சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைக்கு நீண்ட வரலாறு உண்டு; எனினும் இந்த வரலாறு எல்லாக் காலங்களிலும் ஒன்றுபோல இருந்த தில்லை. பல துணைவேந்தர்கள் உருவான இத்துறையின் முகம், துறைத் தலைவர்கள் மாறும்போதெல்லாம் தன்னுடைய முகத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறது. நான் இத்துறையில் மாணவனாகச் சேரும்போது பேராசிரியர் வீ.அரசுவின் பொறுப்பில் இத்துறை இயங்கியது.

mohana boon on v arasuகிராமங்களில் இருந்து முதுகலை படிப்பிற்காகச் சென்னைக்கு வரும் மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகத்தின் தோற்றமும் அதன் நிறமும் ஒருவித அச்சத்தைத் தரும். அதற்கு நானும் விதி விலக்கல்ல. பொற்கோ துணைவேந்தரானதிற்குப் பிறகு அரசு தம் ஆய்வு மாணவர்களைக் கொண்டு தனியருவராக இத்துறையை நிர்வகித்து வந்தார்.

இக்கால கட்டங்களில்தான் இலக்கியத்துறை தன்னை முழுமையாக நவீனப்படுத்திக் கொண்டது. ‘இங்கெல்லாம் படிக்க நமக்கு இடம் கிடைக்குமா?’ என்ற அவநம்பிக்கை தொடக்கத்தில் இருந்தது. நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் தனக்கான மாணவர்களை அரசு தெரிவுசெய்தார்.

வீ.அரசுவின் ஆசிரியச் செயல்பாடுகள் குறித்து அ.மோகனா, ‘தமிழியல் ஆய்வுவெளி’ என்ற நூலொன்றை எழுதியுள்ளார். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப்புத்தகம் அரசு என்ற மனிதரின் பிம்பத்தைக் கட்டியெழுப்பவில்லை; அவரைத் துதி பாடவில்லை.

மாறாக, அவர் தம்முடைய மாணவர் களோடு இணைந்து முன்னெடுத்த பல்வேறு ஆய்வுப் பணிகளைச் சிரத்தையோடு பதிவுசெய்கிறது. தனிமனித வழிபாட்டை எப்போதும் ஏற்றுக்கொள்ளாதவர் அரசு என்பது அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும். இதனை மோகனாவும் காப்பாற்றியுள்ளார். தன்னுடைய சிரத்தையான பணிகளுக்காக ஒருபோதும் தன்னை வியந்துகொள்ளாதவர் அரசு.

விமர்சனங்களையும் பாராட்டுகளையும் சிறிய உதட்டுச்சுழிப்பில் கடந்து போகும் முதிர்ச்சியை அவர் பெற்றிருந்தார். நானும் அவருடைய மாணவன் என்கிற முறையில், அவருடைய வகுப்பறைச் செயல்பாடுகள் குறித்த என்னுடைய புரிதலை இப்புத்தகத்தின் துணையோடு இம்மனப் பதிவில் இணைத்துக்கொள்கிறேன்.

இலக்கிய மரபு, இலக்கண மரபு, புனைகதை மரபு, காப்பிய மரபு என அரசு எங்களுக்கென ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியிருந்தார். ஒவ்வொரு தாளுக்கும் கீழே இருபதுக்கும் மேற்பட்ட பார்வை நூல்களை அதில் பரிந்துரைத்திருந்தார்.

ஒரு தாளுக்கு ஒரு புத்தகம் எனப் படித்துவிட்டு வந்த எங்களுக்கு இப் பட்டியல் ஒருவித அயர்ச்சியை உண்டாக்கியது. தற்போது அந்த நூல்கள் அனைத்தும் என்னிடம் இருக்கின்றன. இந்தப் புத்தகங்களையெல்லாம் வாங்க வேண்டும் என்றோ படிக்கவேண்டும் என்றோ ஒரு நாளும் எங்களிடம் அவர் கூறியது கிடையாது. ஆனால் அவரின் ஆசிரியச் செயல்பாடுகள் அவர் நினைத்ததை யெல்லாம் எங்களைத் தன்னெழுச்சியாகச் செய்ய வைத்தன.

