police encounter 372காவல் துறையினரே கொலை செய்து விட்டு மோதல்-சாவு என்று கதை கட்டுவது தமிழ்நாட்டில் (இந்தியாவிலும்) புதிய செய்தியன்று. இப்போது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியிலும் அதே கதைதான் தொடர்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பொய்மோதல் கொலைகள் நடந்தன. மறதி வெள்ளத்தில் மூழ்கிப் போன அந்தக் கொலைநிகழ்வுகளை ஒதுக்கி விட்டால், திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் வேறுபாடில்லாத தீமைகளில் இந்த பொய்மோதல் கொலைகளும் ஒன்று. முதல்வராகப் பதவி வகித்தவர்களில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும், பிறகு கருணாநிதிக்கும் ஜெயலிதாவுக்கும் பொய்மோதல் கொலைகள் தொடர்பாகப் பிணக்கு ஒன்றுமில்லை. சட்டப் புறம்பான பொய்மோதல் கொலைகள் இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள் என்றே சொல்லலாம்.

முக ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்குச் சார்பான பல திட்டங்களை அறிவித்துச் சிலவற்றைச் செயலாக்க முற்பட்ட நிலையில் பாசகவும் பாசக அடிமைக் கட்சியான அதிமுகவும் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகக் கூக்குரலிடத் தொடங்கின.

புதிய ஆளுநர் ஆர் என் ரவி பொறுப்பேற்ற போதே பலவிதமான ஐயங்களும் எழுப்பப்பெற்றன. அவர் காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபுவை அழைத்துப் பேசியது என்ன? என்ற வினாவிற்கு யாரிடமிருந்தும் விடை இல்லை. ஆளுநர் விளக்கம் தரவில்லை, தமிழக அரசும் மௌனமாகவே இருந்து விட்டது.

இந்தப் பின்னணியில் சட்டம் ஒழுங்கைக் காப்பதாகக் காட்டிக்கொள்ளவே தமிழ்நாடெங்கும் அதிரடியாக மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தளைப்படுத்தப்பட்டார்கள்.

அண்மையில் தூத்துக்குடியில் துரைமுருகன் என்ற இளைஞர் “மோதலில்” சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இது பொய்மோதல் படுகொலைதான் என்பதை தற்சார்பான உண்மையறியும் குழுக்கள் கண்டறிந்துள்ளன.

அதே சூட்டில் அக்டோபர் 11ஆம் நாள் திருப்பெரும்புதூரிலும் ஒரு ‘மோதல்’ நடந்து முர்துசா சேக் என்ற வட மாநில இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தேசிய மனிதவுரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் (NCHRO) தலைவர் பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களின் தலைமையில் உண்மையறியும் குழு அமைக்கப்பட்டு அவர்கள் முர்துசா சேக் கொலை பற்றி விரிவான தரவுகள் திரட்டிக் கொடுத்துள்ளனர்.

 திருப்பெரும்புதூர் சுங்கச்சாவடியில் பணி செய்யும் இந்திரா சென்ற அக்டோபர் 10ஆம் நாள் காலை 8 மணியளவில் சென்னை செல்லும் பொருட்டு சுங்கச் சாவடி அருகில் உள்ள EB காலனி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது வடமாநிலத்தவர் இருவர் இந்திராவிடம் சென்று ஏதோ வழி கேட்பவர்கள் போலப் பேசி, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைத் அறுத்துக் கொண்டு ஓடி விட்டனர். இந்திரா அலறியதைக் கேட்ட அங்கிருந்த ஒரு சிலர் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்ற போது, இருவரும் அங்கிருந்த காட்டுப் பகுதியுள் நுழைந்து மறைந்துள்ளனர். இவர்களை இந்திராவின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் தேடியுள்ளனர்.

 இந்நிலையில் இருங்காட்டுக் கோட்டைப் பகுதியில் காவல்துறையினர் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அன்று அந்தக் காட்டுப் பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்தும் முர்துசா சேக்கை ’என்கவுண்டர்’ செய்து சுட்டுக் கொன்றது குறித்தும் பெரும்புதூர் காவல் ஆய்வாளர் எஸ். கிருஷ்ணகுமார் தனது முதல் தகவல் அறிக்கையில் கூறுவது எதுவும் நம்பும்படியாக இல்லை..

மொத்தத்தில் இது காவல்துறையின் வழக்கமான 'என்கவுண்டர்' படுகொலைதான் என்று தெரிகிறது.

முர்துர்சா சேக்கைக் கைது செய்து விசாரித்திருக்கலாம். நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனைகள் வாங்கித் தந்திருக்கலாம். சட்டப்புறம்பாகக் கொலை செய்ய வேண்டிய தேவையே இல்லை. அந்த ஆள் நகையைப் பறித்தபோது கூட இந்திராவையோ, தன்னைத் துரத்தியவர்களையோ துப்பாக்கியைக் காட்டி மிரட்டவுமில்லை. காட்டுக்குள் காவல்துறையினரை அரிவாளால் வெட்டினார் என்பது வெறும் புனைவு என்றே தெரிகிறது.

