lava switch 450சீனத்தைச் சேர்ந்த ஒரு நீதிமன்றத்தில் ஆவணக் காப்பாளராகப் பணிபுரிந்து வந்தார் ஒருவர். அரசின் சீர்கேடுகளும் மனிதர்களின் பேராசைகளும் ஊழல்களும் தன்னலம் சார்ந்த செயல்பாடுகளும் அவருக்குச் சலிப்பூட்டின. தன்னலவாதிகளுக்கு நடுவில் வாழ்வதே அவருக்குத் தீராத வேதனையாக இருந்தது.

ஒருநாள் அவர் துறவியாகும் எண்ணத்தில் யாரிடமும் சொல்லாமல் தன் நாட்டைவிட்டு வெளியேறினார். நடந்து நடந்து நாட்டின் மேற்கு எல்லையை அவர் அடைந்தபோது, அங்கிருந்த எல்லைக்காவலர் அவரை அடையாளம் கண்டுகொண்டார். உடனே அவரை நெருங்கி வணங்கினார்.

உரையாடலின்போது அவர் அக்காவலரிடம் தன் முடிவைத் தெரிவித்தார். காவலர் அவரைத் தடுக்க நினைக்கவில்லை. ஆனால், எல்லையைக் கடக்கும் முன்பாக, நாட்டு மக்களுக்குப் பயன்படும் விதத்தில் தன் ஞான அனுபவங்களை எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு வேண்டினார். காவலரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வாழ்விலிருந்து தான் பெற்ற ஞானத்தை 81 பாடல்களாக ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறினார் அவர்.

அந்த ஞானியின் பெயர் லாவோ ட்சு. சீனத்தைச் சேர்ந்த தத்துவவியலாளரான கன்பூசியஸின் சமகாலத்தவர். கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவர். வரலாற்றாசிரியர்களால் இப்பாடல் தொகுதி தாவோ தேஜிங் என்று அழைக்கப்படுகிறது. தாவோ என்பது பாதை. வாழ்வின் பாதை. அன்பின் பாதை. மானுடத்தின் பாதை. மேன்மையின் பாதை. தாவோ தேஜிங் என்பது அப்பாதையின் விளக்கம். கையேடு.

பைபிளைப்போலவே தாவோ தேஜிங் பாடல்களுக்கு பல மொழிபெயர்ப்புகளும் விளக்கக்குறிப்புகளும் உலகெங்கும் உள்ளன. வாழ்வின் சாரம் என்று கருதப்படுகிற இப்பாடல்களுக்கு ஒவ்வொரு உரையாசிரியரும் தத்தம் வாழ்க்கை அனுபவம் சார்ந்தும் மெய்யியல் அனுபவம் சார்ந்தும் விரிவான விளக்கங்களை எழுதியிருக்கின்றனர். பல ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படித்து, ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிட்டு, உகந்த வடிவத்தைத் தேர்ந்து அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சந்தியா நடராஜன். மரபிலக்கியங்களில் அவருக்கு நல்ல வாசிப்பனுபவம் இருப்பதால் பாரதியார், சிவவாக்கியர், பட்டினத்தார், சித்தர் பாடல்கள், திருக்குறள், புறநானூறு, வள்ளலார் என மூதாதையர்களின் வரிகளையெல்லாம் தொட்டுக் காட்டி, தாவோ தேஜிங்கை வாசகர்கள் நெருக்கமாக உணரும் வகையில் ஒவ்வொரு பாட்டுக்கும் சுருக்கமான விளக்கவுரையையும் எழுதியிருக்கிறார்.

சீனப்பாடல்களைத் தமிழ்மயமாக்கிப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. தாவோ, தாவோ தேஜிங், செயலின்மை, மிதத்தல், வெட்டவெளி, யின்யாங் என பல்வேறு தலைப்புகளின் கீழ் நடராஜன் அளித்திருக்கும் குறிப்புகள் லாவோ ட்சுவின் பாடல்களின் நோக்கையும் போக்கையும் புரிந்துகொள்ள துணையாக உள்ளன. 

