தேர்ந்த துவிபாஷி

கத கதையாம் காரணமாம் - ராஜ்ஜா கட்டுரைகள்

இதில் உள்ள ஆனந்தரங்கர் என்னும் வரலாற்றுப் பேழை என்று கட்டுரை ஆனந்த ரங்கர் பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியை (காரைக்கால், மாஹி, ஏனம், சந்திரநாகூர் உட்பட) ஆண்ட துய்ப்ளெக்ஸ் துரையிடம் துவிபாஷியாக (மொழிபெயர்ப்பாளராக) இருந்தவரைப் பற்றியதாகும். பா. ராஜ்ஜாவும் ஒரு சிறந்த துவிபாஷியாக தமிழ் இலக்கிய உலகத்திற்கு தன் பங்களிப்பை செய்து வருபவர். இக்கட்டுரையில் தென்படும் நகைச்சுவை அவரின் தனித்தன்மையாக இருக்கிறது. இலக்கிய இறுக்க மொழி தவிர்த்த எளிய நடையில் அவர் விஷயங்களைச் சொல்லும்போது நடையில் துள்ளல் மிளிர்கிறது. நகைச்சுவையில் இருக்கும் குத்தல் தனிப்பட்ட முறையிலான குத்தலாக இல்லாமல் கல்லறை இலக்கியத்தில் பொன்மொழிகள் மிளிர்கின்றன. கவிஞர்அலக்சாண்டர் புஷ்கின் ஒரு முத்தத்தினால் மரணம் அடைந்த வரலாறு திடுக்கிடச் செய்கிறது. பிரஞ்சுக்காரர்கள் தொலைத்த ‘பெதாங்க்’ விளையாட்டு இன்னும் புதுச்சேரியில்தான் புழக்கத்தில் இருக்கிறது. காட்டுப்பிராணிகளாக இருந்த நாய்கள் வீட்டுப் பிராணிகளான கதை விரிவாகச் சொல்லப்படுகிறது. மனைவியின் துன்புறுத்தலால் டால்ஸ்டாய் மரணம் புகைவண்டி நிலையத்தில் நிகழ்ந்த தகவலுக்கு எதிராக அவர் மனைவி சோபியா பெர்ஸ்சு அவரிடம் அனுபவித்த கஷ்டங்களை இன்னுமொரு கட்டுரை விவரிக்கிறது. போலந்து கவிஞர் ஷிம்போர்ஸ்காவோ, ஒரிய எழுத்தாளர் மனோஸ்தாஸோ பற்றி எழுதும்போது வியந்து போகிறார். புகையிலை உபயோகம் பற்றியோ, மூக்கு சளி தொல்லை பற்றியோ சொல்லும் கட்டுரைகளின் விவரங்கள் ஆச்சர்யத்துடன் படிக்கக் கிடைக்கிறது.

பெரும்பாலும் மொழிபெயர்ப்பாளராக அறிமுகமாகி நமக்குள் தெரியும் ராஜ்ஜா நல்ல நகைச்சுவையுடன் கட்டுரைகளைப் படைப்பதில் அவரின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டு கிறது. அவரின் ஆங்கில மொழிபெயர்ப்போ, தமிழுக்கு வரும் மொழிபெயர்ப்புகளோ அவை எளிமையாகச் சொல்லப்பட்ட விதத்தில் வெகுவாக சிலாகிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. ஸ்டெபான் ஸ்வெய்க்கின் ஓடிப்போனவன், யாரோ ஒருத்தியின் கடிதம் (இதில் இரண்டாவது ஒரு தமிழ்த் திரைப்படமாக தழுவலில் வந்திருக்கிறது) மிகச் சிறப்பானவை. புதுவையில் வசிக்கும் காரணத்தால் அந்த ‘பிரஞ்சு’ கலாச்சார சூழலை தன் படைப்புகளிலும் வெளிப்படுத்தியிருப்பவர். இக்கட்டுரைகள் மூலம் அவரின் உரைநடையின் இன்னுமொரு பரிமாணத்தையும் கண்டு கொள்ள முடிகிறது. தேர்ந்த இன்னுமொரு ‘துவிபாஷி’யின் 22 கட்டுரைகள் இதிலுள்ளன.

(ஆல்யா, விற்பனை : நிவேதிதா புத்தகப்பூங்கா, சென்னை, ரூ. 45)

 

அரவாணியக் கோட்பாட்டு உருவாக்கம்

இலா. வின்சென்ட்

‘பாம்பு தன் சட்டையை உரித்தெறிவது போல இந்த என் உடலை கழட்டி எறிய முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும். என் உணர்வுகள், என் கனவுகள், என் உயிர் - எப்படி மீட்கப் போகிறேன்?’ திருநங்கை வித்யாவின் குமுறல்.

ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் அரவாணிகளைப் பதிவு செய்துள்ளன. திவாகர நிகண்டு ‘பேடி இலக்கணம் பேசும் கலை’ என 16 வரிகளில் அரவாணிகளின் இலக்கணத்தை வரையறுக்கிறது. அவற்றை ஆய்ந்து திரட்டியதே ‘தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்’ நூல். இது ஒரு ஆய்வேடாக நின்று ஒடுக்கப்பட்ட அக்கூட்டத்துக்காக முழக்கமிடுகிறது. அதுவே இந்நூலின் தனித்துவம். நண்பர் முனிஷ் ஐந்து இயல்களாகப் பகுத்து தனது ஆய்வில் வெற்றி கண்டுள்ளார்.

இலக்கண ஆசிரியர்களுக்கு அரவாணிகளை எப்பாலினுள் அடக்குவது என்பதே சிக்கல். தொல்காப்பியர் பெண்தன்மை மிகுந்த பெண் அரவாணிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார். அவர்களைப் பெண்பாலினுள் சேர்க்கிறார். அதனால் பலர்பாலிலும் உயர்திணையிலும் அவர் கள் வாழ்கின்றனர். நன்னூலார் ஆண் பேடு, பேண் பேடு என இருவகை அரவாணிகளையும் பார்க்கிறார். இப்பேடுகள் உயர்திணை ஆயினும் அஃறிணையை ஒக்கும் என்கிறார். இதனால் இருதிணைக்கும் ஐம்பாலுக்கும் அவர்கள் பொதுவாகி விடுகின்றனர். ‘அறுவகை இலக்கணம்’ தவத்திரு. தண்டபாணி சுவாமிகள் இயற்றியது. அது ஃ எழுத்தை அலி எழுத்து என்றும், அஃது, இஃது, எஃது என்பன அலிப்பால் சுட்டென்றும் கூறுகிறது. அலிப்பாலை அஃறிணை யில் அடக்குகிறது. தொன்னூலும் அவர்களை அஃறிணையாய் இழிவுபடுத்துகிறது. இப்படி தொல்காப்பியர் காலத்தில் உயர்திணையாக இருந்த அரவாணிகள் பிற்காலத்தில் அஃறிணையாய் அவதிப்பட்டதை முனிஷ் சான்றுகளுடன் மெய்ப்பித்துள்ளார்.

அகநானூறு(206) அரவாணிகள் கூத்தாடியதையும் போருக்கு விலக்கப்பட்டதையும் கூறுகிறது. புறநானூறோ (28) உறுப்புஇல் பிண்டம், பேதைமை என வசைபாடுகிறது. வள்ளுவர் திறமையற்றவர்கள், கோழைகள் எனவும், நாலடியார் சபிக்கப்பட்டவர்கள் எனவும் ஒதுக்குகிறது. இவற்றைத் தக்க மேற்கோள்களுடன் ஆசிரியர் நிறுவுகிறார். சைவம், சிவபெருமானை ‘ஆண், பெண், அலி எனும் பெற்றியான்’ எனப் போற்றுகிறது. அர்த்தநாரீஸ்வரரை வழிபடுகிறது. திருவாய்மொழியோ ‘ஆணுமல்லன், பெண்ணுமல்லன், அலியுமல்லன்’ எனத் திருமால் வடிவத்தை விரித்துச் செல்கிறது. அரவான் களபலியில் கிருஷ்ணனின் மோகினி உருமாற்றம் அரவாணிகளை கண்ணனின் அவதாரமாக்கிற்று. இருப்பினும் சைவ, வைணவங்கள் சொல்வது அலிநேயமன்று; இறைநேயமே, அவை மானுடம் பாட மறுத்ததை ஆசிரியர் அழுத்தம் தராமல் நழுவ விட்டுள்ளார்.