. முர்துசாவால் வெட்டப்பட்ட காவலர் மோகன்ராஜுக்குக் கடுமையான காயம் பட்டுள்ளதாகவும், அவருக்கு இன்னும் தீவிரமான சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது எனவும் காவல்துறை உயரதிகாரிகள் கூறிய போதிலும் காயம்பட்டவரை மருத்துவ மனையில் கூட காட்டாமல் தவிர்க்கின்றனர். உண்மையறியும் குழுவினர் எவ்வளவு முயன்றும் அவரை மருத்துவமனையில் காண முடியவில்லை.

முர்துசா சேக்கும் மற்றொருவரும் வழிப்பறி செய்து நகையைப் பறித்துச் சென்றனர் என்பது குற்றச்சாட்டு. அவர்களைக் கைது செய்து. வழக்குத் தொடுத்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவதுதான் சரி. இதில் யாருக்கும் மாறுபாடு இல்லை. 300 ஆயுதப் படையினர் தேடுதல்வேட்டையில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை எளிதில் உயிருடன் பிடித்திருக்க முடியும். கொன்றுதான் பிடிக்க வேண்டும் என்ற தேவை எழவே இல்லை. காவல்துறை சொல்லும் கதை சற்றும் நம்பகத் தன்மை இல்லை. நகைப் பறிப்புச் சம்பவம் நடந்தது அக் 10. அடுத்த நாள் காலையே அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் செய்தி பரப்பப்பட்ட போதே ஏதோ நடக்கப்போகிறது என்கிற அச்சம் ஏற்பட்டது.

இந்திராவிடமிருந்து செயின் அறுக்கப்பட்ட சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கையைத் தரவிறக்கம் செய்து பார்க்க இயலாதவாறு வைக்கப்பட்டுள்ளதன் காரணமும் விளங்கவில்லை.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் நடந்த பொய்மோதல் கொலைகள் இனிமேலும் தொடர்கதை ஆக விடலாகாது. வால்டர் தேவாரம், வெள்ளைச்சாமி என்ற வரிசையில் சைலேந்திர பாபு ஒரு ‘என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்’ என்பது தெரிந்த செய்திதான். ஆனால் இந்தச் சீருடைக் கொலைப்படையைக் கட்டுப்படுத்தவும் கட்டிப்போடவுமான மனத்திட்பம் அரசியல் தலமைக்குத் தேவை. இது முக ஸ்டாலின் ஆட்சியா? சைலேந்திரபாபு ஆட்சியா? என்று கேட்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது. சைலேந்திர பாபு ஆனாலும், ஆர் என் ரவியே ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்தது அவர்களுக்கு அல்ல, முக ஸ்டாலினுக்குத்தான்!

பொய்மோதல் கொலைகளுக்கு மு.க. ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோருகிறோம். இந்த வகையில் அவர் ஜெயலிதாவிடமிருந்து மட்டுமல்லாமல் கருணாநிதியிடமிருந்தும் மாறுபட்ட முறையில் ஆட்சி புரிந்து காட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 

***

என்று முடியும் இந்த நடுக்கடல் படுகொலைகள்?

• சிங்களக் கடற்படையின் கொலைவெறிக்கு மேலுமொரு தமிழ் மீனவர் உயிர்ப் பலி ஆகியுள்ளார். சென்ற 2021 அக்டோபர் 18ஆம் நாள் திங்கள் கிழமை விசைப்படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் ராஜ்கிரண், சேவியர், சுகந்தன் ஆகியோரது படகின் மீது இலங்கைக் கடற்படையின் ரோந்துக் கப்பலை மோதச் செய்துள்ளனர். இந்த் தாக்குதலில் ராஜ்கிரண் உயிரிழக்க, கடலில் தத்தளித்த மற்ற இருவரையும் சிங்களப் படையினர் சிறைப்பிடித்தனர். இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்கள் இருவரைக் கைது செய்திருப்பதாகவும் ஒருவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தது. இது பொய் என்பது இப்போது தெரிந்து விட்டது. ராஜ்கிரண் உடல் வந்து சேர்ந்து விட்டது. அவரைச் சித்திவதை செய்து சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

• கோட்டைப்பட்டினம் மீனவர் படுகொலைச் செய்தி வந்தவுடன் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் தோழர் அரங்க. குணசேகரன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் தோழர் குடந்தை அரசன் ஆகியோர் விரைந்து சென்று துயருற்ற மக்களை நேரில் சந்தித்ததோடு, மீனவர்களின் போராட்டத்திலும் பங்கேற்றனர். மே17 இயக்கத் தோழர் பிரவீன் தோழமை அமைப்புகளை ஒருங்கிணைத்துப் போராட்டம் செய்துள்ளார். பாஜகவினரும் காவல் துறையும் எல்லா வகையிலும் இடையூறு செய்துள்ளனர். மீனவர் பக்கம் நின்று போராடிய இயக்கங்களுக்கும் தலைவர்களுக்கும் பாராட்டும் வாழ்த்தும்.

• அவசரமாகப் புதைக்கப்பட்ட ராஜ்கிரண் உடலைத் தோண்டியெடுத்து மீள்சடலக் கூறாய்வு செய்யவும், சிங்களக் கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதியவும் வேண்டும்.

• தொடரும் நடுக்கடல் படுகொலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் திசையில் தமிழ் மக்களின் போராட்டங்களைத் தெளிவான திசையில் முன்னெடுக்க வேண்டும்.

- தியாகு