ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதற்கு பண்பாட்டுக் காவலர்கள், நாட்டு மாடுகளைக் காப்போர் புதிய, புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொன்னாலும், உண்மையான காரணம் என்பது வேறொன்றாக இருக்கிறது. பண்பாடு, நாட்டு மாடு, A1-A2 பால் என்பதை எல்லாம் துணைக் காரணங்களாகச் சேர்த்துக் கொள்ளும் மதுரை மக்கள், முதன்மைக் காரணமாக சொல்வது “நோய் நொடி இல்லாமல் எங்க ஊர் மக்கள் வாழணும்னா எங்க ஊர் சாமிக்கு இரத்தப் படையல் கொடுக்கணும். அதுக்குத்தான் ஜல்லிக்கட்டு”

ஜல்லிக்கட்டு வேறு; ஏறுதழுவுதல் வேறு

ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றைச் சேர்த்து, முல்லைக்கலியில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏறுதழுவுதல்தான் இன்றைய ஜல்லிக்கட்டு என்று தமிழகத்தின் 99 சதவீத மக்கள் நம்புகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான விவாதங்களில் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் பலரும் இவ்வாறே கூறியதால், அதுதான் உண்மை போலும் என்று நானும் நம்பி வந்தேன். ஆனால், படிக்க படிக்கத்தான் ஜல்லிக்கட்டு வேறு, ஏறுதழுவுதல் வேறு என்ற உண்மை தெரிய வருகிறது.

manjuvirattu cave drawing

(கோத்தகிரி அருகில் உள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சி)

ஏறுதழுவுதலின் நோக்கமும், விளையாடும் முறையும் வேறு. முல்லை நிலத்து மக்களின் முக்கிய தொழில்களில் ஒன்று ஆநிரை மேய்த்தல். அதாவது மாடு மேய்த்தல். மாடுதான் அவர்களின் செல்வம். அந்த செல்வத்தை அடக்கி ஆளும் வல்லமை படைத்தவனுக்கு தங்கள் வீட்டுப் பெண்ணை மணமுடித்துத் தருவதே, ஏறுதழுவுதல் விளையாட்டின் நோக்கமாக இருந்துள்ளது.

இதனை,

“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” (காளையின் கொம்புக்கு அஞ்சுபவனை அடுத்த பிறவியிலும் ஆயர் மகள் தழுவமாட்டாள்)

என்ற வரி மூலமும்,

“ஓஓ! இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர்” (ஆயர் மகளைத் அடைய வேண்டும் என்றால் ஏறு தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அவளது அழகிய மேனியைத் தீண்ட முடியாது)

என்ற வரிமூலமும் அறியலாம்.

ஏறுதழுவுதல் எப்படி நடைபெற்றது என்றால், தொழுவம் போன்ற இடத்தில் பலரது காளைகளை இறக்கியிருப்பார்கள். அந்தந்த காளைக்குரிய பெண்கள் மாடத்தில் அமர்ந்திருப்பர். இப்போது ஆயர் குலத்து இளைஞர்கள் தொழுவத்திற்குள் இறங்கி, தாங்கள் மணமுடிக்க விரும்பும் பெண்ணுக்குரிய காளைகளை அடக்குவர். அந்தக் காட்சி எப்படி இருந்தது என்றால் ஒரே இடத்தில் சிங்கம், குதிரை, யானை, முதலை ஆகியவற்றை அடைத்து வைத்ததுபோல் இருந்தது என்றும், பலரை மாடுகள் குத்திக் கிழித்து, அந்த இடமே துரியோதனனை வதம் செய்த போர்க்களம் போல் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இதனை,

கொலைவன் சூடிய குழவித் திங்கள்போல்

வளையுபு மலிந்த கோடணி சேயும்

பொருமுரண் முன்பிற் புகலேறு பலபெய்

தரிமாவும் பரிமாவுங் களிறுங் கராமும்

பெருமலை விடரகத் தொருங்குடன் குழீஇப்

படு மழை யாடும் வரையகம் போலுங்

கொடிநறை சூழ்ந்த தொழூஉ

என்ற வரிகள் வாயிலாகவும்,

பாடேற்றுக் கொள்பவர் பாய்ந்துமே லூர்பவர்

கோடிடை நுழைபவர் கோட்சாற்று பவரொடு

புரிபுமேற் சென்ற நூற்றுவர் மடங்க

வரிபுனை வல்வி லைவ ரட்ட

பொருகளம் போலுந் தொழூஉ

என்ற வரிகள் வாயிலாகவும் அறியலாம். மாட்டின் கொம்பில் சல்லிக்காசுகளைக் கட்டி விடுவது அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருள் தருவது  எல்லாம் ஏறுதழுவுதலில் கிடையாது.

