மத சம்மந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கி கண்டித்து வருவதில் வைதீகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அனேகருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாப்போல் மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும் பார்ப்பனர்களும் நம்மைப் பற்றி இம்மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரசாரமும் செய்து வருவதினால் அவசரப்பட்டு மிகவும் விபரீத கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப்பட்டவர்களும் “பழக்கம்” “பெரியோர் போன வழி” என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாக கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை.

periyar 668தன வைசிய நாடு என்கிற நாட்டுக் கோட்டை செட்டியார்கள் நாட்டில் நாம் பிரசாரத்திற்கு சென்றிருந்த காலையிலும்கூட நெற்குப்பை என்ற ஒரு ஊரிலுள்ள வைதீகச் செட்டியார்மார்களை இப்படித்தான் ஒரு பார்ப்பனன் சொல்லி ஏமாற்றிவிட்டான். அதாவது ராமசாமி நாயக்கர் என்கிற ஒருவன் வந்து நாட்டையே பாழாக்குகிறான், கலி அவனால்தான் வெளியாகிறது, நாஸ்திகம் பேசுகிறான், அவன் பேச்சைக் கேட்டால் சிறுபிள்ளைகள் எல்லாம் கெட்டுப் போவார்கள், பிறகு கோயில் போய்விடும், மடம் போய்விடும், விபூதி போய் விடும் என்பதான பல விஷயங்களைச் சொல்லி ஏய்த்து விட்டான். இந்த வார்த்தைகளை நம்பி அங்குள்ள சில கனவான்கள் கூட்டம் கூட்ட இடம் கொடுக்காமலும், கூட்டம் சேர்ப்பதற்காக செய்து வைத்து இருந்த சில ஆடம்பரங்களையெல்லாம் விரட்டி அடித்தும் கூட்டத்திற்கு யாரையும் வரவொட்டாமலும் செய்து விட்டார். பிறகு நாமும் நம்முடன் கூட வந்திருந்த சில நண்பர்களும் கடைத்தெருவில் யாரையும் எதிர்பாராமல் ஒரு காப்பிக் கடையில் போட்டிருந்த பெஞ்சு பலகையை எடுத்து வந்து வீதியில் போட்டு அதன் பேரில் நின்று பேச ஆரம்பித்தோம்.

முதலில் தெருவில் போகிறவர் வருகிறவர்கள் சற்று நின்று என்ன என்பதாக கேட்க ஆரம்பித்தார்கள். பிறகு அப்படியே உட்கார்ந்தார்கள். இரண்டொரு விஷயங்களைக் கேட்டு அவர்கள், கை தட்டி சிரிக்கவும் அடிக்கடி இம்மாதிரி செய்யவும், மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கனவான்கள் ஒவ்வொருவராய் வந்தார்கள். பிறகு பெண்களும் தாராளமாய் வந்தார்கள். கூட்டம் யாரையும் அறியாமல் தானாகவே பெரிய கூட்டமாய் விட்டது. பிறகு எங்களுக்குத் தெரியாமலே ஒருவர் விளக்குத் தருவித்து விட்டார். இரவு 9 1/2 மணி வரையில் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து நாங்கள் திரும்பி ஊருக்குப் புறப்படுகையில் ஒரு செட்டியார் பெரியவர் நல்ல வைதீகத் தோற்றத்துடன் இருந்தவர், எங்கள் மோட்டார் வண்டிக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டு, “அய்யா பெரியவரே சில பார்ப்பனர்கள் எங்களிடம் தங்களைப் பற்றி தப்பும் தவறும் சொல்லி ஏமாற்றி விட்டார்கள் . நாங்கள் தங்களைத் தப்பாய் நினைத்து விட்டோம். அதற்காக வருந்துகிறோம். இன்று இரவு இங்கேயே இருந்து நாளைக்கும் ஒரு உபன்யாசம் செய்து விட்டுப் போக வேண்டும். நானே எல்லா ஏற்பாடும் செய்கிறேன். இன்னும் பல பேர்கள் வந்து கேட்க வேண்டும்” என்று எவ்வளவோ தூரம் வேண்டிக் கொண்டார். எங்களுக்கு மறுநாள் வேறிடம் ஏற்பாடாயிருந்ததால் அவர் விருப்பத்திற்கு இணங்க முடியாமல் போய்விட்டோம்.

