டால்ஸ்டாயின் மிக முக்கியமான... காலத்தால் அழிக்க முடியாத பாத்திரம் அன்னா. எப்போதும் தன்னிலிருந்து தன்னையே பிரிந்து கொண்டிருக்கும் ஆன்ம சுகவீனம்தான் அன்னா. அன்னா பேரழகி. சீமாட்டி. ருஷ்ய நாட்டில் இறங்கி வந்த தேவதை.
மேல்தட்டு மனிதன். நல்லவன். ஆனால்.. காதலே இல்லாத ஓர் இயந்திரம் கணவன் கரீனன்.
அன்னாவின் மனம் அற்ற வாழ்வில் ஒரு தூர தேச விடுதலைக்கு ஏங்கிக் கொண்டிருந்த போது தான்... விரான்ஸ்கி வருகிறான். நாயகனின் பண்பும் குண நலன்களும் கொண்ட மேல் தட்டு வர்க்க மிடுக்கன் விரான்ஸ்கி.
ஆதலால் காதல் வந்து விட்டது. முதலில் கணவனுக்கு தெரியாமல் காதலைத் தொடரும் அன்னா குற்ற உணர்வில் ஒரு நாள் கணவனிடம் போட்டு உடைத்து விடுகிறாள். தன்னை தானே உடைத்தலின் சுகம் கண்ட அன்னாவுக்கு அதுவே சுமையாகவும் ஆகிறது.
கணவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. விஷயம் வெளியே வந்தால் சமூகத்தில் தனக்கிருக்கும் பெயர் என்னாவது என்ற வருத்தம் அவனுக்கு.
பத்து வருடம் வீணாக போய் விட்டது. இனியாவது வீணை சப்தம் வாழ்வில் எழட்டும் என்பது அன்னாவின் மீட்ட துடிக்கும் ஆசையின் ஏக்கம்.
ஆனது ஆச்சு... முழுக்க நனைந்த பின் மழையை கொண்டாடி விடுவது தான் புத்திசாலித்தனம்.
கணவனை விட்டு பிரிந்து விரான்ஸ்கியுடன் சென்று விடுகிறாள். ஊர் வழக்கம் போல ஊது பத்தி கிசுகிசுப்பை வாசம் வீசி செய்து கொண்டிருக்கிறது. கரீனனுக்கு கோபம். கண்டிப்பாக விவாகரத்து தர போவதில்லை... தந்தால் தன் கௌரவத்துக்கு இழுக்கு என்கிறான்.
இடையே அன்னாவுக்கும் கரீனனுக்கும் பிறந்த "செரோஷா" இந்த வயது வந்த குளறுபடிகளில் மாட்டிக் கொண்டு விழிக்கிறான். இதற்கிடையே விரான்ஸ்கிக்கும் அன்னாவுக்கும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.
ஒன்றுக்கு விடை தெரிவதற்கு முன்பே இன்னொன்றுக்கு கேள்வி முளைக்கிறது. சுழலும் சக்கரத்தின் சூடு நின்ற போதிலும் குறையவில்லை அன்னாவின் சித்திரத்தில் வழியும் வெப்பம். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை அன்னாவிடம்.
ஒரு பக்கம் விவாகரத்து கிடைக்காதது. ஒரு பக்கம் தன் சுயநலத்துக்காக மகனைப் பிரிந்து வந்து விட்டது. மிச்சம் மீதிக்கு சமூகம் தன் மீது கொண்ட ரகசிய பார்வை. சீமாட்டிகள் கூடும் ஒவ்வொரு கூட்டத்திலும் தன்னை வேடிக்கை பொருளை போல எல்லாரும் பார்க்கிறார்கள் என்ற நினைப்பு. எல்லாவற்றுக்கும் மேலே விரான்ஸ்கியின் காதல் குறைந்து விட்டது என்று அவளாகவே எண்ணிக் கொள்ளும் சுய வன்மம்.
எல்லாவற்றுக்கும் சண்டை இடுகிறாள். எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்கிறாள். ஒரு நாள் வேலை விஷயமாக விரான்ஸ்கி வெளியே போனாலும் ஆள் விட்டு அனுப்பி வர சொல்லிக் கொண்டே இருக்கிறாள். விரான்ஸ்கி எத்தனை பொறுத்து போனாலும்... சந்தேகம் சங்கடம் கேள்வி என்று தொடர்ந்து அவனை காதல் என்ற பெயரில் கடித்து குதறுகிறாள்.
