ஒரு நாள், அரசாங்க குமாஸ்தா ஒருவர் நாடக அரங்கிற்கு நாடகம் பார்க்கச் செல்கிறார். அவர் பெயர் செர்வியாகோவ். அவர் நாடகத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்குத் தும்மல் வந்துவிட்டது, ‘அச்’சென்று தும்மிவிட்டார். தும்மிய வேகத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் மீது தும்மலின் ஒரு துளி விழுந்துவிட்டது! தும்மல் யார் மீது விழுந்தது என்று பார்க்கிறார். பெரும் அதிர்ச்சி! அவர் இவரின் உயர்அதிகாரி! அவ்வளவுதான், அதிர்ச்சியில் அப்படியே உறைந்து விட்டார்! அவரிடம் மெல்லக் குனிந்து மன்னிப்பு கேட்டார்.
அந்த உயரதிகாரி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் செர்வியாகோவின் மனம் அமைதியடையவில்லை. நடுக்கம் கூடிற்று, 'நான் பெரிய தவறு செய்து விட்டேன். அதிகாரி கோபமாக இருக்கிறாரோ?' என்ற பயம் அவரை வாட்டியது. மீண்டும் மீண்டும் அவரிடம் பணிவுடன் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டார். ஒவ்வொரு முறையும் அந்த உயரதிகாரி, “பரவாயில்லை”, “பரவாயில்லை” என்றே சொன்னார். ஆனாலும், அந்தக் குமாஸ்தாவுக்கு அச்சம் குறையவில்லை. நெஞ்சில் படபடப்பு கூடிக் கொண்டே இருந்தது. உயர்அதிகாரி கோபித்துக் கொண்டால், தன்னுடைய வேலை நிச்சயம் போய்விடும். அப்புறம் மனைவி, குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது, வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்வது என்ற பதற்றம் ஒவ்வொரு நொடியும் அவரை வாட்டியது; இரவு முழுவதுவும் அவர் தூங்கவே இல்லை! ஏதேதோ சிந்தனைகள் அவரை வாட்டி எடுத்துவிட்டன.
அடுத்த நாள் காலை விடிந்ததும் விடியாததுமாக அவர் அலுவலகம் சென்றுவிட்டார். பயமும் பதற்றமும் அவரை ஆட்டிப்படைத்தன! உயர் அதிகாரி வரும் வரை அவரின் அறையின் வாசலிலே காத்திருந்தார். அவரைச் சந்தித்து மீண்டும் மன்னிப்பு கேட்டார். அப்போதும் அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும், அந்தக் குமாஸ்தாவின் மனப் பதற்றம் தணியவே இல்லை. திரும்பத் திரும்பப் பய உணர்வோடு மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தார். கடைசியில் அந்த உயரதிகாரி எரிச்சலடைந்து, அவரைக் கடுமையாகத் திட்டி அனுப்பிவிட்டார். குமாஸ்தா செர்வியாகோவின் மனம் உடைந்து நொறுங்கிப் போனது.
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்து உடைகளைக் கூட மாற்றாமல் அப்படியே 'பொத்'தென்று படுக்கையில் விழுந்தார். அவர் அச்ச உணர்வில் துடித்துக் கொண்டிருந்தார். எங்கே வேலைபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் அவருக்கு இருந்தன. கடுமையான நடவடிக்கை எடுத்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம், எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தின. குடும்ப நிலையை யோசித்தார். வேலைபோய்விட்டால் குடும்பத்தின் கதி என்ன ஆகும் என்ற சிந்தனையிலே படுத்தவர் தான் பின்பு எழுந்திருக்கவே இல்லை, அப்படியே அவர் உயிர் பிரிந்து விடுகிறது.
இது ஆன்டன் செக்காவ் 1883 இல் எழுதிய “The Incident” என்ற கதையின் சுருக்கம். Oskolki என்ற ரஷ்ய இதழில் வெளியானது. பின்னர் இக்கதை “குமாஸ்தாவின் மரணம்” என்ற தலைப்பில் அறியப்பட்டது. இந்தக் கதையின் மூலம் செக்காவ், அக்கால ரஷ்யாவின் அதிகாரத்தின் கொடூர முகத்தையும் அது தோற்றுவிக்கும் அச்ச உணர்வினையும், அதிகாரத்தின் முன் சாதாரண மனிதன் எப்படித் தன்னம்பிக்கையற்றவனாக மாறுகிறான், இயல்பான ஒரு சிறு நிகழ்வு கூட அதிகார அடக்குமுறை ஏற்படுத்தும் அச்சத்தால், மனஅழுத்தமாக மாறுகிறது என்பதையும் மெல்லிய நகைச்சுவை கலந்த சோகத்துடன் வெளிப்படுத்துகிறார். இது ஒரு மனிதனின் மரணம் என்பதை விட, ஒரு சமூகம் அடக்குமுறையால் எப்படி மரணமடைகிறது என்பதைக் காட்டுவதாக அமைகிறது. இந்தக் கதை உலகப் புகழ் பெற்றது, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது,
ஆன்டன் செக்காவ் (1860–1904) உலக இலக்கியத்தில் தனித்த இடத்தைப் பெற்ற ரஷ்ய சிறுகதை, நாடக ஆசிரியர். அடிப்படையில் மருத்துவர். நுட்பமான யதார்த்தம், ஆழமான உளவியல் பார்வை, மற்றும் அன்றாட மனித வாழ்க்கையின் மீது கொண்ட கவனம் ஆகியவற்றின் மூலம் நவீன சிறுகதைகளுக்கும் நாடகங்களுக்கும் புதிய வடிவத்தையும் உத்வேகத்தையும் அளித்தவர். இன்றும் உலகம் முழுவதுவும் பேசப்படுகிறார்.
