ஏழை நடுத்தர மக்கள், தங்களுக்குக் கிடைக்கும் சிறுசிறு சலுகைகள், இனாம்கள், இலவசங்களில் திருப்தி அடைந்து விடுகிறார்கள். அடிப்படை உரிமைகளுக்காகப் போராட மறுக்கிறார்கள். ஒட்டகக் கதைதான் நம் மக்களின் கதை. ஏகப்பட்ட சுமையை முதுகில் ஏற்றிவிட்டு, வெறுமனே கொஞ்சம் வைக்கோலை எடுத்து வெளியில் போட்டதும், சுமையை இறக்கியாயிற்று என்று நினைத்துக் கொண்டு ஒட்டகம் வேகமாகப் போகுமாம். அது மாதிரிதான் நாமும் இருக்கிறோம். (ப.372)

மனித சக்தியை நல்ல முறையில் பயன்படுத்தக்கூடிய ஆற்றல் பொதுத்துறைக்குத்தான் உண்டு. பொதுத்துறையைப் பலவீனப்படுத்துவது முற்றிலும் தவறு. இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு பொதுத்துறை இன்றியமையாதது. பொதுத்துறை ஈட்டும் லாபத்தைக் கொண்டுதான் மக்களின் அடிப்படை வசதி, சுகாதார வசதிகளை அரசாங்கம் செய்ய முடியும். தனியார் மயப்படுத்தினால் அவர்கள் வேகமான Automation க்குச் சென்று விடுவார்கள். வேலை வாய்ப்புகள் பெரிதும் குறைந்து போய்விடும். ஆகையால், இப்படிப்பட்ட கொள்கைகள் ஏற்கத்தக்கவை அல்ல.(ப.371)

இவையெல்லாம் யாரோ பொருளாதார மேதை ஒருவரின் கூற்றுகள் அல்ல!

kirungai sethupathi on kundrakudi adikalarசைவத்தையும் தமிழையும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய குருபீடத்தை அலங்கரித்த ஒரு துறவியின் சொற்கள்! ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம் அந்த அதிசயத் துறவிதான் அருள்நெறித் தந்தை; அற்புதத்துறவி குன்றக்குடி அடிகளார்.

கறுத்த உருவம்; பளிச்சிடும் வெண்ணீறு ஒளிரும் திருமுகம்; அந்தத் திருமுகத்தில் மின்னும் விழிகள்; மக்கள் நலனை மட்டுமே பேசும் திருவாய்; அதற்காக மட்டுமே செயற்படும் திருக்கரங்கள். சிந்தையும் செயலும் வாக்கும் வழியும் மக்கள் நலன் என்பதாகவே இருந்தது. ஒரு நூற்றாண்டுக் கால அம்மாமுனியின் எழுத முடியாப் பெருவரலாற்றை கிருங்கை சேதுபதி பதிப்பித்தும் தொகுப்பித்தும் தமிழ்த்தாய்க்குச் சூட்டிய ஒரு மலர்தான் இந்நுால்!

ஆதீனங்கள் பேசலாமா? பேசலாம்! எப்படித் தெரியுமா? சைவமடங்களின் குருமுதல்வர்கள் சிவனியக் கடவுளர்களின் திருவிழாக்களில் ஆசியுரை வழங்கலாம்! ஈரேழு பதினாலு உலகங்களையும் படைத்த கடவுளர்களைப் பற்றி, அக்கடவுளரைப் போற்றும் சமயம் பற்றி, அச்சமயத்தின் அடிப்படையான தத்துவம் பற்றி, தத்துவங்களின் விளக்கமாக அமையும் தோத்திரங்கள் பற்றி, அத்தோத்திரங்களைப் புனைந்த அருளாளர்கள் பற்றி பேசலாம். அவற்றால் பக்தர்களுக்கு உய்தி ஏற்படும் என்று ஆசியுரை வழங்கலாம்!

ஒரு நாட்டிற்கு மொழி ஜீவநாடி. ஒரு சமுதாயத்தை அழிக்க வேண்டுமானால் சமுதாயத்தை, நாகரிகத்தைச் சீர்குலைக்க வேண்டுமானால், அவர்களுடைய மொழியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். பிறமொழி நுழைவு தமிழை அடக்கி ஒடுக்கி அழித்துவிடுமோ என்ற அச்சம் இருந்த காலத்தில், தமிழ்மொழிக் காப்பிற்காக ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். அந்தப் போராட்டத்தினாலும், தமிழ்நாட்டிலிருந்து வேறுபல சூழ்நிலைகளினாலும் தமிழ்மொழி காப்பாற்றப்பட்டது. இப்படிக் குறிப்பிடுகிறபொழுது, அகில இந்திய தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றிப் பேசுகின்ற சிலர் தவறான கருத்தைக் கொள்ளலாம்.

அகில உறுப்புகள் சிதைய வேண்டுமென்பது அவசியம் இல்லை. ஓர் உருவத்தில் எல்லா உறுப்புகளும் வளமாக இருத்தல் வேண்டும். அதுபோலவே, தமிழ் நன்றாக இருந்தால்தான் தேசியம் வளமாக இருக்க முடியும். தமிழ்நாடு வளமாக இருந்தால்தான் அகில இந்திய வளம் நன்றாக இருக்கும். தமிழர்கள் நன்றாக இருந்தால்தான் அகில இந்திய ஒருமைப்பாடு வளர்ந்து வளம் பெற முடியும். எனவே, அரியணையமர்ந்து ஆட்சி செய்ய வந்த பிறிதொரு மொழியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார் பெரியார். அந்தத் துறையில் தமிழைக் காப்பாற்றித் தந்த தந்தையாகக் காட்சி அளிக்கின்றார் பெரியார். அதற்காகவும் அவர்களுக்கு நம்முடைய நன்றி.(ப.279)

என்று பேசினார் அந்த அற்புதத்துறவி! எங்கே தெரியுமா? 22.09.1950 ஆம் நாள் திருச்சி பொன்மலைப்பட்டியில் நடந்த தமிழினத் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் பேசியதன் ஒரு பகுதிதான் இது!

சைவத்திருமடங்களின் தலைவர்கள் பயணிக்கலாமா? பயணிக்கலாம்! பக்தர்கள் சுமக்கப் பல்லக்கில் பவனி வரலாம்! மகாசந்திதானமாகப் பொறுப்பேற்ற பிறகு பல்லக்கில் ஏறாத அந்த மக்கள் துறவி இலங்கைக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் பயணித்தார். அந்நாடுகளில் அடிகள் கண்ட பொதுவுடைமைச் சித்தாந்தமும் உழைப்பின் உன்னதமும் 'குன்றக்குடி மாடல்' என ஒருங்கிணைந்த தன்னிறைவுத் திட்டமாக மிளிர்ந்தது. அதனால்தான் அப்போதைய பாரதப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்கள் திட்டக்குழுவின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், 'which relates to the excellent work done by the VILLAGE PLANNING FORUM IN KUNDRAKKUDI' எனக் குறிப்பிடுகிறார். (ப.240)

இந்தக் கடிதம் பாரதப் பிரதமரின் செய்திமடல் என்ற குறிப்போடு நூலில் இடம் பெற்றுள்ளது.

எல்லாம் சரி சமயத் தலைவர்களின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்? சமய வகுப்புகள், ஆதீனச் சீடர்களுக்கு உபதேசங்கள், அவர்தம் குடும்பத்தினருக்கான வாழ்வியல் சடங்குகள் முதலியவற்றை நடத்தி வைக்கலாம்!

ஆனால் நமது அருள்நெறித்தந்தை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவப் பேராசனின் படைப்பான திருக்குறள் வகுப்புகளை, நடத்தினார்கள். தான் சார்ந்த சைவ சமயத்தை மட்டும் உயர்த்திப் பிடிக்காமல், அதன் அடிநாதமான அன்பே சிவமாவது என்பதனை உணர்ந்தறிந்த அந்த மாமுனிவர் எல்லாச்சமயத்தினரையும் இணைத்து உருவாக்கிய அமைப்புதான் திருவருட்பேரவை

எம்மதமும் சம்மதமாம் என்றே

சமா அதான சகவாழ்வு வாழ்வோம்!

உறவினை வளர்ப்போம்!அமைதியைக் காப்போம்! வளமார் வாழ்வை நிலமிசைச் சமைப்போம்

இவையே நமது இனிய கோட்பாடுகள்! (தொகுதி 14, ப.67)

என்று கவிதை பாடித் தமது கோட்பாட்டை விளக்குகிறார், மதம் கடந்த அந்த மானுடநேயர்!

1955 ஆம் ஆண்டு அருள்நெறித் திருப்பணிமன்றம் தொடங்கி மக்களை ஒருங்கிணைத்த அந்த மாமேதை, 1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு தெய்வீகப் பேரவையை உருவாக்கினார். இவ்வமைப்புகளின் கிளை அமைப்புகளாக ஆலய தர்மகர்த்தாக்கள் சங்கம், உயர்நிலைப் பள்ளிக்கழகம், மாணாக்கர் அருள்நெறிமன்றம், மாதர் அருள்நெறி இயக்கம், சொல்லரசர் சொற்பயின்றி மன்றம், அரிசன நல உரிமைச்சங்கம் எனப் பலவற்றை உருவாக்கி மக்களை வழிநடத்தினார், அந்த மாமேதை!

சொல்லுதல் யாருக்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற திருக்குறள் வழியை வாய்ப்பாக்கிச் செயல்பட்ட அந்தச் செம்மலின் செயற்பாடுகள் பலவும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.

சமயத்தை வளர்ப்பதனையே தங்கள் பெரும்பணியாகக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுச் சைவ மடங்களின் மரபில் சமுதாயத்திற்கும் பங்காற்றியவர் நூற்றாண்டுத் தமிழரான குன்றக்குடி அடிகளார். சைவமும் அச்சமயம் பற்றிப் பெரும்பான்மையாகப் பேசும் தமிழ்மொழியையும் பக்தியின் பெயரால் உயர்த்திப் பிடித்தவை சைவமடங்கள்! ஏராளமான சுவடிகளைக் காக்கும் ஆவணக் காப்பகமாகவும் தமிழ், வடமொழி, இசை, தத்துவம் உள்ளிட்டவற்றைக் கற்பிக்கும் பல்கலைக்கழகங்களாகவும் செயல்பட்ட மடங்கள் ஓர் வரையறைக்குள் இருந்து தமது சமயம் சார்ந்த மக்களுக்குத் தொண்டாற்றின. ஆனால், எல்லைகளைத் தாண்டி - மீறி உடைத்து வெளிக்கிளம்பியவர் அருள்நெறித் தந்தை!

'நான் வலியுறுத்துவதெல்லாம் உழைப்பையும் மனித நேயத்தையும் மட்டும்தான்!' என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறார், அந்த அருள்மாமுனிவர். இந்தப் புரட்சிக் குரலை அவர் சமயத்தின் அமைப்பிற்குள் இருந்து கொண்டே ஒலித்ததோடு மட்டுமல்லாது செயற்படுத்தியும் காட்டினார். இந்தப் பெருஞ்செயலுக்கான பேரூக்கம் எங்கிருந்து வந்தது என்பதனை ஓர் ஆய்வாக அமைத்து எழுதமுடியாகப் பெரு வரலாறு' எனத் தொகுத்துப் பதிப்பித்துள்ளார் கிருங்கை சேதுபதி. நான்கு இயல்களாக நூலினை அமைத்துக் கொண்ட ஆசிரியர் ஒவ்வொரு இயலின் தொடக்கத்திலும் அடிகள் பெருமான் பற்றிய தொகுப்பின் பொருண்மையைத் தனது எழுத்துரையாக அமைத்துக் கொண்டுள்ளார்.

