நான் வானம் வெறித்து நின்ற ஒரு நொடியில் இதை எழுதத் தூண்டியது, நான் வானம் வெறிக்கத் துவங்கும் முன் படித்த நகுலனின் கவிதைகளாகத்தான் இருக்க வேண்டும். நகுலனின் கவிதைகளைப் படிப்பது போதி இல்லாமல் தியானிப்பது. அது காலம் நிறுத்தி வேடிக்கை காட்டும் மாய வித்தைகளின் மொத்தம்.
பித்த நிலையே புத்த நிலை. புத்த நிலையே பித்த நிலை. கண்ணுக்குத் தெரியாத யுத்த நிலையாய் முன் வரிகள் திறக்கும் பறவையின் அலகாய் வந்து போகும் இடைவெளிக்குள் இல்லவே இல்லை என் வெளி...
மெல்லிசான சதுரக் கல்லை நீரோடு வீச.. அது நீரில் பட்டும் படாமல், பட்டும் படாமல்... போய் கடைசியாக பட்டும் படாமலே, போய் விடுவது ஒரு விதமான சிதறல். அப்படி, சிதற சிதறத் தான் அது வானம் போல நகுலனின் கவிதைகள் உதிர உதிரப் பூக்களாகும் புது தத்துவம். இன்று வரை வெளி, வளைந்து கொண்டே இருப்பதாகவும்... பெருவெடிப்பின் சத்தம் போய்க் கொண்டே இருப்பதாகவும்... அறிவியல் கூறுகிறது..... நகுலனின் அறிவில் யாருமற்ற ஒரு வெளி.... வரியெங்கும் வியாபித்திருப்பதை உற்று நோக்காமலே உணர முடியும்...
சிலரின் கவிதைகளைப் படிக்கப் படிக்க எழுதத் தோன்றும்... நகுலனின் கவிதைகளைப் படிக்கப் படிக்க எழுதி விட்டதாகவே தோன்றும்.
அவரின் ஒரு கவிதை இப்படி....
"யாருமற்ற இடத்தில்
என்ன நடக்கிறது
எல்லாம்...."
யாருமே இல்லாமல் போனாலும் அந்த இடத்தில் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது... என்கிறார். அதை உணர நகுலன் தேவையே இல்லை என்பது போல... அவரின் படைப்புகளில் உள் சென்று வெளியே வருவது கொஞ்சம் சிரமம்தான். சிரமம் என்றால் நல்ல இலக்கியங்களை, எப்படி கண்டுணர முடியும். முத்தெடுக்க வேண்டுமானால் மூச்சடைக்கித்தான் ஆக வேண்டும். உள் சார்ந்த மரபுகளின் நீட்சியென நவீனம் தலை விரித்தலில் நகம் போல மெல்ல மனம் கீறும் பொருளோடு இருக்கிறது என்பதாக நான் உணரப் படுகிறேன். உணராத பொருள் ஒன்றும் இருப்பதை உணராமல் இல்லை.. உணர உணரத்தான் உணர முடியும்.. உணருதலைப் போல, உணர்ந்து கொண்டே இருப்பதைப் போல.. உணருதல் ஒன்றும் அத்தனை சுலபமான கஷ்டமில்லை... உணர்ந்து படியுங்கள். உணர்ந்து கொள்ள முடியும்.
நகுலனின் வட்டம்.. மிகச் சிறியது.
ஆனால் அதில் ஒரு ஆச்சரியம் இருக்கிறது. பார்க்கப் பார்க்க... அது இன்னும் இன்னும் சிறியதாகி ஒரு புள்ளியாகிக் கொண்டே போவதில்தான் கிறுகிறுத்துப் போகும் சுற்றத்தைக் காண்கிறேன். கனா காண்பது போல.... கனாவை... தூக்கத்தில் இல்லாமல் காண்பது அத்தனை சுலபமல்ல. அது தீவிரமான கலையின் குருதி கசிதல் போல...நகுலனின் இருண்மை பேராவல் கொண்டவை. படிப்பவர் சிறிது கவனம் சிதறினாலும் அது கம்பியில் இருந்து தவறி விட்ட சிறு பிஞ்சின் பாதமாகி விடும்.
