அ.கா.பெருமாள் எழுதிய ‘மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்” என்ற நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அண்மையில் வெளியிட்டுள்ளது.

a ka perumal boon on sundaranarதமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியவர், மனோன் மணியம் நாடகத்தை எழுதியவர் என்ற சுந்தரனாரின் ஒரு பக்கம் பரவலாக அறியப்பட்டது. தத்துவவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர், கல்வெட்டு ஆய்வாளர் முதலான சுந்தரனாரின் இன்னொரு பக்கம் பரவலாக அறியப்படாமல் உள்ளது. இந்த இன்னொரு பக்கத்தை அ.கா.பெருமாளின் நூல் சுருக்கமும் தெளிவும் கொண்ட நடையில் எடுத்துச் சொல்கிறது.

இந்த நூல் வாழ்வும் பணியும், நாடகாசிரியர், ஆராய்ச்சியாளர், உரைநடையாளர் ஆகிய நான்கு தலைப்புகளில் சுந்தரனாரைப் பற்றி எடுத்துரைக்கிறது. சுந்தரனாரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள பதிமூன்று பின்னிணைப்புகள் நூலில் கொடுக்கப் பட்டுள்ளன. இந்தப் பின்னிணைப்புகள் ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஆர்வமூட்டக் கூடியவை.

இந்த நூல் காலனியமும் தமிழ்ப் புலமையும் எவ்வாறு ஒன்றையன்றை எதிர்கொண்டது என்பதைப் பற்றி புரிந்துகொள்ளவும் துணை செய்கிறது. நீண்ட வரலாறு கொண்ட தமிழ்ப் புலமை மரபு காலனிய ஆட்சியின் தொடக்க காலத்தில் ஒரு புதிய நெருக்கடிகளைச் சந்தித்தது.

அறிவுசார் மதிப்பிலும், புதிய காலனிய சமூக அமைப்பின் வேலைவாய்ப்பு களிலும், அரசாங்க நிர்வாகத்திலும் அதன் இடம் என்ன என்ற கேள்வி எழுந்தது. புதிய ஆங்கிலக் கல்வி முறையில் கல்வி கற்ற சுதேச அறிவாளிகள் தமிழ்ப் புலமை மரபைப் புதிய சூழலில் மீள்-உருவாக்கம் செய்ய முயன்றனர்.

பழம் நூல்களை அச்சு வாகனம் ஏற்றும் நடவடிக்கையின் மூலமும், பழம் மரபுக்குப் புதிய அர்த்தப்பாடுகளைத் தருவிப்பதன் மூலமும், காலனியம் அறிமுகம் செய்த அறிவுப் பரப்பைத் தமிழ்ப் புலமை மரபு நிலைநின்று எதிர்கொள்வதன் மூலமும் இதனைச் செய்தனர். அந்த வகையான முதல் தலைமுறை அறிவாளிகளில் ஒருவர் சுந்தரனார்.

இதனை மனோன் மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் நூல் நேரடியாக விவாதிக்க வில்லை. ஆயினும், இந்நூல் தரும் விவரங்கள், விளக்கங்கள் அந்த விசயத்தை நோக்கி வாசகரைத் தள்ளுகிறது. இதைப் பற்றி இந்நூல் மதிப்புரையின் இறுதியில் விவாதிக்கலாம்.

சுந்தரனாரின் வாழ்வும் பணியும்

பெ. சுந்தரனார் 1855 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி ஆலப் புழையில் பிறந்தார். திருவிதாங்கூர் சமஸ்தானம் ஐரோப்பாவுடன் வாணிகம் செய்ய உருவாக்கிய சிறு துறைமுக நகரம் ஆலப்புழை. சுந்தரனாரின் முன்னோர் நெசவுத் தொழில் செய்த மக்களுக்கு சலுகை கொடுக்கப் பட்டதால் ஆலப் புழைக்குக் குடி பெயர்ந்த வேளாளர் குடும்பங்களில் ஒன்று என்று அ.கா.பெருமாள் கூறுகிறார். அவரது பெற்றோர் துணி வணிகம் செய்த பெருமாள் பிள்ளை-மாடத்தி அம்மாள்.