இவரது படைப்புகளில் மிகைப்படுத்தப்பட்ட கதைக்களமோ கதையாடலோ இல்லை. எளிய வாழ்வின் யதார்த்த அனுபவங்கள், உள்ளார்ந்த மனப்போராட்டங்கள், வெளிப்படுத்த முடியாத மனஉணர்வுகளே இவருடைய கதைகளின் மையமாக இருக்கின்றன. எளிமை, துல்லியம், மனிதநேயம் ஆகியவற்றால் பிணைக்கப்பட்ட அவரது எழுத்துகள் வாசகர்களின் உள்ளத்தை எளிதில் தொட்டுவிடுகின்றன. ரஷ்ய இலக்கிய எல்லைகளைத் தாண்டி, உலகம் முழுவதும் நவீனச் சிறுகதைகளையும் யதார்த்த நாடகங்களையும் புதிய திசையை நோக்கி நகர்த்தியதில் செக்காவின் பங்களிப்பு மிக முக்கியமானது.
செக்காவ் தனது எழுத்து வாழ்க்கையை 1880 களின் முற்பகுதியில் தொடங்கினார். அக்காலகட்டத்தில் ரஷ்ய இலக்கியம் மாற்றத்தை எதிர்கொண்டு வந்த காலம். லியோ டால்ஸ்டாய், ஃபியோதர் தோஸ்தோயெவ்ஸ்கி, இவான் துர்கெனெவ் போன்ற எழுத்தாளர்கள் ஏற்கெனவே வாழ்வியல் நெறி மற்றும் தத்துவஆழம் கொண்ட யதார்த்தவாத இலக்கியத்தை வழங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் செக்காவ் எழுதத் தொடங்கிய காலத்தில், சமூக சீர்திருத்தம் குறித்த நம்பிக்கை மெல்ல மங்கத் தொடங்கியிருந்தது. அரசியல் சூழல், பொருளாதாரச் சிக்கல், கல்வியறிவு பெற்ற சமூகத்திலும் நிலவிய ஒருவிதமான மனச்சோர்வு ஆகியவை அக்கால ரஷ்யாவை ஆட்கொண்டிருந்தன. இவ்வகையான சமூகப் பின்புலத்தில்தான் இயல்பான மென்மையான விரக்திமனம் மற்றும் வாழ்வியல் சிக்கல்களின் பின்னணியில் செக்காவின் இலக்கியப் பயணம் தொடங்கியது.
மாஸ்கோவில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த போது, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே அவர் பத்திரிகைகளுக்கு நகைச்சுவை கலந்த சிறு சிறு குறிப்புரைகளை எழுதினார். இவ்வாறு எழுதப்பட்டவை எளிமையானவையாகவும் நகைச்சுவை நிறைந்தவையாகவும் இருந்தபோதிலும், பின்னாளில் அவரது ஆழமான படைப்புகளை வரையறுக்கும் தன்மைகள் அவற்றில் தெளிவாகப் புலப்பட்டன. குறிப்பாக, மனித பலவீனங்களைக் கூர்ந்து கவனிக்கும் பார்வை, துல்லியமான மொழியில் அவற்றினை வெளிப்படுத்தும் உத்தி, மனிதப் பண்பை உணரும் இயல்பான படைப்பாக்கத்திறன் ஆகியவை அவை. காலப்போக்கில் செக்காவ் நகைச்சுவை மற்றும் பகடியில் இருந்து விலகி, ஆழமான உளவியல் மற்றும் சிந்தனைக்குரிய கதைத்தளங்களின் பக்கம் நகர்ந்தார். இதன் மூலம் அவரிடம் தனித்துவமான இலக்கிய ஒளி சுடர்விடத் தொடங்கியது.
