englishசுட்டாலும் இது தான் நிஜம். ஆங்கிலம் ஒரு வியாபார மொழி. இங்கு வியாபாரம் தான் வாழ்வின் அடித்தளம். ஆக ஒன்றையொன்று சார்ந்து தான் இயங்க முடியும். அது தான் நடக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர் மரபில் வந்து விட்டு இன்னொரு மொழியை இழிவாக பேசுவதை... பார்ப்பதை அருவருப்போடு தான் காண வேண்டி இருக்கிறது.

ஏன் ஒரு தமிழ் நூலைப் பற்றி ஆங்கிலத்தில் எழுத கூடாதா.

வாட்சப்... மூஞ்சி புக்... டிவிட்டர்... யூ டியூப் எல்லாம் நாமா கண்டு பிடிச்சோம். ஆனா உபயோகப்படுத்தறோம்ல. போடற பேண்ட்ல இருந்து ஜட்டி வரை வடிவமைப்பு அந்நியனோடதுதான. பேசற செல்போனை யார் கொண்டு வந்தா. கரண்ட் நாமளா கண்டு புடிச்சோம்.

டிவி.. டெலிபோனு... கணிப்பொறி... கார்... விமானம்... இப்டி சொல்லிட்டே போலாம். இந்த உலகம் இயற்கையானது. அதிலிருந்து அந்தந்த மண் சார்ந்த உடலமைப்பில்... மொழி வளர்ப்பில் மனித குலம் தன்னைத் தக்க வைத்துக் கொண்டது.

எல்லா மனிதனுக்கும் ஆதி மொழி ஒன்னு தான. அந்தம் மொழி ஒன்னு தான. இதுல என்ன நான் பெருசு நீ சிறுசு. உலகத்துக்கே முன்னோடி நாம். அதில் பொறுப்பு தானே இருக்க வேண்டும்... தவிர வெற்றுப் பெருமை எதற்கு.

எந்த மொழியில் கண்டுபிடிப்புகள் அதிகமாக இருக்கிறதோ அந்த மொழி ஆட்சி செய்யும். அது தான்... நடந்து கொண்டிருக்கிறது. (ஆட்சி என்ற பதத்தை பழம் நேர்மையாக புரிந்துக் கொண்டு மக்கள் ஆட்சியா மன்னர் ஆட்சியா என்று சொல்லெடுத்துக் கொண்டு வந்து விடாதீர்கள் மக்கா)

ஏன் கவிஞன் எல்லாருமே... செந்தமிழில் தான் பேசிட்டு இருக்கணுமா... வழக்குத் தமிழுக்கு அந்நியமானவர்களா எழுத்தாளர்கள்.

180 ரூவாய் குடுத்து ஒரு புக்கு வாங்க முடியல. ஏன் புக்க இங்கிலீஷில அறிமுகப்படுத்தற... கன்னடத்துல அறிமுகப்படுத்தறன்னு இல்லாத நொட்டை.

தட்டுல ஒரு நேர சோறு வரணும்னாவே எத்தனை ஊரு சேர்ந்திருக்கணும் தெரியுமா... எத்தனை ஊரு மொழி கலந்திருக்கும்... தெரியுமா. அதை விட்டு தமிழ்லதான் பேசுவேன்... தமிழ்லதான் தூங்குவேன்னு சொல்றதெல்லாம்.. 21 ம் நூற்றாண்டின் அபத்தம்.

தமிழ் எங்கள் உணர்வில் கலந்திருக்கிறது. அது ஒரு போதும் நீங்கள் நினைப்பது போல அழியாது. கிட்டத்தட்ட 2000 வருஷத்துக்கு முன்னால ரத்தமும் சதையுமா உருவான மொழி. அது எப்படி அழியும். அழிய எப்படி விடுவோம்.

ஆனால் வாழ்க்கை ஓட்டத்துக்கு எந்த மொழி தேவையோ அந்த மொழியை கையில் எடுப்போம். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று முன்னோர் சொன்னானே... அப்போ ஒருவேளை திரைகடல் ஆப்பிரிக்கா மொழி பேசுது என்றால் அம்மொழியைக் கற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.