மாதவியின் பதினொரு வகை ஆடல்களில் பேடி ஆடலும் ஒன்று. அக்காலத்தில் அரவாணிகள் ஆடும் தனிக்கூத்து இருந்துள்ளது. செங்குட்டுவன் ஆரிய அரசர்களோடு அழைத்து வந்த அரவாணிகள் ‘ஆரியப்பேடிகள்’ என அழைக்கப்பட்டனர். அரவாணிக ளுக்கு ‘நிர்வாணம் செய்தல்’ சடங்கு நிகழ்ந்துள்ளதை மணிமேகலை வாயிலாக நம்முள் வைத்துள்ளார். தற்காலத்தில், நிர்வாணம்செய்தல், அலி பட்டாபிஷேக விழா, மடி கட்டுதல், கூத்தாண்டவர் கோயில் விழா போன்றவற்றை விரிவாகத் தந்துள்ளார். அதோடு, தந்தா, கோத்தி, சண்டாசு, சொறுவோடு, பந்தி முதலான 55 சொற்களுக்குப் பொருள் விளக்கம் கூறுகிறார். கி.ராஜ நாராயணனின் ‘கோமதி’ சிறுகதை, சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ நாவல் ஆகியன அரவாணிகள் மீது அக்கறை காட்டுவதை ஆசிரியர் விளக்குகிறார்.

நா.காமராசன் கவிதை, செல்வகாந்தனின் ‘தவறிப் பிறந்து விட்டோம் அரவாணிகளாய்’, இன்குலாப் கவிதை, நாடகங்கள், திரைப்படங்கள், நாளிதழ்கள், பிற இதழ்கள் என அரவாணி களுக்காய்க் குரல் கொடுத்தவற்றை அடையாளம் காட்டுகிறார் முனிஷ். அரவாணிகளை அங்கீகரித்து, சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் அரவணைக்க இந்நூல் கரம் நீட்டுகிறது. இன்று சில உரிமைகளை அவர்கள் பெற்றிருப்பினும் தலித்தியம், பெண்ணியம் போல் அரவாணியம் என்றொரு கோட்பாடு தேவை என அது வலியுறுத்துகிறது. ‘தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்’ பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றால் நூற்பயன்மிகும். முனிஷ் அவர்களின் தேடல் பாராட்டுக்குரியது.

தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள் - வெ.முனிஷ். வெளியீடு : ஜெயம் பதிப்பகம் வடக்குத்தெரு, கொல்லவீரம்பட்டி, வில்லூர் அஞ்சல், மதுரை மாவட்டம். விலை ரூ. 50

 

உள்ளக் குமுறலின் வெடிப்பு

வளவ. துரையன்

மண்ணுக்குள் உயிர்ப்பு’, ‘கனவு மெய்ப்படும்’ ஆசிய நாவல்களைத் தொடர்ந்து வரும் எஸ்ஸார்சியின் மூன்றாவது நாவல்தான் “நெருப்புக்கு ஏது உறக்கம்”. அழகாக அட்டையில் ஓர் எரிமலை குமுறிக் கிளம்பும் காட்சி நூலுக்குப் பொருத்தமாக உள்ளது. எஸ்ஸார்சி மார்க்சியத்தில் பற்றும் நம்பிக்கையும் வைத்துக் கனவு காண்பவர். சாதி, இன, வர்க்க பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டுமென்ற தன் விழைவை இந்நாவலிலும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

காதலித்து மணம்புரிந்த பார்ப்பனப் பெண்ணுக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த ஆணுக்கும் பிறந்த பொறியியல் பட்டதாரியான ‘கொளஞ்சி’ தான் நாவலின் மையம். பெற்றோர் அமெரிக்காவில் தங்கிவிட கொளஞ்சி சொந்தக் கிராமமான தருமங்குடிக்கு வந்து அதைச் சீர்திருத்த முயன்று வெற்றி காண்கிறான். சில நல்லவர்களின் துணையுடன் பொதுச் சுடுகாட்டை ஏற்படுத்தி எல்லாரும் கலந்து ஒன்றாக வாழும் கிராமம் உருவாகிறது. ஆனால் சபாபதியின் உருவத்தில் ஆதிக்க சக்தி குறுக்கிடுகிறது. அரசியல்வாதியின் துணையுடன் தருமங்குடி கிராமமே நிலக்கரிச் சுரங்கத்திற்காக விலை பேசப்பட்டு அழிந்து போகிறது.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் பெறுவதும், செவ்வியான் கேடுறுவதும் வள்ளுவர் காலத்திலிருந்தே தொடர்வதை நாவல் மெய்ப்பிக்கிறது. ஆனால் “புதிய தருமாங்குடி உருவாகுதில்ல; அங்க போயி கடமை செய்வோம்” என்று ஒரு பாத்திரத்தைப் பேச வைத்துப் போராட்டம் தொடர்வதாய் எஸ்ஸார்சி ஆறுதல் அடைகிறார்.

