இரத்தம் சதை கலந்த பிண்ட வடிவமே உடல். உடலில் உயிர் பாய்ந்து பூமியில் பிறந்து, ஆடி, பாடி, ஓடி ஓய்ந்து உடலை விட்டோடும் நிலையில்லா உயிர் தங்கும் குறுகிய காலகட்டமே வாழ்க்கை. உடல் தேவையைப் பூர்த்தி செய்வதே வாழ்வின் தேடலாகிறது. மனிதனுக்கும் விலங்குக்குமான உடல் வேட்கை பசி என்றால் மனிதனுக்கும் மனிதனுக்குமான உடல் வேட்கை, ஆதிக்கம், அதிகாரம், ஆளுமை அடக்குமுறையாகிறது. உலகில் மனிதன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மற்றொரு மனிதனை ஆதிக்கம் செய்ய முயல்கிறான். அதன் வாயிலாக தனக்கான ஓர் தனித்த அடையாளத்தைச் சமூகத்தில் நிறுவிக்கொண்டு மற்றவர்களை ஆளமுனைகிறான்.

உடலரசியல்

மனித உடல் மீதான அதிகார அரசியல் குறித்த சிந்தனைகள் ‘உடலரசியல்’ (BODY POLITICS) என்ற விவாதப் பொருண்மையில் மேலைநாட்டில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பேசப்பட்டது. உடலரசியல் என்ற பதம் இரு பாலின உடலரசியல், மூன்றாம் பாலின உடலரசியல், தலித்திய உடலரசியல், அகதி உடலரசியல் முதலிய கோணங்களில் பார்வையிடப்படுகின்றன. படைப்பாளார் ஜமாலன் தனது உடலரசியல் நூலில் ‘உடல் அரசியல் என்பது ஒரு உடல் எப்படி அதிகார அமைப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அதிலிருந்து உடலை எப்படி மீட்டெடுப்பது அல்லது தப்பிச் செல்வது என்பதை பேசும் பொருளாகக் கொண்ட அரசியலே’ உடலரசியல் என்று ஆசிரியர் உரை பகுதியில் விளக்கியுள்ளார்.

மனிதன் என்பவன் சமூக விலங்கு; சமூக அமைப்புகளால் கட்டுண்டு வாழ்பவன்; அவனுக்கு என்று தனித்த சுதந்திரத்தை அவன் வகுத்துக் கொண்ட போதிலும் அதன் நீட்சியை சமூக கட்டமைப்புகளே நிர்ணயிக்கின்றன. சமூகத்தில் மனித உடலைக் கட்டமைப்பவையாக குடும்பம், கடமை, பண்பாடு போன்றவை இடம்பெறுகின்றன. நாம் எதை உண்ண வேண்டும்; எதை உடுத்த வேண்டும்; எதைச் செய்ய வேண்டும் என்பதனை சில அதிகார உடல்களே தீர்மானிக்கின்றன.

பெண் உடலரசியல்

நிறுவனமயமாக்கப்பட்ட சமூகத்தில் பெண் உடல் மீதான அதிகார அரசியல் என்பது தாய்வழிச் சமூகத்தின் வீழ்ச்சியில் தொடங்குகிறது. பெண்ணை அடக்கி ஆள கருதிய ஆண் சமூகம் பெண்ணை ஒரு வட்டத்துக்குள் சிறையிட்டு, மீண்டுவரா வண்ணம் ‘பெண்மை, மரபு, பண்பாடு’ எனும் சூத்திரத்துக்குள் அடக்கி, ஆணுக்காவே பெண் என்ற மாயையை உருவாக்கி பெண் உடல் மீதான உரிமையைத் தக்க வைத்துக்கொள்கின்றர். பெண்களுக்கு எதிரான இவ் அடக்குமுறை, பெண்ணிய இயக்கத்தின்வழி கேள்விக்குட்படுத்தப்பட்டது. பெண்ணியப் போராட்டத்தின் இரண்டாம் அலையின் போது 1960இல் 'பெண் உடலரசியல் என்ற கருத்து முன்மொழியப்பட்டது. இக்கருத்தாக்கம் அமெரிக்காவில் தொடங்கி மற்றைய உலக நாடுகளில் பரவியது.

"இரண்டாம் அலை உடலரசியல் குறித்த கருத்தை முன்வைக்கும் பொழுது வல்லுறவின் மீதான மெளனத்தை உடைப்பது. பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைக்கு எதிராகப் போராடுவது. ஆண்களுக்கு இணையான அதிகாரங்களைப் பெற போராடுவது என்பதை முன்வைத்தது.

