இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகள் என்று குறிப்பிடப்படுவதுண்டு. அவை தோன்றிய காலத்தின் பின்புலத்தை நாம் கண்டு கொள்வதற்குரிய வாய்ப்பினை வழங்குபவையாக இலக்கியங்கள் உள்ளன. இத்தகைய இலக்கியங்கள் தத்துவவியலாளர்களினால் உருவாக்கப்படும் போது அதில் மனித வாழ்வியலுக்கான படிப்பினைகள் நிதர்சனமாக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை தன்னுடைய நாற்பத்து இரண்டாவது வயதில் பெற்றுக்கொண்ட பிரஞ்சு தத்துவவியலாளரும் இருத்தலியலாளருமான அல்பேர்ட் கம்யுவினால் (Albert Cambus) எழுதப்பட்ட The Plague (தமிழில் ‘கொள்ளைநோய்’) எனும் நாவல் சமகாலத்தில் மிகவும் கவனத்திற்குரியதொன்றாக மாறியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் சமகாலத்தில் மிகவும் அதிகளவில் விற்பனையான நாவலாக இது மாறியுள்ளது.
இந்த நாவல் ஓரான் (Oran) எனும் அல்ஜீரிய நாட்டில் உள்ள நகரத்தை பாதிப்பிற்கு உள்ளாக்கிய பெருந்தொற்று நோயினை அடிப்படையாகக் கொண்டு ஐந்து அத்தியாயங்களை உள்ளடக்கி 1947ஆம் ஆண்டு பிரஞ்சிலும் பின்னர் 1948இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் வெளியிடப்பட்டதாகும்.
இதற்காக 1849ஆம் ஆண்டு ஓரான் நகரத்தை பாதித்த நோய் தாக்கத்தின் போது அந்நகரம் எதிர்கொண்ட பிரச்சினைகளை 1947ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக பின்னணியினை அமைந்து கம்யு வெளிப்படுத்துகின்றார்.
இதனடிப்படையில் பெருந்தொற்றின் (Pandemic) தாக்கத்தின்போது மனிதர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர், உண்மையிலேயே மனிதர்கள் எவ்வாறு ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்ற படிப்பினையினை வழங்குவதாக இந்த நாவல் உள்ளது.
இருத்தலிய நாவல்களில் பிரசித்தமான இதன் கதைச் சுருக்கத்தையும் அதன் ஊடாக கம்யு வெளிப்படுத்தும் இருத்தலிய சிந்தனைகளையும் தொடர்ந்து வரும் பகுதிகளில் நோக்குவோம்.
சனத்தொகை மிகுந்த, கடின உழைப்பாளிகள் நிறைந்த, இலாபநோக்கோடு செயற்படுகின்ற மக்கள் நிறைந்த, தங்களுடைய வழக்கமான செயற்பாடுகளுக்கு அப்பால் வேறு எதனைப்பற்றியும் கவலை கொள்ளாத மக்கள் வாழ்கின்ற ஓரான் எனும் நகரத்தில் திடீரென பல்வேறு இடங்களில் எலிகள் அவற்றின் மறைவிடங்களில் இருந்து வெளியில் வந்து இறந்து கிடக்கின்றன.
ஆரம்பத்தில் இது சாதாரணமாக கருதி புறக்கணிக்கப்பட்டாலும் நாளுக்கு நாள் இறப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு போகும்போது நகர மக்களிடையே பெரும் அச்சம் ஏற்படுகின்றது. பத்திரிகைகள் அரசாங்கத்தை உரிய நடவடிக்கைகள் எடுக்க தவறியமைக்காக கண்டித்தும் உடனடியான பாதுகாப்பு முன்னாயத்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு வேண்டியும் பிரசுரங்களை மேற்கொள்கின்றன.
நகர நிர்வாகிகள் ஒவ்வொரு நாளும் இறந்த எலிகளை சேகரித்து எரிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறான நிலையில் கதையின் நாயகனான வைத்தியர் ரியுக்ஸ் கடமையாற்றும் வைத்தியசாலையில் பராமரிப்பாளர் புதுவிதமான காய்ச்சல் ஒன்றினால் பீடிக்கப்பட்டு பின்னர் மரணமடைகின்றார்.
