சில ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் இளையராஜாவைப் பற்றி சிறு பத்திரிகைகளில் ஏதேனும் குறையாக எழுதப்பட்டிருந்தால் உடனே அதைக் கண்டித்து ஒரு கடிதம் எழுதிப்போடுகின்ற கெட்ட பழக்கத்தினை எனது கடமையாகக் கொண்டிருந்தேன். ‘புதிய கோடாங்கி’யில் பேராசிரியர் அ.மார்க்ஸ் ‘இளையராஜா சனாதனத்தை அசைத்தாரா? இசைத் தாரா?’ என ஒரு கட்டுரை எழுத, நான் அதற்கு ஒரு விரிவான மறுப்பினை எழுதியனுப்ப, அது ‘புதிய கோடாங்கி’யில் பிரசுரமாகியிருந்தது. அக்கட்டுரை வெளிவந்த சில நாட்களுக்குப் பிறகு எனக்கு ஒரு தொலைபேசி.
‘நான் கே.ஏ.குணசேகரன் பேசுகிறேன்’ எனத் தொடங்கி என்னை யாரென விசாரித்தார். சிவகங்கையிலிருந்து ஒரு எழுத்தாளர் என்பதை நம்ப முடியாத வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது. சிவகங்கையிலிருந்துகொண்டு பத்திரிகைகளுக்கு எழுதி அதுவும் பிரசுரமாகின்றது என்பதை மிகவும் ஆச்சரியகரமானதாகக் கருதிய அவரது பேச்சு எனக்கும் மிகுந்த ஆர்வம் தரக்கூடியதாக இருந்தது.
சில மாதங்களுக்குப்பிறகு ஒருநாள் அதிகாலையில், உள்புறமாகப் பூட்டியிருந்த எனது வீட்டிற்கு வெளிப் புறமிருந்து ஒரு குரல்; எந்தக் கூட்டத்திலும் இரைச்சலிலும் என்னால் அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய அந்தக் குரல், ‘‘மயில் தோழர், மயில் தோழர்’’ எனக் கேட்டது. எனக்கு மகிழ்ச்சி. கதவைத் திறக்கிறேன். வெள்ளை நிறத்தில் கேன்வாஸ் ஷ¨வும் சாக்ஸம் அரை டவுசரும் நீல நிறத்தில் டீ ஷர்ட்டும் அணிந்தவாறு நின்றிருந்தார் கே.ஏ.ஜி.
அவருக்காகத் தயாரிக்கப்பட்ட இனிப்பில்லாத தேநீரை அவர் குடித்த பிறகு இருவரும் நடந்தோம். தெருமுனை வந்ததும் ‘நான் புரபசர் தர்மராசனைப் பார்க்கப் போகிறேன், அப்புறம் புத்தகக் கடையில் வந்து சந்திக்கிறேன் தோழர்’ எனக் கூறிவிட்டு வெகுவேகமாக நடந்து சென்றுவிட்டார். அன்று இரவு சென்னைக்குச் செல்ல பேருந்து நிலையம் வந்தபோது புத்தகக் கடைக்கு வந்தார். புத்தகக் கடையினைப் பார்த்ததும் அவருக்கு ஒரே ஆச்சரியம். ‘சிவகங்கையில் இவ்வளவு பெரிய புத்தகக் கடையா? என்னால் நம்பவே முடியல தோழர்’ என்றார். சிவகங்கையில்தான் எவ்வளவு ஆச்சரியங்கள் மறைந்திருக்கின்றன!
