0. இப்போது

கனமான பித்தளை கடிகாரம் ‘நங்.. நங்...’ எனச் சத்தமிட்டது. அதன் தொண்டையிலிருந்து வந்த சத்தத்தில் பூமி அதிர்ந்தது. மணிக்கொரு முறை சரியாக அதன் உள்ளிருக்கும் வாத்தியக்காரர்கள் இசைப்பர். அந்த சத்தங்கள் அடங்கிய பின் அறைக்குள் மரண அமைதி திரும்பும். அறுபது நிமிடங்களுக்குப்பின் இந்த சலனமற்ற அறையில் வேறுவிதமான உணர்வுகளை மீட்ட வேண்டுமென்ற உறுதியுடன் கடிகாரம் உறங்கச் செல்லும்.

கடிகாரம் அடங்கிய பின் எழுதுவதைத் துவங்கினேன். ‘மனிதனுக்கு எத்தனை கர்வம்? தொள்ளாயிரம் கோடி மக்கள் தன்னைச் சுற்றி இருக்கும் போது, தான் உருவாக்கும் பாத்திரங்கள், தன் கற்பனை, கனவு என அவற்றுடன் மட்டும் கொண்டிருக்கும் நட்பை என்னவென்று சொல்வது? யாரும் சிருஷ்டிக்க வேண்டாம், தன் காரியத்துக்கு காரணனும் தானே என்னும் ஜம்பம்! ஆக்கம், காப்பு,அழிவு என மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டான். இது மட்டுமா....’

சே.. இதற்குமேல் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. என் கால்களைப் போல் எழுத்தும் முட்டுக்கட்டையானது. சக்தியைச் சேகரித்து எழுந்து நிற்க முற்பட்டேன். தடுமாறிய ஒரு கையால் ஜன்னல் கம்பியைப் பிடித்தேன்; கண் கூசியதால், அதன் வழியே எட்டிப் பார்த்த சூரியனை மறு கையால் மறைத்தேன். பத்துக்கு பனிரெண்டு அடி இருக்கும் அறையில் எத்தனை முறை அளப்பது? மதியமும் சாப்பிடவில்லை. இரண்டு நாளாய் பசி மரத்துப் போயிருந்தது. இப்படியே இருந்தால் எழுதக் கூட முடியாது. வந்து விழும் வார்த்தைகளில் அலுப்பும் அசூயையும் தெரித்தது. ஒருகணம் எல்லாமே தெளிவாய் தெரிவது போல் இருந்தாலும், உடல் நடுக்கம் மூலம் குளிர் ஜுரம் அந்த கணத்தின் உண்மையை அறைந்து விடுகிறது.

இரவு வருவதற்குள் சாப்பிட்டாக வேண்டும். மற்றொரு இரவை எவ்வளவு பிரயாசனப் பட்டாலும் தாண்ட முடியாது. ஜே.ஜியிடம் கேட்கலாம். இன்னும் தன் அறைக்கு வந்திருக்க மாட்டான். அதுவரை அயர்ச்சியைப் போக்க ஏதாவது படிக்கலாமென - கையில் கிடைத்த புத்தகத்தை பிரிக்க, அதிலிருந்து சில காகிதங்கள் என் மடியில் விழுந்தன. கசங்கிய அந்த பக்கங்களில் –

1. பின்னொரு காலத்தில்...

...என்னுடைய பத்தொன்பதாவது வயதில் பிரயாணம் செய்ய ஆசைப்பட்டேன். என் அப்பாவின், ‘The Book of Travels’ என்ற புத்தகத்திலிருந்த சில பயணங்களுடன் தொடங்கலாமென்றிருந்தேன். பெயரற்ற யாத்ரீகனாக பல இடங்களுக்குச் செல்வது என் கனவுகளில் ஒன்றாக இருந்தது. என் அப்பாவின் கனவும் அதுவே. இரு கனவுகளையும் சாத்தியப்படுத்த சரியான நேரத்திற்காக காத்திருந்தேன். வெளி உலகத்தை அளக்க பிரெஞ்சு மட்டும் தெரிந்தால் போதாது. முதல் வேலையாக, ஆங்கிலமும், ஸ்பானிஸ் மொழியும் கற்கத் தொடங்கினேன். தாய் மொழி மட்டும் தெரிந்து என்ன செய்யமுடியும்? ஆங்கிலம் தெரிந்தவன் லௌகித்திலும், வேற்று மொழி தெரிந்தவன் கனவுலோகத்திலும் மட்டுமே அலைய முடியும்.

