(From Bihar To Tihar - Kanhaiya KumarFrom Bihar To Tihar - Kanhaiya KumarJuggernaut Books, New Delhi - 110 049)

JNU student 350இந்தியாவின் புகழ் வாய்ந்த மாணவர் தலைவரான இளம்தோழர் கன்னையா குமார் தம் நினைவுகளை இந்நூலில் சுயசரிதையாகப் பதிவு செய்துள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்து, பாட்னா நகரில் பள்ளிப் படிப்பை முடித்தவர் கன்னையா குமார். பின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து மாணவர் தலைவராகவும் ஆனார். இதுவே அவரை தீகார் சிறைக்கு அனுப்பியது.

அவரது அனுபவங்களின் பிழிவாக இந்நூல் அமைந்துள்ளது.

குழந்தைப் பருவம்

பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் இருந்து பெகுசாரி என்னும் ஊருக்குச் செல்லும் இரயில் பாதையில் மொகாமா, புருனி இரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ளது, பிகத் என்னும் ஊர் 67,000

மக்கள் தொகையைக் கொண்ட ஒரு பெரிய கிராமம் ஆகும். அரசியல்வாதிகள், அமைச்சர்கள், நீதிபதிகள், ஆளுநர்கள், நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், நடிகர்கள் ஆகிய ஆளுமைகளை உருவாக்கிய சிறப்புக்குரியது. 

இக்கிராமத்தில் வாழ்ந்த ஜெய்சங்கர் சிங் - மீனாதேவி இணையரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் கன்னையா குமார். அண்ணன் ஒருவரும் தம்பி ஒருவரும் சகோதரி ஒருவரும் உண்டு. தந்தைக்கு நிரந்தர வேலை எதுவும் கிடையாது. கிராமத்தில் உள்ள அங்கன் வாடியில் தாய் பணியாற்றி வந்தார்.

ஏழ்மையான இக்குடும்பம் கம்யூனிஸ்ட் இயக்கத் துடன் தொடர்பு கொண்டது. தந்தைவழிப் பாட்டனார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபி. புருனி அனல் மின்நிலையத்தில் ஃபோர்மேனாகப் பணியாற்றிய போது ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். மொத்தக் குடும்பமும் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபிகளாகவும், தேர்தலில் அக்கட்சிக்கே வாக்களிப்பவராகவும் இருந்தது. ஆனால் கன்னையாவின் தந்தை, துப்பாக்கி முனையில் இருந்தே புரட்சியைக் கொண்டு வரமுடியும் என்று நம்பும் சி.பி.ஐ. (எம்.எல்.) கட்சியின் அனுதாபியாக இருந்தார்.

இக்குடும்பச்சூழலில், உள்ளுர்ப் பள்ளியிலேயே இவரது கல்வி தொடங்கியது. உயர்நிலைப் பள்ளிக் கல்வியை அருகில் உள்ள ஊருக்குச் சென்று பயின்று, பள்ளியிறுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இத்துடன் இவரது கிராம வாழ்க்கை முடிவுற்றது. கல்லூரிப் படிப்புக்காக பாட்னா நகரை நோக்கி இவரது பயணம் தொடங்கியது.

பாட்னா வாழ்க்கை

தன் வாழ்க்கையிலேயே முதல்முறையாக நீண்ட தொலைவு இரயில் பயணத்தை கதரா இரயில் நிலையத்தில் இருந்து பாட்னா நோக்கி கன்னையா தொடங்கினார். பாட்னா சென்றதும் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த ‘மித்து விடுதி’ என்ற விடுதியைச் சென்றடைந்தார். அதில் மாதம் ரூ.250 வாடகையில் தங்க முடிவு செய்திருந்தார். அவர் தங்கவேண்டிய அறையில் அவருக்கு முன்னதாகவே வேறு ஒருவரும் தங்கியிருந்தார். ஒருவகையில் அவர் தூரத்து உறவினர் தான் என்றாலும் ஏற்கனவே தங்கியிருந்ததன் அடிப் படையில் அகந்தை உணர்வுடனேயே நடந்து கொண்டார். செலவைக் குறைக்கும் நோக்கில் உணவு விடுதிக்குச் செல்லாது, இருவரும் இணைந்தே சமையல் செய்து சாப்பிடலாயினர். பாட்னா நகரின் வாழ்க்கை அச்சுறுத்தும் தன்மையில் இருந்தது.