மூத்த மொழி தமிழ். அதில் மாற்று கருத்தே இல்ல. அதே நேரம் முத்த மொழி தானே இன்டெர்வியூயில் பேசுகிறார்கள். இன்னொரு மொழி கற்றுக் கொள்கையில் இன்னொரு முறை பிறக்கிறோம் என்பதுதானே முதுமொழி.

இந்த உலகம் கலப்புகளால் ஆனது. முதலில் அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இன்னும் நிலா சோறு தின்னுகிட்டே இருப்போம் என்பதெல்லாம் கவிதைக்கு உதவும். கறிக்கு உதவாது. ஆண்ட பரம்பரை அண்டா பரம்பரை எல்லாம் மூணு தலை முறை தாண்டி மூடிக் கொண்டு இருக்கும்.

இதில் சிலருக்கு என் பெயரில் தான் பிரச்னை. ஜ என்ன தமிழ் மொழியா... ஜி என்ன தந்தை மொழியா என்று. அதை கேட்க பயன்படுவது கூட முகநூலும் வாட்ஸப்பும்தான். இப்ப நான் கேக்கறேன்... இந்த ரெண்டும் என்ன நம்ம பாட்டன் வீட்டு முற்றம் கண்டு பிடிச்ச நிலா சோறு சமாச்சாரமா.

மாங்கு மாங்குனு பக்க பக்கமாக எழுதி குவிக்கறேன். அதுல ஒரு கவிதையை... ஒரு கட்டுரையை.. ஒரு கதையை... ஒரு நேர்காணலை படிச்சிட்டு விவாதிக்க முடியல. என் பேர்ல இருக்கற ஜி தான்.. ஜ தான் இப்ப பிரச்னை.

இல்லையா. பேர்ல என்ன வந்துருக்கு. வடமொழி வங்கமொழின்னு. பழங்குட்டைல ஊறிக் கிடப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நமக்கு பாரதியும் ஒன்னு தான். கீட்சும் ஒன்னு தான். தாகூரும் ஒன்னு தான். மண்டோவும் ஒன்னு தான்.

தாஸ்தாவெஸ்கியும் ஒன்னு தான். காபிரியேலும் ஒன்னு தான். சேகுவேராவை கும்புடறவனுக்கு... ஹிந்திக்காரன் என்ன.. மராட்டிக்காரன் என்ன. எல்லாரும் அண்ணன் தம்பி தான்.

இங்கிலீஸ்காரன் பிரெஞ்சுகாரன்லாம் நெருங்கிய சொந்தம் தான். ஆஸ்திரேலியாகாரன்லாம் மாமன் மச்சான். தேவைப்பட்டா அவன் மொழில பேசுவோம். எழுதுவோம். எனக்கு தமிழ் தெரிவதால் தமிழில் எழுதுகிறேன். அவ்ளோ தான்.

மீண்டும் நினைவூட்டுகிறேன்,. யாதும் ஊரே யாவரும் கேளீர் மரபு நமது. மொழி பற்றுதான் தேவையே தவிர மொழி வெறி அல்ல. அதையும் தாண்டி ஆங்கிலத்தில் விளம்பரம் செய்வது ஒரு வகை மார்க்கெட்டிங் ஸ்ட்ரேட்டஜி. 24 மணி நேரமும் தமிழை சுமந்து சுமந்து கூன் ஆகி விடாமல் இருக்க அவ்வப்போது நிமிர்ந்து போகோ சேனலும் பாருங்கள்.

தமிழை உண்மையாக உள்வாங்குவருக்கு சுமை தெரியாது. அது சிறகு பொருத்தும். எங்களுக்கு இருப்பது சிறகு. சிறகுள்ள பறவைக்கு எம்மொழியும் செம்மொழி தான்.

- கவிஜி

Comments

11 comments

11
குமரன்
அன்புடன் கவிச்சிக்கு

ஆங்கிலம் இல்லாத அகிலம் இருந்தது

ஆங்கிலம் முளைவிட்டது இன்றைக்கு 1500 வருடங்களுக்கு முன் சாதுவா வெளியே தெரிந்தது ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தை வளர்த்து வியாபார மொழியாகியது இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்ட போதுதான் ஆங்கிலேயன் இந்தியாவை விட்டு வெளியேறினாலும் ஆங்கிலத்தை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முடியவில்லை