உடலரசியல் என்பது பெண்உடலை இரண்டாந்தரமாக வைப்பதை எதிர்ப்பது. பெண்கள்மீதான வன்முறைக்கு எதிராகப் போராடுவது. குழந்தை பெறுவதற்கான உரிமையைப் பெறுவது முதலானவற்றின் அடிப்படையைக் கொண்டது. கீழ்நிலையாகக் கருதப்படுகின்ற, புறக்கணிக்கப்படுகிற உடலை மேலெடுக்க முயல்வது. பெண் உடலை ஆயுதமாக முன்னெடுப்பது.”1 (ச. விசயலட்சுமி, பெண்ணெழுத்து களமும் அரசியலும், ப. 111.) என்றவாறு பெண் உடல் அடக்குமுறைக்கு எதிரான சுதந்திரத்தைப் பெண் உடலரசியல் வலியுறுத்தியது.

சிறகுகள் முளைத்து

1987இல் வெளிவந்த இராசேந்திர சோழனின் ‘சிறகுகள் முளைத்து’ குறுநாவல் எண்பதுகளில் வாழ்ந்த விளிம்புநிலை பெண்களின் உடலரசியலை வெகு இயல்பாகப் பேசும் படைப்பாகிறது. இக்குறுநாவலில் ஆண்கள் பெண்களின் வாழ்வியலை நிர்ணயிப்பவர்களாகவும் பெண் உடல், மனம் இரண்டையும் ஆள்பர்களாகவும் இருக்கும் சூழலைப் படம்பிடித்துக்காட்டுகிறது. குறிப்பாக பால் சார் உணர்வு வெளிப்படும் விதம் என்பது ஆணுக்கொரு விதமாகவும், பெண்ணுக்கு ஒரு விதமாகவும் சமூக நிலையில் பார்க்கப்படுவதை இப்படைப்பு விவாதிக்கின்றது. ரஞ்சிதம், மல்லிகா, தேவானை, ரேவதி ஆகிய நான்கு பெண் பாத்திரங்களே இக்குறுநாவலில் இடம்பெறுகின்றன. இந்நான்கு பாத்திரங்களும் மரபார்ந்த வாழ்விலிருந்து விலகி, தன் சுயத் தேவைக்காக ஏதோ ஒரு வகையில் ஆணைச் சார்ந்து வாழ்பவர்களாக இடம்பெறுகின்றனர்.

 ‘சிறகுகள் முளைத்து’ குறுநாவலில் ‘பாஸ்கரன்’ முதன்மைப் பாத்திரமாகிறான். அவன் பார்வையிலேயே கதைச்சொல்லி வாயிலாக கதை நகர்கிறது. பாஸ்கரனின் தாய், அவன் சிறுவயதாய் இருக்கும் போதே அவனை விடுதியில் சேர்த்து படிக்கவைக்கிறாள். படிப்பை முடித்த பாஸ்கரன். தன் தாயைக் காணும் ஆவலில் சொந்த ஊருக்கு திரும்புகிறான். வந்த அவனுக்கு தாயின் முறையற்ற இரகசிய வாழ்வு தெரியவருகிறது. தாயின் மேல் வெறுப்பு கொண்டு அவளைப் புறக்கணிக்கிறான். இதனால் மனமுடைந்த அவள் தூக்கிட்டு சாகிறாள். தாயின் மரணம் அவனுக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதுநாள் வரையில் தாயின் நிழலில் வாழ்ந்து வந்த பாஸ்கரன், தனி ஒருவனாய் வாழும் சூழலில் அவன் எதிர்கொள்ளும் உறவு மற்றும் சமூக சிக்கல்களை மையமிட்ட கதையே ‘சிறகுகள் முளைத்து’ குறுநாவல். சதாசிவாத்தியார், சங்கரலிங்கம், மல்லிகா, ரஞ்சிதம், தேவானை, வடிவேலு ரேவதி ஆகியோர் துணைமைப் பாத்திரங்களாக இடம்பெறுகின்றனர். இப்பாத்திரங்களை கீழ்வரும் மூன்று உடலரசியல் கட்டமைப்புக்குள் அடக்கிவிடலாம்.

  • ஆளுமை உடல்கள்
  • பலியாகும் உடல்கள்
  • எதிர்க்கும் உடல்கள்

சதாசிவவாத்தியார், பாஸ்கரன், சங்கரலிங்கம், வடிவேலு இவர்கள் ஆளுமை உடல்களாகவும், ரஞ்சிதம், தேவானை பலியாகும் உடல்களாகவும், மல்லிகா, ரேவதி எதிர்க்கும் உடலாகவும் இக்கதையில் வலம் வருகின்றனர்.