புதுவயலிலும் இம்மாதிரியாகவே செய்தார்கள். பிறகு அவர்களும் இப்படியே கூட்ட முடிவில் வந்தனோபசாரம் செய்யும்போது எடுத்துச் சொன்னார். கடையூரிலும் இது போலவே நடந்தது. கடைசியாக வாலிபர்களிடம் மாத்திரமல்லாமல் பெரியோர்களிடமும் மிகவும் திருப்தியுடன் வந்து சேர்ந்தோம். எனவே விஷயங்களை பகுத்தறிய சோம்பல் பட்டுக் கொண்டு தகுந்த அளவு மூளையை செலவு செய்வதில் சிக்கனம் காட்டியும் அவசரப்பட்டு ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்களே அல்லாமல் உண்மையை அறியமாட்டேன் என்கிறார்கள். இதற்காக நாம் இவர்கள் விஷயத்தில் பரிதாபப்படுவதல்லாமல் வேறு ஒன்றும் செய்ய முடியாததற்கு வருந்துகிறோம். இம்மாதிரி கூட்டத்திற்குள் இது சமயமும் வைதீகக் கூட்டத்தில் மிகுதியும் எங்கு பார்த்தாலும் ‘கலிவந்து விட்டான்,’ ‘மதம் போச்சுது,’ ‘கடவுள் போச்சுது’ ‘புராணங்கள் போச்சுது’, ‘நாஸ்திகமாச்சுது’ என்கிற வார்த்தைகளே அடிபடுகிறதாக சேதிகள் வந்து கொண்டிருக்கிறது. இது மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் கட்சியில் பாரம்பரியமாக இருந்து வருவதாக பெருமை பாராட்டிக் கொள்பவர்களும் இப்படியே தான் பேசுவதாக தெரிகிறது. அதாவது “பார்ப்பனர்கள் அக்கிரமத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லட்டும், சர்க்கார் விஷயத்திலும் காங்கிரஸ் விஷயத்திலும் உள்ள புரட்டுகளையும் சொல்லட்டும். நமக்கு அதைப்பற்றி நல்லது தான். ஆனால் மதத்தில் கை வைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்கிறதாகவே பேசுகிறார்களாம்.

மற்றொரு கூட்டத்தினிடையிலோவென்றால் பார்ப்பனர் மதம் புராணம் இந்த மாதிரி புரட்டுகளைக் கண்டிக்க வேண்டியது தான். ஆனால் காங்கிரசைக் கண்டித்து தேசீயத்தைக்கெடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று பேசிக் கொள்ளப்படுகிறது. இதற்கெல்லாம் நாம் என்ன செய்யக்கூடும்? அவரவர்கள் சபலமும் மூட பக்தியும் சுயநலமும் நம்மீது குற்றம் கூறச் செய்கிறதேயல்லாமல் வேறல்ல. எப்படிச் சில பேர்வழிகள் தங்கள் சுயநலத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் தேசத்தின் பேரால் ‘காங்கிரசையும்’,  ‘தேசீயத்தையும்’ உண்டாக்கி உபயோகித்துக் கொண்டார்களோ அது போலவே தான் சிலர் சுயநலத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் கடவுள் பேரால் மதத்தையும் புராணங்களையும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள் . மனிதனுக்கு கடவுளும் மதமும் புராணமும் எதற்காக இருக்க வேண்டியது என்பதே நமது மக்களுக்கு ஏறக்குறைய முழுதுமே தெரியாது என்றே சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

மனிதன் ஜீவன்களிடத்தில் கூடுமானவரை அன்பாகவும் மனித சமூகம் வாழ்க்கையில் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ளுவதற்காகவே கடவுளை மனிதன் உணர வேண்டியவனாக இருக்கிறான். அது போலவே அவ்வன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்ற முறைகளைக் கற்பிக்கவே மதம் என்பதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவனாக இருக்கிறான். அப்படிக்கு இருக்க கடவுளுக்காகவும் மதத்திற்காகவும் மனிதன் இருக்கிறான் என்பதாக மக்களுக்கு உணர்த்தப்பட்டு மக்கள் எல்லோரும் கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற முயன்று விடுகிறார்கள் . இதனால் கடவுளைக் காப்பாற்றுவதற்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? கடவுள் நம்மால் காப்பாற்றக் கூடியவராயிருந்தால் அவருக்கு கடவுள் தன்மையேது என்பதாக யாராவது உணருகிறார்களா? நாம் கடவுளைக் காப்பாற்றுவது என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது! எவனோ தான் பிழைப்பதற்காக கடவுளைக் காப்பாற்றுங்கள், கடவுளைக் காப்பாற்றுவது என்பது எனக்கு கொடுத்து என்னையும் என் பிள்ளை குட்டிகளையும் காப்பாற்றுவதுதான் என்று சொல்லுவானானால் அதை நாம் நம்பிக் கொள்ளுவதா என்றுதான் கேட்கின்றோம்.