மரபிலக்கியத்தின்மீது ஒரு புறக்கணிப்பு இருந்ததை அவரிடம் உணரமுடிந்தது. ‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்று என்னுடைய நண்பர் ஒருவர் பண்பாட்டிற்குக் கலித்தொகையில் இருந்து வரையறை கூறினார். அந்தப் பதில் கேட்டு அரசு மெலிதாகச் சிரிப்பதை நாங்கள் பார்த்தோம். எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள்மீது அவர் வைத்த விமர்சனம்தான் அந்தச் சிரிப்பு என்பதை அடுத்துவரும் நாட்களில் நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

‘மனித இனக்குழுக்களின் ஒட்டுமொத்த உரையாடலைத்தான் ‘பண்பாடு’ என்ற சொல் குறிப்பிடுகிறது’ என்று அந்த ஒற்றைச் சொல்லுக்கு இரண்டு மணிநேரம் விளக்கம் கொடுத்தார்.

அரசு தன்னுடைய பணிக்காலத்தில் (1985-2014) பாராட்டுதல்களைவிட விமர்சனங்களைத்தாம் அதிகமாக எதிர்கொண்டிருக்கக்கூடும் என்பது என்னுடைய அவதானிப்பு. அதைத்தான் அவர் வெளிப்படையாக விரும்பினார்.

தமிழ் இலக்கியத்தின்மீது அவருக்குச் சில மாற்றுக்கருத்துக்கள் இருந்தது. தெரிந்தெடுத்த சில இலக்கிய, இலக்கணங்களைத் தொடர்ந்து வாசித்தல்; அதிலுள்ள சில பகுதிகளை மனனம் செய்தல்; அப்பிரதியிலிருந்து கேட்கப்படும் சில வினாக்களுக்கு விடை எழுதுதல்; மதிப்பெண் பெறுதல் போன்ற மரபான வகுப்பறைச் சடங்குகளுக்கு எதிராக அவரின் செயல்பாடுகள் இருந்தன.

தேர்வுத்தாளைக்கொண்டு மாணவர்களை மதிப்பிடும் முறையை முற்றாக அழித்தொழித்தார். மாணவர்கள் ஒரு பிரதியை எவ்வாறு அணுகுகிறார்கள்; அப்பிரதியின்மீது தன்னுடைய கருத்தை எவ்வாறு உருவாக்குகிறார்கள்; அதனைப் பொதுவெளியில் எவ்வாறு விவாதிக்கிறார்கள் போன்ற எதிர்வினைகளைக் கொண்டுதான் அவர் மாணவர்களை அளவிட்டார். ஒரு பிரதியின்மீது அல்லது கருத்தின்மீது அதிக விமர்சனங்களை முன்வைத்தவர்களை அரசு மறைமுகமாக ஊக்கப்படுத்தினார்.

எவற்றையும் கண்மூடித்தனமாகப் பாராட்டும் முறைமைக்கு எதிர்திசையில் இவரது நடவடிக்கைகள் இருந்தன என்பதற்கு என்னால் பல உதாரணங்களைக் கூற முடியும்.

அரசுவின் மாணவனாக நான் சேர்வதற்கு முன்பு ‘சிறுபத்திரிகை’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. தமிழ்ச் சிறுபத்திரிகைகளை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் சேகரிப்பில் இருந்த சிறுபத்திரிகைகள் பலவற்றை எங்களுக்கு வாசிக்கக் கொடுத்தார்.

பின்னர் நாங்களே ஆளுக்குக் கொஞ்சம் காசுபோட்டு பத்திரிகைகளை வாங்கி, மாற்றி மாற்றி படிக்க ஆரம்பித்தோம். சிறுபத்திரிகைகளோடு எங்கள் வாசிப்பை நிறுத்திக் கொள்ளாமல், நவீன இலக்கியம் சார்ந்த புத்தகங்களையும் வாங்கி வாசிக்கத் தொடங் கினோம். அப்போதுதான் பெண்கவிதைகளும் தலித் கவிதைகளும் எங்களுக்கு அறிமுகமாயின.

எப்போதாவது, ‘என்னென்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?’ என்று கேட்பார். அவருடைய நண்பர்கள் அவருக்குக் கொடுத்த புத்தகங்களையும் எங்கள் வாசிப்பு வட்டத்துக்குப் படிக்கக் கொடுப்பார்.