ஆளுமை உடல்கள்

  ஆளுமை உடல்களான சதாசிவவாத்தியார், பாஸ்கரன் இருவரும் ஒடுக்குமுறையிலான ஆளுமையாக அல்லாமல் அன்பு’ என்ற பெயரில் பெண்களை ஆள்பவர்களாகின்றனர். நல்ல மதிப்புடைய நபராக அறிமுகமாகும் சதாசிவவாத்தியார் உதவக்கூடிய, நெறிப்படுத்தக் கூடிய பாத்திரமாக அமைந்த போதிலும், அவரை நம்பி வந்த ரஞ்சிதம் மற்றும் மல்லிகாவிற்கு ஆதரவு அளித்தபோதிலும் அவர்களை இச்சைக்குரியவர்களாகவே பயன்படுத்தியுள்ளார்.

தன் முறையற்ற வாழ்வை எண்ணி வருந்திய ரஞ்சிதத்தை மன்னிக்காத பாஸ்கரன் திருமணம் செய்யாமல் மல்லிகாவுடன் தொடர்பில் இருப்பதும், அதேசூழலில் ரேவதி என்ற பெண்ணின் மீது ஆசைக் கொள்வதுமான அதே தவற்றைச் செய்கிறான். இதில், பாஸ்கரனின் தாய் ரஞ்சிதம் மேல் செலுத்திய ஆதிக்கம் என்பது வெறுப்புணர்வாகவும், மல்லிகா, ரேவதியின்பால் கொண்ட ஆதிக்கம் என்பது உடல் சார் தேவையாகவும் வெளிப்படுகின்றது. சூழல் உந்திய போதிலும் பெண்களே தவற்றிற்குக் காரணம் என சுட்டிக்காட்டும் ஆண் சமூகம் அதே சூழலில் சிக்கும் போது சூழலைக் காரணம் காட்டி தப்பிக் கொள்வதையும், சமூகமும் ஆண் செய்யும் தவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதையும் பாஸ்கரன் பாத்திரம்வழி புலப்படுகிறது.

அன்றைய சூழலில், நவநாகரீக ஆடை அணியும் பெண்களைப் பண்பாடற்றவர்களாகப் பார்ப்பதும், அவர்கள் மீதான எதிர்மறை விமர்சனங்களை வைப்பதுமான சூழல் நிலவியிருந்தமையைச் சங்கரலிங்கம் ரேவதியைப் பற்றி கூறும் கூற்றின் வழி உறுதிப்படுத்தப்படுகிறது.

“அந்த பொண்ணு கேரக்டரைப் பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது. ஆனா பொதுவா பேசிக்குவாங்க. அது பாக்டரில வேலை செய்யற பசங்களா பாத்து மேஞ்சுக்னு இருக்குது... அதுங்கூட கனெக்‌ஷன் வச்சிக்னா காசி கஷ்டம் கெடையாதுன்னு…. அது சும்மா கொழுத்து போய் திரியறா போலருக்குதுபா… ஊட்டுல கெடந்தா போர் அடிக்கும்னு… என்னா பண்ணும் பாவம்… ஊட்டுல அக்காளுங்க அடிக்கற கொட்டம் பார்த்தா ஆச வராதா…!’

  பாஸ்கரன் நம்பாமல் பார்த்தான். நண்பன் சொன்னது எதையும் அவன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஊரிலிருப்பவர்களுக்கென்ன…. எல்லாம்தான் பேசிக் கொள்வார்கள். ஆனால் அவளைப் பார்த்தால் அப்படியா தெரிகிறாள். அவள் அழகும் இளைமையும் பிஞ்சு முகமும்… என்று நினைத்தான்.” (இராசேந்திர சோழன், இராசேந்திர சோழன் குறுநாவல்கள், ப. 81)

பாஸ்கரனுக்கு ரஞ்சிதம் மேல் வந்த வெறுப்புணர்வு, ரேவதியின் பண்பைப் பற்றி சங்கரலிங்கம் தவறாக விமர்சிக்கும் போது அவனுக்கு அவள் மேல் கோபம் வரவில்லை. மாறாக, அவள் அழகில் மயங்கியவனாய் நிற்கிறான். பெண்கள் வெறும் சதைக் கொண்ட உடலாக(ரேவதி), தேவைக்குரிய கருவியாக(ரஞ்சிதம்) தான் பார்க்கப்படுகிறார்கள். பெண்களின் ஆடையையே அவர்களுக்கான வரையறையாகக் கொள்ளும் ஆண் மனோபாவம், அவள் எப்படிப்பட்டவள் என்பதைத் தெரிந்துக்கொள்ளாமலே அவதூறாகப் பேசுகிறது. சராசரியாய் பழகும் பாங்குடைய பெண்களை இயல்பிலே இச்சமூகம் ஒழுக்கங்கெட்டவர்களாகச் சித்திரிக்கின்றது ‘அவர்கள் அப்படித்தான்’ என்ற வரையறைக்குள் வைத்துவிடுகின்றது.