நம்மைக் கடவுள் காப்பாற்றுவதா நாம் கடவுளைக் காப்பாற்றுவதா என்பதே நமக்குப் புரியவில்லை. வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் கடவுளுக்கு பயப்பட வேண்டுமே அல்லாமல் கடவுளைக் காப்பாற்றுவது, அதற்கு சோறு போடுவது, கல்யாணம் செய்வது, பிள்ளைக்குட்டிகளை பெறச் செய்வது என்பது போன்றவைகளெல்லாம் செய்வது எதற்கு? என்றுதான் கேட்கிறோம். இம்மாதிரி செய்பவர்கள் கடவுளுக்கு பயப்படுகிறார்களா என்பதையும் கவனித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். திருடுகிறவன், கொள்ளையடிக்கிறவன், கொலை செய்கிறவன், மற்றும் வாழ்க்கையில் எத்தனையோ அக்கிரமங்கள் கூடா ஒழுக்கங்கள் செய்கிறவர் ஆகிய எல்லோரும் கடவுளைக் காப்பாற்றுவதாக, அபிஷேகம் செய்வதாக, திருடி, பதில் அக்கிரமம் செய்து தப்பு வழிகளில் சம்பாதித்த திரவியத்தில் பங்கு தருவதாக, கோயில் கட்டுவதாக, மேளம் சதிர் கச்சேரி வைப்பதாக, தாசிகள் 10 பேரை நியமிப்பதாக சொல்லி அப்படியே செய்கிறான் என்றே வைத்துக் கொள்ளுவோம். இதனால் செய்தவனுக்காவது உலகத்துக்காவது என்ன பிரயோஜனம் என்று தான் கேட்கிறோம்.

கடவுள் என்பதையே மக்களுக்கு சரியானபடி உணர்த்தாமல் சில சுயநலக்காரர்கள் போலி பக்தியை உண்டாக்கி எல்லோரையும் நாஸ்திகர்களாக்கி விட்டார்கள் . கடவுள் தன்மையின் உண்மையையும் கடவுளிடத்தில் பயத்தையும் மக்களுக்கு உண்டாக்கி இருந்தால் நமது நாட்டில் இவ்வளவு அக்கிரமம் நடைபெறுமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இம் மாதிரியான பொய் பக்தி, புரட்டு பக்தி, வேஷ பக்தி, மூட பக்தி ஆகிய நாஸ்திகத் தன்மைகள் நமது நாட்டை விட்டு ஒழிந்தாலொழிய நாட்டில் அன்பும் சமத்துவமும் ஒழுக்கமும் ஏற்படப் போவதில்லை என்பதே நமது அபிப்பிராயம்.

இது போலவே மதம் என்கிற விஷயங்களும் நமக்கு பெரிய ஆபத்தாகவே இருக்கிறது. மதம் என்பதை ஒழுக்கத்திற்கான கொள்கைகள் என்பதாக எண்ணாமல் சில சடங்குகள் என்பதாகவே கற்பிக்கப்பட்டிருக்கிறது. மதத்தில் தீவிரப் பற்றுள்ள எவனாவது பொய் சொல்லாமலிருக்கிறானா, அக்கிரமம் செய்யாமலிருக்கிறானா என்பதைக் கவனித்தால் பெரிய பெரிய வைதீக வேஷக்காரர்களின் யோக்கியதை எல்லாம் விளங்கிவிடும். நமக்கு நேரில் அனேக சாஸ்திரியார்களின் யோக்கியதையும், பாகவதர்களின் யோக்கியதையும், சன்னியாசிகளின் யோக்கியதையும், தினமும் மூன்று வேளை குளித்து ஆறு வேளை கோயிலுக்கு போய் வாரத்தில் 7 நாள் விரதமிருக்கும் பெரியோர்கள் , ஆசாரக்காரர்கள் , பக்திவான்கள் என்கிறவர்கள் யோக்கியதையும் நன்றாகத் தெரியும். கடவுள் பக்தியும் மதமும் ஏன் இவர்களை இப்படி நடத்துகிறது என்று ஒவ்வொருவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பொதுவாக இவைகள் ஒரு புறமிருந்தாலும் நமக்கு கற்பிக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம் யாராய் இருக்கிறார்கள் . பிறப்பு, இறப்பு முதலியவைகளில் ஈடுபடுத்தி மனித வாழ்க்கையில் உள்ள எல்லா காரியங்களும் ஒன்றுகூட விலக்கில்லாமல் அதற்கு கற்பித்து நம்ம தலையில் போடப்பட்டிருக்கிறதேயல்லாமல் உண்மைத் தத்துவத்துடன் கூடிய கடவுள் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். வயோதிகர்கள் இதற்கு இடங் கொடுக்க மாட்டார்களானாலும் வாலிபர்கள் இதை உணர்ந்து பரிசுத்த வாழ்க்கையில் ஈடுபட வேண்டும்.

அதுபோலவே நமது மதம் என்பது என்னமாயிருக்கிறது. இதைப்பற்றி பலதடவை எழுதி இருக்கிறோம். மறுசமயம் எழுதுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 18.09.1927)

Pin It