சுந்தரனார் பிறப்பதற்கு முன், சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே, கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதி முறை ஆளுகையின் கீழ் திருவிதாங்கூர் சமஸ்தானம் வந்துவிட்டது. அவர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானிய பேரரசின் நேரடி ஆளுகைப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பிரித்தானிய இந்தியப் பேரரசின் சென்னை மாகாணத்தின் அங்கம் ஆகிவிட்டது.

அந்த வகையில் காலனிய அரசு இயந்திர அலுவல்முறையும், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிற பண்பாட்டுக் களங்களும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உருவாகின. ஆலப்புழையில் பெ.சுந்தரனார் தொடக்கப் படிப்பைத் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், மெட்ரிக் குலேசன் படிப்பை ஆங்கில வெர்னாக்குலர் பள்ளியிலும் முடித்தார்.

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில், 1871-இல், அதாவது தமது 21வது வயதில் இளங்கலைப் பட்டத்தையும், 1880ஆம் ஆண்டு, அதாவது 25வது வயதில் முதுகலைப் பட்டத்தையும் தத்துவத்தில் பெற்றார்.

சுந்தரனார் தமிழ் இலக்கிய, இலக்கணத்தை எவ்வாறு படித்துக் கொண்டார் என்று தெளிவாகத் தெரியவில்லை. வீட்டிலும், ஸ்ரீ கோடகநல்லூர் சுவாமிகளிடமும் சைவசித்தாந்த சாத்திரங்களைப் பாடம் கேட்டுள்ளார்.

42 ஆண்டு காலமே (1855-1897) வாழ்ந்த சுந்தரனார் 21 ஆண்டுகள் பணி செய்தார். பெரும் பாலும் கல்வி கற்பிக்கும் பணியிலும் ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டார். இதில் 3 மட்டுமே சமஸ்தான நிர்வாகப் பணி. அதிலும்கூட கல்வெட்டு ஆராய்ச்சிப் பணியில் கவனம் செலுத்தியுள்ளார்.

திருவிதாங்கூர் அரசர் வரலாறு குறித்து எழுதிய ஆங்கில நூல், மனோன்மணியம் கவிதை நாடகம், நூற்றொகை விளக்கம், திருஞானசம்பந்தர் காலம் பற்றியும் நம்பியாண்டார் நம்பியின் காலம் பற்றியும் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்தும் அவற்றில் சிலவற்றை மொழிபெயர்த்தும் எழுதிய கட்டுரை ஆகியவை சுந்தரனாரின் தமிழியல் பங்களிப்புகள். இவற்றைப் பற்றி அ.கா.பெருமாள் விரிவாக எழுதியுள்ளார்.

இவை பற்றி எடுத்துரைப்பதின் வழி சுந்தரனாரின் பன்முகத்தை எடுத்துக்காட்டுவதில் அ.கா.பெருமாள் கவனம் செலுத்தியுள்ளார்.

திருஞானசம்பந்தர் காலம் பற்றிய ஆய்வுப் பணியில் சுந்தரனார் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியங்களின் காலத்தை நிர்ணயிப்பதில் அன்றைய ஐரோப்பிய அறிஞர் களிடையே நிலவிய இன மையவாதக் கண்ணோட்டம் நிலவியது. அதன் விளைவாக காலத்தை முன்தள்ளுவதிலும் பின்தள்ளுவதிலும் அறிவுக்குப் பொருத்த மில்லா வாதங்கள் நிலவின. அந்த நிலையில் நியாயத் தருக்க முறைப்படி திருஞானசம்பந்தர் காலத்தை கி.பி. 7ஆம் நூற்றாண்டு எனச் சுந்தரனார் நிறுவினார். இது தமிழ் இலக்கியங்களின் காலவரிசையைத் தெளிந்து கொள்வதில் மிகப் பெரிய பங்களிப்பைச் செலுத்தியது.

சுந்தரனாரின் படைப்புகளில் மனோன்மணியம் நாடகமே சுந்தரனாரைத் தொடர்ந்து தமிழ்ச் சமூகம் நினைவில் வைத்துக்கொள்ள காரணம். இந்த நூல் இன்றுவரை தமிழ்க் கல்வியில் நாடகப் பனுவல் பாடநூலாக இருந்து வருகிறது. இந்த நூலில் ஒரு விதமான நவீன தேசிய உணர்ச்சி தெரிவதாக வையாபுரிப் பிள்ளை எடுத்துக் காட்டியுள்ளார்.

