1. கனவு
......................................

"நீயும் அம்மாவும் பஃபூன் மாதிரி இருந்தீங்க
அப்புறம்
பெரீய்ய்ய பூனையைப் பார்த்து
சின்னூண்டு யானை அழுதுச்சி...
அப்புறம்.....அப்புறம்....
அப்றம் சொல்றேன்....."
.....................
2.வகுப்பறை
........................................
மகளாசிரியை
பாவனை வகுப்பில் கண்டிக்கிறாள்
குச்சியைத் தரையில் தட்டி
மம்மி...டாடி...
இன்னிமே
எப்பவுமே சண்டைபோட்டுக்க கூடாது...
அண்டர்ஸ்டேண்ட்..?

.........................................
3.வாஞ்சை
.....................................
நாம ஒரு யானைக்குஞ்சு
வளக்கலாம் அப்பா.
வேண்டாம்மா.
நாம ஒரு குருவிக்குட்டி
வளக்கலாம் அம்மா..?
பாக்கலாம்மா...
நாம ஒரு குட்டிக்குஞ்சு
வளக்கலாமா..?
கேட்டுவிட்டுச் சிரிக்கிறாள்.
.
........................................
4.மௌனம்
..................................................
இப்பொழுதெல்லாம்
"நானென்ன சின்னப்பிள்ளையா..?
நான் பார்த்துக்கொள்கிறேன்"
என்கிறாள்.
வளர்ந்துவிட்டாளாம்
கண்திறந்த பிஞ்சொன்றைக்
கையிலேந்திய இடத்திலேயே
நின்றுகொண்டிருக்கிறேன்
நான்.
.......................
5. கருணை
...................................

அவள் அழுகையில்
போலியாய் மன்னிப்புக் கேட்கையில்
நிசமாய் மன்னிக்கிறாள்.
அவளது முறைகளில்
நிசமாய் மன்னிப்புக் கேட்பதெப்படி
என்பதைக் கற்றுத்தருகிறாள்.

Pin It