என் ஊரிலிருந்த ஒரு ஆங்கில பயிற்சி நிறுவன அதிபரைச் சந்தித்தேன். ஆறு மாத பயிற்சியில் சேர்ந்து படிக்க நேரம் இல்லாததைப் பற்றி அவரிடம் விவரித்து, சீக்கிரமாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள வழி கேட்டேன். அவரிடம் இது போன்ற கேள்விகளை யாருமே கேட்டதில்லை போலும்; என்னைப் போன்ற அறிவிலிக்கு எதுவுமே சொல்லித்தர இயலாது என துரத்திவிட்டார். இந்த சம்பவத்தின் அயற்சியைப் போக்க எங்கள் ஊரிலே இருந்த மிகக் கீழ்த்தரமான கபேவுக்குச் சென்று இருப்பதிலேயே ஸ்ட்ராங்கான காபியை தருவித்தேன். மஞ்சள் நிற மாலையில், கபேயின் வெளியேயிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

ஆள்அரவமற்ற சந்து. தூரத்தில் வந்த ஒரு கிழவரின் காலடி சத்தம் மட்டும் கேட்டது. மெல்ல காலை தேய்த்து நடந்து வந்து எனக்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்து, மடித்து வைத்திருந்த புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார். ஆங்கில புத்தகம் எனத் தெரிந்தது. அவருடன் பேச்சை ஆரம்பித்தேன்.

சம்பிரதாய அறிமுகத்தில் தொடங்கினாலும், அவர் சொன்ன விஷயங்களால் முழுவதும் என்னை ஆட்கொண்டார். கிழவர் செல்லாத பயணங்களில்லை. அவருடைய ஆங்கில புத்தகத்தின் மேலிருந்த நாட்டத்தைத் தெரிவிக்க, அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். அவர் கொடுத்த புத்தகத்தில் புதிதாய் இருபது பக்கங்கள் இருந்தன. வேறு பதிப்பாக இருக்கலாம். நான் அதைப் படிக்கும் ஆர்வத்தில் புரட்ட, அவர் தன் பயணக் கதைகளை சொல்லத் தொடங்கினார்.

அவர் சொன்ன கதைகளில் ஜப்பான் நாட்டு கிராமத்துக் கதைகள் என்னைக் அதிகம் கவர்ந்தது. சாமுராய் கதைகளை மட்டுமே கேட்டுப் பழகிய எனக்கு அவர் கூறிய கதைகள் முற்றிலும் வித்தியாசமாயிருந்தன. அவை சாதாரண மத்திய வர்க்கக் கதைகள்; ஆனால், மாய முடிச்சுகளைக் கொண்டிருந்தன. ஜப்பான் பயணத்தை சலிப்புடன் அவர் கூறினார். சாகசம் நிறைந்த பயணத்தை எதிர்பார்த்திருந்த எனக்கோ ஏமாற்ற மடைந்தாலும், என்னுடைய பயணம் அப்படி இருக்காதென்பதில் உறுதியாயிருந்தேன்.

அவர் புத்தகத்தில் கூடுதலாய் இருந்த இருபது பக்கங்களைப் படிக்கத் தொடங்கினேன்.

2. இருபத்து மூன்றாம் நூற்றாண்டு உலகம் - யாத்ரிகனின் குறிப்புகள்.

அது செர்கே என்ற பிரஞ்சுக்காரனின் பிரயாணக் குறிப்புகள். எந்த வருடத்தின் பயணம் என்ற செய்தி தெரிந்து கொள்ள அந்த இருபது பக்கங்களையும் வேக வேகமாகத் தேடினேன். ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு கால வரையறைக்குள் வராத அனுபவங்களின் தொகுப்பு. எந்த பக்கத்தில் உண்மையான குறிப்புகள் உள்ளன எனத் தேடிப் படிக்கத் தொடங்கும்போது, மெல்ல அந்த அனுபவங்கள் ஒரு முடிவிலியான கனவில் சென்று முடிந்துவிடும். அவை செர்கேவுக்கு நடந்தவை என திட்டவட்டமாக கூற முடிய வில்லை; அதே சமயம் அது கனவு போலில்லாமல், அந்தக் குறிப்புகள், வழித் தடங்களுடன் துல்லியமான வரைபடத்தைப் போலிருந்தது.

