம் சூத்திரன் கல்வி கற்பதை தனது வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளக் கூடாது என்பதுதான். அதேபோன்று சத்திரியன் ஊழியம் செய்வதை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளக் கூடாது. (இவ்வாறே பிராமணன் போர்க்கலையையோ அல்லது வாணிகத்தையோ கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதனை ஒரு வாழ்க்கைத் தொழிலாகப் பயன்படுத்தலாகாது. வைசியனும் இதே போன்று கல்வி கற்கலாம் அல்லது போர்க் கலையைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவன் அவற்றை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளக் கூடாது.)

“3. சதுர் வருண முறையானது வாழ்க்கைத் தொழில் சம்பந்தப்பட்டதாகும். ஒரு வருணத்தைச் சேர்ந்தவன் ஏனைய வருணங்களைச் சேர்ந்தவர்களுக்குரிய அறிவாற்றலையோ, விஞ்ஞானத்தையோ, கலையையோ பெறுவதில் தவறு ஏதுமில்லை. ஆனால் அவன் தனது சீவனோபாயத்தைப் பொறுத்தவரையில் அவன் எந்த வருணத்தைச் சேர்ந்தவனோ அந்த வருணத்துக்குரிய தொழிலையே மேற்கொள்ள வேண் டும் அதாவது தமது மூதாதையர்களின் பரம்பரைத் தொழி லையே செய்ய வேண்டும்.

“4. சதுர்வருண முறையின் குறிக்கோள் போட்டியை யும் வர்க்கப் போராட்டத்தையும் வர்க்க யுத்தத்தையும் தடுப் பதேயாகும். வருண அமைப்புமுறை மக்களின் கடமை களையும் தொழிலையும் நிர்ணயிப்பதால் அதனை நான் ஆதரிக்கிறேன்.

“5. வருணம் என்பது ஒருவன் பிறப்பதற்கு முன்பே அவனது தொழிலை நிர்ண்யிப்பதைக் குறிக்கிறது.

“6. சதுவருண அமைப்பு முறையில் எவனும் தன் விருப்பம் போல் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது. அவனது தொழில் பரம்பரை அடிப்படையில் அவனுக்கு நிர்ணயிக்கப்படுகிறது.”

பொருளாதார வாழ்க்கைத் துறையைப் பொறுத்த வரையில் திரு. காந்தி இரண்டு லட்சியங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்:

இவற்றில் ஒன்று எந்திரங்களுக்கு எதிர்ப்பு. 1921-ஆம் ஆண்டு வாக்கிலேயே எந்திரங்களில் பால் தனக்குள்ள வெறுப்பை வெளிப் படுத்தினர். 1921 ஜனவரி 19-ஆம் தேதிய யங் இந்தியா இதழில் திரு. காந்தி பின்வருமாறு எழுதினார்.

”முன்னேற்றம் என்னும் கடிகாரத்தின் முள்ளை பின்னோக் கித் தள்ளி வைக்க நான் விரும்புகிறேனே? மில்களின் இடத்தில் கைராட்டையும், கைநெசவும் இடம் பெற வேண்டுமென்று விரும்புகிறேனா? ரயில்வேக்குப்பதில் மாட்டு வண்டி வர வேண்டுமென்று விரும்புகிறேனா? எல்லா எந்திரங்களையும் ஒழித்துக் கட்ட வேண்டுமென்று விரும்புகிறேனா? இந்தக் கேள்விகளை சில பத்திரிகையாளர்களும் பொது மக்களும் கேட்கின்றனர். இவற்றிக்கு எனது பதில் இதுதான்: எந்திரங் கள் ஒழிக்கப்பட்டு வருவதற்காக நான் கண்ணீர் விட்டு அழ மாட்டேன்; அல்லது இதனை ஒரு பேரிடராகவும் எடுத்துக் கொள்ள மாட்டேன்.”

எந்திரங்களிடம் அவர் வைத்திருந்த வெறுப்பையும் எதிர்ப் பையும் சர்க்காவை அவர் பெரிதும் ஏற்றிப் போற்றிப் புகழ்ந்ததி லிருந்தும், கையால் நூற்பதையும் கை நெசவையும் அவர் வெகுவாக ஆதரித்ததிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். எந்திரங்களிடம் அவர் கொண்டிருந்த வெறுப்பும் சர்க்காவிடம் அவர் காட்டிய விருப்பும் ஏதோ தற்செயலாக நிகழ்ந்த சமாசாரமல்ல. இது சிந்தாந்தம் சம்பந்தப் பட்ட விஷயமாகும். 1925 ஜனவரி 8-ஆம் நாளன்று கத்தியவாரில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் ஆற்றிய தமது தலைமை உரை யில் திரு. காந்தி இந்தச் சித்தாந்தத்தைப் பின்கண்டவாறு விளக்கிப் பேசினார்:

“கணக்கற்று, வரைமுறையற்றுப் பெருகிவரும் உயி ரற்ற எந்திரங்களை வழிபட்டு தேசங்கள் சோர்வடைந்து விட்டன. உயிர்த் துடிப்புள்ள ஈடு இணையற்ற எந்திரங் களை அதாவது நமது உடல்களைத் துருப்பிடிக்க விட்டு அவற்றை அழிந்து வருகிறோம், அவற்றுக்குப் பதிலாக உயி ரற்றா எந்திரங்களைப் புகுந்த முயன்று வருகிறோம். நமது சரீரம் முழு அளவுக்குப் பணியாற்ற வேண்டும், பயன்படுத்தப் பட வேண்டும் என்பது ஆண்டவனின் கட்டளை. அந்தக் கட் டளையை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. கைராட்டினம் சரீர யக்ஞத்தின் அதாவது உடல் உழைப்பின் மங்களகர மான சின்னமாகும். இந்த யக்ஞத்தைச் செய்யாமல் உணவு உண்பவன் உண்மையில் அதைத் திருடவே செய்கிறான். இந்த வேள்வியைக் கைவிட்டதன் மூலம் நாட்டுக்கு நாம் துரோகிகளானோம்; அதிர்ஷ்ட தேவதையின் முகத்துக்கு நேரே கதவை மூடினோம்.”

ஹிந்த சுவராஜ் (இந்தியத் தன்னாட்சி) என்னும் திரு. காந்தியின் பிரசுரத்தைப் படித்த எவரும் திரு. காந்தி நவீன நாகரிகத்தின் கடுமையான எதிர்ப்பாளர் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பார். இந்த நூல் 1908-ல் பிரசுரிக்கப்பட்டது. எனினும் இதற்குப் பின்னரும் அவரது சித்தாந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. 1921-ல் எழுதும் போது திரு. காந்தி கூறியதாவது (யங் இந்தியா, 26 ஜனவரி, 1921) :

”இந்த சிறு பிரசுரம் நவீன நாகரிகம்” பற்றிய ஒரு கடுமை யான கண்டனமாகும். இது 1908 ஆம் ஆண்டில் எழுதப் பட்டது. இந்த விஷயத்தில் எனது கருத்து இன்று என்றைம் விட மிக ஆழமாகவே உள்ளது. ‘நவீன நாகரிகத்தை’ இந்தியா துறக்குமானால் அதனால் நன்மையே அடையும்.”

திரு. காந்தியின் கருத்துப்படி (தர்ம மந்தன், பக்கம். 65.):

“மேலைய நாகரிகம் சாத்தானின் படைப்பு.”

திரு காந்தியின் இரண்டாவது லட்சியம் ஊழியர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் குத்தகைக்காரர்களுக் கும் இடையேயான உறவில் வர்க்கப்போரும் வர்க்கப் போராட் டமும் கூட ஒழிக்கப்பட வேண்டும் என்பதாகும். ஊழியர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையேயான உறவு குறித்த திரு. காந்தி யின் கருத்துகள் இந்த விஷயம் பற்றி 1921 ஜுன் 8-ஆம் தேதிய நவஜீவன் ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையில் விவரிக்கப்பட்டன. அதிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

“இந்தியாவின் முன்னர் இரண்டு பாதைகள் இருக் கின்றன: ஒரு பாதை ‘வலிமையே வெல்லும்’ என்ற மேலைய கோட்பாடு; மற்றொரு பாதை ‘உண்மையே வெல்லும்’ என்ற கீழைய கோட்பாடு. உண்மைக்கு இடர்ப்பாடு ஏதும் கிடையாது; இந்தக் கோட்பாட்டின்படி வலியோரும் நலிந் தோரும் நியாயம் பெற உரிமை உண்டு. முதலில் உழைக் கும் வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம். தொழிலாளர்கள் வன்முறையின் மூலம் ஊதிய உயர்வு பெறலாமா? அவர் களது கோரிக்கைகள் சட்டப்பூர்வமானவையாக, நியாய மானவையாக இருந்தாலும் வன்முறை போன்ற செயல் களில் அவர்கள் ஈடுபடக் கூடாது. உரிமைகள் பெறுவதற்கு வன்முறை எளிதான பாதையாகத் தோன்றலாம். ஆனால் அது முட்கள் நிறைந்த பாதை என்பது நாளடையில் நிரூபண மாகும். வாள் எடுத்தவர்கள் வாளாலேயே மாள்வார்கள். நீந்துபவர் பல சந்தர்ப்பங்களில் நீரில் மூழ்கியே இறப்பதைப் பார்க்கிறோம். ஐரோப்பாவைப் பாருங்கள் அங்கு எவரும் மகிழ்ச்சியோடு இருப்பதாகத் தெரியவில்லை, யாரும் மன நிறைவடைந்திருப்பதாகத் தோன்றவில்லை. தொழிலாளிக்கு முதலாளி மீது நம்பிக்கை இல்லை. முதலாளிக்கு தொழி லாளி மீது நம்பிக்கை கிடையாது, இரு தரப்பினருமே வலிமையும் உள்ளுரமும் பெற்றிருக்கின்றனர். காளை களுக்குக்கூட அவை இருக்கின்றன. அவர்கள் இறுதிவரை போராடுகின்றனர். எல்லா இயக்கமும் முன்னேற்றமாகி விடாது. ஐரோப்பிய மக்கள் முன்னேறி வருகிறார்கள் என்று நாம் நம்புவதற்கு முகாந்திரம் ஏதுமில்லை. அவர்களிடம் செல்வம் குவிந்திருக்கலாம். ஆனால் அதைக் கொண்டு அவர்களிடம் தார்மிக அல்லது ஆன்மிகப் பண்புகள் நிறைந் திருப்பதாக அர்த்தமாகி விடாது.