புத்தகக் கடையின் வியாபார நிலையினை விசாரித்தார். ‘ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு என்னால் புத்தகங்கள் வாங்க முடியும், பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவையுங்கள்’, என்று சொல்லி புத்தகம் அனுப்பும் வழிமுறைகளைச் சொன்னார். பிறகு நண்பர் செல்லமணி வந்தார். எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். தேநீர் சாப்பிட்டோம். அப்போது, ‘ஒரு பதினைந்தாயிரத்திற்குப் புத்தகங்களைப் போட்டுவிடுங்கள் மயில்’ என்றார். அவர் செல்லவேண்டிய பேருந்து வந்தது. அதில் ஏறப்போகும் சமயம், ‘இருபதாயிரத்திற்கு அனுப்பி வையுங்கள்’ என்றார். பேருந்தின் சன்னல் வழியாகப் பேசிக் கொண் டிருந்தோம். பேருந்தை இயக்கினார் ஓட்டுனர். ‘தோழர் இருபத்தைந்தாயிரத்திற்கு அனுப்புங்கள்’ என்றார். நானும் சிரித்துக்கொண்டே சரியென்றேன்.
பேருந்து கிளம்பிச் சென்றுவிட்டது. நண்பர்கள் கலைந்தனர். நான் கடையினுள் போய் அமர்ந்திருந்தேன். அவரிடமிருந்து ஒரு போன், ‘தோழர் மொத்த ஒதுக்கீட்டில் மிச்ச மிருப்பது முப்பதாயிரம்தான். அதனால் முப்பதாயிரத் திற்கும் நீங்களே பார்த்து நல்ல புத்தகங்களாக அனுப்பி வைத்துவிடுங்கள்’. அவர் குரலில் மிகுந்த பரவசம் காணப்பட்டது. சில நாட்களில் புத்தகங்களை அனுப்பி வைத்தேன். பணமும் அனுப்பி வைத்தார். அன்றிலிருந்து கே.ஏ.ஜி எனக்கு நண்பரானார்.
ஒரு பாடகர் உச்சக்குரலில் பாடும்போது அவருடைய பலமோ அல்லது பலவீனமோ வெளிப் பட்டுவிடும் என்பார்கள். ‘கிருஷ்ணா..’ என, தியாகராஜ பாகவதர் பாடும்போது, இருட்டில் பளீரென வெளிச்சம் பாயும். ‘ஜக்கம்மா...’ என, சீர்காழி கோவிந்தராஜன் பாடும்போது, இழப்பின் வீர்யம் இருதயத்தில் ஊடுருவும். ‘சங்கரா...’ என எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடும்போது, புலம்பலின் கதறலை அக்குரல் காட்டும். ‘ராசாத்தீ...’ என சாஹ§ல் ஹமீது குரலெழுப்பும்போது தனிமையின் வேதனைத் துயரைக் காட்சிப்படுத்தும். ‘ஒரே நிலா...’ என விஜய் ஏசுதாஸ் பாடும்போது, இருதயத்தின் நடுக்கத்தை உணரலாம். இப்படி
யெல்லாம் அனுபவங்களைத் தருகின்ற உச்சக்குரலானது, கே.ஏ.ஜிக்கு எப்படி யிருந்தது?
நீரில் நனைத்த பஞ்சுபோல அவலத்தினையும், நிமிர்ந்தெரியும் தீச்சுடரின் நடுக்கம்போல ஆத்திரத் தினையும் அவரது குரல் உணர்த்தும். நான் உணர்ந் திருக்கிறேன்.
சிறுவயதில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்ற நிகழ்ச்சியில் என நினைக்கிறேன், அரண்மனை வாசல் மேடையிலோ, அல்லது அரண்மனைக்குள் அமைந்திருந்த மேடையிலோ கேட்ட, அந்தப் பாடலும் அதை ஒலித்த குரலும். ‘பாவாட சட்ட கிழிஞ்சு போச்சுதே’. ஒரு பத்து வயதுச் சிறுமிக்காக அமைக்கப் பட்ட பாடல்தான். ஆனால் அப்பாடல் வெளிப் படுத்திய உணர்ச்சி ஆயிரம் வயசு கொண்டது. ஏழ்மை, வறுமை, இயலாமை, அறியாமை இவற்றை மட்டுமே சக மனிதர்களுக்குக் கொடுத்த சாதி ஆதிக்கத்தின் குரூரத்தை உள்ளங்கைகளில் வைத்து ஏந்திக்காட்டும் பாடல். இந்தப் பாடலைப் போலவே அதைப் பாடிய குரலும் என் மனதில் ஆழமாகப் பதிவானது. பாடியவர் சிவகங்கைக்காரர் என்பது தெரிந்தபிறகு இன்னும் அக்குரல் நெருக்கமானது.