தொடர்ந்து அதனையொத்த சம்பவங்கள் நகரத்தில் பதிவாகின்றன. வைத்தியரின் நண்பர் ஒருவர் இது கொடூரமான கொள்ளை நோயின் தாக்கமே என்று உறுதியாக தெரிவிக்கின்றார்.
இவர்கள் இருவரும் இணைந்து நகர நிர்வாகிகளையும், ஏனைய வைத்தியர்களையும் விரைந்து செயலாற்றி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்த பின்னரே மிகவும் கண்டிப்பான துப்புரவுச் செயற்பாடுகளையும், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளையும் அமுல்படுத்துகின்றனர்.
கடித, தந்தி தொடர்புகள் மாத்திரமே தொடர்பாடல் மூலங்களாக இருந்த காலத்தில் அவையும் முடக்கப்படுகின்றன. இவ்வாறான தனிமைப்படுத்தலினை முன்னர் எதிர்கொண்டிராத நகர மக்கள் தாங்கள் தங்களுடைய உறவுகளிடம் இருந்து பிரிக்கப்படுவதாக முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர்.
தங்களுடைய சுயநலமான செயற்பாடுகளுக்கு இடம் வழங்கப்படாமல் போனமைக்காக மனவருத்தத்தையும், கண்டனங்களையும் வெளிப்படுத்துகின்றனர். தங்களுடைய தனிப்பட்ட வேதனைகள் பொதுவாக அனைவருக்கும் உள்ள பிரச்சினைகளை விட மேலானவை என்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் இந்த நோய்த்தாக்கமானது ஓரான் நகர மக்கள் செய்த பாவச் செயல்களுக்காக கடவுளினால் வழங்கப்படும் தண்டனை என்று பிரசங்கம் செய்கின்றார்.
வியாபாரம் குறைந்து விட்ட நிலையில் தங்களுடைய வருமானமின்மையினால் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு விற்பனைகளை அதிகரிக்க வியாபாரிகள் முயற்சிக்கின்றனர். றேய்மன்ட் எனும் பெயருடைய பாரிஸ் நகரில் இருந்து வந்திருந்த பத்திரிகையாளர் ஒருவர் நகரத்தில் இருந்து எப்படியாயினும் வெளியேறிவிட வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொள்கின்றார்.
ஆனால் நகர நிர்வாகிகள் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்துகின்ற நபர்களின் உதவியுடன் அவர்களுக்கு பணத்தை வழங்கி தப்பிப்பதற்கு முயற்சி செய்கின்றான். இதேவேளையில் வைத்தியர் ரியுக்சும் அவருடன் இணைந்து இன்னும் மிகச் சிலரும் நோய்த் தாக்கத்திற்கு எதிராக தன்னார்வ அடிப்படையில் கடுமையான பிரயத்தணங்களை மேற்கொள்கின்றனர்.
தன்னுடைய பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்த நிலையில் தன்னைப்போலவே வைத்தியர் ரியுக்சும் வேறு நகரத்தைச் சேர்ந்தவர், அவரும் நோயாளியான தன்னுடைய மனைவியினைப் பிரிந்த நிலையிலேயே மக்களுக்காக சேவையாற்றிக் கொண்டுள்ளார் என்பதனை அறிந்த பின்னர் தன்னுடைய செயற்பாடுகளுக்காக மன வருத்தமடைவதுடன் தப்பித்து செல்கின்ற முயற்சியினை கைவிட்டு மக்களை பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கின்றான்.
ஆட்கடத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கோட்டார்ட் (cottard) என்பவன் தான் ஏற்கனவே மேற்கொண்டிருந்த குற்றச்செயல் ஒன்றிற்காக பொலிசாரினால் தேடப்படும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் சிறைக்குள் தள்ளப்படலாம் என்ற நிலையில் இருந்தவன் தன்னைப் போலவே ஏனைய மக்களது நிலையும் உள்ளதனை நினைத்து தற்போது கொள்ளை நோயின் தாக்கத்தினால் பெரியளவில் பாதிப்புக்கு உள்ளாகவில்லை.