ரஷ்ய இலக்கியத்தில் செக்காவின் இடம் எது என வரையறை செய்வது எளிதல்ல. அவர் பெரும்பாலும் யதார்த்தவாத எழுத்தாளராகவே அடையாளப் படுத்தப்படுகிறார். ஆனால் அவரது யதார்த்தவாதம் முன்னோடிகளின் யதார்த்தவாதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. முந்தைய யதார்த்தவாதிகள் இலக்கியத்தை வாழ்க்கை நெறி, போதனை, சமூக விமர்சனத்திற்குப் பயன்படுத்தினர். செக்காவ், அதற்கு மாறாக, வெளிப்படையான தீர்மானங்களையும் தத்துவ நிலைப்பாடுகளையும் தவிர்த்தார். அவர் வாழ்க்கையை எளிமையாகவும் முடிவற்றதாகவும், பல நேரங்களில் வலியுடன் கூடியதாகவும் காட்டினார். இவ்வகையில், செக்காவ் மரபான யதார்த்தவாதத்தையும் நவீனவாதத்தையும் இணைக்கும் ஓர் இடைமுக எழுத்தாளராகக் கருதப்படுகிறார். அவரது படைப்புகள் நவீன இலக்கியத்தின் நோக்கு, பூடகத்தன்மை, அகமன அனுபவங்கள் போன்ற அம்சங்களை உள்ளடக்கியவை.
செக்காவின் தனித்தன்மை அவரது கதாபாத்திரங்களை அவர் அணுகும் முறையிலும் அவற்றினைத் துலங்கச்செய்வதிலும்தான் உள்ளது. ஃபியோதர் தோஸ்தோயெவ்ஸ்கி போன்றோர் தீவிரமான உளநிலைகளை ஆராய்ந்தனர்; மாக்சிம் கார்க்கி போன்றோர் சமூகப் போராட்டங்களை முன்னிலைப்படுத்தினர். செக்காவ், இதற்கு மாறாக, மிகஎளிய மனிதர்களின் அன்றாட வாழ்வை மையமாகக் கொண்ட படைப்புகளைத் தந்தார். இவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், அலுவலர்கள், நிலப்பிரபுக்கள், அரசு ஊழியர்கள் போன்றவர்களே. அவர்கள் பெரும் குற்றங்களையோ வீரச் செயல்களையோ செய்யாதவர்கள். செய்யத் துணியாதவர்கள், அவர்களின் வேதனை என்பது பெரிய விஷயங்களில் அல்ல; அன்றாடம் ஏற்படும் சிக்கல்களான ஏமாற்றம், தவறிய வாய்ப்புகள், உணர்ச்சி, செயல்படமுடியாத முடக்க நிலை ஆகியவற்றில்தான் உள்ளது. வாழ்விற்குள் மறைந்துகிடக்கும் துயரத்தை நுட்பமாகவும் தீவிரமாகவும் வெளிப்படுத்தியதில்தான் செக்காவின் சிறப்பு உள்ளது.
ஆன்டன் செக்காவின் படைப்புகள் எண்ணிக்கையிலும், இலக்கிய வகைமைகளிலும் மிகவும் விரிவானவை. குறிப்பாக, சிறுகதை இலக்கியத்தில் அவர் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். வாழ்நாளில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆரம்பகாலக் கதைகள் பெரும்பாலும் நகைச்சுவை, பகடி மற்றும் சமூக விமர்சனத் தன்மையுடன் அமைந்திருந்தன. அக்கால சமூகத்தில் காணப்பட்ட அதிகார துஷ்பிரயோகம், போலித்தனம், மனிதர்களின் சுயநலம், நிர்வாக அமைப்புகளின் அபத்தங்கள் போன்றவற்றை அவர் மென்மையான நையாண்டியுடன் வெளிப்படுத்தினார். வாசகர்களைச் சிரிக்கவைத்தபோதும், சமூகத்தின் நிலை குறித்துச் சிந்திக்கச் செய்ததே அவரது எழுத்தின் சிறப்பாகும்.
காலப்போக்கில் செக்காவின் கலைநோக்கு மேலும் முதிர்ச்சி பெற்றது. பின்னாளில் அவர் எழுதிய கதைகள் மனஉணர்வுகளின் ஆழத்தையும் மனித வாழ்க்கையின் சிக்கல்களையும் நுணுக்கமாக எடுத்துரைக்கத் தொடங்கின. கதைகளின் வெளிப்புறச் சம்பவங்களை விட, அக மனத்தின் போராட்டங்கள், தனிமை, நிறைவேறாத ஆசைகள், காலத்தின் நகர்வு, வாழ்க்கையின் அர்த்தம் போன்றவை முக்கிய இடம்பெற்றன.
The Steppe என்ற படைப்பில் ஒரு சிறுவனின் பயண அனுபவத்தின் மூலம் ரஷ்ய கிராமிய வாழ்க்கையின் பரந்த இயற்கை, மனித உறவுகள் மற்றும் குழந்தை மனத்தின் உணர்வுகள் அழகாகச் சித்தரிக்கப்படுகின்றன.
A Dreary Story என்னும் படைப்பில் வயதான பேராசிரியரின் வாழ்க்கை வெறுமை, மரண அச்சம் மற்றும் வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் மனநிலைகள் ஆழமாக வெளிப்படுகின்றன.
