அமைப்பியம் என்பது ‘ஒரு சமூகத்தின் மனம் சார்ந்த சிந்தனை முறையை விளங்கிக் கொள்வதற்கும் கருத்து நிலையின் புலப்பாடுகள் சார்ந்து இயங்கும் அமைப்பு முறையை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படும் ஓர் சிறந்த அணுகுமுறை’ என்று இந்நூலுக்கு கருத்துரை வழங்கிய பக்தவத்சல பாரதி குறிப்பிடுகின்றார். இந்நூலினது நோக்கம் அமைப்பியல் கோட்பாட்டின் ஒரு பகுதியாகிய தொடர்பாட்டு அணுகுமுறையை விரிவாக நாட்டார் வழக்காற்று வகைமைகளில் பொருத்தி ஆராய்வதே. மேலும் இந்நூலானது அமைப்பியல் கோட்பாட்டில் தொடர்பாட்டு அணுகுமுறை, தமிழ் மூடக்கதைகளின் அமைப்பு, பழமரபுக் கதைகளின் அமைப்பு, நாட்டார் கதைகளின் அமைப்பியல் சமன்பாடுகள் என்ற நான்கு பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.

1. அமைப்பியல் கோட்பாடு (தொடர்பாட்டு அணுகுமுறை)

இப்பகுதிக்கு Fossils அமைப்பு வெளியிட்ட நாட்டுப்புறக் கோட்பாட்டு ஆய்வுகள் என்ற நூலிற்காக தே.லூர்து அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட நாட்டார் வழக்காற்றியல் தொகுதி-1இல் இடம்பெற்றுள்ள கட்டுரையை ஆசிரியரின் அனுமதியோடு விரிவாக்கம் செய்து தேவையான இடங்களில் தமிழ்ச் சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார் நூலாசிரியர். அத்தோடு ஆலன் டண்டிஸ் அமைப்பியல் மாதிரி மூலங்களிலிருந்தும் கருத்துக்கள் எடுத்தாளப் பெற்றுள்ளன.

stepen book20ஆம் நூற்றாண்டில் நாட்டார் வழக்காற்றியல் துறையில் அறிவியல் அடிப்படையிலான சிந்தனை வளர அடிப்படைக் காரணமாக இருந்த அமைப்பியல் கோட்பாட்டினைக் குறித்து அறிமுகம் செய்கிறது இப்பகுதி. குறிப்பாக விளாதிமிர் பிராப், ஆலன் டண்டிஸ் ஆகியவர்களின் அமைப்பியல் மாதிரி பற்றிப் பேசுகிறது.

முதலில் ருஷ்யாவில் தோற்றம் பெற்ற இவ்வமைப்பியல் கோட்பாட்டு அணுகுமுறை பிரான்சுக்கும் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த அமைப்பியல் கோட்பாடு உருப்பெறுவதற்கு பெர்டின்ட் டி. சசூர், ரோமன் யாக்கப்சன், விளாடிமிர் பிராப், டெல்ஹெம்ஸ் கென்னத் பைக், லெவிஸ்ட்ராஸ் ஆகியோரின் கருத்துக்களும் ஆய்வுகளும் பெரும் பங்காற்றியுள்ளன. விளாடிமிர் பிராப்பின் நாட்டார் கதைகளின் உள்ளமைப்பு (1928) என்ற ஆய்வு நூல் வெளிவரும் காலம் வரை நாட்டார் வழக்காறுகளை கதைக் கூறு (வெசலாவ்ஸ்கி- Motif), கதை வகை (Tale type) எனப் பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கும் அணுவியல் போக்கே (Atomistic) சிறப்புற்று இருந்துள்ளது. பின்னர் முழுமையில் அக்கறை காட்டும் அமைப்பியலின் அறிமுகத்திற்குப் பிறகு அப்போக்கு வலுவிழந்துள்ளது.

பொதுவாக அமைப்பியல் இருவகையான அணுகு முறையைப் பின்பற்றுகிறது. 1. ருஷ்ய அறிஞர் பிராப்பின் தொடர்பாட்டு அணுகுமுறை, 2. பிரெஞ்சு அறிஞர் லெவிஸ்ராசின் வாய்பாட்டு அணுகுமுறை.