‘ஆங்கில அறிவும் தமிழ்படிக்கும் மாணவர்களுக்குக் கண்டிப்பாக வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்தினார். தினமணியையும் இண்டியன் எக்ஸ்பிரஸையும் வாங்கி வகுப்பில் படிக்கச் சொன்னார். ஒரு கட்டத்தில் வாசிப்பு வட்டத்தில் புத்தகங்களைப் பெறுவதில் போட்டி அதிகமானது. பிரச்சினை அவரது கவனத்துக்குச் சென்றது. புன்னகைத்தார்.

அரசு தன்னுடைய துறை சார்பில் ‘மேடை’ என்ற மாணவர்களுக்கான உரையாடல் அமைப்பை உருவாக்கி யிருந்தார். புதன் கிழமைகளில் இது செயல்பட்டது. மாணவர்கள் தங்களுடைய படைப்புக்களை இக் கூட்டத்தில் வாசிக்க வேண்டும். தொடர்ந்து அந்தப் படைப்பின்மீது விவாதம் நடைபெறும். தொடக்கத்தில் மட்டும் அரசு பங்கேற்றார்.

பின்பு மாணவர்களே இதனை ஒருங்கிணைத்தார்கள். எதையும் மறைந்திருந்து கண்காணிக்கும் அதிகார வளையத்தை அவர் ஒரு போதும் விரும்பியதில்லை. மாணவர்களே அனைத் தையும் முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்தது. அதுவரை நான் அறியாத பல எழுத்தாளர்கள் எனக்கு அங்குதான் அறிமுகமானார்கள். தொடக்கத்தில் ஒருவித பதற்றம் அனைவருக்கும் இருந்தாலும் பின்பு விவாதத்தைத் தாண்டிய ஒரு கொண்டாட்டத்திற்கான வெளியாக இந்த அமைப்புச் செயல்பட்டது.

முதலாம் ஆண்டு மாணவர்கள் முதல் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் வரை இதில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆய்விற்கான தேடல் இங்கிருந்துதான் தொடங்கியது.

‘திரைவெளி’ என்ற நிகழ்வையும் அரசு தம்முடைய மாணவர்களுக்காக ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில், அரிய குறும்படங்களும் ஆவணப்படங்களும் மாணவர் களின் பார்வைக்காக ஒளிபரப்பப்பட்டன. மாணவர்கள் தாங்கள் வாசிக்கும் பிரதிகளோடு உரையாடலை நிறுத்தி விடாமல், அதன் ஆசிரியர்களோடும் ஊடாட வேண்டும் என்று அரசு விரும்பினார். அதற்கான வாய்ப்புகளையும் தொடர்ந்து உருவாக்கிக் கொடுத்தார்.

கா.சிவத்தம்பியைச் சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் சந்தித்து, தொல்காப்பியப் பனுவலில் எங்களுக்குள்ள புரிதலின்மை குறித்து உரையாடினோம். திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தேநீர்க்கடையில் எங்களுக்கும் கோணங்கிக்குமான ஓர் உரையாடலை அவருடைய முனைவர்பட்ட ஆய்வு மாணவர் ஒருவர் ஒருங்கிணைத்தார். நுஃமான், மௌன குரு, சித்ரலேகா மௌனகுரு, வ.ஐ.ச.ஜெயபாலன் உள்ளிட்ட ஈழத்தைச் சார்ந்த ஆளுமைகள் அனை வரையும் மாணவர்களோடு உரையாடச் செய்தார்.

ஈழத் தமிழர்கள் குறித்த புரிதலை மாணவர்களிடம் வெளிப் படையாக விவாதித்தார். புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளை வாசிப்பதற்கென்றே ‘தமிழர் அலை இயல்’ என்ற தாளைப் பாடத்திட்டத்தில் சேர்த்தார்.

உலகம் முழுக்கப் பரவியுள்ள தமிழர்களின் கலை இலக்கியச் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல் பட்டார். வருடத்திற்கொருமுறை இந்தியா முழுக்க மாணவர்கள் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்தார். இதனைத் தம்முடைய பணிக்காலம் முழுமையும் தொடரச்செய்தார்.