செக்காவின் பிற்காலச் சிறுகதைகள் அவரது கலைச்சாதனையின் உச்சமாகக் கருதப்படுகின்றன. இக்கதைகளில் வெளிப்படையான நாடகமோ அதிர்ச்சியூட்டும் சம்பவங்களோ குறைவாக இருந்தாலும், மனித வாழ்க்கையின் நுண்ணிய உணர்வுகள் மிகுந்த ஆழத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாயுடன் ஓரு பெண் (The Lady with the Dog)
இந்தக் கதை திருமண வாழ்க்கையில் மனநிறைவு இல்லாமல் வாழும் தம்பதியினரின் உள்ளார்ந்த உணர்வுகளை மையமாகக் கொண்டது. டிமிட்ரி குரோவ் என்ற நடுத்தர வயதுடையவர் யால்டா என்னும் கடற்கரை நகரத்திற்கு வருகிறார். அங்கு தினமும் ஒரு நாயுடன் நடந்து வரும் அன்னா செர்கேயெவ்னா என்ற பெண்ணைச் சந்திக்கிறார். தொடக்கத்தில் சாதாரண ஈர்ப்பாகத் தொடங்கும் அவர்களது நட்பு பின்னர் உண்மையான காதலாக மாறுகிறது.
ஆனால் இருவரும் ஏற்கெனவே திருமணமானவர்கள் என்பதால், அந்த உறவு அவர்களுக்கு மனஅமைதியை அளிப்பதற்குப் பதிலாக பெரிய குழப்பத்தையும் வேதனையையும் உருவாக்குகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் சமூகத்திற்குப் பயந்து பிரிந்து விடுகிறார்கள். அவர்கள் பிரிந்து சென்ற பிறகும் ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் தவிக்கின்றனர். சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உண்மையான காதலுக்கும் இடையிலான போராட்டமே கதையின் மையமாக அமைகிறது. வெளிப்படையாக எதுவும் பெரிதாக நடக்காதபோதும், மனித மனத்தின் நுண்ணிய உணர்வுகளை செக்காவ் மிகவும் இயல்பாக இக்கதையில் சித்தரிக்கிறார்.
வார்டு எண் 6 (Ward No. 6)
இந்தக் கதை ஒரு மனநோய் மருத்துவமனையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஒரு சிறிய நகர மருத்துவமனையின் மருத்துவராக ஆண்ட்ரே எபிமிச் பணியாற்றுகிறார். மருத்துவமனையில் உள்ள “வார்டு எண் 6” என்ற பகுதி மனநோயாளிகள் சிகிச்சைபெறும் இடமாகும். அங்கு மனிதாபிமானமற்ற சூழல் நிலவுகிறது. நோயாளிகள் அசுத்தத்திலும் அலட்சியத்திலும் வாழ்கின்றனர்.
மருத்துவர் ஆரம்பத்தில் இந்நிலையை பெரிதாகக் கவனிக்காமல் கடந்து விடுகிறார். ஆனால் அங்கு இருக்கும் இவான் கிரோமோவ் என்ற நோயாளியுடன் அவர் பேசத் தொடங்கியபோது வாழ்க்கை, துன்பம், சமூகம், மனித சுதந்திரம் போன்ற சிக்கல்கள் குறித்து தொடச்சியாகச் சிந்திக்கத் தொடங்குகிறார். காலப்போக்கில் மருத்துவரின் சிந்தனைகளையே சமூகம் “பைத்தியம்” எனக் கருதுகிறது. இறுதியில் அவர் தன்னைத்தானே அந்த வார்டில் அடைத்துக்கொள்கிறார்.
இந்தக் கதை மனிதத் துயரத்தை உணராத சமூக அமைப்பையும் அதிகாரத்தின் கொடூரத்தையும் கடுமையாக விமர்சிக்கிறது. “யார் உண்மையில் பைத்தியம்?” என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஒரு பெட்டிக்குள் வாழ்ந்த மனிதன் (The Man in a Case)
இந்தக் கதையின் முதன்மையான கதாபாத்திரமான பெலிகோவ் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர்... வாழ்க்கையில் எந்த மாற்றமும் நிகழக்கூடாது என்று நினைப்பவர். எப்போதும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஆகியவற்றுக்குள் மட்டுமே வாழ விரும்புகிறார். மழை இல்லாத நாளிலும் குடை எடுத்துச் செல்வார்; எல்லாவற்றையும் “ஒரு பெட்டிக்குள்” பாதுகாக்க முயல்வார்.
அவரது இந்த அச்ச மனநிலை அவரைச் சுற்றியிருந்தவர்களையும் பாதிக்கிறது. அனைவரும் அவரைக் கண்டு பயந்து இயல்பான வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர். பின்னர் அவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெறலாம் என்ற நிலை உருவாகிறது. ஆனால் வாழ்க்கையின் இயல்பான சுதந்திரத்தையும் மாற்றத்தையும் அவர் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார். இறுதியில் அவர் தனிமையிலும் பயத்திலும் சிக்கி இறந்துவிடுகிறார்.
இந்தக் கதை பயம் மற்றும் பழமைவாத மனநிலை மனித வாழ்க்கையை எவ்வாறு முடக்குகின்றன என்பதை ஆழமாக எடுத்துக்காட்டுகிறது.