தொடர்பாட்டு ஆய்வுமுறை:

உள்ளமைப்பு (Morphology) குறித்த கருத்துருவங் களுக்கு தனிப்பெரும் முதல் நூலாக விளங்கிய நூல் விளாடிமிர் பிராப்பின் நாட்டார் கதைகளின் உள்ளமைப்பு (1928) என்ற நூலாகும். இந்நூல் வெளிவந்து 30 வருடங்களுக்குப் பிறகே அமெரிக்காவில் ஆங்கிலத்தில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடும் ஆசிரியர் அறிவுத்துறையில் இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்நூல் பிராப்பிற்கு சிறந்த நுழைவாயிலை ஏற்படுத்தித் தரவில்லை என்கிறார். இதற்கு அரசியல் அடிப்படையிலான இரு காரணங்கள் இருந்துள்ளன என்று ஆசிரியர் சுட்டிக் காட்டும் காரணங்களாவன; ஒன்று பிராப் ரஷிய வடிவியல் சிந்தனையாளருள் ஒருவராக இருந்தது, மற்றொன்று மார்க்சியத் திறனாய்வுக் குழு அவரைப் புறக்கணிக்க வேண்டிய ஒருவராகப் பார்த்தது. அதே காலகட்டத்தில் பிராப்பை இன்னொரு வகையாக வாசிக்கலாம் என்ற பார்வையைத் தொடங்கி வைத்தவர் பதிப்பியலில் பேரார்வமுடைய அனடாலி லைபர்மேன் என்று குறிப்பிடும் ஆசிரியர், இவர் பிராப் 1928-68 வரையில் வெளியிட்ட பத்துப்படைப்புகளைத் தம் நூலான தொகையியலில் (Anthology - 1960, II Parts) மொழிபெயர்த்து வெளியிட்டு ரஷிய மொழியில் பயிற்சியில்லாதவர்களுக்கு பிராப்பின் சிந்தனைகளை எடுத்துச் செல்ல உதவியதாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

வகைப்படுத்துதல் என்பது புறப்பண்புகளைக் கொண்டு அமையாது சான்று மூலங்களின் உட் பண்புகளைக் கொண்டே அமைய வேண்டும் என்று குறிப்பிடும் பிராப், ஊண்ட், வால்காவ், பின்னிஷ் அறிஞர் ஆர்ணி, வெசலாவ்ஸ்கி போன்றோரின் ஆய்வு முறைகளைக் குறைபாடுகள் உடையது என்று சுட்டிக் காட்டும் அதே நேரத்தில் பிராப் எடுத்துக் கொண்ட அயல் நாட்டுத் தரவுகளான அஃப்னேசவ் தொகுத்த நூறு தேவதைகளின் பண்பை விளக்கி லரி ஹங்கோ அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளதையும் காட்டிச் செல்கிறார்.

கதைகளின் அமைப்பை எவ்வாறு கண்டறிவது என்றால் ஒவ்வொரு கதையையும் உறுப்புகளாகப் பிரித்தல், ஒன்றின் உறுப்புகளை மற்றொன்றோடு ஒப்பிடல், சில மாறாமல் இருப்பதையும், சில உறுப்புகள் திரும்பத் திரும்ப வருதல், சில உறுப்புகளுக்கு எண்ணற்ற பதிலிகள் வந்தமைதல், இவற்றைத் தர்க்கத்தின் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று ஒப்பிடுதல், இதன் விளைவாக சில நிலையான சில உறுப்புகள் ஒன்றோடொன்று உறவு கொண்டு முழுமையை உருவாக்குகின்றன என்று மிக எளிதாக கதைக் கூறன்களைப் பிரிப்பது பற்றியும் இப்பகுதியில் விளக்கிச் செல்கின்றார். மேலும் இக்கதைகள் தம்மளவில் முழுமையானவை, தனித்து நின்று (உருபன் போன்று) பொருள் தரும் இயல்புடையவை என்று கூறும் ஆசிரியர் இலக்கிய வகை ஒன்றின் அமைப்பைக் கண்டுபிடிப்பதற்கு எவை மாறாதவை, எவை மாறுபவை என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பிராப் ஆய்வு செய்துள்ள சில கதைகளில் உள்ள வாக்கியங்களை எடுத்துக் கூறி அவற்றில் மாறாது நிலைத்து நிற்கும் கூறு எது? என்றும் அடையாளம் காட்டுகிறார்.