ஜல்லிக்கட்டு விளையாட்டு முறை இதற்கு நேர் எதிரானது. இங்கு தொழுவமோ, ஒரே நேரத்தில் பல மாடுகளோ களமிறக்கப்படுவது கிடையாது. வாடிவாசல் என்ற வேறொரு முறை உள்ளது. ஒரு நேரத்தில் ஒரு காளை மட்டுமே களமிறக்கப்படும். அதை யார் வேண்டுமானாலும் அடக்கலாம். அடக்குபவர்களுக்கு பணமோ, பொருளோ பரிசு அளிக்கப்படும்.

lassoing bulls

(ஏறுதழுவதலுக்கான தொல்லியல் சான்றுகள்)

பழந்தமிழகத்தில் இருந்த விளையாட்டுகள் மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல்கள் தான் என்றும், வழக்கத்தில் இருந்த இந்த விளையாட்டுகளை மாற்றி, ஜல்லிக்கட்டு விளையாட்டு நாயக்க மன்னர்கள் காலத்தில் ஜமீன்தார்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், அதற்கும் பழந்தமிழகத்து விளையாட்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வரலாற்று அறிஞர் காந்திராஜனும், பேராசிரியர் சந்திரசேகரனும் உறுதிபடத் தெரிவிக்கின்றனர் (http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Bull-chasing-an-ancient-Tamil-tradition/article15144245.ece). மாட்டை அடக்கும் ஏறுதழுவுதல், மாட்டை விரட்டி ஓடும் மஞ்சுவிரட்டு ஆகிய விளையாட்டுகளுக்குத்தான் தொல்லியல் சான்றுகள் கிடைத்திருக்கின்றன என்றும், ஜல்லிக்கட்டுக்கு எந்த தொல்லியல் சான்றுகளும் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சல்லிக்கட்டு என்ற வார்த்தையோ, இதன் விளையாட்டு முறையோ சங்க இலக்கியங்களில் எந்தவொரு இடத்திலும் குறிப்படவில்லை என்பதன் மூலமும் இதனை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

‘இரண்டு பேரிடமும் கத்தி இருக்கிறது, இரண்டு பேரும் மனிதர்களைத் தான் கிழிக்கிறார்கள்’ என்று ஒரு கொலைகாரனையும், ஒரு மருத்துவரையும் சமப்படுத்துவது எப்படியோ, அப்படித்தான் ஜல்லிக்கட்டையும், ஏறுதழுவலையும் சமப்படுத்துவது.

ஜல்லிக்கட்டில் இருக்கும் மூடநம்பிக்கை

ஏறுதழுவுதல் நடத்தப்படுவதற்கான நோக்கமும், ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான நோக்கமும் கூட முற்றிலும் வேறு வேறுதான்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு முழுக்க முழுக்க மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இதனை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும், ஜல்லிக்கட்டு நடத்துபவர்களும் பல இடங்களில் பேசியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கப் பொதுச் செயலாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மதுரையைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளருமான சு.வெங்கடேசன்,

“ஜல்லிக்கட்டினுடைய மூலாதாரமான நோக்கம் ஒரு வீரனின் ரத்தம் விவசாய நிலத்தில் சிந்தப்பட வேண்டும் என்பதுதான். நீங்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு போனால் தெரியும். முதல் காளையான ஊரின் கோவில் காளையை அவிழ்த்து விடுவதற்கு முன்பு அந்த மக்கள் சாமியிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், “இந்த வருசம் அதிகமா குத்து விழணும் சாமி” என்பதுதான். நிறைய காளைகள் பிடிபட வேண்டும் என்று சாமி கும்பிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டின் பிரதான நோக்கம் காளையை அணைவதல்ல; வீரனை அடையாளப்படுத்துவதுதான்.