ஆங்கிலம் வரமுன் இந்தியா என்றொரு தேசம் இருக்கவில்லையா அவர்கள் வியாபாரம் செய்யவில்லையா இதை விவரிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய புத்தகமாக தான் எழுத வேண்டும்

ஆனால் சிறு குறிப்பு ஒன்று புகழ்பெற்ற ஆங்கில விஞ்ஞானியான நியூட்டன் தனது கண்டுபிடிப்புகளை ஆங்கிலத்தில் எழுத முடியவில்லை ஏனென்றால் அது அப்பொழுது வளர்ச்சியடைந்த மொழியாக இருக்கவில்லை நியூட்டன் வாழ்ந்தது சற்றேறக்குறைய 350 ஆண்டுகளுக்கு முன் ஆனால் தமிழ் விஞ்ஞானிகள் குறிப்பாக திருமூலர் 1600 வருடங்களுக்கு முன் தனது விஞ்ஞான எண்ணக்கருக்கள் எல்லாவற்றையும் தமிழில் தான் எழுதினர் இத்தாலிய ரான வீரமாமுனிவர் தமிழை கற்றது தமிழில் உள்ள காதலினால் அல்ல தமிழ் வியாபார மொழியாக இருந்தது எனவே தான் கற்றர் கார்பெல் போப் போன்றவர்கள் வியாபார மொழியான தமிழைக் கற்று தமது மொழியை மேன்மைப் படுத்தினார்கள் இப்பொழுது தமிழில் உள்ள கண்டுபிடிப்புகள் எல்லாம் தமது என உரிமை கூறுகிறார்கள் எடுத்துக்காட்டாக உயிரின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை டார்வின் தனது என உரிமை கோருகிறார் இதை எடுத்துச் சொல்ல தமிழர்களுக்கு அப்பொழுது முடியவில்லை இப்பொழுதாவது சொல்லலாம் தானே இறுதியாக ஆங்கிலம் மேன்மை பெற்றது இந்தியா அடிமை பட்ட அந்த 200 வருடங்கள் மட்டும்தான்

என்று மடியும் இந்த அடிமையின் மோகம்
S.Periyasamy
ஒரு மொழியின் பெருமை அது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதில் இல்லை. அதில் எத்தனை, எவ்வளவு பெரிய சாதனைகள் பதிவு ஆகி உள்ளன என்பதில் தான் உள்ளது. இன்று மிக அதிக, மிக பெரிய பல்துறை சாதனைகள் பதிவாகியுள்ள மொழி ஆங்கிலம். அந்த மொழியில் பல்துறை ஆராய்ச்சி கட்டுரைகளும் நூல்களும் ஆண்டுக்கு பல லட்சம் வெளியாகின்றன. தமிழ் மாதிரியான மூன்றாம் உலக நாட்டின் அதுவும் ஒரு வட்டார மொழி ஆங்கிலத்தோடு போட்டி இடவே முடியாது. தமிழறிஞர்கள் என்னும் கோமாளிகள் கூட்டம் எந்த அளவுக்கு உண்மையில் இருந்து விலகி இருக்கிறது என்பதை மேற்படி பின்னூட்டம் காட்டுகிறது.
குமரன்
மேலே முதலாவதாக உள்ள பின்னூட்டத்தைப் பார்த்து அதை எழுதியவர் ஒரு "தமிழறிஞர்" என்று சொல்வதன் மூலம் பெரியசாமி ஒரு "கோமாளி "என்று புலப்படுகிறது
ஆங்கிலம் மிகவும் பிற்பட்ட காலத்தில் உருப்பெற்று போட்டி போட்டு இப்போது உள்ள நிலைக்கு வர முடியுமானால் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பெருந்தன்மையை விட்டு ஆங்கிலத்தைப் போல் போட்டி போட்டால் ஆங்கிலம் உலகிலிருந்து காணாமலே மறைந்துவிடும்
குமரன்
தமிழர்களின் பண்பாட்டின் அடிப்படையில் அறமே வாழ்வின் அடித்தளம் பொருள் (வியாபாரம்) அறத்தின் மேல் கட்டப்பட்ட இரண்டாவது தளம் பொருளின் மேல் கட்டப்பட்டது இன்பம் இந்த கட்டுகளிலிருந்து விடுதலை பெறுவது இறுதி இலக்கு அதாவது அறவழியில் பொருளீட்டி அப்பொருளின் மூலம் இன்பத்தை நுகர்ந்து ஈற்றில் விடுதலை பெறுவதே மனித வாழ்க்கையின் நோக்கம்