"இருப்பதற்கு என்று தான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்..."
ஜனனத்தின் மரணத்தின் இடைவெளியை எத்தனை ஆழமாய் மூன்று வரிகளில் சொல்கிறார் பாருங்கள். நிஜம் சுடத்தான் செய்யும். விட்டுச் சென்ற காதலியின் கண்களைப் போல...நான் சிறுவயதில் கொய்யா மரம் ஏறுவேன்... இறங்குவேன்... அவ்ளோ உயரத்தில் ஏறி இறங்குதல் எனக்கு ஒரு விஷயமாகவே தெரியாது. விழுந்தால் கண்டிப்பாக கை கால் உடையும் உயரம் தான். ஒரு நாள் ஏறி உச்சியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது கீழே நின்று என்னைப் பார்த்த என் மாமா... "குட்டி பாத்துடா...... விழுந்துடாத" என்றார். அதன் பிறகு என்னால் இறங்க முடியவில்லை. ஏணி வைத்து இறக்கினார்கள். அப்படித் தான்... நகுலனின் கவிதைகளை அப்படியே படித்து விட்டு வந்து விட்டால்... உங்களுக்குள் போக வேண்டியது எல்லாம் போய் விடும். நகுலன் என்று நினைத்துப் படித்தால் ஒரு வெளிக்குள் மாட்டிக் கொள்வீர்கள். அவர் அப்படித்தான்....மாட்டிக் கொண்டார். ஆனால் அவர் மாட்டிக் கொண்ட வெளியில் கொய்யா மரங்களின் வேர்களை அவரே சமைத்தார் என்பது தான் ஏணிகளற்ற படிப்பு.
அவர் படைப்புகளில் எல்லாம் தொடர்ந்து "சுசீலா" என்றொரு கதாபாத்திரம் வந்து கொண்டே இருந்தது. அது அப்படித்தான்..... பாரதிக்கு கண்ணம்மா கற்பனையாகத்தான் இருக்க வேண்டுமா என்ன...?
முணுக் முணுக்கென்று
வந்த கோபம் காட்ட
முன்னெல்லாம் இருந்த எதிர்வெளி
இன்றில்லை...
என்னிடமே காட்டிக்
கொள்கிறேன்
கண்ணாடி கவிழ்ந்து
கிடக்கட்டும் என்பது
கோபத்தின் முந்தைய
தயாரிப்பு...
என்பதாக என் வெளி விரிவதைக் காண முடிகிறது. நானும் கூட இல்லாமல் போக ஆசைப்படும் ஒரு இருப்பவனே. எனது தேடல்களில் நான் நகுலனை ஒரு ஆழ்கடலெனவே நினைக்கிறேன். எனது மயக்கங்கள் எல்லாம் முயங்கித் தவிக்கும் பாலைவனத்தில் நகுலனின் வரிகளாகி சிதறுவதில் புது வெள்ளை மணல்துளிகள்.
"வெளியில் விழுந்து விட்டேன்...
யாவும் கண்டு
கொள்ளாமல்..
பின் வெளியே செல்வதேயில்லை...."
என்ற நகுலனின் கவிதை சொல்வது, மீண்டும் மீண்டும் மீனாகிக் கிடப்பது தான் ஆழ்கடலின் தத்துவம். பசி போக்கும் தத்துவங்களும் உண்டு.
உனக்குள் மகானும் பாவியும் ஒருங்கே இருக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ளும் துணிவு உனக்கு வேண்டும் என்பது ஓஷோவின் வார்த்தைகள். அங்கிருந்து தான் விரிகிறது எனக்கான தாஸ்தாவெஸ்கியின் எழுத்துக்கள்.
இங்கு எடுக்கப்பட்ட பெரும்பாலான முக்கோண காதல் கதைகளுக்கு தாஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகளே மூலம்.