தன் மீது தான் கொண்ட சுய கழிவிரக்கத்தை அவன் மீது திணித்து தொடர்ந்து காட்சிகளை பிறழ செய்து கொண்டே இருக்கிறாள். சந்தேகம் ஒரு சாத்தான். பார்க்க இடம் விட்டால் படுத்து புரண்டு விட்டு சென்று விடும்.
அலுவலக நிமித்தம் ஒரு பெண்னோடு பேசினால் கூட... " என்னை கவர்ந்தது போல அவளையும் நீ கவர முயற்சிக்கிறாய். உனக்கு நம் திருமணத்தின் மீது விருப்பமோ ஆர்வமோ இல்லை. உன் குழந்தை மீதுள்ள கவனத்தைப் போல என் மகன் மீது உனக்கு அக்கறை இல்லை.
இன்னமும் கரீனனுடனான விவாகரத்துக்குக்கான எந்த முயற்சிகளையும் நீ மேற்கொள்ளவில்லை. உனக்கு நான் புளித்து விட்டேன். என் அழகெல்லாம் மங்கி விட்டது. அதனால் உனக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது..." என்று தானாக புலம்பி தவித்து தனித்து அங்கும் இங்கும் ஓடும் சிந்தனை தான் எப்போதும்... அவளுக்கு. எப்படி பேசினாலும் அதற்கு ஒரு மாற்று மொழி அவளிடம் அவளை கசக்கிக் கொண்டே இருந்தது.
எதிலும் குற்றம் கண்டு பிடித்தாள். தன் மீது தானே சொற்களை வாரி இறைத்துக் கொண்டு காரணம் விரான்ஸ்கி என்றாள். எந்த காதல் நிம்மதியைத் தரும் என்று நினைத்தாளோ அந்த காதல் அவளை ஒரு நாளும் தூங்க விடவில்லை. மகனை விட்டு வந்த குற்ற உணர்ச்சி ஒரு தாயை கொல்ல துவங்கி இருந்தது.
சமூக அந்தஸ்த்தில் உள்ள கணவனை விட்டு வந்த சுயம் காதலையும் கொல்ல தொடங்கி இருந்தது. எப்போதும் அழுகையும் அயர்ச்சியும் தான். யாரையெல்லாம் நம்பினாளோ அவர்களையெல்லாம் வெறுத்தாள். நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையே தானொரு பொம்மை என்பதாக கற்பனித்துக் கொண்டு திரிந்தாள். விரான்ஸ்கி ஒருவேளை கை விட்டு விட்டால் என்ன செய்வது... என்று அவள் கற்பனைக்கு அவளையே தின்ன கொடுத்தாள்.
ஒரு கூண்டிலிருந்து தப்பி வந்து இன்னொரு கூண்டில் மாட்டிக் கொண்ட பெண் பிறவி தானென்று எப்போதும் முணுமுணுத்தாள். பெண் பிறவியிலேயே தானொரு இழிவு என சுய கழிவிரக்தில் சுய பச்சதாபம் கொண்டு எல்லாவற்றையும் வெறுத்தாள். எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடி விட தவிக்கும் அன்னாவுக்கு விரான்ஸ்கி எவ்வளவு சொல்லியும் நிதானமில்லை. அவள் மனதில் அமைதி இல்லை. விரான்ஸ்கியின் துணையை விரும்பும் அதே நேரம் வெறுக்கவும் அவளுக்கு பிடித்திருந்தது.
காதலின் வேகத்தில் கிடைத்த அதீத வெற்றி கூட தோல்வியென உணர்ந்து தன்னை தானே சக்கையாக உறிந்து கொள்வதை விரும்பினாள். வேலைக்காரர்கள் எல்லாம் தன்னை பற்றி தான் கிசுகிசுக்கிறார்கள் என்று தனக்குத்தானே கதை கட்டி கொள்வதில் தன் சுயத்துக்கு தீனி போடுவதாக நம்பினாள்.
உலகம் வெறுப்பதை விட அதிகப்படியான வெறுப்பை தன் மீது தானே காட்டிக் கொள்வதில் ஓர் ஆசுவாசம் அவளுக்கு. சுய வெறுப்பு... நிலை கொள்ளாத கோபமாக வெளிப்பட எல்லாரிடமும் வார்த்தைகளை வீசுகிறாள். ஒரு கொலைகாரியின் உள்ள கொதிப்பு அவளுள். துக்கத்தை சுமந்தலைவதை அவள் ஆழ்மனம் விரும்பியது என்று கூட நம்பலாம். அது ஒருவகை நிம்மதியை தருவதாகவும் புரிந்து கொள்ளலாம்.