 * *

“சரி, அவ்வாறானால் நாம் என்ன செய்ய வேண் டும்? பம்பாயைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு நேரிய நிலையை மேற்கொண்டுள்ளனர். இது குறித்த எல்லா விவரங்களும் இப்போது என்னிடமில்லை. எனினும் அவர் கள் சிறப்பாகப் போராட முடியும் என்று நம்புகிறேன். ஆலை உரிமையாளர் முற்றிலும் தவறான பாதையில் செல்ல லாம். மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே நடை பெரும் போராட்டத்தில் முதலாளிகள் பல சந்தர்ப்பங்களில் தவறான போக்கையே கடைப்பிடிக்கின்றனர் என்று கூறப் படுவது உண்டு. ஆனால் உழைப்பு தனது வலிமையை முழு அளவுக்கு வளர்ந்து கொண்டு விடும்போது அது மூலதனத்தை விட மூர்க்கத்தனமாகி விடுவதை நான் அறிவேன்.

மில் முதலாளிகளுக்குள்ள கூர்மதி தொழிலாளர்ளுக்கு இருக்கு மானால் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளின்படி மில் முதலாளிகள் நடந்து கொள்ளும் நிலை ஏற்படும். ஆனால் தொழிலாளர்களுக்கு அத்தகைய விவேகம் ஒருபோதும் ஏற் படாது. அப்படிப்பட்ட விவேகம் இருக்குமானால் தொழி லாளியே முதலாளியாகி விடுவான். முதலாளிகள் பணத் தின் வலிமையைக் கொண்டு மட்டும் போராடுவதில்லை. அவர்கள் அறிவுத்திறத்தையும் சாமர்த்தியத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

“இப்போது நம்முன்னுள்ள கேள்வி இதுதான்: தொழி லாளர்கள் இப்போதுள்ள நிலைமையிலேயே நீடித்து,  ஓரளவு விழிப்புணர்வையும் பெறும்போது அவர்கள் பின் பற்ற வேண்டிய பாதை என்ன? தொழிலாளர்கள் தங்களது எண்ணிக்கைப் பலத்தையோ அல்லது முரட்டுத்தனத்தையோ அதாவது வன்முறையையோ நம்பிக் கொண்டிருப்பது தற் கொலைக்கு ஒப்பானதாகும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் நாட்டிலுள்ள தொழில்களுக்கு தீங்குதான் இழைப் பார்கள். இதற்கு மாறாக, அவர்கள் முற்றிலும் நேர்மையான, நியாயமான நிலையை மேற்கொள்வார்களானால், இதன் பொருட்டு கஷ்டநஷ்டங்களையும் அனுபவிக்கத் தயாராக இருப்பார்களேயானால் அப்போது அவர்கள் எப்போதுமே வெற்றிக் கனியைத் துய்ப்பார்கள், அது மட்டுமன்றி தங்கள் முதலாளிகளையே திருத்துவார்கள், தொழில்களை வளர்ப் பார்கள், முதலாளிகளும் தொழிலாளிகளும் ஒரே குடும் பத்தைக் சேர்ந்தவர்கள்போல் இருப்பார்கள்.”

 இதே விஷயம் பற்றி, மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டதாவது ( யங் இந்தியா, பிப்ரவரி 23, 1922.) :

“இதற்கு முன்னர் வேறு விதமாக இருந்ததில்லை  இந்தியாவின் வரலாறு முதலாளிகளுக்கும் தொழிலாளி  களுக்கும் சீர்குலைந்த உறவுகளைக் கொண்ட வரலாறாக  இருந்ததில்லை.”

தங்களது பொருளாதார நிலைமையை மேம்படுத்திக் கொள் வதற்கு தொழிலாளர்களுக்கு உதவும் ஓர் ஆயுதம் என்ற முறையில் வேலை நிறுத்தம் பற்றி திரு. காந்தி கொண்டிருந்த கருத்துக்கள் இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை, இது குறித்து திரு. காந்தி பின்வருமாறு கூறுகிறார். (யங் இந்தியா, ஆகஸ்டு 11, 1921. )

“எனவே, வெற்றிகரமான பல வேலை நிறுத்தங்களை நடத்தியவன் என்ற முறையில், வேலை நிறுத்தத் தலைவர் களுக்கு வழி காட்டும் பின்கண்ட விதிமுறைகள் மீண்டும் கூறுகிறேன்; இந்தப் பக்கங்களில் இவை ஏற்கெனவே பிரசு ரிக்கப்பட்டிருக்கின்றன:

1) உண்மையான குறைகள் ஏதுமின்றி எந்த வேலை நிறுத்தமும் கூடாது.

2) சம்பந்தப்பட்டவர்கள் தமது சொந்த சேமிப்பு களிலிருந்தோ அல்லது பஞ்சு சிக்கெடுத்தல், நூற்பு, நெசவு போன்ற சில தொழில்களில் தற்காலிகமாக ஈடுபடுவதன் மூலமோ தங்களைப் பராமரித்துக் கொள்ள இயலாதபோது வேலை நிறுத்தம் கூடாது. வேலை நிறுத்தங்கள் பொது மக்களின் நன்கொடைகளையோ அல்லது வேறு அறக் கொடைகளையோ ஒருபோதும் சார்ந்திருக்கலாகாது.

3) வேலை நிறுத்தக்காரர்கள் மாற்றமுடியாத ஒரு குறைந்தபட்சக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்; வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் அதனை அறி விக்க வேண்டும்.

“நியாயமான குறைகள் இருந்தபோதிலும், காலவரம் பற்றுத் தாக்குப்பிடித்து நிற்குமொ ஆற்றல் வேலை நிறுத்தக் காரர்களுக்கு இருந்தபோதிலும் அவர்களுக்குப் பதிலாக வேலை செய்யக் கூடிய தொழிலாளர்க:ள் இருப்பார்களே யானால் அந்த வேலை நிறுத்தம் தோல்வியடையக் கூடும். ஆதலால் தனது இடத்தை வேறொருவனைக் கொண்டு எளிதாக நிரப்பிவிட முடியும் என்பதை உணரும் ஒரு புத்தி சாலி கூலி உயர்வுக்காகவோ அல்லது வேறு வசதிகளுக் காகவோ வேலை நிறுத்தத்தில் குதிக்க மாட்டான்.

ஆனால் மனித நேயமும் தேசபக்த மனோபாவமும் படைத்தவன் தனது அண்டை விட்டுக்காரனின் துயரத்தில் பங்கு கொள்ள விரும்பும்போது, தேவையைவிட சப்ளை அதிகமாக இருந் தாலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவான். நான் விவரித்த தன்மை கொண்ட ஒரு வேலை நிறுத்தத்தில் அச்சுறுத்தல், மிரட்டல், தீவைத்தல் போன்றவற்றுக்கு இடமில்லை என் பதைக் சொல்ல வேண்டியதில்லை.

நான் பரிந்துரைத்த சோதனைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, தங்க களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நிதியையோ அல்லது வேறு எந்தப் பொது நிதிகளையோ வேண்டிப் பெறும்படி வேலை நிறுத்தக்காரர்களுக்கு அவர்களது நண்பர்கள் ஒருபோதும் ஆலோசனை கூற மாட்டார்கள் என்பது தெளிவு. வேலை நிறுத்தக்காரர்களின் பால் உள்ள அனுதாபத்தின் மதிப்பு  

அவர்கள் நிதி உதவியை எந்த அளவுக்குப் பெறுகிறார்களோ அந்த அளவுக்குக் குறைந்துவிடும். ஓர் அனுதாப வேலை நிறுத்தத்தின் சிறப்பு அனுதாப வேலை நிறுத்தக்காரர்களுக்கு ஏற்படும் வசதிக் குறைவுகளிலும் அவர்களுக்கு நேரிடும் இழப்பீடுகளிலும்தான் அடங்கியுள்ளது.

பண்ணையாளர்களுக்கும் குத்தகைகாரர்களுக்கும் இடையே யான உறவு குறித்த திரு. காந்தியின் கருத்து யங் இந்தியா பத்திரிகை யின் 1921 மே 18-ஆம் தேதிய இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. தங்களுடைய பண்ணையாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ஐக்கிய மாகாணங்களின் குத்தகைகாரர்களுக்கு அவர் விதித்த நெறி முறைக் கட்டளைகளின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. அதில் திரு. காந்தி கூறியிருப்பதாவது (அழுத்தமான அச்சுருப் படிவம் மூலத்தில் இல்லை. கிசான் என்பது குத்தகைக்காரரையும் ஜமீன்தார் என்பது பண்ணையாளரையும் குறிக்கும்.)

“ஐ.மா அரசாங்கம் நடைமுறை வரம்புகளை மீறி வருகிறது; மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம் கிசான்களும் தாங்கள் புதிதாகப் பெற்ற அதிகாரத்தை விவேகமான முறையில் பயன்படுத்த வில்லை. பல ஜமீன்களில் அவர்கள் எல்லை மீறி நடந்து கொண்டிருக் கிறார்கள் என்றும், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண் டிருக்கிறார்கள் என்றும், தங்கள் விரும்ப்பப்படி நடந்து கொள்ளாத வர்களிடம் படபடப்பையும் ஆத்திரத்தையும் காட்டியிருக்கிறார் கள் என்றும் கூறப்படுகிறது.

அவர்கள் சமூக பகிஷ்காரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள்; அதனை ஒரு வன்முறை ஆயுதமாக மாற்றியிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய ஜமீன்தார்களுக்கு தண்ணீர் வழங்கீட்டையும் நாவிதர் போன்றோரின் சேவையையும், இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய குத்தகைத் தொகையையும் கூட நிறுத்திவிட்டார்கள் என்றும் கூறப் படுகிறது. கிசான் இயக்கம் ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து உந்து விசையை, உத்வேகத்தைப் பெற்றுள்ளது; ஆனால் இது அந்த இயக் கத்துக்கு அப்பாற்பட்டது, சுயேச்சையானது. அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல் நிறுத்தி வைக்கும்படி சமயம் வரும்போது கிசான்களுக்கு அறிவுறுத்த நாம் தயங்க மாட்டோம் என்றாலும் ஜமீந்தார்களுக்குச் செலுத்த வேண்டிய குத்தகை பணத்தைச் செலுத்தாதிருக்க ஒத்துழையாமை இயக்கத்தின்

எந்தக் கட்டத்திலும் நாம் உத்தேசிக்கவில்லை. கிசான் இயக்கம் கிசான்களின் நிலையை மேம்படுத்துவதுடனும், ஜமீன்தார்களுக்கும் கிசான்களுக்கும் இடையேயான உறவுகளை வளர்ப்பதுடனும் மட்டுமே நின்று கொள்ள வேண்டும். ஜமீன்தார்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை, அது கருத்துப்பூர்வமானதாக இருந்தாலும் பிசகாது செயல்படுத்த வேண்டும் என்று கிசான்களுக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

ஒரு வழக்கமோ அல்லது எழுத்துப்பூர்வ மான ஒப்பந்தமோ மோசமானதாக இருந்தாலும் வன்முறையின் மூலமோ அல்லது ஜமீந்தார்களைக் கலந்தாலோசிக்காமலோ அதனை நிராகரிக்கக் கூடாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜமீன்தார் களுடன் நேசப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்; ஓர் உடன்பாட்டிற்கு வருவதற்கு முயல வேண்டும்.”

