(தமிழர்கள் வேலை வாய்ப்புகளைப் பறிக்கச் சதி!)
திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரை ரயில்வே கோட்டம் இணைக்கப்பட்டதால் ரயில்வே துறையில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா ரயில்வேதுறை 16 ரயில்வே பிரிவுகளை உள்ளடக்கியது. இத்துறையில் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இதில் தெற்கு ரயில்வேயும் ஒன்று. இதில் சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் என 5 கோட்டங்கள் அடங்கும்.
இதில் மட்டும் சுமார் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இத்துறைக்கு தேவையான டேஸ்ஷன் மாஸ்டர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், இன்ஜின் டிரைவர்கள் உள்ளிட்ட புதிய ஆட்கள் தேர்வு செய்வதற்காக ரயில்வே தேர்வு வாரியங்கள் உள்ளன. தெற்கு ரயில்வே சென்னை, திருவனந்தபுரம் என 2 தேர்வு வாரியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை தேர்வு வாரியத்தில் சென்னை, திருச்சி, மதுரை ரயில்வே கோட்டங்கள் இருந்தன. திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தில் திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்கள் உள்ளன.
சென்னை, திருச்சி மற்றும் மதுரைக் கோட்டங்களில் ஏற்படும் காலி பணி இடங்களை சென்னை தேர்வு வாரியம் நிரப்பி வந்தது. திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் ஏற்படும் காலி இடங்களை திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியம் நிரப்பியது. இந்நிலையில் மதுரை கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்திலிருந்து பிரித்து திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் ரயில்வே வாரியம் இணைத்து விட்டது. கடந்த ஜூலை 18-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. ரயில்வே வாரியத்தின் இந்த முடிவு தமிழக இளைஞர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மதுரை கோட்டத்தில் வேலை வாய்ப்பு பறி போகும் அபாயம் உள்ளது. தமிழ் அதிகாரிகளை கொண்டுள்ள சென்னை ரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரை கோட்டம் இருந்திருந்தால் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். மொழியிலும் பிரச்சினை இருக்காது. மலையாள அதிகாரிகளை கொண்டுள்ள தேர்வு வாரியத்தில் தமிழக இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. திருவனந்தபுரம் கோட்டத்தில் கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய ஊர்கள் மட்டுமே உள்ளன.
மதுரை கோட்டத்தில் ரயில்வே பணிக்கு தேர்வு எழுத வேண்டிய தமிழர்கள், திருவனந்தபுரத்திற்கு சென்று தேர்வு எழுத வேண்டியுள்ளதால் வீண் அலைக்கழிப்பு ஏற்படுகிறது. மத்தியிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்துவார்களா? பாலக்காடு ரயில்வே கோட்டத்திலிருந்து - ஜோலார்பேட்டையிலிருந்து கோவை வரையுள்ள ரயில் நிலையங்களை விடுவிக்க, கழகம் தொடர்ந்து போராடி இப்போதுதான் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அடுத்த பேரிடி விழுந்துள்ளது.
மழையை நிறுத்த பூஜை செய்யும் முதல்வர்
கடந்த மாதம் வரை மத்திய பிரதேச மாநிலத்தில் கடும் வறட்சி. பருவ மழை வறட்சியைப் போக்க, முதல்வர் சிவராஜ் சவுகான், தன்னுடைய அரசு இல்லத்தில் பார்ப்பன புரோகிதர்களை அழைத்து பிரமாண்டமான யாகம் ஒன்றை நடத்தினார். ‘யாகத்தின் பயனாக நல்ல மழை பெய்யும்’ என்று உற்சாகமாக சொன்னார் அவர்.
ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு மழை ஊற்றி, மாநிலம் முழுக்க வெள்ளம். 80 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்தார்கள். ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம். மத்திய அரசிடம் சிவராஜ் சவுகான் கேட்கும் வெள்ள நிவாரணத்தின் அளவு நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கிறது. காரணம் மழை நின்றபாடில்லை.
அப்புறம்தான் அவருக்கு உரைத்தது. ‘ஏற்கனவே கடவுளிடம் மழை கேட்டு வேண்டினோமே! நிறுத்தச் சொல்லி இன்னும் வேண்டவில்லையே. அதனால் தான் மழை தொடர்கிறதோ’ என்று “பகுத்தறிவோடு” சிந்தித்த அவர், இப்போது திரும்பவும் இன்னொரு பூஜை நடத்தி, மழையை நிறுத்துமாறு வேண்டி இருக்கிறாராம்! இப்படிப்பட்ட ஆசாமிகள் முதலமைச்சர் என்றால், நாடு உருப்பட்ட மாதிரிதான்!
அரசியலில் குதிக்கும் ‘விநாயகன்’
பால் குடிக்கிற விநாயகரைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். பா. ஜனதா விநாயகர், காங்கிரஸ் விநாயகர், தெலுங்கு தேச விநாயகர்... இவர்களைத் தெரியுமா?
இந்த கூத்து எல்லாம் ஆந்திரப் பிரதேசத்தில்தான் நடக்கிறது. தில்சுக் நகர், மல்கா பேட் பகுதிகளில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு விநாயகர் சிலைகளை அமைத்தன. இங்கு கட்சிக் கொடிகள் கட்டப்பட்ட பந்தலுக்குள் விநாயகர் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார்.
சில விநாயகர்களுக்கு கட்சி கொடியின் கலரில் கிரீடத்தை சூட்டியிருக்கின்றனர். இதில் காங்கிரஸ், பா. ஜனதா கட்சிகளுக்கு இடையேதான் முக்கிய போட்டி. காங்கிரஸ் ஒரு சிலையை வைத்தால், பா.ஜனதாவினர் இரண்டு சிலைகளை வைக்கின்றனர். இது ஒருபுறமிருக்க,அகில பாரதிய விசுவ பரிசத் அமைப்பு, உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் 16 விநாயகர் சிலைகளை வைத்துள்ளது. இனி விநாயகனையே வேட்பாளராகவும், வாக்காளராகவும் மாற்றினால்கூட வாய்ப்பில்லை.