பலியாகும் உடல்கள்

‘சிறகுகள் முளைத்து’ குறுநாவலில் வரும் ‘ரஞ்சிதம்’, ‘தேவானை’ இருவரும் மென்மையானவர்களாகவும், குடும்பச் சூழல் காரணமாக பாலியல் தொழில் செய்பவர்களாகவும் இடம்பெறுகின்றனர். இதில் ‘ரஞ்சிதம்’ பரிதாபத்திற்குரிய பாத்திரமாகும், கணவன் இல்லாத நிலையில் வாழ்வியல் தேவைக்காக சதாசிவவாத்தியாரை நாடி வாழ்கிறாள். ரஞ்சிதத்தின் வாழ்வியல் முறை பாஸ்கரனுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அவனை விடுதியில் சேர்த்துப் படிக்க வைக்கிறாள். பய உணர்வோடு தன் வாழ்நாளைக் கடக்கிறாள் ரஞ்சிதம். ‘எது நடந்துவிடக் கூடாது’ என்றெண்ணி பயந்தாலோ ‘அது’ நடந்துவிடுகின்றது. பாஸ்கரனுக்கு ரஞ்சிதம் பற்றிய உண்மை தெரிந்துவிடுகின்றது. தனி ஒரு பெண்ணாய் கஷ்டப்பட்டு பாஸ்கரனைப் படிக்க வைத்து ஆளாக்கிய அவளின் தியாக உடல் அவன் கண்ணுக்குத் தெரியவில்லை. மாறாக, ஒழுக்கக்கேட்டின் அடையாள உடலாகவே அவனுக்குக் காட்சியளிக்கிறாள். இதனால் அவளைத் தாய் என்றும் பாராமல் முழுவதுமாகப் புறக்கணிக்கிறான்.

"அவன் வாய் கொப்பளித்து முகம் கழுவி, வெளியே புறப்பட சட்டை மாட்டிக் கொண்டிருந்த சமயம் அம்மா எழுந்துகொண்டாள். இரவு முழுக்க கண்ணீரால் நனைந்த முகம் வீங்கிப்போயிருந்தது. தன் குற்றங்களுக்கெல்லாம் பிராயச் சித்தம் போல தொண்டை தழுதழுக்க விம்மி வெடிக்கும் துயரத்துடன் அவள் மகனை நெருங்கினாள். ‘எங்கடா கெளம்பற… ராத்திரியே சாப்படல… ஒரு வாய் சாப்டுட்டு போடா…’ அவன் கைகளைப் பிடுங்கி விடுவித்துக் கொண்டான்.

சில்லிட்ட அந்தக் கரங்கள் கம்பளிப் புழுக்களைப்போல அவனது கரங்களில் ஊர்ந்தன. சட்டென்று தன் கைகளைப் பிடுங்கி விடுவித்துக் கொண்டான்.

தாய் கேவினாள். ‘டேய்…’

‘சீ ஓடு…’

அவன் வேகமாக வெளியேறினான்.”2 (இராசேந்திர சோழன், இராசேந்திர சோழன் குறுநாவல்கள், ப.41.)

தன் உண்மை அன்பை வெளிபடுத்தியும், செய்த தவற்றிற்கு மனம் வருந்தியும் அதை ஏற்காதவனாய் அவன் தாயை நிராகரிக்கிறான். பாஸ்கரன் படித்தவன் என்றாலும் அவன் தாய் செய்த தவற்றை மன்னிக்குமளவிலான பக்குவம் இல்லாதவனாக, பழைய மதிப்பீடுகளின் உருவமாக இருக்கிறான்.

