“நான் இந்த மண்ணின் சட்டத்தையும் அரசியல் சட்டத்தையும் மதிக்கிறேன். இல்லையென்றால், ‘பாரத மாதா கீ ஜே’ சொல்ல மறுக்கும் இலட்சக்கணக்கானவர்களின் தலைகளை வெட்டி இருந்திருப்பேன்.”
“சிலர் தொப்பி போட்டு கொண்டு, என் கழுத்தை வெட்டினாலும் பாரத மாதா கீ ஜே சொல்ல மாட்டேன் என்கின்றனர். இந்த நாட்டில் சில சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் மதிக்கிறோம். இல்லையென்றால், நம் நாட்டை அவமதிப்பவர்கள் ஒருவர் இல்லை, ஆயிரம் பேர் இருந்தாலும், இலட்சம் பேர் இருந்தாலும், அவர்களின் தலைகளை வெட்டும் அளவுக்கு நமக்கு பலம் உள்ளது.”
இந்தக் காட்டுமிராண்டித்தன உரையை நிகழ்த்தியர் பாபா ராம்தேவ். பி.ஜே.பி முழு பலத்துடன் ஆட்சிக்கு வந்த பிறகு, வடநாட்டு அன்னக்காவடிப் பார்ப்பனச் சாமியார்கள் தொடங்கி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வரை இதுபோல வெறித்தனமாகப் பேசி வருவதை நாம் அடிக்கடி தின ஏடுகளில் படித்திருப்போம்.
இந்து அரசியல்வாதிகளில் மிரட்டல் பேச்சுக்களைவிட, இந்த ராம்தேவின் வெறிப்பேச்சு மிகவும் ஆபத்தானது. அதாவது பண்பாட்டுத் தளத்தில் ராம்தேவின் உயரத்தைப் புரிந்தவர்களுக்கு ராம்தேவின் கோரமுகம் முழுமையாகப் புரியும். இந்தப் பேச்சுக்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்மீது சிறு நடவடிக்கைகூட எடுக்க இயலாத நிலையில், தொட முடியாத இடத்தில் அவர் உள்ளார்.
பண்பாட்டுத்தளத்தில் தனக்கிருக்கும் வலிமையான அடிப்படையைக் கொண்டு, நூற்றாண்டு களைத் தொட்ட சில பன்னாட்டு வணிக நிறுவனங்களையே மிஞ்சி, வர்த்தகத் துறையில் சாதனை களைப் படைத்து வருகிறார். அதற்காக அவர் கையிலெடுத்த ஆயுதங்கள்தான் ‘சுதேசி’, ஆயுர்வேதம், இயற்கை.
சுதேசியம் சூழ்ச்சியால் கற்பிக்கப்பட்டது
சுதேசி வர்த்தகம் பற்றிய தோழர் பெரியாரின் பார்வையைப் பார்ப்போம்.
“மனிதர்கள் உற்பத்தியான பழைய காலத்தில் - அவர்கள் மிருகப் பிராயமுடையவர்களாக இருந்த காலத்தில், ஒவ்வொருவரும் தத்தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தேடிக் கொண்டு தனித்தனியே வாழ்ந்து வந்தனர். அதன் பின் சிறிது அறிவு விளக்கமான பின்பு தனித்தனிக் குடும்பங்களாக இருந்து வாழ்க்கை நடத்த ஆரம்பித்தனர். அதன் பின் தனித்தனி சமூகங்களாகப் பெருகினர். இப்பொழுது எல்லா மக்களும் ஒரே சமூகமாக வாழ வகை தேடுகின்றனர்.
இதைப் போலவே தொழில்களும் கூட்டுறவு முறையில் வளர ஆரம்பித்தன. ஒருவனுக்கு வேண்டிய பண்டத்தை அவனே செய்து கொள்ளாமல், ஒவ்வொன்றை ஒவ்வொருவன் செய்யவும், ஒருவன் தான் செய்த பொருளை மற்றொருவனிடம் கொடுத்து தனக்கு வேண்டிய பொருளை அவனிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் நேர்ந்தது.
இதுதான் பண்ட மாற்றுதல் என்னும் வியாபாரத்திற்குக் காரணமாகும். இந்த முறையில் தான் பொருளாதாரத் துறையும், தொழில் அபிவிருத்தியும் முன்னேற்றமடைய முடியும். மக்களுடைய தனித்தனி சமூக அமைப்பும் ஒழிந்து ஒரே சமூகமாக வழியும் உண்டாகும். இந்த முறைதான் தேசத்தின் முற்போக்குக்கு ஏற்ற வழியாகும்.
