சிபிஐ(எம்) தலைவர்களுக்கல்ல… ஊழியர்களுக்கே

(சிபிஐ(எம்) கட்சியிலிருந்து விலகிய தோழர் கு.பால்ராஜ் அவர்களின் திறந்த மடல்)

கடந்த 10 வருடங்களாகக் கட்சியின் திருவில்லிப்புத்தூர் நகர்க் குழு உறுப்பினராகவும் தமுஎகசவின் மாவட்டக் குழு உறுப்பினராகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து எனக்கிருந்த எல்லா வாய்ப்புகளையும் கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திய நான் தற்பொழுது வேறு வழியின்றி உள்கட்சிப் போராட்டத்தை நடத்த இயலாது கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். என்னுடைய இந்த விலகல் முடிவைக் கட்சி என்னை நீக்கி விட்டதாகப் பரப்புரை செய்வதை நான் மறுக்கிறேன். என்னைக் கட்சியிலிருந்து நீக்கியதாகத் தோழர்களிடம் தவறான செய்தி கொண்டு செல்லப்படுவதால், சமூக மாற்றத்தை விரும்பி தம் சொந்த நலன்களை மறுத்து, உழைப்பாளி மக்களுக்காய்க் கட்சிக்குள் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களிடம் அரசியல் ரிதியாக உரையாட இக்கடிதம் ஒரு பொதுவெளியை உருவாக்கும் என்னும் நம்பிக்கையில் இதை நான் எழுதுகிறேன்.

paulraj_300மேலும் என்னுடைய சொந்தக் காரணங்களுக்காக அல்லாமல், அரசியல் ரிதியான காரணங்களுக்காகவே கட்சியிலிருந்து வெளியேறுகிறேன் என்றும், தொடர்ந்து அநீதி, சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்க்கவும், உழைப்பாளி மக்களின் அரசியல் அதிகாரத்தை உருவாக்கவும் பாடுபடுவேன் என்றும. எனவே நான் கட்சியிலிருந்து விலகியது என்னுடைய சொந்தக் காரணங்களுக்காக அல்ல என்றும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் காரணங்கள்

      ஈழ விடுதலையை எதிர்ப்பதும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி உரிமையுடைய மாநிலமாகத் தமிழர்கள் பகுதியை இலங்கை அரசு அங்கீகரிப்பதும் என்ற கட்சியின் நிலைப்பாடு அரசியல் அடிப்படையற்றது.

      ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்னும் தீர்வை கட்சி முன்வைப்பதன் மூலம் இன்றைய இலங்கைக்குள் தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்பதைக் கட்சி ஒத்துக் கொள்கிறது. மேலும் கட்சி சொல்கின்ற தீர்வை எடுக்கும் நிலையில் உள்ள இலங்கை அரசு மாநில சுயாட்சி கொடுப்பதற்காவது ஒத்துக் கொள்ளுமா? புலிகள் இயக்கம்தான் பிரச்சனை என்றால் மே17 இனப்படுகொலை மற்றும் புலிகள் இயக்கத்தின் தற்போதைய பின்னடைவுக்குப் பின் கட்சி சொல்கிற அரசியல் தீர்வை உருவாக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த யாருமில்லை. இதுகாறும் நாம் சொல்லி வந்த அரசியல் தீர்வு என்ன ஆயிற்று? ஈழப் படு கொலைக்குப் பின் முள்வேலி முகாமுக்குள் அடைபட்டுக் கிடக்கின்ற ஈழத் தமிழர்களுக்கு அறிக்கைகள் மட்டும் போதுமா?

      மேலும் இலங்கையில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே ஏதோ “சாதிச் சண்டை” நடப்பதைப் போலவும், சிங்கள, தமிழர்களிடையே பிரிவினைவாதக் குழுக்கள் இயங்குவதைப் போலவும் இலங்கை அரசு நடுநிலையாக இருப்பது போலவும் பாசாங்கு செய்வதும், அதையே அணிகளுக்குச் சொல்வதும் சகிக்க முடியாதவை. அங்கு நடப்பது அரச பயங்கரவாதம். ஓர் இனப் படுகொலையை அரசே தலைமையேற்று நடத்தும் போது தனது சொந்த நாட்டுக் குடிமக்களுக்கு எதிராகத் தனது இராணு வத்தைப் பீரங்கிகளைப் பயன்படுத்தும் போது இன ரிதியாக ஒடுக்கப்பட்ட அம்மக்களை ஒடுக்கும் அரசிடம் பிச்சை கேட்கச் சொல்வது எவ்வகையான அரசியல்?

      சிங்களப் பகுதிக்குள் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் இனவாத அரசியலை முன்னெடுக்கும் போது அரசியல் ரிதியான தீர்வுக்கு ஏதாவது வழியுண்டா?

      மேலும் இலங்கை என்ற நாட்டின் இறையாண்மைக்குள் தலையிடுவது சரியல்ல என்ற வாதம் அரசியல் ரிதியானதல்ல. மற்ற நாடுகளின் இறையாண்மைக்குள் தலையிடுவது இல்லை என்ற முடிவை கட்சி வாதமாக வைத்தால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்ற வாதத்தை ஏன் கட்சி முன் வைக்கிறது? இந்திய அரசு தெற்காசிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு கட்சிக்கு இருக்கிறது. ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்க இந்திய அமைதிப் படையை அனுப்புவதும், தற்பொழுது நடந்த இனப் படுகொலைக்கு இந்தியா இராணுவ ரிதியாக உதவி செய்வதும் மற்ற நாடுகளின் இறையாண்மைக்குள் தலையிடுவது ஆகாதா? இந்தியாவின் உதவி, சோனியாவின் தந்திரம், இந்திய உளவுப் படையின் சதி ஆகியவற்றைக் கட்சியால் மறுக்க முடியுமா?

      ஆயுதப் போராட்டம் என்றால் கட்சிக்கு ஏன் இந்த அலர்ஜி? நம்மால் முடியாததை வேறு யாரும் செய்யக் கூடாதா? உலகப் புரட்சிகள் எங்காவது ஆயுதமின்றி நிறைவு பெற்றுள்ளனவா? புரட்சியைக் கைவிடுவதானால் ஆயுதத் கைவிடலாம்.

      மேலும் போரில் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்ற வாதம் தவறானதா? மேலும் ஈழ விடுதலைப் போராட்டம் நேரடியாக ஆயுதப் போராட்டத்தில் துவங்க வில்லை. அமைதி வழியில் நடந்த எல்லாப் போராட்டங்களும் சிங்கள பௌத்தப் போpனவாத அரசால் அங்கீகரிக்கப் படவில்லை. ஒடுக்குபவன் ஒடுக்குவதற்கு வன்முறையைப் பயன்படுத்தும் போது ஒடுக்கப்படுபவன் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள வேண்டுமா? மனிதனாலோ, எந்த உயிரினத்தாலோ வன்முறையை எதிhப்பின்றித் தாங்க முடியுமா? வன்முறையை எதிர்ப்பது வன்முறையாகுமா? கோழி தன் குஞ்சைக் காப்பாற்றப் பருந்தோடு நடத்தும் போராட்டம் பருந்தின் வன்முறையோடு ஒப்பிடக் கூடியதா?

      சிங்கள இலங்கை அரசின் வன்முறையைக் காட்டிலும் விடுதலைப்புலிகளின் போராட்டமே வன்முறை மிகுந்தது என கட்சி அணிகளுக்குப் பயிற்சி கொடுத்திருப்பது எந்த வகையில் மார்க்சிய அணுகுமுறை ஆகும்?

      வர்க்கப் போராட்டத்தைத் தவிர கட்சி வேறு போராட்டங்களை நடத்தாமல் இருக்கிறதா? இன்றைய கட்சித் திட்டம் மக்கள் ஜனநாயக புரட்சியைத் தான் முன் மொழிகிறது. ஜனநாயகம், சோஷலிசம் என்பது தானே போராட்டப் படிநிலை? ஜனநாயகம் மறுத்த சிங்கள பௌத்தப் போpனவாத அரசிடம் முதலில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடுவது தவறாகுமா? யூதர்களை ஜெர்மனியில் ஹிட்லர் ஒழித்த போது அதை எதிர்க்க முதலாளித்துவ நாடுகளுடன் சோவியத் கூட்டு வைத்த வரலாற்றை மறுக்க முடியுமா?

இக்கவிதையின் பொருள் புரிந்த யாருக்கும் அதன் அறம் விளங்கும்.