சில பாடல் வரிகளில் காணப்படும் உவமைகளும் படிமங்களும் ஆழ்ந்த கற்பனைக்குரியவையாகவும் வசீகரமுள்ளவையாகவும் உள்ளன. “வைக்கோலில் செய்யப்பட்ட நாய்பொம்மை சடங்கு முடிந்ததும் தூக்கியெறியப்படுவது போல பூவுலகும் விண்ணுலகும் இரக்கமின்றி எல்லாவற்றையும் கையாளும்” என்று தொடங்குகிறது ஒரு பாடல். ஒரு குடும்பத்தில், ஓர் அமைப்பில், ஒரு சமூகத்தில் ஒரு தனிமனிதனின் பங்கு என்பது சடங்குக்காகச் செய்துவைக்கப்பட்ட பொம்மை அளவுக்கே முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வாழ்வில் ஒருவருக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் எல்லை என்பது அந்த அளவுக்கு மிகமிகக் குறுகியது. அதைத்தான் அவர் செய்யவேண்டும். அதைவிட குறைவாகவோ கூடுதலாகவோ செய்யவேண்டியதில்லை. மிக எளிய விஷயம்தான்.

ஆனால் மனிதர்களின் ஆணவம் அப்படி எளிதாக நிகழ விடுவதில்லை. சிக்கலாக்கிவிடுகிறது. வெறுப்பு, பேராசை, தன்னலம் என எல்லாமே ஒவ்வொரு திசையில் இழுத்து அலைக்கழிக்க வைக்கின்றன. பொம்மையாக இருப்பதற்கு மாறாக, அருகிலிருக்கும் மாலையாக, சடங்குப்பொருட்களாக, தாம்பூலத்தட்டுகளாக, பந்தல் தோரணமாக, பந்தலாக இருக்க விழைகிறது. இன்னொன்றாக இருக்க முடியாமையின் அவஸ்தையால் காலமெல்லாம் முட்டிமுட்டித் தவித்தபடியே இருக்கிறது. தன் உயரத்தை மிகையாகக் கணித்து உள்ளூரப் புழுங்குகிறது.

தனக்குக் கிட்டாத பெருமையை நினைத்து தான் வஞ்சிக்கப்பட்டு விட்டதாகக் கருதி வன்மத்தை வளர்த்துக் கொள்கிறது. மொத்தத்தில் வாழ வேண்டிய வாழ்க்கையையும் வாழாமல் உதறிவிட்டு தன்னைத்தானே சிதைத்துக் கொள்கிறது. பொம்மை என்னும் படிமத்தைத் தொட்டு அசைபோடத் தொடங்கியதுமே எண்ணங்கள் விண்ணை நோக்கி விரிவடைகின்றன.

“நிரம்பி வழியும் பாத்திரம் ததும்பி வழியும்” என்றொரு வரியும் “உனது கத்தியைக் கூர்மைப்படுத்திக்கொண்டே இருந்தால் கூர்மை குறைவுபடும்” என்றொரு வரியும் அடுத்தடுத்து ஒரு பாடலில் இடம்பெறுகின்றன. ரிதுமொழிதல் அணியைப்போல இவ்வரிகளில் உவமை மட்டுமே முன்வைக்கப்பட்டு உவமைப்படுத்தப்படும் அம்சம் மறைபொருளாகிறது. உவமைப்படுத்துவதற்குரிய செய்தி மானுட வாழ்வில் ஒன்றல்ல, ஏராளமாக உள்ளன என்பதுதான் அதற்குக் காரணம். நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகிவிடும் என்னும் திருக்குறளுக்கு நிகரான வரிகள் இவை. ஒரு மரத்தின் உச்சாணிக்கொம்புக்கு ஏறிய பின்னரும் ஏற முயற்சி செய்தால், அம்முயற்சி பேரழிவுக்கு வழிவகுத்துவிடும். வலிமையை வெளிப்படுத்த எல்லை என ஒரு புள்ளி உண்டு. அந்தப் புள்ளியைப்பற்றிய தெளிவு ஆழ்மனத்தில் எப்போதும் இருக்கவேண்டும். அதை ஒருபோதும் கடக்கக்கூடாது. 