சொத்துடைமை வர்க்கத்தைப் பகைத்துக் கொள்ள திரு. காந்தி விரும்பவில்லை. அவர்களுக்கு எதிராக ஓர் இயக்கம் நடத்து வதைக்கூட அவர் எதிர்க்கிறார். பொருளாதார சமத்துவக் கோட்பாட் டில் அவருக்கு ஈடுபாடில்லை. சொத்துரிமை வர்க்கத்தைப் பற்றி திரு. காந்தி அண்மையில் குறிப்பிட்டுக் கூறும் போது பொன் முட்டை யிடும் கோழியை அழிப்பதற்குத் தாம் விரும்பவில்லை என்று தெரி வித்தார்.

உடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும், செல் வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் குத்தகைக் காரர்களுக்கும், தொழிலபதிபர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே யான பொருளாதார முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு அவர் மிக எளிதான ஒரு வழியைக் கூறுகிறார். அதன்படி, உடைமையாளர்கள் தங்கள் உடைமைகளைப் பறிகொடுக்க வேண்டியதில்லை, மாறாக அவர் கள் தங்களை ஏழைகளின் தர்மகர்த்தாக்களாகப் பிரகடனம் செய்து கொண்டு விட்டால் போதும். இந்த தருமகர்த்தா சொத்து சுய விருப்ப அடிப்படையில் அமைந்தது; ஆன்மீகப் பொறுப்பு மட்டுமே அதற்கு உண்டு.

 III

பொருளாதாரக் கேடுகள் பற்றிய காந்திய ஆய்வில் புதுமை யானது ஏதேனும் உண்டா? காந்தியப் பொருளாதாரம் ஆரோக்கிய மானதா? சாமானிய மனிதனுக்கு, வாழ்க்கை வளமிழந்தவனுக்கு காந்தியம் எத்தகைய நம்பிக்கையை அளிக்கிறது? அவனுக்கு ஒரு மேம்பட்ட வாழ்வை, மகிழ்ச்சி பொங்கும் வாழ்வை, பண்பட்ட வாழ்வை, சுதந்திர வாழ்வை, இல்லாமையிலிருந்து விடுபடும் சுதந்திரம் மட்டுமன்றி முன்னேறும் சுதந்திரத்தை, அவனுக்குள்ள ஆற்றல்கள் மேலே மேலே உயர்ந்து, மிளிர்ந்து, வளர்ந்து செல்லும் சுதந்திரத்தை வழங்க அது உத்தரவாதம் தருகிறதா?

பொருளாதார சீர்கேடுகளுக்கெல்லாம் எந்திரங்களும் நவீன நாகரிகமும்தான் காரணம் என்று காந்திய ஆய்வு கூறுகிறது. இதில் புதுமை ஒன்றுமில்லை. நிர்வாகமும் கட்டுப்பாடும் ஒருசிலரது கைகளில் குவிவதற்கு எந்திரங்களும் நவீன நாகரிகமும் உதவுகின் றன; எல்லா மூலப் பொருள்களும் தொழிற்சாலைகளும் ஆலை களும் மேலும் ஒரு சிலரது கைகளில் குவிவதற்கு வங்கிகளும் கடன் வசதிகளும் துணைபுரிகின்றன; தங்கள் குச்சில் குடில்களிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவிலுள்ள பிரம்மாண்ட தொழில் களுக்கு ஆதாரபலமாக இருக்கும் பொருட்டு இந்தத் தொழிற்சாலை களிலும் ஆலைகளிலும் வேலை செய்யும் லட்சோபம் லட்சம்பேர் தங்களது கண்ணீரையும் செந்நீரையும் சிந்த வேண்டியிருக்கிறது; எந்திரங்களும் நவீன நாகரிகமும் யுத்தம் சாவு கொள்வதை விட அதிகமானோரை மரண கெபிக்கு அனுப்புகின்றன, எண்ணற்றோரை ஊனமாக்குகின்றன, முடமாக்குகின்றன; பெரிய பெரிய நகரங்கள் வளர்ந்து அவற்றின் புகையம், தூசியும், அழுக்கும், காது செவிடு படும் இரைச்சலும், அசுத்தக் காற்றும், போதிய சூரிய வெளிச்சமில் லாமையும், திறந்தவெளி வாழ்க்கை இன்மையும், நாற்றமெடுக் கும் சேரிகளும், அவற்றின் குப்பை கூளங்களும், பரத்தையர் விடுதி களும் இன்னும் பலவும் விதம் விதமான கொடிய நோய்களைப் பரப்புகின்றன, உடல் நலத்தைப் பெரிதும் சீர்குலைக்கின்றன. இவை எல்லாம் காந்தியம் கூறும் கேட்டுக்கேட்டுக் காது புளித்துப் போன பழைய வாதங்கள். இவற்றில் புதியது எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் ரூசோ, ரஸ்கின், டால்ஸ்டாய் போன்றோரின் கருத்துக்களையே காந்தியம் கிளிப்பிள்ளைபோல் திரும்பத் திரும்பக் கூறுகிறது.

காந்தியத்துக்கு ஆதார அடிப்படையாக அமைந்துள்ள கருந்து கள் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டவை, நாகரிகம் முதிர்ச்சியடை யாத காலத்திற்குரியவை. இயற்கை வாழ்க்கைக்கு, விலங்கின வாழ்க் கைக்குத் திரும்பிச் செல்லுவதை அது குறிக்கிறது. இக்கருத்துகளின் ஒரே சிறப்பு அவை எளிமையானவை என்பதுதான். இந்தக் கருத் துக்களால் கவரப்படுகின்ற எதையும் எளிதில் நம்பிவிடுகின்ற ஏராள மானோர் எப்போதம் இருப்பார்களாதலால் இத்தகைய எளிய கருத் துகள் மடிவதில்லை; அது மட்டுமல்ல இவற்றைப் பிரசாரம் செய்யக்கூடிய சில அப்பாவிகள் எப்போதும் இருக்கவே செய்வார்கள். எனி னும் மக்களின் இயலறிவுத்திறன், உள்ளார்ந்த உந்துணர்வு – இது தவறான வழியில் செல்லுவது அரிது – இக்கருத்துக்கள் பயனற்றவை என்பதை இனம் கண்டு விடுகிறது; முன்னேற்றத்தை நாடும் சமு தாயம் இவற்றை நிராகரிப்பதே சாலச்சிறந்தது என்ற முடிவுக்கு வந்து விடுகிறது.

காந்தியப் பொருளாதாரம் மிகவும் தவறானது. எந்திரங்களும் நவீன நாகரிகமும் பல தீமைகளைத் தோற்றுவித்துள்ளன என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் இந்தத் தீமைகள் அவற்றுக்கு எதிரான வாதமாகாது. ஏனென்றால் இந்தத் தீமைகளுக்கு எந்திரங்களும் நவீன நாகரிகமும் காரணமல்ல. தனிச் சொத்துரிமையையும் சொந்த சுயநல ஆதாயங்களில் நாட்டம் கொள்வதையும் புனிதமானவையாக, மீற வொண்ணாதவையாக ஆக்கியுள்ள தவறான சமூக அமைப்பே இந்தத் தீமைகளுக்கெல்லாம் காரணம். எந்திரங்களும் நாகரிகமும் ஒவ்வொருவரையும் பயனடையச் செய்யவில்லை என்றால் இதற் கான பரிகாரம் எந்திரங்களையும் நாகரிகத்தையும் கண்டனம் செய் வதில் அடங்கியிருக்கவில்லை; மாறாக, இவற்றின் பலன்களை ஒரு சிலர் மட்டும் அபகரித்துக் கொண்டுவிடாமல், அந்தப் பலன்கள் எல்லோருக்குமே கிட்டச் செய்யும் வகையில் சமுதாயத்தை மாற்றி அமைப்பதில்தான் அந்தப் பரிகாரம் பொதிந்துள்ளது.

காந்தியத்தில் சாமானிய மனிதனுக்கு எதிர்காலம் ஏது மில்லை. அது மனிதனை ஒரு மிருகமாகத்தான் பாவிக்கிறது. உட லமைப்பு, உணவு வகை, இனப்பெருக்கச் செயல்பாடுகளின் ஒரு சில அம்சங்களில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஓரளவு ஒற்றுமை இருக்கக் கூடும் என்பது உண்மையே. ஆனால் இவையே மனித னுக்கே உரிய தனித்த செயல்பாடுகளாக மாட்டா. மனிதனுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த, தனிச்சிறப்பு கொண்ட செயல்பாடு அவனுக்குள்ள பகுத்தறிவேயாகும். மனிதன் எதையும் நுணுகிக் காண் பதற்கும், உள்ளாராயவதற்கும், சிந்திப்பதற்கும், ஆராய்ச்சி செய்வ தற்கும் பிரபஞ்சத்தின் வனப்புகளை, அழகுகளை, நேர்த்திகளை, சிறப்புகளை கண்டுணர்வதற்கும், தனது வாழ்க்கையை வளமையும் செழுமையும் படுத்திக் கொள்வதற்கும், தனது வாழ்க்கையின் கீழான விலங்கு அம்சங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கும் பகுத்தறிவு உதவுகிறது. இவ்வாறு மனிதன் உயிரின அமைப்பில் மிக உன்னத மான, கொடுமுடியான இடத்தை வகிக்கிறான். இது உண்மை யாயின் இதிலிருந்து தோன்றும் முடிவு என்ன? அந்த முடிவு இதுதான்:

ஒரு விலங்கு அதன் உடல் பசிகளைத் தீர்த்துக் கொண்டதும் அதன் வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோளை அடைந்துவிடுகிறது; அத னால் மனிதன் தனது மனத்தை முழு அளவுக்குப் பண்படுத்திக் கொள் ளாதவரை மனித வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோள் பூர்த்தியடைந் ததாகாது. சுருக்கமாகக் கூறினால் விலங்கை மனிதனிடமிருந்து பிரித்துக் காட்டுவது பண்பாடு அதாவது கலாசாரம். விலங்குக்கு கலா சாரம் சாத்தியமில்லை; ஆனால் மனிதனுக்கு அது இன்றியமை யாதது. எனவே, ஒவ்வொருவரும் ஒரு பண்பட்ட வாழ்க்கை நடத்து வதைச் சாத்தியமாக்குவது மனித சமுதாயத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்; அதாவது வேறு விதமாகக் கூறினால் மனதைப் பண் படுத்துவது என்பது வெறும் உடல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலிருந்து வேறுபட்ட ஒன்றாக இருக்க வேண்டும். இது எவ்வாறு சாத்தியமாகும்?

சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, தனி நபரை எடுத்துக் கொண்டாலும் சரி ஏனோதானோ என்று வாழும் சாதா ரண வாழ்க்கைக்கும் பெருமதிப்பு மிக்க வாழ்க்கைக்கும் எப்போ துமே ஓர் இடைவெளி இருந்து வருகிறது. ஒருவர் பெருமை சான்ற வாழ்க்கை வாழ வேண்டுமானால் முதலில் அவர் வாழ்ந்தாக வேண் டும். ஏதேனும் பிழைப்பாதாரத்தைத் தேடிக் கொண்டு, ஏனோ தானோ வென்று சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே நிறைய நேரமும் சக்தி யும் செலவிட வேண்டியிருப்பதன் காரணமாக மனித இயல்புக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த செயல்பாடுகளுக்கு, அதாவது கலாசார வாழ்க்கை வாழ்வதற்குத் தேவைப்படும் நேரமும் சக்தியும் குறைந்து விடுகின்றன.

அப்படியானால் கலாசார வாழ்க்கை வாழ்வதை எப்படிச் சாத்தியமாக்குவது? போதிய ஓய்வுநேரம் இருந்தாலொழிய இது சாத்தியமல்ல. ஏனென்றால் ஓய்வுநேரம் இருந்தால்தான் ஒருவர் கலாசார வாழ்க்கையில் தன்னை ஈடுபத்திக் கொள்ள முடியும். மனித சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் எல்லாம் முக்கிய மான பிரச்சினை ஒவ்வொருவருக்கும் எவ்விதம் ஓய்வு நேரத்தை ஒதுக்குவது என்பதேயாகும். ஓய்வுநேரம் என்பது எதைக் குறிக் கிறது? ஓய்வு நேரம் என்பது வாழ்க்கையின் உலகாயதத் தேவை களைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு அவசியமான உழைப்பையும் முயற்சியையும் குறைப்பதைக் குறிக்கிறது. சரி, ஓய்வு நேரத்தை எவ் வாறு பெறுவது? மனிதனது தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய பண்டங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பைக் குறைக்கும் ஏதேனும் வழிமுறைகளைக் கண்டுபிடித்தாலொழிய

ஒய்வு நேரம் என்பது முற்றிலும் சாத்தியமில்லை. இத்தகைய உழைப்பை எவற்றால் குறைக்க முடியும்? மனிதனது இடத்தை எந்தி ரங்கள் நிரப்பினால்தான் இது சாத்தியம். ஒய்வு நேரத்துக்கு வகை செய்வதற்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை. எனவே, விலங்கு வாழ்க்கை வாழ்வதிலிருந்து கலாசார வாழ்க்கை வாழ்வதைச் சாத்திய மாக்குவதற்கும் எந்திரங்களும் நவீன நாகரிகமும் இன்றியமை யாதவை என்பது தெளிவு. எந்திரங்களையும் நவீன நாகரிகத்தையும் ஒருவர் கண்டிக்கிறார் என்றால் அவற்றின் நோக்கத்தையும், மனித சமுதாயம் அடைய முயலும் இறுதிக் குறிக்கோளையும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அதற்குப் பொருள்.

ஜனநாயகத்தை தனது குறிக்கோளாக ஏற்றுக் கொள்ளாத ஒரு சமுதாயத்துக்கு வேண்டுமானால் காந்தியம் பொருத்தமான தாக இருக்கக்கூடும். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளாத ஒரு சமுதாயம் எந்திரங்களின் பாலும் அவற்றை ஆதார அடிப்படையாகக் கொண்ட கலாசாரத்தின் பாலும் அலட்சிய மனோபாவத்தை மேற் கொள்ளக்கூடும். ஆனால் ஒரு ஜனநாயக் சமுதாயம் அவ்வாறு செய்ய முடியாது. முந்தைய சமுதாயம் ஒரு சிலருக்கு ஏராளமான ஓய்வு நேரத்துடன் கூடிய கலாசார வாழ்க்கையையும் மிகப் பலருக்கு கடும் முயற்சியும் மட்டுமீறிய உழைப்பும் கொண்ட சிரமமிக்க வாழ்க்கையையும் வழங்குவதோடு திருப்தியடையக் கூடும். ஆனால் ஜனநாயக சமுதாயமோ குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மிகுந்த ஓய்வுநேரத்துடன் கூடிய கலாசார வாழ்க்கையை உத்தரவாதம் செய் தாக வேண்டும்.

மேற்கண்ட ஆய்வு சரியானதாக இருக்குமானால், எந்திரங்கள், மேலும் மேலும் எந்திரங்கள், நாகரிகம், மேலும் மேலும் நாகரிகம் என்பதே ஒரு ஜனநாயக சமுதாயத்தின் கோட் பாட்டுக் கோஷமாக இருக்க வேண்டும் என்பது தெள்ளத் தெளிவு. ஆனால் காந்தியத்தின் கீழோ சாமானிய மனிதன் அற்ப சொற்ப ஊதி யத்துக்காக ஓய்வு ஒழிச்சலின்றி, இடைவிடாது மாடாக உழைத்து ஓடாகத் தேய வேண்டும், பேசும் ஒரு மிருகமாக இருந்து வர வேண் டும். சுருக்கமாகக் கூறினால் மிகப் பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரையில் இயற்கைக்கு மீண்டும் திரும்புவோம் என்ற காந்தியத்தின் கோஷம் ஆடைகள் அணியாத பழைய நிலைக்குத் திரும்புவோம், அழுக்கடைந்த பழைய தோற்றத்துக்கும் குப்பை கூளங்களுக்கும் திரும்புவோம், இல்லாமைக்கும் கல்லாமைக்கும் திரும்பு வோம் என்பதையே குறிக்கும்.

வெவ்வேறான சமயவினை முறைகளைப் பொறுத்து வாழ் வின் பிரிவினையையும், சமுதாயம் தனித்தனி வர்க்கங்களாகப் பிரிந் திருப்பதையும் ஒரே வீச்சில் ஒழித்துக்கட்டிவிட முடியாது. எத்தனை எத்தனையோ, சமூக, பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதி லும், சட்டப்பூர்வமான பண்ணை அடிமை வாழ்க்கையும் அடிமைத் தனமும் அகற்றப்பட்டிருந்த போதிலும், ஜனநாயகக் கண்ணோட் டம் எங்கெங்கும் படர்ந்து பரவியிருந்த போதிலும், புத்தகங்கள், செய்திப் பத்திரிகைகள், சுற்றுப்பயணம், பள்ளிக்கூடங்களிலும் தொழிற்சாலைகளிலும் கலந்துரையாடல்கள் போன்றவற்றின் மூலம் விஞ்ஞானமும் பொதுக்கல்வியும் விரிவடைந்திருந்த போதிலும், சமுதாயத்தில் படித்த வர்க்கத்துக்கும் அல்லும் பகலும் அயராது உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையே இன்னும் பிளவு இருந்து கொண்டுதானிருக்கிறது.

ஆனால் காந்தியம் வெறும் கோட்பாட்டளவான வர்க்க வேறு பாடுகளுடன் திருப்தியடைந்து விடவில்லை. காந்தியம் வர்க்கக் கட்டமைப்பை வலியுறுத்துகிறது. சமுதாயத்தின் வர்க்கக் கட்டமைப் பையும், அதேபோல் வருமானக் கட்டமைப்பையும் அது புனித மானவையாகக் கருதுகிறது; இவற்றின் விளைவாக ஏற்படும் ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், முதலாளி தொழிலாளி போன்ற பாகுபாடுகளை சமூக ஒழுங்கமைப்பின் நிரந்தர அம்சங்க ளாகவும் அது பாவிக்கிறது. சமூக விளைவுகள் கண்ணோட்டத்தி லிருந்து பார்க்கும்போது இதைவிடக் கேடு பயக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை என்றே கூறலாம். மனோதத்துவ ரீதியில் நோக்கும் போது, வர்க்கக் கட்டமைப்பானது இரு வர்க்கங்களுக்குமே தீங்கு விளைவிக்கக்கூடிய வினைபயன்களை செயற்படுத்துகிறது.

சலுகை பெற்ற வர்க்கமும் ஆட்பட்ட வர்க்கமும் ஒன்றுபடக்கூடிய பொது அம்சம் ஏதுமில்லை, வாழ்க்கையின் நம்பிக்கைகளையும் அனுபவங் களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு ஏதுமில்லை. இந்தப் பிரிவினையால் கீழ்ப்பட்ட வர்க்கம் அனுபவிக்க வேண்டி யுள்ள சமூக, தார்மிகத் தீமைகள் கண்கூடானவை, அதுஅவர் களை அடிமைகளாகப் பயிற்றுவிக்கிறது; ஓர் அடிமை மனப்பான்மை யிலிருந்து உருவாகக் கூடிய எல்லா மனோதத்துவ உணர்வுகளை யும் தோற்றுவிக்கிறது. ஆனால் அதேசமயம் சலுகை பெற்ற வர்க்க மும் தாக்கத்தக்கு உள்ளாகிறது; அந்தத் தாக்கங்கள் உலகாயத ரீதி யில் மட்டுப்பட்டவையாகவும், குறைந்த அளவே காணத்தக்கவை யாக இருந்தாலும் அவை எதார்த்தமாகவும் வர்க்க அமைப்பின் விளைவாக ஏற்படும் தனிமையும் ஒதுக்க நிலையும் சலுகை பெற்ற வர்க்கங்களிடம் சமூக விரோதக் கும்பலுக்குரிய மனநிலையை தோற்றுவிக்கின்றன.

அவை, தனக்கே உரிய சொந்த நலன்கள் இருப் பதாக உணர்கின்றன; எல்லோருக்கும் எதிராக, அரசின் நலன் களுக்கு எதிராகவும் கூட அவற்றைப் பாதுகாப்பதை ஒரு மேம் பட்ட பணியாகக் கருதுகின்றன. இத்தகைய போக்கு அவற்றின் கலாசாரத்தை வறண்டதாக, வளமற்றதாக ஆக்குகிறது; அவற்றின் கலையை போலியானதாக ஆக்குகிறது; அவற்றின் செல்வத்தை வெறும் பகட்டானதாக ஆக்குகிறது; அவற்றின் பழக்கவழக்கங்களை மனநிறைவற்றவையாக ஆக்குகிறது. நடைமுறை எதார்த்தத்தோடு கூற வேண்டுமானால் ஒரு வர்க்கக் கட்டமைப்பில் ஒருபுறம் வெற் றாரவாரம், டம்பம், தற்பெருமை, இறுமாப்பு. அகந்தை, திமிர், பேராசை, சுயநலம் போன்றவை இருப்பதைப் பார்க்கிறோம்; இன்னோரு புறம் பாதுகாப்பின்மை, கொடிய வறுமை, அவமதிப்பு, இழிவு, சுதந்திர இழப்பு, தன்னம்பிக்கையின்மை, சுயமரியாதை இன்மை போன்றவை நிலவுவதைக் காண்கிறோம்.