காலங்களுக்குள் பயணம் செய்வதுபோல், எண்ணிலடங்கா குறிப்புகள் அந்த பக்கங்களில் இருந்தன. இருபது பக்கம் முடிந்தது என மறுபடியும் முதல் பக்கத்திலிருந்து தொடங்கினால் வேறொரு பயணம் போல் அந்தக் குறிப்புகள் ஆழியின் ஆழத்தில் சென்று கொண்டேயிருந்தது. அதில் என்னை மிகவும் கவர்ந்தது இந்திய பயணம். அதைப் பற்றிய குறிப்புகளை உன்னிப்பாக படிக்கத் தொடங்கினேன். இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென்ற கனவு என் மாமாவிடமிருந்து ஒட்டிக்கொண்ட ஒன்று. யாத்ரிகனாக ஐரோப்பாவில் சுற்றிய அவர் - நார்வே ஃபியாட்ஸ் பகுதியில் இருக்கும் திமிங்கில பார்வை மையத்தில் இருந்த ஒரு வருடம் முதல், மராகேஷ் பகுதியில் இருந்த மகரந்த பூக்களின் மணம் வரைக் கூறி ஊர் சுற்றுதல் பற்றிய கனவை என்னுள் விதைத்து விட்டார். அவர் இலக்கில்லாமல் அலைந்த நாட்கள் அவை.

மாமாவின் சொற்களின் ஜாலத்தில் அந்தந்த நாட்டின் வாசனைக்காகக் கூட ஏங்கத் தொடங்கினேன். இந்தியாவில் நேபால் பகுதியில் இருக்கும் ஒரு ஏரியில் படகு சவாரி பற்றி கூறியபோது அவர் கண்களில் தெரிந்தது ஆர்வமா, குறுகுறுப்பா எனத் தெரியவில்லை. அது, முதல் முறை காம விளையாட்டை கேள்விப்படும் சிறுவனின் தத்ரூப உணர்வலங்காரம் போலிருந்தது.

இந்திய குறிப்புகள் - 213 ஆம் பக்கதிலிருந்து தொடங்கியது. மாரீஸ் என்பவரால் சிறு திருத்தங்கள் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் ஆங்காங்கே தென்பட்டன. முதல் பத்தியில் - ஹம்பி என்ற இடத்திலிருக்கும் இசைக் கோவில் - அடிக்கோடிடப்பட்ட இந்த வரிகளுக்குப் பக்கத்தில் ‘செலிம் ஹாசனுடன் இன்று கீசா (Giza) பகுதியிலிருக்கும் ஸ்பின்க்ஸ் என்ற சிங்கத்தின் அடியிலிருக்கும்போது - ஆஹா, ஹம்பி சென்றால் மண் சிலைகளின் நேர்த்திகளை காணலாமே என பைத்தியக்காரத் தனமாக எண்ணுகிறேன். அதனாலேயே இந்தக் குறிப்பை இங்கு எழுதுகிறேன்’ என குறிப்பு உள்ளது. மாரீஸ் எழுதியவையாக இருக்கக் கூடும். இருந்தாலும் உலக வரலாற்றில் இரு பெரிய மண் வடிவங்களை ஒரே வரியில் நம் கண்முன்னே நிறுத்தி ஒப்பிடு செய்யப்பட்ட முதலும் கடைசியுமான வரி இது என்றே எனக்குத் தோன்றியது.

அடுக்கடுக்காய் ஆச்சர்யமான தகவல்கள் வந்து கொண்டேயிருந்தன. இந்தக் குறிப்புகள், தேடலே தேடலின் இலக்காகக் கொண்டவனின் பிதற்றலாகச் சென்றது. செர்கே எழுதியதைவிட பக்கங்களின் ஓரங்களில் எழுதப்பட்டிருந்த மாரீஸின் குறிப்பே என்னை இதனுள் இழுத்தது. இந்தியாவின் பாரம்பரிய இசை நாகரிகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், 216ஆம் பக்கத்தில் படித்த இந்த குறிப்பினால் ஆச்சர்யத்தின் விளிம்புக்கே சென்று வந்தேன்.

‘..இப்படிப்பட்ட நாகரிகத்தில் முளைத்த தென் மற்றும் வட இந்திய இசை வடிவத்தை புரிந்து கொள்ள நாம் இந்த நில அமைப்புகளைப் பிரிக்கும் விந்திய மலை கொடுக்கும் ஆச்சர்யங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியர்கள் மொழிகளில் பல மீமொழி ரகசியங்களை உறைத்து வைத்திருக்கிறார்கள். அதனால், இசையிலும் அப்படிப்பட்ட ரசசிய குறியீடுகள் இருப்பதில் ஆச்சர்யமில்லை. விந்திய என்ற வார்த்தை – விந்து எனும் உயிர் பரிவர்தனைக்காக உருவான வார்த்தையில் தொடங்குகிறது. உயிர்கள், முதன் முதலாக மலை சார்ந்த இடங்களில் தோன்றியிருக்கக் கூடிய சாத்தியங்களை இது உருவாக்குகிறது. மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் இதைப் போல் பல ரகசியங்கள் இந்திய மொழிகளில் உள்ளதாய் கண்டுபிடித்துள்ளனர். அதே போல் தென் மாநிலங்களில் பல நூற்றாண்டுகளாய் இசையைப் பேச்சு வழக்குகளிலிருந்து மாற்றாமல் வைத்திருக்கிறார்கள். தற்போது, எட்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்திய இசை உலக அரங்குகளில் உச்சாணியாக விளங்குகிறது...’

