chennai flood 334

தமிழ்நாட்டிலிருந்து சென்னை துண்டிக்கப்பட்டு தற்காலிகமாக மீண்டு வருகிறது. இரயில்கள், பேருந்துகள் மற்றும் விமான சேவைகள் முடங்கி தற்போது இயங்கத் தொடங்கியுள்ளன. இதுவரைக்கும் 60-க்கு மேற்பட்ட ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்ற நிலைமை மாறி 3/12/2015-இல் மட்டும் 100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள தகவல்கள் நம்மை நிலைகுலைய வைத்துள்ளன. சரியான கணக்குகள் வெளிவரும்போது அது மீண்டும் நம்மை அதிரவைக்கலாம்.

இதையெல்லாம் இயற்கை சீற்றம், நம் சக்திக்கு மீறியது என்று விட்டுவிட முடியுமா? அல்லது நாம், நமது நீர்நிலைகளையும், நீர்வழித்தடங்களையும் பராமரிக்கவில்லையென்று குற்றம் சாட்டி சுருக்கிவிட முடியுமா?

பாரிசில் நடைபெற்று வரும் "சர்வதேச பருவநிலை மாற்ற மாநாட்டில்" தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழைக்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணமாகும் என்றும், ஆனாலும் இதையெல்லாம் எதிர்கொண்டுதான் நாடுகள் முன்னேற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இம்மாநாட்டிலிருந்து திரும்பிய இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் "சென்னை மழையை பருவநிலை மாற்றத்துடன் தொடர்புப்படுத்தக் கூடாது" என்று கூறியுள்ளார்.

எது உண்மை?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொலராடோவில் உள்ள அமெரிக்க தேசிய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர் கெவின் ட்ரென்பெர்த் "பருவநிலை மாற்றத்தால் உலகின் ஒரு பகுதியில் கடும் வறட்சியையும், இன்னொரு பக்கம் பெரும் வெள்ளங்களையும் எதிர்பார்க்கலாம்” என்று கூறியிருந்தார். மேலும் "இதற்காக நாம் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளவில்லையென்றால், மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்” என்றும் எச்சரித்திருந்தார்.

வளர்ந்த நாடுகளின் ஆய்வாளர்கள், "புவி வெப்பமடைதல் நிகழ்வினால், சூரியன் வடபகுதியில் சஞ்சரிக்கும் போது, இந்தியப் பெருங்கடலின் கிழக்குப்பகுதியில் வெப்பம் அளவிற்கு அதிகமாக இருப்பதையும், அதனால், காற்றிடைப்பகுதி வடக்கில் வெகுதூரம் நகருகின்றது என்றும்; இதனால், இந்திய துணைக்கண்டத்தில் மழையளவு அதிகரித்து வெள்ள அபாயம் நேரிடுகின்றது என்றும்; இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்தோனேசியா போன்ற நாடுகளில் வறட்சி நிலவுகிறது என்றும்" தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் வெப்பநிலை முன்பைவிட இந்த வருடம் அதிகமாக பதிவாகியுள்ளது என்றும், 2015-ஆம் ஆண்டுதான் மிகப்பெரிய வெப்ப வருடம் என்றும் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்திருக்கிறது .

இந்தியாவின் தென்மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு கூடுதலான மழையைத் தருவது வடகிழக்குப் பருவமழை. பெரும்பாலும் கீழைக்காற்றுகளாலும், வங்கக்கடலில் தோன்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களாலும் இப்பருவமழை பெய்யும். "இந்த ஆண்டு, வழக்கமாக அக்டோபர் மத்தியில், ஐப்பசி முதல் வாரத்தில் துவங்கவேண்டிய வடகிழக்குப் பருவமழை இவ்வருடம் தாமதமாக, அக்டோபர் 28-ஆம் தேதி துவங்கும்" என்று இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருந்தது. "நவம்பரில் வடகிழக்குப் பருவமழை கடுமையாக இருக்கும்" என்று முன்னறிவிப்பும் செய்திருந்தன.

இதுபோல ஆய்வுச்செய்திகள் ஆயிரம் இருந்தும் நமது அரசுகள் என்ன செய்கின்றன என்கிற கேள்வி முக்கியமானதாகும். இந்தநிலையில் மத்திய அமைச்சரின் தற்போதையப் பேச்சு இனி வருங்காலத்திலும் நமக்கு விடிவில்லையோ என்ற அச்சத்தையே உருவாக்குகிறது.