யாது உம் ஊரே யாவர் உம் கேளிர்

திரைகடல் ஓடி உம் திரவியம் தேடு

இதில் வருகின்ற "உம்" எச்ச பொருளிலேயே வருவதாக நான் நினைக்கின்றேன் ஏனெனில் இவை தமிழரின் எண்ணத்தில் தோன்றியபோது தமிழர்களே உலகில் நாகரிகத்திலும் பொருள்( வியாபாரம்) வளத்திலும் சிறந்து விளங்கினார்கள் அக்காலத்தில் யவனர்கள் (தற்கால ஐரோப்பியர்கள் )அரேபியர்கள் சீனர்கள் தமிழகத்தை நோக்கியே வந்தார்கள் ஒழிய தமிழர்களுக்கு தங்களைவிட நாகரிகத்திலும் செல்வத்திலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் குறைந்த ஏனையவர்களை நாடிச் செல்லவேண்டிய அவசியம் இருக்கவில்லை எனவே இமயம் முதல் குமரிக்கண்டம் வரை பரவி வாழ்ந்த தமிழினம் தொல்காப்பியர் காலத்திலேயே வட வேங்கடத்துக்கும் தென்குமரி க்கும் இடைப்பட்ட நிலத்தில் சுருங்கிவிட்டது ஏனைய பிரதேசங்கள் அந்நியரின் வருகையாலும் படையெடுப்பாலும் கபளீகரம் செய்யப்பட்டது இதை கருத்தில் கொண்டுதான் தமிழினம் தொடர்ந்தும் தமது சொந்த நிலத்திலேயே குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் பரந்து வாழ ஊக்குவிக்கவே மேற்படி வாத்தியம் சொல்லப்பட்டது அதாவது நீ இருக்கின்ற ஊர் மட்டுமே உனக்குச் சொந்தம் என்று எண்ணி விடாதே எப்படி அன்னியர்கள் நமது மண்ணை ஆக்கிரமிக்கிறர்களோ அதுபோன்று நீயும் அன்னிய பிரதேசம் சென்று அங்கு உன் ஆட்சியை நிறுவி வாழப் பழகிக் கொள்
திரைகடலோடியும் என்ற பொழுது நீ திரை கடலோடா மலே திரவியம் தேடுகிறாய் என்றுதான் பொருள் வரும் அதாவது நீ இருக்கின்ற இடத்தை நோக்கி அந்நியப் பொருட்கள் வந்து சேர்கின்றன அந்த மமதையில் தங்கி விடாமல் நீயும் கடல் கடந்து வியாபாரம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே பொருள்
குமரன்
அன்புடன் கவிச்சி
நீங்கள் மேலே உள்ள கட்டுரை போல் மாங்கு மாங்கு என்று எழுதி என்ன பிரயோசனம் சொல்ல வந்த கருத்தும் தவறு சொல்லிய தகவல்களும் பிழையான தகவல்கள் எனவே யார் இதை திரும்பிப் பார்க்கப் போகிறார்கள் எனவே கவிச்சி என்று பேர சீண்டியது தங்களுக்கு அறிவு இருக்கிறதா என்று சோதனை செய்யவே ஒழிய உங்களது அறிவில் மயங்கி அல்ல
கிரந்த எழுத்துக்கள் தமிழில் அன்னிய சொற்களை எழுதுவதற்கு உருவாக்கப்பட்டது அவை தமிழ் எழுத்துக்கள் அல்ல
S.Periyasamy
