முல்லை நிலம்
பண்டைய தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட தமிழர் நிலத் திணைகளுள் முல்லையும் ஒன்றாகும். காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். “ஆதியில் குறிஞ்சி நிலத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் அந்த நிலத்திலேயே பரம்பரை பரம்பரையாகப் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்க வேண்டும். ஆநிரைகளை அவன் சேகரித்து அவற்றைத் தன் உடைமையாகக் கொண்டு வளர்க்கத் தொடங்கிய காலத்திற்குப் பின்னரே புதிய மேய்ச்சல் நிலத்தைத் தேடி, முல்லை நிலத்திற்குக் குடிபெயர்ந்திருக்க முடியும்”1 என்கிறார் வெ.மு.ஷா்ஜகான் கனி. மரங்கள் குழுக்களாக வளரும் போது அங்குக் காடுகள் பிறக்கின்றன. காடுகளும் விலங்குகளும் இயற்கைச் சூழலின் சீரான தன்மைக்கு மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. செம்மண் பரந்திருத்தலால், முல்லை நிலம் “செம்புலம்” எனவும் அழைக்கப்படுகின்றது. இந்நிலமானது முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.
“மாயோன் மேய காடுறை உலகமும்”
(தொல்., பொருள்., அகத்., நூ. 2)
எனத் தொல்காப்பியம் முல்லை நிலம் குறித்துக் கூறுகின்றது.
கார்காலமாகிய ஆவணித் திங்களும் புரட்டாசித் திங்களும், மாலைப் பொழுதாகிய இரவின் முற்கூறும் முல்லைத் திணைக்கு உரிய காலம் ஆகும்.
“காரும் மாலையும் முல்லை”
(தொல்., பொருள்., அகத்., நூ. 6)
என்று கூறுகின்றது தொல்காப்பியம். மிகுந்த கார்காலமாகிய பெரும்பொழுதும் மாலையாகிய சிறுபொழுதும் முல்லை நிலத்துக்கு உரிய பொழுதுகளாகும் என்பதை,
“மல்குகார் மாலை முல்லைக்கு உரிய”
(நம்பி., அகத்., 15)
என்ற நூற்பாவின் வழி அறிய முடிகின்றது.
வாழ்வியல் சூழல்
வாழ்வியல் சூழல் என்பது ஓர் உயிரினம் அல்லது அமைப்பு வாழும் அல்லது செயல்படும் சூழலைக் குறிக்கின்றது. இது சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் உயிரற்ற இயற்பியல் காரணிகளை உள்ளடக்கியது. அத்துடன் அந்தச் சூழலில் உள்ள பிற உயிரினங்களையும் உள்ளடக்கியது. “மக்கள் தம் வாழ்வியலை வெளிப்படுத்தும் இலக்கியங்கள் அம்மக்களின் சூழலியலையும் பதிவு செய்கின்றன. மக்களின் அகம் மற்றும் புற வாழ்வியல் சூழலியலோடு பின்னப்பட்டிருப்பதைப் புலவர்கள் தெள்ளிதின் அறிந்திருந்தனர்”2 என்கிறார் இரா. மதன்ராஜ். வாழ்வியல் சூழல் என்பது மனிதர்கள் தங்கள் வாழ்க்கை முறையைச் சுற்றுச்சூழலோடு அனுசரித்து வாழ்வதைக் குறிக்கின்றது. இது, கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு மாறியதால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது சுற்றுச்சூழலை மேம்படுத்தும் முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
முல்லை நிலக் காட்சி
பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அகநூல்களுள் “கார் நாற்பது” முல்லை நிலம் குறித்த செய்திகளைப் பதிவு செய்துள்ளது. காடுகளும் காடு சார்ந்த புதர்களும் நிறைந்த மேய்ச்சல் நிலங்களும் சிறுதானிய வயல்களுடன் கூடிய அமைதியான, வளமான பகுதிகளும் புன்செய் நிலமாகிய முல்லை நிலமாகும். இதில் மான்கள், நரிகள், முயல்கள் போன்ற விலங்குகள் வாழ்கின்றன. எப்போதாவது காட்டாறு ஓடும். முல்லை மலர்கள் பூத்துக் குலுங்கும். இங்குள்ள மக்கள் கால்நடை வளர்ப்பையும் சாமை, வரகு போன்ற சிறுதானியப் பயிர்களையும் பயிரிட்டு வாழ்கின்றனர்.