தம்முடைய மாணவர்கள் அனைத் தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கூடுதலான ஆசை அரசுவுக்குண்டு. அடுத்த பத்தாண்டுகளுக்குத் தமிழ்ச்சூழலில் செய்யவேண்டிய பணிகள் குறித்த பட்டியல் அவரிடம் எப்போதும் இருக்கும். இப்பட்டியல் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.

1989இல் மாணவர்களுக்கு நவீன இலக்கி யத்தைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் ‘சிறுகதை பட்டறை’ என்னும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தமிழில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளான ஜெயகாந்தன், வண்ணநிலவன், சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன் போன்றவர்களைத் துறைக்கு அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாடலை நிகழ்த்தினார்.

சென்னையில் சிரத்தையாகச் செயல்படக்கூடிய நூலகங்களுக்கு மாணவர்கள் மாதம் ஒருமுறை செல்ல வேண்டும் என்று எங்களுக்கான கால அட்டவணையை உருவாக்கியிருந்தார். மறைமலை அடிகள் நூலகம், கன்னிமாரா நூலகம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், ஆவணக் காப்பகம், உ.வே.சா. நூலகம் என சென்னையில் உள்ள முக்கியமான நூலகங்களெல்லாம் எங்களுக்கு இக்காலத்தில் அறிமுகமாயின.

 இந்த நூலகங்கள்தாம் எங்களுக்கான போதிமரங்கள் என்பதை நாங்கள் உணர்ந்தோம். வகுப்பறையைவிட இந்த நூலகங்களில்தான் நீங்கள் அதிகமாகக் கற்றுக்கொள்ள முடியும் என்று எங்களை நூலகங்களுக்குத் தத்துக் கொடுத்து விட்டார். அரசுவின் மாணவர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒவ்வொருவரும் சிறிய அளவிலாவது ஒரு நூலகத்தை தம்முடைய வீட்டில் பராமரிப்பர். இதுதான் அவர் தம்முடைய மாணவர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்.

தமிழக பல்கலைக்கழகத் துறைகளில் அதிக அளவில் இளநிலை ஆய்வாளர்களை உருவாக்கிய பெருமையும் அரசுவுக்குண்டு. பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நடத்தும் கல்லூரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வினை (NET), முதுகலை முடிப்பதற்கு முன்பே அவருடைய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். இதையெல்லாம் அவர் மிக எளிமையாகச் செய்துகொண்டிருந்தார். இதற்காக மாணவர்களை அவர் ஒருநாளும் வருத்தியது கிடையாது.

பேராசிரியர் சி.நல்லதம்பி அவருக்குத் துணையாக இருந்தார். இது குறித்துப் பொதுவெளிகளில் பேசி, அரசு மகிழ்ச்சி அடைந்ததை நான் பலமுறை கவனித்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் இதனைத் தன்னுடைய சாதனை என்று அவர் பெருமை பேசியது கிடையாது. ‘அவர் என்னுடைய மாணவர்’ என்று பிறரிடம் அடையாளப்படுத்தும்போது அவருடைய குரலில் வழியும் குதூகலம் அலாதியானது. இதைத்தான் அவர் தன்னுடைய மாணவர்களிடம் எதிர்பார்த்தார்.

தன்னை விமர்சிக்கும் மாணவர்களைத் தனிப்பட்ட முறையில் அரசு அங்கீகரித்தார். எதைப்பற்றியும் விவாதிக்கும் வெளியை அவர் மாணவர்களிடம் உருவாக்கியிருந்தார்.

ஆசிரியர்கள்மீதும் வகுப்பறையின் மீதும் கட்டப்பட்டிருக்கும் புனிதங்களை அவர் ஒரு போதும் தன்னுடைய துறையில் அனுமதித்ததில்லை. அவரைப் பார்க்கக்கூடிய எந்த இடத்திலும் நமக்குத் தேவையான அவரின் கையெழுத்தைப் பெறமுடியும்.

