periyar karunchettaithamilar feb14 2014“வாணிய வகுப்பார்” என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஒரு வகுப்பார் இந்தியாவில் எங்கும் ஒவ்வொரு பட்டணங்களிலும் தாராளமாய் இருந்து வருகிறார்கள். அவர்கள் வியாபாரத் துறையில் மிகுதியும் ஈடுபட்டு பல இடங்களில் மிக செல்வந்தர்களாகவும், பிரபலஸ்தர்களாகவும், நாகரீகம் உடையவர்களாவும் இருந்து வருகின்றார்கள். பலர் ஆங்கிலக் கல்வியில் தேர்ச்சியடைந்து உத்தியோகத்திலும், வக்கீல் தொழிலிலும் ஈடுபட்டு மிகப் பிரக்கியாதியாகவும் இருந்து வருகின்றார்கள்.

அப்படிப்பட்ட ஒரு நாகரீகமான சமூகம் இந்தியாவில் பிறந்ததினாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதாலும் இந்த 20வது நூற்றாண்டிலும் தீண்டாதவர்களாகப் பாவிக்கப்பட வேண்டியவர்களாக இருந்து வருகின்றார்கள். எப்படியெனில் திருவனந்தபுரம் ராஜிய எல்லைக்குள் அவர்கள் “அவர்ணஸ்தர்கள்” என்றே “ஈன ஜாதியார்” என்றே அரசியல் சமுதாய இயல்களில் எல்லாம் பதிவு செய்யப்பட்டு கோவில் பிரவேசமும், குளப் பிரவேசமும் தடுக்கப்பட்டு இருக்கின்றது. சென்னை மாகாணத்திலும், திருச்செந்தூரில் அவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு விட்டது. இப்போது சமீபத்தில் இந்த வாரத்திலேயே தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள வேதாரண்யம் கோவில் சம்பந்தமாய் அக்கோவிலுக்குள் வாணியர்கள் பிரவேசிக்கக் கூடாது என்று தீர்ப்பு ஆகி அப்பீலிலும் உறுதி ஆகி விட்டது. அத்தீர்ப்பில் ஜட்ஜு குறிப்பிட்டு இருக்கும் விஷயம் மிகவும் மோசமானதேயாகும். அதன் சாரமாவது, “வாணியர்கள் தங்களை வைசியர்கள் என்று சொல்லிக் கொள்வது ஆதார மற்றதாகும்”.

“அவர்கள் எள்ளைப் பிழிந்து எண்ணை எடுப்பதாகிய இழிவான தொழிலைச் செய்வதால் அவர்கள் தாழ்ந்த ஜாதி இந்துவாக கருதப் படுகிறார்கள். “சூத்திரர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை உண்டு என்றாலும் வாணியர்கள் இந்து கோவிலுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்த போதெல்லாம் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்குக் கோவில் பிரவேச உரிமை கிடையாது” என்பதாக தீர்ப்புச் செய்து அப்பீலை தள்ளி விட்டார். இந்தப்படி ஜட்ஜு தீர்ப்பு சொன்னதற்கு ஆதாரமாக தனது தீர்ப்பில் மனுதர்ம சாஸ்திரத்தை எடுத்துக்காட்டி இருக்கிறார். எனவே இந்தத் தீர்ப்பின்படி இனி ‘சூத்திரர்’கள் என்று சொல்லப்படும் மக்கள் அதாவது, பார்ப்பனர் தவிர ஏனையோர் விஷயத்திலும், கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு மனுதர்ம சாஸ்திரம் தான் ஆதாரமாய் இருந்து தீர்மானிக்கப் போகின்றது என்பதில் ஆஷேபனை இல்லை. கோவில் நிர்வாகிகளுக்கும், உள்ளூர் கலகக்காரர்களுக்கும் காசு பணம் கொடுத்து சரிசெய்து கொள்ள முடியாமல் கோர்ட்டுக்கு போகும் இன்னும் சில சமூகங்களுக்கும் இந்தக் கதிதான் நேரக்கூடும். அதாவது கீழ்ஜாதி என்று தீர்ப்புப் பெற வேண்டியதாகி விடும் என்பது ஒருபுறமிருந்தாலும் இனி வரப்போகும் ‘சுயராஜிய’த் தில் இம்மாதிரி நடவடிக்கைகளுக்கு மனுதர்ம சாஸ்திரம் கூட தேவை யில்லாமல் போய் விட்டது. மற்றென்னவெனில், இதற்குக் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் பிரஜா உரிமைத் தீர்மானமே போதுமானதாகும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.08.1931)

Pin It