1.

எதையும் எழுதாமலேயே நேரம் கடந்துவிட்டது
கடந்தது குறித்து வருந்துவதிலேயே
இன்றும் கழிந்துவிடும்

கடந்தது இறந்தது
இறந்தது கடந்தது

நேரத்தின் கலத்தைச் செலுத்துபவன் எவன்
யமன் ஒன்றும் நமது நேரக்காப்பாளன் இல்லை
மரணம் கூடக் கடைசி மணி அல்ல,
இருப்பினும் வாழ்வு
மரணத்தின் சிறு அசைவிலிருக்கிறது

பசியெடுக்கும் போது விழுங்கும்
அந்த விநோத விலங்கைப் பார்திருக்கிறாயா நீ

வாழ்வின் சகல துடிப்புகளுடனும் உடல்
தலை புழுத்த மண்டையோடு
வலக்கையில் சாத்தானின் வால் போன்றொரு தூண்டில்
இடக்கையின் மணிக்கட்டில் கிண்கிணித் தொட்டில்
கண்களின் பொந்துகளில் ஒளிந்திருக்கும் முற்றுபெறா இரவு
மூன்றாம் கை வலியற்றுத் உயிர் துண்டிக்கும் கோடாரி
மூன்று கைகளும் மூன்று காலங்குறிக்க
தோளில் காகத்துடன் புஷ்பகவிமானத்தில் அமர்ந்திருந்த அதனை
ஒரு புராதனத்தின் அகழ்வில் சந்தித்ததாகக் கனவில் வந்தது

உரையாடிப் பிரிந்த போது கரப்பன்கள் ஊர்ந்த வாயுடன் முத்தமிட்டது
நிலம் நடுங்கிப் பிளந்த பின்னும் உயிரோடிருந்தேன்

ஆயினும் அக்கணத்தில்
வாழ்வின் தத்துவக் குழப்பங்களை முடித்து வைக்கும்
மரணத்தைக் கடவுளென அறிந்துகொண்டேன்.

2.

புயல் நாளொன்றில்
சீறும் பெருங்கடல் முன் நானும் அவனும்
கண்களுக்குப் புலப்படா நட்சத்திரங்களென
கரைமீதிருந்தோம்

என் மீதான கவிதையொன்றை
அவன் சொல்லத் தொடங்கிய போது
கண்ணாமூச்சியாடிக் களைத்த நண்டுகள்
வளைகளை மறந்து அவன் காலருகே
கொடுக்குகள் தூக்கி நின்றன

கரங்களிலிருந்த கோப்பையின்
வெள்ளை ஒயினில் கடலின் ஒருதுளி
கலந்து அருந்தினோம்

முத்தமிட்ட கணத்தில் மூக்கின் மீதோடி
உதட்டில் இறங்கியதோர் சின்னத் தூறலின் துளி

காற்றும் மழையும் கடலும் மதுவும்
எதிரெதிரே மோதிய அலைகளில்
நுரைகளாலான டிராகன்களின் பெருயுத்தம்

யாரோ பெரிய பெரிய பாறைகளை
கடலின் ஊடே எறிய நடுங்கின என் சொற்கள்

மெல்லிய உள்ளங்கைப் பற்றுதலில்
திடீரென அகன்று விரிந்தது நீர்ப்பரப்பு

கரை சூழ்ந்த கடலில் கரங்களைப் பிணைத்தபடி
உயர்ந்தெழும் அலைகளின் மீதான பரவசத்தில்
நீந்தினோம் புயலின் பயமற்று.

- தாரா கணேசன்

Pin It