ஆசிரியர் குறித்த போலியான மதிப்பீடுகளையும் அதிகார வட்டத்தையும் தகர்ப்பதில் ஒரு கலகக்காரனாக அவருடைய செயல்பாடுகள் அமைந்திருந்தன. பொது வாகக் கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் தனித் தனியாகத்தான் அமர்ந்திருப்பார்கள். அப்படித்தான் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். இதனை அடியோடு தன்னுடைய துறையில் மாற்றினார்.

யாரும் யாருடைய பக்கத்திலும் அமர்ந்துகொள்ளும் சுதந்திரத்தை வழங்கினார். அதேசமயத்தில் வகுப்பில் தனித்தனிக் குழுவாக மாணவர்கள் பிரிந்திருப்பதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. வகுப்பில் மாணவர் ஒருவர் கால்மீது கால்போட்டு அமர்வதை வரவேற்றார். குருகுலக் கல்வியின் எச்சங்கள், இன்றைய நவீனக் கல்வியில் தொடர்வதைத் தன்னுடைய சின்னச்சின்ன செயல்பாடுகளால் மாற்ற முயன்றார்.

சிவ.செந்தில்நாதனைப் பதிப்பாளராகக்கொண்டு அரசு வெளியிட்ட ‘கங்குவரிசை’ சிறுவெளியீடு தமிழில் நல்லதொரு முயற்சியாக அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ‘மாற்றுவரிசை’ புத்தகங்கள் அவருடைய மாணவர்கள் பலரைப் புத்தக ஆசிரியர்களாகத் தகுதியேற்றம் செய்தன.

ஒவ்வொரு வருடமும் ஒரு பொருண்மையைத் தெரிவுசெய்து மாணவர்களே கருத்தரங்கங்களை ஒருங்கிணைக்கச் செய்தார். ‘மாற்றுவெளி’ என்ற ஆய்விதழ் அரசுவின் ஆகச்சிறந்ததொரு முயற்சி என்று உறுதியாகச் சொல்லலாம். அவருடைய மாணவர்கள் பலர் இவ்விதழின் ஆசிரியர் குழுவில் இருந்தனர்; பலர் ஆய்வுக்கட்டுரைகளை எழுதினர்.

தம்முடைய மாணவர்கள் தொடர்ந்து ஆய்வுப்புலத்தில் செயல்படு வதற்கான பல்வேறு வெளிகளை அரசு தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருந்தார். மாணவர்கள் பலரின் புத்தக முயற்சிகளுக்குத் தம் நண்பர்களின் பதிப்பகங் களைப் பயன்படுத்திக் கொண்டார். அச்சு ஊடகத்தின் எல்லா வடிவங்களையும் மாணவர்களைப் பயன்படுத்தச் செய்தார்.

தம்முடைய மாணவர்களுக்கு இயல்பாக இருக்கும் திறன்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்வதில் தனித்துவம் மிக்கவராக அரசு இருந்தார். 1986-87இல் ‘பல்கலை அரங்கம்’ என்ற நாடகக் குழுவினைத் தம்முடைய மாணவர்களைக் கொண்டே உருவாக்கினார்.

தமக்கிருக்கும் நாடக வட்டத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு நாடகப் பயிற்சியளித்தார். மேலும் தன்னுடைய துணைவியார் அ.மங்கை முன்னெடுத்து நடத்திய ‘மௌனக்குறம்’ சார்பில் ‘குறிஞ்சிப்பாட்டு’, ‘தீனிப்போர்’, ‘ஒளவை’, ‘மணி மேகலை’ போன்ற நாடகங்களில் தம்முடைய மாணவர்களை நடிக்கச் செய்தார். அரங்கச் செயல்பாடுகளுக்காக ஈழத் தமிழர்களின் உதவியோடு அவர் நடத்திய ‘கட்டியம்’ இதழின் செயல்பாடுகள் பற்றி அ.மோகனா இந்நூலில் விரிவாக எழுதியுள்ளார். தமிழ் நாடகத்தில் நிறைய ஆய்வுகளைச் செய்யவேண்டும் என்ற ஆசை அரசுவுக்குண்டு.

கையெழுத்துப் பிரதியாகவுள்ள நாடகப்பிரதிகள் அனைத்தையும் தேடித்தேடி அச்சுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஆர்வமும் அவரை இன்று வரை விடவில்லை. அதன் தொடக்கச் செயல்பாடாகச் சங்கரதாஸ் சுவாமிகளின் பதினெட்டு நாடகங்களை ஒரே தொகுப்பாகப் பதிப்பித்தார்.