கரிகாலனின் கவிதை

பூக்களைத் தூவுவதைப் போல்

பள்ளி செல்லும் உங்கள் குழந்தைகள் மீது

சொந்த ராணுவம் குண்டுகளை வீசினால்

 

உங்கள் சுவாசக் காற்றை உறிஞ்சும்

ரசாயனக் குண்டுகளை

அரசாங்கம் வீதியெங்கும் தௌpத்தால்

 

ராணுவச் சிப்பாய்களால்

குழுபலாத்காரம் செய்யப்பட்டு

பூப்புச் சடங்கு முடியு முன்னரே

உங்கள் மகள் பைத்தியமானால்

 

உங்கள் சகோதரியின் பிடுங்கிய விழிகள்

பூட்சு கால்களால் நசுக்கப்பட்டால்

ஒரே ஆண்மகனின் பிறப்புறுப்பை நசுக்கி

உங்கள் வம்சம் அழிக்கப்பட்டால்

 

உங்கள் நிலத்தை, இல்லத்தை

உறவை, மொழியை அபகரித்து

உங்கள் தேசம் உங்களை அகதியாக்கினால்

 

நண்பர்களே நீங்களென்ன செய்வீர்கள்

உங்கள் ராணுவம்

உங்கள் அரசாங்கம்

உங்கள் தேசம்

அதன் இறையாண்மை

எல்லாம் வெடித்துச் சிதறும்படி

ஒரு மனித வெடிகுண்டாக மாறுவீர்கள்தானே

 

அப்போது அரசாங்கம்

உங்களை பயங்கரவாதிஎனச் சுட்டக்கூடும்

கவிஞன் யானோ மாவீரனென்பேன்.

ஈழத்தை ஆதரித்தால் தமிழகத்தில் இனவாதம் தலைதூக்கும் என்ற வாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒடுக்கப்படும் இனத்திற்காகக் குரல் கொடுப்பது இன விடுதலையை முன்வைத்தே என்பதை மறைத்து, அது பிற இனங்களை ஒடுக்கத்தான்என்பதும், மனிதனின் அகமனத் திலிருந்து மொழியை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அடையாளங்களை அழிப்பதைத் தடுக்க எடுக்கும் முயற்சிகளை மேற்கட்டுமானம் என்ற ஒற்றைச் சொல்லிற்குள் புதைத்து விடுவதும் மார்க்சியத்தை வளரும் அறிவியலாக மாற்றவோ, மேலும் வளர்த்தெடுக்கவோ எவ்விதத்திலும் உதவாது. (19 ஆம் நூற்றாண்டின் மையத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாய் விளைந்த முதலாளித்துவத்தின் அசமத்துவ வளர்ச்சியினால் பெரும்பான்மை உழைக்கும் வர்க்கமான தொழிலாளர்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த போது, முதலாளித்துவ வளர்ச்சியின் அடிப்படை விதியான சுரண்டலை, உபரி மதிப்பைத் தன் மூலதனம் என்ற நு}லில் வெளிப்படுத்தி, முதலாளித் துவத்தின் உயிர்த்தலத்தில் ஓங்கி உதைத்தார் மார்க்ஸ். உழைக்கும் வர்க்கத்திற்கு அமைப்பு வேண்டும் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியையும், கட்சிக்கு ஒரு திட்டத்தையும் முன்வைத்து பாட்டாளி வர்க்க அரசியலை வளர்த்தெடுத்தார். ஆனால், மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் வரையறை செய்தது போலல்லாமல் முதலாளித்துவ முரண் முற்றாத கொடுங்கோல் ஜார்மன்னனின் ஆட்சியில் கடும் ஒடுக்குமுறையைச் சந்தித்த தொழிலாளிகள் விவசாயிகள் சார்பாக ருஷ்யப் புரட்சியை லெனின் நடத்தி முடித்தார்.)

கடந்த 30 வருடங்களாக மாறாத முடிவை ஈழபிரச்சனையில் கட்சி வைத்திருப்பதாகச் சொல்வது இயங்கியலாகுமா? இனம், மொழி, தேசிய சுயநிர்ணயம், ஜனநாயகம், உள்கட்சிப் போராட்டம், தேசம், தேசியம், சோஷலிசம், கம்யூனிசம், ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபாப் புரட்சி என ஏதாவது கட்சி அணிகளுக்கு வகுப்பு உண்டா? இந்த வகையான வகுப்புகளை எடுத்தால் கட்சி ஊழியர்கள் புரட்சிகர அரசியலின் பகுதியாகத் தங்களை மாற்றிக் கொள்ள இயலும். ஊழியர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக அல்லது பொறுப்புள்ளவர்களாகத் தலைவர்கள் இருப்பார்கள். அப்பொழுது ஊழியன் கேள்வி கேட்பான் எனத் தலைவர்கள் தங்கள் அறிவை விரிவு செய்யவும் முயற்சிப்பார்கள். அன்றாடப் பணி செய்யும் அரசியல் சடங்குகளை நிறைவேற்றும் இயந்திரகதியான ஒரே வகைமாதிரியான வேலைமுறைகளுக்கு ஊழியர்கள் பழக்கப்படுவதால் உள்கட்சியில் ஜனநாயகம் என்பதும், உள்கட்சியில் விவாதம் என்பதும் பெயரளவிற்குக் கூட இல்லை. இந்நிலையில்தான் ஈழம் குறித்த வரலாறு, கட்சியின் நிலைப்பாடு இரண்டையும் குறித்து 'சிறப்பு அறிவு மண்டலங்கள்' என கருதப்படும் மேல் கமிட்டிகளின் முடிவைக் கட்சி திணிக்கும்போது என் போன்ற ஊழியர்களுக்கும, சமூக மாற்றம் மற்றும் புரட்சியின் மீது நம்பிக்கையுடையோருக்கும் கட்சியின் மீது நம்பிக்கையில்லாமல் போகிறது.

இதற்காகக் கட்சியை விட்டு வெளியேறலாமா? கம்யூனிஸ்ட் கட்சிகளின் எல்லாத் தளங்களிலும் இயங்கும் குழுக்களின் வேலையை ஆய்வு செய்வதும் அதன் மீது முடிவெடுப்பதும் இல்லாத போது ஆய்வின்றி, விளக்கமின்றி, விவாதமின்றி எடுக்கப்படும் முடிவுகள் இதுபோன்றே முரட்டுத்தனமாக, தான்தோன்றித்தனமாக இருக்கும். எனவே தமிழின மக்கள் இவ்வளவு அடக்குமுறைகளையும் சந்தித்த பின்பும், அரச பயங்கரவாதத்தைச் சந்தித்த பின்பும் அமைதி வழியில் போராட வேண்டும் என்று சொல்பவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று சொல்ல முடியுமா? காரண காரியத் தொடர்புகள் அற்ற சிந்தனை முறை பகுத்தறிவுக்கு ஆகாது.

கட்சிக்கு வெளியிலிருப்பவர்கள் கட்சியைக் குறித்து கேள்வி எழுப்பினால் அது உள்கட்சி பிரச்சனை என சொல்வதும், அவர்கள் கேட்பதில் உள்ள உண்மைகளை ஆய்வு செய்யாமல் கட்சிக்கு எதிராக அவதூறு செய்கிறார்கள் எனச் சொல்வதும் கட்சிக்குப் பயன்படாது. கட்சி தன்னுடைய நிதிக்காக மக்களைத்தான் சார்ந்திருக்கிறது. கட்சி அவர்களிடம் கொள்கைகளை பரப்புரை செய்யும் போது பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் அதற்கு உண்டு. கட்சியை விமர்சிக்க அனுமதிக்காத போது, மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள மறுக்கும் போது அது ஒரு வகையான 'மதத்தன்மை' உடையதாக மாறிப் போகிறது. (கட்சி கடைபிடிப்பது ஜனநாயக மத்தியத்துவம் அல்ல, மத்தியத்துவ ஜனநாயகம்).

ஜனநாயக மத்தியத்துவம் என்பது ஒவ்வொரு குழுவிலும் குழு உறுப்பினர்கள் விவாதித்து, பெரும்பான்மை முடிவுக்குச் சிறுபான்மை கட்டுப்படுவதாகும். மேலும் சிறுபான்மைக் கருத்துடையோர் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை வைத்துக் கொள்ளவும் அதைப் பரப்புரை செய்து பெரும்பான்மைக் கருத்தாக மாற்றவும் உரிமை உண்டு. ஆனால் கட்சிக்குள் நடப்பது மேல் கமிட்டி முடிவுகளை அமல்படுத்துவது மட்டுமே. தற்பொழுது கட்சிக்குள் இருப்பது உள்கட்சி ஜனநாயகம் ஆகாது. மத்தியப்படுத்தப்பட்ட ஜனநாயகமே அன்றி ஜனநாயக மத்தியத்துவம் ஆகாது.

கட்சித் திட்டத்திற்கு மாறாகச் செயல்படுபவர் அல்லது அதை ஏற்றுக் கொள்ளாதவர் கட்சியில் உறுப்பினராக நீடிக்க முடியாது. ஆனால் கட்சித் திட்டமே தெரியாத ஒருவர் மாவட்டக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினராகக் கூட இருக்க முடியும். கட்சிக்குள் துணைக் குழுவாகச் சேர்க்கப்பட்ட ஒருவர், கட்சி உறுப்பினர் பொறுப்பை அடையும் போது கட்சித் திட்டம் குறித்த கல்வி நிறைவு செய்யப்படாமல் அன்றாட அரசியல் நிகழ்வுகளின் மீது தன்னுடைய அரசியல் கருத்தைத் திட்டத்திற்கு உட்பட்டு எவ்வாறு பரப்புரை செய்ய முடியும்?