அதே உண்மையை, கத்தியைக் கூர்மைப்படுத்துவதையும் பாத்திரத்தில் பாலையோ தண்ணீரையோ நிரப்புவதையும் காட்டி எல்லையை வரையறுக்கிறார் லாவோ ட்சு. மீண்டும் மீண்டும் எல்லைகளை வரையறுத்தபடியே இருக்கின்றன அவர் பாடல்கள். கூர்மை கூர்மை என கத்தியைக் கூர் தீட்டிக்கொண்டே இருப்பவன் கத்தியையே இழக்க நேரும். தண்ணீர் தண்ணீர் என தண்ணீரை ஏற்கனவே நிரம்பிய பாத்திரத்தில் ஊற்றிக்கொண்டே இருப்பவன் தண்ணீரையே இழக்க நேரும். எல்லையை மீறும்போது உருவாகும் இழப்புகள் நேரிடையானவை. பாத்திரத்தை நிரப்பும் விழைவிலும் வேகத்திலும் இருப்பவன் ஒரு வாய் தண்ணீரையும் அருந்துவதில்லை. கூர்தீட்டும் விழைவிலும் வேகத்திலும் மட்டுமே முனைப்பாக இருப்பவன் ஒரே ஒரு பழத்தைக்கூட நறுக்கிச் சுவைக்க வாய்ப்பு அமைவதில்லை. இந்த இழப்பு மறைமுகமானவை. பேராசையே எல்லையைக் கடக்கத் தூண்டும் விசை. அதைத் துறக்காமல் மீட்சி இல்லை.

“ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்?” என்னும் தல்ஸ்தோயின் சிறுகதையை இங்கு நினைத்துக்கொள்ளலாம். அக்கதையில் ஒருவன் பொழுது சாய்வதற்குள் மண்வெட்டியால் அடையாளப்படுத்தும் நிலம் முழுதும் தனக்குச் சொந்தமாகிவிடும் என்கிற பேராசையில் ஓய்வேயின்றி அடையாளப்படுத்திக்கொண்டே வெகுதொலைவு சென்றுவிட்டு, குறிப்பிட்ட நேரத்துக்குள் திரும்ப முடியாமல் களைப்பில் மயங்கி விழுந்து உயிர்துறக்கிறான். விழைவின் காரணமாக ஒருவன் தன்னுடைய எல்லையைக் கடக்கும்போது தன் உயிரையே விலையாகக் கொடுக்க நேரும் அவலத்தை தல்ஸ்தோய் சித்தரிக்கும் விதம் மனத்தை உருகவைத்துவிடும். தல்ஸ்தோய்க்கும் வள்ளுவருக்கும் முன்பாக லாவோ ட்சு அதே விளைவைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் என்பது முக்கியமானது. 

‘உலகத்தின் பள்ளத்தாக்காக மரிவிடு’ என்னும் பாட்டின் வரி முதல் வாசிப்பில் அதிர்ச்சியை அளிக்கலாம். மேடு, பள்ளம், உயர்வு, தாழ்வு என சொற்களை எதிரீடுகளாகப் பார்த்துப் பழகிய கண்களுக்கு இந்த அதிர்ச்சி இயற்கை. ஆனால் லாவோ ட்சு பல இடங்களில் பள்ளத்தாக்கு என்னும் சொல்லைப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது, அதைப்பற்றி சிறிது யோசிக்கவேண்டியிருக்கிறது. லாவோ அச்சொல்லை ஓர் உருவகமாகப் பயன்படுத்துகிறார்.

பள்ளத்தாக்கு என்பது வெற்றிடம். வெற்றிடம் என்பதை விரும்பியதை வேண்டுமளவுக்குப் பெற்று நிரப்பிக்கொள்ளத் தகுதியான இடமென்று விரித்துப் பொருள்கொள்ளலாம். நம் மனத்தில் வெற்றிடம் மிகுதியாக இருக்கும் அளவுக்கு, புதிய அனுபவங்களால், புதிய செய்திகளால், புதிய அறிவால், புதிய ஞானத்தால் நிரப்பிக்கொள்ள இயலும் என மேலும் விரிவடையச் செய்யலாம். ஒரு கணம் ஒரு பானையை நாம் கற்பனை செய்துகொள்ளலாம். அந்தப் பானையின் உள்ளே இருப்பது வெற்றிடம் அல்லவா? அந்தப் பானைக்குள் நாம் நமக்குத் தேவையான தண்ணீரையோ பாலையோ தேனையோ நிரப்பிக்கொள்ளலாம். பானைக்கு என தனி விருப்பம் எதுவுமல்ல. அனைத்தையும் அது ஏற்றுக்கொள்ளும். எதையும் அது நிராகரிப்பதில்லை. 