இதை விட்டு விட்டுத் திரு. காந்தியின் “தனக்குத் தானே உதவி செய்து கொள்ளுதல்” என்னும் தத்துவத்தை உடைய தேசீயத்தைப் பின்பற்றும் தேசம், தொழில் முறையிலும், வியாபாரத் துறையிலும், பொருளாதாரப் பெருக்கத்திலும் வளர்ச்சியடைய முடியாமலும், மக்களுக்குள் சமத்துவமும் சகோதரத்துவமும் உண்டாக முடியாமலும், வருணாசிரம தரும வாழ்க்கை யிலேயே இருந்து கொண்டு அதிவிரைவாகப் பழய மிருகப் பிராயத்திற்குச் செல்ல வேண்டியதுதான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இதனால் தான் தேசீயமும், சுயமரியாதையும் எந்தக் காலத்திலும் ஒன்று சேரமுடியாதென்றும் கூறி வருகின்றோம்.
தோழர் பெரியார் - குடி அரசு, 03.04.1932
ராம்தேவின் பண்பாட்டு பலம்
யோகா என்ற மூடநம்பிக்கையான முறையை முதலில் ஒரு உடற்பயிற்சியாக கற்றுக்கொடுக்கத் தொடங்கிய ராம்தேவ், காலப்போக்கில் யோகாவாலேயே நீரிழிவு, இரத்த அழுத்தம், மனஅழுத்தம், உடல் பருமன் போன்ற சிக்கல்களையும் தீர்க்கலாம் என்று பரப்புரை செய்யத் தொடங்கினார். கேன்சர், எய்ட்ஸ், ஈரல், சிறுநீரகக் கோளாறுகள், புற்றுநோய் போன்ற எல்லா நோய்களையும் தனது யோகா முறையால் குணப்படுத்த முடியும் என எவ்விதக் கூச்சமும் இல்லாமல் பேசுகிறார். இலட்சக்கணக்கான மக்களும் அதை நம்பி அவரது யோகா மய்யங்களை நோக்கிச் செல்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வெளிப்படையாக இவரது ஆசிரமங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். ‘யோக் சந்தேஷ்’ என்ற இவரது மாத இதழ் இந்தியாவில் 11 மொழிகளில் வெளியாகிறது. ‘ஆஸ்தா,’ ‘ஆஸ்தா பஜன்’ என்று இரண்டு சேனல்களை நடத்தி வருகிறார். இந்த சேனல்கள் முழுநேரமும் இந்து வேதங்களிலுள்ள பண்பாடுகளைப் பரப்பும் பணியைச் செய்து வருகின்றன.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் உட்பட உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான யோகா பயிற்சி மய்யங்களை நடத்திவருகிறார். இந்த 2016 ம் ஆண்டில் இறுதிக்குள் ஹரியானாவில் மட்டும் 10,000 பயிற்சி மய்யங்களை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார். உலகெங்கிலும் பல இலட்சம் ஆதரவாளர்களைப் பெற்றுள்ளார்.
இவரது தனித்துவமான யோகாமுறை குறித்த மக்களின் மூடநம்பிக்கை, இந்து மதப்பண்பாட்டு பலம் இரண்டையும் அடிப்படையாக வைத்து தொழிற்துறையில் இறங்கிய ராம்தேவ், நெஸ்லே, கோல்கேட் - பாமாலிவ் போன்ற பெரும் பன்னாட்டு வணிக நிறுவனங்களையே ஒதுக்கி, ஓரம் கட்டியுள்ளார்.
ராம்தேவின் வணிக பலம்
பதஞ்சலி என்ற ராம்தேவின் வணிக நிறுவனம் 2014 - 2015 வருவாய் ஆண்டில் 300 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டியது. நடப்பு நிதியாண்டில் 750 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 200 ஆண்டுகளாக பற்பசை வணிகத்தில் உலக அளவில் தனி இடத்தையும், 150 ஆண்டுகளாக இந்தியாவில் பற்பசை வணிகத்தில் பெரும் சக்தியாகவும் விளங்கும் அமெரிக்க நிறுவனம் கோல்கேட் பால்மாலிவ்.
இந்தியாவில் இந்நிறுவனத்தின் வணிகம் ஒவ்வோர் ஆண்டும் 10 சதவீதம் உயர்ந்து வந்துள்ளது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் பதஞ்சலி நிறுவனம் பற்பசை வணிகத்தில் இறங்கிய பிறகு வெறும் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. 9 சதவீத இழப்பைச் சந்தித்துள்ளது.