ஜனநாயக சமு தாயம் இத்தகைய தீய விளைவுகள் குறித்துப் பாராமுகமாக இருக்க முடியாது. ஆனால் காந்தியமோ இந்த விபரீத விளைவுகளைப் பற்றி அணுவளவும் கவலைப்படவில்லை. வெறும் வர்க்க வேறுபாடு களுடன் காந்தியம் திருப்தியடையவில்லை என்று கூறுவது மட்டும் போதாது. வர்க்கக் கட்டமைப்பை காந்தியம் ஆதரிக்கிறது என்று கூறுவது மட்டும் போதாது. காந்தியம் இதற்கு மேலாகவும் எதிர் பார்க்கிறது. காந்தியம் விரும்புவது பொலிவிழந்துபோன, வளமற்ற, கவர்ச்சியற்ற, தளர்ந்து நலிந்து போன, வெறும் உணர்ச்சி அளவி லேயான, எலும்புக்கூடு போன்ற வர்க்கக் கட்டமைப்பை அல்ல உயிர்த்துடிப்பு மிக்க ஒரு சமயம் போன்று செயல்படக்கூடிய வர்க்கக் கட்டமைப்பையே அது விரும்புகிறது.

இதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால் காந்தியத்தில் வர்க்கக் கட்டமைப்பு என்பது தற்செயலான நிகழ்ச்சி அல்ல. அது அதனுடைய அதிகாரப் பூர்வமான சித்தாந்தம். பணக்கார வர்க்கங்கள் தங்கள் சொத்துக் களை ஏழைகளி தர்ம சொத்துகளாக வைத்திருப்பதற்கு காந்தியம் முன்வைத்துள்ள தர்மகர்த்தா முறை மிகவும் கேலிக்கும் நகைப் புக்குமிடமானதாகும்.

இதே கருத்தை வேறு எவரேனும் வெளியிட் டிருந்தால் வாழ்க்கையின் கண்கண்ட எதார்த்தங்களை அறியாத கடைந்தெடுத்த அறிவிலி என்று எள்ளி நகையாடியிருப்பார்கள்; சொத்துடைமை வர்க்கங்களுக்கு அறநெறிகளை, ஒழுக்கத் தத்து வத்தை பவ்யமாக, பக்குவமாக எடுத்துரைத்தால் வர்க்கக் கட்டமைப்பு தனக்கு வழங்கியுள்ள பிரம்மாண்டமான அதிகாரங்களை கீழ்மட்ட வர்க்கங்களுக்கு எதிராகத் தவறான முறையில் பயன்படுத் தாதபடி அந்த வர்க்கங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று கீழ் மட்ட வர்க்கங்களிடம் நயவங்சகமாகக் கூறி அவற்றை ஏமாற்றும் எத்தர் என்று கடுமையாக சாடியிருப்பார்கள். ஏனென்றால் இந்தச் சொத்துடைமை வர்க்கத்தினர் தணியாத பண ஆசை, ஆதாய வெறி கொண்டவர்கள், எல்லையற்ற அகந்தை கொண்டவர்கள், கோடானு கோடி உழைக்கும் மக்களுக்கு இந்த உலகை கண்ணீர்த் தடாக மாக, இரத்தக்குளமாக ஆக்கியவர்கள், இனி எப்போதும் இவ்வாறே செய்யக்கூடிய கல்நெஞ்சர்கள்.

காந்தியத்தின் சமூகக் குறிக்கோள் சாதியாகவோ அல்லது வருணமாகவோ இருக்கலாம். இவற்றில் எது அதன் குறிக்கோள் என்று திட்டவட்டமாகக் கூறுவது கடினம். என்றாலும் காந்தியத் தின் சமூக குறிக்கோள் ஜனநாயகமல்ல என்பதில் எத்தகைய ஐயப் பாட்டுக்கும் இடமில்லை. ஏனென்றால் சாதியை எடுத்துக் கொண் டாலும் சரி, வருணத்தை எடுத்துக் கொண்டாலும் சரி இவை இரண் டுமே அடிப்படையில் ஜனநாயகத்துக்கு எதிரானவை. சாதி அமைப்பு முறையை காந்தியம் வலுவாகவும் நேர்மையாகவும் ஆத ரித்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால் சாதி அமைப்பு முறைக்கு அவர் அளிக்கும் ஆதரவு நினைத்துப் பார்க்க முடியாத அர்த்தமற்ற, ஆடம்பர ஆர்ப்பாட்டமான வெறும் சொற்சிலம்பமே தவிர வேறு அல்ல. சாதி அமைப்பு முறைக்கு ஆதரவாக திரு. காந்தி முன்வைக்கும் வாதங்களைப் பரிசீலித்துப் பாருங்கள்; அவற்றில் ஒவ்வொன்றும் புறப்பகட்டானதாக இருப்பதைக் காணலாம். இந்த வாதங்களை எல்லாம் ஏற்கெனவே இந்த இயலின் தொடக்கத்தில் சுருக்கமாகக் கூறியிருக்கிறோம்.

முதல் மூன்று வாதங்கள் இரங்கத்தக்கவை. ஏனைய சமுதாயங்  கள் மடிந்து விட்டபோது அல்லது மறைந்து விட்டபோது இந்து சமுதாயத்தால் மட்டுமே தாக்குப்பிடித்து நிற்க முடிந்திருக்கிறது என்ற வாதம் எவ்வகையிலும் பாராட்டதலுக்குரியது அல்ல. அது உயிர்பிழைத்ததற்குக் காரணம் சாதி அல்ல; மாறாக, இந்துக்களை வெற்றி கொண்ட அயல்நாட்டினர் அவர்களை ஒட்டுமொத்தமாகக் கொன்று குவிக்க வேண்டிய அவசியமுமில்லை என்று கருதியதே அதற்குக் காரணம், ஏதோ உயிர்பிழைத்திருப்பதில் எந்தக் கௌர வமும் இல்லை. எந்த அடிப்படையில் உயிர் பிழைத்தார்கள் என்பது தான் முக்கியம். நிபந்தனையின்றி சரணடைவதன் மூலம் ஒருவர் உயிர் பிழைக்கலாம். கோழைத்தனமாகப் பின்வாங்குவதன் மூலம்  

ஒருவர் உயிர் பிழைக்கலாம். நிகரற்ற நெஞ்சுரத்தோடு எதிர்த்துப் போராடுவதன் மூலமும் ஒருவர் உயிர் பிழைக்கலாம். இவற்றில் எந்த அடிப்படையில் இந்துக்கள் உயிர் பிழைத்தார்கள்? பகைவர்களை எதிர்த்து வீரத்தோடு தீரத்தோடு போராடி அவர்களை முறியடித்து உயிர்பிழைத்தார்கள் என்றால் அதற்கான பெருமையை திரு. காந்தி கூறும் சாதி அமைப்புக்குத் தரலாம். ஆனால் இந்துக்களின் வரலாறு இழிவினும் இழிவான சரணாகதி வரலாறாகவே இருந்து வந்திருக் கிறது. ஏனைய பல நாட்டினரும் தங்கள் படையெடுப்பாளர்களிடம் சரணடைந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்கள் விஷயத்தில் அந்நிய ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த பிறகே அவர்களது சரணாகதி நிகழ்ந்திருக்கிறது.

ஆனால் இந்துக்கள் அந்நியப் படையெடுப்பாளர்களின் தாக்குதலை ஒருபோதும் தாக்குப்பிடித்து நின்றதில்லை. அது மட்டுமல்ல, அந்நிய நுகத்தடியைத் தூக்கியெறி வதற்கு ஓர் எழுச்சியை, கிளர்ச்சியை, கலகத்தைக் கிளர்த்தி விடும் ஆற்றல் தங்களுக்கு இருக்கிறது என்பதைக் கூட அவர்கள் ஒருபொதும் வெளிப்படுத்தியதில்லை. அதற்கு மாறாக, அடிமைத்தனத்தில் சுக போகம் காணவே அவர்கள் முயன்று வந்திருக்கின்றனர். இவ்வகை யில், இந்துக்களின் இந்தப் பரிதாபகரமான, நிராதரவான நிலை? மைக்கு சாதி அமைப்பு முறையே முற்றிலும் காரணம் என்றும் வாதிட முடியும்.

பத்தி 4-ல் கூறப்படும் வாதம் எடுத்த எடுப்பில் சரியானதாகத் தோன்றலாம். ஆனால் தொடக்கக் கல்வியைப் பரப்புதல், தகராறு களைத் தீர்த்து வைத்தல் போன்ற பணிகளைச் செய்வதற்கு சாதி தான் ஒரே தகுதியான அமைப்பு என்று கூற முடியாது. உண்மையில் இத் தகைய பணிகளை ஆற்றுவதற்கு சாதி மிக மோசமான சாதனம் என்று அநேகமாகக் கூறலாம். இதனை எளிதாக வசப்படுத்தவும் சுலபமாக ஊழலுக்கு உட்படுத்தவும் முடியும். ஏனைய நாடுகளில் சாதி அமைப்பு முறை இல்லாதபோதிலும் இந்தியாவை விட அங்கு இந்தப் பணிகள் திறம்படச் செய்யப்பட்டுவருகின்றன. படைப் பிரிவுகளாஇ உருவாக்குவதற்கு சாதியைப் பயன்படுத்தும் விஷ யத்தைப் பொறுத்தவரை அது முற்றிலும் விசித்திரமான கற்பனை யாகும். சாதி அடிப்படையில் தொழில் செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.

திரு. காந்தியின் சொந்த மாகாணமான குஜராத்தில் எந்த ஒரு சாதியும் எக்காலத்திலும் ஒரு படைப்பிரிவை உருவாக்கியதில்லை என்பதை அவரே அறிவார். இப்போதைய உலக யுத்தத்திலும் அது அவ்வாறு செய்யவில்லை. கடந்த உலகப்  போரிலும் இது நடைபெறவில்லை. இத்தனைக்கும் அச்சமயம் திரு.காந்தி படைக்கு ஆள் சேர்க்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஏஜண்டாக குஜராத் முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்தும்கூட எதுவும் செய்ய முடியவில்லை. உண்மையில் சாதி அமைப்பின் கீழ் படைக்குப் பொது ஆள் திரட்டும் பணியைச் செய்வது சாத்தியமல்ல; ஏனென்றால் சாதி அமைப்பு முறையின்படி ஒவ்வொருவரும் அவ ரவரது சாதிக்குரிய தொழிலைத்தான் செய்ய முடியும்.

பத்திகள் 5 மற்றும் 6ல் இடம் பெற்றுள்ள வாதங்கள் அபத்த மானவையாகவும் அருவருக்கத்தக்கவையாகவும் உள்ளன. பத்தி 5ல் காணப்படும் வாதத்தை ஒரு சிறந்த வாதம் என்று எவ்வகை யிலும் கூற முடியாது. குடும்பம் என்பது ஓர் இலட்சிய அமைப்பு என்பதிலும், அக்குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளவிட்டாலும் ஒவ்வொரு உறுப்பினரும் பரஸ்பரம் மற்ற உறுப்பினருடன் பந்தபாசத்துடன் நடந்து கொள்கின்றனர் என் பதிலும் ஐயமில்லை. வைஷ்ணவக் குடும்பத்தில் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவதில்லை என்றாலும், அவர்கள் பரஸ்பரம் ஒருவரிடம் ஒருவர் பாசமும் அன்பும் வைத்திருக்கின் றனர் என்பதும் உண்மையே.