கூஸ்பெர்ரிகள் (Gooseberries)
இந்தக் கதை மனித ஆசைகள் மற்றும் சுயநல கனவுகளைப் பற்றிய சிந்தனையை முன்வைக்கிறது. நிக்கோலை என்ற மனிதரின் வாழ்நாள் கனவு ஒரு கிராம வீட்டை வாங்கி, அதில் கூஸ்பெர்ரி மரங்களை வளர்த்து அமைதியாக வாழ்வதாகும். அந்தக் கனவிற்காக அவர் வாழ்க்கை முழுவதும் பணத்தைச் சேமிக்கிறார்.
இறுதியில் தனது கனவை அடைகிறார். ஆனால் அவர் அடைந்த அந்தச் சந்தோஷம் உண்மையான வாழ்க்கை நிறைவா என்ற கேள்வி எழுகிறது. ஏழைகளின் துயரங்களையும் சமூகத்தின் உண்மைகளையும் மறந்து தனிப்பட்ட மகிழ்ச்சிக்குள் மூழ்கியிருக்கும் மனித மனநிலையை செக்காவ் விமர்சிக்கிறார். கதையின் முடிவில், “மனிதன் தனிப்பட்ட மகிழ்ச்சியில் மட்டும் வாழக்கூடாது; பிறரின் துயரத்தையும் உணர வேண்டும்” என்ற கருத்து ஆழமாக வெளிப்படுகிறது.
ஆயர் (The Bishop)
இந்தக் கதை உயர்ந்த மதப்பொறுப்பில் இருக்கும் ஒருவரின் தனிமையையும் உள்ளார்ந்த வெறுமையையும் சித்தரிக்கிறது. ஆயராகப் பணியாற்றும் பியோடர் அனைவராலும் மதிக்கப்படுகிறார். ஆனால் அவரது உள்ளத்தில் ஆழ்ந்த தனிமை நிலவுகிறது.
தன் சிறுவயது நினைவுகள், தாயின் அன்பு, எளிய வாழ்க்கை ஆகியவற்றை நினைத்து அவர் மனவேதனையில் ஆழ்கிறார். உடல்நலமும் மெதுவாகக் குறைகிறது. அவரைச் சுற்றி மக்கள் இருந்தாலும், உண்மையில் அவரைப் புரிந்துகொள்ள யாரும் இல்லை. இறுதியில் நோயால் அவர் மரணமடைகிறார்.
இந்தக் கதை புகழும் பதவியும் மனிதனுக்கு உள்ளார்ந்த அமைதியை அளிக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. வாழ்க்கையின் இறுதியில் மனிதன் தேடுவது அன்பும் நெருக்கமும்தான் என்பதையும் செக்காவ் மென்மையாக வெளிப்படுத்துகிறார்.
செக்காவின் கதைகளின் சிறப்பு அவற்றின் எளிமையாகும். அவர் கதைகளில் பெரிய நிகழ்வுகளை உருவாக்காமல், சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை இயல்பாகக் காட்டினார். ஆனால் அந்த எளிய நிகழ்வுகளுக்குள் ஆழமான மனிதவாழ்வின் உண்மைகளையும் தத்துவ சிந்தனைகளையும் நுட்பமாகப் பதித்தார். அதனால்தான் அவரது படைப்புகள் இன்றும் உலக இலக்கியத்தில் நிலையான மதிப்பைப் பெற்றுள்ளன.
வாழ்க்கைச் சித்திரங்கள்
பந்தயம், The Bet (1889 ) மனித வாழ்க்கையில் பணத்தைவிட அறிவும் ஆன்மீகப் புரிதலும் தான் உன்னதம் என உணர்த்துகிறது; நாயுடன் ஒரு பெண், The Lady with the Dog (1899) சமூகக் கட்டுப்பாடு. மனித மனதில் புதைந்திருக்கும் உண்மையான காதல், திருமணம் இதனுடாக வெளிப்படும் வாழ்வுதான் கதைக் களம் வார்டு எண் 6, (1892) அதிகாரமும் அலட்சியமும் மனிதநேயமின்மையும் சமூகத்தை ஒரு பைத்தியசாலையாக மாற்றுகின்றன என்ற கடுமையான விமர்சனமாக அமைகிறது;
ஒரு அதிகாரியின் மரணம், The Death of a Government Clerk (1883) அதிகார அடக்குமுறையால் ஏற்பட்ட அச்சமும் தாழ்வு மனப்பான்மையும் மனிதனை உளவியல் ரீதியாக எப்படிக் கொல்கின்றன என்பதைப் பகடியுடன் சித்தரிக்கிறது. இக்கதை தமிழ்ச்சூழலில் தும்மல் கதை என்று பலரால் மேடைகளில் சொல்லப்பட்டது ; சாமீலியன், The Chameleon (1884) சட்டமும் நீதியும் அதிகாரத்திற்கு ஏற்ப மாறும் போலித்தனத்தைக் கிண்டலாக அதே வேளை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது, துயரம், Grief (1886) தன்னுடைய துயரத்தைப் பகிர யாருமில்லாத ஒரு மனிதனின் ஆழ்ந்த தனிமையைச் காட்சிப்படுத்திக் காட்டுகிறது; மாணவன், The Student (1894) நம்பிக்கையும் ஆன்மீகச்சிந்தனையும் வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் என்பதை