நிதி வங்கியின் கத்தைகளில்
புரளும்பொழுதும்
வரைவின் மகளிரை மெத்தைகளில்
புரட்டும்பொழுதும்;
குருதி வங்கியில் செந்திரவத்தைத்
தருவித்த வேளையிலும்;
அடவியிருளில் திசைகாட்டிய அரிய
கரிய மானுடத்தினிடத்திலும்;
பாலையில் தாகத்தைப் பஞ்சமர்
சோலைநீர் தணித்த வேளையும்;
காணாத சாதிபேதம்
கடவுளாய்த் தெரிந்திட்ட கணங்கள்
தேவையின் பசியாற்றியதால்
காணாத சாதிபேதம்?
அன்புசால் மானுட இனத்தில் -
குருதி ஓர் செங்குணமே எனினும்
வெம்பசி வேறுபாடில்லை எனினும்
நிலையிலா வுயிர் பொதுவே எனினும்
பிறப்பினிலே பேதமென்று
கற்பித்த கயமை சரியோ?
மனுநீதியிதுவெனப் பிதற்றிச்
சமனற்ற சாதிப் படிநிலை திணித்துச்
சுகங்காணுங் கருத்த மனக்கூட்டத்தின்
தீராப் பசியை
சுகங்கொள்ளாது சுகிக்கவொரு
சுவாமியோ சூரனோ
வரும் காலம் எதிர்ப்படுமோ?
எக்காலம் ஓயுமிவர்
எக்காளம்?
எக்கோளம் ஆளவரும்
இப் பூக்கோளம்
உயிர்ப்பெறும்?
சுகங்கொல் சாதி கொல்
சுகங்கொள் அன்புகொண்டு!
- அழகன் கருப்பண்ணன்