பிறகு பல நிகழ்ச்சிகளில் கேட்டும் பார்த்துமாய் காலங்கள் போயின. என் மீது தொடுக்கப்பட்ட விமர்சன மாகவும் நான் உணர்ந்தது, ‘எவன் மசுரப் புடுங்கப் போனீங்க?’ என்னும் கேள்வியைக் கொண்ட ‘மனுஷங்கடா’ பாடல். பின்னாளில் மக்கள் பாடகர் கோவன் பாடினாரே, ‘அரிசனென்னு பேருவைக்க யாரடா நாயே’ என. அதற்கு முன்னோடியாக அமைந்திருந்தது இப்பாடல்.
இப்போது நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். அதன் பிறகு ஏதாவது விசயம் குறித்து, எப்போதாவது தொலைபேசியில் பேசுவார். தவமாய்த் தவமிருந்து படத்தில் கே.ஏ.ஜியின் ‘ஆக்காட்டி’ பாடலை இவரது குழுவிலிருந்த ஒருவரை வைத்தே பாடவைத்து சேரன் பயன்படுத்தியிருந்த பிரச்சினை நடந்துகொண்டிருந்த நேரம். தொலைபேசியில் பேசியபோது நான் சொன்னேன், ‘சேரனைச் சும்மாவிடாதீர்கள்’. அதற்கு அவர் சிரித்துக் கொண்டார்.
அதேபோல, இளையராஜா வக்கீல் நோட்டீஸ் விட்டிருந்தபோதும் என்னிடம் பேசினார். நான் சொன்னேன், ‘விடாதீர்கள்’. அதற்குக் கே.ஏ.ஜி சொன்னார், ‘அவர் எவ்வளவு பெரிய ஆள். வேணாம் மயில். யாரோ அவரிடம் துர்போதனை செய்திருக் கிறார்கள். அவர் வருத்தமடைவதுபோல எதுவும் நாம் செய்யக்கூடாது’. பிறகு நேரில் சந்தித்தபோது, அந்தத் துர்போதனைக்காரர் ‘யார்’ எனவும் சொன்னார். என்னிடம் சொன்னதை அவர் பத்திரிகைகளில் சொல்ல வில்லை. ‘குண’சேகரன் அவருக்குப் பொருத்தமான பெயர்.
எனது மகன் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் நான் தரமணி சென்றிருந்தபோது அங்கிருந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வரச்சொன்னார். குடும்பத்துடன் போயிருந் தோம். ஒரு நாடகத்தின் ஒத்திகை இறுதிக்கட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் விரிவாகப் பேச நேரமில்லை. தேநீர் சாப்பிட்டுவிட்டு வந்தோம்.
ஒருமுறை ‘எனக்கொரு நேர்காணல் வேண்டும்’ என்றேன். ‘எதைப்பற்றி’ என்றார். ‘இசையைப் புரிந்து கொள்வது பற்றி’ என்றேன். ‘ஒருநாள் சிவகங்கை வரும்போது விரிவாகப் பேசலாம். முன்கூட்டியே கேள்விகளை அனுப்பி வைத்தாலும் நல்லது’ என்றார். சரியென்றேன். என்னால் கேள்விகளைக் குறித்துவைக்க முடிந்ததே தவிர அவருக்கு அனுப்ப முடியவில்லை.
