கவிதை என்றாலே புதுக்கவிதைதான். மரபுக்கவிதை எழுதுகின்றவர்கள் பழமைவாதிகள். அரைத்ததையே அரைக்கும் பழைய சிந்தனையாளர்கள் என்கிற எண்ணமும் பலரிடம் உள்ளது. மரபுக்கவிதை எழுதுவோரும்கூட ஆசிரியம் உள்ளிட்ட நால்வகைப் பாக்களில் ஒன்றினை எடுப்பது அரிதாகிவிட்டது. மரபுக்கவிதை என்றாலே சந்தங்களைக் கொண்டியங்கும் விருத்தப்பாக்கள்தான் குறியீடாக இருக்கின்றன. இது ஒரு வகையில் தேவையாகவும் இருக்கிறது. ஆசிரியப்பாவில் எழுதினால் அதுவும் புதுக்கவிதை போலத்தான் இருக்கும். வெண்பா எழுதுவதும் சிரமம்; புணர்ச்சி விதிப்படி எழுதினால் சொற்பிரித்து புரிந்து கொள்வதும் சிரமம். எனவே விருத்தப்பாக்களே மரபுக்கவிதையின் தற்போதைய வடிவமாக இருக்கின்றது.

இந்த வடிவத்தைப் பயன்படுத்தி இரண்டு நூல்களைத் தந்திருக்கிறார் ஜீவகாருண்யன். பண்டைய யாப்பு ஞானமும், எதுகை, மோனை போன்ற அணி இலக்கணத் தேர்ச்சியும் இருப்பதால் மரபுக் கவிதைகள் எழுதுவதிலும் அவரால் முத்திரை பதிக்க முடிகிறது. ஒரு பொருள் பற்றி விரிந்ததாக தமிழ்ப்பாவைநூல் உள்ளது. பல பொருள் குறித்த தொகை நூலாக வெளிச்ச விழுதுகள்உள்ளது.

கவியரசு கண்ணதாசனின் தைப்பாவைபடித்த ஈர்ப்பால் தமிழ்ப்பாவை எழுதியதாக அவரே கூறியிருக்கிறார். அதுவும் ஒரே இரவில் இதை எழுதி முடித்ததாகவும் சொல்லியிருக்கிறார். வியப்பாகத்தான் இருக்கிறது. ஒவ்வொன்றும் 16 வரிகளாய் 33 கவிதைகளைக் கொண்டுள்ள இந்த நூலில், தமிழை இளம் பெண்ணாக வர்ணித்து என்னடி தமிழ்ப்பாவாய்/இரும்போடி யுன் மனது?/கண்திறக்க மாட்டாயோ/கல்லோடி யுன் மனது?/பண் சேருந்தாள மென்றே/ பக்குவமாய் சேர்ந்திடலாம்/ கண்ணே வா! மணியே வா/ கட்டழகுப் பெண்ணே வா/பொன்னே வா/முத்தே வா/புலருகின்ற பொழுதே வா/அன்புயான் மிகக் கொண்டேன்/ என்று கூறி தனக்குத் துணையாக வரவேண்டும் என்ற பாணியில் எழுதியிருப்பது புதுமைதான். தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், தமிழின் பெருமையெல்லாம் சந்தக் கவிதைகளாய் படிக்கும்போது மனம் துள்ளுகிறது.

இந்தத் துள்ளல் தரும் கொள்ளையின்பம் வெளிச்ச விழுதுகள்நூலில் அப்படியே பிரதிபலிப்பதாகச் சொல்ல முடியாது. பல பொருள்கள் பற்றி பல்வேறு காலத்தில், சூழலில், பல யாப்புகளில் எழுதப்பட்டதன் தொகுப்பாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம். ஆனால் சந்தத்திலோ பாடு பொருளிலோ எந்தக் குறையும் இல்லை. கவிஞர்களுக்கே இயல்பான காதல் கவிதைகள் இந்தத் தொகுப்பில் கணிசமாக இருக்கின்றன. இருப்பினும் சமூக அக்கறையோடு பல கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.

தாவும் கடலின் அலைகள் அழகு/தண்பனி அருவி மலைகள் அழகு/கூவும் கரிய குயிலும் அழகு/குளிர்ந்த செடியும் கொடியும் அழகு/ என்று இயற்கை அழகை ரசிக்கும் ஜீவகாருண்யன் மறுபக்கம் கருணையே இல்லாமல் மனிதர்கள் கல் நெஞ்சர்களாய் நடந்து கொள்வதைச் சாடுகிறார்.

அறுபதுவயது துணை போன பின்பும்/அடியாட தள்ளாடும் கிழவன்கூட/இருபதைத் துணையாக்கிக் கொள்ள விங்கே/இம்மியும் எதிர்ப்பில்லை ஆனால் நல்ல/பருவத்தில் பெண்ணொருத்தி தனிமைப்பட்டால்/பரிதவிக்க வேண்டுமவன் காலம் மட்டும்/இரு முரணாய் கொடுநீதி இழியும் நாட்டில்/ஏற்பில்லா உயிரன்றோ விதவைப் பெண்கள்.

ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு நிலை நீடிப்பதைக் கண்டு மனம் நொந்து எழுதும் கவிதையில் கோபத்தோடு நளினமும் தீர்வும் இருக்கிறது. ஏழைஎன் றொருசாதி உலகினில் - இருப்பது/ஏனடா, ஏனடா இன்னும்? - இதை/இன்னும் தாங்குமா மண்ணும்?- நம்மில்/கோழைகளானோர் கூற்றினால் வந்தது/கூறடா இதையுரத் தெங்கும் - ஒன்று/கூடினால் இன்பமே பொங்கும்

பட்டுக்கோட்டை, பகத்சிங் என புகழுறு ஆளுமை சார்ந்தும், கொல்லிமலை, நெய்வேலி, பிச்சாவரம் என சிறப்புறு ஊர் சார்ந்தும் மரபுக்கவிதைகள் எழுதப் பட்டுள்ளன. 1990களின் சில நிகழ்வுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளது. அணு ஆயுத எதிர்ப்பு, நதிகள் இணைப்பு, சாதிமத பேதங்கள் ஒழிப்பு போன்ற பொருள்களிலும் கவிதை புனைந்துள்ளார். போதும் என்ற மனம் போகட்டும். நீஏழை/போதாது உனக்கெல்லாம் வேண்டும்”/ “ஒரு கன்னந் தனிலறைந்த உலுத்தவனை உடனேநீ/இருகன்னந் தனிலறைந்தால் உயர்வாய்”/என்று புதிய சூத்திரங்களையும் படைக்கிறார்.

48 மரபுக்கவிதைகளைக் கொண்ட இந்நூலில் 100 வரிகளைக் கொண்ட இரண்டு நெடுங்கவிதைகளும் இருக்கின்றன. இந்தக் கவிதைகள் மரபிலேயே ஆசிரிய யாப்பினைக் கொண்டிருக்கிறது. மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் கணவனை மனைவி பகுத்தறிவு பாடம் புகட்டி திருத்துவதற்கான ஒரு நெடுங்கவிதை முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

மரபுக்கவிதைகளின் சிறப்பு அவற்றின் எதுகை மோனையில் உள்ளது. இவை கவிதைகளை மனதில் எளிதாகப் பதிந்துகொள்ள உதவும். திருப்பிச் சொல்வதற்கும் இனிமையாக இருக்கும். ஓசை நயம் உள்ளத்தில் ரசவாதம் செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த உண்மை ஜீவித்திருக்க வேண்டும் என்ற கருணை மனதோடு மரபுக்கவிதைகளைப் படைத்து வழங்கியிருக்கிறார் ஜீவகாருண்யன் என்பது வெறும் புகழ்ச்சியில்லை.

 

Pin It