சேவகர்கள் குளிர்காலத்திற்குரிய உடையினை அணிந்து நிற்க, புல்லைத் தின்று தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் குதிரைகள் பூட்டப் பெற்ற தேரானது இனிதுடன் காணப்பட்டது. இத்தகைய காடானது இளமை மிகு மகளிர் போன்று வளமையோடு செல்வ வளம் மிக்கது போல் எழிலுடன் காணப்படுகின்றது என்று தலைவன் கூறியதை,
“இளையவரும் ஈர்ங்கட்கு அயரஉளை யணிந்து
புல்லுடன் கலிமாவும் பூட்டிய – நல்லார்
இளநலம் போலக் கவினிவளமுடையார்
ஆக்கம்போல் பூத்தன காடு”
(கார் நாற்பது., 22)
என்ற பாடல் அடிகளின் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.
கார்காலம்
கார்காலம் என்பது தமிழ் மாதங்களான ஆவணி, புரட்டாசி ஆகியவற்றை உள்ளடக்கிய மழைக் காலம் ஆகும். இது தமிழர் பருவ காலங்களில் ஒன்றாகும். மேலும் - இந்த நேரத்தில் மேகங்கள் கூடி மழை பெய்யும்.
கார்காலத்தில் தோன்றிய கரிய கார்மேகமானது நம் பற்களைப் போன்று திகழும் முல்லை அரும்புகளைத் தோற்றுவித்தது. ஆதலால் ‘நம் தலைவர் இக்கார்ப் பருவத்தில் வருவார். உமது மென்மையான மார்பில் தோன்றிய பசலை நிறம் இனி மாறும்’ என்று தலைவியை நோக்கித் தோழி கூறுகிறாள். இதனை,
“மென்முலை மேல் ஊர்ந்த பசலை மற்று
என்னாம்கொல்
நன்னுதல் மாதராய் ஈதோ நமர் வருவர்
பன்னிற முல்லை அரும்பப் பருவம் செய்து
இன்னிறம் கொண்டதுஇக் கார்”
(திணைமொழி ஐம்பது, 22)
என்ற பாடல் அடிகள் எடுத்துக் காட்டுகின்றன.
‘முல்லை நிலத்திலுள்ள கொன்றை மரங்களில் மழைத்துளிகள் வீழ, அம்மரங்களில் அரும்புகள் தோன்றின. பின்னர் மலர்கள் பூத்தன. பின்னர் அவை பெண்களின் கூந்தல் போன்று காய்களைத் தந்தன. இறுதியில், அவை துளை உடைய குழலாக மாறியதைச் சென்று காண்பாயாக! இவற்றைக் கண்டும் கார்ப்பருவம் இன்னமும் வரவில்லை என்று வற்புறுத்தாதே!’ என்று தோழியை நோக்கித் தலைவி கூறியதை,
“வீயும் வியப்புறவின் வீழ்துளியால் மாக்கருக்கை
நீயும் பிறரொடும் காண் நீடாதே – ஆயும்
கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க்
குழலாகிக் கோல் சுரியாய்க் கூர்ந்து”
(திணைமாலை நூற்றைம்பது, 98)
என்ற பாடல் அடிகளின் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.