எதிர்க்கும் உடல்கள்

ரஞ்சிதத்தைப் போன்று மல்லிகாவும் சதாசிவவாத்தியாருடன் இரகசிய உறவுக்கொண்டும், அதேநேரத்தில் பாஸ்கரனுடன் நெருக்கம் கொண்டும் வாழ்கிறாள். மல்லிகாவிற்கு இவ்வாழ்க்கைமுறை தவறாகப்படவில்லை. ஆரம்பத்தில் அன்பைக் காட்டிய பாஸ்கரனின் செயல்பாட்டில் மாறுதலைக் கண்ட மல்லிகா ரஞ்சிதம் போல் இல்லாமல் துணிச்சலாகத் தன் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகிறாள்.

“அவள் முகம் கோரமாக மாறியிருந்தது. இப்படி ஒரு முகத்தை இதற்குமுன் பார்த்ததில்லை அவன். கிட்டே நெருங்கவே பயமாயிருந்தது. தயங்கி நின்று அவளைப் பார்த்தான்... ‘என்ன பாக்கற...’ பல்லைக் கடித்து நெறுநெறுக்கிற குரலில் சொன்னாள் அவள். ‘நான் உன் சித்தி சொல்றேன்... மரியாதையா வெளிய போயிடு..’

அவன் நிலைகுலைந்து அதிர்ந்தான். தடுமாறினான்... ‘சித்தியா...’

’ஆமா!’ அவள் வன்மம் தொனிக்க அவளைப் பழிவாங்குகிற எகத்தாளத்தில் ஆத்திரத்தோடு சொன்னாள். ‘உங்கம்மா எனக்கு சக்காளத்தின்னா... நான் உனக்கு சித்திதான்...’” (இராசேந்திர சோழன், இராசேந்திர சோழன் குறுநாவல்கள், ப.க். 91,92.)

’தான் செய்வது தவறு என்றால் அவன் செய்வதும் தவறே’ என்பதை அவள் பாணியில் சுட்டிக்காட்டுகிறாள். அதேபோன்று ரேவதியும் தன்னை அவமதித்த பாஸ்கரன் மீண்டும் அவளைத் தேடி வரும் போது அவள் அவனைப் புறக்கணிக்கிறாள். இவ்விருவரும் தன் எதிர் இருப்பவர்கள் பொருத்து தன் செயல்பாட்டை அமைத்துக்கொள்பவர்களாக அமைந்துள்ளனர். ஒழுக்கமின்மைக்குள் ஓர் ஒழுக்கத்தைப் பிரகடனப்படுத்தும் படைப்பாக சிறகுகள் முளைத்து குறுநாவல் அமைகின்றது. இப்படைப்பில் பங்குபெறும் ஒவ்வொரு பாத்திரங்களும் நம்மை சுற்றி வாழ்ந்துக் கொண்டிருப்போரின் வடிவங்களின் பிரதிபலிப்பே.

முடிவுரை

உணவு, உடை, உறைவிடம் என்பது சமூகத்தின் அடிப்படைத் தேவைகள் என்றால் அத்தேவையைப் பெறுவதற்காக சில பெண்கள் தங்கள் உடலை முதலீட்டுப் பொருளாகக் கொண்டு தங்கள் வாழ்வை ஓட்டுகின்றனர். இக்குறுநாவலில் வரும் ஆண் பாத்திரங்கள் பெரும்பான்மை பெண்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை ஆள்பவர்களாகின்றனர். அதனால் பெண் உணர்வைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாய்; புரிந்து கொள்ள மறுப்பவர்களாய் இருக்கின்றனர். சமூகத்தால் இவ்வுடல்கள் அருவருப்பிற்குரியதாகப் பார்க்கப்படுகின்றன. அவர்களின் வலி நிறைந்த வாழ்வு கவனிக்கப்படுவதில்லை. அவர்களைப் புறக்கணிப்பது இதற்குத் தீர்வல்ல. அவர்களுடைய வாழ்வியல் சிக்கலைத் தேடி களைவதே இதற்குத் தீர்வாகும்.

உதவிய நூல்கள்

  1. இராசேந்திர சோழன் குறுநாவல்கள், இராசேந்திர சோழன், தமிழினி பதிப்பகம், சென்னை - 2
  2. உடலரசியல், ஜமாலன், காலக்குறி பதிப்பகம், சென்னை-66
  3. பெண்ணியம், இரா. பிரேமா. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை – 17.
  4. பெண்ணெழுத்து களமும் அரசியலும், ச. விசயலட்சுமி., பாரதி புத்தகாலயம், சென்னை – 18.

சந்திரலேகா.செ,
முனைவர்ப்பட்ட ஆய்வாளர்,
தமிழியல் துறை,
காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
இலாசுப்பேட், புதுச்சேரி-08

Pin It