பின்னர் ஒருமுறை, “ஓய்வுபெற்றதும் அடிக்கடி சிவகங்கை வருவேன். உங்களை வைத்து நானும் சில ‘ஐடியா’க்கள் வைத்திருக்கிறேன், சில வேலைகளைச் செய்வோம்” எனச் சொன்னார். இப்படித்தான் கவிஞர் மீராவும் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். அதுதான் நாங்கள் கடைசியாகத் தொலைபேசியில் பேசிக்கொண்டது. இது நடந்தும் ஆண்டுக்கணக்கில் ஆகிவிட்டது. அதன் பின்னர் அவர் சிவகங்கைக்கு வரவுமில்லை. அல்லது அவர் வந்திருந்த நேரத்தில் என்னைச் சந்திக்கவுமில்லை. அந்த நேர்காணலும் எடுக்கப்படவில்லை.
அவர் பணி நிறைவெய்தியவுடன் சிவகங்கைக்கு வந்திருக்கவேண்டும். தன்னை ஒரு கலைஞனாக மட்டுமே உணர்ந்து அவர் செயல்பட்டிருக்கவேண்டும். சிவகங்கைப் பகுதியிலும் ஏராளமான கலைஞர்கள் உருவாகியிருப்பர். இந்த அரசுத் துறைப் பதவியும் அதன் சுற்றுப்புறச் சூழ்நிலைகளும்தான் ஒரு கலைஞனை எவ்வளவு தூரம் மாற்றிவிடுகின்றன? மாற்றியதோடு அல்லாமல் அவரை வாட்டியும் வதைத்திருக்கின்றன.
தமிழ் சினிமாவிற்குள் நடிகராகப் புக நினைத்தது அவரது தவறான முடிவுதான். அவர் ஒரு நாடக இயக்குனர். எனவே அவர் ஒரு திரைப்படம் இயக்கியிருக்கலாம். அதை விடுத்து நடிகராக மட்டும் பங்கேற்க எண்ணியது தவறானதாகவே முடிந்தது. தங்கர் பச்சான், நாசர், கரு.பழனியப்பன் போன்றோர் தங்களுக்கு கே.ஏ.ஜியின் அருமை தெரிந்திருந்ததைக் காட்டிக் கொண்டனர். ஆனால், சங்கர்? சங்கரின் படம் கே.ஏ.ஜிக்கு பெருமை தரக்கூடியது அல்ல.
‘பறை’யை முதன்முதலாக பொது மேடையில் ஏற்றியவர்; ‘பறையிசை’ இன்று ஒருவிதமான மங்கள இசையானதாக மாறிக்கொண்டிருப்பதற்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தவர்; தலித் அரங்கியல், மற்றும் சேரிப்புறவியல் ஆகியவைகளை உருவாக்கியவர்; ...எவ்வளவோ இருக்கிறது அவரைப்பற்றிச் சொல்ல. பலர் சொல்லியுமிருக்கிறார்கள். இனியும் பலர் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
இன்று கே.ஏ.ஜி இல்லை. அவர் பாடல்களைப் பாட அவரது சகோதரர்கள், சத்தியபாலன், குருசேகர், மற்றும் மாரியம்மாள் போன்ற பலர் இருக்கின்றனர். இனியும் பலர் வருவர். கே.ஏ.ஜியின் பாடல்களுக்கான தேவை குறைந்துவிடவில்லை. அதிகரித்துத்தான் இருக்கிறது.
கே.ஏ.ஜியின் மொத்தப் பாடல்களும் எழுத்தும் தொகுக்கப்படவேண்டும். அவர் குறித்த ஒரு ஆவணப் படமும் தயாரிக்கப்படவேண்டும். அவரது சகோதரி கே.ஏ.ஜோதிராணி இதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.
வெறும் மனிதர்களை மறையவைக்கத்தான் முடியுமே தவிர, மண்ணின் கலைஞர்களை மறைய வைக்க மரணத்தால் முடியாது. கே.ஏ.ஜி இம் மண்ணிற்கான கலைஞனாக வாழ வந்தவர். அவ்வளவு எளிதில் மறைந்துவிட மாட்டார்.
நீரில் நனைத்த பஞ்சுபோல அவலத்தினையும், நிமிர்ந்தெரியும் தீச்சுடரின் நடுக்கம்போல ஆத்திரத் தினையும் அவரது குரல் உணர்த்தும். நான் உணர்ந் திருக்கிறேன்.