எனக்கு இந்திய இசையில் இருந்த தேக்க நிலை தெரியும். அவை இருபத்தோறாம் நூற்றாண்டில் நடந்தவை. சரித்திரத்தில் படித்திருந்தாலும், கலைகளின் சிகரமாக இந்தியா மாறியது இருபத்து மூன்றாம் நூற்றாண்டிலேயே. ஆப்ரிக்க நாட்டின் அமேசான் காடுகளுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த Z எனும் நகரம் வெளியே தன் ரகசிய இடத்திலிருந்து வெளியே வந்ததும் இந்த காலகட்டத்தில் தான். உலகில் சில உன்னத மாற்றங்களை இந்த Z நகரம் கொண்டு வருமென அமேசான் பழங்குடியினர் நம்பி வந்தாலும், அது உண்மையில் நடந்து இந்தியாவிற்கு பொற்காலத்தை மீட்டுத் தந்தது.

Z நகரத்தை அடைந்த வில்லியம்ஸ் சகோதரர்கள் பழங்குடியினரின் உதவியில்லாமல் ஒன்றுமே சாதித்திருக்க முடியாது. ஆப்ரிக்கா நாட்டின் அடர்ந்த காடுகளிலிருக்கும் பழங்குடியினரின் பழம்பாடல்படி Z நகரம் கண்டெடுக்கப்படும் என்றும், அதனால் உலகில் சில மாறுதல்கள் உண்டாகும் குறியீட்டு விளக்கத்தை வில்லியம்ஸ் சகோதரர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு பழங்குடியினர் தங்கள் வாய்வழிப் பாடல்கள் பலவற்றைத் தந்து வில்லியம்ஸ் சகோதரர்களுக்குக் கொடுத்துள்ளனர். இதே பாடலை ஆராய்ந்த பிரின்ஸ்டெனின் மற்றொரு குழுவோ, Z நகரம் கண்டுபிடிக்கப்பட்டால், அதன் தாய் சமூகங்களிலும், அதனுடன் ஒட்டியிருந்த பல சமூகங்களுக்கும் மாறுதல் ஏற்படும் என்றே பழம்பாடல் குறிப்பதாய் தெரிவிக்கின்றனர்.

லெமூரியாவும் Z நகரமும் ஒன்றாய் இருந்ததென அவற்றில் வாழும் ஒரேவிதமான பல மண் புழுக்களைக் கொண்டு நிரூபித்துள்ளனர். இவை, தன் பள்ளி நாட்களில் படித்திருப்பதாய் மாமா கூறத் தெரிந்து கொண்டவை. எது எப்படியோ, கலைகளுக்குப் இந்தியா எனும் பழம்பெயர் இந்த இருபத்து மூன்றாம் நூற்றாண்டில் உண்மையாகி விட்டது. அடுத்த ஐந்து பக்கங்களில் மாரீஸ் தன் குழுவோடு இந்தியாவில் செலவு செய்த நாட்களின் குறிப்பு மட்டுமே இருந்தது:

‘..இந்த மாற்றங்கள் திடீரென Z நகர உதயத்தினால் நிகழவில்லை. கலை, ஒரு நாகரீக அமைப்பின் உணர்வுப் பிரவாகம். கலையின் கோட்டை பழைய மேதாவிகளாலேயே கட்டப் பட்டது.பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூர்த்திகளான தாகூர், அரவிந்தர், ரவிசங்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அலி அக்பர் கார், ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களின் இசை மேதா விலாசத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் இந்த மறுபிரவாகத்திற்கு ஒரு காரணம். வரலாற்றின் தேக்கத்தை உடைத்தெரிய இவர்களிடம் பல ஆயுதங்கள் இருந்தன. பழமைவாதத்தை தூளாக்கக் கட்டப்பட்ட பீரங்கிகள். கண்ணாடிக்குள் பாங்காக வைக்கப்பட்டிருந்த அதிகாரம், சாதிப்பற்று, மொழிப்பற்று எனும் தடைகளை உடைத்தெரிய காட்டாறுகளை அதனுள் திருப்பி விட்டவர்கள்.. கலையின் தீர்மானிக்கப்பட்ட ரஸங்களை உடைத்தெரிந்து அவற்றின் தேக்க நிலையின் அழிவுகளை திறந்த மனத்துடன் வரவேற்றனர்..’