கொளஞ்சிக்கு எல்லா ஊர்களையும் தந்தையும் பிறரும் காட்டும்போது சிலம்பின் நாடு கான்காதை நினைவுக்கு வருகிறது. எஸ்ஸார்சிக்குப் பெரிய தளம் கிடைப்பதால் வைத்தீஸ் வரன்கோயில் நாடி சோதிடம், சிதம்பர ரகசியம், வடலூரில் ஜோதி காட்டல், திருப்புன்கூரில் நந்திவிலகல் எல்லாவற்றிலும் தன் புதிய பார்வையை கொளஞ்சி வழியாய்க் காட்ட முடிகிறது.

உயர்ந்த சாதி என்று கருதிக் கொள்பவர்களில் பார்ப்பனர்கள் கூட தாழ்த்தப்பட்டவருடன் சமமாக இருக்க இறங்கி வருகிறார்கள். பிற சாதியினர் வர மறுக்கிறார்கள் என்பதும் நாவலில் உணர்த்தப்படுவது முக்கியமான அம்சம். இது உண்மையும் கூட.

சிலைகளைப் பற்றியும் நாய்களைப் பற்றியும் கூட நாவல் குறிப்பாகச் சில செய்திகளைக் கூறி முடிக்கிறது. சிலைகளுக்குப் போடப்படும் மாலைகள் காய்ந்து உதிர்ந்து கழுத்தில் அருவருப்பாய் தொங்குவதைக் காட்டும் எஸ்ஸார்சி அண்ணாமலைநகர் இராசேந்திரன் சிலையைக் காட்டி மொழிப்போரைப் பதிவு செய்கிறார். படுத்திருந்த சொறிநாய் சபாபதிப்பிள்ளை வந்தவுடன் எழுந்துபோய்விடுகிறது. அவர் போனவுடன் மீண்டும் வந்து படுத்துக் கொள்கிறது. ஒரே இடத்தில் இரு இழிபிறவிகள் இருக்க வேண்டாம் என்று நாவலாசிரியர் முடிவு செய்கிறார்.

பெரும்பாலும் சம்பவங்களைத் தன் கூற்றாக இல்லாமல் பாத்திரங்களின் உரையாடல் மூலமே கூறி நாவலை நகர்த்தும் வல்லமை பாராட்டுக்குரியது. பேச்சுநடையில் சில பத்திகளில் திடீரென இலக்கண நடை வருவது ஒரு நெருடல்தான். கடைசியில் “நிலக்கரி, கரண்டு, கார்கள், கரன்சிகள் தருமங்குடியில் புழங்குகின்றன. இதெல்லாம் இல்லையென்று யாருமே சொல்லவில்லை” என்று எஸ்ஸார்சி சொல்கிறார். பின் என்ன அங்கு இல்லை? சமத்துவம்தான் இல்லை. அதற்குப் போராட்டம் தொடரும் என்பதே நாவல் தரும் முடிவு. நன்கு அச்சிட்டுள்ள அலமேலு பதிப்பகத்துக்கும் பாராட்டுக்கள்.

நெருப்புக்கு ஏது உறக்கம் (நாவல்) - எஸ்ஸார்சி. வெளியீடு : அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி. பக்கங்கள் : 362, விலை : ரூ. 160

 

கவிஞர் சிற்பி : கவிதை வெளி

முல்லை ஆதவன்

கவிதை என்பது கனவு; மயக்கம்; போதை; மலர்ச்சி; கற்பனை; சிலிர்ப்பு; மகிழ்ச்சி; சோகம்; அறிவு; எல்லாம்தான்; சில வேளை குழந்தை போல நம்முடன் கண்ணாமூச்சி விளையாட்டு; சிலவேளை தோழன் போல தோள் மீது கைபோடும் தோழமை; சிலவேளை காதுக்குள் சற்றே சிணுங்கும் காதலியாய்; சிலவேளை நெஞ்சுக்குள் பிரமிப்பாய் வந்தமரும் இமயமாய்; சிலவேளை எல்லையற்று நெஞ்சக்குள் விரிந்தெழும் பரவெளியாய்; பனித்துளியாய்... கவிதையை எப்படித்தான் அடையாளம் காண்பது? எல்லா இடங்களிலும் உயிர்க்கும் கவிதை; எல்லா உயிர்ப்பிலும் கவிதை முளைக்கும். வார்த்தைகளை அறிந்தவர் கள், சொற்களை இலக்கணப்படி வனைந்து அழகாகத் தருபவர்கள். கருத்துக்களைச் செழுமையாகத் தருபவர்கள் எல்லோரும் மரியாதைக்குரியவர்கள்; அவர்கள் அறிஞர்கள்; ஆனால் கவிஞன் அல்ல; அது அவன் உயிர்த்தல்; கவிதை என்பது அவன் வாழ்தல்; கவிதை என்பது அவன் இருத்தல்; இருத்தலின் சத்தியம்; காலவெளிகளில் கனத்து நிலைக்கும் சத்தியம். கணியன் பூங்குன்றனாய், வள்ளுவனாய், கம்பனாய், ஆண்டாளாய், ஞானசம்பந்த ராய், பாரதியாய் காலவெளி கவிதையை அடையாளம் கண்டு கொண்டுள்ளது. இன்னும் இன்னும் எத்தனையோ பேர்! அவர்கள் தனிமனிதர்கள் அல்லர். காலத்தால் கண்டறியப்பட்ட கவிதையின் மொழிகள். அவ்வக்காலத்திற்கேற்ப அந்தந்த மொழியின் முகங்களை காலமே நிர்ணயித்துக் கொள்கிறது. அந்த வேர்வழி விழுவதில் இப்போது கவிஞர் சிற்பி. மகாகவி பாரதியின் உயிர்ப்பியக்கத்தை ஏந்தியபடி.