உணர்த்துகிறது; துயரமான கதை, A Dreary Story (1889) முதுமை, நோய், வாழ்க்கை மீதான விரக்தி ஆகியவற்றால் உருவாகும் மன வெறுமையை விவரிக்கிறது; ஒரு நகைச்சுவை, A Joke (1886) நகைச்சுவைக்காகச் சொல்லப்படுபவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கும் வெளிப்படாத மற்றோர் உணர்ச்சியைக் காட்டுகிறது; தூக்கமற்ற இரவு, A Sleepless Night / Insomnia (1888) மனச்சுமையும் குற்ற உணர்ச்சியும் மனிதனை எவ்வாறு வாட்டுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது; அஞ்சல் அலுவலர் The Postmaster, (1895) ஒரு எளிய மனிதனின் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் அமைதியான தியாகத்தை எடுத்துரைக்கிறது;
வாழ்வில் ஒரு நாள் (A Day in the Life) ஒரு நாளிலேயே மனித வாழ்க்கையின் முழு அர்த்தமும் அடங்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது; புல்லாங்குழல் (The Pipe / The Reed Pipe) கலை மனித மனத்தை ஆழமாகத் தொடும் சக்தி கொண்டது என்பதைக் கூறுகிறது; மனைவி, The Wife (1895) திருமண உறவுகளில் உள்ள உணர்ச்சி, இடைவெளி, ஆதிக்கப் போக்கு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது; மகிழ்ச்சி Joy, (1886) சந்தோஷத்தின் மறுபக்கத்தில் இருக்கும் வெறுமையைப் பகடியாகச் சொல்கிறது; அதிர்ச்சி (Shock) எதிர்பாராத நிகழ்வுகள் மனித மனநிலையை எவ்வாறு சிதைக்கின்றன என்பதைச் சொல்கிறது; பழைய வீடு (An Old House) கடந்த கால நினைவுகளையும் மாற்றத்தை ஏற்க மறுக்கும் மனித மனதையும் பிரதிபலிக்கிறது ஒரு மழைக்கால இரவு (A Rainy Night) இயற்கையும் மனித மன உணர்வுகளும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை நுட்பமாக வெளிப்படுத்துகிறது.
உள்ளத்தோடு உரையாடும் மௌன அரங்குகள்
செக்காவின் நாடகங்கள் நவீன நாடக வரலாற்றில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தின. தி சீகல், அங்கிள் வான்யா, திரீ சிஸ்டர்ஸ், தி செர்ரி ஆர்ச்சர்ட் ஆகிய நாடகங்கள் பாரம்பரிய நாடக மரபிற்கு மாறாக இருந்தன. நாடகத்தின் உச்சக்கட்ட நிகழ்வுகளுக்குப் பதிலாக பார்வையாளர்களுடன் உரையாடல்கள், மௌனம் என மாற்று நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டன. நாடகக் கதையாடலில் முக்கிய நிகழ்வுகள் அரங்கிற்கு வெளியே நிகழ, கதாபாத்திரங்களின் அசைவுகள் நின்றவுடன் அரங்கிற்கும் பார்வையாளர்களுக்கம் இடையே சிக்கிக்கொண்டவர்களாகக் காட்டப்படுகின்றனர். இவ்வகை நாடக வடிவம் வாழ்க்கையை ஒரு குறியீடாகக் காட்டுகிறது அதாவது, வாழ்வு என்பது ஒழுங்கான அரங்க கட்டமைப்பைப் கொண்டதல்ல என்ற செக்காவின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
மௌன உரையாடல்கள்
கடற்பறவை (The Seagull 1896) கலை, காதல், தோல்வி, பொறாமை ஆகியவை மனித மனத்தை எவ்வாறெல்லாம் சிதைக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது; மாமா வான்யா, Uncle Vanya (1899) அர்த்தமற்றதாக உணரப்படும் வாழ்க்கையும் திரும்பப் பெற முடியாத காலமும் மனிதனை எவ்வாறு வாட்டுகின்றன என்பதைச் சொல்கிறது; மூன்று சகோதரிகள், Three Sisters (1901) அடைய முடியாத கனவுகளும் யதார்த்த வாழ்க்கையின் கட்டுப்பாடுகளும் இடையிலான மோதலை ஆழமாகக் காட்டுகிறது; செர்ரிப் பழத்தோட்டம், The Cherry Orchard 1904) பழைய நிலவுடமைச் சமூக வாழ்க்கை முறையின் வீழ்ச்சியும் புதிய சமூக மாற்றங்களை ஏற்க மறுக்கும் மனித மனநிலையும் குறியீடாக (symbolically) வெளிப்படுத்துகிறது.