இக்கதைகளில் வரும் ஒரு வினையானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வினைகளோடு உறவு கொண்டு ஓர் ஒழுங்கமைப்பை உருவாக்குவதையே மொழியியலில் ‘தொடர்பாட்டு உறவு’ (Syntagmatic relations)) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படை வரையறை என்கின்றனர். இங்கு பிராப் கதைகளில் மாறாமல் இருக்கும் உள்ளார்ந்த கூறுகளை வினை என்றும், கதைகளின் அமைப்பைக் கண்டறிவதற்கு இதுவே அடிப்படை அலகு என்றும் வரையறை செய்கின்றார்.

தமிழில் தொடர்பாட்டு ஆய்வில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் நிகழ்த்தியுள்ள அறிஞர்களாக அறியப் படுபவர்கள், கே.பி.எஸ். ஹமீது (1966, 1968), பா.ரா. சுப்பிரமணியன் (1969), தா. வே. வீராசாமி (1969), வி.ஈ. சுப்பிரமணியன் (1972), தே, லூர்து (1980), கே. நாச்சி முத்து (1981), ஞா. ஸ்டீபன் (1993) ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.

இறுதியாக இப்பகுதியில் ஆசிரியர் உரைநடை கதை வளம் மிகுந்த தமிழ் மரபில் வழக்கிலிருக்கும் பல்வேறு வகையான கதை வகைகளில் அமைப்பியல் ஆய்வைப் பொருத்திப் பார்ப்பதின் மூலம் புதிய மாதிரிகளை முன்மொழிய வாய்ப்புகள் உள்ளன என்று கருத்துரைக்கின்றார்.

2. தமிழ் மூடக்கதைகளின் அமைப்பு

உலகளவில் நாட்டார் வழக்காற்றியலாளரைப் பெரிதும் கவர்ந்த வடிவமாக உள்ள மூடக் கதைகளின் அமைப்பு பற்றி விரிவாகப் பகுத்து ஆராய்கிறது இப்பகுதி. இவ்வாய்விற்கு நூலாசிரியர் பிராப், ஆலன் டண்டிஸ் ஆகியவர்களின் அமைப்பியல் அணுகுமுறையைப் பின்பற்றி இந்திய அளவில் மூடக்கதைகள் குறித்துக் கட்டுரை அளவில் ஆய்வு மேற்கொண்ட ஹெடாஜேசன் (1972), லலிதா ஹண்டு (1988) போன்றோரின் ஆய்வு முறைகளை விளக்கி அவற்றை மதிப்பீடு செய்கின்றார். பின்னர் தமிழ் மூடக்கதைகளின் அமைப்பு பற்றி விளக்குகின்றார்.

இதில் யூத மூடக் கதைகளின் அமைப்பியல் குறித்து ஆராய்ந்த ஹெடாஜேசன் தம் ஆய்வு மாதிரிகளை இருவித அசைவுகளாகப் பகுத்து விளக்கியுள்ளதை விளக்கும் ஆசிரியர் கதையில் தோன்றும் ‘சிக்கல்’ என்று ஹெடாஜேசன் சுட்டியுள்ளதை பிராப் கொடுஞ்செயல் அல்லது குறை என்று வரையறுப்பதாகக் குறிப்பிடுகின்றார். மேலும் இவர் பிராப், டண்டிஸ் போன்றோர் கதைகளில் தாங்கள் பயன்படுத்தியுள்ள அலகுகளைச் சுட்டிக் காட்டுவது போன்று ஜேசன் சிக்கல் என்பது என்ன? அவற்றின் மாற்று வடிவங்கள் எவை? என்பது போன்று வரையறுத்துக் காட்டவில்லை, எனவே ஜேசனின் ‘சிக்கல்’ என்ற அலகு குறைபாடுடையது இதனைக் ‘குறை’ என்று எடுத்துக் கொண்டால் தெளிவடையும் என்று விளக்கிக் கூறியுள்ளார்.