மாடுகளும், பறவைகளும்தான் குப்பைக் குவியலில் இருந்து உணவு தேடுவதை அவர் இதுவரை கண்டிருந்தார். ஆனால் முதல்முறையாகக் குழந்தைகளும், பெரியவர் களும் குப்பையில் உணவு தேடுவதைப் பாட்னாவில் தான் கண்டார்.

பாட்னா நகரில் தனிப்பயிற்சி நிறுவனங்கள் காளான்களைப் போல் வளர்ந்திருந்தன. இவற்றின் கட்டமைப்பும் கற்றுக்கொடுக்கும் ஆற்றலும் குறைந்த தரத்தில் இருந்தாலும் கட்டணம் மட்டும் அதிகம்தான். பயிற்சி நிறுவனம் ஒன்றிற்குச் சென்று அபிமன்யூ என்ற ஆசிரியரைச் சந்தித்த போது இவரது சொந்த ஊரை அவர் கேட்டறிந்தார். பின்னர்தான் இவரது தந்தை தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை அவர் அறிந்து கொண்டார். எனவே பயிற்சிக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார்.

கணிதப் பயிற்சி ஒருபுறம் இருக்க, ராம் ரத்தன் மகாவித்தியாலயா என்ற உயர்நிலைப்பள்ளியில் இண்டர்மீடியட் வகுப்பில் மாணவரானார். இது வெறும் நுழைவுப் பதிவுதான். வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. தேர்வு எழுதிவிட்டு, சான்றிதழை வாங்கிச் செல்ல வேண்டியதுதான். ஆனால் பயிற்சி வகுப்பு அப்படியல்ல. நாள்தோறும் சென்று பயில வேண்டும். ஆயினும் பொறியியல் படிப்புக்கான பாடத் திட்ட வகுப்புகளுக்கு இவர் செல்வதில்லை. பொறியியல் படிப்பை மேற்கொள்வதில்லை என்று முடிவு செய் திருந்தார். பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணம்.

தன் அறையில் இருந்து படிப்பதிலேயே இவர் அதிக நேரத்தைச் செலவிட்டார். குளிர்சாதனப் பெட்டி களையும், குளிரூட்டும் கருவிகளையும் பழுதுபார்க்கும் தொழில்நுட்பம் பயின்று, பணம் ஈட்டி குடும்பத்திற்கு உதவலாம் என்ற எண்ணம் உருவானது. இதன் பொருட்டு தந்தையின் நண்பர் ஒருவரைக் காணச் சென்றார். அருகிலுள்ள நவாட நகருக்குச் சென்றார். ஆனால் இவ்வெண்ணம் நிறைவேறவில்லை.

  • ···

பாட்னா நகர வாழ்வில் அரசியல் விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. தேநீர்விடுதி, பீடாக் கடை, ரயில் பெட்டி, பயணிக்கும் ரிக்ஷா எனப் பல்வேறு இடங்களும் அரசியல் விவாதங்கள் நிகழும் இடமாக விளங்கின. இதன் தாக்கத்தால் இவரும் அரசியல் ஆர்வம் கொண்டவரானார்.

இவர் தங்கியிருந்த வாடகை விடுதியில் மணி பூஷன் என்ற இளைஞர் தங்கியிருந்தார். உருது மொழியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருந்த இவர் ஓர் இந்து. 2002 குஜராத் கலவரத்தின் போது அங்கு சென்ற உண்மையறியும் குழுவில்  உறுப்பினராக இருந்தவர். அவர் வாயிலாகக் கேட்டறிந்த கலவரம் தொடர்பான செய்திகள் வலதுசாரி வகுப்புவாதக் கட்சியின் மீதான வெறுப்புணர்வை மேலும் வளர்த்தது. பாட்னா என்ற பெரிய நகரத்தைச் சுற்றித்திரிந்த வழக்கத்தை விட்டொழிக்க இவை தூண்டுதலாய் அமைந்தன.