இவை எல்லாம் எதை நிரூபிக்கின் றன? சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்கு ஒன்றாக அமர்ந்து உண்பதும், கலப்புத் திருமணமும் அவசியமில்லை என்பதை இது நிரூபிக்கவில்லை. சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்கு குடும்பப் பிணைப்பு உணர்வு போன்ற வேறு வழிமுறைகள் இருக்கும்போது ஒன்றாக அமர்ந்து உண்பதும், கலப்புத் திருமணமும் அவசிய மில்லை என்பதையே இது மெய்ப்பிக்கிறது. சாதி அமைப்பு முறை யில் இருப்பது போன்று கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத போது கலப்புத் திருமணமும், ஒன்றாக அமர்ந்து உண்பதும் முற்றிலும் அவசியம். குடும்பத்துக்கும் சாதிக்கும் இடையே ஒப்புமை இல்லை.

பல்வேறு சாதியினர் ஒன்றாக அமர்ந்து உண்பதும், சாதிவிட்டுச் சாதி திருமணம் செய்து கொள்வதும் அவசியம்; ஏனென்றால் குடும் பத்தினரை ஒன்றாக இணைக்கக்கூடிய இதர பல அமசங்கள் இருப்பது போன்று, பல்வேறு சாதிகளையும் பிணைக்கக்கூடிய இதர வழிமுறை கள் ஏதும் இல்லை. ஒன்றாக அமர்ந்து உண்பதையும் கலப்புத் திரு மணத்தையும் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருப் பவர்கள் அதனை ஒப்பீட்டு மதிப்புகள் கொண்ட ஒரு பிரச்சினை யாகவே எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அதனை முழுமை யான மதிப்புகள் கொண்ட ஒரு பிரச்சினையாக என்றுமே உயர்த்தியதில்லை.

திரு. காந்திதான் இதனை முதலில் செய்தவர். ஒன்று கலந்து உண்பது நன்மை பயக்கும் என்றாலும் அது மோசமானது; அதனைக் கைக்கொள்ளக்கூடாது. ஏன்? ஏனென்றால் இயற்கைக் கடன்களை முடிப்பது எவ்வளவு அருவருப்பானதோ அவ்வளவு அருவருப் பானது சாப்பிடுவதும்! சாதி அமைப்பு முறைக்கு முட்டுக்கொடுத்து எத்தனையோ பேர் அதனை ஆதரித்திருக்கிறார்கள். ஆனால் அதனை ஆதரிப்பதற்கு இத்தகைய அசாதாரணமான வாதம் முன்வைக்கப் படுவதை இப்போதுதான் முதல் தடவையாகக் காண்கிறேன். இதைப் பார்த்து “திரு. காந்தியிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சனாதனிகர் கூட பிரலாபிக்கக்கூடும். திரு. காந்தி எத்தகைய வெறி பிடித்த இந்து என்பதையே இது காட்டுகிறது. சனாதனிகளான இந்துக் களிலும் மிகவும் சனாதனிய இந்துக்களையே அவர் விஞ்சிவிட்டார். குகைளில் வாழ்ந்தழ் பழங்கற்கால மனிதனின் வாதம் என்று இதனைக் கூறுவது கூடப் போதாது. சித்த சுவாதீனமில்லாத ஒரு மனிதனின் வாதம் என்றுதான் இதனை உண்மையில் கூறவேண்டும்.

சாதி அமைப்பு முறைக்கு ஆதரவாக பத்தி 7-ல் முன்வைக்கப் பட்டிருக்கும் வாதம் ஒழுக்கத்தை மேம்படுத்தும் கண்ணோட்டத் திலிருந்து பார்க்கும்போது அத்தனை தகைமை சான்றாக இல்லை. ஒருவன் தன் சாதியைச் சேராத பெண்ணைக் கொண்டு தனது காம இச்சையை நிறைவேற்றிக் கொள்வதை சாதி அமைப்பு முறை தடை செய்கிறது என்பதில் ஐயமில்லை. அதே போன்று ஒருவன் தனது சாதியைச் சேராதவனது வீட்டில் சமைத்த உணவை உணடு சுவை மிக்க உணவின் மீது தன்க்குள்ள ஆசையை நிறைவேற்றிக் கொள் வதையும் சாதி அமைப்பு முறை தடை செய்கிறது என்பதிலும் சந்தேக மில்லை. சில கட்டுப்பாடுகளை அவற்றில் அர்த்தமிருக்கிறதா, இல்லையா என்று கவனிக்காது கடைப்பிடிப்பதில்தான் ஒழுக்கம் அடங்கியிருக்கிறது என்றால் அப்போது சாதி அமைப்பு முறையை ஓர் ஒழுக்கவாதி முறையாக ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இந்த எளிதான கட்டுப்பாடுகள் இந்து சமயம் வழங்கியுள்ள ஏராளமான சுதந்திரங்களால் அளவுக்கு அதிகமாகவே சமன் செய்யப்பட்டு விடுகின்றன என்பதை திரு. காந்தி காணத்தவறிவிடுகிறார். ஒருவன் தனது சாதிக்குள் நூறு பெண்களை மணம் செய்து கொள்வதையும், நூறு பரத்தைகளை வைத்துக் கொள்வதையும் இந்து சமயம் தடை செய்யவில்லை. அவன் தன்னுடைய சாதிக்காரர்களுடன் சேர்ந்து எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தன் பசியைத் தீர்த்துக் கொள் வதையும் அது தடுக்கவில்லை.

பத்தி 8-ல் முன்வைக்கப்பட்டிருக்கும் வாதத்தில்தான் பிரச் சினை முழுவதுமே அடங்கியுள்ளது. பரம்பரைத் தொழில் என்னும் சித்தாந்தம் நல்லதாக இருக்கலாம் அல்லது நல்லதல்லாததாக இருக்கலாம். சிலருக்கு அது உடன்பாடானதாக இருக்கலாம். ஏன் அதனை ஓர் அதிகாரப்பூர்வமான சித்தாந்தமாக உயர்ந்த வேண் டும்? அதனை ஏன் கட்டாயமாக்க வேண்டும்? ஐரோப்பாவில் அது ஓர் அதிகாரப் பூர்வமான சித்தாந்தமல்ல; அங்கு அது கட்டாயமு மல்ல, தனி நபரது விருப்பத்துக்கு விடப்பட்டு விடுகிறது. பலர் தங்களது முன்னோர்களின் தொழிலைப் பின்பற்றுகின்றனர்; சிலர் அவ்வாறு செய்வதில்லை, கட்டாய முறையானது சுயவிருப்ப முறை யைவிட நன்கு செயல்படுகிறது என்று யார் கூற முடியும்? இந்தியா விலுள்ள மக்களது பொருளாதார நிலைமையையும் ஐரோப்பிய மக்களின் பொருளாதார நிலைமையையும் ஒப்பு நோக்கி அதனை ஒரு வழிகாட்டியாகக் கொள்வோமாயின், பகுத்தறிவு மனோ பாவம் கொண்டோரில் மிகச் சிலரே இந்த அடிப்படையில் அமைந்த சாதி அமைப்பு முறைக்கு ஆதரவளிப்பதைக் காணலாம். தொழிலில் அடிக்கடி நிகழும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகை யில் துறைச் சொற்களை மாற்றுவதிலுள்ள சிரமத்தைப் பொறுத்த வரையில் அது செயற்கையானதேயாகும்.

ஒரு குறிப்பிட்ட தொழிலைப் பின்பற்றும் நபர்களை குறிப்பிட்டுக் கூறுவதற்கு வகுப்பு அடை மொழிப் பெயர் தேவைப்படுவதிலிருந்துதான் இது எழுகிறது. இந்த அடைமொழிப் பெயர்கள் முற்றிலும் அவசியமற்றவை; எந்தச் சிரமமுமின்றி அவற்றை ஒழித்துக் கட்டிவிட முடியும். மேலும் இந்தியாவில் இன்று என்ன பார்க்கிறோம்? மனிதர்களுடைய தொழில்களும் அவர்களுடைய வகுப்பு அடைமொழிப் பெயர் களும் ஒத்திருப்பதில்லை. ஒரு பிராமணன் மிதியடிகள் விற்கிறான். அவன் ஒரு சாமர் என்ற அழைக்கப்படாதது கண்டு யாரும் கவலைப் படுவதில்லை.

ஒரு சாமர் அரசு அதிகாரியாகிறான். அவன் ஒரு பிராமணன் என்ற அழைக்கப்படவில்லையே என்று எவரும் குழப்ப மடைவதில்லை. இந்த வாதம் முழுவதுமே ஒரு தவறான கருத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது. தனிநபர் எந்த வகுப்பு அடைமொழிப்ல் பெயரைக் கொண்டிருக்கிறார் என்பது சமுதாயத் துக்கு முக்கியமல்ல; அவர் என்ன பணி புரிகிறார் என்பதுதான் முக்கியம்.

பத்தி 9-ல் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் கடைசி வாதம் சாதி அமைப்பு முறைக்கு ஆதரவாக நான் இதுவரை கேள்விப்பட்ட வாதங் களிலேயே மிகவும் திகைப்பும் அதிர்ச்சியுமூட்டும் வாதமாகும். அது வரலாற்று ரீதியில் அறவே தவறானது. மனு ஸ்மிருதியைப் பற்றி ஏதேனும் தெரிந்த எவருமே சாதி அமைப்பு முறை ஓர் இயற்கை யான அமைப்புமுறை என்று கூறமுடியாது. மனு ஸ்மிருதி காட்டுவது என்ன? சாதி அமைப்பு முறை வாள் முனையில் நிலைநாட்டப்பட்டு சட்ட அந்தஸ்து அளிக்கப்பட்ட ஓர் அமைப்பு முறை என்பதையே அது காட்டுகிறது.

அது நிலைத்திருக்க, உயிர்வாழ்ந்திருக்க முடிந்தது என்றால், (1) பொது மக்கள் ஆயுதபாணிகளாகாதபடி தடுக்கப் பட்டதும்; (2) கல்வி கற்கும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டதும்; (3) சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதுமே இதற்குக் காரணம். சாதி அமைப்பு முறை இயற்கையான அமைப்பு முறை அல்ல, மாறாக உண்மையில் அது ஆளும் வகுப்பினர்கள் அடக்கப்பட்ட வகுப்பினர்மீது வலுக்கட் டாயமாகத் திணித்த ஓர் அமைப்பு முறையேயாகும்.