கட்சியின் திட்டப்படி மக்கள் ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தில் நம்முடைய எதிரி அணியில் பெருமுதலாளிகள் உள்ளனர். டாடா இந்தியாவின் பெருமுதலாளியாக மாட்டாரா?. இன்றைய கட்சித் திட்டம் தான் அவரை எதிரி என்கிறது. இந்தியா, மைய அரசு, பாராளுமன்ற ஜனநாயகம் இவற்றை ஒத்துக் கொண்டே கட்சி இந்த திட்டத்தை முன்வைக்கிறது. கட்சி ஆளும் மாநிலத்திலேயே எதிரி வர்க்கமான பெருமுதலாளி டாடாவுக்கு நமது வர்க்க அணியின் முன்னணிப் படையான விவசாயிகளிடம் நிலம் பறித்து எதிரிகளிடம் கையளிப்பது வர்க்க துரோகம்தான். கூடுதலாக (டாடா விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்த முயற்சிக்கவில்லை) அரசே நிலம் கையகப் படுத்தி சேவைச் செய்வது கட்சித திட்டப்படி சரியாகுமா?

சிங்கூர், நந்திக்கிராம், வால்கார் சம்பவங்களால் கட்சி உண்மையில் முதலாளித்துவக் கட்சிகளின் குணாம்ச நிலைக்குத் தாழ்ந்து விட்டது என்பதும், தோழர் டபிள்யூ. ஆர்., சோம்நாத் (எனக்குப் பெயர் தெரியாத உதாரணங்கள்) போன்ற தனிநபர் பலவீனங்களும், கேரளாவில் தோழர் அச்சுதானந்தன், பிரனாயி விஜயன் ஆகியோரிடையிலான உட்பூசல்களும் முதலாளித்துவச் சீரழிவு கலாச்சாரம் கட்சித் தோழர்களிடம் பரவி வருவதைத் தடுக்க முடியவில்லை என்பதைத தானே காட்டுகிறது?

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது போல ஒரு பிரமை உருவாக்கப்பட்டிருப்பதும், அதை வைத்தே 'வண்டி ஓட்டுவதும்' எவ்வகையில் சரியாகும்? தற்பொழுது கடந்த 10 ஆண்டுகளாகச் சிறை சென்றோர் எத்தனைப் பேர்? கட்சியின் இன்றைய தலைவர்கள் படிப்பாளிகளே. ஆனால் அவர்கள் போராட்டத் தலைமையல்ல. தலைவர்களுக்கே சிறை அனுபவம் இல்லை என்பது கட்சி ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்கிறது என்பதைத்தானே காட்டுகிறது?

மூன்று மாநில வெற்றிகள் நாட்டில் முன்னுதாரணமாக இருக்கவில்லை. கலைஞர் சொல்வதைப் போல் ஒரு ரூபாய் அரிசி, இலவச மின்சாரம், இலவச TV., சத்துணவு, ஏழை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்... இப்படி சொல்லக் கூடாது. உற்பத்தி, விநியோகம் இரண்டையும் ஆட்சிக் காலத்தில் அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதா? ஏகாதிபத்திய முதலாளித்துவச் சுரண்டலை எவ்வளவு தூரம் தவிர்த்துள்ளது? நிலஉடைமை உடைப்பு என்பதையே அளவு கோலாகக் கொள்ள வேண்டும்.

நேபாள மாவோயிஸ்ட்டுகளின் போராட்டம், புலிகளின் ஆயுதப் போராட்டம், பழங்குடி மக்களைத் திரட்டி இந்திய மாவோயிஸ்ட்டுகளின் போராட்டம் இவைகளை ஏன் கட்சி மறுக்கிறது? ஆயுதப் போராட்டம் என்பது கட்சித் திட்டத்தில் எப்போதும் இல்லை என்பதைக் கட்சி பகிரங்கமாக அறிவிக்குமா? முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிய அதன் ஒடுக்கும் கருவிகளின் ஆயுதமான இராணுவம், போலீஸ், துணை இராணுவப்படைகள் இவற்றை எப்படி எதிர் கொள்வது? கூலிப்படைகளான அவைகளின் குணாம்சம் காகிதப் புலி என்பதை உலகப் புரட்சிகர வரலாறு உணர்த்தி இருக்கிறது. இந்தப் பிரச்சனையில் இந்திய ஆளும் வர்க்கக் கருத்துக்களும், கம்யூனிஸ்ட்டுகளின் கருத்துக்களும் ஒன்றே போல் அமைந்திருப்பது வியப்பிலும் வியப்பு.

கட்சிக் கல்வி, சுய கல்வி இரண்டுமில்லை என்றால் ஒரு புரட்சிகர ஊழியனை உருவாக்குவது எப்படி? கட்சியின் பல தோழர்கள் பொருள் முதல்வாதம் என்பதைப் பொருளாதார முதல்வாதம் என்பதாகப் புரிந்து வைத்துள்ளனர் என்னும் செய்தி கட்சித் தலைமைக்குத் தெரியு[மா?

அளவு மாற்றம், குண மாற்றம் என்பதைச் சொல்லி மக்கள் தயாராக இல்லை எனச் சொல்வதை, குண மாற்றம் இல்லை, இதனால் அளவு மாற்றமும் இல்லை எனச் சொல்லிப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். புரட்சிகரமான அமைப்பைக் கடடியமைப்பதற்குரிய முக்கிய அடிப்படை என்ன? தோழர் ஸ்டாலின் கூறுகிறார், புரட்சிகரமான அமைப்பைக் கட்டியமைப்பதற்கான முக்கிய அடிப்படை புரட்சிகரமான ஊழியரே. புரட்சிகர ஊழியர் யார்? எவரொருவர் தனது சொந்த முன்முயற்சியில் சூழ்நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்பக் கொள்ளைகளை நடைமுறைப்படுத்தக் கூடியவராக இருக்கின்றாரோ அவரே புரட்சிகரமான ஊழியராவார். அவர் யாருடைய உதவிக்காகவும் காத்திருப்பதில்லை. இந்த ஸ்டாலின் வரையறை பொருத்தமானதாய்ப் படுகிறது. கட்சியில் அப்படிச் செயல்படுபவர் தன்னிச்சையாகச் செயல்படுபவர், கூட்டு முடிவுக்கு உட்படாதவர் என்றும் முத்திரையிடப்படுகிறது. ஊழியர்களின் திறைமையைக் கண்டுணர்ந்து கட்சி அத்திறமையை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக மட்டுப்படுத்தி சமரசவாதியாய் மாற்றி ஏனைய பிற அமைப்பில் செயல்படும் ஊழியர் நிலைக்கே மாற்றி விடுகிறது. பதவி, மேல் கீழ் பிரச்சனைகளும் மலிந்த கீழ்த்தரமான முதலாளித்துவக் குணக்கேடுகளும் நிறைந்த அமைப்பாகக் கட்சி மாறி இருக்கிறது.

கட்சி மாநாட்டு அறிக்கைகள, தீர்மானங்கள் மீது மீளாய்வு மறுபரிசீலனை, சுயவிமர்சனம் எதற்காவது வாய்ப்புண்டா? கட்சியில் பத்து வருடத்திற்கு முன்பு கமிட்டியில் எதை விவாதித்தோமோ அதைத்தான் இன்றும் விவாதிக்கிறோம். அரசியல் பயிற்சியின்மை, சூழலை உள்வாங்குவதில் திறனற்று இருப்பது போன்ற எதையும் களைவதற்கோ வளர்த்தெடுப்பதற்கோ முயற்சியேதும் இல்லை. விமர்சிப்பவன் கட்சி விரோதி, விவாதிப்பவன் தலைக்கனம் பிடித்தவன், திருத்த முடியாது, அதி தீவிரவாதி போன்ற பல முத்திரைகள்...

வெகுஜன, வர்க்க ஸ்தாபனப் பதிவுகளும் நடைமுறைகளும் அரசியலற்றும் பரிசீலனையின்றியும் நடக்கின்றன. கடந்த பத்து வருடங்களில் நடந்த உறுப்பினர் பதிவுகளுக்கும் கட்சிக்கு வந்தவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அதே வேலையைச் செய்வோர் மத்திய கமிட்டியில் பேரெடுக்க வேண்டும். சேர்த்து விட்டுப் பயிற்சி அளிக்க எண்ணிக்கையில் சிக்கனம் தேவை. ஆனால் உறுப்பினர் பதிவு குறித்து நம் ஊழியர்களிடம் இருக்கும் நம்பிக்கை மூடநம்பிக்கையே. ஒரு வருடம் ஐந்து வருடம் பத்து வருடம் இருபது வருடங்களாகப் பயனற்ற வேலைமுறை. படிப்பதற்கு நேரமில்லாமல் ஒரேமாதிரியான வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டு சலிப்பும், விரக்தியும் அடைந்து களைத்துப்போன தோழர்கள் நம்மவர்கள்.