செய்தித்தாள்கள் வாங்கப் பணமில்லாமையால் மணிபூஷனத்திடம் இருந்து செய்தித்தாள்களைப் பெற்று படிக்கலானார். ஆனால் அது இந்தி மொழியில் வருவது. வாழ்க்கையில் வெற்றிபெற ஆங்கிலச் செய்தித்தாள் படிக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார். ஆங்கிலச் செய்தித்தாள் வாங்க இவரிடம் காசில்லை. மணிபூஷனம் இவரை, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று செய்தித்தாள் களையும், புத்தகங்களையும் அங்கு படிக்கச் செய்தார்.

இதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் செல்வதை இவர் வழக்கமாகக் கொண்டார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் வாசகர் வட்டம் அங்குக் கூடியது. இவரும் அதில் பங்கெடுக்கத் தொடங்கினார். இவருக்கு ஏற்கனவே அறிமுகமாயிருந்த மக்கள் நாடகக் குழு (இப்டா) உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மாணவர்கள் ஆகியோருடன் முதியவர் ஒருவரும் அக்கூட்டத்தில் இருந்தார். அம்முதியவரின் பெயர் சிவசங்கர் சர்மா என்பதாகும். இவருடைய கிராமத்திற்கு அம்முதியவர் அடிக்கடி வந்து, “தன் அரசியல் விருப்பங் களை நிறைவேற்றிக்கொள்ள, பி.ஜே.பி. மதத்தைப் பயன்படுத்திக் கொள்கிறதுÓ என்று கூறுவார்.

தொடக்கத்தில் பெரும்பாலும் அமைதியாகவே வாசகர் வட்டக் கூட்டத்தில் இவர் இருந்துள்ளார். Ôஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்’ என்ற நூல் குறித்து விவாதித்தபோது இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. வெட்க உணர்வுடன் அமைதியாக உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

வாசகர் வட்டத்தில் இருந்த இவரது நண்பர் ஒருவர், இவரது நிலையை உணர்ந்து இவரைப் புத்தகக் கடை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு எளிமையான நடையில், படங்களுடன் கூடிய சோவியத் கதைப்புத்தகங்கள், வரலாறு என்பனவற்றைப் படிக்கத் தொடங்கி தன் அறிவை விரிவுபடுத்திக் கொண்டார்.

ஆயினும் குடும்பத்தின் வறுமைச் சூழல் வேலைக்குச் சென்று, குடும்பத்திற்கு உதவத் தூண்டியது. மற்றொரு பக்கம் அறிவுத் தேட்டம். இவை இரண்டுக்கும் இடையில் மனப்போராட்டம் நிகழ்ந்தது.

இதற்கிடையில் இண்டர்மீடியட் தேர்வில் இரண்டாம் வகுப்பில் இவர் தேர்ச்சிபெற்றார். பின்னர், முறையாக வகுப்புகள் நடக்கும் கல்லூரி ஒன்றில், புவியியல், வரலாறு, சமூகவியல், இந்தி, ஆங்கிலம் ஆகிய பாடங்கள் கொண்ட இளங்கலைப் பட்டப் படிப்பிற்காகச் சேர்ந்தார்.

அக்கல்லூரியில் ‘அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்’ என்ற மாணவர் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. தொடக்கத்தில் தயக்கம் காட்டிய இவர் அதில் ஆர்வத்துடன் பங்கேற்றார். நல்ல பேச்சாளராகவும் விளங்கலானார். பேச்சாற்றல் நுட்பம் குறித்து இவர் குறிப்பிடும் செய்திகள் (பக்கம்.92-93) நினைவில்  கொள்ள வேண்டியவை.

படிப்பில் கவனம் செலுத்தும்படி கல்லூரி முதல்வர் இவருக்கு அறிவுரை கூறியதுடன், ‘ஜோலோ வாலாக் களிடம்’ (ஜோல்னா பை போடுபவர்கள்) இருந்து  விலகி இருக்கும்படிக் கூறியதுடன் ‘அரசியல் என்பது நேரத்தை வீணடிப்பது’ என்றார்.