அரசு ஒரு பிரதியை அணுகும் தன்மை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இலக்கியத்தின் செய்யுளுக்குப் பொருள் சொல்லும் வாசிப்பு முறையை முற்றாக மறுதலித்தார்.

ஒரு செய்யுளுக்குப் பின்பு செயல்படும் அரசியலைப் புரிந்துகொள்ள முயற்சிக்கச் சொன்னார். தமிழ்த்துரோகி என்று அனைவராலும் ‘அன்போடு’ அழைக்கப்பட்ட வையாபுரிப்பிள்ளையை முழுமையாகப் படிக்கச் சொன்னார்; வைதீக சமயத்தை உயர்த்திப் பிடிக்கும் பரிமேலழகரின் உரையைப் புறக்கணிக்கச் சொன்னார்; சிலப்பதிகாரத்தை அனைவரும் கொண்டாடும்போது, மணிமேகலையின் சிறப்புக்களை எடுத்துக்கூறி அதன் வாசிப்பை வேறொரு தளத்திற்குக் கொண்டுசெல்வார்.

தமிழில் முதல் சிறுகதையை எழுதியவர் வ.வே.சு.ஐயர் என்று தொடர்ந்து இலக்கிய வரலாறுகள் கூறிவருகின்றன. ஆனால், ‘தமிழ்ச்சூழலில் சிறுகதை வடிவத்தைக் கண்டெடுத்தவரும் அதனை இதழியல் மரபு சார்ந்து நிலைபேறு கொள்ளச் செய்த வரும் புதுமைப்பித்தன்தான். அதற்குமுன் தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகளாகக் கூறப்படுபவை அனைத்தும் சமய மரபு சார்ந்த - நாட்டார் மரபு சார்ந்த போதனைக் கூறுகளைக்கொண்ட கதைத்தன்மைகளை உள்வாங்கியவை.

நவீன மரபை அவை உள்வாங்கவில்லை’ என்று (மாற்றுவெளி:11) எழுதியுள்ளார். இதுபோன்று மாற்றுச் சிந்தனைகளின் விளைநிலமாக அரசு இருந்தார் என்பது தான் அவரைப்பற்றிய என்னுடைய புரிதல். இதற்காகக் கல்விப்புலம் சார்ந்தும் நிர்வாகப்புலம் சார்ந்தும் மறை முகமாக நிறைய நெருக்கடிகளை அவர் எதிர் கொண்டார்.

அ.மோகனா எழுதியிருக்கும் இந்நூல் பேராசிரியர் வீ.அரசு என்கிற ஓர் ஆளுமையைப் பற்றி மட்டும் பேச வில்லை. பதிப்புத்துறையில் அவர் முன்னெடுத்த பல்வேறு ஆளுமைகளின் செயல்பாடுகளையும் விவாதிக்கிறது. குறிப்பாக, தமிழ்ச்சூழலில் பெரும்பாலும் அறியப்படாத ஆளுமைகளின் ஆய்வுக்கு அரசு முன்னுரிமை கொடுத்தார்.

வ.உ.சிதம்பரம்பிள்ளை ஆங்கிலேயருக்கு எதிராகக் கப்பல் ஓட்டியவர் என்ற படிமம்தான் பொதுப்புத்தியில் படிந்து போயுள்ளது. இறுதிக்காலத்தில் அவருக்கிருந்த இலக்கிய ஈடுபாட்டை ஆய்வாளர்கள் தொடக்கத்தில் முன்னெடுக்கவில்லை. அரசு, வ.உ.சி.யால் உருவம்பெற்ற பதிமூன்று நூல்களைத் தொகுத்துப் பதிப்பித்தார். இத்தொகுப்பு வ.உ.சி.யைச் சிறந்த பதிப்பாளராகவும் உரையாசிரிய ராகவும் முன்னிலைப்படுத்தியது.