குரங்கு இனம் மனித இனத்தை விட மூத்தது. அதற்காக மனிதர்களை விட குரங்குகள் அறிவாளிகள் என சொல்ல முடியுமா? பழமையில் என்ன இருக்கிறது? முதலில் இந்தி ஆதிக்கத்தில் இருந்து தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற பாரும். லட்ச கணக்கில் வந்து குவிக்கிறார்கள். வேலை வாய்ப்புக்களை கைப்பற்றுகிறார்கள். கணக்கு வழக்கு இல்லாமல் சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்கள். ஆங்கிலம் என ஒன்று இருப்பதால் தான் தமிழர்கள் இந்த அளவுக்கு ஆவது முன்னேறி உள்ளனர். தமிழை பிடித்து அழுது கொண்டிருந்தால் இந்நேரம் இந்த முன்னேற்றம் கூட வந்து இருக்காது. தமிழ்நாட்டில் வட இந்திய ஆதிக்கம் முன்பே ஏற்பட்டிருக்கும். கூரை மேல் ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி செவ்வாய் கிரகம் போகிறார்களாம்.
குமரன்
பெரியசாமி கோமாளி என்று நினைத்தேன் அது தவறு பெரியசாமி ஒரு ஏமாளி தமிழில் ஏற்கனவே பல நூறு வருடங்களுக்கு முன் சொன்ன விஞ்ஞான உண்மைகளை அன்னியர்கள் திருடி அதை புதிய உண்மைகளாக சொல்கிறார்கள் அது விளங்கவில்லையா எடுத்துக்காட்டாக ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு ஏற்கனவே தமிழில் உள்ளது வெறுங்கையுடன் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் நாட்டை அடிமை கொண்டு நாட்டுக்கு தலைமை தாங்கியவர்கள் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டு பின் செல்வ வளங்களை கொள்ளையடித்து சென்றது மாத்திரமல்லாமல் அறிவு வளத்தையும் கொள்ளையடித்தார்கள்
S.Periyasamy
மேலைநாட்டு அறிஞர்கள் பல ஆண்டுகள் அறிவுசார் உழைப்பின் மூலம் கண்டுபிடித்ததை எங்களிடம் இருந்துதான் திருடினார்கள் என்று அபாண்டம் பேசுவது இங்கிருப்பவர்களின் வாடிக்கை. இப்போது தமிழ் நாட்டின் மக்கள்தொகை எட்டு கோடி. நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1901 ல் சென்னை மாகாணத்தில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் தமிழ்பேசுவோர் எண்ணிக்கை வெறும் ஒரு கோடியே ஐம்பத்தி இரண்டு லட்சம் பேர் மட்டுமே. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் மொத்தமாக ஆறு ஏழு லட்சம் பேர் இருந்து இருப்பார்கள்.அவர்கள் தான் எல்லா கண்டுபிடிப்புகளையும் செய்தார்கள். அவற்றை வெள்ளையர்கள் களவாண்டார்கள் என்பவர்கள் அறிவு நாணயமற்றவர்கள். கொஞ்சம் அறிவோடு பேசுமய்யா குமரன்!
குமரன்
பெரியசாமி கோமாளி அல்ல ஏமாளி என்று ஏன் சொன்னேன் என்றால் எப்படி மூத்த தமிழினத்தின் அறிவுசார் இலக்கியங்களை திருடி அதை தன் வசப்படுத்தி அதில் உள்ளவற்றை தமது மொழிக்கு மொழிபெயர்த்து பின்னர் மூல நூல்களை அழித்துவிட்டு இப்பொழுது சமக்கிருதம் எப்படி தமிழின் தலையின்மேல் இருந்துகொண்டு அதை அதிகாரம் பண்ணுகிறது அதுபோன்றுதான் ஆங்கிலமும் இன்று இந்தியாவை ஆள்கிறது அதற்கு சான்றாக கீழுள்ள சிறு குறிப்பை மாத்திரம் தர விரும்புகிறேன்

