இந்திய மீனவர்களுக்கு மனிதநேயமற்ற அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

tn fishermen 341ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மீனவர்களுக்குத் தலா ரூபாய் 60 லட்சம் அபராதமும் 3 மாதம் சிறைத் தண்டனையும் விதித்திருப்பது ஒரு சர்வாதிகாரி இல்லை, இலங்கை கல்பிட்டி நீதிமன்றம்.

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் இதுவரை இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டு வந்தனர். தற்போது இலங்கை நீதிமன்றம் அச்செயலைச் செய்யத் தொடங்கி இருக்கிறது.

தீர்ப்பினால் இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே இணக்கம் இல்லாமல் போய் வெறுப்பே மேலும் ஏற்படும்.

இது மீனவர் பிரச்சினையை மேலும் பன்மடங்காக்கும்.

அளவின்றி அபராதம் விதிப்பது அத்துமீறிய மனிதநேயமற்ற செயல் ஆகும்.

இதனைச் சர்வதேச நாடுகள் கண்டிக்க வேண்டும். குறிப்பாக இந்திய அரசு பாதிக்கப்படும் தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாகக் கருத்தில் கொண்டு இலங்கை அரசுடன் பேசி இச்சட்டத்தை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசானால் இவ்வாறு செய்யும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இன்றைக்கு இருக்கும் ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட செயலைச் செய்வார்கள் என்பதை நாம் எதிர்பார்ப்பது நம்முடைய அறியாமையாகும்.

இருந்தாலும் ஆட்சியாளர்களிடமே நாம் முறையிட முடியும். ஒரு ஒன்றியத்தில், கூட்டாட்சி முறையில், அங்கம் வகிக்கும் மாநிலங்களின் பாதுகாப்பிற்காகவே முக்கியமாக அந்த ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படிப் பக்கத்து நாட்டுக் கடற்படையினரால் இவ்வளவு அத்து மீறல்கள் ஏற்பட்டும் அவை கண்டு கொள்ளப்படாமல் இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டுடன் கூட்டாட்சியில் இருக்கிறதா அல்லது இலங்கை அரசுடன் கூட்டாட்சியில் இருக்கிறதா என்கிற அடிப்படைக் கேள்வி எழுகிறது.

பாதிக்கப்படும் அப்பாவி மக்களுடைய வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்தச் சட்டத்தில் தலையிட்டு நல்ல ஒரு முடிவைக் கொண்டுவர உடனடியாக முயற்சி எடுக்க வேண்டும்.

தற்போது இலங்கைப் பிரதமர் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்திருக்கிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமிழக மீனவர்களுக்கு எதிராக இந்திய மீனவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத்திற்குக் கண்டனத்தை இந்திய அரசு தெரிவிக்க வேண்டும். இங்குள்ள தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் defence corridor அமைப்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

 முதலில் எங்கள் மீனவர்களை இலங்கைக் கடற்படையினரிடமிருந்தும் சில சமயங்களில் இந்தியக் கடற்படையினரிடமிருந்தும் காப்பாற்றுங்கள்.

Pin It