அதன் பின் லலிதா ஹண்டு தம் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கருநாடகம், பீகார், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மூடக் கதைகளை அமைப்பியல் ஆய்வு செய்துள்ளதை ஆராய்ந்த ஆசிரியர், இவர் ஜேசனின் மாதிரியில் முதல் அசைவு, இரண்டாம் அசைவு என்று குறிப்பிடுவதை சற்று மாற்றி மையச் செயல்கள், கட்டாயமற்ற செயல்கள் என்று குறிப்பிட்டுக் காட்டுவதாகச் சுட்டுகிறார். அத்தோடு லலிதா ஹண்டுவின் இந்திய மூடக்கதைகளில் இடம்பெறும் மாதிரிகளில் சிக்கல், பணி, எதிர்வினை, எதிர்மாறான முடிவு, தலையீடு, சாதகமான முடிவு என்ற ஐந்து செயல்களில் முதல் மூன்றும் மைய அல்லது முதன்மையான செயல்களாகவும் பின்னிரண்டும் கட்டாயமற்ற அல்லது புறநீர்மையான செயல்களாகவும் காணப்படுகின்றன என்பதைச் சான்றுகளோடு விவரிக்கிறார். இதில் இவரும் சிக்கல் என்ற அலகையே கையாளுவதாகக் குறிப்பிடும் ஆசிரியர் இவ்விருவரின் திட்டங்களையும் மாற்றி அமைக்க வேண்டியதன் தேவையையும் இவ்விருவர் மாதிரிகளிலும் தவறாகப் புரிதல், குறை ஆகிய செயல்கள் திரும்பத் திரும்ப வருவதையும் குறிப்பிடாது தவிர்த்து விடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறார். இவர் பிராப், ஆலன் டண்டிசின் அமைப்பியல் மாதிரியைப் பின்பற்றி மூடக்கதைகளின் அமைப்பு மாதிரியை குறை, தவறாகப் புரிதல், குறை நீக்கும் முயற்சி, விளைவு, தலையீடு என்று ஐந்தாக வரையறை செய்கின்றார். இதில் எந்த நிலையில் ஹெடாஜேசன், லலிதா ஹண்டு போன்றோர் எந்தெந்த அலகுகளைச் சரியாக வரையறுக்கவில்லை என்பதை கதைகளைப் பொருத்திப்பார்த்து விளக்கியுள்ளார். அமைப்பியல் மாதிரி தமிழ் மூடக் கதைகளுக்கு பொருத்தமாக அமையுமா? என்பதை ஆசிரியர் தாம் களாய்வுகளில் சேகரித்த மூடக் கதைகளின் வழி, மூடக் கதைகளின் அமைப்பில் குறை, தவறாகப் புரிதல், குறை நீக்கும் முயற்சி ஆகிய மூன்று கதைக் கூறுகளும் மூடக் கதைகளுக்குக் கட்டாய உறுப்புகளாக இருக்கும்’ என்ற முடிவுக்கு வருகிறார்.

பொதுவாக யூத, இந்திய மூடக்கதைகளில் ‘தலையீடு’ என்ற அலகானது குறைவாகவே இடம்பெறுவதே இயல்பு என்றாலும் தலையீடு மிகுதியாக உள்ள கதைகளின் பண்பாட்டு வெளிப்பாட்டுக் காரணங்களைச் சோதித்து அறிய வேண்டும் என்கிறார். இங்கு தலையீடு வெற்றியாக அமையுமானால் அவன் (கதைகளில்) மூடர் உலகைச் சேராத அறிவாளியாக இருப்பான் என்று ஆசிரியர் குறிப்பிடுவது ஏற்பிற்குரிய கருத்தேயாகும்.