சுந்தரனாரைப் பற்றி மதிப்பிட்டுப் பின்வருமாறு வையாபுரிப் பிள்ளை கூறுகிறார்:

சென்ற நூற்றாண்டின் இறுதியிலே பெரும்புகழ் பெற்று விளங்கிய தமிழ்ப் பெரியார்களுள் அறுவர் சிறப்பாக எடுத்துச் சொல்லுதற்குரியர். அவர்களாவர்: ராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை, வி.கனகசபைப் பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பூண்டி அரங்கநாத முதலியார், இராஜமய்யர் என்று பெயர் வழங்கிய சுப்பிரமணிய அய்யர், பெ. சுந்தரம் பிள்ளை.

இவ் அறுவரும் ஆங்கிலம் கற்று மேனாட்டுக் கலைப் பண்பில் திளைத்துத் தம் தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு ஒவ்வொரு வகையிலே தொண்டு புரிந்த வர்கள்... சுந்தரம் பிள்ளை தமிழிலக்கிய ஆராய்ச்சி, தமிழிலக்கிய சரிதம், தமிழ் நாடகம், தத்துவநூற் புலமை இவற்றில் எல்லாம் மேம்பட்டு, சிறந்த நூல்கள் இயற்றி, இத்துறைகள் வளர்ச்சியடை வதற்குக் காரணமாயிருந்தார்.

இந்த மதிப்பீடு இன்றும் கவனத்தில் கொள்ளத் தக்கது. வையாபுரிப் பிள்ளை குறிப்பிடும் அனைவருமே தேச உணர்ச்சி, சமூக சீர்திருத்தம், புதுமையைத் தழுவிக் கொள்ளுதல், பழமையைப் போற்றுதல் ஆகிய பண்புகளைக் கொண்டிருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 அ.கா.பெருமாள் சுந்தரனாரின் இந்த முகத்தை அதிகமாக விவாதிக்க வில்லை. வையாபுரிப் பிள்ளை சுந்தரனாரின் இன்னொரு முக்கிய முகம் தத்துவநூற் புலமையாளர் என்னும் முகம் ஆகும். இதைப் பற்றியும் அ.கா.பெருமாள் கவனம் செலுத்தவில்லை. சுந்தரனாரின் நூற்றொகை விளக்கம் என்ற நூல் பற்றிய விவரிப்பின் போதுகூட, அதை ஒரு உரைநடை நூல் என்னும் அளவிலேயே விளக்கியுள்ளார்.

சுந்தரனார்: ஒரு தத்துவநூற் தமிழ்ப் புலமையாளர்

காலனிய அரசால் உருவாக்கப் பட்ட புதிய கல்வி முறையில் சுந்தரனார் தத்துவம் பயின்று இளங்கலைப் பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மனோன்மணியம் நாடகத்தில் தத்துவ விவாதங்கள் உண்டு. தத்துவ ஆராய்ச்சியின் பயனாகவே சுந்தரனார் வரலாற்று ஆராய்ச்சியிலும் புகுந்தார் என்பது வையாபுரிப் பிள்ளையின் கூற்று. நூற்றொகை விளக்கம் என்ற நூல் சுந்தரனார் திட்டமிட்டிருந்த மிகப் பெரிய தத்துவ ஆய்வுநூல் திட்டத்தின் ஒரு சிறிய பகுதியே ஆகும்.

நூற்றொகை விளக்கம் என்ற தலைப்பில் உள்ள நூல் என்ற சொல் இன்று நாம் பயன்படுத்தும் புத்தகம் என்ற பொருளைக் குறிக்கும் சொல் அல்ல; (அறிவுத்) துறை என்ற சொல்லுக்கு ஈடானது ஆகும். நூல் என்பது அறிவினை உணர்த்தும் கருவி என வரையறுக்கும் சுந்தரனார், நூலும் சாஸ்திரமும் ஒரு பொருளுடையன என்று கூறுகிறார். “சிறப்புப் பொருள் களை நீக்கிப் பொதுவாக எதனையாவது வரன்முறை சாஸித்து ஒழுங்குபடுத்தி அறிவிப்பது என்ற பொது அர்த்தத்தை மாத்திரம் தருவதாகக் கருதில் சாத்திரமும் நூலும் ஒரு பொருளுடையனவேயாம்” என்பது சுந்தரனார் கூற்று.