இந்த சந்தர்ப்பத்திலும் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக பெருமளவான செல்வத்தை சேர்க்கக் கூடியவனாக இருந்தான். ஓரான் நகரில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்ற மக்கள் பொதுவெளியில் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர், இதில் பலர் இறக்கவும் செய்கின்றனர்.
இறந்தவர்களது எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு செல்வதனால் எந்தவிதமான சமய அனுஸ்டானங்களும் இல்லாது சேமக்காலைகளும் நிறைந்து விட்ட நிலையில் பொதுவெளியில் அவர்களது உடல்கள் எரிக்கப்படுகின்றன.
இந்த புகையும், துர்நாற்றமும் நகரத்தில் பரவுகின்றது. நகரில் இருந்த அனைவரும் அந்த நிலை எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கும் ஏற்படலாம் என்ற பய உணர்வில் உறைந்து போகின்றனர்.
இவ்வாறு கொள்ளைநோயின் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் மக்கள் தனிமைப்படுத்தலில் பல மாதங்கள் இருந்த பின்னர் தங்களுடைய தனிப்பட்ட துயரங்களினால் ஏற்பட்ட சுயநலன்சார் நோக்கங்களை இழக்கின்றனர்.
இதன்போது தாங்கள் எதிர்கொண்டுள்ள கொள்ளை நோய் அனைவருக்கும் பொதுவான பிரச்சினை, தங்களுடைய ஒன்றினைந்த செயற்பாடுகளின் ஊடாகவே அதனை எதிர்கொள்ள, வெற்றிகொள்ள வேண்டும் என்ற உணர்வினைப் பெறுகின்றனர்.
இவ்வாறு தங்களது சமூக பொறுப்புணர்வினை உணர்ந்துகொண்ட நிலையில் தேவையான செயற்பாடுகளை ஒன்றினைந்து மேற்கொள்கின்றனர். சிறுவன் ஒருவன் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி இறந்தமையினையிட்டு வைத்தியர் மிகுந்த கவலை கொள்கின்றார். அம் மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்துகின்றது.
கிறிஸ்தவ பாதிரியார் தன்னுடைய பிரசங்கத்தை மாற்றிக் கொண்டவராக ‘இவ்வாறு விளக்கம் சொல்ல முடியாததாக உள்ள அப்பாவிகளது மரணங்கள் சமயவாதிகளை அனைத்தையும் நம்புதல் மற்றும் கடவுளை எந்தவகையிலும் நம்பாதிருத்தல் என்ற இரண்டு நிலைகளில் ஒன்றை தெரிவுசெய்வதற்கு கட்டாயப்படுத்துகின்றது’ என்ற கருத்தினை வெளிப்படுத்துகின்றார்.
நோய் வாய்ப்படுகின்ற போது எந்தவிதமான சிகிச்சையினையும் பெற்றுக் கொள்வதற்கு மறுக்கின்ற அவர் இறந்து விடுகின்றார். ஆனால் அவரிடம் கொள்ளை நோய்க்கான அடையாளங்கள் இல்லாத நிலையில் சந்தேகத்திற்குரிய மரணம் என்று வைத்தியரினால் பதியப்படுகின்றது.
நீண்ட, பாரிய இழப்புகளுக்கு பின்னர் கொள்ளைநோய் முடிவுக்கு வருகின்றது. கோர்டார்ட் மனவிரக்தியடைந்த நிலையில் கட்டுக்கடங்காத செயற்பாடுகளை செய்ததற்காக கைதுசெய்யப்படுகின்றான், றேய்மன்ட்டினுடைய மனைவி ஓரான் நகரத்துக்கு வந்து அவனுடன் இணைந்துக் கொள்கின்றாள், ஆனால் வைத்தியர் தன்னுடைய மனைவியை சந்திப்பதற்கு முன்னரே அவள் நோய் அதிகரிப்பின் காரணமாக இறந்து விடுகின்றாள்.