உலகமயத்தைக் கொள்கை ரிதியாக எதிர்த்துக் கொண்டே அதை நடைமுறையில் செயல்படுத்த புறவழிச்சாலை அமைத்துக் கொடுத்துள்ளது நமது கட்சி. உண்மையில் அயல் நேரடி முதலீடு (FDI) சம்பந்தமாக மாநாட்டில் விவாதிக்காமல் தனியாக மத்தியக் குழு விவாதித்து அங்கீகாரம் அளித்ததோடு கட்சி அணிகளுக்கு உண்மையை விளக்காமல் அந்நிய முதலீட்டுக்கான சமரசத் திட்டத்தை நிறைவேற்றி மத்தியக் குழு ஒரு ஏகாதிபத்திய சேவை செய்து முடித்துள்ளது. சீனாவைப்பார் என்கிறீர்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் அரசியல் அதிகாரம் இருப்பதை மறந்து விட்டு நாம் காட்டும் வான வேடிக்கை போலியானது.

இந்திய ஆளும் வர்க்கச் சதியில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் வரிச் சலுகைகளும் என்பதையே நாம் பின்பற்றும் போது, இந்திய ஆளும் வர்க்கக் கருத்தியலோடு சற்றே மாறுபட்டுக் காட்டிக் கொள்ளும் கருத்துகள் மிகுந்த குழப்பம் வாய்ந்தவை.

கடைசியாக

இந்த விமர்சனங்களைக் கட்சியின் மீது வைத்திருப்பவர் கட்சியில் 10 ஆண்டு காலக் களப்பணி ஆற்றிக் கொண்டே சுய விமர்சனம், சுய கல்வி என்பதைத் தொடர்ந்து செய்தவர் என்பதை மறந்து விடாதீர்கள். கட்சியின் மீதான அவதூறு என வகைப்படுத்தி இதையும் புறக்கணிப்பதால் கட்சிக்கோ, மக்களுக்கோ எவ்விதப் பயனும் இருக்காது. என் போன்ற பலருக்குக் கட்சித் தலைமையோடு இருக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது கட்சிக்கு எவ்வகையிலும் பயனளிக்காது. இளைய தலைமுறை தொடர்ந்து தயங்காது, அஞ்சாது, எதிர்பார்ப்பில்லாது போராடும் எனச் சொல்லி நிறைவு செய்கிறேன்.

என்றும் தோழமையுடன,

கு. பால்ராஜ்
(சமூகநீதித் தமிழ்த் தேசம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை)
(சமூகநீதித் தமிழ்த் தேசம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை)

Comments

20 comments

20
Edwin prabhakaran
Super article
ஏகாந்தன்
எனது எண்ணக்குமுறலை அப்படியே பிரதிபலிக்கிறது தோழர் கு.பால்ராஜ் அவர்களின் கட்டுரை. நானும் இந்த ***** கட்சியில் தான் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் உறுப்பினராக இருந்தேன்.அதை எண்ணி இப்போது மிகவும் வேதனைப்படுகிறேன்.
R Kanthasamy
தோழரே... வலது இடது கட்சிகளுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் அவர்களை பிரதிபலிக்கும் பூர்ஸ்வா கட்சிக்கும் பெரும் வேறுபாடுகள் குறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.. உண்மையில் அவர்கள் ஆளும் வர்க்கத்தின் நம்பகமான கட்சிகள்தான். அதாவது ஒரு நம்பகமான அவ்வவ்போது சில பிணக்கு கொள்ளும் ஒரு மனைவி ..... நம்பகமான மனைவி... அவ்வளவுதான்... அதே சமயம் அவர்களை குறை சொல்லியோ, கடிந்து கொள்வதோ கேலிக்குறியதுதான்.. காரணம்... நம் மக்கள் பெரும்பான்மையானவர்கள் பிற்போக்குவாதிகள்தான்... அவர்கள் எத்தனை பெரியார் வந்தாலும் அவ்வளவு எளிதில் தன் பிற்போக்குத்தனத்தை விடவில்லை என்பதே இத்தனை ஆண்டுகளாகத் தெளிவாகிறது... அதற்கு பல புறச் சூழல்கள் காரணம் என்பதை உணர்க... இவர்களுக்கு விஞஞான உணர்வுகள் ஏற்பட்டு செய்ல்பட பல காலம் பிடிக்கலாம்.. அதுவரை வலது இடதுகளை அசைக்க முடியாது...
suriyan
முதலாளித்துவத்தை ஒழித்து கட்டி விட்டு தான் மறு வேலை என்று குடும்பத்தையும் மறந்து, கட்சிக்காக இன்னும் கொள்கையை உயர்த்தி பிடித்து கொண்டிருக்கும் எத்தனையோ தோழர்கள் தலைமை பதவி கூட கிடைக்காமல் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த முதலாளித்துவ இடது சாரி தலைவர்களிடம் இருந்து காப்பாற்றவாவது இப்படி பட்ட தலைவர்கள் பல்லை கடித்து கொண்டு இந்த பாழாய் போன தலைவர்களிடம் போராடுவதே சிறந்த வழி ஆகும் என்பது எனது கருத்து... இந்த கட்சியில் சீக்கிரம் இணைந்து இந்த மாற்றத்திற்காக பாடுபடுவேன் என்று இங்கு கூறிக் கொள்கிறேன்...
Amaran
தன்னுள் குமுறிக்கொண்டு ஆனால் மாற்று மார்க்கமொன்று இல்லாமையால் இன்னும் கட்சியில் நீடிப்போர் இன்னும் எத்தனையோ பேர் இருப்பர். பால்ராஜ் போன்றோரின் மன ஓட்டத்தை தோழர் ஆதவன் தீட்சண்யா மிக நேர்த்தியாக ஒரு கவிதையில் படம் பிடித்துள்ளார்.

பால்ராஜ் ஒரு செயல் வீரன் - ஆதவன் தீட்சண்யா ஒரு கவிஞன். விரைந்து செயலில் இறங்குவீர் கவிஞரே.

கவிதை இங்கே:

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5535:2010-04-12-05-38-11&catid=2:Poems&Itemid=265
nagasundaram
இலங்கைப் பிரச்சினையை மட்டும் காரணம் காட்டி மார்க்சிஸ்ட் கட்சியைத் தான் உறுப்பினராகத் தொடர விரும்பாத நிலையைத் தெரிவித்துள்ளார். ஒரு வாதத்திற்காகவே மார்க்சிஸ்ட் கட்சி நிலைப்பாடு ஏற்புடையது அன்று என்றே வைத்துக் கொள்வோம். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சரியான நிலைப்பாடு உடையவர்களால் மட்டும் என்ன சாதிக்க முடிந்திருக்கிறது?சாதாரணத் தமிழரகள் ஆயிரம் ஆயிரமாய் ,இலட்சக் கணக்கில் கொல்லப் படுவதைத் தடுக்க முடியாமல் வெற்றுப் புலம்பல் புலம்பிக் கொண்டிருக்கிறோம்.அவ்வளவுதானே!புலிகள் மற்ற தமிழ் இயக்கத்தினரைக் கொன்று குவித்து இன்று கொல்லப் படும் புலிகளுக்காகவும் சாதாரண மக்களுக்காகவும் குரல் கொடுக்க முடியாத நிலையையும் நம்மால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.இன்றுவரை இலங்கை அரசுகள் தமிழினப் படுகொலை களையும் நம்மால் தடுக்க முடியவில்லை. மார்க்சிச்டுகளால்தான் இந்திய அரசும் தமிழக அரசும் சரியான நிலைப்பாடு எடுக்காமல் போய் விட்டதாக நாம் எண்ணி கொள்ள வேண்டியதில்லை.தமிழர்கள் சுய நிர்ணய உரிமையோடு கூடிய வகையில் வாழ ஐ, நா. தலையிட்டுப் பேசித் தீர்வு காணவேண்டும் என்பதும் ஒன்றும் தமிழர் நலனுக்கு எதிரானதல்லவே!அதுவும் அங்கே நடக்க முடியவில்லையே!எந்த ஒரு தலைவருடனும் எந்த ஒரு தத்துவத்தையும் எந்தவோர் இயக்கக் கொள்கை களையும் ஒருவர் அப்படியே நூற்றுக்கு நூறு முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும் என்று சொல்ல முடியாது. நாம் சிந்தனையுடன் மிகப் பெரும்பாலும் உடன் படும் அம்சங்களை மட்டும் பார்த்துதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் we agree ti dis agree என்ற வகையில் ஏற்க முடியாதவற்றை விட்டு விட்டு ஏற்க முடிந்த எண்ணங்களோடு ஒன்று பட்டுச் செயல் படுவதே பயன் உள்ளதாக இருக்கும்
அ. வெ. சாமிகண்ணு
அன்புத் தோழரே!
தாங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தபோது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் என்ன நிலைபாட்டை எடுத்திருந்ததோ அதையேதான் இன்றும் வலியுறுத்தி வருகிறது; இந்நிலையில் தாங்கள் ஏன் அதில் சேர்ந்தீர்கள் என்பது விளங்கவில்லை; ஒரு வேளை அன்று இனப் பிரச்சனை பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் முழுமையான (மார்க்சிய-லெனியக் கோட்பாட்டை)த் தாங்கள் உள்வாங்காத சூழலில் உள்ளே வந்து சுய கல்வி வழி கற்றுத் தேர்ந்து இன்று இந்த விலகல் முடிவுக்கு வந்தேன் எனச் சொல்கிறீர்களோ என்னவோ? அவ்வாறாயின் நீங்கள் ஆரம்பத்திலேயே தவறிழைத்துவிட்டீர்கள்! தாங்கள் இருக்கிற(இருந்த?) த.மு.எ.க.ச.(அன்றைய எ.ச)வின் முன்னணித் தோழர்களான தணிகைச்செல்வனும், மணீயரசனும் தாங்கள் முன்வைக்கும் இதே குற்றச்சாட்டை வைத்துத்தான் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறினார்கள் என்பதை அறிந்திருந்தும் இக்கட்சிக்குள் வந்தீரா என்பதும் விளங்கவில்லை! மாறிவிட்ட உலகச் சூழலில் ( அதாவது வர்க்க சக்திகளின் உலகளாவிய பலாபலத்தில்) இனி இந்தியா போன்ற புதிதாக விடுதலையடைந்த நாடுகளில் இனப் பிரச்சனைகளைத் தீர்க்கப் பிரிவினை ஒன்றே வழி என்பதைக் கைவிட்டு சுயாட்சிக்காகப் போராடுவதே சரியான திசைவழி என்ற நிலைபாட்டை 1972இல் மதுரையில் நடந்த 9ஆம் கட்சிக் காங்கிரசில் முடிவெடுக்கப்பட்டது என்பது சுயகல்வியில் ஆர்வமிக்க தங்களுக்குத் தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லையே!
2. அடுத்தது அயல் நேரடி மற்றும் உள்நாட்டு முதலாளிகளின் முதலீடுகளில் கட்சியின் (குழப்பமான அல்லது மூடுதிரை போடப்பட்ட) நிலைபாடு பற்றிய தங்களின் குற்றச்சாட்டு குறித்து: அத்தியாவசியமான, நம்மிடம் (உள்நாட்டில்) இல்லாத தொழில்நுட்பத்தைக் கொண்டுவருகிற, வேலைவாய்ப்பைப் பெருக்குகிற அதே சமயம் அரசால் செய்யவியலாத முதலீடுகளைத் தொழிலாளர் நலன்களுக்கு ஊறு நேரா வண்ணம் அனுமதிப்பது என்ற கட்சியின் தெளிவான, வெளிப்படையான நிலைபாடு என்போன்ற எண்ணற்ற தோழர்களுக்குத் தெரிந்திருக்கையில் தங்களுக்குத் தெரியாமலிருக்குமா? இன்றையப் பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கச் சூழலில் இந்த நிலைபாட்டை எவ்வாறு தவறெனச் சொல்ல முடியும்?
தாங்களே கூறுவதுபோல் சர்வ வல்லமைபடைத்த சீனமே இப்பாதையில்தான் பயணிக்கிறது என்கிறபோது பெரு முதலாளித்துவ-- நிலப்பிரபுத்துவ மைய அரசின் கிடுக்கிப் பிடியின்கீழ் இயங்குகிற ஒரு மாநில அரசு வேறென்ன செய்யவியலும்?
3. கட்சித் தலைமையின் கீழான இடது மற்றும் இடது ஜனநாயக முன்னணி அரசுகளைக் கருணாநிதி அரசைப் போன்றவை என்கிறீர்களே இது முற்றிலும் அநியாயமான மதிப்பீடல்லவா? இந்தியாவில் வேறெங்கும் நடந்திராத நிலக் குவியல் தகர்ப்பின் மூலம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள்,பெண்கள் ஆகியோரைத் தலைநிமிரச் செய்த-- முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு முக்கிமான கட்டத்தைச் செவ்வனே செய்து முடித்து அதன்வழி சாதி மதச் சழக்குகளுக்கு சாவு மணி அடித்த-- கட்சியின் அரசுகளைக் கேவலம் தனது குடும்பச் சொத்தாகவும், தனது தொண்டரடிப்பொடி ஆழ்வார்களின் வேட்டைக் காடாகவும் அரசுக் கருவூலத்தை ஆக்கிவிட்ட--- இன உணர்வு, மொழிப் பற்று, சுயமரியாதை,பகுத்தறிவு என எதனையும் விட்டுவைக்காமல் அத்தனையையும் ஒட்டுமொத்தமாகத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு சனாதனிகளுடன் சகவாசம் செய்கிற ஒரு கபடவேடதாரியின் அரசோடு ஒப்பிட்டு அதைவிடச் சிறந்ததா எனக் கேள்வி எழுப்புகிறீகளே இது சரியா?
4. இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாற்றத் துடிக்கும் இந்தியப் பெரு முதலாளித்துவ--நிலப்பிரபுத்துவ காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைமயிலான அரசியல் சக்திகளுக்கு எதிராக விடாப்பிடியாகப் போராடிவரும் மார்க்சிஸ்ட் கட்சி எங்கே? அப்படியொரு பிரச்சனை இருப்பதாகவே காட்டிக்கொள்ளாமல் ஏகாதிபத்திய மற்றும் இந்தியப் பெருமுதலாளிகளுக்குச் சேவை செய்யும் விதமாக அக்கட்சி ஊழியர்களைத் தங்களின் வர்க்க எதிரிகளாகப் பாவித்துத் தீர்த்துக்கட்டிவரும் மாவோயிஸ்டுகள் எங்கே?அந்த மாவோயிஸ்டுகளைப் புரட்சி நாயகர்கள் என்கிறீர்களா? இது நியாயந்தானா?
5.புரட்சி என்றாலேயே 'ஆயுதப் புரட்சி'தான் என்று சாதாரண மக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது; அதே அர்த்தத்தில் கற்றறிவாளரான தாங்களும் பேசுவது சரியா? எந்த மார்க்சிய நூலில் அவ்வாறு புரட்சிக்கு இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது? ஒரு நாட்டின் மக்கள் இனி இந்த அமைப்பைத் தூக்கியெறிவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டத்தை எய்துகிறபோது அந்தந்த நாட்டின் பொருளாதார, சமூக, கலாசார, அரசியல் சூழலுக்கும், எதிரி வர்க்கத்தின் நிலைபாட்டிற்கும், உலக நிலைக்கும் ஒப்பவே சமூகப் புரட்சி நிகழ்த்தப்பட வேண்டும்; அப்போதுதான் அது வெல்லும்;அண்மையில் அதை நேபாள நடப்புகளும் மெய்ப்பித்துள்ளன; (மன்னரும், இந்து மதமும் கோலோச்சிய நேபாளமும், நாம் விரும்பத் தக்க அளவுக்கு இல்லையெனினும் ஓரளவு மதச் சார்பின்மையும், முதலாளித்துவப் பாராளுமன்ற முறையிலான அரசியல் அமைப்பும் கொண்ட இந்தியாவும் ஒன்றல்ல என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.) நேபாள மாவோயிஸ்டுகளும் ஆயுதப் போராட்டத்தை மட்டுமே வரட்டுத் தனமாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிராமல் நெளிவு சுழிவான நடைமுறைகளைக் கைக்கொள்கிறார்கள் என்பது கண்கூடு! மாபெரும் கொரில்லாப் போராளியாம் சே அவர்கள்கூட முதலாளித்துவத் தேர்தல் முறை அமலில் உள்ளதொரு சூழலில் ஆயுதப் போராட்டத்திற்கு அவ்வளவாக வாய்ப்பில்லை எனக் கூறியிருப்பது இங்கே நினைவுகூரத் தக்கது. எனவே பல்வேறு இன, மொழி வேற்றுமைகளையும், எண்ணற்ற சாதிப் பிளவுகளையும் தன்னகத்தே கொண்ட இந்திய சமூகம் இங்குள்ள அரசியல் அமைப்பு தனக்கு இனி உதவாது என்ற முடிவுக்கு வருகிறபோது எடுக்க வேண்டிய நிலைபாட்டைப் பற்றி இன்றே பேசுவது குதிரைக்கு முன்னால் வண்டியை நிறுத்துவது போன்றது!
6. தாங்கள் மிகவும் கவலைப்படுகிற விடுதலைப் புலிகளைப் பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் மதிப்பீடு சரியானதே என்பதையும், அவ்வியக்கம் சிங்கள வெறியர்களின் தாக்குதலிலிருந்து தமிழ் மக்களை முற்றிலுமாக விடுவிப்பதற்குப் பதிலாக அவர்களை நிர்க்கதியான நிலைக்கே தள்ளிவிடும் என்ற கட்சியின் அச்சமும் சரியானவை என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் மெய்ப்பித்துவிட்டன. தங்களிடமிருந்து மாறுபடுகிற சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களையே வகைதொகையின்றி கொன்றது, சிங்களர்களிடையேயுள்ள நேச சக்திகளின் ஆதரவை அங்கீகரிக்க மறுத்தது, அண்டை நாடான இந்தியாவின் பிரதமரைக் கொன்றதன்மூலம் அதன் பகையைத் தேடிக் கொண்டது, தமிழகத்தின் அப்பட்டமான சுயநல அரசியல் சக்திகளிடம் எச்சரிக்கையாக இல்லாமற் போனது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்தது, எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது அமைப்பை ஜனநாயக முறையில் நடத்தத் தவறியது என எண்ணற்ற கோளாறான நடைமுறைகளால் இலங்கைத் தமிழ் மக்களை இந்த நிலைக்குத் தள்ளிய பிரபாகரனையும், கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.கவுடனும், காங்கிரசுடனும் கூடிக் குலாவிக்கொண்டு இலங்கைத் தமிழர்களுக்காகக் குடங்குடமாக நீலிக்கண்ணீர் மட்டும் வடிக்கிற முத்தமிழ் அறிஞர்கள், ஐயாக்கள், புரட்சிப் புயல்கள் போன்ற தமிழர் தலைவர்களையும் கண்டுகொள்ளாமல் மார்க்சிஸ்டுகளையும், 'பார்ப்பன' ராமையும் மட்டுமே வசைபாடுவதன் வாயிலாகத் தங்களின் இனப் பற்றை எக்கச் சக்கமாய் வெளிப்படுத்தி வருகிற சில மேதாவிகளின் பட்டியலில் தங்களைப் போன்றோரும் போய்ச் சேர்ந்துவிட வேண்டாம் என்பதே என் விருப்பம்!
7.கட்சியின் நடைமுறைத் தவறுகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றிய தங்களின் விமர்சனத்தை அதன்பால் உண்மையான அக்கறையுள்ள எவரும் ஏற்கவே செய்வார்! இன்று தினமும் குறைந்த பட்சம் தீக்கதிரைக் கூடப் படிக்காத ஏராளமான உறுப்பினர்களையும், பல முன்னணி ஊழியர்களையும் கொண்ட கட்சி மார்க்சிஸ்ட் கட்சி! கற்றுக் கொள்வது, கற்பிப்பது என்பது இன்று அறவே இல்லை எனலாம்! அதனால் கட்சியிலும், தொழிற்சங்கம் உள்ளிட்ட வெகுமக்கள் அரங்குகளிலும் சுய வியர்சனமும், விமர்சனமும் இன்று அறவே இல்லாததால் அவற்றில் முழுக்க முழுக்கக் காரியவாதிகளும், பதவி மோகம் கொண்டவர்களும், அதிகாரத் திமிர் பிடித்தவர்களும் நிரம்பி வழிகிறார்கள்; தேங்கிய குட்டையாய்க் கட்சி சீரழிந்து போய்விடுமோ என்கிற அச்சம் என் போன்றோர்க்கும் ஏற்பட்டுள்ளது; மாபெரும் களப் போராளி தோழர் ஏ.கே.ஜி தனது சுய சரிதையில் பாராளுமன்றப் பாதையின் அபாயங்கள் குறித்து விடுத்த எச்சரிக்கை இன்று முற்றிலும் உதாசீனப் படுத்தப்படுகிறது; இன்று கட்சி எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் நெறிப் படுத்தும் இயக்கத்தை எவ்வாறு முனைப்புடன் முன்னெடுத்துச் செல்வது என்பதுதான்! நிச்சயமாக மேலிருந்து கீழாக அதனைச் சீராகவும், தயவு தாட்சண்யமின்றியும் செய்யத் தவறினால் விடுதலைப் புலிகளால் இலங்கைத் தமிழர்க்கு நேர்ந்த அதே கதி இந்திய உழைப்பாளி மக்களுக்கும் வந்து சேரும்.
8.இறுதியாய் ஒன்று: ஒருவர் ஒரு பொதுவுடைமைக் கட்சியின் அடிப்படைப் புரிதலில்--அதாவது, தன் நாட்டின் புரட்சிக் கட்டத்தைத் துல்லியமாகத் தீர்மானிக்கும் கட்சித் திட்டத்தில்--கோளாறு காணாதவரை அதை விட்டு விலகவே முடியாது; அதன் அவ்வப்போதைய நடைமுறைத் தந்திரங்களில் அல்லது தலைமையின் தவறான செயல்பாடுகளில் மட்டுமே குறையெனில் அவற்றுக்கு எதிராக உள்ளிருந்து போராடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியே இல்லை; இதைத் தவிர வேறு குறுக்கு வழி ஏதுமில்லை; அவ்வாறின்றி ஒருவர் இடையில் வந்து பாதி வழியிலேயே பயணத்தை நிறுத்துகிறார் எனில் அவர் ஒன்று பொறுமையற்றவர் அல்லது வேறு உண்மையான காரணத்தை மறைத்து கட்சி மீது வீண் பழி போடுபவர் என்றே கருத வேண்டும்
prabakaran
thozar paalraj avargalukku...
nanum kooda neengal merkooriya katchiyil maaanavar aranga maavatta poruppugalil irundhavan..ungal paguthiyaippolave ingum nadanthukondu irukkum ulkatchippoosal kaaranamaagavum, yen peyar polave naan siruvayathu muthale konda eezha thaagaththinoodaai katchikku yethiraaga (kolgaigalukku) katchi seyarkkuzhu pondravatril vinaakkalai lenin, stalin merkolgalodu thodukka siru payyan yengalukke arivurai seigiraayaa, yendra reethiyil purakkanikkappatten, purakkanippugal thodara naanaagave katchiyai vittu veliyerivitten. ithil mukkiyamaana ondru yennai purakkaniththa anivarukkum(aththunai tamizhanukkum) eezha poraattam sariyaana ondru yendru therinthaalum, eezham thavira veru theerve illai yendru unarnthaalum, thaangal saarnthirukkum pathavigalai vida mudiyaamalum, katchi yendra siraikkul adaipattirukkum kaaranaththinaalum veliye solla payappadugiraargal yendra unmai naan solli thaan ungalukku theriya vendiyathillai.. katchi yenum koottai udaiththukkondu veliye vanthuviteergal ungalukkaana paratha puthiya thalam kaaththirukkirathu... uzhaippaaligalukkum, thozhilaalargalukkum poraada, suthanthiramaga ninaiththathai pesa yezhtha..!
varaverkkirom ungalai intha suthanthiramaana puthiya kalaththirkku,yengalodu poraaliyaai inainthatharkkaai.
ஏகாந்தன்
"..இறுதியாய் ஒன்று: ஒருவர் ஒரு பொதுவுடைமைக் கட்சியின் அடிப்படைப் புரிதலில்--அதாவது, தன் நாட்டின் புரட்சிக் கட்டத்தைத் துல்லியமாகத் தீர்மானிக்கும் கட்சித் திட்டத்தில்--கோளாறு காணாதவரை அதை விட்டு விலகவே முடியாது; அதன் அவ்வப்போதைய நடைமுறைத் தந்திரங்களில் அல்லது தலைமையின் தவறான செயல்பாடுகளில் மட்டுமே குறையெனில் அவற்றுக்கு எதிராக உள்ளிருந்து போராடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியே இல்லை; இதைத் தவிர வேறு குறுக்கு வழி ஏதுமில்லை; அவ்வாறின்றி ஒருவர் இடையில் வந்து பாதி வழியிலேயே பயணத்தை நிறுத்துகிறார் எனில் அவர் ஒன்று பொறுமையற்றவர் அல்லது வேறு உண்மையான காரணத்தை மறைத்து கட்சி மீது வீண் பழி போடுபவர் என்றே கருத வேண்டும்"
அய்யா அ.வெ. சாமிக்கண்ணு அவர்களே ,கட்சி கிளைக்கூட்டத்தில் கேள்விகேட்டாலே அந்த தோழரைப் பற்றி அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தர இயலாமல் ,அவரைப் பற்றி அவர் சார்ந்த கிளைத்தோழர்களிடம் பகுதிக்குழு இல்லாத, பொல்லாத அவதூறுகளை பரப்ப ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன பிறகு அந்த தோழர் நொந்துபோய் தானாகவே பெரும்பாலும் விலைகிவிடுவார்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் விடாக்கண்டனாக கட்சி ஸ்தாபன விதிகளின் படி போராட துணிந்துவிட்டாரானால் ஏற்கனவே அந்த தோழரை பற்றி பரப்பியிருக்கும் அவதூறுகளைக் காரணம் காட்டி கட்டம் கட்டி வெளியே அனுப்பிவிடுவார்கள். தோழர் w.r.v போல.உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் மாயை தான். இதனை அப்பாவிகளான மற்ற தோழர்களும் நம்பி விடுவார்கள். ஆக,” பேரு பெத்த பேரு, தாக நீலு லேது ” என்பது தான் கட்சியின் ஜனநாயகம். இதில் பொறுமை என்றும் வேறுகாரணம் என்றும் கதைப்பது வீண் வேலை.
ஆக உங்கள் கட்சியின் ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிக்ஷிங் சரியில்லையே அய்யா? என்ன செய்ய.....
ஏகாந்தன்
"...கட்சியின் நடைமுறைத் தவறுகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றிய தங்களின் விமர்சனத்தை அதன்பால் உண்மையான அக்கறையுள்ள எவரும் ஏற்கவே செய்வார்! இன்று தினமும் குறைந்த பட்சம் தீக்கதிரைக் கூடப் படிக்காத ஏராளமான உறுப்பினர்களையும், பல முன்னணி ஊழியர்களையும் கொண்ட கட்சி மார்க்சிஸ்ட் கட்சி! கற்றுக் கொள்வது, கற்பிப்பது என்பது இன்று அறவே இல்லை எனலாம்! அதனால் கட்சியிலும், தொழிற்சங்கம் உள்ளிட்ட வெகுமக்கள் அரங்குகளிலும் சுய வியர்சனமும், விமர்சனமும் இன்று அறவே இல்லாததால் அவற்றில் முழுக்க முழுக்கக் காரியவாதிகளும், பதவி மோகம் கொண்டவர்களும், அதிகாரத் திமிர் பிடித்தவர்களும் நிரம்பி வழிகிறார்கள்; தேங்கிய குட்டையாய்க் கட்சி சீரழிந்து போய்விடுமோ என்கிற அச்சம் என் போன்றோர்க்கும் ஏற்பட்டுள்ளது;"..... தோழர் அ.வெ.சாமிகண்ணு அவர்களே நீங்கள் உண்மையிலேயே இத்தகைய போக்குகளை கண்டு அச்சப்படுகிறவராக தெரியவில்லை. நீங்களும் ஜோதியில் கலந்துவிட்டவர் போல்தான் தெரிகிறது.அப்படி ஒரு வேளை ஜோதியில் கலக்காத மனசாட்சி உடையவராக இருப்பீர்களேயானால் கட்சியில் இத்தகைய போக்குகளுக்கு எதிராக போராடி.கட்சியை சரியான திசைவழியில் செலுத்தி கி.பி.12010 ம் ஆண்டுக்குள் ஒரு மாபெரும் மக்கள் ஜனநாயக புரட்சியை மார்க்ஸிஸ்ட் கட்சியின் தலமையில் நடத்தி முடிப்பீர்கள் என நம்புகிறேன். அதற்காக எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள். மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்தி முடிக்க பத்தாயிரம் ஆண்டுகள் உங்களுக்கு போதும் என்று நினைக்கிறேன்.
NAAGASUNDARAM
அமரன் அவர்களே! ஆதவன் தீக்ஷன்யா தெளிவாகவும் உறுதியாகவும் செயல்பட்டு வருகிறார். ஈழப் பிரச்சினையில் அவர் மீது ஏவப்பட்ட அம்புகளைஎல்லாம் வீழ்த்தி விட்டுத்தான் இப்போத்ம் அவர் தன சரியான நிலைப்பாட்டோடு இயங்கிக் கொண்டு இருக்கிறார். அவரை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்?
ஏகாந்தன்
ஆகா..ஆகா எவ்வளவு அற்புதமாக ஒரு சிங்கம் போல் சாதிய எதிர்ப்பு என்ற போர்வையை கேடயமாக பயன்படுத்தி வீழ்த்தியதாக நீங்கள் கருதுகிறீகளோ அதேபோல் உடனடியாக அதே சாதியம் என்ற வளைக்குள் பதுங்கிக்கொண்டு எலியைப் போல் கீச்..கீச் என்று கீச்சிட தொடங்கி தன் சரியான நிலைபாட்டிற்கு வந்துவிட்டார். ஆகவே வளைக்குள் பதுங்கி இருக்கும் எலியிடம் வம்பு செய்ய வேண்டாம். ஈழம் என்ற சொல் கேட்டவுடனே அந்த எலி, சிங்கம் என வந்து கர்ஜிக்கும். அப்போது சிங்கத்தை எதிர் கொள்ளலாம். ஆகவே அமரன் அவர்களே அய்யா நாகசுந்தரம் சொல்வது போல் ஒரு எலியிடம் போய் வம்பு செய்ய வேண்டாம்.
ஏகாந்தன்
...மாறிவிட்ட உலகச் சூழலில் ( அதாவது வர்க்க சக்திகளின் உலகளாவிய பலாபலத்தில்) இனி இந்தியா போன்ற புதிதாக விடுதலையடைந்த நாடுகளில் இனப் பிரச்சனைகளைத் தீர்க்கப் பிரிவினை ஒன்றே வழி என்பதைக் கைவிட்டு சுயாட்சிக்காகப் போராடுவதே சரியான திசைவழி என்ற நிலைபாட்டை 1972இல் மதுரையில் நடந்த 9ஆம் கட்சிக் காங்கிரசில் முடிவெடுக்கப்பட்டது''...
அய்யா அ.வெ.சாமிகண்ணு அவர்களே வர்க்க சக்திகளின் உலகளாவிய பலாபலம் என்றால் என்ன? என்று சற்று விளக்கினால் என் போன்றவர்களுக்கு தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அடுத்து உங்கள் வாதப்படி 1972ல் நடந்த கட்சிக்காங்கிரஸ் முடிவின் படிதான் இலங்கை இனப்பிரச்சினயில் மார்க்ஸிஸ்ட் கட்சி நடந்துகொள்கிறது என்பதுதான்

