ஏடு தூக்கிப் பள்ளியில்

இன்று பயிலும் சிறுவரே

நாடு காக்கும் தலைவராய்

நாளை விளங்கப் போகிறார்

-         அழ. வள்ளியப்பா

“இன்று பாடநூல்களுடன் பள்ளிக்குச் சென்று படிக்கிற சிறார்கள்தான் நாளை இந்த நாட்டையே காக்கிற தலைவர்களாக விளங்கப் போகிறார்கள் என்கிறார், புகழ்பெற்ற இந்தத் குழந்தைக் கவிஞர்.kids playingசிறார்கள் நல்ல பழக்கத்துக்கு உட்பட்டு, நல்ல சூழலிலே வளர்ந்தால்தான், வருங்காலச் சமுதாயம் மேன்மையுறும்.

எனவே, சிறார்கள் பள்ளிக்குச் சென்று படிக்கத் தொடங்கும் போதே பாடநூல்களுடன், பிற வாழ்வியல் நூல்களையும் வாசித்துப் பண்பட்டு வளர வேண்டும். அவ்வாறு சிறார்கள் வாசிக்க வேண்டிய நூல்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

முதலில் பாவலர் கருமலைப் பழம் நீ எழுதியுள்ள நத்தை மாமா என்னும் குழந்தைப் பாடல்கள் நூலைப் பார்ப்போம். பெரியவர்களுக்கான இலக்கியங்களை மட்டுமின்றி குழந்தைகளுக்கும் சிறுகதை, கட்டுரை, கவிதை, குறுங்கவிதைகளை எழுதி வருகிறவர் இவர்.

“அதோ ஓடி வருகிறாள் / அழகு தங்கை வருகிறாள்” என்பவை ‘என் தங்கை’ எனும் தலைப்பிலான பாடலின் வரிகள்.

அண்ணன் ஒரு சிறுவன். அவனைக் கண்டதும் அவனுடைய தங்கை பாசத்துடன் ஓடி வருகிறாள். அவனுடைய தங்கை அழகான தங்கை. இப்போது சொல்கிறான்.

“என்னைத் தேடி வருகிறாள், என்ன கேட்க வருகிறாள்?” தன்னைக் கண்டதும் ஓடி வருகிற தங்கை தன்னிடம் ஏதோ கேட்க வருகிறாள் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறான். இப்படி தொடங்கி பதினாறு வரிகளில் நிறைவுறுகிறது - இந்தப் பாடல்.

“புத்தகங்கள் போதி மரங்கள் / வித்தகராய் நம்மை மாற்றும்” உள்ளிட்ட வரிகளைக் கொண்ட பாடல் ஏன் வாசிக்க வேண்டும் என்று இதமாக உரைக்கிறது.

இவ்வாறாக, குட்டிக் குட்டிப் பாடல்களை வாசித்துப் பாடி மகிழலாம்.

அடுத்து, வித்தை செய்யும் நத்தை – சிறார் கதைகள் (வெளியீடு: நெஸ்லிங் புக்ஸ்; விலை ரூ.85/-). இந்த நூல் கன்னிக்கோவில் இராஜா எழுதியது. இவர் சிறார் இலக்கியத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

குருவி சொன்ன ரகசியம், தூண்டிலில் மாட்டாத மீன்கள் உள்ளிட்ட எட்டு சின்ன கதைகளைக் கொண்டது இந்த நூல்.

“மத்தவங்க சுதந்திரத்தில் தலையிடுவது அநியாயம்னு சொல்ற மக்கள்தான், நமக்கு ஆபத்தைத் தராங்க” என முழங்கும் ஒரு குருவி அணில்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூட்டம் போடுகிறது. எல்லாக் குருவிகளும் அலைந்து திரிந்து பாம்புகளிடம் உதவிகேட்க அந்தப் பாம்புகள் வந்து மனிதர்களிடம் இருந்து அணில்களை எப்படி காப்பாற்றுகின்றன என்றொரு கதை. இவ்வாறு ஒவ்வொரு கதையிலும் நல்ல கருத்துகள் எளிமையாகக் கூறப்பட்டுள்ளன. பேரெழுத்துகளுடன், அழகிய வரைபடங்களுடன் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விரும்பிப் படிப்பர்.