  • ···

இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றபின் முதுகலைப்பட்டப் படிப்பில் சேர முடிவு செய்து நாளந்தா திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தை, தேர்வு செய்தார். மற்றொரு பக்கம் மத்திய அரசின் தேர்வாணையத் தேர்வு (யூ.பி.எஸ்.சி) எழுத வேண்டும் என்ற அவாவும் இருந்தது.

டில்லி சென்றால் தனிப்பயிற்சி வகுப்பு நடத்தி வருவாய் ஈட்டி, அத்தொகையின் உதவியால் மத்திய அரசின் தேர்வாணையத் தேர்வுக்குப் பயிற்சி தரும் நிறுவனத்திற்குரிய கட்டணத்தைச் செலுத்தலாம் என்பது இவரது திட்டமாக இருந்தது.

டெல்லி வாழ்க்கை

பாட்னா நகரில் இருந்து, தன் புத்தகங்கள், கணினி ஆகியவற்றுடன் இரயில் ஏறி 2009-ஆம் ஆண்டில் டெல்லி வந்தடைந்தார் கன்னையா. தன் பொருளாதார நிலைக்கேற்ற அறையைக் கண்டுபிடித்து அங்கு தங்குவதே கடினமான பணியாய் இருந்தது. ஒரு வழியாக குடியிருப்புப் பகுதி ஒன்றில் பீகாரைச் சேர்ந்த தலித் மாணவர் ஒருவருடன் தங்கிக் கொண்டார்.

படிப்பில் கவனம் செலுத்தவும், யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதவும் விரும்பியமையால், அரசியல் ஈடுபாட்டைத் தவிர்த்து ஆறுமாதக் காலம் வரை வாழ்ந்து வந்தார். ஆனால் அதன் பின் நிகழ்ந்த இருநிகழ்வுகள் அவரை அரசியலுக்கு இழுத்தன.

‘ஜன்சேத்ன பிரகாஷன்’ என்ற இடதுசாரி நூல் வெளியீட்டு நிறுவனம் தன் நூல்களை ஊர்தி ஒன்றின் வாயிலாக டெல்லி நகரில் விற்பனை செய்து வந்தது. 2010 ஜனவரி 10-ஆம் நாளன்று டில்லி பல்கலைக்கழக வளாகத்தில் அவ்ஊர்தி புத்தக விற்பனைக்காக நிறுத்தப்பட்டிருந்தது. பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. (அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத்)யின் மாணவ உறுப்பினர்கள், வன்முறையில் ஈடுபட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தவர் களைத் தாக்கினர். இதைக் கண்டித்து டில்லி பல்கலைக் கழகத்தின் கலைப்பாடப் பிரிவினர்  கண்டனப் பேரணி நடத்தினர். இதில் கன்னையா குமார் கலந்து கொண்டார். புத்தகங்களை விற்பனை செய்த ஊர்தியை மாணவர்கள் தாக்கியது அவருக்கு வியப்பையளித்தது. பல மாணவர்கள் அமைப்புகளும், சமூகச் செயற் பாட்டாளர்களும் இக்கண்டனப் பேரணியில் கலந்து கொண்டார்கள்.

ஏ.பி.வி.பியினர் இவர்களையும் தாக்கினர். இப் பேரணியில் எழுப்பப்பட்ட முழக்கங்கள், பாட்னாவில் எழுப்பப்படும் முழக்கங்களை விட வேறுபட்டு இருப்பதை இவர் உணர்ந்தார். எளிமையும், கலையுணர் வையும் கொண்டு, கோபத்தை வெளிப்படுத்தும் தன்மையில் பாட்னாவில் முழக்கங்கள் எழுப்பப்படும். ஆனால் டில்லியில் கவிதைகளைப் போன்று கவர்வதாக இவை அமைந்தன. இதில் கோப உணர்வு இருந்தாலும் கேட்போரை ஈர்க்கும் முறையிலும், செய்தியை அறிவிக்கும் முறையிலும் இருந்தன.