இந்த நான்கு நாடகங்களிலும் பெரிய சம்பவங்களை விட எளிய நிகழ்வுகள், மன உரையாடல்கள், மனித உறவுகளின் நுணுக்கங்கள் மூலம் வாழ்க்கையின் ஆழ்ந்த துயரமும் வெறுமையும் செக்காவால் சித்தரிக்கப்படுகின்றன. இதனால் அவர் நவீன நாடகத்தின் முன்னோடி எனப் போற்றப்படுகிறார்.
செக்காவின் படைப்புகளில் சில கருப்பொருள்கள் தொடர்ந்து வெளிப்படுகின்றன,. அதில் முக்கியமானது தடுமாற்றம், உறுதி மற்றும் தேக்கம் (stagnation). மாற்றத்தைக் கனவுகாணும் கதாபாத்திரங்கள் பயம், பழக்கம், தயக்கம் ஆகியவற்றால் அசையாமல் நிற்கின்றனர். திரீ சிஸ்டர்ஸ் போன்ற நாடகங்களில் எதிர்கால ஆசைகள் காலப்போக்கில் வெறுமையாக மாறுகின்றன.
தனிமை செக்காவின் எழுத்துகளில் முக்கியமான கருப்பொருள். குடும்பத்தினராலும் நண்பர்களாலும் சூழப்பட்டிருந்தாலும், கதாபாத்திரங்கள் ஆழமான உள்ளார்ந்த தனிமையை அனுபவிக்கின்றனர். உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலை அவர்களை மேலும் தனிமைப்படுத்துகிறது. செக்காவ் திட்டமிட்ட சில செயல்களின் விளைவுகளைவிட அலட்சியத்தின் விளைவுகளையே அதிகம் கவனிக்கிறார். நமது செயலற்ற தன்மையே பல துயரங்களுக்குக் காரணமாகிறது என்பது அவரது எண்ணம்.
செக்காவின் மொழிநடை தெளிவானதும் சில இடங்களில் சிக்கலானதும் ஆகும். அலங்காரச் சொற்களையும் மிகைப்படுத்திய வருணனைகளையும் அவர் தவிர்க்கிறார். எளிய சொற்கள் மூலம் ஆழமான அர்த்தங்களைச் சொல்லும் திறன் அவரது எழுத்தின் தனிச்சிறப்பு. வாசகர்களின் அறிவையும் உணர்ச்சியையும் அவர் நம்புகிறார். எனவே எல்லாவற்றையும் நேரடியாக விளக்காமல், சிறு குறிப்புகள் மூலம் அல்லது சொல்லாமல் விட்டுச்செல்வதன் மூலம் அர்த்தத்தை உருவாக்கிவிடுகிறார்,
அவரது எடுத்துரைப்பு உத்திகளில் ஒன்றாக உள்அர்த்தம் - அதாவது, சொல்லாமல் சொல்லல் (subtext) விளங்குகிறது. கதைகளிலும் நாடகங்களிலும் முக்கியமானவை பெரும்பாலும் சொல்லப்படாமலே விடப்படுகின்றன.
சின்னச் சின்ன விசயங்களுக்கு செக்காவ் அளிக்கும் முக்கியத்துவமும் அவரது எழுத்தின் தனிச்சிறப்பாகும். ஒரு சிறு பொருள், ஒரு சைகை, ஒரு இயற்கைக் காட்சி முழு உளவியல் நிலையையும் வெளிப்படுத்தக்கூடும். மனித நடத்தையைப் பற்றிய அவரது மருத்துவப் பயிற்சி இந்தக் கூர்மையான பார்வைக்குத் துணைபுரிந்தது எனலாம். ஒரு மருத்துவர் நோயாளியிடம் குறைகாணாமல் நோய்க்கான காரணங்களைக் கூர்மையாக ஆராய்ந்து கண்டறிவது போல செக்காவும் மனிதரைப் புறநிலையில் மதிப்பீடு செய்யாமல் காரண காரிங்களைத் திறந்த மனதுடன் ஆராய்கிறார்.
செக்காவ் வாழ்ந்த போது அவரது படைப்புகள் ஒரு கலவையான விமர்சனங்களைப் பெற்றன. சிலர் அவரை நெகிழ்ச்சியற்றவர், நம்பிக்கையற்றவர் என விமர்சித்தனர். தெளிவான தீர்வுகளை வழங்காததையும் வாழ்க்கைநெறிகளைத் தவிர்த்ததையும் குற்றம் சாட்டினர். ஆனால் காலப்போக்கில் இந்தக் கணிப்புகள் மாறின. இன்று செக்காவின் அணுகுமுறையும் தெளிவற்ற தன்மையும் கலை நேர்மையின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன.