பொதுமக்கள் தங்களுடைய இயல்பான வாழ்க்கை நிலைக்கு விரைவாக திரும்பி விடுகின்றனர். ஆனால் வைத்தியர் கொள்ளை நோய்க்கு எதிரான செயற்பாடுகள் இன்னும் முடிவடையவில்லை ஏனெனில் நோய்த் தாக்கத்திற்கு காரணமான நுண்ணுயிர்கள் பல ஆண்டுகளுக்கு செயலற்ற நிலையில் இருந்து மீளவும் செயற்படக்கூடியவை என்ற உண்மையினை கண்டறிகின்றார். தன்னுடைய மனைவியினை இழந்த நிலையிலும் மக்களுக்காக தான் மேற்கொண்ட சேவையினை எண்ணி மனத்திருப்தியுடன் இருக்கின்றார்.
இவ்வாறு கொள்ளை நோய் என்பது மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு துயரங்களில் ஒன்று. இத்தகைய துயரங்கள் மனித வாழ்க்கையில் நிலையானவை, அதனை அவர்கள் எதிர்கொண்டேயாக வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் மனிதர்கள் இதனை மறந்து செயற்படுவதற்கே முயற்சிக்கின்றனர்,
இத்தகைய பாரிய பாதிப்புக்கள் மனிதர்களது நடத்தையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துபவையாக இல்லை அவர்கள் தங்களை முன்நிலைப்படுத்தியே வாழ்கின்றனர் என்ற கருத்துடன் கம்யு தன்னுடைய நாவலினை நிறைவு செய்கின்றார்.
இந்நாவல் உலக இலக்கியங்களில் பிரசித்தமான ஒன்றாகும். கம்யுவிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைப்பதற்கும் இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இருந்தது. இதில் மனித வாழ்க்கை பல்வேறு இருத்தலிய கருத்தாக்கங்களின் ஊடாக அணுகப்படுகின்றது.
முதலில் “சுதந்திரம்” எனும் விடயம் தொடர்பாக நோக்குகின்றபோது ஓரான் நகரம் நோய்த்தாக்கத்திற்கு உள்ளானபோது அம்மக்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர், தங்களுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்ற உணர்வினை வெளிப்படுத்துகின்றனர்.
ஆனால் கம்யு இங்கு அவர்கள் நோய்த்தாக்கத்திற்கு முன்னர் உண்மையிலேயே சுதந்திரமானவர்களாக இருந்தார்களா? என்ற வினாவினை முன்வைக்கின்றார். உண்மையிலேயே அவர்கள் தங்களுடைய பழக்கவழக்கங்களினால் பிரக்ஞையற்ற அடிமைத்தனத்திலேயே செயற்பட்டிருந்தனர் மாறாக சுதந்திரமாக இருக்கவில்லை.
மேலும் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையினை உண்மையிலேயே வாழ்பவர்களாகவும் இருக்கவில்லை. உண்மையிலேயே தனிமைப்படுத்தலினால் பௌதீக ரீதியாக பிரிக்கப்பட்டபோதே தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் தொடர்பில் அதிக மன உணர்வுகளை, அக்கறையினை வெளிப்படுத்தினர். ஆனால் அதற்கு முன்னர் ஒவ்வொருவரும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான ஊடகங்களாகவே ஏனையவர்களை பாவித்தனர் என்ற உண்மைகளை கம்யு இங்கு வெளிப்படுத்துகின்றார்.
ஒரு நாஸ்தீகராக கம்யு இறப்பு, துன்பம், மனித இருப்பு என்பவை உள்ளார்ந்த ரீதியாக, ஒழுக்க ரீதியாக, பகுத்தறிவு ரீதியான அர்த்தங்களைக் கொண்டவை என்பதனை ஏற்றுக் கொள்பவராக இல்லை. அடிப்படையில் கடவுளையோ, மரணத்தின் பின்னரான வாழ்வினையோ இவர் நம்பவில்லை.
