ஐக்கிய நாடுகள் சபையின், ‘காலநிலை மாற்றத்திற்கான அரசுகளின் அமைப்பு’ (IPCC) தனது ஆறாவது இறுதி அறிக்கையை 2023, மார்ச் 20 அன்று வெளியிட்டது. ஏற்கனவே அது வெளியிட்ட அறிக்கைகள் புவிப்பந்தின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவை எட்டினால் அது தடுக்க இயலாத பேரிடர்களின் தொடரோட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்கும் என எச்சரித்திருந்தது. புவிப்பந்தின் மீது ஒரு போர்வை போல கவிழ்ந்துள்ள பசுங்கூட வாயுக்களின் அளவு அதிகரிப்பதே புவி வெப்பமாதலுக்குக் காரணம். இந்த வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்திக் குறைக்க வேண்டும். அதன்மூலம் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்வதே மானுடக் கூட்டம் பிழைத்துக் கிடப்பதை உறுதி செய்யும் என்றும் எச்சரித்தது.

பருவகால மாற்றத்திற்கு முகம் கொடுக்கும் நோக்கில் கூட்டப்பட்ட முதல் சர்வதேச மாநாடுதான் 1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாநகரில் கூட்டப்பட்ட ‘ரியோ புவி உச்சி மாநாடு’ (Rio Earth Summit). உச்சி மாநாடு பருவகால மாற்றம் குறித்த ஐ.நா சட்டகத்தை (UNFCC - United Nation Framework on Climate Change) நிறைவேற்றியது. இது வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் இருப்பு மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்படுவதற்கான ஒரு செயல் திட்டத்தை முன்மொழிந்தது. இந்த செயல்திட்டம் 21 மார்ச் 1994 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதில் 195 நாடுகளும் அமைப்புகளும் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த நாடுகள் மற்றும் அமைப்புகளின் தொகுப்பு ஆண்டுதோறும் கூடுவது வழக்கமாகியது. இந்த வருடாந்திர மாநாடுதான் ‘உறுப்பினர்களின் மாநாடு’ (‘Conference of Parties') என அழைக்கப்படுகின்றது. இதன் 28 ஆவது அமர்வு இந்த ஆண்டு இறுதியில் துபாய் நகரில் நடைபெற உள்ளது. இந்த அமர்வின் நோக்கம் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை மீளாய்வு செய்வதே ஆகும்.

இந்த ஆய்வறிக்கை புவிப்பந்தின் வெப்பநிலை வெகுவிரைவில் 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வைத் தாண்டிவிடும் எனக் கூறுகின்றது. வெப்பநிலை உயர்வைத் தடுக்க, ‘பசுங்கூட வாயு’ உமிழ்வைக் குறைக்க தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமான அளவு எடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. இந்த நடவடிக்கைகள் எடுக்க மிகக் குறுகிய கால அவகாசமே உள்ளது. ஏனெனில் ஒரு நிலைமாற்று வெப்பநிலையை அடைந்தால் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி ஓடும்; அவற்றின் கீழுள்ள மீத்தேன் வாயு வெளியேறி புவிவெப்பநிலையை அதிகரிக்கும். பின்பு மேலும் மேலும் பனிப்பாறை உருகும்; மேலும் மேலும் மீத்தேன் வெளியேறும்; மேலும் மேலும் வெப்பநிலை உயரும் - இப்போது எடுக்கவில்லையென்றால் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகள் எந்தப் பலனும் தராது. கரியமில வாயு உமிழும் அனைத்து மின்னிலையங்களையும் அனைத்து தொழிற்சாலைகளையும் மூடித் தாளிட்டாலும் பலன் தராது.