இலங்கயின் இனப்பிரச்சியில் இனி இலங்கையில் உள்ள இரு இன மக்களும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை 1980லிருந்து 1983ல் ஏற்பட்டது. ஆகவே இலங்கை இனப்பிரச்சினையில் கட்சியின் நிலைபாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற வேண்டுகோள்கள் கட்சிக்குள் எழுந்தது. இந்த நிலையை வலியுறுத்தி ஒருபகுதியினர் நீங்கள் சொல்லும் உட்கட்சி ஜனநாயகத்தை பயன்படுத்தி போராடினார்கள். அப்படி போராடியவர்களில் தீவிராமாகப் போராடியவர்கள் தான் நீங்கள் குறிப்பிடுகின்ற தோழர்கள் பெ.மணியரசன், தணிகைசெல்வன், அஸ்வகோக்ஷ் என்ற ராஜேந்திரசொழன் போன்றவர்களாவார்கள். நீங்கள் சொல்கிறீகள் அவர்கள் வெளியேறினார்கள் என்று .ஆனால் தேசிய இனப்பிரச்சினையில் கட்சியின் நிலைபாட்டை பற்றி விவாதிக்கும் ஒரு ரகசிய( தோழர்,ஓம்கார் தல்மையில்) கூட்டத்தில் கலந்துகொண்டதாக கூறி, இது கட்சிவிரோத செயல் என்று காரணம் காட்டி கட்சியை விட்டு வெளியேற்றினார்கள். எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது தோழர். A.நல்லசிவன் அவர்கள் கேரள சமாஜத்தில் பேரவைக் கூட்டத்தில் பேசும் போது ”ஒரு சிறு கூட்டம் கட்சியின் நிலைபாட்டிற்கு எதிராக ஒன்றுகூடி விவாதிப்பது என்பது கட்சியின் கட்டுப்பாட்டிற்கும், கட்சிக்கும் விரோதமான செயல் ஆகும். ஆகவேதான் அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றினோம்” என்று கூறினார். இது தான் கட்சியின் உச்ச பட்ச ஜனநாயாகம். வாழ்க மார்க்ஸிஸ்ட் கட்சியின் உட்கட்சி ஜனநாயகம்
ஏகாந்தன்
அய்யா அ.வெ.சாமிகண்ணு அவர்களின் பார்வைக்கு