பேரறிவு, சிற்றறிவு, புலனறிவு என்று அறிவை மூன்றாக வகுக்கின்றார். அதேபோல நூலையும் மதநூல், பொது நூல், கலைநூல் என்று மூன்றாக வகுக்கிறார். மத நூல், கலை நூல் ஆகிய இரண்டையும் அதிகம் பேசாது, பொதுநூல் குறித்து விரிவாகப் பேசுகிறார்.

முதல் நூல் (departmental sciences), வழிநூல் (derived sciences), சார்புநூல் (practical sciences) என பொதுநூலை மூன்றாகப் பகுக்கிறார். தத்துவநூல், கணித நூல், சத்தி நூல், இரசாயன நூல், உயிர் நூல், உளநூல் ஆகியவை பொதுநூல். சோதிடநூல், பௌமிய நூல், வியாகரணம் முதலானவை வழிநூல்.

தருக்க நூல், தரும நூல், சிற்ப நூல், நாவீகம், தனுர் வேதம், ஆயுள் வேதம் முதலானவை சார்பு நூல். அறிவை வகைப்படுத்திய முறையிலும், நூலை வகைப்படுத்திய முறையிலும் அவர் மரபார்ந்த கலைச்சொற்களைப் பயன்படுத்தினாலும், அச்சொற்களைப் புதிய அர்த்தங்களைச் சூத்திர விளக்கத்தில் அளிக்கிறார். அதைப் பற்றி விவரிப்பு விரிந்து செல்லுமாதலால், இவ்விடத்தில் தவிர்த்துக் கொள்கிறேன்.

அக்காலச் சென்னை மாகாணத்தின் சுதேச அறிவாளி களிடையே மூன்று விதமான போக்குகள் நிலவின. மரபார்ந்த மத, தத்துவ நிலைப்பாடுகளில் நின்று கொண்டு வாதப்போர் நிகழ்த்தும் போக்கு ஒன்று.

மற்றொன்று ஐரோப்பிய மரபில் கரைந்துபோய், சுதேச மரபுகளை இகழ்ந்து நோக்குவது. சுதேச மரபுகளில் நின்று, காலனியத்தால் அறிமுகமான அறிவுப்பரப்பை உள்வாங்கிக் கொள்ள முனையும் போக்கு. இந்தப் போக்கைச் சேர்ந்தவர்களே நியாய இலக்கணம் எழுதிய யாழ்ப்பாணம் முத்துக்குமாரர் சிதம்பரம் பிள்ளை, சுந்தரம் பிள்ளை போன்றவர்கள்.

சுந்தரனார் மேற்கத்திய அறிவுப்பரப்பை ஆர்வத் தோடு வரவேற்று உள்வாங்கிக் கொண்டாலும், தமிழ் மரபில் நின்றே யோசிக்கிறார் போலத் தெரிகிறது. அறிவுத் துறைகளை வகைதொகைப்படுத்தி விளக்கும் முறை இதனை உணர்த்துகிறது.

அதுமட்டுமல்லாமல் நூற்றொகை விளக்கம் சூத்திரங்களுக்கு எழுதிய விளக்கவுரையிலும் மரபான அத்வைத மரபிலோ, சித்தாந்த மரபிலோ நில்லாமல், ஆனால் அதே வேளையில் மேற்கத்திய தத்துவ மரபிற்குள்ளும் கரைந்து போகாமல், அறிவு, அறிவுப் புலங்கள் பற்றியெல்லாம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களைப் போன்று முழுதளாவிய நோக்கில், புதிய வகையில் தமது சொந்த மரபுநிலை நின்று சிந்தனை செய்கின்றார்.

இந்த விசயம் பற்றி மேலும் இலக்கிய மாணவர் களும், வாசகர்களும் சிந்திப்பதற்கான வெளி திறந்து கிடக்கிறது. அதற்கு அ.கா.பெருமாள் எழுதியுள்ள நூல் துணை செய்யும். மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் என்ற சிறிய, அறிவார்ந்த நடையில் எழுதப்பட்ட நூலே இப்படியான புதிய பரப்புகளுக்கு உந்தித்தள்ளும்.

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்

.கா.பெருமாள்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

ரூ.70.00

Pin It