தனது நிலத்தில் வீரனின் ரத்தம் சிந்தப்படுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்ற விவசாய சமூகத்தின் ஆதி நம்பிக்கையே இதன் அடிப்படை. கோவில்களில் நடக்கும் வேள்வியின் எச்சங்களை கொண்டு வந்து நிலத்தில் தூவுவதோ அல்லது கோவில் தீர்த்தங்களை கொண்டு வந்து நிலத்தில் தெளிப்பதோ தான் விவசாயம் செழிப்பதற்கான வழி என்ற வைதீக நம்பிக்கைக்கு மாற்றாக, மனிதனின் ரத்தத்துளிகளை உரமாக்கும் உழைக்கும் மக்களின் நம்பிக்கை வெளிப்பாடே இது.

அதனால்தான் ஜல்லிக்கட்டு வைதீகக் கோவில்களின் வழிபாட்டு விழாக்களுக்காக நடத்தப்படுவது இல்லை. உழைக்கும் மக்களின் நாட்டார் வழிபாட்டு மரபின் பகுதியாகவே நடத்தப்படுகிறது. (ஜனவரி 14, 2016 - தீக்கதிர் நாளிதழ்)

என்று கூறுகிறார்.

இடதுசாரிகள் பலருக்கும் நாட்டார் வழிபாடு மீது ஒரு மயக்கம் இருக்கிறது. அதனால்தான், மனிதர்கள் இரத்தம் சிந்தினால் விவசாயம் செழிக்கும் என்பதையும், மாடுபிடி வீரர்கள் அதிகளவு குத்துப்பட வேண்டும் என்பதையும் எவ்வித விமர்சனமுமின்றி ஏற்றுக் கொள்கின்றனர். பெரியாரை ‘வறட்டு நாத்திகவாதி’ என்று விமர்சித்த இடதுசாரிகளில் பலர், நாட்டார் வழிபாட்டில் இருக்கும் மூடப்பழக்க வழக்கங்களை எந்த அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

சு.வெங்கடேசன் இந்த மூடப்பழக்க வழக்கத்தை விவசாயத்தோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பேசுகிறார். ஆனால், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் ஊர்மக்கள் வேறொரு காரணத்திற்காகவும் இப்போட்டி நடத்தப்படுகிறது என்று சொல்கின்றனர்.

அலங்காநல்லூர் ஊர் முக்கியஸ்தரான ராஜுநாயுடுவுக்கு நம்மிடம் பேசும்முன்பே சாமி வந்துவிட, முனியாண்டி கோயில் முன்பு சாமி ஆடியபடியே, “முனியாண்டி சொல்லுறேன்... அந்த கோர்ட் தடை போடாதுடா... தை மாதம் கண்டிப்பா ஜல்லி நடக்கும். நீயும் வந்து பார்த்துட்டுப் போடா” என ஆக்ரோஷமாக அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்து விட்டார். சிறிது நேரம் கழித்து சாமியாட்டம் நின்ற பின்பு, “முனியாண்டிக்காகத்தான் ஜல்லி கட்டுறோம். ஜல்லி கட்டாவிட்டால் மக்கள் நோய்நொடி வந்து செத்துப் போவாங்க. இத எல்லாரும் புரிஞ்சு ஜல்லிகட்ட ஒத்துழைக்கணும்” என மென்மையாகக் கோரிக்கை வைத்தார். (ஜூனியர் விகடன் - 30 ஆகஸ்ட், 2006)

ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்த பாலாஜி இவ்வாறு சொல்கிறார்:

“ஜல்லிக்கட்டு முனியாண்டி, முத்தாலம்மன், காளியம்மன் சாமிக்காக நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அறநிலையத்துறை சார்பாக போலீஸ் அனுமதி வாங்கி, அரசு விழாவாகத்தான் நடக்கிறது.” (ஜூனியர் விகடன் – 30 ஆகஸ்ட், 2006)

என்றும்,

 “ஏற்கெனவே ஒரு தடவை நிதி நெருக்கடியில எங்க ஊரு ஜல்லிக்கட்ட நடத்த முடியாம விட்டிருக்காங்க. அது தெய்வ குத்தமாகிப் போனதால ஊரே வாந்தி, பேதினு வந்து அல்லோலகல்லோலபட்டுப் போச்சு. உடனே ஊர்கூடி முடிவெடுத்து, ஜல்லிக்கட்ட நடத்தி முடிச்சு தெய்வத்தோட உக்ரத்த தனிச்சிருக்காங்க. அதனால இப்ப தடைபோட்டா, மறுபடியும் ஊருக்குப் பேரழிவு வந்துரும்னு பெரியவங்க பயப்படுறாங்க.” (ஜூனியர் விகடன் - 07 ஜனவரி, 2007)