ஆண்டுக்கு 2000 கோடிக்கு மேலான வர்த்தகத்தைக் கையில் வைத்துள்ள இந்திய தேசிய வணிக நிறுவனம் டாபர் இந்தியா ப்ரைவேட் லிமிடெட். கோல்கேட்டுக்கு அடுத்த இடத்தில், 1970 லிருந்து பற்பசை வணிகத்தில் உள்ளது. இந்த நிறுவனங்கள் பதஞ்சலி நிறுவனத்தின் பற்பசை வரவால் மிகப்பெரும் இழப்பைச் சந்தித்தன என்று நியூயார்க் டைம்ஸ், எக்கனாமிக் டைம்ஸ் போன்ற ஏடுகள் தகவல் வெளியிட்டுள்ளன.
பற்பசை, சோப், ஷாம்பு, கூந்தல் எண்ணெய், பழச்சாறுகள், பிஸ்கட், நூடுல்ஸ் , அரிசி, கோதுமை, ரவை, மைதா, பருப்புவகைகள் என 800 வகையான பொருட்களைத் தயாரிக்க பதஞ்சலி சார்பில் 28 ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. விநியோகத்திற்காக இந்தியாவில் மட்டும் 20,000 கிளைகள் உள்ளன.
பன்னாட்டு நிறுவனத் தொடர்பு
சுதேசிப் பொருட்கள், சுதேசி வணிகம் என்ற அடிப்படையில் ‘பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக’ என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட பதஞ்சலி நிறுவனம், தற்போது குரவரசந ழுசடிரயீ என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
Future Retail Ltd, Future Lifestyle Fashion Ltd., Future Consumer Enterprise Ltd., Future Innoversity Ltd., Future Supply Chains Ltd., Future Brands Ltd, Future Capital Holdings Ltd என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் ஃப்யூட்சர் குழுமம் ஆண்டுக்கு சுமார் 1000 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாகும். மேற்கண்ட ஒவ்வொரு நிறுவனப் பெயருக்கும் கீழே மேலும் எண்ணற்ற வணிகங்களை மேற்கொண்டு வருகிறது ஃப்யூட்சர்.
Generali Group என்ற இத்தாலி இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம், Staples Inc என்ற அமெரிக்க சங்கிலித் தொடர் நிறுவனம்,Celio என்ற ஃப்ரான்ஸ் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிறுவனம்,C & J Clark International Ltd என்ற இங்கிலாந்து நிறுவனம் என பல பன்னாட்டு நிறுவனங்களில் 50 சதமும், அதற்கு மேலும் பங்குகளை வாங்கி அந்நிறுவனங்களை நடத்தி வருகிறது ஃப்யூட்சர். இவைதான் பதஞ்சலி ராம்தேவின் ‘சுதேசி’ வேடத்தின் உண்மை முகம்.
ஸ்ரீஸ்ரீ ஆயுர்வேதா: ஈஷா
பதஞ்சலி நிறுவனத்தின் வெற்றி, இந்தியாவில் ஏற்கனவே அரசியல், சமுதாய, இந்துப் பண்பாட்டு பலத்துடன் உலவும் பார்ப்பனப் பன்னாட்டுச் சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரையும் வர்த்தகத்தில் இறங்க வைத்துள்ளது.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் சகோதரி பானுமதி நரசிம்மன் அவர்களின் மகன் அரவிந்த் வர்ச்சாஸ்வியை உரிமையாளராகக் கொண்ட ‘சுமேரு ஆயுர்வேதா’ என்ற நிறுவனம் ‘ஸ்ரீஸ்ரீ ஆயுர்வேதா ப்ராடக்டஸ்’ என்ற பெயரில் இந்தப் பன்னாட்டு பக்தி வணிகத்தைத் தொடங்கியுள்ளது. ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தைப் போலவே நூற்றுக்கணக்கான நுகர்பொருட்களைத் தயாரித்து சந்தைப் படுத்தியுள்ளது.
இந்த ‘சுமேரு’ வும் 40 நாடுகளில் கிளைபரப்பியுள்ள Sumeru Software Solutions என்ற பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தின் ஒரு அங்கமாகத்தான் உள்ளது. இந்த சுதேசிப் பொருட்களைத் தயாரிப்பதும் பன்னாட்டு நிறுவனம்தான். அவற்றை விநியோகிப்பதும் பன்னாட்டு நிறுவனம் தான். ஆம், பதஞ்சலி பொருட்களை விநியோகிக்கும் உரிமையைப் பெற்றுள்ள அதே ஃப்யூட்சர் குழுமம்தான் $ $ ரவிசங்கரின் சுதேசித் தயாரிப்புக்களையும் உலகம் முழுவதும் விநியோகிக்கிறது.