கார்காலப் பொழுதுகள்
கார்காலப் பொழுது என்பது ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் பருவ காலத்தைக் குறிக்கின்றது. இந்த நேரத்தில் மழை, இடி, மின்னல் போன்ற இயற்கை நிகழ்வுகள் அதிகமாக இருக்கும். இது முல்லைத் திணையின் பெரும்பொழுதாகும். முல்லைத் திணைப் பாடல்களில் தலைவனின் வருகையை எண்ணிக் காத்திருக்கும் தலைவியின் மனநிலையைக் குறிக்கும் பாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
கார்கால மாலைப் பொழுது என்பது மழைக்கால மாலையில் பெய்யும் மழையையும், அது தரும் வருத்தத்தையும் குறிக்கின்றது. இது முல்லைத் திணைக்கு உரிய பெரும்பொழுதான கார்ப்பருவத்தின் மாலை நேரத்தைக் குறிக்கின்றது. இது பிரிந்து சென்றவர்களால் ஏற்படும் துயரத்தையும் இயற்கைக் காட்சிகளையும் சித்திரிக்கின்றது.
கடல் நீரைக் குடித்த சூல் கொண்ட மேகமானது பெரும் பாறைகளை உடைய மலை மேல் ஏறியிருந்து மழைநீரைச் சொரிகின்ற கார்காலம் வந்தது என்பதை,
“கருங்கடல் மேய்ந்த கமஞ்சூல் எழிலி
இருங்கல் இறுவரை ஏறி உயிர்க்கும்
பெரும்பதக் காலை”
(கார் நாற்பது, 37: 1-3)
என்று தோழி கார்ப்பருவத்தின் தன்மை குறித்துத் தலைவிக்குக் கூறிய பாடல் அடிகளும், பெரும் சினத்தை உடைய களிறுகள் தம் நெற்றியில் உள்ள புள்ளிகள் புழுதியால் பரவும்படியாகப் பிடிகளோடு கூடி விளையாடும் குளிர்ந்த பருவத்தை உடைய கார்காலம் வந்தது என்ற செய்தியை,
“புகர்முகம் பூழிப் புரளஉயிர் நிலைய
வெஞ்சின வேழம் பிடியொடு இசைந்தாடும்
தண்பதக் காலை”
(கார் நாற்பது, 38: 1-3)
என்று தோழி தலைவியை ஆற்றுவித்த பாடல் அடிகளும் பதிவு செய்வதன் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.
கார்காலப் பருவத்தைக் கண்டு வருந்திய தலைவி தோழியை நோக்கி, கரு வண்டுகள் முல்லை மலர்களில் படிந்து ரீங்காரம் செய்து தேனை அருந்தும் காலத்தில் தலைவரைச் சார்ந்திருக்கும் மகளிர்க்கு மாலைப் பொழுதானது இனிமை தருகின்றது. ஆனால் தலைவரைப் பிரிந்திருக்கும் மகளிரை மாலைக் காலமானது வருத்துகின்றது என்று கூறுகின்றாள். இதனை,
“முல்லை நறுமலர் ஊதி இருந்தும்பி
செல்சார் வுடையார்க்கு இனியவாய் -
நல்லாய்மற்று
யாருமில் நெஞ்சினேம் ஆகி உறை வேமை
ஈரும் இருள் மாலை வந்து”
(ஐந்திணை ஐம்பது, 6)
என்ற பாடல் அடிகள் எடுத்துக் காட்டுகின்றன.
கார்காலக் காட்சியும் மோர் விற்கும் தலைவியும்
காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை நிலமாகும். இந்த நிலங்களில் வாழும் ஆயர் குல மக்கள் ஆடு, மாடுகளை மேய்த்து, பால், தயிர், மோர், வெண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்து வந்தனர். ஆயர் குலப் பெண்கள் அதிகாலையில் எழுந்ததும், தயிர் கடைந்து, புதிய மோரைப் பானைகளில் ஏந்தி, ஊர்களுக்குச் சென்று விற்பனை செய்வர். மோர் விற்பனைக்கு ஈடாக, நெல் போன்ற உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வர்.
