fidel castro 374

அவன் ஒற்றுமையையும், ஒருமித்த கருத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிய முடிசூடா மன்னன் என அவனது எதிரிகள் சொல்கிறார்கள்.

அதைப் பொறுத்தவரை அவனது எதிரிகள் சொல்வது சரிதான்

நெப்போலியனுக்கு கிரான்மாவைப்1 போன்ற செய்தியேடு இருந்திருந்தால், வாட்டர்லூவின்2 பேரழிவை எந்த ஃப்ரெஞ்சுக்காரனும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என அவனது எதிரிகள் சொல்கிறார்கள்.

அதைப் பொறுத்தவரை அவனது எதிரிகள் சொல்வது சரிதான்.

அவன் நிறையப் பேசி குறைவாய்க் கேட்டுத் தனது அதிகாரத்தைச் செலுத்தினான். ஏனெனில் அவனுக்கு குரல்களைவிட எதிரொலிகளைக் கேட்டுத்தான் பழக்கம் என அவனுடைய எதிரிகள் சொல்கிறார்கள்.

அதைப் பொறுத்தவரை அவனது எதிரிகள் சொல்வது சரிதான்.

ஆனால் அவனது எதிரிகள் சில விஷயங்களைச் சொல்வதில்லை: அவன் படையெடுப்பாளர்களின் தோட்டாக்களுக்குத் தனது நெஞ்சைத் திறந்து காட்டியது வரலாற்று நூல்களுக்கு போஸ் கொடுப் பதற்காக அல்ல,

அவன் சூறாவளிகளைச் சமதையாக எதிர் கொண்டான், சூறாவளிக்கு எதிர் சூறாவளி.

அவனது உயிரின் மீது நடத்தப்பட்ட 637 தாக்குதல்களிலிருந்து தப்பிப் பிழைத்தான்.

அடிமைக் காலனி ஒன்று நாடாக மாறுவதற்கு அவனது அளவற்ற உத்வேகம் மிக முக்கிய காரணம்,

அந்த புதிய நாடு, தமது மடியில் துணிவிரித்து கத்தியோடும் முள்கரண்டியோடும் அதனை உண்ண உட்கார்ந்த பத்து அமெரிக்க அதிபர்களை வென்று வாழ்ந்தது சாத்தானின் சாபத்தாலோ கடவுளின் அற்புதத்தாலோ அல்ல.

கியூபா மட்டுமே உலகத்தின் மிதியடிக் கோப் பையைப் பெறப் போட்டியிடாத ஓர் அரிய நாடு என அவனது எதிரிகள் சொல்வதேயில்லை.

சுயமரியாதை எனும் குற்றத்திற்காகத் தண்டிக்கப் பட்ட அந்தப் புரட்சி, அது ஆக விரும்பியதாக இருக்க வில்லை, அதனால் தக்கவைக்க முடிந்த அளவின

தாகவே இருந்தது என்பதையும் விருப்பங்களையும் நிதர்சனங்களையும் பிரிக்கும் அந்த மதில் ஏகாதிபத்திய வழியடைப்பால் மேலும் மேலும் அகலமாக உயரமாக வளர்ந்ததென்பதையும் அவர்கள் சொல்லமாட்டார்கள். அதே ஏகாதிபத்தியம் கியூப பாணி ஜனநாயகத்தை மூச்சுத் திணற வைத்தது, கியூப சமுதாயத்தை இராணுவ மயமாக்கியது என்பதையும் ஒவ்வொரு தீர்வுக்கும் ஒரு பிரச்சினையைத் தயாராய் வைத்திருக்கும் அதிகாரி வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் நியாயப் படுத்திக்கொள்வதற்குமான போலி சாட்சியங்களைக் கொடுத்தது என்பதையும் சொல்லமாட்டார்கள்

அந்தத் துயரங்கள் அனைத்தையும் மீறியும், வெளி நாட்டுப் படையெடுப்பு, உள்நாட்டு அடக்குமுறை எல்லாவற்றையும் மீறியும் உளைச்சலுற்ற பிடிவாதம் பிடித்த இந்தத் தீவுதான் இலத்தின் அமெரிக்காவின் ஆகக் குறைவான அநீதி பீடித்த நாடு என்பதையும் அவர்கள் சொல்லமாட்டார்கள்.