முதல் இயலில் அடிகள் பெருமகனின் வரலாற்றுப்பதிவுகள் வரிசைகட்டி நிற்கின்றன. அவற்றுள் மதுரையிலிருந்து வெளிவந்த தமிழ்நாடு இதழின் துணை ஆசிரியர், எம்.எஸ்.பி. சண்முகம் எழுதிய வாழ்க்கை வரலாறு குன்றக்குடி அடிகளார் வாழ்ந்த காலத்திலேயே 1954-ஆம் ஆண்டு எழுதப்பட்டு, வெளிவந்த சிறப்புடையது. சைவசித்தாந்தப்புரவலர் தேவகோட்டை சேவு.மெ. மெய்யப்ப செட்டியாரும் பல்கலைப்புலவர் தெ.பொ.மீ ஆகியோரது அணிந்துரையுடன் கவிமணியின் வாழ்த்துப்பாக்களுடன் அமைந்துள்ள இந்த வாழ்க்கை வரலாறு தனிப்பட்ட ஒருவரது வரலாறாக மட்டுமல்லாது, அக்காலத் தமிழ்ச் சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்த சமுதாயச் சிற்பியின் வரலாறாகக் காலப் பெருவெளியின் சுவடாக விரிகிறது.

மிகச் சாதாரண குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காகப் பால் ஊற்றிப் பணி செய்த அரங்கநாதனின் ஆளுமை வளர்ச்சியும் தூய தொண்டும் எம்.எஸ்.பி. சண்முகத்தின் கைவண்ணத்தில் மிளிர்கிறது.

தொகுப்பில் பெரும்பான்மையும் சுவைமிக்க பகுதிகள் இடம் பெறுவதுண்டு.

ஆனால், பதிப்பாசிரியர் தேவையானவற்றை இதுவரை வாசிப்பிற்கு எட்டாதவற்றை மட்டுமே இத்தொகுப்பில் கொடுத்துள்ளமை பாராட்டிற்கு உரியது. தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்ட அடிகளாரின் ஆக்கங்கள் பலவும் மணிவாசகர் பதிப்பகத்தால் 16 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளவற்றை தவிர்த்துள்ளார்.

அரங்கநாதனின் பால் ஊற்றும் பணியை, பிற்காலத்தில், நாட்டவர் வாழ்வில் ‘பால் வார்க்கப்’ பிறந்த இம்முத்து, அந்தச் சின்னஞ்சிறு வயதில் தன் வீட்டுப்பாலை அண்ணாமலை நகரத்து அறிஞர் வீடுகளுக்கு ஊற்றி மகிழ்ந்தது.பள்ளிப் படிப்புடன் பால் வழங்கும் திருப்பணி. (ப.86)

என்று வருணிக்கும் திருவண்ணாமலை ஆதீனப்புலவர் கதிரேசன் தூயநெறித் தொண்டரின் செயல்பாட்டுக்கான விதத்தினை விளக்கும் விவரணம் இத்தொகுப்பின் பதிவுகளில் இடம்பெறுகிறது. அவர்தம் வாழ்வுப்பாதையின் பல்வேறு நிகழ்வுகளையும் விவரித்து குன்றக்குடி வந்து சேர்ந்த செய்திகள் உள்ளிட்டவை முதல் இயலின் சுவடுகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

இயல் இரண்டில், அடிகள் பெருமான் உருவாக்கிய தொண்டு அமைப்புகளின் சுவடுகள், ஆன்மீகம் வளர்க்கும் அருள்வரலாறு என்ற தலைப்பில் இடம்பெறுகின்றன. இப்பகுதியில் சுவடுகள் 7 என்ற எண்ணிடப்பட்ட ஏன் திருவருட்பேரவை என்ற விளக்கத்தில் சமயங்கள் அனைத்திலும் ஒரே கடவுள்தான் நின்றருள் செய்கின்றான். சமய வேறுபாடுகள் இறைவன் அருளிய வகையாலும் நாட்டமைப்பாலும் காலத்தின் வேறுபாட்டாலும் அனுபவ வாயில்களாலும், ஏற்பட்டனவேயாம். இந்த வேற்றுமைகள் ஆக்கந்தருவன; உயர்வைத் தருவன என்பதைக் கவனத்திற் கொள்வது நல்லது. இந்திய நாட்டில் விளங்கும் ஒவ்வொரு சமயமும் தத்தம் தனித்தன்மையை இழக்காமல் வளரவும், மன்பதைக்குத் தொண்டு செய்யவும் திருவருள் பேரவை துணை நிற்கும்; அரண் செய்யும்; எக்காரணத்தை முன்னிட்டும் சமய வெறுப்பையும் பகையையும் உண்டாக்க எடுக்கப்படும் எந்த முயற்சிகளையும் தடுத்து நிறுத்தும். இத்துறையில் தேவையெனில் அறவழிப் போராட்டங்களையும் நிகழ்த்தும். நாடு முழுவதும் திருவருள் பேரவை அமையுமானால் மதவெறி-மதக் கலவரங்கள் என்கிற நச்சுக் காய்ச்சல் மனித உலகத்தைத் தீண்டாமல் பாதுகாக்க உதவும்.(ப.182)

என்று விவரிப்பது காலங்கடந்தும் நமது தேசத்தின் தேவையாக உள்ளதே!

தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டை மட்டும் தமது இலட்சியமாகக் கொண்ட சமுதாயப் போராளி அடிகளாரின் ஆளுமைத் தொடர்புகள் மனிதம் பேணிய புனித வரலாறாக இயல் மூன்றாக விரிகிறது. வினோபாஜியுடன் அடிகளாரின் உரையாடல் தமிழ்த்தேசியத்தின் சான்றாக ஒளிர்கிறது! கடவுள் மறுப்புக் கொள்கையாளரான தமிழினத் தலைவர் பெரியாருடனான அடிகளாரின் உறவு தமிழன மேம்பாட்டை உள்ளடக்கிய மானுட உயர்விற்காக என்பதனைத் தொகுப்பின் சுவடுகள் வெளிப்படுத்துகின்றன. ஆகவே தான், அன்றைய முதல்வர் கலைஞர் துறவியர் பெருமானை மேலவை உறுப்பினராக்கிச் சாதனை படைத்தார் எனச் சான்று பகருகிறார் நூலாசிரியர். அதனால் தான், அறிஞர் அண்ணா மறைந்த போது,

அண்ணா அண்ணாவென் றழைத்திடவே வாழ்ந்துயர்ந்த எமதருமை அண்ணா எங்குற் றனைநீயே நின்னை வளர்த்த தமிழ்மறந்து சென்றனையோ! (ப.300)

என்று இரங்கற்பா பாடினார் அந்தக் காவியுடைக் கவிஞர்!

தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமின்றி மானுட சமுதாயம் முழுமைக்குமான அந்தத் தொண்டரின் தூயநெறியை என்றும் நின்று வழிகாட்டும் வரலாறு என்ற தலைப்பில் நான்காவது இயலாக்குகிறார், கிருங்கை சேதுபதி! 'காந்தீயம் என்றால் அரசியல் இல்லை அன்பியல், அருளியல், சமுதாய இயல்' (ப.343) என்ற அடிகள் பெருமானின் விளக்கம் காந்தியப் புரிதலின் அடிநாதமல்லவா? இப்பகுதியின் பெருஞ்சிறப்பு அடிகளாரது வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்களின் புகைப்படத் தொகுப்பு!

சமயத்தின் கடுமையான சம்பிரதாயங்களில் இருந்து கொண்டு கனிந்த இதயத்தோடு செயற்பட்ட சிறப்பைக் கூறும் கவிஞர் சிற்பியின் எழுத்துரை நுாலின் மகுடம்.

தேடித் தேடி நுாலாசிரியர் தொகுத்துப் பதிப்பித்துள்ள இந்நூலின் சிறப்பு வாசிக்கிற நம்மையும் தேட வைக்கிறது; சுவடுகளின் வழியில் செல்ல வைக்கிறது. இதுதான் நுாலின் வெற்றி!

- முனைவர் யாழ். சு. சந்திரா, இணைப்பேராசிரியர் & தலைவர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லுாரி (த), மதுரை.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.