மனிதர்கள் அவர்களினால் பகுத்தறிவு பூர்வமாக விபரிக்க முடியாத, முற்றிலும் அபத்தமான மரண தண்டனை எனும் ஒன்றின் கீழேயே எப்போதும் வாழ்கின்றனர் என்பதே பூரணமான உண்மை என்ற கருத்தினை பதிவு செய்வதுடன் இந்த நிலையிலும் மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தை வழங்குகின்ற இயலுமையினைக் கொண்டவர்களாக உள்ளனர் என்ற கருத்தினை முன் நிலைப்படுத்துகின்றார்.
இவற்றில் மிகவும் அர்த்தமுடைய செயற்பாடு என்பது மரணத்தையும், துன்பத்தையும் அறிந்துகொண்ட நிலையிலும் அவற்றினை துணிச்சலுடன் எதிர்கொள்வதே என்று குறிப்பிடுகின்றார். இதனையே ஓரான் நகரத்தில் வைத்தியர் ரியுக்சும் அவருடன் இருந்தவர்களும் மேற்கொண்டனர்.
இங்கு கடவுள் என்ற அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கிய சக்தியோ அல்லது அனைவரையும் காக்கக்கூடிய திறன்களையும், துணிச்சலையும் கொண்ட தனிநபர் நாயகத்தன்மையோ (Heroism) முன்நிலைப் படுத்தப்படாமல், காரணமாக்கப் படாமல் சாதாரணமான தனிநபர்கள் தங்களிடையே ஒருமித்த நோக்குடன் ஒன்றினைந்து செயற்படுவதன் ஊடாக அவர்கள் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய ஆபத்தை வெற்றிகொள்வதாக காட்டப்படுவதானது மனித இருப்பின், ஒன்றினைவின், ஒற்றுமையின், தங்களது இருப்பினை தாங்களே நிர்ணயித்துக் கொள்வதற்கு அவர்களுக்கு உள்ள சுதந்தித்தை இயலுமையினை வெளிப்படுத்துவதாக இந்த நாவல் உள்ளது.
தற்போது கொரோனா எனும் பெருந்தொற்றின் சர்வதேச ரீதியான தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நாம் ஓரான் நகர மக்கள் அனுபவித்ததை விட அதிகளவான பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளோம். ஓரானில் நோய்த்தாக்கம் ஒரு வருடத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது.
ஆனால் கெரோணா நோயின் தாக்கம் எப்போது இல்லாமல் போகும் என்று எதிர்வுகூற முடியாத நிலையில் உள்ளது. இங்கு உள்ள ஒரேயொரு உண்மையான விடயம் என்னவெனில் இந்த நோயில் இருந்து காப்பதற்கு கடவுளோ, சகல வல்லமைகளும் பொருந்திய வீரர்களோ வரப்போவதில்லை.
எம்மிடையே உள்ள வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்களே இப்போது அந்த செயற்பாட்டினை மேற்கொள்கின்றனர். எவ்வாறாயினும் அவர்களினால் மாத்திரம் இந்த பிரச்சினை முற்றாக இல்லாமலாக்கப்பட முடியாது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது சுயநல இலாபம் தேடும் மனப்பாங்கில் இருந்து விடுபட்டு பொது நலநோக்கோடு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தொற்று பரவாத வகையில் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி செயற்படுகின்றபோதே அது சாத்தியமானதாகும்.
ஓரான் நகரம் விடுதலை பெற்றதுபோன்று எமது தேசமும் சர்வதேசமும் நோய்த்தாக்கத்தில் இருந்து விடுதலை பெறட்டும், மக்கள் விரைவிலேயே தங்களுடைய வழக்கமான செயற்பாடுகளுக்கு திரும்பட்டும். ஆனால் தங்களது தலைக்கு மேலே எப்போதும் உள்ள மரண தண்டனையினை நினைவில் கொண்டு செயற்படட்டும்.
மாரிமுத்து பிரகாஷன்
தத்துவவியல் விரிவுரையாளர்
தத்துவவியல் மற்றும் விழுமியக் கற்கைகள் துறை
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை