உடைமை உள்ளோர் உழைப்பைச் சுரண்டும்
நடைமுறை உலகில் யாங்கணும் உளவே
புண்ணிய பூமியாம் பாரத நாட்டின்
மண்ணில் பிறந்தோர்க்குக் கூடுதல் சுமையாய்
பார்ப்பனர் தோளில் வீற்றிருப் பாரே
பாரினில் உடையோர் நேரெதிர் நிற்பார்
மயக்குமொழிப் பார்ப்பனர் எங்கும் இருப்பார்
நயந்தும் கடிந்தும் தோழர் என்பார்
திறமைக் குறைவுப் பார்ப்பனர் தானும்
அறத்தின் வழியாய்த் தாழ்நிலை அடையார்
விவரம் கூறினும் பார்ப்பனத் தோழர்
கவரல் மறைக்கக் குழப்பம் செய்வார்
உழைக்கும் மக்களின் கொடிய பகைவர்
பழைய பார்ப்பனர் புதுமுதலி யாவர்
இருபெரும் எதிரியை ஒருங்கே ஒழிப்பது
அரும்பெரும் வினைஞரின் முழுமுதல் கடனே.
 
(சொத்துடைமையாளர்கள் உழைக்கும் மக்களைச் சுரண்டும் நடைமுறை உலகில் எங்கும் இருக்கிறது. (ஆனால்) புண்ணிய பூமி என்று சொல்லப்படுகின்ற இந்தியாவில், உழைக்கும் மக்கள் உடைமையாளர்கள் மட்டுமின்றி, பார்ப்பனர்களின் சுரண்டலையும் சேர்த்துச் சுமக்க வேண்டியுள்ளது. உலகெங்கிலும் முதலாளிகள் தொழிலளர்களின் எதிரணியில் தெளிவாக நின்றிருப்பர். (ஆனால்) பார்ப்பனர்களோ இரு பக்கத்திலும் இருப்பர். இரு பக்கத்தினரையும் நயந்தும் கடிந்தும் பேசி (இரு பக்கத்தினருக்கும்) நண்பர்கள் என்றும் (இரு வேறு அணியில் உள்ள பார்ப்பனர்கள் பகைமை பாராட்டுவதாகவும்) கூறிக் கொள்வார்கள். (உழைக்கும் மக்களின் சார்பில் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் பார்ப்பனர்களிடம்) திறமை அதிகமாக உள்ளவர்கள் உயர்நிலைகளில் இருப்பதும் திறமைக் குறைவானவர்கள் கீழ் நிலை வேலைகளைச் செய்வதும் தானே நியாயம்?  பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் கீழ்நிலை வேலைகளில் இருந்து தப்பி உயர்நிலைகளில் நிலை கொண்டு விடுவதைப் பற்றியும், அதை மாற்றுவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் பேசினால் இந்த அயேக்கியத்தனமான ஏற்பாட்டை மறைக்க, குழப்பமான கருத்துகளைப் பேசுவாரே ஒழிய, திறமைக் குறைவான பார்ப்பனர்களை உயர்நிலைகளில் இருந்து கீழிறக்க ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஆகவே புதிதாகத் தோன்றியுள்ள முதலாளி வர்க்கமும், காலங்காலமாக நம்மைச் சுரண்டி வரும் பார்ப்பனர்களும், நமது இரு கொடிய எதிரிகள் ஆவர். இவ்விரு எதிரிகளையும் ஒரு சேர ஒழிப்பது தொழிலாளர்களின் முழுமுதல் கடமையாகும்.)
 
- இராமியா

Pin It