ரவி சங்கர் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, துபாய், டென்மார்க், தென் ஆப்ரிக்கா என உலகின் வளர்ந்த நாடுகள் உட்பட 150 கிளைகளைப் பரப்பி பன்னாட்டுச் சாமியாராகத் திகழும் ஈஷா சத்குருவும் பக்தி வணிகத்தில் இறங்கியுள்ளார். அவரும் நூற்றுக்கணக்கான நுகர்பொருட்களை இதே சுதேசி, ஆயுர்வேதம், இயற்கை எனும் ஆயுதங்களைக் கொண்டு, ஈஷா ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் சந்தைப்படுத்தியுள்ளார்.
ஆரோக்கியமானவையா?
இந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் லக்னோவில் உணவுப்பொருள் ஆய்வு அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றின் மோசடி அம்பலமாகியது. 2016 மார்ச் மாதத்தில் கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 2016 அக்டோபரில் தயாரிக்கப்பட்டதாக அறிவிப்பு உள்ள பதஞ்சலித் தயாரிப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Food Safety and Standards Authority of India ( FSSAI ) என்ற இந்திய உணவுப்பொருள் கட்டுப்பாட்டு நிறுவனத் தலைவர் ஆஷிஸ் பகுகுணா இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், “பதஞ்சலி நூடுல்ஸ் பாக்கெட்டுகளின் மேல் அச்சிடப்பட்ட FSSAI உரிம எண் போலியானது, எங்களிடம் அவர்கள் நூடுல்ஸ் தயாரிப்பிற்கான அனுமதியைப் பெறவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து பதஞ்சலி நிறுவன இயக்குநரிடம் கேட்டபோது, “ஆயுர்வேதத் தயாரிப்புகளில் உள்ள சில விதிமுறை களின்படி அரசு அனுமதிபெறத் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு இயற்கைப்பொருட்கள், ஆயுர்வேதத் தயாரிப்புகள் என்ற பெயரில் எந்த அனுமதியும் இல்லாமல், உணவுப்பொருள் தயாரிப்புக்கான எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் - மக்களின் நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக வைத்து பெரும் வணிகம் நடைபெறுகிறது. கடவுள் நம்பிக்கையைப் போன்று இந்த சுதேசிப் பொருட்களின் நம்பிக்கையும் நமக்குக் கேடாகவே வந்துள்ளன.
அயல்நாட்டு - பன்னாட்டு நிறுவனங்களின் இயந்திரங்களைப் பயன்படுத்தி, அயல் நாட்டு - பன்னாட்டு நிறுவனங்களின் உணவுப் பொருள் தயாரிப்புத் தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தி, அயல் நாட்டு மென்பொருட்களின் உதவியோடு, பன்னாட்டு சங்கிலித் தொடர் விற்பனை நிறுவனங்களின் கூட்டுறவோடு, தாமே பலநாடுகளில் சுரண்டல்களை நடத்திக் கொள்வதற்குப் பெயர்தான் ‘சுதேசியம்.’ அந்தச் சுதேசியத்திற்குத் துணையாக வருபவை ஆயுர்வேதமும், இந்துமதப் பண்பாடான யோகாவும் தான்.