இந்த சாதனை அத்தீவின் மக்களின் தியாகங்களின் வெளிப்பாடு மட்டுமல்ல; காஸ்டில்லின் களத்தில் நின்ற அவனது புகழ்பெற்ற தோழனைப்3 போலவே எப்போதும் இழப்பவர்களின் பக்கம் நின்று போரிட்ட அறக்காப்பு வீரனின் திடமான மனோவுறுதி, பழம் மரபுசார்ந்த கௌரவ உணர்வு ஆகியவற்றின் வெளிப்பாடும் ஆகும் என்பதையும் அவர்கள் சொல்லமாட்டார்கள்.

1. கிராண்மா: கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடு. கியூபாவில் இருந்த பாட்டிஸ்டாவின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிவதற்காகப் புரட்சியைத் தொடங்கும் பொருட்டு 1956இல் மெக்ஸிகோவிலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோவும், சே குவேரா உள்ளிட்ட 81 புரட்சியாளர்களும் கியூபக் கடற் கரைக்குப் பயணம் செய்த படகின் பெயர் கிராண்மா. புகழ்பெற்ற அந்தப் பெயரே நாளேட்டுக்கும் சூட்டப் பட்டது,

2. வாட்டர்லூ: பெல்ஜியத்தைச் சேர்ந்த வாட்டர்லூ என்னும் நகரத்துக்கு அருகில் 1815இல் நெப்போலியன் போனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம், ஆங்கிலேய மற்றும் பிரஷ்ய இராணுவத் தளபதிகளால் தலைமை தாங்கப்பட்ட இராணுவப் படைகளால் தோற்கடிக்கப்பட்டது. வெற்றியாளர்களால் கைது செய்யப்பட்டு செயின்ட் ஹெலினா என்னும் தீவில் சிறைவைக்கப்பட்ட நெப்போலியன் அங்கேயே இறந்து போனான்.

3. ஸ்பானிய எழுத்தாளர் ஸெர்வான்டெஸின் ‘டான் க்யோட்’ (Don Quixote) என்னும் நாவலின் கதைத் தலைவன், ஸ்பெயினில் நிலப்பிரபுத்துவம் சிதைந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அந்த நாட்டிலுள்ள காஸ்ட்டில் என்னும் பகுதியில் நிலப்பிரபுத்துவ கால அறக்காப்பு வீரர்களின் (Knights) செயல்பாடுகளை மேற்கொள்கிற வனாகச் சித்திரிக்கப்படுகிறான். இலட்சிய பூர்வமான ‘அறக்காப்பு வீரர்கள்’ கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளில் முதன்மையானவை வீரம், மாண்பு, மரியாதை, நியாய உணர்வு, பலவீனமான மக்களுக்கு உதவ ஆயத்தமாக இருத்தல், பெண்களிடம் மரியாதையாக நடந்துகொள்தல் ஆகியனவாகும்.. இப்பண்புகள் ‘அறக்காப்புப் பண்புகள்’ (chivalry) என அழைக்கப்பட்டன.

(2015இல் காலஞ்சென்ற உருகுவே நாட்டு எழுத்தாளர் எடுவர்டோ காலியானோவின் (Eduardo Galeano) ‘.Mirrors: Stories of Almost Everyone.’ என்னும் ஆங்கில மொழியாக்க நூலிலுள்ள “Fidel” என்னும் கட்டுரையின் தமிழாக்கம். அடிக்குறிப்புகள் எஸ்.வி.ராஜதுரை எழுதிச் சேர்த்தவை.)

Pin It