3. பழமரபுக் கதைகளின் அமைப்பு

உலகளவில் அமைப்பியல் குறித்த ஆய்வுகள் பழமரபுக் கதைகளில் அரிதாகவே ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளன. தமிழில் அத்தகைய முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கு ஆசிரியர் கூறும் காரணம் ‘பழமரபுக் கதைகளை ஆய்வுக்குட்படுத்தும் போது எந்த அமைப்பியல் மாதிரியைப் பின்பற்றுவது அல்லது அடிப்படையான அலகை எவ்வாறு கண்டறிவது? போன்ற சிக்கல்களே’. எனினும் இது தவிர்க்க முடியாது என்று கூறி ஒரு முயற்சியாக களப்பணியின் மூலம் சேகரிக்கப்பட்ட ஐந்து பழமரபுக் கதைகளை ஆலன் டண்டிஸ் அமைப்பு மாதிரியைப் பின்பற்றி ஆராய்கிறார். இதற்கு முதன்மைத் தரவுகளாக, 1. மண்டைக்காட்டு அம்மன் கதை 2. கதகளியின் கதை 3. பேய்க்குப் பேனு பார்த்த கதை, 4. இட்டக வேலி அம்மன் கதை, 5. குறும்புமார் கதைகளை எடுத்து அவற்றை அமைப்பியல் ஆய்வுக்கு உட்படுத்தி ‘குறை, குறை நீக்கும் முயற்சி, சூழ்ச்சி, ஏமாற்றப்படல், தடை, தடைமீறல், விளைவு, பழிவாங்கல் அல்லது ஈடுகட்டல்’ ஆகிய 8 வகையான கதைக் கூறின் பட்டியலிட்டு நிரலொழுங்கு செய்கிறார். இவற்றில் முதல் நான்கு வகைகள் பழமரபுக் கதைகளுக்கு இன்றியமையாத கதைக் கூறன்கள் என்றும் ஏனையவை கட்டாயமற்றவை என்றும் குறிப்பிடுகின்றார். இங்கு பழமரபுக் கதைகளில் தடை, தடை மீறல் ஆகிய கதைக் கூறன்கள் நேரடியாக அமையவில்லை என்று குறிப்பிடுகின்றார். சான்றாக, குறும்புமார் கதையில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இல்லத்தில் இருந்து எதனையும் வாங்கி உண்ணக் கூடாது என்பது தடையாகும். கதையில் இத்தடை நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனால் தடை மீறல் நேரடியாக வந்தமைகிறது. ஏனைய கதைகளிலும் தடை அமையவில்லை. அவை பண்பாடு மரபு சார்ந்தவை என்பதால் பார்வையாளர்கள் எளிதில் பொருள் புரிந்து கொள்வர் என்று விளக்கமளித்துள்ளார்.

இவ்வாறு ஆலன் டண்டிசின் அமைப்பு மாதிரிக்குள் பொருத்திக்காட்டப்பட்ட ஆசிரியரின் சோதனை முயற்சி பழமரபுக் கதைகளுக்குப் பொருத்தமாக இருப்பினும் டண்டிஸ் கண்டறிந்த கதைக்கூறன் இணைகள் தமிழ் பழமரபுக் கதைகளில் கண்டறிய முடியவில்லை என்று குறிப்பிடுகின்றார். இவை காணப்பட வேண்டிய கட்டாயமும் இல்லை என்கிறார்.

இறுதியாக பழமரபுக் கதைகள் அனைத்தும் சமநிலையின்மையில் தொடங்கி உளவியல் அடிப் படையிலான சமநிலையில் தான் முடிவடைகின்றன என்று கூறும் ஆசிரியர் இன்னும் பல கதைகளைப் பொருத்திப் பார்ப்பதின் மூலம் ஒரு இறுதி முடிவிற்கு வரமுடியும் என்று கருதுகின்றார்.

4. நாட்டார் கதைகளில் அமைப்பியல் சமன்பாடுகள்

நூலின் நான்காவது பகுதியான இப்பகுதி அமைப்பியல் சமன்பாடுகள் பற்றியது. முன் பகுதியில் கண்டறிந்த அமைப்பு நிரல் ஒழுங்கைச் சுருக்கி இறுதியான ஒரு சமன்பாட்டை முன்வைக்கின்றனர் அமைப்பியலாளர்கள். இந்த சமன்பாடுகள் குறிப்பிட்ட வகைமையின் நிரலொழுங்குக்கு மாறாக வகைமை கடந்த பொதுப் பண்பைப் பெற்றுவிடுகின்றன. இந்த பொதுமைப்படுத்துதல் சில ஐயப்பாடுகளையும் குறைபாடுகளையும் தோற்றுவிப்பதை இப்பகுதி விளக்குவதாக அமைந்துள்ளது.

இதன் முற்பகுதியில் தமிழில் நாட்டார் வழக்காற்றியலில் அமைப்பியல் கோட்பாட்டைப் பின்பற்றி இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கட்டுரைகள் அவற்றின் மீதான விமர்சனங்களைப் பகுத்து ஆராய்ந்து மிகவும் நேர்த்தியான முறையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு நாட்டார் வழக்காற்று வகைமைகளில் இருந்து தருவிக்கப்பட்ட அமைப்பியல் சமன்பாடுகள் வடிவ அளவில் இரண்டாக அமைந்துள்ளன. அவை 1. இரட்டை மாதிரி 2. மூன்றடுக்கு மாதிரி. ஆலன் டண்டிஸ், லெவிஸ்ட்ராஸ் முன் வைக்கும் மாதிரிகள் இரட்டை மாதிரி வகையைச் சார்ந்தது என்றும் யுகா பெண்டிக்காய்னன் முன் வைக்கும் சமன்பாடுகள் மூன்றடுக்குடையவை என்றும் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அவையாவன; சமநிலையின்மை / சமநிலை, வாழ்வு/ சாவு, சமநிலை / சமநிலையின்மை. இவற்றில் சமநிலை / சமநிலையின்மை, சமநிலையின்மை / சமநிலை என்ற இரண்டும் தம்மளவில் எதிர் முரண் தன்மையுடையவைகளாக இருந்தாலும் இவை இரண்டையும் தர்க்கத்தின் அடிப்படையில் ஒரே சமன்பாடாகச் சுருக்கிவிடலாம் என்கிறார். மேலும் இச்சமன்பாடுகள் நாட்டார் கதைகள் மூடக் கதைகளில் இருந்து வருவிக்கப்பட்டாலும் அவற்றிற்கு மட்டுமே உரிய சமன்பாடுகளா? அவ்வாறெனில் லெவிஸ்ட்ராஸ் குறிப்பிடும் வாழ்வு / சாவு என்ற சமன்பாடு புராணங்களுக்கு மட்டும் உரியதா? என்பது போன்ற கேள்வி எழுப்புகிறார். இவ்வாறே யுகாபெண்டிக்காய்னன் குறிப்பிடும் சமன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கலாம் என்று கூறும் ஆசிரியர் முடிவாக இந்த சமன்பாடுகள் அல்லது உறவுகள் வாழ்வு / சாவு, சமநிலை / சமநிலையின்மை ஆகிய இரண்டும் ஒட்டுமொத்த வாழ்வின் சாராம்சம் என்று கூறுகிறார். இதனை இன்னும் விளக்கும் விதமாக வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் மனித நடத்தை முறைகளையும் சமூக வாழ்க்கையையும் சுருக்கும் போது இவ்விரு சமன்பாடுகளுக்குத் தான் வந்து சேர முடியும் என்று தம் கருத்தை முன் வைக்கிறார். மேலும் இதனை ஒவ்வொரு வகைமைக்கும் வகைமை சார்ந்த அமைப்பியல் சமன்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை வகைமைகளுக்கிடையே பொருத்திப் பார்த்தால் வகைமைகளுக்கிடையேயான உறவினையும் அவை பண்பாட்டோடு கொண்டுள்ள உறவுகளையும் கண்டறிய முடியும் என்ற முடிவுக்கு வருகின்றார்.

இறுதிப் பகுதியான நிறைவுரையில் அமைப் பியல்மீது வைக்கப்பெற்ற விமர்சனங்கள் அவற்றிற்கு அறிஞர் தந்த விளக்கங்கள் போன்றவற்றைத் தொகுத்து ரைக்கிறார். அமைப்பியல் பொருண்மை குறித்து கவலைப்படுவதில்லை என்ற குறைபாட்டினைக் கொண்டிருந்த போதும் அமைப்பு மாதிரியில் பொருண்மை காணும் வாய்ப்புகள் உண்டு என்று பிற்கால அமைப்பியலாளர்கள் கண்டறிந்து கூறிய செய்திகள் இப்பகுதியில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.

அதாவது தொடர்பாட்டு அமைப்பியல் ஆய்வுகளுக்கு விளாடிமிர் பிராப்பின் ஆய்வே அடிப்படையானது என்றும் பின்னர் வந்த ஆலன்டண்டிஸ் முதலியவர்களின் அமைப்பியல் மாதிரிகள் பிராப்பை அடிப்படையாகக் கொண்டு முன்மொழியப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வருகிறார் ஆசிரியர். வாழ்வியல் தேவைகள், பண்பாட்டுத் தோரணிகளைப் பொறுத்தே கதைகளின் வினை வடிவங்கள் அமையும் என்று பிராப்பின்

அமைப்பியல் மாதிரி பற்றிக் குறை கூறுபவர்களில் ஒருவரான டெமென்டோ, பிராப் உள்ளடக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகப்பெரிய குறையாகும்’ என்று குற்றம் சாட்டுகின்றார். இதற்கு ஆசிரியர் ‘பிராப்பின் ஆய்வு எத்தகைய குறையுடையதாக இருப்பினும் நாட்டார் வழக்காற்றியலுக்கு அவர் அளித்துள்ள பங்கு அறிவியல் அடிப்படையிலானது; செறிவானது என்பதை யாரும் மறுக்க முடியாது’ என்று தெளிவுபடக் கூறுகிறார்.

இவ்வாறாக அமைப்பியல் கோட்பாடு குறித்து பல்வேறு நூல்கள் தமிழில் வெளிவந்துள்ள போதிலும் இது பற்றிய தெளிவுகள் இல்லாமலே ஆய்வாளர்களும் மாணவர்களும் விவாதித்து வந்த சூழலை சற்று மாற்றி, அமைப்பியல் கோட்பாட்டை மிகத் தெளிவாகவாகவும் எளிமையான முறையிலும் அறிய வைக்கிறது இந்நூல்.

தமிழ் மூடக்கதைகளையும் பழமரபுக் கதை களையும் தரவுகளாகக் கொண்டு தொடர்பாட்டு அணுகுமுறையில் அமைப்பியத்தை ஆசிரியர் விளக்கியுள்ள விதம் அமைப்பியம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு தாம் எடுத்துக் கொண்ட வகைமைகளைப் பொருத்திப் பார்ப்பதற்குப் பேருதவியாக அமையும்.

தமிழ்ச்சூழலில் கோட்பாடு சார்ந்த ஆய்வுகள் வெறும் மொழிபெயர்ப்புகளாகவோ, மேலை நாட்டினரின் கோட்பாடுகளை எவ்வித திறனாய்விற்கும் உட்படுத்தாமல் கண்மூடித் தனமாகப் பின்பற்றி வரும் நிலையில் அமைப்பியல் கோட்பாட்டை நன்கு உள்வாங்கிக் கொண்டு அதனைச் சமூக வழக்காற்றியலில் பொருத்திப் பார்த்துள்ள விதம் ஆசிரியரின் நுட்பமான ஆய்வு அணுகுமுறைக்குத் தக்கதொரு சான்று.

வட்டாரப் பண்பு மிகுந்த பழமரபுக்கதை படித்து உள்வாங்கிக் கொள்வதற்குக் கடினமாக இருப்பினும் ஆசிரியர் எடுத்துக்கொண்ட கதைகள் வட்டாரத் தன்மைக்குரிய தனித்தன்மையோடு நாட்டார் பொருண்மைகளில் இருந்து சற்றும் விலகி விடாமல் இருப்பது கதைகளை மேலும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.

இங்கு அமைப்பியல் ஆய்வு செய்துள்ள கதைகளில் அடைவு எண்கள் தரப்பட்டுள்ளன. இவை எவ்வாறு கண்டறியப்பெற்றன என்பது அமைப்பியலோடு தொடர்பற்றது என்பதால் இங்கு தரப்படவில்லை என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவை பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

தமிழ் மரபில் நின்று நிலைத்துள்ள நாட்டார் வழக்காற்றியல் மரபுகளில் உள்ள அர்த்தங்களையும் பண்பாடு சார்ந்த பொருண்மைகளையும் விளங்கிக் கொள்வதற்கு அமைப்பியம் சார்ந்து அவற்றை அணுக வேண்டிய தேவையுள்ளதை வலியுறுத்தி நிற்கும் இந்நூல் பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம், பின்னைக் காலனியம் போன்ற நவீன சிந்தனைகளை அடிப்படையில் தெளிவாக விளங்கிக் கொள்ள உதவும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.