இன்றைய இலக்கிய ஆய்வுகளில் செக்காவ் சிறுகதை வடிவத்தைக் கைக்கொண்டவர்களில் உச்சமான கலைஞராகவும் நவீன நாடகவடித்தின் அடித்தளமாகவும் மதிக்கப்படுகிறார். அவரது தாக்கம் ரஷ்ய எல்லைகளைத் தாண்டி உலகளாவியதாக விரிந்துள்ளது. கதை அமைப்பு, கதாபாத்திர வளர்ச்சி, நாடக வடிவம் ஆகியவற்றில் அவர் செய்த புதுமைகள் இன்றும் தாக்கத்தைச் செலுத்துகின்றன. பெரும் நிகழ்வுகளோ உறுதியான தீர்ப்புகளோ இல்லாமலேயே இலக்கியம் ஆழமான உணர்ச்சித் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை செக்காவ் நிரூபித்தார் எனலாம்.
ஆன்டன் செக்காவின் எழுத்துகள் மனித வாழ்வை கருணையுடனும் நேர்மையுடனும் கலைக் கட்டுக்கோப்புடனுடனும் வெளிப்படுத்துகின்றன. சமூகம் மாற்றம் கொண்ட காலத்தில் வாழ்ந்த அவர், தன் காலத்தின் வாழ்வையும், பதற்றங்களையும், நிறைவேறாத கனவுகளையும் பதிவு செய்தார். அதே சமயம், எல்லாக் காலங்களுக்கும் பொருந்தக்கூடிய மனிதவாழ்வின் அனுபவங்களையும் வடிவமைத்தார். கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்ய மறுத்த அவரது நிலைப்பாடு, மென்மையான அணுகுமுறை, மொழிநடை, உண்மையை முதன்மைப்படுத்தும் கலைநோக்கம் ஆகியவை அவரது எழுத்துகள் காலம் கடந்தும் நிலைக்கும் தன்மைகொண்டு விடுகின்றன. செக்காவ் வாசகர்களுக்கு வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று ஒருபோதும் சொல்லுவதில்லை; வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை நுணுக்கமாகக் காணும் அனுபவத்தைத் தருகிறார் . இதன் மூலம் அவர் ரஷ்ய இலக்கியத்தில் மட்டுமல்ல, உலக இலக்கிய மரபிலும் நிலையான தனித்த இடத்தைப் பெற்றுள்ளார்.
ஆன்டன் செக்காவ் 1860ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தார். அவர் பிறந்த ஊர் தகன்ரோக். அவரது தந்தை ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தினார். தாயார் அன்பானவர். செக்காவுக்குப் பல சகோதரர்கள் இருந்தனர். குடும்பம் ஏழ்மையில் வாழ்ந்தது. சிறுவயதிலிருந்தே அவர் கஷ்டங்களை அனுபவித்தார். பள்ளிக்குச் சென்றபின் கடையிலும் வேலை செய்ய வேண்டியிருந்தது. அவரது தந்தை மிகவும் கடுமையானவர். பின்னர் குடும்பம் கடன் பிரச்சினையால் மாஸ்கோ நகரத்திற்குக் குடிபெயர்ந்தது. ஆனால் செக்காவ் மட்டும் தனது படிப்பை முடிக்க ஊரிலேயே தங்கினார். பின்னர் அவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். படித்துக்கொண்டிருந்தபோதே குடும்பத்திற்காக உழைத்தார். மருத்துவரான பிறகு ஏழை மக்களுக்கு உதவி செய்தார். பலருக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார்.
அவரது வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வாக சகாலின் தீவுப் பயணம் கருதப்படுகிறது. அந்தத் தீவு கைதிகள் வாழும் இடமாக இருந்தது. அங்கே மக்கள் மிகவும் துன்பத்தில் வாழ்கிறார்கள் என்று அவர் கேள்விப்பட்டார். அதனால் அவரே நேரில் சென்று பார்க்க முடிவு செய்தார்.
உடல்நலம் சரியில்லாத நிலையிலும் அவர் நீண்ட தூரம் பயணம் செய்தார். குதிரைவண்டி, ரயில், படகு ஆகியவற்றில் பல நாட்கள் பயணம் செய்து சகாலின் தீவை அடைந்தார். அங்கே கைதிகள் மிகவும் மோசமான சூழலில் வாழ்ந்தனர். பெண்களும் குழந்தைகளும் கூட துயரத்தில் இருந்தனர்.
ஒரு நாள் சிறையில் இருந்த ஒரு சிறுவனை அவர் பார்த்தார். அந்தக் குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் பெற்றோருடன் அங்கே வாழ்ந்தது. அந்தச் சிறுவனின் சோகமான முகம் செக்காவை மிகவும் பாதித்தது. இந்தப் பயணத்திற்குப் பிறகு மனிதர்களின் துயரத்தை அவர் இன்னும் ஆழமாக உணர்ந்தார்.
செக்காவுக்குக் காசநோய் இருந்தது. பின்னர் சிகிச்சைக்காக ஜெர்மனிக்குச் சென்றார். 1904ஆம் ஆண்டு அவர் காலமானார். எளிமையும் மனித அன்பும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தவராக அவர் நினைவுகூரப்படுகிறார்.
- பாரதிபாலன்