பாரதியின் சாயலைத் தழுவுவது என்பதே அற்புதமான விஷயம்! எல்லோராலும் முடியுமா அது? பாரதியின் நிழல் என்பதே கவிதையை மகுடம் சூட்டிக்கொண்ட மாதிரி. நெருங்கி நிற்பதுதானே _ எப்போதும் உடன் செல்வது தானே நிழலின் அர்த்தம்? கவிஞர் சிற்பி ஒரு தமிழ்ப் பேராசிரியர், நல்ல பேச்சாளர், இனிய நட்பாளர், கூர்மையான திறனாய்வாளர், நல்ல வழிகாட்டி, பண்பான மனிதர், ஓயாத உழைப்பாளி என்பதெல்லாம், அந்தத் தனி மனிதரைப் பாராட்டும் நல்ல சொற்கள்; ஆனால் அவரை ஒரு நல்ல கவிஞர் என்று குரலுயர்த்திச் சொல்வது என்பது தமிழை வாழ்த்துவது; தமிழ் வளத்தைச் செழிக்கச் செய்வது, தமிழ்வழியான உலக அறத்தை மேன்மைப்படுத்துவது என்று பொருள்.

இயற்கையின் அழகும், நிலவும், மலரும், கவிதைக்கு அற்புதமான விஷயங்கள் தாம். ஆனால் சகமனிதரின் துயரமும் கண்ணீரும், வேதனையும் அழுகையும் கவிதைக்குள் ஏற்கப் படும்போது தான் கவிதைக்கு உயிர் வருகிறது. ஒடுக்குமுறைகளையும் அநீதிகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் மானுட வஞ்சனைகளையும் எதிர்ப்பதற்கான போர்க்குணத்தோடு கவிதை மானுட நேயத்தையும், மானுடப் பேருறவுகளையும் கொண்டணைக்கிற போதுதான், கவிதை, உலகையே வாரி கைவிரல்களுக்குள் வைத்துக் கொள்ளும் பெருவல்லமை பெறுகிறது. இந்த அறிதலை, இந்த ஞானத்தை எங்களுக்கு அளித்தது வானம்பாடி என்னும் குறியீடு.

(கவிஞர் சிற்பி : கவிதைவெளி : சூரிய பறத்தல். வெளியீடு : பாரதி இல்லம், இ1, ஆர்.கே.நகர், மருதமலை சாலை, நவாவூர் பிரிவு, கோவை - 46. ரூ. 60 )

உன்மெஸ் (தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச் சிறுகதைகள் வங்காளத்தில்)

புதுமைப்பித்தன், தி,ஜானகிராமன், ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் சு.கிருஷ்ணமூர்த்தி, தனுஷ்கோடி ராமசாமி, சுப்ரபாரதிமணியன், சுஜாதா, சு.கிருஷ்ணமூர்த்தி, காஸ்யபன், சு.சமுத்திரம், வைதீஸ்வரன், பிரபஞ்சன், அகிலன் கண்ணன், பா.ராகவன் ஆகியோரின் சிறுகதைகள் சு.கிருஷ்ணமூர்த்தியின் வங்காள மொழிபெயர்ப்பில். தொகுப்பு _ சியாமள் பட்டாச்சர்யா. (வெளியீடு : டாட்டா, கைலாஸஹர், திரிபுரா)

 

Pin It