சாதி அமைப்பு முறையிலிருந்து வருண அமைப்பு முறைக்கு திரு. காந்தி மாறியதானது காந்தியம் ஜனநாயகத்துக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டில் அணுவளவும் வேறுபாட்டை ஏற்படுத்திவிட வில்லை. முதலாவதாக, சதுர் வருணம் என்னும் கருத்துதான் சாதி கருத்துக்குப் பிறப்பிடமாகும். சாதி என்னும் கருத்து பெருங்கேடு பயக்கக் கூடியாதாக இருக்கிறதென்றால், சதுர்வருண கருத்தின் கொடிய நச்சுக் சூழலே இதற்கு முற்றிலும் காரணம். ஒருவர் சதுர்வருண அமைப்பில் நம்பிக்கை வைத்தாலும் சரி, அல்லது சாதி அமைப்பில் நம்பிக்கை வைத்தாலும் சரி இரண்டுமே தீய கருத்துகளாகும். சதுர் வருண அமைப்பு முறையை பௌத்தர்கள் மிகவும் ஈவு இரக்க மின்றித் தாக்கினர்; அந்த அமைப்பு முறையை அவர்கள் இம்மியும் ஆதரிக்கவில்லை. வேதங்களில் பற்றுதல் கொண்ட வைதிக அல்லது சனாதன இந்துக்களால் இந்தத் தாக்குதலுக்கு அறிவார்ந்த முறையில் பதிலளிக்க முடியவில்லை.

சதுர்வருண அமைப்பு முறை வேதங் களின் ஆணையின்படி அமைக்கப்பட்ட்தென்றும், வேதங்கள் பிழை யாதவையாதலால் சதுர்வருண அமைப்பும் பிழையாதது என்றும் மட்டுமே அவர்களால் வாதிட முடிந்தது. இந்த வாதம் வருண அமைப்பு முறையை பௌத்தர்களின் பகுத்தறிவுவாதத் தாக்குதலிருந்து பாது காப்பதற்குப் போதுமானதாக இல்லை. வருண அமைப்பு முறை தப்பிப் பிழைத்தது என்றால் பகவத் கீதையே அதற்குக் காரணம்; வருணம் என்பது மனிதனின் உள்ளார்ந்த குண இயல்புகளை அடிப்படையாகக் கொண்டது என வாதித்து, அதற்கு ஒரு தத்துவார்த்த அடித்தளத்தை அது அளித்தது.

வருண அமைப்பு முறையை முட்டுக் கொடுத்துத் தாங்கி நிற்பதற்கு சாங்கிய சித்தாந்தத்தை பகவத் கீதை பயன்படுத்திக்கொண்டது; இல்லையென்றால் முற்றிலும் அர்த்தமற்றா ஒரு கருத் துக்கு அர்த்தமளிக்கும் முயற்சி பிசுபிசுத்துப் போயிருக்கும். வருண அமைப்பு முறைக்கு ஒரு புதிய, எளிதில் நம்பத்தகுந்த அடித்தளத்தை அதாவது உள்ளார்ந்த குண இயல்புகள் என்ற அடித்தளத்தை சாதுர்ய மாக வழங்கி பகவத் கீதை அதற்கு புத்துயிரூட்டிற்று:

பகவத் கீதை ஆதரிக்கும் வருண அமைப்பு முறைக்கு குறைந்த பட்சம் இரண்டு சிறப்புகள் உண்டு. வருண அமைப்பு முறை பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்ற அது கூறவில்லை. ஒவ்வொருவனது வருணமும் அவனது உள்ளார்ந்த குண இயல்புகளுக்கு ஏற்ப நிர்ண யிக்கப்படுகிறது என்று அது விசேடமாக சுட்டிக்காட்டுகிறது. மக னுடைய தொழில் தந்தையினுடைய தொழிலாக இருக்க வேண்டும் என்றும் அது கூறவில்லை.

ஒருவனது தொழில் அவனது உள்ளார்ந்த குண இயல்புகளுக்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும். இதன்படி தந்தை யின் தொழில் தந்தையின் உள்ளார்ந்த குண இயல்புகளுக்கு ஏற்ப வும், மகனின் தொழில் மகனது உள்ளார்ந்த குண இயல்புகளுக்கு ஏற்பவும் அமைந்திருக்க வேண்டும் என்று பகவத் கீதை கூறுகிறது. ஆனால் திரு.காந்தியோ வருண அமைப்பு முறைக்கு ஒரு புதிய வியாக்யானத்தை தந்துள்ளார். இதன் மூலம் வருண அமைப்பு முறை யையே அடையாளம் தெரியாதபடி மாற்றிவிட்டார். பழைய வைதிக வியாக்யானத்தின்படி சாதி பரம்பரைத் தொழிலைக் குறித்தது; வருணம் அப்படிச் செய்யவில்லை, திரு. காந்தி தமது மனம் போனப் போக்கில் வருண அமைப்பு முறைக்கு ஒரு புதிய விளக்கத்தைக் தந்திருக்கிறார்.

திரு. காந்தியின் கருத்துப்படி ஒருவரது வருணம் பிறப்பால் நிர்ணயிக்கப்படுகிறது; வருணத்தின் தொழில் பரம்பரைக் கோட் பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது; வேறுவித மாகச் சொன்னால் வருணம் என்பது சாதி என்பதன் மற்றொரு பெயரே ஆகும். திரு. காந்தி சாதியிலிருந்து வருணத்துக்கு மாறியதானது எத் தகைய புதிய புரட்சிகர சித்தாந்தம் உருவானதையும் குறிக்கவில்லை. திரு. காந்தி எப்போதுமே மிகவும் தந்திரக்காரர்; கூர்மதி படைத்தவர். ஒரு குள்ளனுக்குள்ள எல்லா குணங்களும் அவருக்கு உண்டு. ஆனால் அவரது வேடம் வெளியே தெரியாது. ஒரு குள்ளனைப் போல் அவர் வளரவே இல்லை; சாதி சித்தாந்தத்திலிருந்து வெளிவரவே இல்லை.

சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து திரு.காந்தி சில சமயங்களில் ஒரு பொது உடைமைவாதியைப் போல் பேசு கிறார். காந்தியத்தை நன்கு ஆராய்ந்துவர்கள் அவர் சில சமயங்களில் ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும், முதலாளித்துவத்துக்கு எதிராகவும் பேசுவது கண்டு ஏமாந்து விட மாட்டார்கள். ஏனென்றால் காந்தியம் எவ்வகையிலும் ஒரு புரட்சிகரமான சித்தாந்தமல்ல, அது உள் ளடக்கத்தில் பழைமை பேணும் சித்தாந்தம்; இந்தியாவைப் பொறுத்த வரையில், தொல்பழைமைக்குத் திரும்புவோம் என்ற கோஷத்தை தனது பதாகையில் பொறித்துக் கொண்டுள்ள ஒரு பிற்போக்கு சித்தாந்தமேயாகும். இந்தியாவின் செத்துப் போன கடந்த காலத்தை உயிர்ப்பிப்பதே, அதற்குப் புத்துயிரூட்டுவதே காந்தியத்தின் குறிக்கோள்.

காந்தியம் ஒரு புதிர், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதை அது ஆதரிக்கிறது. நாட்டின் இன்றைய அரசியல் கட் டமைப்பை உடைத்தெறிய வேண்டும் என்பதே அதன் பொருள். ஆனால் அதேசமயம் பரம்பரை அடிப்படையில் ஒரு வகுப்பினர் இன்னொரு வகுப்பினர் மீது ஆதிக்கம் செலுத்தவதை அனுமதிக்கும் ஒரு சமூகக் கட்டமைப்பை முழுமைகெடாது அப்படியே பாதுகாக்க வும் அது விரும்புகிறது; அதாவது ஒரு வகுப்பு இன்னோரு வகுப்பின் மீது நிரந்தர ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதையே இது குறிக்கிறது.

இந்தப் புதிருக்கான விடைதான் என்ன? இது இந்துக்களின், வைதிக மானவர்களாயினும் சரி, வைதிகமல்லாதவர்களாயினும் சரி முழு மனதான ஆதரவை சுயராஜ்யத்துக்குப் பெறும் திரு. காந்தியின் நடை முறைத் தந்திரத்தின் ஒரு பகுதியா? கடைசியாகக் குறிப்பிட்டதுதான் திரு. காந்தியின் நடைமுறைத் தந்திரம் என்றால் காந்தியத்தை நேர்மை யானதாக, உண்மையானதாகக் கருத முடியுமா? இது ஒருபுறமிருக்க, துரதிர்ஷ்டவசமாக இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத காந்தியத்தின் இரண்டு முக்கிய அம்சங்களை இங்கு குறிப்பிடுவது அவசியம். இந்த அம்சங்கள் மார்க்சியத்தைவிட காந்தியத்தை அதிகம் விரும்பத்தக்கதாக்குமா என்பது வேறு விஷயம். ஆனால் மார்க்சியத் திலிருந்து காந்தியத்தை வேறுபடுத்திக் காட்ட இந்த அம்சங்கள் உதவுவதால் அவற்றை இங்கு பரிசீலிப்பது உகந்ததாக இருக்கும்.

காந்தியத்தின் முதலாவது விசேட அம்சம் ஏற்கெனவே தாங்கள் பெற்றிருப்பதைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புவோருக்கு அதன் சித்தாந்தம் உதவுகிறது; அதே சமயம் தாங்கள் எதைப் பெறு வதற்கு உரிமை பெற்றிருக்கிறார்களோ அதை அவர்கள் பெறாதபடி தடுக்கிறது. வேலை நிறுத்தங்கள் விஷயத்தில் காந்தியத்தின் போக்கை யும், சாதி அமைப்பு விஷயத்தில் காந்தியம் வைத்திருக்கும் பெரு மதிப்பையும், ஏழைகளின் நலன்களுக்காக செல்வந்தர்கள் அவர்களது தர்மகர்த்தாக்களாக இருக்கும் காந்திய சித்தாந்தத்தையும் ஆராய்ந்த எவரும் இவையெல்லாம் காந்தியத்தின் கொடிய விளைவுகள் என்பதை மறுக்க முடியாது. இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த சதியா அல்லது தற்செயலானதா என்பது வாதத்துக்குரிய விஷயம். ஆனால் காந்தியம் என்பது வசதி படைத்தவர்களுக்கான, உண்டு களித்து உல்லாசபுரியில் உலாவுவோருக்கான சித்தாந்தமே என்பது அசைக்க மறுக்க முடியாத உண்மை.

காந்தியத்தின் இரண்டாவது விசேட அம்சம் தங்களுக்கு நேர்ந் துள்ள அவப்பேறுகளை, இடர்ப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும்படி மக்களைத் தந்திரமாக ஏமாற்றி மயக்குவதாகும். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று அவர்களுக்கு உபதேசம் செய்யப்படுகிறது. இந்தக் கூற்றை அம்பலப்படுத்த இங்கு ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூறினால் போதுமானது.