புவி வெப்பமய அபாயம் குறித்த நமது அறியாமை

உலக வெப்பமயமாதலின் தாக்கத்தை நாம் உணர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவில் இதன் தாக்கம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. உதாரணமாக கொல்கத்தாவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் இருந்த ஒரு தீவு சமீபத்தில் கடலில் மூழ்கியிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டிய கடற்பகுதியில் இச்சாமதி ஆறும், இராய்மங்கல் ஆறும் கலக்குமிடத்தில் 10 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட மூர் என்ற தீவு இருந்தது. 3 கி.மீ. நீளமும் 3.5 கி.மீ. அகலமும் கொண்ட அந்தத் தீவு, பருவநிலை மாற்றத்தால் கடல்நீர்மட்டம் உயர்ந்து மூழ்கியதாக கூறப்படுகிறது.

இந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்னைகளில் ஒன்று புவி வெப்பமயமாதல். இந்நிலையில், தற்போதைய மழை சென்னையையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் இயற்கையைப் பாதுகாப்பது குறித்து சிந்திக்க வைத்தால் நலமெனத் தோன்றுகிறது.

chennai rain flood 352

வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால், பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைவதே புவி வெப்பமடைதலாகும். கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்த காலத்தில் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருள்களை அளவுக்குமீறி பயன்படுத்தியதும், காடுகளை அழித்ததும் சேர்ந்து பசுங்குடில் வாயுக்களின் அளவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.

பசுமை இல்ல வாயுக்களின் பெருக்கத்தினால் வெப்பநிலை உயர்ந்தால் கடல்நீர் ஆவியாதலும் அதிகமாகும். இந்த ஆவியாதலினால் மேகங்கள் அதிகளவில் தோன்றும். இதனால், சூரிய ஒளி புவிக்கு வருவது தடுக்கப்படும். மனித நடவடிக்கைகளினால் பசுமை இல்ல (குறிப்பாக கார்பன்) வாயுக்களின் அளவு அதிகரித்து புவி வெப்பமடைகிறதாகவும், கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைதல், பருவமழை பொய்த்து போகுதல் அல்லது கடும்மழை பெய்தால் போன்ற காலநிலை தொடர்பான இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 

தொழில்சாலை கழிவுகள் மற்றும் அவைகள் வெளியேற்றும் புகைகள், வாகனங்கள் வெளியேற்றும் புகைகள் ஆகியவற்றால் தரைமட்டத்தில் குறைவாக இருக்க வேண்டிய ஓசோன் வாயு அதிகரித்து புவியின் வெப்பம் உயரும். பெரிய அளவிலான விளைச்சல் நிலங்களை கார் தொழில்சாலை, வேறு பல தொழில்சாலைகளுக்குப் பயன்படுத்துவதால் நிலத்தடி நீரையும், நீர்மட்டத்தையும் பருவமழையை பாதித்து வெப்பநிலையை உயர்த்தும். வாகனங்கள், மற்றும் தொழிற்சாலை பெருக்கத்தினால் வெளியேறும் தூசுக்கள், உயரமான கட்டிடங்கள் கட்டுதல், காடுகள் அழிக்கப்படுதல், தார்ச் சாலைகள் அமைத்தல் போன்ற வெப்பத்தீவு (Urban Heat Island) விளைவு என்ற நடவடிக்கைகளும் வெப்பத்தை அதிகரிக்கச்செய்யும். கருவேல மரங்கள், யூகலிப்டஸ், ஆகாயத் தாமரை போன்ற தேவையற்ற மரம், செடி, கொடிகளினால் நிலத்தடி நீர் பற்றாக்குறையும், பருவமழை பொய்த்தலும் ஏற்பட்டு இதுவும் புவி வெப்பமயமாதலை அதிகரிக்கச்செய்யும்.

குளிர்சாதன கருவிகள், மின் உற்பத்தி காற்றாலைகள், செல்போன் கோபுரங்கள் ஆகியவை மூலம் வெளியேறும் வேதிப்பொருள்கள் வளிமண்டல மேல்மட்ட ஓசோனை குறைத்து புவியின் வெப்பத்தை உயர்த்தும்.