சிறிய பானைக்குள் வெற்றிடம் குறைவான அளவே இருக்கும். பெரிய பானைக்குள் வெற்றிடம் கூடுதலாக இருக்கும். பானைக்குள் இருக்கும் வெற்றிடம் பெரிதாகப் பெரிதாக, நாம் அதற்குள் நிரப்பும் தண்ணீரின் அளவும் கூடுதலாகிக்கொண்டே செல்லும். ஏற்கனவே நிரம்பியிருக்கும் கோப்பைக்குள் எதையும் ஊற்றிச் சேமிக்கமுடியாது. வெற்றுக் கோப்பையே அதற்குப் பொருத்தமான சாதனம். கோப்பை, பானையைவிட பள்ளத்தாக்கு என்பது இன்னும் கூடுதலான வெற்றிடம். அதில் நிரப்பிக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு. எதையும் நிராகரிக்காமல் அனைத்தையும் ஏற்று தன் மடியை நிரப்பிக்கொள்ளும். 

எதையும் நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ளும் என்பதாலேயே நாம் ஒரு வண்டி குப்பையை எடுத்துச் சென்று பள்ளத்தாக்கில் கொட்டிவிடமுடியாது. எதைக் கொட்டி எதை நிரப்புவது என்னும் தெளிவு ஒருவருக்கு மிகமிக முக்கியம். அன்பால் நிரப்பவேண்டிய மனத்தை வெறுப்பால் நிரப்பிக்கொள்ளக்கூடாது.

கருணையால் நிரப்பவேண்டிய மனத்தை பொறாமையால் நிரப்பிவிடக்கூடாது. தியாகத்தால் நிரப்பவேண்டிய உள்ளத்தை பேராசையால் நிரப்பிவிடக்கூடாது. எல்லையை வரையறுக்கும் லாவோ தெளிவையும் வரையறுக்கிறார். ஆனால் அவர் எந்த இடத்திலும் அதை நிபந்தனையாக முன்வைக்கவில்லை. ஒரு பாடலைப் படித்து முடித்ததும் உண்மைகளை நோக்கி நம் மனம் எளிதாக நகரும் வகையில் தமிழ்ச்சூழலில் பழக்கமான ஞானவரிகளை இணைத்து நடராஜன் எழுதியிருக்கும் குறிப்புகள் வாசகர்களுக்கு மிகவும் முக்கியமானவை.

என்னிடம் மூன்று பொக்கிஷங்கள் உள்ளன

முதலாவது அன்பு அல்லது கருணை எனப்படும்

இரண்டாவது மிதம் எனப்படும்

மூன்றாவது போட்டிபோடாத மனநிலை

கருணை உனக்குத் துணிவையளிக்கும்

மிதம் உனக்குத் தயாளகுணம் அளிக்கும்

உலகத்தில் முதலிடம் எனக்கென

உரிமை கோராதவன் 

உண்மையில் ஆளப்பிறந்தவன்

லாவோ ட்சுவின் இவ்வரிகளில் கூட எதையும் யாரையும் வலியுறுத்தாத போக்கு இருப்பதை நாம் கவனிக்கலாம். ‘இந்தப் பொக்கிஷம் உனக்கு’ என எதையும் யாரிடமும் கொண்டு சேர்க்க அவர் முற்படவே இல்லை. ஒரு தகவலைப்போல இதை எடுத்தால் இதைப் பெறலாம் என்று மட்டுமே ஓர் எல்லைக்குள் நின்று அறிவித்துவிட்டு நிறுத்திக்கொள்கிறார். நமக்கு உகந்தது என்ன என்பதை ஆழ்ந்து சிந்தித்துவிட்டு நமக்கு எது வேண்டும் என்பதை நாம் முடிவெடுக்கவேண்டும். ஒன்றைக் கேட்டுப் பெற்றுவிட்டு, இன்னொன்றால் கிட்டுவதை நினைத்து பகல்கனவு காணக்கூடாது. அது வீணான மன உளைச்சலையே கொடுக்கும். நிம்மதியின்மையில் முடிவடையும்.

நாம் விழைந்ததே நமக்குக் கிடைத்திருக்கிறது என்னும் நிறைவு ஒருவருக்கு மிகமிக முக்கியம். ஆனால் எதார்த்த வாழ்வில், ஒவ்வொருவரும் தன் நிறைவைப்பற்றி நினைப்பதைவிட, அடுத்தவனுடைய நிறைவைப்பற்றிச் சிந்தித்து பொறாமையில் புழுங்குவதே வழக்கமாகிவிட்டது. அடுத்தவன் நிழல் கூட தன் நிழலைவிட நீண்டதாக இருப்பதைப் பார்த்தாலே மனம் குமுறும் மோசமான மனநிலையுடையவர்களுக்கு நடுவில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறக்கக்கூடாது.