மழை பெய்து பொலிவாகத் தோன்றிய பரந்த வெளியில், ஆநிரைக் கூட்டங்கள் அருகம்புல்லை வயிறு நிறையத் தின்று நீர்நிலைகளின் கரையில் உள்ள மர நிழலில் தங்கியிருந்தன. அதிலுள்ள ஒவ்வொரு பசுவும் ஒரு குடம் பால் கறப்பவையாக இருந்தன. அப்பசுக் கூட்டத்தில் உள்ள ஒரு காளையைப் புதிதாக வண்டியில் பூட்டிய போது அது செருக்குடன் நிற்பது போல ஓர் ஆய மகள் இளமையும் அழகும் மிகுந்து காணப்பட்டாள். இவள், பேரூர், சிற்றூர் ஆகியவற்றில் ஆரவாரம் உண்டாகுமாறு மோர் விற்று வந்தாள். அவளைக் கண்ட தலைவன் தன் நெஞ்சிடம், ‘நெஞ்சே, தலைவியின் அழகைப் பார்! யாரும் அவளுடைய அழகுக்கு இணையில்லை’ என்று கூறுகின்றான். இதனை,
“கார்ஆரப் பெய்த கடிகொள் வியன்புலத்துப்
பேராது சென்று பெரும் பதவப் புல்மாந்தி
நீரார் நிழல குடம்சுட்டு இனத்துள்ளும்
போர் ஆரா ஏற்றின் பொருநாகு இளம்பாண்டில்
தேர் ஊரச் செம்மாந்தது போல் மதைஇனள்
பேரூரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள்போல்
மோரோடும் வந்தாள் தகை கண்டை யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு”
(கலித்., 109: 1-8)
என்ற பாடல் அடிகளின் வழியாக அறிந்துகொள்ள முடிகின்றது.
கார்காலத் திருவிழா (கார்த்திகைத் திருவிழா)
கார்த்திகைத் திருவிழா என்பது கார்த்திகை மாதப் பௌர்ணமி நாளில், கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தமிழர் திருவிழாவாகும். இந்த நாளில், மக்கள் தங்கள் வீடுகளிலும் கோவில்களிலும் விளக்குகளை ஏற்றி, இறைவனை வழிபடுவார்கள். குறிப்பாக, திருவண்ணாமலையில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. மேலும், அங்கு ஏற்றப்படும் மகா தீபம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கார்த்திகைத் திருவிழாவில் நாட்டில் உள்ள பெண்கள் மாலை நேரத்தில் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைப்பர். இவ்விளக்குகள், தோன்றிப் பூக்களின் சுடர் போன்று நன்மை பெருகப் பூத்து அழகு செய்தன. அச்சமயத்தில் மழை தலைவன் வருகையைத் தெரிவிக்கும் தூது எனப் பெய்தது என்று தோழி, தலைவியை நோக்கிக் கூறியதை,
“நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி!
தூதொடு வந்த மழை”
(கார் நாற்பது, 26)
என்ற பாடல் அடிகள் நமக்குச் சுட்டுகின்றன.
தலைவன் வரவை உணர்த்தும் இயற்கை
தலைவன் வரவை உணர்த்தும் இயற்கையின் பல கூறுகளில், தலைவன் வருவான் என்ற தோழியின் நம்பிக்கைக்கும், தலைவியின் மனமானது மகிழ்ச்சியால் துள்ளுவதற்கும் இயற்கை உவமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றது.
ஐந்து பகுப்புகளுடன் சுருண்ட கூந்தலை உடைய தலைவியிடம் தோழி, பாம்பின் படம் போன்று திகழும் வெண்காந்தள் பூங்கொத்துக்களை ஈன்ற காடுகள், பொருளை ஈட்டுவதற்காகச் சென்ற தலைவன் விரைந்து வருதலைத் தெரிவித்தன என்று கூறுவதாக அமைந்த செய்தியினை,
“புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்
வணர்ஒலி ஐம்பாலாய் வல்வருதல் கூறும்
அணர்த்தெழு பாம்பின் தலைபோல்புணர் கோடல்
பூங்குலை ஈன்ற புறவு”
(கார் நாற்பது, 11)
என்ற பாடல் அடிகள் காட்டுகின்றன.