இதில் கலந்து கொண்டவர்கள் நல்ல ஆடை அணிந்தவர்களாகவும், வளமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் காட்சியளித்தனர். வலதுசாரி ஆபத்தையும் இதற்கு எதிராக மக்களைத் திரட்ட வேண்டிய அவசியத்தையும் இவை  உணர்த்தின.

இரண்டாவது நிகழ்வு குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்த வளம் படைத்தோருக்கும், இவரைப் போல் பீகாரில் இருந்து இடம் பெயர்ந்து வந்து வாழ் வோருக்கும் இடையிலான முரண்பாடு. இதில் உருவான சிறு மோதலையும் அது தீர்க்கப்பட்டதையும் கூறிச் செல்கிறார்.

பாட்னா வாழ்வின்போது, ஏ.ஐ.எஸ்.எஃப்

தலைவர் விஸ்வஜீட் கூறும் ‘படிப்பதற்காகப் போராடு, மாற்றத்திற்காகப் படி’ என்ற தொடர்களை இவர் நினைவு கூர்கிறார்.

  • ···

JNU 450இங்கும் வாசகர் வட்டம் ஒன்று மாதம் தோறும் ஒரு சனிக்கிழமையன்று கூடியது. இதில் உறுப்பினர் ஒருவர் கட்டுரை படிக்க அதன் மீது விவாதம் நடைபெறுவது வழக்கமாயிருந்தது.

ஒரு கூட்டத்தில் பிரித்திம்சிங் என்ற பொருளியல் அறிஞர் இந்தியப் பொருளாதாரம் குறித்துக் கட்டுரை படித்தார். இதன் மீதான விவாதத்தில் இவர் பல வினாக்களை எழுப்பினார். அடுத்து, ‘வேலையின்மை’ என்ற தலைப்பில் கட்டுரை படிக்கும்படி இவரிடம் கூறினர்.

இதன்படி இவர் படித்த கட்டுரை நல்ல வரவேற்பைப் பெற்றது. இக்கட்டுரையில், ‘மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து மார்க்ஸ் கண்டு கொள்ள வில்லை, அவரைப் பொறுத்தளவில் வறுமைக்கான காரணம் செல்வம் ஓர் இடத்தில் குவிவதுதான்’ என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன், இதே விகிதத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் நிகழ்ந்தால் நாம் பேரழிவை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார்.

இக்கூட்டத்திற்கு வந்திருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர், சமத்துவமின்மையும், முதலாளித்துவத்தின் பேராசையும்தான் வறுமைக்குக் காரணம், மக்கள் தொகையல்ல என்று குறிப்பிட்டார். இவ்வாசகர் வட்டமானது, பேராசிரியர்கள் மலாக்கர், பிரித்திம்சிங் போன்றவர்களுடன் உரையாடும் வாய்ப்பைத் தந்தது. தம்முடன் கருத்து மாறுபாடு கொண்டாலும் சமமாக நடத்தினார்கள் என்ற உணர்வு இவருக்கு ஏற்பட்டது.

அதே ஆண்டில் டில்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தேர்தலில் ஏ.அய்.எஸ்.எஃப் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்காகத் தேர்தல் பணியில் ஈடுபட்டார். எதிர் அணியில் ஏ.பி.வி.வியும் காங்கிரஸ் கட்சியின் என்.எஸ்.யூ.ஐயும் (நேஷனல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் ஆஃப் இந்தியா) இருந்தன. இவை இரண்டும் வெளிப்படையாகவே வாக்குகளுக்காக, மது, பணம் என்ற இரண்டையும் வழங்கின. பீகார் மாணவர்களை ஈர்ப்பதற்காக மனோஜி திவாரி என்ற புகழ்பெற்ற போஜ்புரி பாடகர் வரவழைக்கப்பட்டிருந் தார். திரைப்பட நட்சத்திரங்களின் நிகழ்ச்சியும் ஒருங்கு செய்யப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் ஏ.ஐ.எஸ்.எஃப்பின் வேட் பாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு பக்கம் மார்க்சிய அரசியல் சிந்தனையாளர்களான அனில் ராஜம்வாலே, கிருஷ்ணா ஜா என்பவர்களுடன், சோவியத் வீழ்ச்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோல்வி குறித்து விவாதிக்கும் வாய்ப்புக்கிட்டியது. இவ்வாறு நேரடி அரசியலில் இவர் இணைய ஆரம்பித்தார்.