'புவியின் வெப்பம் மேலும் அதிகரித்தால், கடல் நீர் மட்டம் அதிகரித்து, மிகப் பெரிய ஆபத்து உருவாகும்' என அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். புவி வெப்பமடைவதால் கடல் நீரின் வெப்ப அளவு மாறுபாடுவதும், அதனால் காற்றழுத்த மண்டலங்கள் உருவாவதும், அவை மழையின் அளவுகளை பாதிக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பாதிப்பை உருவாக்கும் வளர்ந்த நாடுகள்

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகள், தங்களின் தொழில் வளர்ச்சிக்காக, இயற்கை வளங்களை அழித்து, புவி வெப்பமயமாவதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. அவைகள்தான் சுமார் 300 ஆண்டுகளாக நிலக்கரி, டீசல் உள்ளிட்ட கனிமங்களின் ஊடாக பெரியப்பெரிய ஆலைகளை இயக்கின. உலகை அழிக்கும் பலப்போர்களை நடத்தின. அணுசக்தி பேரழிவையும் உருவாக்கின. வளர்ந்த நாடுகளின் வெறியாட்டத்தால் வெப்பமடைந்து உலகே மூச்சுத்திணறியது.

இவற்றிலிருந்து வளர்ச்சியடைந்த நாடுகளின் மக்கள் பாடம் கற்றனர். பருவநிலையைக்குறித்து அக்கரை கொண்டனர். புவி வெப்பமயமாவதன் அபாயத்தை உணர்ந்து பல பசுமை அமைப்புகளை உருவாக்கிப் போராடினர். அம்மக்களின் அறிவார்ந்தப் போராட்டங்களால்தான் அந்நாடுகளின் கேடு விளைவிக்கும் பெருநிறுவனங்கள் அங்கு தமது மாசுப்படுத்தும் தொழில் நடவடிக்கைகளை கைவிட்டன.

ஆனால், அவையெல்லாம்தான் தமிழ் நாடு உட்பட உலகின் பின்தாங்கிய (அறிவியல் விழிப்புணர்வற்ற) பகுதிகளில்வந்து குவிகின்றன.

ஒரு வேடிக்கை என்னவென்றால், உலகம் வெப்பமயமாவதற்கு தாங்கள்தான் காரணம் என்று ஒத்துக்கொண்ட பெருநிறுவனங்கள் அதை சமப்படுத்துவதற்கு உலகெங்கும் காடு வளர்க்கும் திட்டத்திற்கு நிதியளிக்கிறார்கள். இந்த நிதியை தமிழ்நாடும் பெறுகிறது. இதே தமிழ்நாடுதான் எந்த கட்டுப்பாடுமின்றி பெருநிறுவனங்களை தொழில் தொடங்கவும் அனுமதிக்கிறது.

தமிழ்நாட்டில் - சென்னையில் உள்ள பெருநிறுவனங்கள்

போர்டு, ஹாஸ்பைரா எல்த்கேர், டெய்ம்லர், ரெனால்ட் - நிசான் , டபிள்யு.எஸ்-எலக்ட்ரிக்- எல்.பி-கியூப் சிஸ்டம், நிசான், மிஷலின், ஷெல் காஸ் பி.வி., சென் கோபைன், மோட்டோரோலா, சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, டெல், நோக்கியா, சாம்சங், ஹவாய், ஹுன்டாய், பி.எம்.டபில்யு, கொமாட்ஸியூ, என்கின்ற அந்நிய பெருநிறுவனங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் 110 தொழில் பூங்காக்கள் உள்ளன. வணிக செயல்முறை (பிபிஓ) நிறுவனங்கள் ஆகிய சிடெல் இந்தியா, எச்.சி.எல் பிஸ்னஸ் சர்விசஸ், அல்டெக் ஸ்டார், சுதெர்லான்ட் கிலொபல் சர்விசஸ், விப்ரோ முதலியவை சென்னையில் உள்ளன.

எம்.ஆர்.எஃப், அசோக் லேலண்ட், இந்தியா சிமெண்ட்ஸ், டி‌வி‌எஸ் மோட்டார்ஸ், எல்.எம்.டபில்யு, பிரிக்கால் போன்ற உள்நாட்டுப் பெருநிறுவனங்களும் உள்ளன.