தலைவன் காளையை அடக்கிய காட்சி
தலைவன் காளையை அடக்குதல் என்பது ஏறு தழுவுதல் என்ற பாரம்பரிய விளையாட்டைக் குறிக்கின்றது. இந்த விளையாட்டில், காளையை அடக்கும் வீரனுக்குத் தலைவியைக் கொடுப்பது வழக்கம். இது, தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டைய மரபு ஆகும்.
தலைவன் பாங்கனிடம், “மிகுந்த மழையின் காரணமாக மலர்ந்த மணம் மிக்க பிடவ மலர்கள், முல்லை மலர்கள், காந்தள் மலர்கள், கொன்றை மலர்கள் எனப் பல வகை மலர்களைத் தொடுத்துத் தழை, கோதை, இழை என்ற மாலை வகைகளைச் சூடித் தம்முள் கலந்து மகிழ்ந்து விளையாடும் மகளிர் கூட்டத்தில் என்னை ஈர்த்து என் உயிரினுள் சென்று அமர்ந்த இவள் யார்?” என்று கேட்டான். அதற்குப் பாங்கன், “இவள், சுற்றத்தாரால் போர் புரிவதில் வல்ல சிறந்த காளையைத் தழுவுவோரைத் தவிரப் பிறர் தனது மாநிற மேனியைத் தீண்டுவதற்கு உரியர் அல்லர் என்று பறையை அறைந்து அனைவரும் அறியுமாறு அறிமுகப்படுத்தப் பெற்றவள்” என்று கூறினான். தலைவன், “நான் ஏறு தழுவி இவளைப் பெறுவேன் என்று கூறுக!” எனத் தெரிவித்தான்.
“ஏறு தழுவுதற்கு நாங்கள் காலம் தாழ்த்த மாட்டோம். அணிகலன்களை உடைய இந்தப் பெண்ணின் காரணமாக ஏறு தழுவும் விழா நடைபெறும் என்று பறையறைந்து அறிவிப்பீராக! விழாவில் வெண்புறாவை ஒத்த மகளிர் கண் மலர்ந்து பார்க்கும் இடமெல்லாம் அவர்களுக்குத் தெரியுமாறு பரண்கள் அமைத்தால் நன்றாக இருக்கும்!" என்று கூறினர். பின்னர் ஏறு தழுவும் நிகழ்வு தொடங்கியது.
பல வண்ணங்களையுடைய அழகிய காளைகளின் மீது பாய்வதற்கு இளைஞர் பலர் அவற்றின் எதிரே சென்றனர். காளைகளும் கொன்று குவிக்கும் வில்லைப் போல அதிக அளவு சினத்துடன் அவர்கள் மீது பாய்ந்தன. எங்கும் தூசி எழப் பாய்ந்த காளைகளின் கொம்பைத் தம் மார்பில் ஏற்பதற்கு இளைஞர் ஆயத்தமாக நிற்க, காளைகள் அவர்களைக் கீழே தள்ளிக் கொம்புகளைத் தாழ்த்தின. அதைக் கண்டு பலரும் கலங்கினர்.
அவர்களுள் மாலை அணிந்த மார்பினன் ஒருவன் தன் நீண்ட கரிய கைகளால் காளையின் கழுத்தை இறுகத் தழுவி, மறைந்து நின்று ‘சட்’்டென, அதன் இமில் மீது ஏறிப் போரிட்டு, அதன் வலிமையை அடக்கினான். அப்போரில் துன்புற்று நின்றது காளை. காளையின் உரிமையாளர் அத்துன்பத்தைப் பார்க்க இயலாமல் சினத்தோடு எழுந்து நின்றார். இவ்வாறு காளையை அடக்கிய காட்சிப் பதிவை,
“சாற்றுள் பெடையன்னார் கண்பூத்து நோக்கும் வாயெல்லாம்
மிடைபெறின் நேராத் தகைத்து
…….. …….. ……. ……..