இந்து சமய சட்டம் சூத்திரர்கள் (இந்துக்களில் நான்காவது வருணத்தினர்) சொத்து வைத்துக் கொள்வதைத் தடை செய்தது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதபடி வறுமையை வலுக் கட்டாயமாகத் திணிக்கும் சட்டமாகும் இது. இது விஷயத்தில் காந் தியம் என்ன செய்கிறது? அது இந்தத் தடையை அகற்றவில்லை. அதற்கு மாறாக, சொத்துரிமையை திரஸ்கரிக்கும் சூத்திரனது அசாத் திய தார்மிகத் துணிச்சலுக்காக அவனை ஏற்றிப் போற்றுகிறது!! திரு. காந்தியின் சொற்களையே இங்கு மேற்கொள் காட்டுவது பொருத்த மாக இருக்கும். அவர் கூறுகிறார் (வருண வியவஸ்தையிலிருந்து இந்த மேற்கோள் எடுத்தாளப்படுகிறது.):

“சமயக் கடமை என்ற முறையில் மட்டுமே மேல் சாதியினருக்கு ஊழியம் செய்யும் சூத்திரன் ஒருபோதும் சொந்தமாக சொத்து ஏதும் வைத்துக் கொள்ள மாட்டான், உண்மையில் எதையும் தனக்குச் சொந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை கூட அவனுக்கு இல்லை. அத்தகை யவன் ஆயிரம் முறை வணங்குதற்குரிய தகுதி படைத் தவன்..... தேவர்களே அவன்மீது பூமாரி பொழிவார்கள்.”

தோட்டியிடம் காந்தியம் கடைப்பிடிக்கும் போக்கை இவ்வகையில் மற்றொரு உதாரணமாகக் கூறலாம். ஒரு தோட்டியின் சந்ததி தோட்டியாகத்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று இந்துசமயச் சட்டம் விதித்திருக்கிறது. இந்து சமயக் கோட்பாடுகளின்படி, தெருப்பெருக்குதல் என்பது ஒருவரது விருப்பத்துக்குரிய விஷயமல்ல, மாறாக ஒருவர் மீது திணிக்கப்படும் விஷயமாகும் (யங் இந்தியா, 27 ஏப்ரல், 1921.) இவ்விஷயத் தில் காந்தியம் என்ன செய்கிறது? தெருப்பெருக்குவதை சமுதாயத் துக்குச் செய்யும் மிகச்சிறந்த சேவையாக மெச்சி அதனை நிரந்தரப் படுத்த காந்தியம் முயல்கிறது:! திரு. காந்தி கூறியதையே இங்கு மேற்கோள் காட்டுகிறேன்; தீண்டப்படாதோர் மாநாடில் அம் மாநாடின் தலைவர் என்ற முறையில் பேசும்போது திரு. காந்தி கூறியதாவது:

”மோட்சம் அடைய நான் விரும்பவில்லை. மறுபிறவி எடுக்க்கவும் நான் விரும்பவில்லை, எனினும் நான் மறுபிறவி எடுக்க நேர்ந்தால் திரு தீண்டப்படாதவனாகப் பிறக்கவே விரும்புகிறேன். அப்போதுதான் அவர்களது துன்ப துயரங் களில், இன்னல் இடுக்கண்களில், அவமதிப்புகளில் நான் பங்கு கொள்ள முடியும்; இதன் மூலம் இந்த இரங்கத்தக்க, வெறுக்கத்தக்க அவல நிலையிலிருந்து நானும் அவர்களும் விடுபடப் பாடுபட முடியும். எனவே, நான் பிறப்பதாக இருந் தால் ஒரு பிராமணனாகவோ, சத்திரியனாகவோ, வைசிய னாகவோ, அல்லது சூத்திரனாகவோ பிறக்க விரும்பவில்லை, மாறாக ஆதி சூத்திரனாக பிறக்க வேண்டுமென்றே பிரார்த் தனை செய்கிறேன்.

“துப்புறவுத் தொழில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனது ஆசிரமத்தில் பதினெட்டு வயது நிரம்பிய ஒரு பிரா மண இளைஞன் இருக்கிறான். ஆசிரமத்தின் தோட்டி சுத்த மாக இருக்க வேண்டுமென்பதைக் கற்றுத்தரும் பொருட்டு அவனே இந்த வேலையை செய்து வருகிறான். அந்த இளைஞன் ஒரு சீர்திருத்தவாதியல்ல. வைதிகத்திலேயே பிறந்து வளர்ந்தவன். ஆயினும் தான் ஒரு திறமையான தோட்டி யானாலொழிய தான் மேற்கொண்டுள்ள புனித சேவை பூர்த்தியடைந்ததாகாது என்பதை உணர்ந்தான்; ஆசிரமத் தின் தோட்டி தனது பணியை நன்கு செய்ய வேண்டுமென்றால் தானே அப்பணியைச் செய்து பிறருக்கு வழிகாட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

”இதேபோன்று நீங்கள் இந்து சமுதாயத்தை மாசு  துடைத்துத் துப்புரவு செய்து வருகிறீர்கள் என்பதை உணர  வேண்டும்.”

ஒரு வகுப்பினர் இன்னொரு வகுப்பினர் மீது திட்டமிட்டு வேண்டுமென்ற திணித்துள்ள கொடுமைகளை, குரூரங்களை, அவ லங்களை சாசுவதமாக்குவதற்கு காந்தியம் செய்யும் இந்த முயற்சியை விட தவறான பிரசாரத்திற்கு இதையும் விஞ்சும் வேறு மோசமான உதாரணம் எதுவும் இருக்க முடியுமா? சூத்திரர்களுக்கு மட்டுமன்றி எல்லோருக்குமே வறுமை விதியை காந்தியம் உபதேசிக்குமானால் அது குறித்து மிக மோசமாகக் கூறக்கூடியதெல்லாம் இது ஒரு தவ றான கருத்து என்பதாகத்தான் இருக்கும்.

அப்படியிருக்கும்போது ஒரு வகுப்பினர்க்கு மட்டும் இந்த விதிமுறை உகந்தது என்று ஏன் பிரசாரம் செய்ய வேண்டும்? இரக்கமற்றா கொடுமையிலும் கொடுமை யான பாரபட்சம் என்று கருதப்படக்கூடியதை ஒரு வகுப்பினர் தாமே முன்வந்து ஏற்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? ஒரு பிராமணன் தோட்டி வேலையை செய்ய நேரிட்டா லும் பிறவித் தோட்டிக்குரிய அவமதிப்புகளுக்கும் அவமானங் களுக்கும், இழிப்புகளுக்கும் பழிப்புகளுக்கும் அவன் ஆளாக வேண் டியதில்லை என்று இந்து சாஸ்திரங்களும் இந்துக் கோட்பாடுகளும் தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கும்போது, ஒரு பிராமணன் கூட துப்புறவுத் தொழிலைச் செய்ய சித்தமாக இருக்கிறான் என்று ஒரு தோட்டியிடம் சென்று கூறுவதில் என்ன அர்த்தமிருக்கிறது? இந்தியா வில் ஒருவனை அவன் செய்யும் வேலையைப் பொறுத்த தோட்டி என்று அழைப்பதில்லை. மாறாக பிறப்பின் காரணமாகவே ஒருவன் தோட்டி என்று அழைக்கப்படுகிறான்; அவன் உண்மையிலேயே தோட்டி வேலை செய்கிறானா, இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சினை.

துப்புறவுத் தொழிலில் ஈடுபடுவதற்கு மறுப்பவர்களை இணக்குவிக்கும் நோக்கத்தோடு தோட்டித் தொழில் புனிதமான, சிறந்த தொழில் என்று காந்தியம் பிரசாரம் செய்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஒரு தோட்டியிடம் சென்று அவனிடம் வீண் தற்பெருமையைக் கிளர்த்திவிட்டு, அவன்தான் அவன் மட்டும் தான் தோட்டி வேலை செய்ய வேண்டும், அது புனிதமான தொழில், அத்தொழிலைச் செய்வதற்கு அவன் வெட்கித் தலைகுனிய வேண் டியதில்லை என்றெல்லாம் எதற்காக உபதேசம் செய்ய வேண்டும்? வறுமை வேறு எவருக்கும்விட சூத்திரனுக்குத்தான் நன்மை பயக் கும், தோட்டத் தொழில் வேறு எவருக்கும் விட தீண்டப்படாதவர் களுக்குத்தான் மிகவும் உகந்தது என்று பிரசாரம் செய்வதும், இந்தக்   கடுமையான சுமைகளை வாழ்க்கையின் தன்விருப்ப குறிக்கோள் களாக ஏற்றுக் கொள்ளும்படி தீண்டப்படாதோரின் பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை நிர்ப்பந்திப்பதும் நிராதரவான வகுப்பினருக்கு எதிராக இழைக்கப்படும் மிகப் பெரிய கொடுமை யாகும், அட்டூழியமாகும்.

திரு. காந்தி ஒருவரால்தான் இத்தகைய ‘திருப்பணியை’ எத்தகைய கூச்ச நாச்சமுமின்றி, விளைவுகளைப் பற்றி அணுவளவும் கவலைப்படாமல் செய்ய முடியும். காந்தியம் போன்ற ஓர் ‘இயக்கத்தை’ நிராகரித்து வால்டேர் கூறிய சொற்களை இங்கு நினைவு கூருவது பொருத்தமாக இருக்கும். அவர் கூறினார்: “ஒரு சிலர் படும் துன்பம் மற்றவர்களுக்கு இன்பத்தைக் கொண்டு வரும் என்றும், அனைவரும் நன்மை அடைவர் என்றும் கூறுவது எவ்வளவு கொடிய நிந்தை!

சிதைந்து அழுகிக் கொண்டிருக்கும் தனது உடலிலிருந்து ஆயிரக்கணக்கான புழுக்கள் உயிர்த்தெழும் என்று தெரிந்து கொள்வது அணு அணுவாக செத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு என்ன ஆறுதலை அளிக்க முடியும்?” கொடுமைகளுக்கு ஆளாவது தங்களுக்கு வழங்குப்படும் சலுகைகள் என அக்கொடுமைகளுக்கு உள்ளானவர்களையே நம்பச் செய்வதுதான் காந்தியத்தின் உத்தி முறையாகும்.

தவறான நம்பிக்கை களிலும், தவறான பாதுகாப்பிலும் மக்கள் அமைதியும் ஆறுதலும் அடையச் செய்வதற்கு அபினி போன்று மதத்தை முழு அளவுக்குப் பயன்பத்திக் கொள்ளக்கூடிய ஓர் ‘இயம்’ இருக்குமானால் அது காந்தியமேயாகும். ஷேக்ஸ்பியரைப் பின்பற்றிப் பின்வருமாறு கூறு வது பொருந்தம்: நம்பிக்கைத் துரோகமே! சூழ்ச்சியே! உன் பெயர் தான் காந்தியமா?

 ("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 11)