அண்டத்தில் உள்ளவைதான் பிண்டத்திலும் (உடம்பு) உண்டு. நமது உடம்பும் பூமியிலுள்ள பொருள்களால்தான் ஆக்கப்பட்டது.

மாயையில் (E=mc²)உள்ள சிறு பகுதியை மூலமாக கொண்டுதான் இந்த அண்டம் தோன்றியது.

அண்டம் தோன்றும்போது "ஓம்" என்ற பெரு வெடிப்பு(big bang) ஏற்படுகிறது அதாவது நாதம் குறியீடு பிள்ளையார்

இந்த ஒலி சக்தி அணுக்களாக மாற்றம் பெறும் அதாவது விந்து குறியீடு முருகன்

அணுக்கள் சேர்ந்து உருக்களை தோற்ற முயலும் இப்போது அருவத்திற்கும் உருவத்திற்கும் இடைப்பட்ட அருஉருவம் தோன்றும் குறியீடு சிவலிங்கம்

அருஉருவம் உருவங்களாக மாற்றம் பெற்று தற்போது நாம் காணும் அண்டம் தோன்றும் குறியீடு நடேசர். இதனால்தான் நடேசருக்கு திருவாசி வைப்பதில்லை பதிலாக பேரண்டத்தை சுட்டும் நெருப்பு வளையம் வைக்கப்படுகிறது. "முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே" (ஏற்கனவே இருக்கின்ற பழைய உண்மைகள் மாத்திரமல்ல எதிர்காலத்தில் கண்டறியக்கூடிய விதிகளும் அவருள் அடக்கம்)

ஒரு மத்தால் (மேரு) பாலை கடையும் போதும் ஏற்படும் தோற்றம் போல தோன்றும் நாம் வாழும் அண்டமானது விரிவடைந்து செல்கின்றது இந்த விரிவாக்கம் ஒரு கட்டத்தில் தொடர்ந்தும் விரிய முடியாமல் ஒடுங்க ஆரம்பிக்கும் குறியீடு உருத்திரன்

ஒடுக்கம் நிகழும்போது திண்மப் (நிலம்) பொருட்கள் உருகி திரவமாக (நீர்) மாறும் தொடர்ந்து நெருப்பாக மாறும் நெருப்பானது வாயுக்கள் (காற்று) ஆக மாறும் காற்றானது மாயையில் மீண்டும் ஒடுங்கும் எஞ்சியிருப்பது வெளி (ஆகாயம்) வெளியும் ஒடுங்கும் ஏனெனில் அதுவும் மாயையின் கூறுதான் இறுதியில் அது கருந்துளையாக(black hole)மாறும் கருந்துளை ஆனது மேலும் ஒடுங்க முடியாமல் "ஓம்" என்ற சத்தத்துடன் வெடிக்கும் இந்தச் சுழற்சிக்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை
குமரன்
மழை எப்படி வருகிறது என்று தமிழ் விஞ்ஞானியான மாணிக்கவாசகர் கூறுகிறார்

முன்னிக் கடலைச் சுருக்கி  எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்  இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்  பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப் புருவம்
என்னச் சிலை குலவி நம் தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழை ஏலோர்  எம்பாவாய்.

பொருள் புரியும்படி மாற்றப்பட்ட பாடல்:
 
மழைமழையே !கடலை  முன்னிச்    சுருக்கி  எழுந்துகடலை   அணுகி, அதன் நீரைச் சுருக்கி [மேகமாக மாறி ] மேலே எழுந்து,உடையாள்  என்னத் திகழ்ந்து[ எம்மை   அடியவர்களாக] உடையவளான உமையின் மேனி போல கரு நிறமாக மாறி,எம்மை ஆளுடையாள்    இட்டிடையின்
மின்னிப் பொலிந்துஎம்மை   அடியவர்களாகக் கொண்டுள்ள உமையின் சிற்றிடை போல மின்னி , பொலிவுடன் காட்சி   அளித்து,எம்  பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித்எம்   தலைவியாகிய உமையின் திருவடிகளில் இருக்கும் பொன்னாலான சிலம்புகளின் ஒலி போல இடி   இடித்து முழங்கி ,திருப் புருவம்
என்னச் சிலை குலவிஅவளது   திருப்புருவம் போல் வளைந்த வான வில்லாகத் தோற்றமளித்துநம் தம்மை   ஆளுடையாள்எம்மை   ஆள்கின்ற உமையானவள்தன்னில்   பிரிவு இலா எம் கோமான்  அன்பர்க்குதன்னைப்   பிரியாமல் இணைந்துள்ள எம் தலைவனான சிவனின் அடியவர்களுக்குமுன்னி அவள்   நமக்கு  இன் அருளே முன் சுரக்கும் என்னப்அருகில்   வந்து, இனிய அருளைப் பொழிவது போலபொழியாய்   , ஏலோர்  எம்பாவாய்.நீ   பொழிவாயாக!
குமரன்
அன்புடன் கவிச்சிக்கு

தவறை உணர்ந்து கொண்டால் மாத்திரம் போதாது அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவமும் வேண்டும் தவறை ஒத்துக்கொண்டு எதிர்காலத்தில் இவ்வண்ணம் நிகழாவண்ணம் கருத்துரைப்பீராக

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.