ARTICLE VIII
Resignation from Party membership
1. A Party member wishing to resign from the Party shall summit his or her resignation to the Party branch or to the Party unit to which he or she belongs. The unit concerned may accept the same, decide to strike his or her name off the rolls and report the matter to the next higher committee. If the resignation is on political grounds the unit may refuse to accept the
resignation and may expel him.
இது தான் உங்கள் கட்சியின் நடைமுறை என்பது இப்போது தங்களுக்கு புரிந்திருக்கும்.இந்த விடயம் தங்களுக்கு தெரியாமா?அல்லது தெரியாதா? அல்லது தெரியாதது மாதிரி நடிக்கிறீர்களா?
arun
BJP, Congress pondru indiya Egathipathiya nalangalai paathugapathargana idadhusaari vedamittu CPM katchi seyalpattukondu irukkiradhu. enavey CPM katchiyai ampalapaduthi athanai thamilagathil irunthu agattravendi poradavendiyathu ovvoru puratchiyalarin kadamaiyagum.
nagasundaram
நண்பர் அருண் அவர்களே!மக்களை வாட்டும் விலைஉயர்வுக்கு எதிராக, சாதியஆதிக்கத்திகு எதிராக,
தவறான ஒப்பந்தத்திற்கு எதிராக, சமச்செர்க் கல்வி வேண்டும் என்பதற்காக, அந்நிய நிறுவனங்கள் தொழிலாளிகளைச் சுரண்டுவதற்கு எதிராக், குடிநீர், மயானம் சாலை போன்ற அடிப்படை வசதிகளுக்காக,
தனியார் பள்ளிக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக, நச்சுக் கலை இலக்கியங்களுக்கு எதிராக, மதத்தின் பேரால் மோதலை உருவாக்கி ஆட்சியைக் கைகொள்ள நினைக்கும் மத வாத சக்திகளுக்கு எதிராக, நிலச்சீதிருத்தம், இலவச மனைபட்டா ஏழை மக்களுக்கு தர வேண்டி,.... இப்படி எல்லப்பிரசினைகளையும் முன்வைத்துத் தங்கள் அரசியல் பலத்தையும் விடக் கூடுதலாக மக்கள் ஆதரவைப் பெற்று களத்தில் போராடி இயன்ற வரை வெற்றி கண்டும் வெற்றி காண இயலாதவற்றில் மக்கள் கர்த்தைமேலும் பரவலாக்கியு ம செயல்பட்டு வருவது சி பி எம் மட்டுமே அதனை விடப் பெரிய கட்சிகளுக்குக் கூட சி பி எம் போன்று மாணவர், இளைஞர்.மகளிர் ,தொழிலாளர், ஊழியர்கள் அமைப்புகள் கலை இலக்கியவாதிகள், புத்தக வெளியீடு அமைப்புகள் ........இப்படி எந்தக் கட்டமைப்புகளோ , அவற்றின் செயல்பாடுகளோ இல்லை, இவடைஎல்லாம் விட்டு விட்டு சி பி எம் மை ஒழித்து விட்டு நீங்கள் என்ன பேப்பர் புர்ர்ர்ரட்சி
செய்யப் போகிறீர்கள் அப்படி மூட்டை கட்டியவர்கள் எல்லாம் இன்று எங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாதா?
mukilan
அருண் அவர்களே