அழ. வள்ளியப்பா விருது பெற்ற எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய நூல், சுடர் முகம் காட்டு (வெளியீடு: அறிவுப் பதிப்பகம்; விலை.ரு.95/-) என்பது.

சங்கத் தமிழ் நூலைப் படி, பாரதிதாசன் ஆத்திசூடி, அனைவரும் உறவினர், உள்ளிட்ட 12 தலைப்புகளில் சின்ன சின்ன பாடங்கள் எழுதப்பட்டுள்ளன. சிறார்கள் இந்தப் பாடங்களைப் படித்தால், பண்புடன் வாழ்வதற்குக் கற்றுக் கொள்வதுடன், நல்ல மொழிப் பயிற்சியையும் பெற முடியும். ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள சொல்லும் பொருளும், வினாக்கள், பயிற்சிகள் ஆகியன மாணவர்களைச் செதுக்கும்.

வீரச் சிறுமி முலன் (வெளியீடு: அறிவுப் பதிப்பகம்; விலை.ரு.65/-) என்னும் சீனதேசத்துக் கதை. இதை சிறார்களுக்கு எளிய தமிழில் அளித்திருக்கிறவர் முனைவர் ஜெயந்தி நாகராஜன். நெடுங்காலத்துக்கு முன்பு சீன இராணுவத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்ட நெருக்கடியான சூழல். முலன் என்னும் சிறுமி ஆண் வேடமிட்டு இராணுவத்தில் இணைந்து எதிரிகளுடன் போராடுகிறாள். இந்தக் கதைச் சூழல் வாசித்துச் சுவைக்கத் தகுந்தது.  அத்துடன், பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமல்லர்; வீரம் நிறைந்தவர்களும் கூட என்றும் சுட்டிக்காட்டுகிறது – இந்தக் கதை. அழகிய படங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது – இந்த நூல்.

சிறார்கள் படிக்க வேண்டிய நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார் அண்டனூர் சுரா. நாவலின் பெயர்: டம் டும் வகுப்பறை (வெளியீடு: நெஸ்லிங் புக்ஸ்; விலை ரூ.85). “வானவில்லைத் தகரத்தால் அடித்து நிறுத்தி வைத்ததைப் போலிருந்தது அப்பள்ளியின் நுழைவு வாயில். நீர்ச்சத்துக் குறைபாட்டால் வரும் பித்த வெடிப்புகளைப் போல தகரத்தின் விளிம்புகள் வெடித்திருந்தன” – இவ்வாறு மழைக்கால வானத்தையும் உடல்நோயையும் உவமைகளாகச் சுட்டித்தான் இந்த நாவல் வாகர்களுக்கு நுழைவாயிலைத் திறக்கிறது.

தமிழாசிரியர் விடுப்பு எடுத்த நாளில், தமிழ் வகுப்பு லீடர். இங்கிலீஷ் வகுப்பு லீடர், அறிவியல் வகுப்பு லீடர், என வகுப்பு லீடர்கள் எல்லோரும், நான்தான் இன்று வகுப்புக்குப் பொறுப்பு என்று கூறி ஆரவாரம் செய்கின்றனர். அறிவியல் வகுப்பு, கணித வகுப்பிலும் முறையே சூத்திரங்களும், கணக்குகளுமாக மிகுந்த அரட்டைகளுடன் பாடம் நடத்தப்படுகிறது. முழுக்க முழுக்க குதூகலமான பள்ளியறைகள் படம்பிடித்து, இந்நாவலில் காட்டப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் இந்த நாவலை வாசித்து சிரிக்கலாம்; சிரித்துக்கொண்டே கல்வி கற்பிக்கலாம். நாவலில் பொருத்தமான படங்கள் இடம்பெற்றுள்ளன.