புவி வெப்பமாதல் காரணமாக பருவ மழை முந்தைய காலங்களைக் காட்டிலும் அதிகம் பெய்வது சில இடங்களில் நடந்துள்ளது. புயல், சூறாவளி, வெள்ளம், வறட்சி ஆகியவையும் பருவ மழை பொய்த்துப்போய் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதும் மானுடம் காலங்காலமாக கண்டுவரும் இயற்கைப் பேரிடர்கள்தான். ஆனால் இவை முன்பு இல்லாத அளவுகளில், முன்பு இல்லாதவாறு அடிக்கடியும் உலகின் பல பகுதிகளில் நிகழ்வது வாடிக்கையாகி வருகின்றது. சூறாவளி என்றால் என்னவென்றே தெரியாத பிரேசில் நாட்டில் சூறாவளி, அமெரிக்காவின் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவுகளில் வறட்சி, வெள்ளம் என பருவநிலை மாறியுள்ளது. துருவப் பகுதிகளிலும் கிரீன்லாந்து போன்ற நிலப்பரப்புகளிலும் பல மில்லியன் ஆண்டுகளாக இருந்துவந்த பனிப்பாறைகள் உருகி அளவு குறைந்துள்ளன. கடலின் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது. சிறு தீவுகளும் கடற்கரையை ஒட்டிய நகரங்கள் மீன்பிடி குடியிருப்புகள் நீருக்குள் செல்லும் அபாயம் அதிகரித்து வருகின்றது. விவசாயம் பாதிக்கப்பட்டு வருகின்றது. மழை பெய்ய வேண்டிய காலங்களில் பெய்யாது கெடுப்பதும் பெய்யக் கூடாத காலங்களில் பெய்து கெடுப்பதும் அதிகரித்து வருகின்றது. இன்னும் முழுமையாய் மதிப்பீட்டிற்குள் வர இயலாத பல பாதகங்கள் நடந்து வருகின்றன.

  • இது ஃபாசிசம் போல, இயற்கைப் பேரிடர் போல சகல பகுதி மக்களையும் பாதிக்கும் பிரச்சனை; ஆனாலும் எல்லாப் பிரச்சனைகளிலும் போல அடித்தட்டு மக்கள்தாம் முதலிலும் மோசமாகவும் பாதிக்கப்பட உள்ளார்கள் என்பதையும் கவனப்படுத்த வேண்டும்.
  • வாழ்நாளெல்லாம் அறிவியல் நோக்கிற்காகவும் பகுத்தறிவிற்காகவும் பணியாற்றிய விண்ணியல் நிபுணரான கார்ல் சேகன், ‘பேரண்டத்தில் விண் திரள்களில், விண்மீன்களில் நடைபெறுவனவற்றை நினைக்கும்போது மானுடரின் சண்டைகள், சர்ச்சைகள், அக்கறைகள் எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தெரிகின்றது’ என்றார். புவிப்பந்தே பேரழிவின் விளிம்பில் நிற்கும்போது அதனை அந்த நிலைக்குத் தள்ளிய அமெரிக்காவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் எடுக்கும் நிலைபாடுகள் சற்றும் பகுத்தறிவிற்குப் பொருத்தமற்றதாகவும் கிஞ்சித்தும் மானுட உணர்வற்றதாகவும், பொறுப்பற்றதாகவும் இருக்கின்றன. மறுபுறத்தில் வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகளின் தலைமைகள் இந்த ஆதிக்கச் சக்திகளை வழிக்குக் கொண்டு வரும் திறனின்றி கையறுநிலையில் இருக்கின்றன. மிகப்பெரிய பிரச்சனை இந்தியாவிற்கும் ஏனைய வளரும் நாடுகளுக்குமே உள்ளன. வளர்ச்சியும் மேம்பாடும் இல்லாது, மக்களுக்கு குறைந்தபட்ச நல்வாழ்வை அளிக்க முடியாது எனும் நிலை ஒரு புறமிருக்க, இருக்கக் கூடிய வளி மண்டல இடத்தில் இவற்றின் பங்கு என்ன என்பது ஒரு சிக்கலான கேள்வியாகத் தொடர்கின்றது.

பரந்துபட்ட பிரச்சாரமும் உணர்வூட்டலுமே முதல் படி. சிறியதும் பெரியதுமாய் ஆயிரம் ஆயிரம் நூல்கள்; சிறியதும் பெரியதுமாய் ஆயிரம் ஆயிரம் கூட்டங்கள்; எளிமையாகவும் ஆழமாகவும் ஆயிரம் ஆயிரம் விளக்கங்கள் எல்லாம் தேவை.

"கடக்கவியலாக் கடலும் காடும் மலையும் பாலையும்

கடந்திட வேண்டும் பயணிகளே ஜாக்கிரதை

தள்ளாடுது படகு, கொந்தளிக்குது வெள்ளம், தவறிவிட்டது வழி

அறுந்துவிட்டது பாய். சுக்கான் பிடிக்கத் துணிவுள்ளவர் வாருங்கள்

புயல் கடுமைதான் எனினும்

போய்ச் சேரத்தான் வேண்டும் மறுகரை”

- கவி நஜ்ருல் இஸ்லாம்

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Pin It