சுதேச வணிகம் X பரதேச வணிகம்
இந்தியப் பகுதிகளில் வணிகச்சுரண்டலைத் தடையின்றிச் செய்ய வந்தவர்கள் தான் ஆங்கிலேயர்கள். இதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. வணிகத்திற்காக வந்தவர்கள், அதே வணிகத்திற்காக - சுரண்டலுக்காக அரசாட்சியையும் பிடித்தார்கள்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட், டூத் ப்ரஷ், சேவிங் ப்ளேடு முதற்கொண்டு இரயில் போக்குவரத்து வரை பல்வேறு நுகர்பொருட்கள், சாதனங்கள் ஆங்கிலேயர்களால் நாம் பயன்படுத்தத் தொடங்கியவைதான். இவை எல்லாவற்றிலும் அந்நியநாட்டுப் பரதேச நிறுவனங்களின் இலாப வெறி அவசியம் இருக்கும். ஆனால் இவையெல்லாம் நம்மை உலக மக்களோடு மக்களாக - சரி சமமாக உணர வைத்தவை. இதில் மாற்றுக் கருத்தும் இருக்கலாம். நாம் விளக்க வருவது என்னவெனில்,
இப்படி வணிக நோக்கத்தோடு வந்தவர்கள்தான் நம்மைப் படிக்க வைத்தார்கள். ‘தாமஸ் பெபிங்டன் மெக்காலே’ என்ற ஆங்கிலேயே அதிகாரியின் காலத்தில் 1835 ல் தான் நமக்கு ஆங்கிலேயக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவரை இந்தியாவில் சமஸ்கிருத வேதங்களும், இராமாயண, மகாபாரத, புராண, இதிகாசங்களுமே கல்வியாக இருந்தன. அவற்றையும் பார்ப்பனர்கள் மட்டுமே கற்க முடிந்தது. அந்நிலையை மாற்றி, வரலாறு, அறிவியல், கணக்கு போன்ற பாடங்களை, பார்ப்பனர்கள் மட்டுமல்லாமல் நம்மவர்களும் படிப்பதற்கு வாய்ப்பை உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள் தான்.
1835 வரை இந்தியாவில் கிரிமினல், சிவில் சட்டங்களாக இந்து மத மனுசாஸ்திரச் சட்டங்கள் தான் நடைமுறையில் இருந்தன. அதை மாற்றி மனு வுக்கு எதிராக கிரிமினல், சிவில் சட்டங்களைக் கொண்டு வந்தவர் இதே மெக்காலேதான்.
1828 லேயே ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தான் இந்தியாவில் இருந்த உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கத்தைச் சட்டம் இயற்றித் தடுத்தனர். 1892 லிருந்து தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார, சமூக உயர்வுக்காக இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்கத் தொடங்கினார்.
1891 ல் குழந்தைத் திருமணத் தடுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ‘ராவ் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா’ என்ற ஆங்லேயரால் சட்ட முன்வரைவாக முன்வைக்கப்பட்ட இச்சட்டம், 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.
கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், மருத்துவக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, அணைக் கட்டுக்கள், நீர்ப்பாசனத்திட்டங்கள், போக்குவரத்து வசதிகள் என அனைத்துமே வணிகம் செய்ய வந்தவர்களால் நமக்குக் கிடைத்தவைதான்.
பரதேச வணிகத்தால் நாம் அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தையும் இந்தச் சுதேச வணிகத்தால் இழக்கப் போகிறோம் என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம். ஏனெனில் இந்தப் பன்னாட்டு பக்தி வணிக நிறுவனத் தலைவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ் ஸின் திட்டங்களைச் செயல்படுத்தும் விளம்பரத்தூதுவர்கள் தான் ( Brand ambassador )..
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு
“...சமஸ்கிருதக் கல்வியைக் கட்டாயமாக்கவேண்டும். ஆயுர்வேதம் மட்டும் இந்தியாவின் மருத்துமாக அறிவிக்க வேண்டும்...
...பள்ளி, கல்லூரிகளில் பாலியல் கல்வியை நடத்தக்கூடாது அதற்குப் பதிலாக யோகாவைப் பாடமாக வைக்க வேண்டும். அப்போதுதான் பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்படும். ..
...இந்தியா முழுவதற்கும் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.
...‘பாரத மாதா கீ ஜே’ சொல்ல மறுக்கும் இலட்சக்கணக்கானவர்களின் தலைகளை வெட்டி எறிந்திருப்பேன்...
...ஸ்ரீராம் என்பது எங்களுடைய முழக்கம், எல்லா ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அயோத்தியா என்பது ராமர் பிறந்த இடம்தான், முகம்மது நபி பிறந்த இடம் இல்லை...”
ராம்தேவின் மேற்கண்ட பேச்சுக்கள் அவரது இந்து, பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை அறிவிக்கின்றன. உத்திரகாண்ட் காங்கிரஸ் ஆட்சிக்கவிழ்ப்பு, கருப்புப்பண எதிர்ப்பு நடவடிக்கைகள், ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதங்கள் ஆகியவை ராம்தேவின் அரசியல் பலத்தை உணர்த்துகின்றன.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும்கலை அமைப்பு, மார்ச் 11 முதல் மூன்று நாட்கள் யமுனை நதிக்கரையில் நடத்திய உலகக் கலாச்சாரத் திருவிழாவில் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்பட்டன. அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் புதுடெல்லி பசுமைத் தீர்ப்பாயம் வாழும் கலை அமைப்பிற்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. ஆனால், அப்படி இந்திய சட்டங்களை மீறி நடந்த விழாவுக்கு இந்திய ராணுவமே களப்பணியாற்றியது. இந்தியப் பிரதமர் மோடி விழாவில் பங்கேற்று உரையாற்றினார். இவையெல்லாம் இந்தக் கார்ப்பரேட் சாமியார்களின் அரசியல் பலத்தைக் காட்டுகின்றன.