இங்கே நாம் பார்த்த நூல்கள் ஐந்தும் வெவ்வேறு தன்மையுடையவை. பாடல்கள், சிறுகதைகள், இன்னும் கற்று ஆழமாக சங்கத் தமிழ்ப் பாடல் உள்ளிட்ட பேரிலக்கியங்களைப் பாடமாக்கித் தரும் நூல், பெண்ணின் வீரத்தைச் சுட்டிக் காட்டி, மாணவப் பருவத்திலேயே சிறுமியரைத் தட்டியெழுப்பும் சீனதேசத்துக் கதை, இறுதியில் வகுப்பறையில் நடக்கும் மகிழ்க் கூடச்சல்கள் எனப் பல்சுவையுடைய நூல்கள் இவை. இந்த நூல்களை வாசிக்கும் மாணவர்கள், தமிழ்மொழியைக் கற்றுக்கொள்வதோடு பண்பாடு, வீரம், சொல்லாடும் திறன் போன்றவற்றையும் கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு கற்கிறவர்கள் நாளைய தலைவர்களாக உருப்பெறுவர் என்பது உறுதி!

ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைகளுள் ஒன்றான ‘அனான்சி சிலந்தியும் அறிவுப் பானையும்’ என்னும் கதையை இங்கு பார்ப்போம்.

ஒரு காலத்தில் உலகின் எல்லா அறிவும் வானத்தில் ஒரு மண்பானையில் அடக்கி வைக்கப்பட்டு, அந்தப் பானையைப் பாதுகாக்கும் பொறுப்பு அனான்சி என்னும் புத்திசாலி சிலந்திக்குக் கொடுக்கப்பட்டது. சுயநலக்காரனான அனான்சி ‘இந்த அறிவு எல்லாருக்கும் பரவினால், எனக்கு என்ன இருக்கிறது?’ என்று யோசித்தான். அந்தப் பானையைத் தன் வயிற்றின் முன்பக்கத்தில் இறுக்கிக் கட்டிக் கொண்டு, ஓர் உயரமான மரத்தின் உச்சியில் மறைத்து வைக்க மரத்தில் ஏறினான். முன்பக்கம் பானை இருந்தால், அவனால் அதைச் சரியாகப் பிடிக்க முடிய இயல வில்லை; சறுக்கி சறுக்கி விழுந்தான்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய சிறிய மகன் நான்குவே என்பான், ‘அப்பா, பானையை உங்கள் முதுகின் பின்பக்கம் கட்டிப் பாருங்கள்; அப்போது உங்கள் கைகள் சுதந்திரமாக மரத்தைப் பிடிக்கும்' என்றான். அனான்சி அப்படியே செய்தான். அவன் எளிதில் மரத்தின் உச்சியை அடைந்தான். அவனுக்கு ஓர் உண்மை புரிந்தது. ‘நான்தான் உலகத்தின் எல்லா அறிவையும் வைத்திருக்கிறேன். ஆனால், மரத்தில் ஏறும் விஷயத்தைப் பார்த்தால், என் சிறு மகன் என்னைவிட அதிக அளவு அறிவாளியாக இருக்கிறானே…’ என்று உணர்ந்து மிகவும் வெட்கமடைந்த அனான்சி அந்தப் பானையைக் கீழே தூக்கியெறிந்துவிட்டான். பானை உடைந்து, உள்ளே இருந்த அறிவு முழுவதும் காற்றில் பறக்க உலகெங்கும் பரவியது.

கதை சொல்லும் நீதி: உண்மையான அறிவு என்பது ஒருவருக்கும் மட்டும் சொந்தமானது அல்ல. அதைப் பகிர்ந்து கொள்ளும் போதுதான் அது மதிப்பு வாய்ந்ததாகிறது.

- நவமணி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.