// Egathipathiya nalangalai paathugapathargana idadhusaari vedamittu CPM katchi seyalpattukondu இருக்கிறது//

தங்கள் எழுதிய இந்த வரிகளை சற்று ஆதாரத்தோடு விளக்க முடியுமா?
வெட்டியாக CPMஐ விமர்சிப்பதை விட்டு சிறிதளவேனும் எஆகதியபத்திய எதிர்ப்பு பணிகளை செயுங்கள்
mukilan
அ.வெ.சாமிகண்ணு அவர்களுக்கு

வணக்கம். என்போன்ற CPMன் இளைய தலைமுறையினரை உணர்வு பூர்வமாக குழப்பி கொண்டிருக்கும் சிலரின்
அடிப்படையே சரி இல்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இந்த வரிகளுக்க்காகவே மற்றும் ஒருமுறை வாழ்த்துக்கள் வணக்கங்கள்

//ஒரு நாட்டின் மக்கள் இனி இந்த அமைப்பைத் தூக்கியெறிவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டத்தை எய்துகிறபோது அந்தந்த நாட்டின் பொருளாதார, சமூக, கலாசார, அரசியல் சூழலுக்கும், எதிரி வர்க்கத்தின் நிலைபாட்டிற்கும், உலக நிலைக்கும் ஒப்பவே சமூகப் புரட்சி நிகழ்த்தப்பட வேண்டும்//

பிறந்த குழந்தையை ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்தில் ஓடவைக்க நினைப்பது பகல் கனவாகவே முடியுமே
தவிர, குழந்தை நிச்சயமாக ஓடாது என்பது இயக்கவியல் தெரியாத பாமரனுக்கு கூட புரியும். இது போல புரட்சியையும் திட்ட மிடுபவரை என்ன சொல்வது?
அருண்
தோழர் நாகசுந்தரம் அவர்களே,
வகைவகையான போராட்டங்களை மட்டும் வைத்து ஒரு கட்சியை மதிப்பிட வேண்டுமென்றால் வாரத்திற்கு இரண்டு போராட்டங்களை நடத்தும் அதிமுக, சிபிஎம்மை விஞ்சி விடும். நீங்கள் வரிசைப்படுத்தியிருக்கும் பல பிரச்சினைகளுக்கு தன்னார்வ குழுக்க்ள் கூட மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துகின்றனர், எனவே போராட்டம் நடத்துவது மட்டுமே ஒரு கம்யுனிஸ்ட் கட்சியின் வேலையல்ல, போராட்டங்களின் ஊடாக மக்களை அரசியல்படுத்தி சமுக மாற்றத்திற்கு அணியமாக்குவதே உண்மையான கம்யுனிஸ்ட் கட்சியின் பணியாகும். ஆனால் சிபிஎம் கட்சியோ மக்கள் பிரிவினரில் அவரவர் பொருளாதார கோரிக்கைகளை மட்டும் முன்னெடுத்து அவர்களை அரசியல்படுத்தாமல் நிலவும் சுரண்டல் அரசமைப்பிலேயே தமது கோரிக்கைகளை வென்றெடுக்கலாம் என்று நம்பிக்கையூட்டி, சுரண்டல் அமைப்பை தூக்கியெறிவதே நிரந்தர தீர்வாகும் என்பதை மறைத்து வருகிறது. இதன் முலம் காங்கிரஸ் பிஜேபி திமுக அதிமுக போன்று நேரடியாக அல்லாமல் மறைமுகமாக முதலாளித்துவத்துக்கு சேவை செய்து வருகிறது. இந்த மறைமுக சேவையை கண்டுணர முடியாமல் தோழர் பால்ராஜ் போன்று எண்ணற்ற சமுக மாற்றத்தை விரும்பும் தோழர்களை மழுங்கடித்து, புரட்சியை தடுத்து வருகிறது. இதனால் தான் சிபிஎம் கட்சியை அம்பலப்படுத்துவது என்பது இந்த சுரண்டல் அமைப்பை தூக்கியெறிய விரும்புபவர்களின் கடமையாகும்

2. தோழர் நாகசுந்தரம் வரிசைப்படுத்தியிருக்கும் பிரச்சினையில் முல்லைப் பெரியாறு, ஒகேனெக்கல், பாலாறு, தமிழீழம் போன்ற தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் ஒன்று கூட இல்லையே ஏன்?
பாலசுப்ரமணியன்
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்த கேரளத்தில் தொழிற்சாலைகள் பெருக ஏதுவாக ஒரு டன் மூங்கிலை ஒரு ரூபாய்க்கு அப்போதைய பெரு முதலாளி நிறுவனம் ஒன்றிற்கு விற்கிற முடிவை எடுத்ததை அறிய முடிவதிலிருந்தே அதன் புரட்சியின் மீதான் அணுகுமுறையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அன்று மூங்கில் இன்று நிலம் (சிங்கூர்). உலகமயமாக்கல், உலகு வெப்பமாதல், அழிந்து வரும் உயிரினங்கள், கொள்ளையடிக்கப் படும் மூன்றாம் உலக நாடுகளின் வளங்கள் (வளர்ச்சி என்ற பெயரில்) இவற்றிற்கு மாற்றாக கட்சி ஏதாவது திட்டம் கொண்டு போராடுகிறதா? அல்லது பன்முக வடிவில் ஏகாதிபத்தியம் ஒடுக்குமுறையை நுட்பமாக மாற்றிக் கொண்டு விட்ட இக்காலகட்டத்தில் கட்சியும் பன்முக சிந்தனை மாற்றத்திற்கு தயாராக உள்ளதா? தொழிலாளி மற்றும் முதலாளி என்கிற இரட்டை முரண் நுட்பமாக மறைந்து உற்பத்தியாளன் மற்றும் நுகர்வோன் என்பதாக மாறி வருகிறது. தொழிலாளி நுகர்வோனாக மாற்றப் பட்டாலும் உற்பத்தியாளன் என்கிற முகமூடியின் உள்ளே இருப்பது அதே பழைய முதலாளிதான். இன்றைய தொழிலாளிவர்க்கம் என கட்சி எதை நினைக்கிறதோ அது தடித்த தோலோடு மூளை மழுங்கிப்போன மத்திய தர வர்க்கம் தானே தவிர விடுதலைக்காக ஏங்கும் தொழிலாளி வர்க்கம் அல்ல. இன்றைய தொழிலாளர்கள் இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகள் தவிரவும் வேறு சிலவும் உள்ளன. அதை ஒரு போதும் இழக்க அவன் விரும்பவில்லை. ஆக எல்லா மதிப்பீடுகளும் கொள்கைகளும் வீழ்ச்சி கணடு விட்ட இக்காலகட்டத்தில் கட்சி தனது வீழ்ச்சியை நம்ப மறுத்து விளக்கங்கள் அளிப்பது ஒன்றுக்கும் உதவாது. இறுதியாக போன வாரம் கண்ணூரில் மார்க்ஸிஸ்ட் மந்திரிமார் ஒரு தீம்பார்க்கை துவக்கி வைத்தனர். அதன் முதலீட்டாளர்கள் கட்சிப் பின்புலம் உள்ளவர்கள். சாலக்குடி ஆறு பன்னாட்டு நிறுவனமொன்றிற்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இதுதான் இன்றைய கொள்கைத் திட்டம். வாழ்க

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.