ஏறெவ்வம் காணா எழுந்தார்”
(கலித்., 102: 15-28)
என்ற பாடல் அடிகளின் வழியாக அறிந்துகொள்ள முடிகின்றது.
முடிவுகள்
முல்லை நிலத்தின் பெரும்பொழுதாகக் கார்காலமும், சிறுபொழுதாக மாலைப் பொழுதும் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஆநிரை மேய்த்தலும், மோர் விற்றலும் முல்லை நில மக்களின் முக்கியத் தொழில்களாக அமைந்துள்ளன என்பதையும், அவர்களின் வாழ்வியல் முறையானது நிலத்தையும் பொழுதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதையும்;
இருத்தலாகிய முல்லை நிலத்தின் உரிப்பொருள் தலைவனின் வரவை எண்ணிக் காத்திருக்கும் தலைவியின் மனநிலை ஆகிய முல்லை நிலத்தின் பெரும்பொழுதான கார்காலத்தோடு ஒன்றிணைத்துக் கூறப்பட்டுள்ளமையும்;
முல்லை நில மக்கள் கொண்டாடும் கார்த்திகைத் திருவிழா குறித்தும் பண்டைய தமிழர்களின் வீரத்தையும் பண்பாட்டையும் அறிய முடிகின்றது.
அடிக்குறிப்புகள்
1. வெ.மு.ஷாஜகான் கனி, திணை வரலாறு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600 113, முதற்பதிப்பு 2012, ப. 4.
2. இரா.மதன்ராஜ், சங்க இலக்கியத்தில் சூழலியல், திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்பெறும் ஆய்வேடு, தமிழாய்வுத் துறை, அரசு கலைக் கல்லூரி, அரியலூர் – 621 713, ஆகஸ்ட் 2020, ப. 1.
துணைநூற்பட்டியல்
1. மு.சண்முகம்பிள்ளை (ப.ஆ)., தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி நகர், சென்னை – 600 017, முதற்பதிப்பு 1998.
2. ச.திருஞானசம்பந்தம், நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் (துறை விளக்கங்களுடன்), கதிர் பதிப்பகம், தெற்கு வீதி, திருவையாறு – 613 204, மூன்றாம் பதிப்பு சூன் 2008.
3. வெ.பேரி.பழ.மு.காசி விசுவநாத செட்டியார், கலித்தொகை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை – 1, மூன்றாம் பதிப்பு நவம்பர் 1949.
4. ந.மு.வேங்கடசாமி நாட்டார், கார் நாற்பது, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை – 1, முதற்பதிப்பு ஜூலை 1925.
5. ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஐந்திணை ஐம்பது, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை – 1, முதற்பதிப்பு ஜூலை 1925.
6. ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஐந்திணை எழுபது, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை – 1, முதற்பதிப்பு ஜூலை 1925.
7. ந.மு.வேங்கடசாமி நாட்டார், திணைமொழி ஐம்பது, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை – 1, முதற்பதிப்பு ஜூலை 1925.
8. ந.மு.வேங்கடசாமி நாட்டார், திணைமாலை நூற்றைம்பது, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை – 1, முதற்பதிப்பு ஜூலை 1925.
கட்டுரையாளர்கள்:
பா. ரம்ஜான், முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), மதுரை – 625 018, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
&
முனைவர் சி. அருள் மைக்கேல் செல்வி, எம்.ஏ., எம்,ஃபில்., பிஎச்.டி., இணைப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), மதுரை – 625 018, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,