இரண்டு வகையான எதிரிகள்
நமக்கு இரண்டு வகையான எதிரிகள். இரண்டுக்கும் பொதுவானது வணிகச் சுரண்டல். ஒன்று, இந்துப் பண்பாட்டைத் திணிக்கும் இந்து பக்தி வணிகர்கள். மற்றொன்று பன்னாட்டுப் பண்பாடுகளைத் திணிக்கும் பன்னாட்டு வணிகர்கள். இரண்டையும் ஒருசேர எதிர்த்துவிட இயலாது.
மேலும் பன்னாட்டு நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல பண்பாடுகள் பல நூற்றாண்டுகளாக இந்து மதப் பண்பாட்டிற்கு எதிராகவே உள்ளன. காதலர் தினக் கொண்டாட்டங்கள் தான் தற்போது ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வருகின்றன. ஜாதி ஒழிப்புக்காக மூச்சு முட்டப் பேசுபவர்கள்கூடப் பெரும்பாலும் சொந்த ஜாதிக்குள்தான் திருமணம் செய்கின்றனர். இந்த ஜாதி ஒழிப்புப் பேச்சாளர்களைவிட, சராசரி, காதலர் தினக் கொண்டாட்ட இளைய சமுதர்யம் நிறைய ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திக்கொண்டுள்ளது.
லிவிங் டு கெதர், கம்பேனியன்ஷிப், லெகின்ஸ், ஜீன்ஸ், டாப்ஸ், நிறுவனத்தின் உரிமையாளரைக் கூட பெயர் சொல்லி அழைப்பது போன்ற பண்பாடுகளையும் - வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு போன்றவற்றையும் - இந்துமதவாதிகளும், அனைத்து மதவாதிகளும், பூணூல் கம்யூனிஸ்ட்டுகளும் ஒரே நிலையில் எதிர்க்கிறார்கள்.
மேற்கத்தியப் பண்பாடுகள், மதத்திற்கு எதிரானவை என்று மதவாதிகள் எதிர்க்கிறார்கள். “முதலாளித்துவம் பெண்ணைக் கவர்ச்சியாகக் காட்டுகிறது” என்று பொதுவுடைமைக்காரர்கள் எதிர்க்கிறார்கள். மேற்கண்ட உடைப் பண்பாடுகள் கவர்ச்சியானவை என்று பொதுவுடையாளர்களும் முடிவு செய்துள்ளார்கள் என்பதைத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. மக்களுக்கு வசதியானவை என்ற கோணத்தில் பெரியாரியலாளர்களைத் தவிர வேறு எவரும் பார்ப்பதில்லை.
அதேபோல தரகு முதலாளித்துவம் என்று பொதுவுடைமையாளர்கள் பார்க்கிறார்கள். ஒரே பன்னாட்டு நிறுவனம் வெளிநாடுகளில் இடஒதுக்கீடு வழங்குதையும் - அதே நிறுவனம் இந்தியாவில் இடஒதுக்கீடு வழங்க முடியாததையும் பெரியார் தொண்டர்கள் தான் புரிந்து வைத்துள்ளார்கள். எனவேதான் தனியார்துறை இடஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.
எனவே, பரதேசப் பன்னாட்டு வணிகர்களால் உருவாக்கப்படும் பண்பாட்டுத் திணிப்பு என்பவை, பெரும்பாலும் இந்துப் பண்பாட்டுக்கு எதிராகவே இருப்பதால், தற்காலிகமாக ஒரு strategy யாக வணிகம் மட்டுமே நடத்தும் நிறுவனங்களின் பொருட்களையே பயன்படுத்தத் தொடங்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பதஞ்சலி நூடுல்ஸ்க்குப் பதிலாக, வழக்கமான நெஸ்லேயின் மேகி நூடுல்ஸ். இந்த நூடுல்ஸ்களும், அதுபோன்ற பல நுகர்பொருட்களும் உடலுக்குத் தீங்கானவை அல்லது உடலுக்கு உகந்தவை என்ற விவாதத்திற்குள் போகவில்லை. அது வேறு வகையான விவாதம். இந்தப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு நாம் பரிந்துரைப்பது இந்த நிலைப்பாடு.