ஜீவாவின் தொகுப்பு, அவரைக் கடித இலக்கியத்தின் முன்னோடி என்று நிறுவுகிறது. பண்டைத் தமிழர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்களைச் சேகரிப்பதில் ஆர்வமுடையவராகச் சாத்தன்குளம் அ.இராகவன் இருந்துள்ளார். அவர் குறித்த சிரத்தையான ஆய்வைத் தன் மாணவி ஒருவர் மூலம் நிகழ்த்தச் செய்தார்.

நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தனின் இதழ்வழி பதிப்பு அரசுவின் புதிய முயற்சி. ஒவ்வொரு இதழுக்கும் தனித்தனி அரசியல் உண்டு. புதுமைப்பித்தன் என்ற கதையாசிரியர், ஒவ்வொரு இதழுக்கும் எழுதிய கதைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வெளிப்படும் இதழியல் சார்ந்த அரசியல் இதன்மூலம் துலக்கம் பெற்றது.

நவீன இலக்கியத்தில் மற்றொரு புதிய முயற்சியை அரசு முன்னெடுத்தார். ‘இருபதாம் நூற்றாண்டின் சிறுகதைகள் நூறு’ என்ற சிறுகதைத் தொகுப்பை அடையாளம் பதிப்பகத்தின் மூலமாகக் கொண்டு வந்தார். இதுவரை அதிகமும் அறியப்படாத சிறுகதை ஆசிரியர்களுக்கு இத்தொகுப்பில் முக்கியத்துவம் கொடுத்தார்.

இடதுசாரிகள், பெண்கள், தலித்துகளின் சிறுகதை முயற்சிகள் இத்தொகுப்பின் மூலம் ஆவணப் படுத்தப்பட்டன. அனைவராலும் அறியப்பட்ட சிறு கதையாசிரியர்களின் கதைகள் இதில் இடம்பெற வில்லை. இதனை ஒரு கலகச்செயல்பாடாகவே அரசு செய்தார். தொகுப்புகள் எப்போதும் சார்புத்தன்மை கொண்டவைதாம்; இது ஒடுக்கப்பட்டவர்கள் சார்பான சார்பு என்று இத்தொகுப்பின்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை மிக எளிமையாகக் கடந்து போய் விட்டார்.

தற்போதுள்ள பல்கலைக்கழகத் தமிழாசிரியர்களின் செயல்பாடுகள் குறித்து, அவநம்பிக்கை கொண்டவர் சந்தியா நடராசன். நிறுவனம் சாராத தனிமனிதர்கள் முன்னெடுத்த தமிழாய்வுகளைக்கூட இன்றுள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் செய்யவில்லை என்பதுதான் அவருடைய வெளிப்படையான விமர்சனம். அவர் பதிப்பிக்கும் புத்தகங்களுக்குப் பதிப்புரைகூட அவர் எழுதுவதில்லை. ஆனால் இந்நூலுக்கு அரசு குறித்து அவர் எழுதியுள்ள அறிமுகவுரை, மிகச் சிறந்தொரு சாளரம்.

‘தமிழியல் ஆய்வுவெளி’ நூலின் பிற்சேர்க்கையில் இடம்பெற்றுள்ள அரசுவின் நேர்காணல் மிக முக்கிய மான பதிவு. மேலும் விவாதிக்கப்படவேண்டிய பல தொடக்கங்கள் இந்நேர்காணலில் இடம்பெற்றுள்ளன. வெளிப்படையான அவரது விமர்சனம்தான் அவரின் அடையாளம். அ.மோகனாவின் உழைப்பு இந்நூல் முழுக்கப் பரவிக்கிடக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் அரசுவின் ஆக்கபூர்வமானச் செயல்பாடுகளை இந்நூல் வழியாகத்தான் நான் ஒரு தொகுப்பாகக் கண்டடைந்தேன். அரசுவின் கல்விப்புலம் மற்றும் ஆய்வுப்புலம் சார்ந்த பணிகள் குறித்து, இதைவிடச் சிறந்ததொரு ஆவணத்தை வேறொருவரால் உருவாக்கிவிட முடியாது என்பது என்னுடைய அவதானிப்பு.

தமிழியல் ஆய்வுவெளி

வீ.அரசு ஆசிரியம் - ஆய்வு

அ.மோகனா

வெளியீடு: சந்தியா பதிப்பகம்,

புதிய எண்.77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 600 083

ரூ.240/-

Pin It