இதற்கிடையில் யூ.பி.எஸ்.சி. தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதன் பொருட்டு புதிய பயிற்சி வகுப்பில் சேரவேண்டிய நிலை. இதற்கான பொருளாதார நிலை இல்லாமையால் தேர்வு எழுதுவதைக் கைவிட நேர்ந்தது.

நாளந்தா திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் என்றாலும் அதில் இவருக்கு மனநிறைவில்லை. தொலைதூரக் கல்வியானது கற்றலில் இருந்து தொலைதூரத்தில் வைப்பதாகவே கருதினார். கல்வியாளராக வேண்டும் என்பதே இவரது விருப்பமாக இருந்தது. இதற்கான பொருத்தமான இடமாக ஜே.என்.யூவை அவர் தேர்வு செய்தார்.

  • ···

ஜே.என்.யூ வாழ்க்கை

வாசகர் வட்டத்தின் வாயிலாக ஜே.என்.யூவில் ஆப்பிரிக்க இயல் துறையில் பேராசிரியராக இருந்த மலாக்கரின் அறிமுகம் கிடைத்தது. அவரது அறிவுரைப் படி எம்ஃபில் படிப்புக்கான விண்ணப்பத்தில் அத் துறையை, முதலாவதாகத் தேர்வு செய்திருந்தார். இதற்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்ற பின் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் மாணவராக நுழைந்தார்.

பல்கலைக்கழகத்தின் மைய நுழைவாயில் வழியாக நுழைந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள ‘பிரம்ம புத்திரா’ விடுதியை நோக்கி நடந்து சென்ற அனுபவத்தை இவர் அழகுற வருணித்துள்ளார்.

தான் இருக்கும் இடம் டெல்லி என்பதையே இவரால் நம்பமுடியவில்லை. இவர் அங்கு நுழைந்த காலம் மழைக்காலம் என்பதால், சுற்றியுள்ள குன்றுகள் செழிப்பாகவும், பசுமையாகவும் காட்சியளித்தன. சுற்றுப்பாதையில் சிறு கொம்புகளையுடைய மான்களும் மயில்களும் உலாவி மனதை மயக்கும் இடமாகக் காட்சியளித்தது.

இவர் காணச் சென்ற நண்பர் தங்கியிருந்த பிரம்ம புத்திரா விடுதியில் இடமின்மையால் ஜீலம் விடுதிக்கு இவரை அனுப்பிவைத்தார். அன்று இரவை அங்கு கழித்தார். அங்கு தங்கியிருந்த மாணவர்கள் ஏராளமான நூல்களைச் சேகரித்து வைத்திருந்தனர்.

மகளிர்க்கென்று தனியாகவோ ஆண்கள் விடுதியில் ஒரு பகுதியாகவோ தனி விடுதிகள் இருந்தன. ஆண்கள் விடுதிக்குப் பெண்கள் தடையின்றி வந்து சென்றனர். இரவு இரண்டு மணிக்குக்கூட அவர்கள் பயமின்றி நடமாடினர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களுக்கான நேர்முகத் தேர்வு நடந்து கொண்டிருந்ததால், மாணவர் கூட்டம் மிகுதியாக இருந்தது. இந்நேர்முகத் தேர்வுக்கு வந்த மாணவர்கள் இரு பிரிவுகளாகக் காட்சி யளித்தனர். ஒரு பிரிவினர் கன்னையா போல், இரவல் வாங்கிய இடைவார்கள் காலணிகள் அணிந்தவர்கள். மற்றொரு பிரிவினர் தோளில் ஜோல்னாப் பையுடன் முகம் மழித்தோ, மழியாமலோ எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாதவர்கள்.