அதைத் தழுவி தமிழில் "இயற்கை" என்ற படம் கூட வந்தது. அந்தக் கதையில் இறுதியில் தான் காதலித்த இருவருக்கும் இடையே அந்த பெண் கதாபாத்திரம் தவிக்கும் தவிப்பில்.... படத்தை விட படிக்கையில் நான் கலங்கிப் போனேன். கலங்குதல் இல்லாத காதல் தெளிவதே இல்லை. ஆனால் ஒருபோதும் அந்தப் பெண்ணை துரோகி என்றோ, ஏமாற்றுக்காரி என்றோ யாருமே நினைக்காதபடி எழுதி இருப்பார். அது தான் தாஸ்தாவெஸ்கி. இந்தக் கதை எழுதி நூறு வருடங்களுக்கு மேல் இருக்கும் என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்கது.
தாஸ்தாவெஸ்கியிடம் பெற்ற தரிசனத்தை தாம் வேறு யாரிடத்திலிருந்தும் பெற முடியவில்லை என்று கூறிய ஐன்ஸ்டீன்-னை திகைக்காமல் பார்க்க முடியாது.
E=mc2 படைத்த பிரம்மாவின் சொல் என்னை மிரட்சியடைய வைக்கிறது. இதயத்தின் ஆழம் வரை சென்று இதயத்தை திருப்பிப் போட்டு அங்கிருக்கும் நரம்புகளின் வழியே ஊடுருவி... உங்களை வேறு சிந்தனைக்கு அழைத்து செல்லும் எழுத்துலகின் பிதாமகன்களில் ஒருவர் என்றால் அது மிகை இல்லை. பலபோது தன்னை ஒரு சாத்தானாகப் பாவிக்கும் தாஸ்தாவெஸ்கியின் சாயலில் நீங்கள் கடவுளைக் கடந்து கொண்டே தான் இருப்பீர்கள். கடைந்து கொண்டும் இருப்பீர்கள். புத்தகம் திறக்கும் உலகில் திறக்காத ஒரு பக்கமாய் எல்லா புத்தகங்களும் இருப்பது தான் அடிக்கோடிட்டப்பட்ட வரிகள். எழுதாமலே தீர்ந்து விடுவதை எழுதியே காப்பாற்றிக் கொண்டவர் தாஸ்தாவெஸ்கி.
"கரமசோவ் பிரதர்ஸ்" படித்திருக்கிறீர்களா.....?
அதில் அற்புதங்கள் செய்யும் மாய வித்தைகளை எழுத்துக்களால் நிரப்பி இருப்பார். அவரின் பக்கங்கள் சிலுவைகளால் நிரம்பி தொங்குகின்றன. இடது பக்கமும் வலது பக்கமும் இருக்கும் திருடர்கள்தான் நிஜக் கடவுள்கள் போல தோன்றும் திறப்புகளின் சாவி தாஸ்தாவெஸ்கியிடமே இருக்கிறது. இலக்கை அடைவது வாழ்க்கை அல்ல.. அதை நோக்கிய பயணமே வாழ்க்கை என்று கூறிய புத்தனை நடுங்கிக் கொண்டே பார்க்கையில், தாஸ்தாவெஸ்கியின் கைகள் நம் தோள் மீது நெகிழ்வோடு விழுவது தான் அவரின் படைப்புகளின் வெளிச்சம். சமகாலத்தில் லியோ டால்ஸ்டாய் வெளிச்சத்தின் குறியீடாகவும், தாஸ்தாவெஸ்கி இருண்மையின் குறியீடாகவும் கருதுவோர்கள் உண்டு. நான் மாற்றி மாற்றி மாற்றி மாற்றிக் கொண்டே இருக்கிறேன். எனக்கும் கூட இருண்மையின் பக்கமே அவர் இருப்பது தான் சரி என்றே படுகிறது. அவரின் கைகள் நடுங்கிக் கொண்டே இருக்கின்றன. அத்தனை துயரங்களில் மீண்ட ஒரு எல்லையே இல்லாத சிறகை விரிக்கும் படைப்பாளியை படிக்காமல் நீங்கள் உலக இலக்கியங்களை முழுமைக்கு கொண்டு வரவே முடியாது.