நூலில் இடம்பெற்றுள்ள ஒரு சீனக்கதை மிகவும் முக்கியமானது. தாவோ குருமார்கள் உபதேசிப்பதில்லை. ஆணையிடுவதில்லை. மாறாக, கதை சொல்கிறார்கள். அவ்வாறு சொல்லப்பட்ட கதைகளில் ஒன்றே இது. தாவோ தேஜிங் வரிகளின் சாரமாக அது விளங்குகிறது. இதன் வழியாக ட்சு பாடல்களின் மையத்தை எளிதில் தொட்டுவிடலாம். சீனத்துக் கிராமமொன்றில் ஒரு விவசாயி இருந்தான். அவனிடம் ஓர் அழகிய குதிரை இருந்தது. ஒருநாள் அந்தக் குதிரை கிராமத்தைவிட்டு ஓடிவிட்டது. எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. செய்தியைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் அவனைச் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். “குதிரை இல்லாமல் காலம் தள்ளுவது உனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இது உனக்கு துரதிருஷ்டமான காலம்” என்று பரிதாபப்பட்டார்கள். “ஆமாம்” என்று தலையசைத்தான் விவசாயி.

அடுத்த நாளே அந்தக் குதிரை திரும்பி வந்துவிட்டது. அது தன்னோடு ஏழு குதிரைகளை அழைத்து வந்திருந்தது. அக்கம்பக்கத்தினர் மீண்டும் அவனைச் சந்திக்க வந்தார்கள். “உனக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. நீ அதிர்ஷ்டக்காரன்” என்று சொல்லி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். “ஆமாம்” என்று சொன்னான் விவசாயி. அடுத்தநாள் விவசாயியின் மகன் ஒரு குதிரையில் ஏறிச் சவாரி செய்யும்போது கீழே விழுந்து கால்களை உடைத்துக்கொண்டு வந்தான்.

மீண்டும் அக்கம்பக்கத்தினர் விவசாயியைச் சந்தித்து “இது நிச்சயமாக உனக்குக் கெட்ட காலம்” என்று சொன்னார்கள். அதே பழைய மனநிலையில் “ஆமாம்” என்று தலையசைத்தான் விவசாயி. மறுநாள் இராணுவத்துக்கு ஆளெடுக்க வந்த அரசாங்கத்தினர் அந்தக் கிராமத்திலிருந்த நல்ல உடல்வாகுள்ள இளைஞர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள். கால் முறிந்து படுத்திருக்கும் விவசாயியின் மகனை மட்டும் விட்டுவிட்டனர். கிராமத்தினர் மீண்டும் விவசாயியைச் சந்தித்து “நீ அதிர்ஷ்டக்காரன்” என்று சொல்லி மகிழ்ந்தார்கள். “ஆமாம்” என்னும் பழைய பதிலையே சொன்னான் விவசாயி. 

அதிர்ஷ்டக்காரன் என்று சொன்னபோதும் அந்த விவசாயி துள்ளிக் குதிக்கவில்லை. உனக்குக் கெட்ட காலம் வந்துவிட்டது என்று சொன்னபோதும் சோர்ந்து முடங்கிவிடவில்லை. “அப்படியா, இருக்கலாம்” என்று எல்லாச் சொற்களையும் தன்னைக் கடந்துபோக விட்டு அனைத்தையும் அமைதியாக சலனமில்லாத மனத்துடன் எதிர்கொண்டான். “நீர் வழிப்படும் புணை” போல தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டான் விவசாயி.

லாவோ ட்சுவின் ஒவ்வொரு பாடலும் இந்த அனுபவத்தையே வெவ்வேறு சொற்களில் உணர்த்துகிறது. சலனமற்ற மனம் மிகப்பெரிய வரம். “சஞ்சலம் துஞ்சித் திரியாதே” என்னும் அருணகிரியாரின் சொற்களோடு இக்கதையை இணைத்து முடிக்கிறார் நடராஜன். மொழிபெயர்ப்பு என்னும் எல்லையைக் கடந்து, தாவோவில் லயித்துத் தோய்ந்த ஒரு வாசகனின் அனுபவக்குறிப்புகள் என்கிற அளவில் இத்தொகுப்பு தமிழுக்குக் கிடைத்த முக்கியமான படைப்பு.

Pin It