நேர்முகத் தேர்வறைக்குள் பதட்டத்துடன் நுழைந்த வுடன், அவர் சேர விரும்பிய துறையினரின் அணுகு முறை அவரது பதட்டத்தைப் போக்குவதாக இருந்தது. இந்தி ஆங்கிலம் என்ற இரண்டில் எந்த மொழியில் பேச விரும்புகிறாய்? என்பதுதான் முதல் வினாவாக அமைந்தது. இவரது தாய்மொழியான இந்தியிலேயே இவர் விரும்பியபடி வினாக்கள் கேட்கப்பட்டன. நேர்முகத் தேர்வில் இளம் அறிஞர் (எம்ஃபில்) படிப்பிற்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். சட்லஜ் விடுதியில் தங்க இவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. மூத்த மாணவர்கள் புதிய மாணவர்கள் என்ற பாகுபாடு அங்கில்லை. இதனால் எவ்விதக் கூச்ச உணர்வோ அச்ச உணர்வோ ஏற்படவில்லை.

ஒருநாள் விடுதி மாணவர்களுடன் நடந்த விவாதத்தில் சற்றுக்கடுமையான சொற்களைப் பயன்படுத்திவிட்டார். அளவு கடந்து பேசிவிட்டதாக நினைத்து வருந்தி மூத்த மாணவரிடம் இவர் மன்னிப்புக் கேட்டார். அதற்கு அம்மாணவரின் எதிர்வினை இவ்வாறு இருந்தது. ‘மன்னிப்புக் கேட்டு என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தாதே.’

வகுப்பறைகள் வழக்கமான வகுப்பறைகளாகக் காட்சியளிக்கவில்லை. வட்டவடிவான மேசையுடன் கூடிய வகுப்பறைகள் மாநாட்டு அறைகளை நினை வூட்டின. முதல் நாளன்று ஆசிரியர் நுழைந்தவுடன் மரபுப்படி இவர் எழுந்து நின்றார். Ôஏன் எழுந்து நிற்கிறாய். இது பள்ளிக்கூடமாÕ என்று ஆசிரியர் கேட்டார். இவரும் வேடிக்கையாக Ôஒருவகையில் இது பள்ளிக்கூடம் தானே!Õ என்று விடையளித்தார்.

‘சர்வதேச ஆய்வுப்பள்ளி’ (School of InternationalStudies) என்ற துறையின் பெயரையே இவ்வாறு குறிப் பிட்டார். இவருடைய பதிலைக்கேட்டு நகைத்து விட்டு அமரும்படி ஆசிரியர் கூறினார்.

பெரும்பாலான ஆசிரியர்கள் நட்புணர்வுடனேயே மாணவர்களிடம் நடந்து கொண்டார்கள். தங்களுக்குச் சமமானவர்களாக நினைத்தே உரையாடினார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்தது. வகுப்பறைகளில், கூட்டங்களில், உணவுக் கூடங்களில் என ஒவ்வொரு இடங்களிலும் அரசியல் இடம் பெற்றிருந்தது. ‘சாயாÕவுக்கும் (தேநீர்) சர்ச்சைகளுக்கும் (விவாதங்களுக்கும்) உரிய இடங்களாக, ‘தபாக்கள்’ எனப்படும் உணவுக் கூடங்கள் திகழ்ந்தன. இவற்றுள் ‘கங்கா தபா’ குறிப்பிடத்தக்கதாய் விளங்கியது. தேநீரைவிட விவாதங்களும் உணவைவிடத் தோழமையும் இங்கு முக்கியத்துவம் பெற்றிருந்தன. தோழமையும் தேநீரும் கங்கா தபாவைப் போல் வேறு எங்கும் காண முடியாது.

பெரும்பாலான மாலை நேரத்தை கங்கா தபாவிலேயே இவர் செலவழித்தார். 2014-இல் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்பு ஜே.என்.யூ. நிர்வாகம், விவாதங்களையும் கருத்துப் பரிமாற்றங் களையும் தடுத்து நிறுத்த விரும்பியது. இதன் அடிப் படையில் ஜே.என்.யூவின் தபாக்களை மூடிவிட முடிவெடுத்தது. கருத்துக்களை முன்வைத்து, விவாதிக்கும் பண்பாடு வளரும் இடமாக, தபாக்களை அது கருதியது.