பார்ப்பனர்களுக்கான பொற்காலம் வருகிறது?
மேற்கண்ட சாமியார்களின் வணிகவெற்றியானது, இன்னும் அவர்கள் அளவுக்கு வணிகத்தில் இறங்காத மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், கேரளாவின் சபரிமலை நிர்வாகம், அமிர்தானந்தமயி, கர்நாடக ஆன்மீக மடத் தலைவர்கள், காஞ்சிபுரம் கொலைக்குற்றச் சாமியார்கள் போன்றவர்களுக்கும் ஆசையைக் காட்டியிருக்கும். அனைத்துச் சாமியார்களும் வணிகத்தில் இறங்கினால் இந்தியா இந்து ராஷ்ட்ரமாக மாறும் என்பது உறுதி.
தோழர் பெரியர், அம்பேத்கர், பூலே, சாகுமகராஜ் போன்ற தலைவர்களின் உழைப்பு முற்றிலும் அழியப்போகிறது. குப்தர்கள் நடத்திய பார்ப்பனர்களுக்கான பொற்கால ஆட்சிக்காலமாக நமது எதிர்காலம் அழியும் நேரம் நெருங்குகிறது. அதை எதிர்கொண்டு போராடவேண்டும்.
மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில், இந்து மதத்தின் செல்வாக்கு அழிக்கப்பட வேண்டும். இந்துப் பண்பாட்டு நடைமுறைகள் அழிக்கப்பட வேண்டும். அதற்கான பரப்புரைகள் முழுவீச்சில் தொடங்க வேண்டும். அதற்காக உழைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகளும், அதன் தலைவர்களும் முதலில் தமது இயக்கத் தோழர்களின் வாழ்க்கையிலிருந்து இந்துப் பண்பாட்டைத் தூக்கி எறியும் வேலைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
கூட்டுறவு நுகர்பொருள் உற்பத்தி மய்யங்கள்
முதல்கட்டமாக, இதுபோன்ற பன்னாட்டுச் சாமியார் நிறுவனங்களின் நுகர்பொருட் களுக்கு எதிரான பரப்புரைகளைத் தொடங்க வேண்டும். ஒட்டுமொத்த இன அழிவுக்கு வழிவகுக்கும், இந்துச் சாமியார்களின் நுகர்பொருட்களுக்குப் பதிலாக - பொருளாதாரச் சுரண்டலை மட்டும், வணிகம் மட்டும் நடத்தும் நிறுவனங்களின் நுகர்பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.
அடுத்த கட்டமாக, கூட்டுறவு முறையில், பொதுவுடைமை நோக்கில் மக்களுக்குத் தேவையான அனைத்து நுகர்பொருட்களும் கிடைப்பதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள பலர் இணைந்து, கூட்டுறவுக் காய்கறி உற்பத்தி மய்யங்களைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகின்றனர். அதுபோல கூட்டுறவு இறைச்சி உற்பத்தி மய்யங்களைத் தோழர்கள் தொடங்க வேண்டும். கூட்டுறவு நுகர்பொருள் உற்பத்தி மய்யங்களைத் தொடங்க வேண்டும்.
இந்துப் பண்பாட்டிற்கு எதிரான இயக்கங்கள், வழக்கம்போல பரப்புரைகள், ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள் போன்றவற்றை நடத்திக்கொண்டே, இதுபோன்ற கூட்டுறவு நிறுவனங்களை உருவாக்க இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும். துணை நிற்க வேண்டும்.
யோகா என்ற ஆபத்தான பார்ப்பன ஆயுதத்தை நிராகரிக்க வேண்டும். அதற்குப் பதிலாக, தாய்ச்சி, கராத்தே, குங்ஃபூ, நடைப்பயிற்சி போன்றவைகளைப் பரிந்துரைக்க வேண்டும்.
ஆயுர்வேதம், இயற்கை உணவு, இயற்கை விவசாயம் அனைத்தையும் சந்தேகப்பட வேண்டும். அதைப் பரப்புவோரின் பின்னணிகளை ஆய்வு செய்ய வேண்டும். இயற்கை உணவு என்ற பெயரில் சைவத்தை மட்டுமே பரப்புவோரிடம் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். ‘சைவ இயற்கை’யின் ஆபத்து குறித்து அறியாதவர்களிடம் ஆடு, மாடு, கோழி, பன்றிகளையும் இணைத்து இயற்கையை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தைப் புரியவைக்க வேண்டும்.