இடது வலது அற்ற மையத்தில் நிற்கவும் முடியாத நாளொன்றில்... தன் அண்ணன் வீட்டுக்கே சென்று விட தீர்மானித்து ரயில்நிலையம் செல்கிறாள். ரயில் நிலைய பிளாட் பார்மில்... அங்கும் இங்கும் ஒரு கிறுக்கியைப் போல நடந்து கொண்டே இருக்கிறாள். சாத்தானின் சிந்தனையை மிக அழகாக தன் மூளை வியாபித்துக் கொண்டதில்... சிறு கிளர்ச்சி. சாத்தான் வேலையை காட்டும் தருணம்.. முன்னும் பின்னும் இசைபட ரயில்... ஓர் இயந்திர யானையாக அசைந்து அசைந்து வந்து கொண்டிருக்கிறது.
பார்த்த கண்களில் பாவ ரசம். ஒரு பெட்டிக்கும் இன்னொரு பெட்டிக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் மிக லாவகமாக பாய்ந்து விழுவது பற்றி திட்டம் இடும் அளவுக்கு மெதுவாக தான் நகர்ந்து கொண்டிருக்கிறது நீள இரும்பு கட்டடங்கள்.
தீர்மானத்தில் மூளையும் மனதும் சம நிலையில் ஒன்றி விட நினைக்கும் முன்னே ரயில் கடந்து விட்டிருந்தது.
நொடி பொழுதில் தீர்மானிக்கப்படும் தற்கொலைகள் நொடிப் பொழுதில் அதிலிருந்து தப்பி விடுவதும் உண்டு. ஆனால் அவள் மீண்டும் அடுத்த ரயிலுக்கு காத்திருக்கிறாள். தப்பித்து விடுவாள் என்று நாம் நம்ப தொடங்கும் முன்னே அடுத்த ரயில்... எமனை சுமந்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
அதே கிறுக்கு நடையில் அவள் செய்வதறிந்தே முன்னும் பின்னும் நடக்கிறாள். அவளை எதிர் கொள்ளும் இளைஞர்கள் எல்லாம் அவளை குறி வைத்தே கிசுகிசுப்பதாக... தவறான பார்வை பார்ப்பதாக அவள் நம்புகிறாள். காதலின்பால் மனம் பிறழ்ந்த மகத்துவத்தை தன் மீது மிகு விருப்பத்தோடு நிகழ்த்திக் கொள்கிறாள்.
இதோ ரயில் அருகே வந்து விட்டது. முன்பு போட்ட திட்டத்தின்படி படக்கென்று சக்கரங்களுக்கு இடையே விடுபட்ட வினாவைப் போல அன்னா குதித்து விடுகிறாள்.
ரயில் தீர்ந்து முடிகையில்... தண்டவாளத்தில் சிதைந்து கிடக்கிறாள் காலத்துக்கும் காதலுக்கு ஏங்கிய ரஷ்ய சீமாட்டி.
இப்படியாக 1087 ம் பக்கத்தில் டால்ஸ்டாய் என்ற கொடூரன்... ஒரு கொலையை நிகழ்த்தி விட்டு எல்லாம் கடந்து போகும் என்று அந்த ரயிலைப் போலவே கடந்து கொண்டிருக்கிறான். இன்னமும் 70 பக்கங்கள் "அன்னா கரீனினா" நாவலில் மிச்சம் இருக்கின்றன.
மரித்த பிறகும் அலைந்து திரியும் மரணித்தவரின் நினைவுகளுக்கு 70 பக்கங்களை ஒதுக்கிய டால்ஸ்டாய் என்ற மகத்தான கால சாட்சி... நினைவோடைகளில்... வாழ்வியலின் எழுத்துக்களை அள்ளி வீசிக் கொண்டே செல்வதை பதட்டத்தோடும் பரவசத்தோடும் பார்க்கிறோம்.
மொத்த உலகமும் அன்னாவை மெல்ல மெல்ல உந்தி தள்ளி தற்கொலைக்கு தூண்டியதை தேங்கிய சிந்தனையின் வடிவமாகத்தான் உணர முடிகிறது. ரயில் சக்கரத்தில் சிக்கி அன்னா சின்னா பின்னமாக ஆனதாகத்தான் கதை நகர்கிறது.
உண்மையில் அடிப்படை வாத கட்டமைப்புகளில் சிக்கி தான் அன்னா சின்னாபின்னமாக ஆகிறாள். நம்புவதற்கு சுலபமானதை நடைமுறைப் படுத்தி இருக்கும் சோ கால்டு சமூகம் அன்னாக்களை எக்காலத்திலும் பொருட்படுத்துவதில்லை.
மனமென்னும் மாயம் கொண்ட மானுட புதிர்... அன்னாக்கள் வழியே... தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.
- கவிஜி