"தெரிஞ்சோ தெரியாமலோ நீ கடவுள் ஆகிட்ட... உன்ன ஒன்னும் பண்ண மாட்டோம்.. பேசாம கடவுளாவே இரு.. போதும்.. மத்தத நாங்க பாத்துக்கறோம்" என்று கூறும் மத போதகர்களின் குரலில் முதலாளித்துவத்தை வைத்த தாஸ்தாவெஸ்கி எப்போதுமே சம உரிமைக்கான ரகசியம் உடைக்கும் ஒரு தத்துவத்தை நோக்கியே பயணப்பட்டுக் கிடந்தார்....என்பதை உணர்ந்த தருணங்களில் நான் தாடி தடவி மீசை முறுக்கிக் கொண்டேன். மனிதன் ஒரு பரம ரகசியம் என்ற தாஸ்தாவெஸ்கியும் எனக்கு மிகப் பெரிய ரகசியமாகவே தெரிகிறார்.
சாத்தானை கூட மன்னிக்கும் கடவுளாக இருப்பதுதான் உன்னதத்தின் உண்மை. தீமைக்கும் நன்மை செய் என்பது போல அது அத்தனை சுலபம் அல்ல. சுலபமான எதுவும் அதோடு நின்று விடுவதில்லை என்பதற்கு உதாரணம் தாஸ்தாவெஸ்கியின் படைப்புகள்.
ஒரு இடத்தில் கூறுகிறார்....
"கொலை செயல் பயங்கரமானது.... ஆனால் அதை விட பயங்கரமானது அது பயங்கரமானது என்று தோன்றுவதில்லை என்பது தான்...."
இது எத்தனை உண்மை... நாம் எத்தனை பயங்கரங்களைக் கண்டும் காணாமலும் கடந்து போகிறோம்.. அது மிகப் பெரிய ஆபத்தின் குறியீடாகவே தான் இருக்கிறது. நீங்கள் நீங்கள் அற்ற ஒன்றாக மாறும் முதல் படி நிலை அது என்று கூறும் தாஸ்தாவெஸ்கி மிகப் பெரிய காதலன்...(ஆன்னா கிரிகொரியெவ்னா )
உளவியலின் மறுபக்கம் கண்ட தாஸ்தாவெஸ்கி ஒரு உளவியல் குறியீடு...எப்போதுமே அடி மட்ட மனிதனின் பிரதிபலிப்பாகவே தாஸ்தாவெஸ்கி இருந்திருக்கிறார்.. அவரின் படைப்புகளில் நீங்கள் காண முடியாத தோற்றங்களே இருக்க முடியாது.. உங்கள் வாழ்நாளுக்கான அத்தனை தேவைகளும் அவரின் வரிகளாக விரிந்து கிடக்கிறது. டால்ஸ்டாய் மரணப்படுக்கையில் இருக்கையில் அவர் தலைமேட்டில் தாஸ்தாவெஸ்கியின் "கரமசோவ் பிரதர்ஸ்" புத்தகம் தான் இருந்தது. அது தான் தாஸ்தாவெஸ்கி.
பாதைகளில் பயணிக்கும் பாதங்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை. பாதைகளற்ற முற்களின் கூர் முனைகள் பற்றி.. என்பதாக எனது தேடல் நகுலனிடமும் தாஸ்தாவெஸ்கியிடமும்... இரு வேறு கண்களாக இருப்பினும் ஒரே பார்வைக்குள் யுகங்கள் தாண்டி துடிக்கும் மனநிலையோடு... யோசித்துக் கொண்டே இந்த இரவைக் கடக்கிறேன்.
கடப்பதும் கடக்காததும்.. வரிகள் தாண்டிய நிதர்சனம்... உண்மைக்கு அப்பாற்பட்ட ஒரு பொய் இருக்கிறது. அதுவே இங்கு எல்லாமாக இருக்கிறது, உண்மையாகவும் கூட...!
- கவிஜி