இயற்கை விவசாயம் என்ற பெயரில் நாட்டுமாடு, நாட்டுப்பால், நாட்டுக்கோழி, நாட்டுக் கம்பு, நாட்டுச் சோளம், பாரம்பரிய விதை, சிறுதானிய உணவு, ஜல்லிக்கட்டு, வேட்டி, சேலை, பாவாடை, தாவணி என்று பேசுவோரின் பின்னணிகள் ஆராயப்பட வேண்டும். அவர்களது அரசியல், சமுதாயச் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும். அவர்களின் நிலைப்பாடுகள் மீது பாரபட்சமற்ற, சார்பற்ற ஆய்வுக் கண்ணோட்டம் வேண்டும்.
இறுதியாக, ஒன்றை நினைவு படுத்த வேண்டியுள்ளது. 1933 ல் ஈரோட்டில் நடைபெற்ற ஈரோடு சுதேச வர்த்தகர் சங்க ஆண்டுவிழாவிலேயே பெரியார் கூறுகிறார்.
“சுதேசியம் என்பது ஒரு அருத்தமற்றதும், சுயநலம் நிரப்பிய சூட்சியால் கற்பிக்கப்பட்டதுமான வார்த்தை என்பது எனது அபிப்பிராயம்....
...பரதேசம் ஒன்று இருக்கின்றது என்று தெரியாத காலத்திலும் பரதேச விஷயங்கள் நமக்கு எட்டுவதற்கு மார்க்கமில்லாதிருந்த காலத்திலும் எல்லாம் சுதேசமாகத் தான் இருந்து இருக்கும். அப்படி இருந்த இந்த நாடு இன்று ஏன் பரதேசியத்தால் கவரப்பட்டுக் கிடக்கிறது? சுதேசியம் என்கின்ற அபிமானத்தை மாத்திரம் கட்டி அழுதோமே அல்லாமல் பரதேசியம் வந்து புகாமல் இருக்கத் தகுந்த மாதிரி நடந்து கொள்ள நமக்கு யோக்கியதையில்லாமல் போய்விட்டது. நமது சுதேசியம் நமது முற்போக்கையும் அறிவு விருத்தியையும், புதுமையையும் தடைப்படுத்தி, விஷயங்களுக்குப் புதிய குணவிசேஷங்களை உண்டாக்க மார்க்கமில்லாமல் போய் விட்டது...
...உண்மையான சுதேசியத்தை விரும்பி அது இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படத்தக்க வழியில் சுதேசியமாக்கவேண்டும் என்று இருந்தோமே யானால் கடைசியாக இன்றைய வியாபார முறையை அழித்து முன்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் பண்டமாற்ற முறையைப் புதுப் பிக்க வேண்டும். அல்லது லாபத்தைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் வியாபாரம் ஒரு யோக்கியமான சமாதானமான தொழிலாகும்...
...அதில்லாமல் சுதேசியம் பேசுவதும், வியாபார விருத்தி முன்னேற்றம் பேசுவதும் ஏழைகளை, பாடுபடுகின்றவர்களை இன்னம் அதிகமாக எப்படி வஞ்சிப்பது என்பதேயாகும் என்பதோடு இப்போதைய வியாபார முறைக்கு வேறு சரியான வெள்ளையான பெயர் கொடுக்க வேண்டுமானால் பகல் கொள்ளை என்ற வார்த்தை தான் உபயோகிக்க வேண்டும்.
- தோழர் பெரியார், குடி அரசு, 28.04. 1933
சான்றுகள்:
1.தமிழ் இந்து - 04.04.16
2.Times Of India - 21.04.15
3.Economic Times - 22.04.14, 04.04.13
4.Business Standard - 25.09.13, 02.04.16
5.DNA India - 12.03.16
6.Indian Express - 21.09.15
7.http://www.news18.com/news/india/ramdev-booked-over-bharat-mata-ki-jai-slogan-remark-1229427.html
8.http://www.nytimes.com/2016/04/02/world/asia/a-yoga-master-the-king-of-baba-cool-stretches-out-an-empire.html?_r=0
9.http://www.bbc.com/tamil/india/2014/04/140428_ramdevcase
10.http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-18-17/30603-2015-10-09-05-39-12
(காட்டாறு 2016 மே இதழில் வெளியானது)
- அதிஅசுரன்