நூல் அறிமுகம்:
உணவுக் கட்டுப்பாடு
அனுராதா சுப்பிரமணியன்
வெளியீடு: சௌந்தரம் பதிப்பகம், ஈரோடு-12
பக்கம் 276; ரூ.150/-

காலத்தின் தேவையறிந்து சரியான நேரத்தில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. துரித (Fast Food) உணவுகள் மற்றும் ஜங்க் (அதிக கலோரி மட்டும் தரும்) உணவுப் பழக்கம் பரவி வரும் நேரத்தில் எது தரமானது, நாம் சாப்பிட வேண்டியது எது? தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை? என அறிவியல் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. குழந்தைப்பருவம் தொட்டு முதியவர்கள் வரை பல்வேறு வயதினருக்கும் தேவையான உணவு முறைகள் உரிய விளக்கத்தோடு 33 பட்டியல்களில் அட்டவணையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நோய் உருவாக காரணிகள் எவை? அவற்றை தவிர்க்கும் பாதுகாப்பு உணவுகள் எவை? அவற்றை எப்படி.. எப்போது சாப்பிட வேண்டுமென விளக்கியுள்ளார் இந்நூல் ஆசிரியர். உடல் நலம் பேண விழையும் அனைவர்க்கும் இந்நூல் பயன்படும் வகையில் எளிய தமிழில் ஆங்காங்கே ஆங்கிலப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், உடல்41 பருமனானவர்கள்,, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்கு உபயோகமான பல தகவல்கள் இந்நூலில் நிறைய உள்ளது.

‘உணவுக்கட்டுப்பாடு’ என்ற இந்நூலின் ஆசிரியர் உணவு மற்றும் ஊட்டச்சத்துத்துறை பேராசிரியராக உள்ளார். அவரது கருத்துப்படி 276 பக்கங்கள் கொண்ட இந்நூல் நம் வீட்டிற்குள் வந்துவிட்டால் நோய் நொடிகள் வெளியேறிவிடும். மருத்துவ செலவோ அரிதாகி விடும்! பேரா. கம்பன் சுப்பிரமணியன் அவர்கள் தமது அணிந்துரையில்

“பசி ஒரு மனித வெடிகுண்டு \மனிதனின் வயிறு ஒரு யாக குண்டம்\அதில் சந்தனக் கட்டைகளையும்\பட்டு பீதாம்பரங்
களையும் போட முடியாது\அதில் சத்தான உணவு வகைகளை மட்டுமே போட முடியும்’’

என்று வலியுறுத்தியிருப்பதும் வாழ்த்தியிருப்பதும் இந்நூலின் உள்ளடக்கத்திற்கு அணிசேர்த்துள்ளன.

புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கின்’ கூறிய வரிகள்கூட இங்கே எடுத்தாளப்பட்டுள்ளது.

“சமையலில் புதுமை வேண்டும்
சமையல் நூல் வளர்ச்சி வேண்டும்
சமையற் கல்வி இல்லம் அமைத்திட வேண்டும்!’’

மூன்று வேளை மூக்குப்பிடிக்க உண்ணும் அதே அளவு உணவை ஆறுவேளையாக பிரித்து உண்பதால் அளவற்ற பலன் உண்டு என்ற செய்தி, நீங்களே உங்கள் குடும்பத்திற்கு “உணவுப் பட்டியல்’’ தயாரிக்க சில பயனுள்ள யோசனைகள் , பணிக்கேற்ற உணவுத் தேவைப் பட்டியல்கள் மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் சத்து மற்றும் சரிவிகித உணவுகள் குறித்த தகவல் களஞ்சியமாக இந்நூல் உள்ளது.

கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகளுக்கு, முதியவர்களுக்கு தவிர்க்க\சேர்க்க வேண்டிய உணவுப்பட்டியல் புதுமணத் தம்பதியர் புதிதாக இல்லறம் துவக்கும் போது குறிப்பாக தனிக்குடித்தனம் செல்வோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக ஆலோசகராக இந்நூல் அமையும். மணமக்களுக்கும் மற்றவர்களுக்கும் பரிசளிக்க ஏற்றநூல். நோயாளிகளுக்கும், உடல் பருமன் மற்றும் மெலிந்து உள்ளவர்களுக்கும், இதயநோய், கொலஸ்ட்ரால், சிறுநீரகக் கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட நோயாளிகள், நீரிழிவு, புற்றுநோய், உணவு ஒவ்வாமை, மரபியல் வழி நோய்கள் என நோய்கள் பற்றிய விவரங்கள்\மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுமுறைகள் தரமான வகையில் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள், ICMR அட்டவணை மேற்கோள்களின்படி சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களின் உணவுத் தேவை என்பது விளையாட்டின் முன்\பின் உணவுகள், நன்மை\தீமைகள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. அஜினமோட்டோ மற்றும் பல வண்ணப் பொடிகள் உணவுப் பொருட்களில் கலப்பதை அரசு தடை செய்ய வேண்டும். ஆனால் அரசு வானொலி. தொலைக்காட்சிகளில் இவை விளம்பரம் செய்வதையாவது தவிர்க்க வேண்டும். தெருவோரத்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

பழமையான உணவுகள் வரகு, தினை, சாமை, குதிரைவாலி, ராகி, கம்பு, கொள்ளு, பல அரிசி ரகங்கள் சத்து நிறைந்தவை மட்டுமல்ல, மருந்துபோல பயன்படுத்தப்பட்டு வந்தன. அழியுமுன் மீண்டும் உயிரூட்ட வேண்டும். இறுதியாக உணவியல் நிபுணர் கடமைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசில் உணவியல் சார்ந்த துறையே இல்லை. இனிவரும் காலங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனத் தெரிவிக்கிறார்.

இந்நூல் ஆசிரியர். பல ஆண்டுகள் முயற்சி செய்து பல நல்ல பயனுள்ள தகவல்களை தாங்கி வெளிவந்துள்ள இந்நூல் படிக்க மட்டுமல்ல\பரிசளிக்கவும் ஏற்றது.