இப்படிப்பட்ட சமூகத்தில் ஒரு முறையேனும் வாழ்ந்து பார்க்க வேண்டுமென்பதால் என் பிரயாணத்தைத் தொடங்கிவிட்டேன். எனக்கு இந்தியா பற்றி ஏற்கனவே தெரிந்த பல்வேறு செய்திகளுடன், மாரீஸ், செர்கேவின் குறிப்புகள் மிகவும் தேர்ச்சியான திட்டத்தைக் கொடுத்துள்ளது. என் கண் முன்னே தெரிந்த பாதை தொடங்கி முடியும் இடம் இந்தியாதான். புத்தகத்தை கையில் வைத்தபடியே கனவில் சொகுசாகப் புகுந்து கொண்டேன்.

என் தந்தையின் கனவுகளை உண்மையாகக் காண்பதில் என் தேடல் முடிவுக்கு வராது. ஆனாலும், கனவுகளில் வாழ்ந்து பார்த்து, நினைவில் தீர்மானிக்கும் தேடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. நினைவுகள் எல்லாம் நாம் வாழ்ந்து கடந்தவை மட்டுமல்ல, நம் கனவுகளும் தான். அந்த கனவுகளில் இருக்கும் சொகுசு அலாதியானது. என் கனவுடன் பக்கங்களைத் திருப்புவதுமாக கடைசி இரண்டு பக்கங்களுக்கு வந்துவிட்டேன். அங்கேயும் மாரீஸ் விடுவதாக இல்லை.

‘..தலைநகரம் மட்டுமல்ல, சிற்றூர்களிலும் (அப்படி கூறிவிட முடியுமா என்ன?) இருக்கும் தேர்ந்த கலை வடிவங்கள், மக்களின் ரசனைத் தரத்தை தெளிவுபடுத்துகிறது. அங்கே, நம் நாட்டைப்போல பழைய கலை வடிவம் புறக்கணிக்கப்படுவதில்லை. புது கட்டமைப்பிற்குள் அதை நுழைப்பதற்கு தனி அமைப்புகள் உள்ளன. ச.மு.வெற்றி அவர்களின் ‘கலைக்கான அமைப்பும், அதன் கூறு அமைப்புகளும்’ போன்ற அறிவார்ந்த ஆராய்ச்சிகள், அதை மேற்கொள்ளும் பல்கலைக் கழக ஆராய்ச்சிக்கு மட்டு மல்லாது, மக்கள் மத்தியில் தினமும் விவாதிக்கப்படுகின்றது. மொழிக்கான அமைப்பு, கலை பரிவர்த்தனைக்கான சங்கம் போன்ற தோற்றங்களினால், பல்வேறு மொழிகளைக் கொண்ட பகுதிகளும் இயல்பாக இணைக்கப் பட்டுள்ளது. தென் பிராந்திய ஃபிரெஞ்சு மொழி, வடகிழக்கு மொழியுடன் நம் நாட்டில் ஒத்துப் போவதில்லையே? இந்தியாவில் இப்படிப்பட்ட சிக்கல்களை இந்த அமைப்புகள் எளிதில் களைந்துவிடுகின்றன.. 1760களில் மைசூர் என்ற தென் இந்திய நகரத்தில் உலா வந்த ஜார்ஜ் தளபதி, இப்படிப்பட்ட மேன்மையான அதே சமயம் எல்லாவித செல்வத்திலும் கொழித்த நாட்டை எங்குமேபார்த்ததில்லை எனக்கூறியிருந்தாராம். அப்படிப்பட்ட பொற்காலமாகவே இந்தியா இப்போது மீண்டும் உருவாகியுள்ளது...’

இந்த குறிப்புகளுடன் என் பயணத்தை துவங்கப் போகிறேன். என் கனவுகளே என்னை வழிநடத்தும் யாத்ரிகனின் பிம்பங்கள். இதோ, The Lost City என்றழைக்கப்படும் Z நகரம் போன்றதொரு மாயையான இந்தியாவைத் தேடிப் பயணிக்கின்றேன்...

00. இப்போது

கண்விழித்தபோது ஜே.ஜி என்னருகே நிற்பது தெரிந்தது. அவன் உலுக்கும்போது, என் கைகளிலிருந்து நழுவிய பக்கங்கள் காற்றில் மறைந்தன.

- ரா.கிரிதரன்

Pin It