உலகளவில் இயற்கையை அழித்து இயற்கை சீற்றத்தை ஏற்படுத்திய நாடுகள் இப்போது நமது நாட்டில் மேற்கூறியத் தொழில்நிருவனங்களை அமைத்துக்கொண்டு மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. அவைகளுக்கு உதிரிபாகங்கள் மற்றும் அடிப்படை சேவைகளை வழங்குவதன் மூலம் அந்நியப் பெருநிறுவனங்களின் துணை நிறுவனங்களாக இருந்துகொண்டு இந்திய நிறுவனங்களும் இயற்கையை மேலும் கெடுக்கின்றன.

நமது ஊர்களில் ஓடும் இருச்சக்கர, வாகனங்கள், மகிழுந்துகள், சுமையுந்துகள் என்பவற்றில் பெரும்பான்மையானவை இப்பெருநிறுவனங்களின் தேவையை ஒட்டியே பயன்படுத்தப்படுகின்றன.

ஆக நமக்கு இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கும், இனி ஏற்படவிருக்கிறப் பாதிப்புகளுக்கும் பெருநிறுவனங்களின் வேட்டையே காரணமாகும்.

பாதிப்புக்களை ஏற்படுத்தியப் பெருநிறுவனங்களும், அதன் நாடுகளும் என்ன செய்யப் போகின்றன?

மழையின் பாதிப்பை தேசிய பேரிடராக ஒத்துக்கொள்கின்றன மத்திய-மாநில அரசுகள். மத்திய அரசு இதுவரை 1940 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கர்நாடக அரசு 5 கோடி ரூபாயை அளித்துள்ளதோடு தேவைப்பட்டால் மருந்து மற்றும் அத்தியாவசிய உதவிகள் செய்வதாகவும் அறிவித்துள்ளது. சி.பி.ஐ(எம்) கட்சி தனது எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழ்ங்க இருக்கிறது. சக மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் மதிப்புமிக்க உதவிகளை செய்து வருகின்றன. பல இசுலாமிய கட்சிகள் சத்தமின்றி தமது ஊழியர்களை களப்பணியில் இறக்கிவிட்டிருக்கின்றன.

ஊர் காவல்படை தொடங்கி இராணுவம் வரைக்கும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் உதவிகள் சென்றுகொண்டிருக்கின்றன. இவையெல்லாம் இயல்பாக நடக்கவேண்டியவை.

ஆனால், சென்னையின் வாழ்வையும், வளத்தையும் வாரிச்சுருட்டிக் கொண்டிருக்கும் பெருநிறுவனங்கள் என்ன செய்கின்றன? தங்கள் நாட்டு மக்களின் வாழ்வுக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்ததுபோல் நம் மக்களுக்கும் மதிப்பளிப்பார்களா? இந்த இயற்கைப் பேரிடர்களுக்கு தாங்கள்தான் மூல காரணகர்த்தாக்கள் என அவைகள் உணர்ந்திருக்கின்றனவா? உணர்ந்தாலும் பரிகாரம் செய்யுமா?

செய்யாது என்பதற்கு சாட்சிகள் நம் முன்னே உள்ளன. இப்போது வரிசையாக அணு உலைகளை ரசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அமைத்து வருகின்றன. அவைகளை நிறுவுவதும், அதன் பலன்களை அனுபவிப்பதும்தான் எங்களதுப் பணி, அவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்று அந்நாடுகள் அறிவித்து விட்டன. அதனை நம் நாடும் ஏற்று ஒப்புதல் அளித்துள்ளன. இது அணு உலைகளுக்கு மட்டுமல்ல, அனைத்து வகையான பன்னாட்டு நிறுவனங்களின் அழிவு செயல்களுக்கும் பொருந்து என்பதுதான் தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சரின் பேச்சு உணர்த்துகிறது.

சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு உடனடியாக அத்தியாவசிய உதவிகள் தேவைதான். ஆனால் தமிழகத்தோடு ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு உடனடித் தேவையாக இருப்பது புவி வெப்பமயமாதல் குறித்த அறிவியலின் அரசியலாகும். 

- திருப்பூர் குணா

Pin It