என்றும் சொல்கிறார்.

jallikattu people

ஜல்லிக்கட்டுக்கு சமாதானம் பேச வந்த அதிகாரிகளிடம்,

“ராசாக்கமாருக காலத்துலேர்ந்து தங்கு தடையில்லாம சல்லிக்கட்டு நடந்துட்டு வருது. அத நடத்துனா மாட்டுக்கு நோவும், மனுசனுக்கு வலிக்கும்னு சொல்லித் தடை போட முடியாதுலா! அப்புறம் எங்க ஊரு கோட்டை முனிக்கும், காளியம்மனுக்கும் கெட்ட கோவம் வந்துரும். சல்லிக்கட்டு மட்டும் நடக்கலேன்னா காலரா, வாந்தி பேதினு கொள்ளை நோய்ங்க வந்து ஆளுங்களை அள்ளிட்டுப் போயிரும். சூதானமா இருந்துக்கங்கப்பு!”(ஆனந்த விகடன் - 31, ஜனவரி, 2007)

என்று அலங்காநல்லூர் மக்கள் கூறியிருக்கிறார்கள்.

தமிழ்ச்செல்வி என்பவர்,

“எங்களுக்கு என்ன பயம்னா இது சாமிக்காக நடத்துற விளையாட்டு. அது தடைப்பட்டதால், சாமி குத்தத்துக்கு எங்க ஊரு ஆளாகுமோன்னு பயமா இருக்கு.” (ஜூனியர் விகடன் – 21 ஜனவரி, 2015)

என்கிறார்.

இந்த ஆண்டு (12 ஜனவரி, 2017) நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதத்திலும் இதே கருத்து எதிரொளித்தது. “ஜல்லிக்கட்டு நடைபெறாததால் உங்கள் மதுரை மண்ணுக்கு என்ன இழப்பு ஏற்பட்டது?” என்று நியூஸ் 7 ஊடகவியலாளர் நெல்சன் சேவியர், ஷாலினி என்ற மதுரைப் பெண்ணிடம் கேட்கிறார் (https://youtu.be/vmbA1BmrPrM?t=47m44s). அதற்கு ஷாலினி அளித்த பதில்:

“ஊரே செழிப்பு இல்லாமல் போய்விட்டது. சின்ன சின்ன வயசுப் பசங்க என்ன காரணம் என்று தெரியாமல் திடீர் திடீரென்று இறந்துவிடுகிறார்கள். அந்தக்  காலத்துலே ஜல்லிக்கட்டு ஏன் வந்தது என்றால், ஊரில் பெரிய வியாதி வந்ததாம். அதை சரி பண்ணுவதற்கு, இந்த மண்ணில் ரத்தம் சிந்த வேண்டும் என்று நம்பினார்களாம். அதற்காக ஜல்லிக்கட்டைக்  கொண்டு வந்தார்கள்”

என்று கூறுகிறார்.

“ஷாலினி பேசுவதை அரசியல் கருத்தாகக் கொள்ள முடியாது” என்று நெல்சன் சேவியர் கடந்து செல்கிறார். அதாவது, ஜல்லிக்கட்டுக்கு முட்டுக் கொடுக்க 2008 ஆம் ஆண்டு தடைக்குப்  பிறகு உண்டாக்கப்பட்ட காரணங்களான நாட்டு மாடுகளைக் காப்பது, பன்னாட்டு சதியை முறியடிப்பது, விவசாயத்தைக் காப்பது ஆகியவற்றை மட்டுமே பேசுவோம் என்கிறார்.

ஊடகங்களின் போக்கு என்னவாக இருக்கிறது என்றால், ஜல்லிக்கட்டு ஆதரவை வலுவிலக்கச் செய்யும் கருத்துக்கள் சிறிய அளவில் இருந்தால்கூட – அதுவும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் இருந்து வந்தாலும்கூட – அதைப் பொருட்படுத்தக்கூடாது என்று விரும்புகிறார்கள். அந்தளவிற்கு ஜல்லிக்கட்டைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை வந்த பின்புதான், ஊடகங்களிடம் இந்தப் போக்கு அதிகரித்திருக்கிறது. அதற்கு முன்பு, ஜல்லிக்கட்டு விளையாட்டின் பலவிதப்  பரிமாணங்களைப் பதிவு செய்த விகடன் குழும இதழ்கள், தற்போது ‘ஜல்லிக்கட்டு ஆதரவு’ என்ற ஒற்றைப் பரிமாணத்தில் மட்டுமே செய்திகளைத் தருகிறது. விற்பனை அல்லது  டி.ஆர்.பி. ரேட்டிங் பாதிக்கக்கூடாது என்பதற்காக உண்மையை மறைப்பதற்கு ஊடகங்கள் முயல்கின்றன.