  • ···

மத்திய அரசின் பொதுத் தேர்வு எழுதும் எண்ணத்தைக் கைவிட்டபின் அரசியல் செயல் பாட்டாளராகும் எண்ணம் உருப்பெற்றது. படித்துக் கொண்டே அரசியலில் ஈடுபடுவதற்கான இடமாக ஜே.என்.யூ விளங்கியது. பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்புடைய இயக்கங்கள் அங்கு செயல்பட்டு வந்தன. ஏ.பி.வி.பி. (அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்) என்ற பெயரிலான மாணவர் அமைப்பு பா.ஜ.க. சார்புடைய தாகவும், என்.எஸ்.யூ.ஐ. (நேஷனல் ஸ்டூடன்ஸ் யூனியன்) காங்கிரஸ் சார்புடையதாகவும் செயல்பட்டன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்புடையதாக ஏ.ஐ.எஸ். எஃப் என்ற அமைப்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எஸ்.எஃப்அய் என்ற அமைப்பும் இருந்தன.

இவற்றுள் எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்பதே மாணவன் ஒருவனின் அடையாளமாக விளங்கியது. அவன் சார்ந்த மாணவர் அமைப்பு எடுக்கும் முடிவு சரியானதோ தவறானதோ அதை அவன் ஆதரிக்க வேண்டும்.

  • ···

ஏ.பி.வி.பி. கூட்டம் ஒன்றில் ‘சாது’ போன்ற தோற்றத்துடன் ஒருவர் உரையாற்றினார். நாம் இந்தப் பிறவியில் செய்யும் கர்மங்களின் பலனையே அடுத்த பிறவியில் அனுபவிக்க நேரிடும் என்று அவர் குறிப் பிட்டார். Ôமுதல்முறையாக பிரம்மன் உலகத்தைப் படைத்தபோது(!) கர்மம் எதுவும் செய்யாதிருந்த மனிதர்கள் என்ன பயனை அனுபவித்தார்கள்Õ என்ற கேள்வியை இவர் எழுப்பியபோது இவரது இந்தி உரையைப் பாராட்டிய சாது விடை எதுவும் அளிக்க வில்லை.

இடதுசாரி சார்புடைய மாணவர் அமைப்புகளில் கேள்விகள் கேட்க அனுமதிப்பார்கள் என்றாலும் அதற்கு அளிக்கப்படும் விடைகள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாகயிராது.

கன்னையா, ஏ.அய்.எஸ்.எஃப்பில் இணைந்து கொண்டார். மேடைப் பேச்சில் ஆர்வம் கொண்ட இவர் இந்த அமைப்பில் இணைந்து தன் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். ஆனால் ஒரு வேறுபாடு. பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, பரிசு வாங்குவதே ஜே.என்.யூவில் சேர்வதற்கு முன் நோக்கமாக இருந்தது. தாம் சார்ந்திருந்த அமைப்பை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதே இங்கு நோக்கமாக அமைந்தது. கதைகளும் கவிதைகளும் இவரது உரையில் இடம் பெற்றன. ஜே.என்.யூவில் இவரது முதல் உரை மார்ச் 2012இல் நிகழ்ந்தது.

தேர்தல் முறையில் ஜே.என்.யூ. நிர்வாகம் ஏற்படுத்திய மாறுதல்கள், இதற்கு மாணவர்களின் எதிர்ப்பு, தேர்தல்கள் நடத்த உச்சநீதிமன்றம் விதித்த தடை என்பனவற்றால் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெறாதிருந்த நிலையில், சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மார்ச் 2012ல் தேர்தல் நடைபெற்றது.

சி.பி.அய்யின் ஏ.அய்.எஸ்.எஃப் அமைப்பும் சி.பி.எம்.மின் எஸ்.எஃப்அய்யும் இணைந்து ஓரணியாகப் போட்டியிட்டன. எதிரணியில் ஏ.பி.வி.பி.யும், அகில இந்திய மாணவர் அமைப்பும் (ஏ.அய்.எஸ்.ஏ) இருந்தன.

இத்தேர்தலில் ஏ.அய்.எஸ்.எஃப் அமைப்பின் சார்பில் கன்னையா குமார் போட்டியிட்டார்.

தொடரும்

Pin It