ஜல்லிக்கட்டில்மேட்ச் பிக்சிங்

கிரிக்கெட்டில்தான் சூதாட்டம் இருக்கிறது என்பது இல்லை. ‘தமிழர்களின் பண்பாட்டு’ என்று சொல்லப்படுகிற ஜல்லிக்கட்டிலும் சூதாட்டம் இருக்கிறது.

புகழ்பெற்ற மாடுபிடி வீரர்களில் ஒருவரான ஸ்ரீதர் கூறுகிறார்.

“நல்லா பேர்போன மாட்டை (பல ஜல்லிக்கட்டுகளில் பிடிபடாத காளை) ஒருத்தர் வெச்சிருக்கார்னா, அதைப் புடிக்கக் கூடாதுங்கிறதுக்காகவே என்னை மாதிரி பெரிய ஆளுகளுக்கு மொத்தமா பணம் பேரம் பேச ஆரம்பிச்சுடுவாங்க. அப்பிடித்தேன் இதுக்குள்ள சூது வந்துச்சு. பத்தாயிரம், இருபதாயிரம் கூட குடுப்பாங்க. ஒரு மாட்டுக்குப் பணம் வாங்கிட்டா, வாடிவாசல்ல (ஜல்லிக்கட்டுக்காக மாடுகளை அவிழ்த்துவிடும் இடம்) இருந்து அந்த மாடு வெளியே வந்தா அதைப் புடிக்க மாட்டாங்க. சும்மா புடிக்கிறாப்ல பாவ்லா காட்டிட்டு ‘சூ’ காட்டி விட்டுருவாங்க. வாங்கின பணத்த மொத்தமா பிரிச்சுக்கிருவாங்க.

இப்பிடி ரெண்டு ஜல்லிக்கட்டுல அந்த மாடு பிடிபடலேனா, அதுக்கு வெலை ஒரு லட்சத்துக்கு மேல போயிரும். அதனாலதான் மாடு பிடிக்கறவங்களுக்குப் பணம் கொடுத்து மாட்டைப் பிடிக்கவிடாம செய்றாங்க. இப்படி மாட்டுக்குக் கிராக்கிய அதிகமாக்கிக்கிடுவாங்க. மாட்டை அதிக வெலைக்கு விக்கிறப்பவும் லம்பா ஒரு தொகையை என்னை மாதிரி மாடுபிடிக்காரங்களுக்குக் கொடுப்பாங்க.” (ஜூனியர் விகடன் - 15 ஜனவரி, 2006)

***

ஏறுதழுவலில் நோக்கம் பெண்ணைத் திருமணம் செய்வது. ஆனால், ஜல்லிக்கட்டின் நோக்கம் மாடுபிடி வீரர்களின் இரத்தத்தை மண்ணில் சிந்த வைப்பது. இப்போது  சொல்லுங்கள்… இரத்தம் சிந்துவதற்காகவே நடத்தப்படும் ஒரு விளையாட்டில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த முடியுமா?

ஊர் செழிக்கவும், கொள்ளை நோய்கள் தாக்கமால் இருக்கவும் அம்மனுக்குப் பொங்கல் வைப்பது போன்ற மூடப்பழக்க வழக்கத்தின் நீட்சிதான் ஜல்லிக்கட்டும். இது எப்படி பண்பாடாக முடியும்?

ஜல்லிக்கட்டு - பகுத்தறிவுக்கு ஒவ்வாத வன்முறை விளையாட்டு, இது நாயக்க மன்னர்கள் காலத்தில்தான் உருவானது. இதில்  சாதியாதிக்கம் இருக்கிறது, ஆணாதிக்கம் இருக்கிறது, மூடநம்பிக்கை இருக்கிறது, சூதாட்டம் கூட இருக்கிறது என்பதைத் தரவுகளுடன் முன்வைத்துள்ளோம். இனியும், பண்பாடு, நாட்டு மாடு என்ற அர்த்தமற்ற காரணங்களைச் சொல்லி, இந்த விளையாட்டைத் தூக்கிப் பிடிக்கத்தான் போகிறோமா?

- கீற்று நந்தன்